Monday, May 20, 2013

இப்படி புல்லு முளைச்சுப் போச்சுதே....:(

க்ரிக்கெட்  ரசிகர்களுக்கு  லங்காஸ்டர் பார்க்  என்ற பெயர் ரொம்பவே பரிச்சயமானதா இருக்கும் ஒரு காலத்துலே! பெஞ்சமின் லங்காஸ்டர் என்பவரிடமிருந்து  பத்து ஏக்கருக்கும் கொஞ்சம் கூடுதலான  ஒரு நிலத்தை 1882 வது வருசம் வாங்குச்சு,  ரெண்டே வயசான  க்ரிக்கெட் அண்ட் அதெலெடிக்ஸ் ஸ்போர்ட்ஸ்  கம்பெனி. நிலச்சொந்தக்காரரரை மறக்காம அவர் பெயரையே வச்சுக்கிட்டாங்க  லங்காஸ்டர் பார்க் என்று.

இது நடந்து 29 வருசம் கழிச்சு  நீங்க ஒரு பக்கம் ஆடுங்க, நாங்க ஒரு பக்கம் ஆடிக்கறோமுன்னு பங்குதாரராச் சேர்ந்துச்சு கேண்டர்பரி ரக்பி  யூனியன்.  அரசாங்கமும்  சிலபல வருசங்கள் கழிச்சு  பார்லிமெண்டுலே புது விதி ஒன்னு போட்டு விக்டரி பார்க் போர்டு இதைப் பராமரிக்குமுன்னு சொல்லி தாராள மனப்பான்மையைக் காமிச்சது.  நாட்டுக்காக ஆடறாங்களே!!!

விளையாட்டு மைதானத்தை பராமரிப்பது லேசுப்பட்ட விஷயமா?  புல்லுகூட  இவுங்க சொல்றாப்படி முளைக்கணுமே!   பார்வையாளர்கள் ஆட்டம் பார்க்க வரும்போது  மொய்க்கும் கூட்டத்துக்கு வேண்டிய வசதிகள் எல்லாம் தவறாமச் செஞ்சாங்க. எல்லாம்நல்லபடியாப் போய்க்கிட்டு இருந்துச்சு.

1989 வது வருசம் ஃபிப்ரவரி மாசம். இந்திய க்ரிக்கெட் டீமுலே குட்டியா ஒரு பையர் விளையாடப் புகுந்துருக்கார். முதல் இண்டர்நேஷனல் போட்டின்னு  இவர் விளையாடியது  பாகிஸ்தானில். இது என்ன பெரிய  வெளிநாடு?  இந்தியாவில் இருந்த ஒரு பகுதிதான். தனியாப் பிரிஞ்சு தனி நாடானதும் வெளிநாடு அந்தஸ்து கிடைச்சுருச்சு. சண்டிகரில் நாம் இருந்த சமயம் மூணு மாசத்துக்கொரு முறை பக்கத்து நாட்டு மக்கள் இங்கே வந்து கடை போட்டுருவாங்க. எல்லாம் மேற்கு பஞ்சாபா முந்தி இருந்ததுதானே?  அதனால்  இதை வெளிநாடுன்னு லேசுலே மனம் ஒத்துக்காது. எல்லாம் நம்மாட்கள்தான்.


அதுக்குப் பிறகு  வெளிநாட்டில் விளையாடப்போறேன்னு வந்தது  (நியூஸிக்கு. 1990 ன்னு நினைக்கிறேன். இல்லே 1991 ஆ?) மொத்த டீமுக்கும்  ஒரே  ஒரு குழந்தைப் பையன். டீமில் இருந்த  மற்ற எல்லாருமே தனிப்பிரியத்தோடுக் கவனிச்சுக்கிட்டாங்க. அப்பதான் நம்ம இந்திய நண்பர் ஒருத்தர்  தொலைபேசி, அவருடைய  மருமான் சந்திர சேகர்  நம்மூருக்கு க்ரிக்கெட் ஆட வரப்போறாருன்னும், கொஞ்சம்  அவரை நாம் சாப்பாட்டு விஷயத்தில் கவனிச்சுக்கணுமுன்னும்  சொல்லி இருந்தார்.  வெங்காய சாம்பாரும் உருளைக்கிழங்கு கறியும் பண்ண எனக்குத் தெரியாதான்னு  இருந்தேன்.


