Friday, June 06, 2025

51

இந்த ஜூன் மாசம் அஞ்சாம்தேதி  எங்களுக்கு ஐம்பத்தோராவது திருமணநாள்.  இந்தமுறை வியாழக்கிழமையில் வந்துருக்கு !  புதன்களில் எங்களுக்கு யோகா வகுப்பு இருப்பதால், ஒரு நாளைக்கு முன் நம்ம யோகா குழுவினரோடு   ரொம்பச் சின்னஅளவில் கொண்டாடிக்கணும். ஐம்பதாவது வருடம் நிறைவுநாள் கொண்டாட்டமாக  வச்சுக்கலாம்தானே !
உள்ளூர்  ரெஸ்ட்டாரண்டில் கொஞ்சம் இனிப்பும், இந்தியன் சூப்பர்மார்கெட்டில் கொஞ்சம் காரமும் வாங்கினால் ஆச்சு. யோகா செஷன் முடிஞ்சதும் கொண்டாடினோம்.  குழுவின் இன்னொரு  அங்கமும் ரெண்டு நாளைக்கு முன்னே வந்த  அவுங்க ஐம்பத்திமூணாவது திருமணநாளைக் கொண்டாடும் விதமா, பர்ஃபி, சமோஸா,   வெந்தியக்கீரை, கடலைமாவு இன்னும் சில மசாலாப்பொருட்கள் சேர்த்து செய்யும்  முத்தியா (Muthiya ) என்னும்  குஜராத்தி சமாச்சாரம்  செஞ்சு கொண்டுவந்துருந்தாங்க.  நம்ம யோகா குழுவில் அடிக்கடி இப்படித் தனிப்பட்ட கொண்டாட்டங்களை  Food Yoga வாக நடத்திக்குவோம் ! 


மறுநாள் ஜூன் 5, நமக்குப் பொழுதுவிடிஞ்ச நேரம் சரியில்லை.  மகளிடமிருந்து சேதி. "காலை எழுந்துட்டீங்கன்னா எனக்குச் சொல்லுங்க."  சொன்னோம்.  "உடம்பு ரொம்ப முடியலை. நல்ல ஜூரம் & கடுமையான இருமல்.  ஆஸ்பத்ரிக்குக் கூட்டிப்போங்க." 

அடராமா...... இவ்ளோ காலையில் நம்ம டாக்டர் க்ளினிக் திறந்துருக்காதே.  பப்ளிக் ஹாஸ்பிடல் போனால்.... மணிக்கணக்காக காத்திருக்கத்தான் வேணும்.  இங்கே ஆஃப்டர் அவர் சர்ஜரின்னு ஒன்னு இருக்குமே.... அங்கே போகலாம்னு கிளம்பினோம்.  அதையுமே வேற இடத்துக்கு மாத்தியிருக்காங்க.  இந்த ஊருக்கு வந்த புதுசுலே  இந்த ஆஃப்டர் அவரில்தான் நம்ம வீக்கெண்டுகள்  கழிஞ்சுருக்கு.  சரியா வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு மேல்தான் மகளுக்கு (அப்போ நாலரை வயசு)  உடம்பு சரியில்லாமல் போகும். ஓடு ஆஸ்பத்ரிக்குன்னு போய்  அங்கே தேவுடுகாப்போம்.  இங்கே குடும்ப மருத்துவர் க்ளினிக்குன்னு  பேட்டைக்கு நாலு இருப்பது எல்லாம்  திங்கள் முதல் வெள்ளி  வரைதான் . தினமும் காலை ஒன்பது மணி முதல் மாலை அஞ்சு வரை. அஞ்சுக்குமேல் எதுவானாலும் ஆஃப்டர் அவர்தான். மகளுக்கு வயசு பத்தானதும்  அங்கே போறது  குறைஞ்சே போச்சு. 

இப்ப எங்கே இருக்குன்னு தேடினால் மத்ராஸ் தெருவிலாம். பெயரும் மாறியிருக்கு. இருபத்தினாலு மணி  நேர ஸர்ஜரி !   அவசரக்கேஸ் மட்டுமில்லாமல்  ரெகுலர் ஆஸ்பத்ரியாகவே நடத்தறாங்க.  இதை நடத்தறது தனி நிறுவனம் ! 
அங்கே போய் பெயரைப் பதிஞ்சுட்டு உக்கார்ந்திருந்தோம்.  கிட்டத்தட்ட ஒரு முப்பதுபேர் காத்திருக்கும் பகுதியில்.  துணைக்கு வந்தவர்களையும் சேர்த்துத்தான் சொல்றேன். இப்ப நாமே ஒரு நோயாளியின் துணைக்கு ரெண்டுபேர் வந்துருக்கோமே!
மகள் வீட்டுலே குழந்தை இன்னும் தூக்கத்தில். மருமகன் பார்த்துக்கறார்.  அவருக்கும்  வேலைக்குப் போகவேண்டிய நேரம்.  என்ன செய்யறதுன்னு புரியாத நிலையில்  வேலைக்கு அரைநாள் விடுப்பு சொல்லிட்டு நமக்காகக் காத்திருக்கார்.

