Wednesday, May 22, 2013

தோட்டநகரத்தில் மலர்த்திருவிழா

கார்டன் சிட்டி ஆஃப் நியூஸி என்ற பெத்த பெயர் இருக்கு நம்மூருக்கு! அதை நியாயப்படுத்தணுமுன்னு  சிட்டிக் கவுன்ஸில் ரொம்பவே மெனெக்கெடும். நாங்க மட்டும் சும்மா இருப்போமா.....  வீட்டுவீட்டுக்கு  சின்ன அளவிலாவது ஒரு தோட்டம் போட்டு வச்சுருவோம். எப்படியும்  நம்ம வீட்டு மனையில் 40% இடத்துலேதான் கட்டுமானம் இருக்கணும். மிச்சம் இருக்கும் 60% க்கு தோட்டம் என்பது  நகர சபையின் விதி.  தோட்டம் போடவோ, செடிகள் வைக்கவோ பராமரிக்கவோ முடியலைன்னா குறைஞ்சபட்சம் புல்லாவதுபோட்டு இருக்கணும்.  வெறும் புல்லுதானேன்னு  அலட்சியமாவும்  இருக்கமுடியாது. லான்  மெயின்டனன்ஸ் ஒன்னும் லேசுப்பட்டதில்லை. புல்லு வெட்டி முடிச்ச மறுநாளே மழை வந்து அடுத்த ரெண்டு வாரத்துக்குள்ளே  வீசிவீசியா வளர்ந்து நிக்கும். இதே வேகத்துலே மற்ற பூச்செடிகள் வளரக்கூடாதோ?  ஊஹூம்.....





மவொரி மொழியில் கடவுள்  (ATUA) இங்கே!

வருசாவருசம்  கோடை முடியப்போகும்  கடைசி மாசத்தில் (ஃபிப்ரவரியில்) பூத்திருவிழா கொண்டாடுவது இங்கே  வழக்கம். நகரம் 'இருந்த' காலத்தில் (ஐயோ.... எப்படிச் சுத்தினாலும் பேச்சு இப்படி நகர அழிவில் வந்து நிக்குதே)  எங்க கதீட்ரலுக்கு உள்ளே நடைபாதையில் ஃப்ளோரல் கார்பெட், வெளியே சதுக்கம் முழுசும் மலர் அலங்காரங்கள், தொட்டடுத்து  இருக்கும் விக்டோரியா சதுக்கத்தில்  இன்னும் அமர்க்களமான அலங்காரங்கள், இதையொட்டியே ஓடும்  ஏவான் நதியில் (!)  மிதக்கும் பூ அலங்காரப் படகுகள் இப்படி ஒரே ஜாலியா  இருக்கும்.



நியூஸி நாட்டுக்குன்னே  வருசம் ஒரு முறை  சர்வதேச  மலர்க்கண்காட்சி Ellerslie International Flower Show ஒன்னு  நடந்துக்கிட்டு  இருந்துச்சு,  ஆக்லாந்து நகரிலே!  இங்கிலாந்துலே  வருசாவருசம் நடக்கும் Chelsea Flower Showதான் ரோல்மாடல். பொதுவா அங்கே ஒன்னு நடந்தால்  அதே போல ஒன்னு இங்கேயும் நடக்கணும் என்பது  எழுதப்படாத விதி!  நாங்க இன்னும் மாட்சிமை தாங்கிய மஹாராணியின் ஆட்சிக்குட்பட்ட நாடு என்பதுடன்  அதுவும் (இங்)லாந்து நாங்களும் (நியூஸி)லாந்து என்பதால் வந்த பாசப்பிணைப்பு!


1994 வது ஆண்டு முதல்  ஆக்லாந்து  நகரில் நடந்துக்கிட்டு இருந்ததை எப்படியாவது  பெயர்த்தெடுத்து  கிறைஸ்ட்சர்ச் நகரத்துக்குக் கொண்டு வந்துரணுமுன்னு  2007 வது வருசம் ஆட்சிக்கு வந்த எங்க ஊர்  நகரத் தந்தைக்கு  (மட்டுமே) பேராசை.  ஊரே தோட்டங்களும் மலர்களுமா நிறைஞ்சு இருந்த காரணத்தால்  ஊர் மக்களுக்கு  இது ஒன்னும் முக்கியமாப் படலை.


அங்கங்கே சில  விலங்குகள். நம்மாளு ஜோரா இருக்கார். போனவருசம் இவரைத்தேடி அலைஞ்சேன்.