தெரிஞ்சவங்க, நண்பர்கள் வீட்டுக்கெல்லாம் அப்போ போய்வரவும் சாப்பிடவும் ஆட்டக்காரர்களுக்கு  எந்த ஒரு தடையும் இல்லாத காலம்.  அவுங்களும் நாட்டுக்காக மட்டுமே விளையாடுனாங்க.  காசுக்காக மேட்ச் ஃபிக்ஸ் செஞ்சுக்கும் காலம் வரப்போகுதுன்னு நாங்க கனவிலும் நினைக்கலை., அவுங்களும் நினைச்சே இருக்கமாட்டாங்க(ன்னு நம்பறேன்)

நியூஸி நாட்டு மதம் என்னன்னு கேட்டால் சுலபமா  ஸ்போர்ட்ஸ்ன்னு சொல்லிறலாம். அந்த அளவுக்கு விளையாட்டுப் பைத்தியங்கள்.  குளிர்காலத்துக்கு ரக்பி,கோடைகாலத்துக்கு  க்ரிக்கெட் என்று பாகம் பிரிச்சு வச்சுருக்காங்க.  நானும் ஒரு காலத்துலே க்ரிக்கெட் (அரை)பைத்தியமா இருந்துருக்கேன்.  இங்கே  வந்த புதுதில்,  ஆட்டக்காரர்கள்   எந்தவிதமான  க்ரீடமும் சூட்டிக்கொள்ளாமல்  சூப்பர்மார்கெட் உள்பட  எல்லா இடங்களிலும் சகஜமாய் மக்களோடு மக்களாக  இருப்பதைப் பார்த்து அதிசயிச்சு நின்னுருக்கேன்.  ஒவ்வொரு வருசமும் ஆட்ட சீஸன் தொடங்கும்போது  பள்ளிக்கூடங்களுக்கு அதிலும் முக்கியமா ஆரம்பப்பள்ளிக்கூடங்களுக்கு மொத்த குழுவே விஜயம் செய்யும்.


 இது போதாதுன்னு  நாட்டு மக்களுக்கு  நாங்களும் இருக்கோமுன்னு  காமிச்சுக்க  மால்களுக்கும் மற்ற ஷாப்பிங் செண்டர்களுக்கும்  விஜயம் செய்வாங்க.  என்னிக்கு, எங்கே, எப்போ என்றதெல்லாம்  உள்ளூர் ரேடியோவில் சொல்றதுதான். அப்படிப்பட்ட சமயத்தில்  நியூஸி குழுவினரின் ஆட்டோக்ராஃப் எல்லாம் மொத்தமா வாங்கிக்கலாம்.

இந்தியாவில் இருந்து ஆட வந்த குழுவில் கபில் இருக்காருன்னதும்  கட்டாயம் அவரைச் சந்திச்சுப்பேச (?) ஆவல்.  நம்மவருக்கோ.... சின்னப்பையரைப் பார்க்கும் ஆவல். அவரவர் மனம்போல் தரிசனம் கிடைச்சது.


மகள் அப்போ சின்னக் குழந்தை.  அவள் நியூஸி கலாச்சாரப்படி வளர்ந்து விளையாட்டே கதின்னு  இருந்தாள். ப்ரைமரி  ஸ்கூலிலேயே  ஆட்டம் ஆரம்பிச்சுரும்.  அப்புறம் அவள்  ஒருமுறை ஸ்கூல் ப்ராஜெக்டுக்காக  ஒரு ப்ரோஷர் தயாரிச்சபோது  சச்சின் டென்டுல்கரை மையமா வச்சுத்தான்  செஞ்சாள். அதுலே  அவர் கையெழுத்தையும் வாங்கிக்கிட்டு அப்போ அந்த டீமுக்குக் கேப்டனா இருந்த அஸாருத்தீனிடமும்  (சாட்சி?)கையெழுத்தை வாங்கிக்கிட்டாள்.  ரொம்ப நல்ல பெயர் அப்போ பள்ளியில் கிடைச்சது:-)