மகளை முதலில் பரிசோதிச்ச மருத்துவர்,  கொஞ்சநேரம் காத்திருக்கச் சொல்லிட்டு,  வேறொரு மருத்துவருக்கு பரிந்துரை செஞ்சுருக்காங்க.  கொஞ்ச நேரத்தில் மகளை சிகிச்சைக்காகக் கூட்டிப்போனாங்க. நாங்க ரெண்டுபேரும்  வெளியே காத்திருக்கோம்.   வீட்டுக்குப்போய் வரலாமா, இல்லே இங்கேயே காத்திருக்கலாமான்னு யோசனை......  எப்படிப் பார்த்தாலும் போகவரன்னு நாப்பது நிமிட் ஆகும்.  காலையில் இருந்து வெறும் வயித்தோடு இருக்கோம்.  ஒரு காஃபியாவது குடிச்சுட்டு வரலாமுன்னு சொல்றார்.  அதுக்கும் ஒரு இருபது  நிமிட்.  மொத்தமா ஒரு மணி நேரம் ஆகிரும். 

உள்ளே போன மகளுக்கு என்ன சிகிச்சைன்னு தெரியலை. மருந்து கொடுத்தோ, ஊசி போட்டோ அனுப்பினாங்கன்னா.... நாங்க திரும்பிப்போகும்வரை தனியாக் காத்திருக்கவேணும்..... என்னடா... பெருமாளே  இப்படிப் பண்ணறையே........

மகளிடமிருந்து  சேதி வந்தது.  வாட்ஸப் இருப்பது எவ்ளோ நல்லது பாருங்க.  பரிசோதனை (எக்ஸ்ரே, ப்ளட் டெஸ்ட்) எல்லாம் ஆச்சு. நிமோனியான்னு சொல்லிட்டாங்க.  உடலில் நீர் சக்தி போதிய அளவில் இல்லைன்னு  ட்ரிப்ஸும் கூடவே மருந்தும் ஏத்தப்போறாங்க.  குறைஞ்சபட்சம்  மூணு மணி நேரம் ஆகும். 

சரி. நாங்க வீட்டுக்குப் போறோம்.  சிகிச்சை முடிஞ்சதும் சேதி அனுப்பு, நாங்க வந்து கூப்பிட்டிப்போறோம் னு பதில் அனுப்பிட்டுக் கிளம்பி வந்தோம். 

பேரக்குழந்தைக்கு ப்ரீ ஸ்கூல் தினம் இன்றைக்கு. திங்களும் வியாழனும் போய் வர்றான்.  அவனுக்கும் கொஞ்சம் உடம்பு சரியில்லைதான். இங்கே குளிர்காலம் ஆரம்பிச்சுருக்கு. பருவமாற்றம்  வரும்போது  ஜூரம், இருமல்னு எல்லோரையும்  கொஞ்சம் படுத்தும் சீஸன். எங்க ரெண்டுபேருக்குமே உடம்பு சரியில்லாம இப்பதான் கொஞ்சம் பரவாயில்லை. இத்தனைக்கும் ஃப்ளூ ஊசிவேற வருஷாவருஷம் போட்டுக்கறோம்.

குழந்தையைப் பள்ளிக்கூடத்துக்குத் தயார் செஞ்சுக்கிட்டு இருந்த மருமகன்,  'கொஞ்சம் உடம்பு படுத்துதுபோல..... பையன் சோர்வாக இருக்கான்'னு சேதி அனுப்பினார்.   அவனை பள்ளிக்கு இன்றைக்கு அனுப்ப வேணாம். இங்கே நம்ம வீட்டில் கொண்டு வந்து விட்டுருங்கன்னோம். அப்படியே ஆச்சு.  மருமகணும் வேலைக்குக் கிளம்பிப்போயிட்டார்.