சிட்டிக்கவுன்ஸில்  தேர்தல் முடிஞ்சு புது நகரத் தந்தை வந்ததும்  இருக்கற வேலையை எல்லாம் பின்னுக்குத் தள்ளிட்டு  Ellerslie International Flower Show வை இங்கே கடத்துவதை  கவனிச்சார்.  ஏலம் விடுவது போல எந்த நகரம்  ஏலத்தில் எடுக்குதோ அங்கே கண்காட்சி நடத்துவாங்க.  நியூஸியைப் பொறுத்தவரை  ஆக்லாந்துதான் மிகப்பெரிய நகரம். கூட் டமும் அதிகம். ஒரு மில்லியன் மக்கள்ஸ் இருக்காங்க.  நகர சபைக்கு வருமானம் கூடுதல்.  இவுங்களோடு போட்டிக்கு  நிக்கணுமான்னுத்தான் மற்ற எல்லா நகரங்களும் நினைக்கும்.  விழாவை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவாங்க(ளாம்)  எல்லோரும் தங்க வசதியான இடங்கள்,ஹொட்டேல்கள், மோட்டல்கள் எல்லாம்  வேணுமுல்லையா?


 வருசா வருசம் எதாவது ஒரு தீம் வச்சுக்குவாங்க நம்மூரில் கொலு வைக்கிறவங்க செய்வதைப்போல.  இந்த வருசம் 1830-1901,  1910. 1920, 1930 இப்படி  2000 வருசம் வரும் ஒரு நூற்றாண்டு காலக்கட்டத்தை நினைவுபடுத்தும் விதமாம்!

நம்ம மேயர்தான் கங்கணம் கட்டிக்கிட்டாரே......  ஏலத்தில்  மூணு  மில்லியன் டாலருக்கு  கண்காட்சி நடத்திக்கும்  உரிமையை  வாங்கிக்கிட்டார்.  யார்  வீட்டுக் காசுலே?  நாங்கள் எல்லோரும் கட்டும் வீட்டுவரிக் காசுலே!  இந்த ஷோ 14 மில்லியன் டாலர் மதிப்பு  வாய்ந்தது.  எக்கச்சக்கமான  சுற்றுலாப்பயணிகள் நம்மூருக்கு வருவாங்க .  இதனால் நம்மூர் வியாபாரம் பெருகும்.  நகரின் பொருளாதாரம் மேம்படும். போட்ட காசை  ஒன்னுரெண்டு வருசத்துலேயே எடுத்தறலாம்,  அப்படி இப்படின்னு  பேசினார். அரசியல்வியாதிகளுக்குப் பேசத்தெரியாதா? அதுவும் இவர் ரேடியோ ஹோஸ்ட்டா இருந்து பேசிப்பேசியே  நகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிச்சவர்.


இங்கே  எங்கூருலே மலர்க்கண்காட்சி நடந்த முதல் வருசம்(2009)  எழுபத்தியஞ்சாயிரம் பேர் பார்வையிட்டுருக்காங்க.  ரெண்டாவது வருசம்(2010) அம்பத்தியஞ்சாயிரம் பேர்கள்.  மூணாவது வருசம் (2011) நிலநடுக்கம் வந்து ஊரே அழிஞ்சுகிடந்த நிலையில் கண்காட்சி ஒரு கேடான்னு  கேன்ஸல் ஆகிருச்சு.   சமாளிச்சு  எழுந்தபின்  போனவருசம் (2012)  கண்காட்சியை நடத்துனாங்க. வந்த சனம் நாப்பத்தியஞ்சாயிரம்.   கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பா ஆகுதோ?


மக்கள் கூடுமிடத்துக்கு  அவசியமான  சில !  பொழுது போக்கு அம்சமும்  மற்றதும்!


அடடடா......  இதுவரைக்கும்  இதைப்போய்ப்  பார்க்கலையே.... இந்த வருசமாவது கட்டாயம் போகலாமுன்னு நினைச்சேன். அப்பத்தான் ஞாபகம் வந்துச்சு.... நாம் வீட்டுவரி  கட்டுறோமுல்லே.... அதுக்குண்டான ரஸீது மூணு மாசத்துக்கொருமுறை அனுப்பும்போது  மலர்க்கண்காட்சிக்கான தேதிவிவரமும்  வீட்டுவரிகட்டும் உள்ளூர்  மக்களுக்குக் கொஞ்சம் டிஸ்கவுண்ட்  விலையில்  கண்காட்சிக்கான டிக்கெட்  உண்டு என்ற விவரமும்  சேர்த்து அனுப்பறாங்களே என்பது.  வந்த லெட்டர் எங்கே போச்சோ? தேடிப்பார்க்கணும்.