1998 வது வருசம்  ஜேட் சாஃப்ட்வேர் கார்பொரேஷன் லிமிட்டட் என்ற கம்பெனி  ஸ்டேடியத்துக்கு தங்கள் பெயரை வச்சுக்கணும் என்ற ஆர்வத்தில் ஒரு பெரிய தொகையைக் கொடுத்து  நேமிங் ரைட்ஸ் வாங்கிக்கிட்டு ஜேட் ஸ்டேடியம்  என்று தங்களை பிரபலப்படுத்திக்கிச்சு. காசேதான் கடவுளடா என்ற வழி தெரிஞ்சு போனதும் 2007 வது வருசம் ஏ எம் ஐ என்ற இன்ஸூரன்ஸ் கம்பெனி  இன்னும் கொஞ்சம் ரேட்டைக் கூட்டி  ஏ எம் ஐ ஸ்டேடியம் என்று பெயர் சூட்டியது.


ஸ்டேடியத்துக்கு வருமானத்தைப் பெருக்கும் வழியில் புதுப்புது ஐடியாக்கள் முளைச்சது.  கார்பொரேட் பாக்ஸஸ். பெரிய கம்பெனிகள் எல்லாம்  தங்களுக்குன்னு தனியா ,  பொதுவா இருக்கும் ஸ்டாண்டுகளுக்கு மேலே  உச்சாணிக்கொம்பில் அறைகளை  பணம்கட்டி  எடுத்துக்கிட்டதுகள்.  இதுலே கோபாலின்  கம்பெனியும் ஒன்னு என்பதால்  நமக்கும்  பல சமயங்களில்  கொம்புமேலே ஏறி உக்கார்ந்து ஆட்டத்தை  ரசிப்பதோடு மட்டுமில்லாமல்   நொறுக்குத்தீனிகள், பானங்கள், சாப்பாடு வகைகள் எல்லாம் ருசிச்சு ரசிப்பதோடு கொண்டாட்டம்தான்.


இதுக்கிடையில்  (வருசம் 2000 என்று நினைப்பு) மேட்ச் ஃபிக்ஸிங்  என்ற  ஒன்னு விளையாட்டுலகில் விளையாட ஆரம்பிச்சு  என் க்ரிக்கெட் ஆர்வத்தை 'ச்சீ' ன்னு ஒரேடியாப் போட்டுத் தள்ளிருச்சு. அன்னிக்கு ஆட்டம் பார்க்கும் ஆசையை விட்டவள் நான்.


ரேடியோவில்  கமெண்டரி மட்டும் கேட்டுக்கிட்டு தங்கள் வேலைவெட்டிகளை செஞ்சுக்கிட்டு இருந்த மக்கள்  தொலைக்காட்சியில் ஆட்டம் பார்க்கும் வசதி எல்லாம் வந்ததும் வேலைவெட்டியை எல்லாம் விட்டுட்டு  டிவி பொட்டி முன்னால் தவம் கிடக்க ஆரம்பிச்சுருந்தப்ப படிப்படியா வந்த பெயர் மாற்றங்களை ஒரு வேளை கவனிச்சு இருக்கலாம்.


ரெண்டேகால்   வருசங்களுக்கு முன்னால்  வந்த நிலநடுக்கம்  ஜேட் ஸ்டேடியத்தையும்  விட்டுவைக்கலை.  பிட்ச் எல்லாத்தையும் கொத்திப்போட்டு வச்சு liquefaction  என்ற மணல் ஊற்று விளையாட்டு ஆட ஆரம்பிச்சுருச்சு:(  மொத்த இடமும் பாழ்!  இனி பயன்படுத்தவே முடியாது என்ற நிலமை.  அதுக்காக ரக்பி விளையாடாமலும், பார்க்காமலும் இருக்க முடியுமா?   நகரம் சீராக இன்னும் எவ்ளோ நாள் செல்லுமுன்னு தெரியாத நிலை!   சிட்டிக் கார்பொரேஷனுடன்  சேர்ந்து தாற்காலிக ஏற்பாடா  ஒரு ஸ்டேடியம் அமைச்சாங்க ஏ எம் ஐ காரர்கள். இதன்  திறப்பு விழாபற்றி எல்லாம்  அப்பவே எழுதி இருக்கேன்.  ஆர்வமுள்ளவர்கள் இங்கே க்ளிக்கலாம்:-)