காலை பத்துமணிக்குக் கோவிலுக்குப்போய் வரணும் என்ற  என் திட்டத்தில்  மாற்றம். பதினொரு மணிக்கு,  ஒருத்தர்  நமக்கு ஒரு வேலை செஞ்சு கொடுக்க வருவார். நம்ம வீட்டு  மேற்கூரையில் பக்கத்துவீட்டு மரத்தின் இலைகள் முழுக்க உதிர்ந்து,  மழைத்தண்ணீர் இறங்கும் வழியை அடைச்சுருது.  வருஷா வருஷம்  இது ஒரு பெரிய சல்யம். நம்ம காசைச் செலவு  செஞ்சு ஆள் வச்சுச் சுத்தப்படுத்தறோம்.  இதுக்கே நிறையக் காசு அழவேண்டியிருக்கு !  இருவது வருஷமா அழுதது போதும். வேறேதாவது உபாயம் இருக்கான்னு பார்த்துச் சொல்லத்தான் ஒருத்தர் வர்றார்.  இன்றைக்கு  வரப்போறதா, ரெண்டு நாளைக்குமுன்னே நம்மவர் வந்து சொன்னப்பவே.... நான் கொஞ்சம் மூஞ்சத்தூக்கி வச்சுக்கிட்டேன்.  மறுநாளைக்கு வரச் சொல்லியிருக்கக்கூடாதான்னா..... இப்பெல்லாம் ட்ரேட் ஆட்களைப்பிடிக்கறதே கஷ்டம். அவரா வர்றேன்னதும் சரின்னுட்டேன்ன்னு பதில். ப்ச்.... புதுப்பொடவை ஒன்னு கட்டிக்கலாமுன்னு நினைச்சது நடக்காது.....
அந்த நபர், வந்து பார்த்துட்டு,  ஒன்னும் செய்ய முடியாது.  வேற வழி கிடைச்சால் தெரிவிக்கறதாச் சொல்லிட்டுப்போனார். 
கோவில், வெளியில் சாப்பாடு என்ற ஒன்றும் நடக்கப்போறதில்லை.  குறைஞ்சபட்சம் வெளியில் லஞ்சுக்காவது போகலாமுன்னா..... குழந்தையை எப்படிக் கூட்டிப்போவது ? நம்ம  வண்டிகளில் பேபி ஸீட் இல்லை. இங்கே  இது இல்லாமக் குழந்தையை எங்கேயும் கொண்டுபோக முடியாது.  போலிஸ் பிடிச்சுக்கும். பயங்கர அபராதம் & தண்டனை வேற !

நம்ம வீட்டுப்பெருமாளுக்கும்  பழம் வச்சதோடு சரி.  இப்பக்  குழந்தைக்குத் தனியாகவும், நமக்குத் தனியாகவும்  லஞ்சு செஞ்சுக்கணும். கொஞ்சம்  அரிசியும் பருப்புமாக் கலந்து சமைச்சால் அதுலே இருந்து எதாவது செஞ்சுக்கலாம். 

குக்கர் ஆனதும், ஒரு ரெண்டு டேபிள் ஸ்பூன் அரிசிபருப்பைத் தனியாக எடுத்து வச்சேன். வறுத்துப்பொடிபண்ணித் தயாரா வச்சுருக்கும் மிளகுத்தூள், சீரகத்தூளில் இருந்து  ஒரு சிட்டிகை எடுத்துக் கலந்து துளி உப்பும்  சேர்த்து, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துட்டால் குழந்தை சாப்பாடு ரெடி.  காரம் இல்லாத வகை.
அப்புறம்  மீதி இருக்கும் அரிசிபருப்பில்  30, 70 விகிதத்தில்  ரெண்டு வகை செய்யலாம்.  அந்த முப்பது.... சக்கரைப்பொங்கல்.  அந்த எழுபது வெண்பொங்கல்.  பெருமாளுக்கு நைவேத்யமாவும் ஆச்சு.  

முதலில் சக்கரைப்பொங்கல் செஞ்சு முடிச்சதும் சாமிக்கு வைக்கலாமுன்னு சொன்னதும்..... அவன் ஓடிப்போய் சாமி அறையைத் திறந்து, 'பாப்பா ஷாமி பாப்பா ஷாமி'ன்னு கையைக் காமிச்சதும்,  நம்ம பாப்பா ஷாமி  அயோத்யா பாலராமனுக்கே ஆச்சு.  வெண்பொங்கல் செஞ்சதும் ஷாமி ஷாமின்னு பெரிய பெருமாளுக்குக் கை காமிக்கிறான்.   நைவேத்யம் சமர்ப்பியாமி !
எப்படியோ லஞ்சு முடிஞ்சது.  குழந்தையும் மருந்து எடுத்துக்கறதால் ஒரு அஞ்சு மில்லி  அந்த ஆன்ட்டிபயோடிக் ஸிரப்பைக் கொடுத்தோம். தினம் விளையாடும் அளவு சுரத்தா இல்லை.  சோர்வாகத்தான் இருக்கான்.  அவனுடைய  எல்லா வண்டிகளும் ஓய்வில் ! 

இதுக்கிடையில் மகளுக்கு எப்படி இருக்கோன்னு  ஒரு கவலை. பகல் ஒரு மணிக்கு , சிகிச்சை முடிஞ்சதா, வரலாமான்னு மகளுக்கு சேதி அனுப்பினால்.......  அப்பதான்  முடியுதாம்.  கணவர் வந்து கூட்டிப்போவாராம்.  மகள்,  வீட்டுக்குப் போயாச்சுன்னதும் அப்பாடான்னு இருந்தது உண்மை. 

