இந்த முறை கிங்ஃபிஷர் விமானம். சரியான நேரத்துக்குப் புறப்பட்டது. ரெட்டை இருக்கைகளோடு ஒல்லியா நீளமா மீன்கொத்தி மூக்கு போலவே இருந்துச்சு. வெஜிடபிள் ஸாண்ட்விச் ஒன்னும் 250 மி. தண்ணீரும் கொடுத்தாங்க. எங்க பக்கம் ஃபொக்காஸியா ப்ரெட்ன்னு ஒன்னு கிடைக்கும். அதைப்போல ஆனா பயங்கர குண்டாப் பெருசா இருந்துச்சு. உள்ளே கார்ன் ஃபில்லிங். காவாசி தின்னவே வாய் வலிச்சது.அம்பது நிமிசத்துலே பெங்களூரு போயிட்டோம். ஒதுக்குப்புறமா ஏதோ ஒரு மூலையில் கொண்டுபோய் கிடப்பில் போட்டுட்டாங்க. பயணத்தைத் தொடர்பவர்கள் மட்டும் விக்குவிக்குன்னு உக்கார்ந்துக்கிட்டு பணியாளர்கள் பரபரன்னு சுத்தம் செய்யறதை 'வேடிக்கை' பார்த்துக்கிட்டு இருந்தோம்.
இந்த பராமரிப்பு, துப்புரவு செய்யும் விதத்தைப் பற்றி ஒரு டாக்குமெண்ட்ரிப் படம் வந்துருக்காம்.(கோபால் சொன்னார்) ஆளாளுக்கு ஒரு வேலை. படபடன்னு செஞ்சுட்டுச் சரசரன்னு போயிட்டாங்க. புது கேபின் க்ரூ வந்துச்சு. ஆனா சாப்பாடு? அதே பழசு. ஆனால் வேற சைஸ்:-) உள்ளெ ஃபில்லிங்கும் வேற! கோல்ஸ்லா. பறந்து போய்ச்சேர்ந்தப்ப மணி மூணடிச்சு அஞ்சு நிமிசம்.
சின்ன ஏர்ப்போர்ட்தான். அங்கே வருகைப் பகுதியில் கர்நாடகா அரசின் சுற்றுலாத்துறை டெஸ்க் இருந்துச்சு. இனிய முகத்துடன் வரவேற்றார் பணியில் இருந்தவர். இந்தப் பகுதி தக்ஷிண கன்னடாவாம். இந்த மாவட்டத்துக்கும் அடுத்துள்ள மாவட்டமான உடுப்பிக்கும் சேர்த்து ஒரு வரைபடம் கொடுத்தார். அதுலே முக்கிய இடங்கள், ஊர்கள் என்னென்ன இருக்கு, ஒவ்வொன்னுக்குமிடையில் உள்ள பயண தூரம், சின்னதா அவைகளைப் பற்றிய குறிப்புகள் எல்லாம் அழகா விவரமா இருக்கு. A4 சைஸ்லே எட்டுப் பக்கம். ரொம்ப சாதாரணக் காகிதத்தில் அச்சிட்டது. இதைவச்சுக்கிட்டே இந்தப் பயணம் பூராவும் நடத்த முடிஞ்சது.
எத்தனை நாள்? ரிலிஜியஸ் டூரா இல்லை, சரித்திரமா இல்லைன்னா சும்மா வேற வகை ஊர் சுற்றிப் பார்க்கவான்னு கேட்டு நல்ல விளக்கமும் கொடுத்தார். நெஜமாவே நல்ல உதவி. இதுமாதிரி நம்ம சென்னையில் ஏன் ஒரு ஏற்பாடும் இல்லைன்னு மனசுக்குள்ளே நொந்ததென்னமோ நிஜம்.
இப்பெல்லாம் 'வலையிலே இருக்கு வழி'ன்றது புது மொழி(காப்பிரைட் எனக்கு)முதல்நாளே 'வலை' மூலமா ஒரு நாலு நாளைக்கு தங்க இடமும், ஊர் சுற்ற ஒரு வண்டிக்கும் ஏற்பாடு செஞ்சுருந்தோம். வண்டி வந்து காத்திருந்துச்சு. பிரஷாந்த் என்ற இளைஞர் வந்துருந்தார். விமானநிலையம் பாஜ்பே என்ற இடத்தில் இருக்கு, சிட்டியில் இருந்து முப்பத்தியேழு கிலோமீட்டர் தூரத்தில்.. ஹொட்டேல் பெயரைச் சொன்னதும் சமுத்திரத்தின் அருகில் இருக்கு. நல்ல இடமுன்னு சொன்னார். 'புதுசா ஒரு விமானநிலையம் பெருசா கட்டிக்கிட்டு இருக்காங்க, அதோ அங்கே பாருங்க'ன்னார்.வழியெல்லாம் கேரள கிராமங்களை நினைவூட்டும் விதமா அதே ஓடு வேய்ந்த வீடுகள். தெருக்கள் எல்லாம் செம்மண் புழுதி. கூட்டமா நின்னுருந்த தெங்குகளும் தேக்குகளும் ரோஸ் பவுடர் போட்ட மாதிரி புழுதியை வாரி முகத்தில் அப்பிக்கிட்டு நின்னுச்சுங்க. மங்களூர் சிட்டிக்குள்ளே அங்கங்கே நம்ம சிநேகாவும் மாடல் பொண்ணுகளும் அலங்கார பூஷிதைகளா வைரம் தங்கம் வாங்கச்சொல்லிக்கிட்டு இருந்தாங்க. முக்காமணி நேரத்தில் ஹொட்டேல் போய் இறங்குனோம்.