தேடுனதில் ஒருவழியா ஆப்ட்டது.  வீட்டுவரி கட்டுபவர்களுக்கு  அனுமதிச்சீட்டு விலை  நபருக்கு  22$.  கண்காட்சி  நடக்கும் நாட்கள்  2013 மார்ச் 6 முதல் 10 வரை.  சரி.  அஞ்சு நாளில் ஒருநாள் போகலாம் .
எங்கூர் வருசாந்திர  ஃபெஸ்டிவல் ஆஃப் ஃப்ளவர்ஸ்  இந்த வருசம் கொஞ்சம் தாமதமாத்தான்  ஆரம்பிச்சது.  ஃபிப்ரவரி 16 முதல்  மார்ச் 4வரை  . வழக்கம்போல்  ரெண்டு வாரமும் ஒரு வீக் எண்டுமா  16 நாட்கள்.   கடந்த ரெண்டு வருசமா நம்மூர் பொட்டானிக் கார்டனில் நடக்குது. அதான் நகரமே இல்லாமப்போயிருச்சே:(

பீன்ஸ் செடிகளில் அலங்கார வளைவு :-)

திருவிழா பார்க்கப்போனபோது  ஹேக்ளிபார்க்கின் ஒரு பகுதியில் வரப்போகும் மலர்க்கண்காட்சிக்கான ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருப்பதைக் கவனிச்சேன்.  காட்சி வெளியே இருந்து ஒன்னுமே தெரியக்கூடாது.  கையிலே காசு கண்ணுலே காட்சின்னு , காசு கொடுத்து உள்ளே காலடி எடுத்து வச்சால்தான் கண்களுக்கு விருந்து.  போயிட்டுப்போகுது. நாம்தான் வரப்போறோமே அப்போ இதையும் பூத்திருவிழாவையும் சேர்த்தே ஒரு பதிவு எழுதலாமுன்னு  இருந்தேன்.  இருந்தேனா........


Labyrinth  with message for Christchurch people!

கோபால் ரொம்பவே பிஸியா இருப்பதால்  என்றைக்கு ஷோ போகலாமுன்னு  முடிவு செய்யக் கொஞ்சம் தாமதமாச்சு. எப்படியும் வீக் எண்டுலே இருப்பார்தானே?  சனிக்கிழமைக்கு டிக்கெட் வாங்கிக்கலாமுன்னு   ஃப்ளவர் ஷோ ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணலாமுன்னா.... அதுக்குத் தனி சர்வீஸ் சார்ஜ்  கொடுக்கணுமுன்னு போட்டுருக்கு.  இந்த 22 கூட அதிகமுன்னு  முணங்கிக்கிட்டே, சிட்டிக்கவுன்ஸில் கிளை ஆஃபீஸ் ஒன்னு இங்கே பக்கத்துலேதானே இருக்கு  அதுலே நேரில் போய் டிக்கெட் வாங்கிட்டு எனக்கு சேதி சொல்லுங்கன்னு  இவர் பகல் சாப்பாட்டுக்கு வந்தப்பச் சொல்லி அனுப்பினேன்.

ஃபோன் வந்துச்சு.  டிக்கெட் விலை 35 டாலராம்.  நம்ம டிஸ்கவுண்டு கூப்பனை  அக்டோபர் /நவம்பரில்  பயன்படுத்தி இருக்கணுமாம்.  மார்ச் மாசம் நடக்கும் ஃப்ளவர் ஷோவுக்கு நாலைஞ்சு மாசத்துக்கு முன்னே புக் பண்ணனுமா?  நல்லா இருக்கே கதை?  இது ஏர்லைன்ஸ் டிக்கெட்டா என்ன?


என்ன, வாங்கிறவான்னு கேட்ட கோபாலுக்கு 'நோ' சொன்னேன்.  அஞ்சு டாலர் கார் பார்க்கிங் சார்ஜையும்  சேர்த்து  75 டாலர் என்பது அநியாயமா இருக்கே!  கார்டன் செண்டர் எதுக்காவது போனால்கூட விதவிதமான  பூக்களையும் செடிகளையும் பார்க்கலாம் என்றுள்ள ஊரில்....