சாயங்காலம் ஆறுமணிக்கு, மருமகன் வந்து குழந்தையைக் கூட்டிப்போனதும், நாங்கள் கிளம்பி நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலுக்கு ஏழு மணி ஆரத்திக்குப் போய் வந்தோம்.  போன ஆகஸ்டு மாசத்தில் இருந்தே.....  காலைநேரக்கோவில் விஸிட்தான். சாயங்காலம் ஆரத்திக்குப்போனால் அரை மணிக்கூறாவது நிக்கவேண்டி இருக்கும். நமக்கிருக்கும் கால்வலியில் முடியாதுன்றதால்தான்  காலை தரிசனத்துக்குப்போய் வர்றது.

ரொம்ப நாளைக்குப்பின் ஆரத்தி தரிசனமும் சடாரி கிடைச்சதும்  மனசுக்குத் திருப்திதான்.

இந்த வருஷ மணநாள்  வழக்கத்தில் இல்லாதபடி இப்படியாகப் போச்சு. 



கோவிலில் பார்த்த குழந்தை பக்தன் மனநிறைவைத் தந்தது உண்மை !

சுவாரஸியமான  பதிவு இல்லைதான். ஆனாலும் துளசிதளத்தில் இருக்கணும் என்பதால்  போட்டு வைக்கிறேன்.

Wednesday, June 04, 2025

குடந்தை ஆராவமுதன்(2025 இந்தியப்பயணம் பகுதி 29 )

எண்ணி அஞ்சாவது நிமிட்லே  நம்ம சார்ங்கபாணி கோவிலுக்குள் நுழைஞ்சாச்சு.  அதான் எல்லாக் கோவில்களையும்  அக்கம்பக்கத்துலேயே சுத்திச் சுத்திக் கட்டிவிட்டுருக்காங்களே அந்தக் காலத்தில்!  இப்பமாதிரிக் கூட்டமோ,  வாகனப்போக்குவரத்தோ, கடைகண்ணிகளோ அவ்வளவாக இருந்துருக்காதுதானே ?  கோவிலுக்குப்போறேன்னு கிளம்பினால்  ஒரு ஏழெட்டுக் கோவில்கள் தரிசனம்  செஞ்சாட்டு வீட்டுக்குப் போகலாம், இல்லே !!!
குடந்தை சார்ங்கபாணி ராஜகோபுரத்துக்கு , தமிழ்நாட்டின்   உயர்ந்த கோபுரங்கள் வரிசையில் மூணாவது இடம்! 146 அடி உயரம். பதினோரு நிலை! கோபுரவாசல் கடந்து முன்மண்டபம் போறதுக்கே  ஒரு படுவிசாலமான முற்றத்துலே நடந்து போகணும்.  கோவில் திருவிழா வருது போல !  பந்தல்போடும் வேலைகள் ஆரம்பிச்சுருக்காங்க.

ஸ்ரீசார்ங்கா  ஸ்ரீசார்ங்கா  ஸ்ரீசார்ங்கா ன்னு மூணுமுறை சொல்லி நம்மை வான்னு கூப்பிடும் முன்மண்டப முகப்பு.  அதுக்குள்ளே போனால்தான் கொடிமரமும் பலிபீடமும்.பெரிய திருவடியை சேவிச்சுட்டு  உள்ளே போறோம். 
நம்ம  கமலவல்லி போலவே  இங்கேயும் கோமளவல்லிக்கே  முதல்மரியாதை !  என்ன இருந்தாலும் இது கோமளாவின் பொறந்தாம் இல்லையோ !!! என்ன ஒன்னு, தனிச்சந்நிதியில் கோவில் கொண்டுருக்காள். அங்கே சேவிச்சுட்டுத்தான் சார்ங்கபாணியை சேவிக்கணும் என்ற நியதி உண்டு. இடும்பர்களுக்குத்தான் தனிவழியாச்சே..... விடுவிடுன்னு மூலவரை நோக்கி ஓடும் நம்மவர் பின்னே நானும் ஓடினேன். 

நம்ம சக்கரராஜா கோவில்போலவே இங்கேயும் மூலவருக்கு ரெண்டு வாசல். உத்தராயணம் (தை ஒன்னு முதல்  ஆனி கடைசிநாள் வரை) & தக்ஷிணாயணம் (ஆடி ஒன்னு முதல் மார்கழி கடைசிநாள் வரை !)