முகத்தில் வந்து அடிச்சது குடலைப் பிடுங்கும் ஒரு நாத்தம்:( பதறிக்கிட்டு ரிஸப்ஷனுக்கு ஓடுனோம். நல்லவேளை அந்த 'சுகந்தம்' இங்கில்லை. வெளியில் வந்துருந்த குடலைத் திரும்பவும் உள்ளே அனுப்பிட்டு என்னப்பா இது இம்புட்டு நாத்தமுன்னா..... இங்கே போர்ட் ரொம்பப் பக்கத்துலே இருக்காம். ஆனா ஃபிஷ்ஷிங் போர்ட். போனவாரம் வடிவுடையாளைப் பார்க்கப் போனப்ப இதே மாதிரி ஒன்னு காசிமேடில் வந்துச்சே அதேதான்!
மூணாம் மாடியில் அறை. காரிடோர் முழுசும் ஒரே புகைநாத்தம். இதேதடா வம்பாப் போச்சு. தாஜ் க்ரூப்ன்னு சொன்னாங்க. இப்படியா? யக். நாலுநாள் தாங்கமாட்டேனே:(
'பரவாயில்லை. நாளைக்கு வேற இடம் பார்த்துக்கலாம். ஒரு பேக் அப் இருக்கட்டுமுன்னுதான் நாலுநாளைக்கு புக் பண்ணினேன்'னார் கோபால்.
'ஆமாம். நாளைக்குக் காலையில் காலி செஞ்சுட்டு ஊர் ஊராப் பார்த்துக்கிட்டே போய் அங்கங்கே தங்கிக்கலாம். நிறைய ஹொட்டேல்கள் விவரம் டூரிஸம் போர்டு கொடுத்துருக்கே'ன்னேன்
கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டு மூக்கைப்பிடிச்சுக்கிட்டே காரிடோரைக் கடந்து ஓடி மின்தூக்கிக்குள் நுழைஞ்சேன். கீழே ரெஸ்டாரண்ட் இருக்கு. அங்கே போய் காஃபி ஒன்னு குடிக்கணும். பருப்புவடை இருக்குன்னதும் நான் வேணாமுன்னு தலையை ஆட்டுவதைக் கவனிக்காமல் கொண்டான்னுட்டார் கொண்டவர். சின்னச்சின்னதா எட்டு.இதுக்குள்ளே ட்ராவல் கம்பெனி முதலாளி நம்மைப் பார்க்க வந்துட்டார். இது சைடு பிஸினெஸ்தான். புள்ளி ஒரு வக்கீல். தினேஷ் ராவ். வரைபடத்தைப் பிரிச்சுவச்சுக்கிட்டு நாலுநாளில் எங்கெங்கே போகலாம், எங்கே தங்கலாமுன்னு திட்டம் போட்டுக் கொடுத்தார். இன்னிக்கு இங்கே உள்ளூர் கோவில்களையெல்லாம் முடிச்சுக்குங்கோன்னார்.
நல்லதா ஒரு கோட்டை, திப்பு சுல்தான் கட்டுனது இருக்கு. ஆனால் இருட்டப்போகும் நிலையில் அது வேணாமுன்னு முடிவு செஞ்சோம். சிலகோவில்களைப் பத்திச் சொல்லிக்கிட்டே வந்தவர் 'ஷக்திநகரில் க்ருஷ்ணன் கோவில் இருக்கு. ரொம்ப அழகான கோவில். உங்களுக்குப் பிடிக்கும். அது கோபாலகிருஷ்ணன் கோவில்' ன்னதும் உடனே அங்கே போகணுமுன்னு பரபரத்தேன்.