கடந்த ரெண்டு வாரமா  ஐபிஎல்  அநியாயங்களையும், அசிங்கங்களையும் பார்த்து ஊர் உலகமெல்லாம்  காறித் துப்பிக்கிட்டு இருக்கும் நிலையில்  எங்கூர் டிவி சேனல்கள்மட்டும் சும்மா இருக்குமா?   டிவியில்  இதைப்பற்றிச்  சொல்லும்போதெல்லாம்  நாட்டுக்காக விளையாடுன கூட்டம் இப்போ  காசுக்கா விளையாட ஆரம்பிச்சு  இப்படிக் கீழிறங்கிக் கிடக்கேன்னு  மனம் நினைப்பதை  நிறுத்த முடியலை:(

இந்திய நாட்டுலே தப்பித்தவறி ஏதாவது நல்லது நடந்தால்  அதைச் சட்டைசெய்யவே செய்யாத டிவி சேனல்களுக்கு  கெட்டது நடந்தால் கேக்  கிடைச்சாப்புலெதான்.  ஒரு வாரம் விடாமல் தில்லி சம்பவத்தைச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இப்ப இது......  உலகமெங்கும் ஊடக தர்மங்கள் இப்படித்தான் போல:(எத்தனையோ  அருமையான  ஆட்டங்கள் நடந்த ஜேட் ஸ்டேடியம் மட்டுமா  இப்படிப்  புதைஞ்சு புல்லு முளைச்சுக் கிடக்கு?  நம் நாட்டோட மானமும்தான்:(


22 comments:

said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது... என்ன செய்வது...? எல்லாம் பணம் செய்யும் மாயை...!

படங்கள் - பொக்கிஷம்...

said...

இந்த பதிவு ரொமபவே பிடித்து இருந்தது. ஏற்கனவே உங்க நியூசிலாந்து புத்தகம் படித்தது முதல் என்றாவது ஒரு நாள் இந்த நாட்டுக்கு போக வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும் என்று கூட மனதில் நினைத்தது உண்டு. மக்களுக்கு மதம் என்பதே விளையாட்டு என்பதை படித்த பூவுலகின் சொர்க்கம் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

உங்க பழைய படம் எனக்கு பழைய நடிகை சரிதாவை நினைவுக்கு கொண்டு வந்தது.

said...

80-களின் இறுதி, 90-களின் தொடக்கம் நான் கிரிக்கெட் விரும்பிப் பார்த்தக் காலம். பழைய நினைவுகளும் படங்களும் அருமை. அது ஒரு பொற்காலம்.

said...

படங்கள் மலரும் நினைவுகள் அருமை.

காசேதான் .... என்றகாலம் ஆகிவிட்டது.

said...

என்னைப் பொறுத்தவரை கபில், ஸ்ரீகாந்த், விவியன் ரிச்சர்ட்ஸ் போன்றவர்கள் பீரியடோடு கிரிக்கெட் ஓவர். அதிலும் கபில் என் ஃபேவரைட்! அவரோட உங்க போட்டோவப் பாத்ததுல மகிழ்ச்சி. இப்போதைய கிரிக்கெட்டை நினைச்சு அனல் மூச்சுதான் விட வேண்டியிருக்கு!

said...

கபில் பக்கத்தில நிக்கறது நம்ம துளசியானு ஒரே சந்தோஷம்.
எத்தனை விவரங்கள் சேகரிச்சிருக்கிங்க துளசி.
மானம் அவமனம் எல்லாம் பணத்துக்கு மேலே ஏறிக் கப்பலேறிப் போயாச்சு. நெஞ்சு பொறுக்குதில்லையே தான்.

said...