ஆனால் சக்கரராஜா போல அத்தனை படிகள் ஏறிப்போகும் அமைப்பு கிடையாது.  அது மாடி !  இங்கே  ரதம் !  அதுவும் யானை பூட்டிய ரதம் !  மஹாவிஷ்ணு அப்படியே  ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து வந்து இங்கே இறங்கியிருக்கார். அதனால் தனியா சொர்கவாசல் கூட கிடையாது இந்தக் கோவிலில் ! இவரை தரிசனம் செஞ்சாலே சொர்கம் கிடைச்சுரும். 
ஆமாம்.... ரதத்துலே உக்கார்ந்து வரவேணமா ? அதென்ன ஒய்யாரமா படுத்துக்கிட்டே வர்றது ?   திருமழிசை ஆழ்வார் வந்து பாசுரம் பாடறார்..... சட்டைசெய்யாமல் ஒரு கிடப்பு ! அஞ்சு பாசுரம் ஆச்சு....   புள்ளி அசையவே இல்லை....   வனவாசம் காரணம்  அயோத்தியில் இருந்து காட்டுக்குப்போய் அங்கே இங்கேன்னு நடந்துதானே இருக்கணும். கடைசி வருஷம், காணாமப் போன மனைவியைத்தேடி அலையோ அலைன்னு அலைஞ்சு திரிஞ்சுக் கடைசியில்  லங்காவரை நடந்துதானே போயிருக்கணும்?  அந்தக் கால்வலியில் ( அட ராமா..... உன் கால்வலிதான் எனக்கும் வந்துருச்சா!!)   முடியாமல் கிடக்கிறாய் போல.... போகட்டும் போ....  இதோ  ஒருத்தன் வந்துருக்கானேன்னு தலையைத் திருப்பியாவது பார்க்கக்கூடாதா ? அட்லீஸ்ட் கொஞ்சம் உடம்பை உசத்தி எழுந்துக்கற பாவனை ?

நடந்தகால்கள் நொந்தவோ நடுங்குஞால மேனமாய்
இடந்தமெய்கு லுங்கவோவி லங்குமால்வ ரைச்சுரம்
கடந்தகால்ப ரந்தகாவி ரிக்கரைக்கு டந்தையுள்
கிடந்தவாறெ ழுந்திருந்து பேசுவாழி கேசனே.

பக்தன் சொல்றது சரிதான்னு  தலையைத் திருப்பி..... லேசாத் தன்னுடம்பை உயர்த்தி........... ஒரு பாவ்லா..... உத்தான சயனம்னு பெயராம் !  பத்துவித சயனப்போஸ்களில் இதுவும் ஒன்னு !  அட! உம்மால் முடியுதே !  இப்படியே இருந்து பக்தர்களுக்கு அருள் புரியவேணுமுன்னு கோரிக்கை வச்சுட்டார் ஆழ்வார். பக்தன் வேண்டுகோளை மறுக்க முடியுமா ?  அப்படியே ஆச்சு.  (பாவம்.... கால்வலி போய் இடுப்புவலி வந்துருக்கும் இல்லே? ) 

ரதத்தின் படிகளேறி உத்தராயண வாசல் வழியா நாமும் போய் பெருமாளை சேவிச்சுக்கிட்டோம்.  கருங்கல் சிலையில் உத்தான போஸ்  அமைஞ்சுருக்கான்னு  தெரியலை. நிறைய பூக்குவியல்களுக்குள் இருந்தார் ஆராவமுதன் !  உற்சவருக்கும் இதே பெயர்தான் ! 
மேலே படம்: கோவில்  வலைப்பக்கத்தில் இருந்து ! 

சந்நிதிக்கு வெளியே வந்து  அந்தாண்டைக் கொஞ்சநேரம் உட்கார்ந்திருந்தேன். நல்ல பெரிய ரதம் ! 


இந்தக் கோவிலில் ஒரு ஸ்பெஷல் என்னன்னா..... தீபாவளியன்னிக்குக் காலையில்  மூலவர் தரிசனம் கிடையாது.  உச்சிப்பூஜையில்தான்  சந்நிதி நடை திறப்பு ! ஏனாம் ?  கார்த்தாலை வேற வேலை இருக்கு ! பக்தனுக்குத் திதி கொடுக்கபோயிருவார் !  ஆ.......  நெசமாவா !!!

இப்பதான் ஒரு ஒன்பது வருசத்துக்கு முன்னே  ஒரு பதிவில் விவரமா எழுதியிருந்தேன்.  அதையே இங்கேயும் சொன்னால் ஆச்சு......

இவ்வளவு பாக்கியம் செய்த பக்தர்  லக்ஷ்மிநாராயணன்  என்பவர். குருதாத்தாச்சாரியாரின் சீடர். பரம ஏழை.  பெருமாள் மீது  அளவுகடந்த அன்பு. இப்போ நாம் கடந்து வந்த ராஜகோபுரம் இவர் முயற்சியால்தான்  கட்டப்பட்டது.