மதுரையைவிடக் கொஞ்சம் சின்ன ஊராத் தெரியுது மங்களூர். இந்த ஊருக்குப் பெயர்கொடுத்த மங்களாதேவி கோவிலுக்கு முதலில் போனோம். (நாங்க பூனாவில் இருக்கும்போது கீழ்தளத்தில் குடி இருந்த உப்பாவும் உம்மாவும் மங்கலாபுரமுன்னுதான் எப்பவும் சொல்வாங்க. அவுங்க தலசேரிக்காரர்கள். மங்கலாபுரம் தீவண்டியா, நமக்குப் போகேண்டது)கோவில் நல்ல பழசு. பத்தாம் நூற்றாண்டு. அப்போ இது துளு நாடு.(இப்பவும் அங்கத்து ஜனங்கள் துளு பேசறாங்க. நம்ம ட்ரைவர் பிரஷாந்த் துளு பேசுவாராம். அரைகுறையா ஹிந்தி பேசறார். இங்கிலிபீசு...சுத்தம். எப்படியோ சமாளிச்சுட்டோமுன்னு வையுங்க. ஆள் அசப்பில் ராம் பட ஜீவா மாதிரி. சின்ன வயசுதான். 23.) அரசர் குந்தவர்மா ஆட்சி. மச்சேந்திரநாதா, கோரக்நாதான்னு ரெண்டு ரிஷிகள் நேத்ரவதி ஆற்றைத் தாண்டி மங்கலாபுரம் வர்றாங்க. (அவுங்க ஆறு தாண்டுன இடத்துக்கு கோரக்தாண்டான்னு பெயராம்) இங்கேதான் கபிலமகரிஷியின் ஆஸ்ரமம் முன்பொரு காலத்துலே இருந்துருக்கு.
ரிஷிகள் வந்துருப்பதைக் கேள்விப்பட்ட அரசர் குந்தவர்மா, நேரில் வந்து அவுங்களை வணங்கி வரவேற்று, 'எதுனாச்சும் உதவி வேணுமுன்னா சொல்லுங்க'ன்னார். அப்போதான் அவுங்க கபிலாஸ்ரமத்தைப் பற்றிச் சொல்லி, இந்த புண்ணீய பூமியில் நாங்க ஒரு ஆஸ்ரமம் கட்டிப் பூஜை செய்யலாமுன்னு இருக்கோம். அதுக்குண்டான இடத்தைத் தரணுமுன்னு கேட்டாங்க. முந்திக்காலத்துலே மங்களாதேவி கோவில்கூட இங்கே இருந்துச்சுன்னும் சொன்னதும் ராஜாவுக்கு ஆச்சரியமாப் போச்சு, 'நம்ம நாடு இவ்வளவு சிறப்பானதா?'ன்னு. சம்பவம் நடந்த இடங்களை ராஜாவுக்குக் காமிச்சாங்க.
கொசுவத்தி பத்தவச்சாச்சு, ராஜாவுக்கு !
தொடரும்........................:-)
Tuesday, April 06, 2010
பெங்களூரு வழியாக மங்களூரு
Posted by
துளசி கோபால்
at
4/06/2010 01:02:00 PM
35
comments
Labels: dakshina kannada, அனுபவம்
Sunday, April 04, 2010
குட்டிச்சாத்தான் வேலை
கண்ணுத் தெரியாத அவஸ்தையில் ஜாக்கெட்டின் தையலைப் போராடிப் பிரிச்சுக்கிட்டு இருந்தேன். மூணு வாரத்தில் இப்படிப் பூசணிக்காயா ஆகமுடியுமா? இப்பத்தானே தோழி வீட்டுக் கல்யாணத்துக்குப் போட்டுக்கிட்டுப் போனேன்! பரிதாபப்பட்டு நான் உதவறேன்னு 'தானாவே' முன்வந்தார் கோபால். பாவம் நல்ல மனிதர். என் கண்ணு கலங்கினால் அவருக்குத் தாங்காது கேட்டோ!
ஆளுக்கு ரெண்டுன்னு எடுத்துவச்சுக்கிட்டு.........குட்டிச்சாத்தான் மாதிரி .....கண்ணை சுருக்கிக்கிட்டுக் 'கர்மமே கண்ணாயினார்' ஆக இருந்தோம்.
நாலுநாளைக்கு உடுப்பிக்குப் போயிட்டு வரலாமான்னார். காண்பது..... கேட்டது கனவிலா? இல்லையே! சோழியன் குடுமி ஏன் இப்படிச் சும்மா ஆடுது? அடுத்த மூணு வாரம் ஆள் 'எஸ்' ஆகப்போறாராம். அதானே .....பார்த்தேன். சரி. நாலை அஞ்சாக்கினேன்.
துணிமணிகள், டாய்லட்ரி பை, படிக்க ஒரு புத்தகம், முக்கியமா ஸ்பேர் கண்ணாடி. எடுத்துவச்சமா போனமான்னு இல்லாம இந்த முறை குழப்பம் ஒரு கிழவரால் வந்துச்சுன்னு சொன்னா நம்புங்க.