CERA  (Christchurch Earthquake Recovery Authority)  இனிமேல் கொடுக்கும் காசுலே இப்படித்தான் வீடு கட்டிக்க முடியுமாம்!!!  ஆனாலும் அதுலே ஒரு பூனையை வச்சுக்குவோம்:-)

டிக்கெட்டு விவகாரம் என்னன்னு மறுநாள் அவுங்க  வெப்ஸைட்டில் போய்ப் பார்த்தால்  நாள் முழுதுவதும், அரைநாளுக்கு , மாலை  4 முதல் ஆறுவரை  இப்படி பல விதமா இருந்துச்சு.  நமக்குச் சுத்திப் பார்க்க ரெண்டு மணிநேரம் போதுமுன்னு  அதுக்கு எவ்ளோன்னு கேட்டால்  அதுக்கும் 35 தானாம்.  வேறவேற டைமிங் , ஆனால் எல்லாத்துக்கும் ஒரே சார்ஜ்!  இப்படி ஒரு கொள்ளையை நான் கேட்டதே இல்லை:(


அஞ்சாம் நாள் மாலை 6 மணிக்கு வெற்றிகரமாக  ஃப்ளவர் ஷோ நடந்து முடிஞ்சதுன்னும்  நாப்பத்தி நாலாயிரத்து  தொள்ளாயிரம் பேர் வருகை தந்தாங்கன்னும்  நியூஸ்.  44,902 என்று இருந்திருக்க வேண்டிய அது,  ஜஸ்ட் மிஸ்டு:-)


வாவா என்று கூப்பிடும் ரோஸ் கார்டன்.


சிட்டிக்கவுன்ஸில் ஒன்னும் பணம் பண்ணுவதுபோல் தெரியலை. எல்லாம் பெருமைக்கு மாவு இடிக்கும் கதை!

வேற ஏமாளி நகரம் இதை நடத்தறேன்னு ஏலத்தில்  எடுத்தால் நாங்க தப்புவோம்.  மக்கள்ஸ் ஏமாறுவாங்களான்னு தெரியலையே....  யானையைக் கட்டித்தீனி போடும்படி ஆயிருச்சு இப்போ!


சிரிக்கும் டாலியாப் பூக்கள்

உண்மையைச் சொல்லணுமுன்னா.....  நடந்து போன நிலநடுக்க அழிவுகளைப் பார்க்க வரும் டூரிஸ்ட்டுகள் கூட்டம்  இதையெல்லாம் விட ஏராளம்!  அதுக்கடுத்து  நகரத்தை மீண்டும் நிர்மாணிக்கவும் இடிபாடுகளை அகற்றவும் வேலை செய்ய வந்த  இண்டர்நேஷனல் ஒர்க்கர்ஸ்  அதை விட ஏராளம்.  ஒரு மோட்டல் கூட காலியா இல்லைன்னா பாருங்க!

கடந்த  ஒன்னரை நூற்றாண்டில் பொட்டானிக்கல் கார்டனின் வளர்ச்சி (Down the memory lane)

வழக்கம்போல் நடக்கும்  பூக்கள் திருவிழாவே நமக்குப் போதும். திருவிழாவின்   படங்களை அங்கங்கே போட்டு வச்சுருக்கேன்.


மொத்தப் படங்களும் பார்க்க விருப்பம் இருப்பவர்களுக்காக   கூகுள் ஆல்பத்தில்  போட்டு வைக்கவா?





22 comments:

said...

அழகான படங்கள்... பீன்ஸ் அலங்கார வளைவு சூப்பர்...

கூகுள் ஆல்பத்தில் வேண்டாம்... அவ்வப்போது தளத்திலேயே பதிவு செய்யவும்... நன்றி.. வாழ்த்துக்கள்...

said...

கடந்த ஒன்னரை நூற்றாண்டில் பொட்டானிக்கல் கார்டனின் வளர்ச்சி (Down the memory lane)

பாராட்டும்படியாகத்தான் இருக்கிறது..!

said...

படங்களும் தகவல்களும் அருமை. சென்ற லால்பாக் கண்காட்சியில் இப்படி ஓரிடத்தில் வயலின் கச்சேரியும் நடந்து கொண்டிருந்தது. மற்ற படங்களையும் காண ஆவல்.

said...

எத்தனை படங்கள்.எல்லாமே அழகு.!தனபாலன் சொல்கிற மாதிரி பதிவே போடுங்க. அப்பதான் படிக்கவும் விஷயம் கிடைக்கும்.நல்ல ஏற்பாடுகள் தான். விலைதான் ஏகம்.

said...