மடப்பள்ளி ஸேவகம். பெருமாளே கதின்னு  கல்யாணம் கட்டாம வாழ்ந்துட்டார்.  கடைசியில் ஒரு தீபாவளி அமாவாசையன்னிக்குப் பெருமாள் திருவடிக்குப்போய்ச் சேர்ந்துட்டார். தனிக்கட்டையா இருந்ததால்  திதி செய்யக்கூடக் குடும்பம் இல்லை. அன்றைக்குப் பட்டர் கனவிலே வந்த பெருமாள்,  என் கையில் இருக்கும் தர்ப்பையை எடுத்துக்கொண்டுபோய் வேண்டியதைச் செய்யும் என்று உத்தரவிட்டாராம்.

மறுநாள் காலை  கருவறையைத் திறந்தால்..........   ஈரவேட்டியும், கையில் தர்ப்பையுமா காட்சி கொடுத்ததாகக் கோவில் புராணம் சொல்லுது!

அதேபடிக்குத் தீபாவளி அமாவாசை தினம்  காலை நேரத்தில் கோவில் திறக்கறதில்லை. கோவில் வகையில் தர்ப்பணம்  கொடுத்து முடிச்சப்பறம் உச்சி காலபூஜைக்குக் கோவிலைத் திறந்துடறாங்க.
இன்னும்  கோவில்கதைகள் எல்லாம் விஸ்தாரமாய் அந்தப் பதிவில் இருப்பதால் கீழே இருக்கும் சுட்டியை க்ளிக்கி வாசிக்கலாம் விருப்பம் இருந்தால் !!!

https://thulasidhalam.blogspot.com/2016/08/76.html

மூலவர் சார்ங்கத்தோடு சேவை சாதிப்பதால் சார்ங்கபாணிகோவில்  என்ற திருநாமம் கோவிலுக்கு!   மஹாவிஷ்ணு கையில் இருக்கும் வில்லின் பெயர் சார்ங்கம்.  அது எப்படியோ சாரங்கம்னு ஆகிப்போய், சாரங்கபாணின்ற பெயர் பரவலாகிப்போச்சு. கும்மோணம் ஏரியாவில் ஏகப்பட்ட நபர்களுக்கு சாரங்கபாணி என்ற பெயர் (அந்தக் காலத்தில் ) உண்டு.  இப்பெல்லாம் 'ஷ்' எண்டிங் இருந்தால்தான் பேஷன் !  அதேபோல  பெண்களிடையில்  கோமளா என்ற பெயர் பரவல். நம்ம பூனா மாமியின் பெயர்கூட கோமளாதான். பொறந்த ஊர் கும்பகோணம்னு தனியாச் சொல்லவேண்டியதே இல்லை !  இதுலே இன்னும் ஒரு அதிசயமுன்னா..... மாமியின் மருமகன் பெயர் ஆராவமுதன் ! !!!  ரிட்டயர்ட் வாழ்க்கையில்  கோஷ்டி சொல்லும் குழுவில் அங்கம் ! பெருமாள் சேவையில் இனிய வாழ்க்கை !  

சார்ங்கம் சொல்லில் இலக்கணப்பிழை இருக்குன்னு நண்பர் பழைய பதிவில் வந்து  சொல்லிட்டுப்போனார்.  அடராமா..... அது ஒரு வில்லின் பெயர். அர்ஜுனனின் வில்லின் பெயர் காண்டீபம் என்பதைப்போல் இது  மஹாவிஷ்ணுவின் கையில் இருக்கும் வில்லின் பெயர். அதுவும் இது சமஸ்க்ரத மொழிச் சொல். இதுலே தமிழ் இலக்கணம் எங்கே வந்தது ?  மண்டையை உடைச்சுக்கத்தான் வேணும்.

அது  இருக்கட்டும்.......  மஹாவிஷ்ணு,  சங்கு, சக்கரம்,   உடைவாள், Gகதாயுதம், வில் என்ற அஞ்சு ஆயுதங்களை (!) தரித்திருக்கிறார். பஞ்சாயுதம் என்றுதான் சொல்வோம்.  ஒவ்வொன்னுக்கும் ஒரு பெயரும் இருக்கு!

சங்கு - பாஞ்சஜன்யம்
சக்கரம் - சுதர்ஸனம்
உடைவாள் - நந்தகம்
கதாயுதம் - கௌமோதகி
வில் - சார்ங்கம்

இவற்றில்,  சக்கரத்துக்கும்,  சார்ங்கத்துக்கும் கோவில்கள் இருக்கு. மற்ற ஆயுதங்களுக்குத் தனிக்கோவில் இருக்கான்னு  யோசனையா இருக்கேன். விவரம் தெரிஞ்சவுங்க சொன்னால் நல்லது.
ரதவடிவில் கருவறை இருப்பதை திருஎழுகூற்றிருக்கை என்ற வகையில் பாடலாகப் பாடி இருக்கார் நம்ம திருமங்கை ஆழ்வார். ஒன்னுமுதல் ஏழுவரைசொற்களை அமைச்சு மேலேறிப்போய், அங்கிருந்து  ஒவ்வொன்னா கீழிறிங்கி வரும் சொற்களைக் கொண்டு  ஒன்னில் முடிக்கணுமாம்.