சின்னதா ஒரு கொசுவத்தி ஏத்திவச்சுக்குங்க. ஜஸ்ட் ஒரேஒரு மாசத்துக்குத்தான். தோழி ஒருத்தர் போயிட்டுவந்து, 'அப்படியே வாயடைச்சு நின்னுட்டேன். உன் நினைவுதான் வந்துச்சு'ன்னு சொன்னாங்க. அனுமார் கோவிலுக்காப் போனீங்கன்னு கேட்டேன்:-)
"லக்ஷ்மிநரசிம்மர் கோவில். கட்டவாக்கம் என்ற ஊர். வழி மட்டும் கேக்காதே. காட்டுப்பகுதி போல இருக்கு. ரோடும் சரி இல்லை. கஷ்டப்பட்டுப் போனோம்"
தாம்பரம் பக்கத்துலே அப்படி என்ன காடு? அதே கஷ்டத்தை நாமும் படலாமேன்னு ரெண்டே வாரத்துக்கு முன் ஒரு நாள் திடீர்னு மனசுலே தோணுச்சு. ஞாயித்துக்கிழமை வேற! நம்மாளு ஊர்லே இருக்கார். போயிட்டே வந்துறலாம். கூட இன்னொரு தோழியையும் கூட்டிக்கலாமுன்னு அவுங்களுக்குத் தகவல் சொன்னதும் மறுபேச்சே இல்லாமல் சரின்னுட்டாங்க.
கூகுளாரைத் தஞ்சம் அடைஞ்சால்.... 'தோ.... இங்கெதான் இருக்கு பாரு'ன்னார். ஒரு மணி நேரம் போதும். தாம்பரம் முடிச்சூர் ரோடுலே(ஸ்டேட் ஹைவே 48) போகணும். படப்பை தாண்டிப்போனால் நிஸான் தொழிற்சாலை இருக்கு. அதைக் கடந்து கொஞ்சதூரம் போய் வலது பக்கம் திரும்புன்னார். அப்படியே ட்ரைவரிடம் சொன்னோம்..கொஞ்சம்கூட எதிர்பாராத விதமா அட்டகாசமான சாலை. படப்பை கிராமம்(?) தாண்டினோம். கடைவீதியில் ஒரு அதிசயம். போஸ்டர் கலாச்சாரம் இப்போ மதங்களைக் கடந்துருச்சு. சமத்துவம் பரவுனாச் சரி.
மணிமங்கலம் ஏரியில் தண்ணீர் நிறைய இருக்கு. கூடவே பறவை இனங்களும் பனைமரங்களும்.
தப்பான ரைட்லே (இங்கே கோவிலுக்கான தோரணவாசல் இருக்கு. ஆனா இது எல்லையம்மன் கோவிலுக்கானது) திரும்பி பிறகு சரியான ரைட்டுக்கு வந்தோம். இங்கே பிரியும் சாலைதான் கொஞ்சம் கரடுமுரடானது. ஒரு 50 மீட்டருக்கு இப்படி. அப்புறம் மண்சாலை. அரைக் கிலோமீட்டரில் கோயில் வந்தாச்சு.
செம்மண் பட்டை போட்ட ஒரு சாதாரணக் கட்டடம். கோபுரத்துக்கான வேலை ஆரம்பிச்சு இருக்காங்க போல. கண்டிப்பாப் படம் எடுக்கக்கூடாதுன்னு ஒரு போர்டு. வம்பு எதுக்குன்னு கேமெராவைப் பைக்குள் வச்சுட்டேன். ஹாலில் ஒரு முப்பதுபேருக்குக் குறையாமல் ஒரு கூட்டம் பலர் பாயில் உக்கார்ந்துருக்காங்க. நேரெதிரே 'பெரும் ஆள்'!!!! கோவில் மணி ஒலிக்கத் திருமஞ்சனம் நடந்துக்கிட்டு இருக்கு. சந்தனமும் மஞ்சளுமா தீற்றிவச்ச முகம். இடது மடியிலே சின்ன உருவில் தாயார். நெய்விளக்கு ஆரத்தி முடிச்சுத் திரை போட்டு அலங்காரம் தொடங்குச்சு.
சந்நிதிக்கு நேரா இருந்த ஒரு பெஞ்சில் எங்களை உட்காரச்சொன்னார் ஒரு புண்ணியவான். அப்பாடா....முழங்கால் தப்பிச்சது. அலங்காரம் முடியும்வரை பக்தர்களுக்கு நரசிம்ம அவதாரத்தின் விசேஷத்தை ஒருத்தர் விவரிக்கறேன்னு வந்து உக்காந்தார். அவர் இங்கே முக்கிய புள்ளியாகத்தான் இருக்கணுமுன்னு நினைச்சேன். அது ரொம்பச் சரி. இவர் பெயர் பார்த்தசாரதி. இவருடைய கனவில்(தான்) நரசிம்மர் வந்து, தனக்குக் கோவில் எழுப்பச் சொன்னாராம். ஒரு மரத்தடியைக் காமிச்சு கனவுலே வந்த இடமுன்னு அவர்மனைவி கல்யாணி சொன்னாங்க. இவுங்க மகன்கள், மருமகள்கள்ன்னு சின்னதா ஒரு கூட்டம் அங்கேயும் இங்கேயுமாப் போய் ஏதோ வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. நாங்க உக்கார்ந்துருந்த இடத்துக்குப் பக்கத்துலே சமையல் நடந்துக்கிட்டு இருந்துச்சு. அங்கேயும் சிலர் பிஸியா இருந்தாங்க.