தோட்டநகரத்தின் மலர் திருவிழா படங்கள் எல்லாம் அழகு.

said...

போட்டு எனக்கு கொஞ்சம் லிங்க் அனுப்புங்க.

said...

அருமையான காட்சிகளை இப்படி அற்புதமாக படம் எடுத்து கண்களுக்கும்,மனதுக்கும் விருந்தாக்கி விட்டீர்கள் துளசிம்மா.

said...

அழகாத்தான் இருக்கு. ஆனாலும் நம்ம ஊட்டியில இருக்கறா மாதிரி இல்லன்னுதான் சொல்லணும்.

said...

மீதி படங்கள் உங்க கமெண்ட்ஸ் கூட படிச்சா தான் சிறப்பு , அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க ப்ளீஸ் . சிரிக்கும் டாலியா அழகு !!

// நாங்க மட்டும் சும்மா இருப்போமா..... வீட்டுவீட்டுக்கு சின்ன அளவிலாவது ஒரு தோட்டம் போட்டு வச்சுருவோம். எப்படியும் நம்ம வீட்டு மனையில் 40% இடத்துலேதான் கட்டுமானம் இருக்கணும். மிச்சம் இருக்கும் 60% க்கு தோட்டம் என்பது நகர சபையின் விதி. //

இப்ப புரியுது ஏன் மெட்ராஸ் வர யோசிக்கரீங்கனு , இருக்க இருப்புல மனுஷனுக்கே இப்ப மெட்ராஸ்ல எடம் இல்ல :(((. தோட்டம் போடறது வெறும் கனவாவே போய்டும் போல ....

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

கூகுள் ஆல்பம் வேணாமா!!!!

ஓக்கே! உங்களுக்காக இன்றைக்கு ஒரு பதிவாகவே படங்களை போட்டாச்சு. எஞ்சாய்:-)

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

எங்கூரில் இந்த தோட்டம் பெருமைக்குரியது. நியூஸியின் முதல் தோட்டமும் இதுதான்!

பாராட்டுகளுக்கு நன்றி.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

சண்டிகரில் சில மலர்க்கண்காட்சிகளைப் பார்த்திருக்கேன். வெளியே இருந்து கொண்டுவரும் பூச்செடிகளைத் தொட்டியோடு அலங்காரமா அடுக்கி வச்சு அழகுபடுத்தி இருந்தாங்க.

இன்னும் கொஞ்சம் படங்களை இன்றுதான் பதிவாகப் போட்டுருக்கேன்.
திருவிழாப்படங்கள் கொஞ்சம்தான்.

மற்றபடி பூக்கள் எல்லாம் அதது அந்தந்த இடத்தில்:-)))

said...

வாங்க வல்லி.

டிக்கெட் விலை அநியாயத்துக்கு அதிகம்:(

பணம் செலவு செய்வதில் கூட ஒரு பொருள் இருக்கணுமா இல்லையா? அதான் போகலை.

இன்றைக்கும் படங்கள் பார்க்கலாம் நீங்கள். பவுர்ணமி. நல்ல நாள்.

said...

வாங்க கோமதி அரசு/

உங்கள் ரசிப்புக்கு என் நன்றிகள்.

said...

வாங்க ஜோதிஜி.

இன்றைக்குப் பதிவாகவே கொஞ்சம் படங்களை போட்டுருக்கேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.

said...

வாங்க ஸாதிகா.

உங்கள் ரசனைக்கு என் நன்றிகள்.

இன்று இன்னொரு விருந்து:-)

said...

வாங்க டிபிஆர் ஜோ.

நான் இன்னும் ஊட்டி பார்க்கலையே!

அதென்னவோ நேரம் அமையவே மாட்டேங்குது ஊட்டிக்கும் கொடைக்கனாலுக்கும்:(

said...

வாங்க சசி கலா.

அப்படியே தோட்டம் வச்சாலும் தண்ணீருக்கு என்ன செய்வது?

இன்னும் கொஞ்சம் படங்கள் இன்றையப் பதிவில் உங்களுக்காக:-))))

said...

பீன்ஸ் தோரணவாயில் அசத்தல்..

said...

படங்கள் எல்லாம் அழகு.

மற்றைய படங்களையும் பார்க்க வருகின்றோம்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

தளதளன்னு ஃப்ரெஷா இருந்துச்சு. பொரியலுக்கு அட்டகாசமா இருந்துருக்கும்!!!!

said...

வாங்க மாதேவி.

தொடந்து தரும் ஆதரவுக்கு நன்றிப்பா.