இந்தக் கால்வலியால் .....   மற்ற சந்நிதிகளுக்குப் போய்ப் பார்க்கத் தோணலை. திரும்பி வெளியே வரும்போது ஆழ்வார்சந்நிதி மூடிக்கிடக்கு..... ப்ச்....

பஞ்சரங்கத்தலங்களில் இந்தக்கோவிலும் ஒன்னு. நம்ம ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட  நூற்றியெட்டு திவ்யதேசக்கோவில்களில் இதுவும் சேர்த்தி !
 
பெருமாளுக்கு பாக்கி வச்சவங்க பெயர்களைப் போட்டுவச்சுருக்காங்க. ப்ச்.....

ராயாஸுக்குத் திரும்பி வந்து ஆயுர்வேதத்தைலம் காலில் தேய்ச்சுக்கிட்டு கொஞ்சம் ஓய்வு.  ஒரு ஒன்பது மணிபோல  கீழ்தளத்தில் இருக்கும் ரைஸ்n ஸ்பைஸில் எனக்கான ரெண்டு இட்லி ! நம்மவருக்கும் விஜிக்கும் அவரவர் விருப்பப்படி !
நாளைக்கு இன்னொரு கோவிலுக்குப் போகலாம்.  சரியா ?   

தொடரும்........ :-)


Monday, June 02, 2025

கொஞ்சம் பேசிட்டு வந்தேன் (2025 இந்தியப்பயணம் பகுதி 28 )

வழியிலே எங்கியாவது 'நம்ம எஞ்சினுக்கு பெட்ரோல் ' ஊத்திக்கலாமேன்னு நினைச்சது நடக்கலை. நேரா சக்ரபாணி கோவிலுக்குத்தானே போய் இறங்கினோம்.  அங்கே தரிசனம் முடிச்சு அடுத்த கோவில்னு வந்தப்பக் கோவில் வாசலையொட்டியே நமக்கான 'பெட்ரோல்பங்க்' இருந்தது. நல்ல கூட்டம் வேற !   அப்ப நல்லாத்தான் இருக்கணும். கோபுரவாசலுக்கு எதிர்ப்புறம்  கிடைச்ச பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திட்டு எதிர்வாடைக்குப் போனோம்.
 பொங்கள், கருவப்பிள்ள சாதம் எல்லாம் கூட விக்கறாங்களாம் !!!!


அட ராமா.......

எனக்கானது கைக்கு வரும்வரை பக்கத்துக்கடையில் நின்னு வேடிக்கை பார்த்தேன்.  அரிசி வச்சுருக்கும் ட்ரம் பார்த்ததும்.... கொசுவத்தி பத்திக்கிச்சு.  ஒரு பதினாறு வருஷத்துக்கு முந்தி இதே கடைக்கு வந்துருக்கேன். 
கடைக்காரரும் இப்போ ஃப்ரீயாத்தான் உக்கார்ந்துருந்தார்.  கடையின் ஒரு பகுதியில் கம்ப்யூட்டர் டேபிள் வச்சுருந்தாங்க.   மகன் செட்டப் செஞ்சு கொடுத்தாராம். சுமார்  நூறு வருசமா அரிசி வியாபாரந்தானாம்.  ஒரு ஏழெட்டு தலைமுறைன்னார்.  இப்போ மகன்கள் ரெண்டுபேரும் கம்ப்யூட்டர் படிப்பெல்லாம் படிச்சுட்டு வேற வேலையில் இருக்காங்களாம்.  தனக்கப்புறம் கடை என்னவாகுமோன்ற கவலை இருக்குன்னார். 

"கவலைப்படாதீங்க.... மனுச உயிர்கள் இருக்கும்வரை அரிசிக்கடைக்கு மதிப்பு குறையவே குறையாது. நல்ல ஆட்களாப் பார்த்து வேலைக்கு வச்சுட்டு, நீங்க மேற்பார்வை பார்த்துக்குங்க.  ரொம்ப ஓடியோடி  உழைப்பதைக் கொஞ்சம் குறைச்சுக்கலாம். எதுக்குக் கவலைபடறீங்க? அந்த ராமன் பார்த்துக்குவான்"

ஏற்கெனவே ஒருமுறை இந்தக் கடையைப் பத்தி எழுதியிருந்தேனே.... அது இங்கே....

https://thulasidhalam.blogspot.com/2009/03/5.html

 அந்தப் பதிவில்  இருந்த கடையின் படத்தைக் காமிச்சதும்  சந்தோஷப்பட்டார். 