ப்ரஹ்லாதன் பக்த சக்ரவர்த்தி. ஹிரண்யகசிபு எவ்வளவு பயங்கரமான தண்டனை கொடுத்தாலும், 'நாராயணா, என்னைக் காப்பாத்து'ன்னுகூடக் கேக்காம, 'நாராயணாய நமஹ' மட்டும் சொல்லிக்கிட்டே இருந்துட்டான். பூரண சரணாகதின்றது இதுதான்.
ஹிரண்யனின் அரண்மனையில் ஒரு விஜயஸ்தம்பம் இருந்துச்சு. எல்லோரையும் ஜெயிச்சுட்டு இதைக் கட்டுனானாம். 'உன்னால் படைக்கப்படாத எந்தப் பொருளினாலும் மரணம் நேரக்கூடாதுன்னு வரம் வாங்குனதால் இந்தக் கம்பத்தில் நாராயணன் இருக்கமாட்டான்னு நினைச்சு, 'இதுலே இருக்கானா அந்த நாராயணன்?'ன்னு குழந்தையைக் கேட்டானாம்.
வெவ்வேற கதைகளில் வெவ்வேறு மாதிரி கேட்டுருக்கோமில்லையா? சின்னக் குழந்தை எந்தத் தூணைக் காமிக்குமோன்ற கவலையில் நாராயணன் அங்கிருக்கும் எல்லாத் தூண்களிலும் ரெடியா இருந்தான்னும் சொல்வாங்க
நரசிம்ஹம் வெளிப்பட்டதும் இவனை ஒரே அறை அறைஞ்சு கொல்லலை. தயாளமூர்த்தி. சிநேகமுள்ள சிம்மம். இவன் இப்போவாவது மனம் திருந்தி மன்னிப்பு கேப்பானான்னு பார்த்துட்டு, அப்புறமாத்தான் மெள்ள(!) வயித்தைக் கீறிக் குடலை எடுத்தாராம். அப்புறமும் கோபாவேசமா இருந்தவரை, எப்படி சமாதானப்படுத்தறதுன்னு தெரியாம, பக்தனை முன் நிறுத்துனதும் அவனைத் தூக்கித் தன்மடிமேல் வச்சுண்டாராம். இவர் மடியில் அமரும் பாக்கியம் ப்ரஹ்லாதனுக்குத்தான் கிடைச்சது. (ஆனா ரெண்டு தொடையிலும் கிடக்கும் பாக்கியம் ஹிரண்யகசிபுவுக்குக் கிடைச்சதே!!!!)
கடைசியில் இங்கே என்னமோ நடக்கறதேன்னு பார்க்க வந்த லக்ஷ்மியை விருட்ன்னு கையை நீட்டி அப்படியே வாரிஎடுத்து மடிமேலே வச்சுண்ட மாதிரி இருக்கார் பாருங்கோன்னார். பார்த்தேன். எனக்கென்னமோ நம்ம கோகி பல்லைக் காமிச்சுக்கிட்டு உக்கார்ந்துருக்கானோன்னு தோணுச்சு. குழந்தையை நினைச்சுக் கண்ணு நிறைஞ்சது. ப்ச்......
இந்த ப்ரவசனம் முடியும் தறுவாயில் ஒரு பெரியவர் வந்தார். எங்க பக்கத்துலே ஒரு நாற்காலியைப்போட்டு அவரை உக்காரவச்சார் பண்டிட் பார்த்தசாரதி. வயசு ஒரு எண்பது இருக்கலாம். கொஞ்ச நேரத்துலே ஏதோ கர்புர்ன்னு சத்தம். பெரியவர் சின்ன உறுமலா உறுமிக்கிட்டே சுத்தும் முத்தும் பார்த்தார். கைவிரல்களை மடிச்சு கீறும் போஸில் வச்சுக்கிட்டார்.
சாமி வந்துடுத்து!!!!! கதை கேட்டுக்கிட்டு பாயில் உக்கார்ந்துருந்த மக்கள்ஸ் எல்லோரும் எழுந்து நின்னுட்டாங்க. ஒருந்தர் 'சிங்கச்சாமி' காலில் விழுந்தார். 'அவரைத் தொடாதீங்கோ, தொடாதீங்கோ, தொடப்பிடாது'ன்னு பார்த்தசாரதி சொல்லிக்கிட்டே இருந்தார். ஜனங்க எல்லோரும் பக்தி பரவசத்தில் கைகூப்பி நிற்கறாங்க. இதில் நம்ம கோபாலும், நம்ம தோழியும் சேர்த்தி.