கடைசி ஒரு வரி போதும் ...நெத்தி அடி !பணத்தை மட்டுமே நினைப்பவர்கள் நாட்டின் மானத்தைப் பற்றி ஏன் நினைக்கப் போகிறார்கள் ?

said...

கபில்தேவ் கூட இருக்கும் அக்கா யாரு?

said...

கபிலோடஉங்க போட்டோ !!! சச்சின் கூட கோபால் .சூப்பர்!!!
எனக்கு ரெண்டுபேரும்பிடிக்கும் .
இப்போலாம் எந்த மேட்ச் பாத்தாலும் match fixing மாதிரி இருக்கறதால match பாக்கறதே விட் டாச்சு . பாத்தா நாமும் party to it மாதிரி ஒரு எண்ணம் வர்றதால கடுப்பா இருக்கு . Atleast by the way of not seeing the match நம் எதிர்ப்பை காட்டலாம்னு .....

said...

அக்கா!
காசுள்ளவர்களுக்கு காசு தான் கடவுள், அதற்காக எதையும் விற்கத் தயார்.
நாடு எம்மாத்திரம்...
பிரான்சியருக்கு கிரிக்கட்டில் ஆர்வமில்லாததால் இந்த கூத்தெது பற்றியும் தெரியாது.
கபிலுடன் படம் ... அந்தக்காலம்.
ஓ அருமையான காலம்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நமக்குப் படங்கள் மட்டும்(தான்) பொக்கிஷம்! பணம் பாதாளமட்டும் பாயும்போது க்ரிக்கெட் குறுக்கே வந்துருச்சு!

said...

வாங்க ஜோதிஜி.

எல்லாத்தையும் அப்படியே எளிமையா எடுத்துக்கும் சனம் இங்கே. நாடே ரொம்ப naive!

என்ன பிரச்சனையென்றாலும் Its not end of the world ன்னு சொல்லிக்கறதுதான்.

//உங்க பழைய படம் எனக்கு பழைய நடிகை சரிதாவை நினைவுக்கு கொண்டு வந்தது.//

உங்க பின்னூட்டம் பார்த்துட்டு கோபால் சொன்னார் ' சரிதாவா? அப்படி இருந்தால் கல்யாணமே பண்ணி இருக்கமாட்டேன்!' என்று:-)))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

பொற்காலத்தை விட்டு இப்போ கற்காலத்துக்குப் போறோமேன்னு தான் இருக்குப்பா:(

said...

வாங்க மாதேவி.

எங்கும் பணம் எதிலும் பணம்:(

said...

வாங்க பால கணேஷ்.

எனக்கும் அதே அதே! எல்லாமே இப்ப ஓவராப் போச்சே!

said...

வாங்க வல்லி.

நினைக்க நினைக்க மனசு ஆறலைப்பா:(

அப்படி என்ன.... காசு காசுன்னு....

said...

வாங்க பகவான் ஜி.

வணக்கம்.

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

said...

வாங்க கொத்ஸ்.

நலமா? என்ன ரொம்ப நாளைக்கு ரொம்ப நாளு?

அந்தக்கா உங்க டீச்சரக்காதான். முன்னம் ஒரு காலத்துலே..... நியூஸிலாந்து நாட்டுக்குள்ளே.....

said...

வாங்க சசி கலா.

அப்டிப்போடுங்க! நானும் எதிர்ப்பைக் காமிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்.

துணைக்கு வந்ததுக்கு தேங்க்ஸ்:-)

said...

வாங்க யோகன் தம்பி.

//பிரான்சியருக்கு கிரிக்கட்டில் ஆர்வமில்லாததால் இந்த கூத்தெது பற்றியும் தெரியாது.//

புண்ணிய பூமின்னு சொல்லணும்.

கப்பலேறிப் போனவங்க இதை விட்டுட்டுப் போயிட்டாங்களே:(

said...

மலரும் நினைவுகளும், பழைய படமும் அருமை.
இப்போது கிரிகெட் என்றாலே வெறுப்பாய் இருக்கிறது.தினம் தரகர்கள் பிடிபடுவது கேவலமாய் இருக்கிறது.

said...

வாங்க கோமதி அரசு.

சரியாச் சொன்னீங்க. படு கேவலம்தான்:(