மேலே  : முதல் படம் அன்று ரெண்டாவது இன்று !


 இதுக்குள்ளே நம்ம டீக்கடை சமாச்சாரமும் முடிஞ்சது.  அடுத்தாப்லே இருக்கும் கோவிலுக்குள் போனோம்.

போனமுறை பார்த்ததுக்கு இன்னும்  மோசமாகத்தான் இருக்கு.......   கருவறைக் கம்பிக்கதவை சாத்தப்போன பட்டர்ஸ்வாமிகள்,  நம் பேச்சு சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தவர், ஒரு சின்ன வேலை இருக்கு..... பத்தே நிமிஷத்துலே திறந்துருவேன்.  அவசரம் இல்லைதானே? ன்னார். 
 ப்ரகாரம் சுத்திட்டு வர்றோமுன்னதும்  சாவிக்கொத்தைத் தோளில் தூக்கிப் போட்டுக்கிட்டு வேகமாப் போனார். ஒரே ஒரு பட்டர் ட்யூட்டியில் இருப்பதால்  அங்கே இங்கேன்னு ஓடவேண்டியிருக்கு போல.....  நாங்க உள்ப்ரகாரம் நோக்கிப்போனோம்.  மூணுபக்கமும் முழு ராமாயணம் இருக்கும் இடம்.  நிம்மதியா உக்கார்ந்து சித்திரங்களைப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.  நம்மவருக்கு முந்தி வந்தது அவ்வளவா ஞாபகம் இல்லையாம் !  'ஒரு சுத்து சுத்திட்டு வாங்க'ன்னேன்.  

 சந்நிதி நோக்கிப்போனோம்.  பட்டர்ஸ்வாமிகள் வந்திருந்தார். தீபாராதனை ஆச்சு.  வீணை வாசிக்கும் ஆஞ்சிக்கு ஒரு கூடுதல் கும்பிடு !  இது தென்னக அயோத்தி என்பதால்..... வடக்கக அயோத்தி போய் வந்த விவரத்தையும், கூடவே குழந்தையை இங்கேயும் கொண்டுவந்துருக்கேன் என்ற சமாச்சாரத்தையும்  ரகஸியமா ராமனுக்குச் சொல்லிவச்சேன்.  அவனுக்குத் தெரியாதா என்ன ? 
 ஒரு முதிய பக்தர் கோவிலுக்குள் வந்தவர் பாடினார்.   வயசு ஒரு  தொன்னுத்தியாறுன்னு சொன்ன ஞாபகம். தினமும் கோவிலுக்கு வர்றவராம்.  நல்லாப் பாடறாரேன்னு இன்னும் கொஞ்சம் பாடுங்கன்னு கேட்டுச் சின்னதா விடியோ க்ளிப்ஸ் ஆச்சு.  நேத்துதான் ஃபேஸ்புக்கில் போட்டுவச்சேன்.  கீழே இருக்கும் மூணு சுட்டிகளும் பெரியவர் பாட்டுகளுக்கே!  (எல்லாமே ஒரு
 நிமிட்டுக்குக் குறைவுதான்! )
https://www.facebook.com/share/v/1C7F4Lp8MA/

https://www.facebook.com/share/v/16WFjchcEc/

https://www.facebook.com/share/v/161d9doSRL/

கோவில் முன்மண்டபத்தூண்களில் அற்புதமான சிற்பங்கள் இருந்தாலும் சரியான வெளிச்சம் இல்லாததால் ஒன்னும் க்ளிக்கலை.

கோபுரவாசலுக்கு இந்தாண்டை ரெண்டு பெண்கள் பெரிய தூக்குவாளிகளில் வெள்ளைக்கடலை சுண்டல் கொண்டுவந்து பக்தர்களுக்குப் ப்ரசாதமாக் கொடுக்கறாங்க.  நமக்கும் கிடைச்சது.  என்ன விசேஷமுன்னு கேட்டேன். அமாவாசை என்பதால்  ப்ரஸாத விநியோகமாம். எல்லா அமாவாசைக்குமா ? ஆமாம்னு சொன்னாங்க. 
சுடச் சுடக் கையில் இருந்த சுண்டலை, நம்ம விஜிக்குக் கொண்டுபோய்க் கொடுத்தேன்.

தடுக்கி விழுந்தால்  எதாவதொரு கோவில் வாசலில்தான் விழுவோம் என்ற கோவில்நகரில்  அடுத்தடுத்து இருக்கும் கோவில்களில் முடிஞ்சவரை தரிசனம் கிடைச்சால்  நல்லதுதானே? 

 இதோ வந்தேன்.... சார்ங்கா............

தொடரும்.......... :-)