இதுக்குள்ளே அந்தக் கல்யாணி மாமி வந்து 'சிங்கச்சாமியிடம்' கோபப்படாதேள். பானகம் வேணுமா? மோர் வேணுமா? கரைச்சுண்டு வரேன்'னாங்க. உறுமலோடு 'பானகம்' என்றது சிங்கம். பக்கத்துலே இருந்த அறைக்குள்ளே போய் பானகச் சொம்பைக் கொண்டுவந்ததும் டம்ப்ளரில் ஊற்றிக்கொடுக்கக் கொடுக்க, 'சிங்கம்' மாந்திக்குடிச்சது. அப்புறம் வழிவிடுங்கோன்னு சொல்லி சிங்கத்தை சாமிச்சிலைக்கு முன்னே கொண்டுபோய் நிறுத்துனாங்க. திரை போட்டுருந்ததால் நமக்கு 'ஒன்னும்' தெரியலை.
இன்னிக்கு விசேஷத்தை ஸ்பான்ஸார் பண்ணி இருந்த அந்தக் கூட்டத்தினர் எல்லாம் கண்ணில் பரவசத்துடனும் பயத்துடனும் 'கப்சுப்' ன்னு இருந்தாங்க. மெதுவாக் கண்ணை இப்படியும் அப்படியும் ஓட்டுனேன். கோபாலும், தோழியும் கைகள் கூப்பி அதே பயபக்தியுடன். நானும் ஏறக்கொறைய நம்பும் நிலைக்கு வந்துட்டேன்.. திரைக்குப்பின் கற்பூரம் ஏத்துன ஜ்வாலை தெரிஞ்சது. பெரியவரை ஆசுவாசப்படுத்தி மறுபடி அதே நாற்காலியில் கூட்டிவந்து உக்காரவச்சாங்க. இதோடு நின்னுருந்தால் எல்லாம் பரிபூரணம். ஆனால்..........
'கோவிலுக்கு மக்கள் வந்து கும்பிடணும். பயபக்தியா வரணும். கடவுள் இல்லைன்னு சொல்றதையெல்லாம் நம்பக்கூடாது. பகவான் இருக்கார். கோவிலுக்கு வரும்போது இந்தமாதிரியெல்லாம் போட்டுண்டு வராம( என்னைப் பார்த்தபடி) நம்ம பாரம்பர்யத்தையொட்டி புடவை கட்டிண்டு வரணும். கேரளாவில் புடவை கட்டிண்டால்தான் உள்ளே விடுவா. இன்னொருமுறை என்னைப் பார்த்துத் தலையை ஆட்டி(அதான், நான் முன்னாலே நின்னுக்கிட்டு இருந்தேனே) இப்படியெல்லாம் போட்டுண்டு வர்றது சரி இல்லை. நான் சொல்றது தப்பா இருந்தால் மன்னிச்சுக்கோங்க'ன்னார். சாமி வந்ததை அவரே நம்பி தன்னை சாமியாவே நினைச்சுக்கிட்டார் போல! எக்ஸ்ட்ரா டயலாக் எல்லாம் வருதே!
பார்த்தசாரதி கொஞ்சம் முழிச்சார். (என்ன இப்படிச் சொதப்பிட்டாரே!)
என்னைப்போல் சால்வார் கமீஸ்களுக்கும், மடிசார் கட்டிக்காம இருந்த திருமதிகளுக்கும் லேசா ஒரு சங்கடம். ஜனங்கள் அதிலும் சின்னவயசுக்காரர்கள் கோவிலுக்கு வர்றதே இல்லைன்னு ஒரு பக்கம் சொல்லிக்கிட்டே ஆளாளுக்குக் கலாச்சாரக் காவலர்களா இருந்தால் சின்னக்குட்டிகளுக்கெல்லாம் புடவையைச் சுத்திக் கூட்டிவர முடியுமா?
எனக்கொன்னும் பிரச்சனை இல்லை. சாமி படத்தைப் பார்த்து எல்லா அலங்காரமும் செஞ்சுக்கிட்டு வரக் கசக்குதா? ஆனால் கோபால்? இன்னும் ஒரு மூணு கிலோ தங்கம் வாங்கினால்தான் முடியும். தாங்குவாரா? க்ரீடம் ஒட்டியாணம் எல்லாம்கூட இப்ப ஜிஆர்டியில் பார்த்தேன்!
என் முகத்தில் இருந்த எரிச்சலைப் பார்த்த தோழி, 'போனாப்போறது. வயசானவர். சொல்லிட்டுப் போகட்டும். விட்டுடு'ன்னாங்க. பின்னே விடாம....பிடிச்சுக்கிட்டா இருக்கப்போறேன்? ஆனா .........
அலங்காரம் முடிஞ்சு பூஜை ஆரம்பமாச்சு. அமர்க்களமா எல்லாம் நறுவிசா ஒன்னுவிடாம நடந்துச்சு. நரசிம்மர்கிட்டே போக அஞ்சு படி ஏறணும். மேல்படியில் ஓரத்தில் சிங்க(ஆ)சாமி நின்னுக்கிட்டு இருந்தார். கண்ணைச் சுழட்டிச் சுழட்டி கீழே நின்ன கூட்டத்தை ஒரு துழாவல். இன்னும் ஏதாவது சொல்லலாமோன்னு யோசனையா இருக்கும். அதுக்குள்ளெ அவருக்கு செல்லில் அழைப்பு. காதுலே செல்லை வச்சுக்கிட்டே படி இறங்கி ஹாலில் போய்ப் பேசுனார். பாரம்பரியம் பெண்களுக்கு மட்டும்தானா? கோவிலுக்குள்ளே வரும்போது செல்லை அணைச்சுட்டு(தான்) வரணும். ஒருவேளை கால் ஃப்ரம் அசல் நரசிம்மமோ என்னவோ! ( எனக்குத்தான் பொருமல். நம்ம கோபாலும், தோழியும் அவரை இன்னும் பயபக்தியோடுதான் பார்த்துக்கிட்டு இருந்தாங்க)
இங்கே இருக்கும் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ஹர் விஸ்வரூப தரிசனம் கொடுக்கறார். ஆதாரபீடம், கூர்மபீடம், பத்மபீடம், அநந்தபீடம், யோக பீடம் இப்படி அடுக்கிவச்ச அஞ்சு பீடங்களின் மேல் ரெண்டு காலையும் மடிச்சுச் சம்மணம் போட்டு உக்கார்ந்துருக்கார். ஏழுதலை நாகம் குடைபிடிக்குது. மேலே ஒரு கையில் சக்கரம், மறுகையில் வில். அடுத்த ரெண்டு கைகளாலும் அபயவரத ஹஸ்தம். சிலையின் உயரம் 16 அடி. செல்லம்போல சிக்குன்னு சின்னதா லக்ஷ்மி இடது தொடையில் உட்கார்ந்துருக்காள்.
பளீர்னு பல்லெல்லாம் (மொத்தம் 12) தெரிய சிரிச்ச முகம். இது நவகிரகப் பரிகாரத் தல(மா)ம். அந்தப் பனிரெண்டு பற்களும் பனிரெண்டு ராசிகளைக் குறிக்குது. இடது கண் சந்திரன். வலது கண் சூரியன். நெற்றிக்கண்(?) செவ்வாய். மூக்கு சுக்கிரன், வலது காது கேது. இடது காது ராகு. மேல் உதடு குரு. கீழ் உதடு புதன். நாக்கு சனி. (இது என்னவோ நெஜம்தான். எல்லாருக்கும் நாக்குலேதான் சனி! வேண்டாததையெல்லாம் உளறிக்கொட்டிட்டு வாங்கிக் கட்டிக்கிறோமே) ஆக மொத்தத்தில் 'கோவில்' சொல்லும் சேதி 'நவகிரகங்களும் இங்கேயே இருக்கு. வேறெங்கும் போகாதே. இங்கே ஒரு இடத்துக்கு வந்தால் ஆச்சு'!
இன்னிக்கு பூஜைக்கான நைவேத்யங்கள், தளிகை எல்லாம் சுடச்சுட அண்டா அண்டாவா தூக்கிக்கிட்டு ஓடிவந்து ஸ்வாமி முன்னால் வச்சுக் கைகாட்டி முடிச்சு எல்லோருக்கும் விநியோகம் செஞ்சாங்க. இதுக்குள்ளே மணி ரெண்டு. எல்லோருக்கும் அகோரப் பசி. சாம்பார்சாதம் பெருசு பெருசா பூசணித்துண்டு(இப்படித்தான் அகோபிலத்துலே இருக்குமாம்) தயிர்சாதம், சக்கரைப்பொங்கல், பழப்பச்சடின்னு அருமை.
பஸ் ஸ்டாப்புலே இறக்கி விடறீங்களான்னு கேட்டுக்கிட்டு ஒரு அம்மா வந்தாங்க. அப்புறம் பத்துகிலோமீட்டர் தூரம் பஸ்ஸைத் துரத்திக்கிட்டுப்போனதெல்லாம் தனிக்கதை:-)
வீட்டுக்கு வந்தபிறகும் 'சாமி வந்தது'தான் பேச்சா இருந்துச்சு. அது நெஜம்தான்னு இவர் சாதிக்கிறார். இல்லைன்னு என் கட்சி. யோசனை பண்ணிப் பார்க்கப் பார்க்க இது ஏதோ செட்டப்ன்னு ஸ்ட்ராங்க மனசுலே தோணுது. எங்கூர்லே பொம்பளைங்க பலர் சாமி ஆடிப் பார்த்துருக்கேன்றார் கோபால். நானும்தான் பார்த்துருக்கேன். எல்லாம் மன அழுத்தம் காரணமா ஹிஸ்டீரிக்கலா வருவது அதுன்னு நான் சொல்றேன். அதே மாதிரி கைவிரல்களை மடிச்சுக் கண்ணை உருட்டிச் சீறிக் காமிச்சேன். நான்கூடச் செஞ்சுருக்கலாம். ஆனால் இந்த பாழாப்போன சிரிப்பு வந்து தொலைச்சுரும். அதுதான் பிரச்சனை.
"பாவம். வயசானவர். இப்படி ஏன் செய்யணும்? என்ன நிர்ப்பந்தம்?"
தீயைவிட வேகமாப் பரவுவதுதான் வதந்தீ. இப்ப அங்கே நடந்ததைப் பேப்பரில் ஒரு மூலையில் போட்டா சிலர் படிச்சுட்டு மறந்துருவாங்க. ஆனால் இன்னிக்கு அங்கே இருந்த முப்பது பேரும் சாமி வந்ததுக்கு சாட்சி. அவரவர் வீட்டுக்குப் போனதும் கொஞ்சமே கொஞ்சம் மசாலா(மனுஷ சுபாவம்) சேர்த்து இன்னும் கொஞ்சமாட்களுக்குச் சொல்வாங்க. அவுங்க இன்னும் சிலரிடம். இப்படியே பரவிக்கிட்டுப் போகும் பாருங்க.
இங்கே அத்வானக்காடா இருக்கும் இந்த இடமும், கோவிலும் இன்னும் அஞ்சு வருசத்துலே எப்படி அமோகமா ஆகப்போகுது பாருங்கன்னேன். இப்போ சாமி சிலைக்கு ஒரு ரெண்டடிவரை போய்ப் பார்த்தோம். வருங்காலங்களில் படி ஏற அனுமதி இருக்காது. அப்புறம் கருவறைக்கு வெளியே நிக்கணும் இப்படி..... ஜருகு ஜருகு ஆகப்போகுதுன்னு எனக்குள்ளே இருக்கும் 'சாமி' சொல்லுது!
கோவிலுக்கு ஏகப்பட்ட வேலை பாக்கி நிக்குது. சாமி சிலையை மட்டும் செஞ்சு வச்சுருக்காங்க. பிரமாண்டமான சிலை. இதுக்கே நிறைய செலவு ஆகி இருக்கும். ஒரு எலெக்ட்ரிக் மேள செட்( ஜல்ஜல்ன்னு பூஜை மணி அடிக்குது) இருக்கு. இன்னும் கோபுரம் எழுப்ப, கர்ப்பக்கிரஹம், விமானம், பலிபீடம், கொடிமரம்,அர்த்தமண்டபம், மஹாமண்டபமுன்னு கட்டணும். இப்போதைக்கு ஒன்னரைக்கோடி ரூபாய் வேணும். ஸ்ரீ பவன ஹரி ஹோம ட்ரஸ்ட், மக்களிடம் அப்பீல் செய்யுது. மேனேஜிங் ட்ரஸ்டீ, ஃபௌண்டர் எல்லாமே பிரசங்கம் செஞ்ச பார்த்தசாரதிதான். முதல் கட்டமா ஒரு வெப்ஸைட் கூட வச்சுருக்காங்க. http://www.naraharikrupa.com/
மனுசமனசு எவ்வளோ விசித்திரம் பாருங்க. வேண்டாமுன்னு தள்ளுவதை ஒரு மூலையில் போட்டு வச்சுக்கிட்டு வேண்டாத சமயத்தில் முன்னாலே கொண்டு வந்து நிறுத்தும். இப்போ பயணம் கிளம்பணுமுன்னு ஆரம்பிச்சதும், போற இடங்களில் ட்ரெஸ் கோட் இருக்கோன்னு சம்சயம் வந்துருச்சு. . ஒருவேளை இருந்துச்சுன்னா......நிச்சலனமா இருந்த குளத்தில் கல்லெறிஞ்சுருச்சு சிங்கம்.
அதுவும் ரொம்ப நாள் ஆசையா நினைச்சுக்கிட்டு இருந்த இடத்துக்குப் போறோம். உள்ளே போக அனுமதி இல்லைன்னு வந்துட்டால்..... அட ராமா!
புடவை கட்டுவது இவ்வளோ கஷ்டமான்னு யாரும் கேக்கப்பிடாது. பிரச்சனை புடவையில் இல்லை. அது இருப்பது ப்ளவுஸில்தான். வெய்யில் கூடக்கூட வேர்வை பெருகி, ஹ்யூமிடா இருப்பதால் உடம்பே வீங்குனமாதிரி ஆகுது. அதுக்குத்தான் நல்ல லூஸா தைக்கச் சொன்னா....நம்ம டெய்லருக்கு ஒரே நடுக்கம். தலையைத் தலையை ஆட்டிட்டு டைட்டாத் தச்சுடறார். செகண்ட் ஸ்கின்!
இந்தியாவிலே ஒரு கோவில்விடாமப் போய்வந்த ( சரியா கீதா?)ஆன்மீகப்பதிவரிடம் கேட்டால்..... 'கவனிக்கலையே. அதுவும் அதிகாலையில் கோவிலுக்குப் போனோம். உள்ளூர் மக்கள்ஸ்தான் இருந்தாங்க'ன்னு சொல்லிட்டாங்க.
பிரச்சனைன்னு வந்தபிறகு அதுலே இருந்து தப்பிக்க வழி தேடும் மனசு, ஒரு ஐடியாவைக் கண்டு பிடிச்சது. தேவைகள்தானே கண்டுபிடிப்புகளின் தாய்! கேரளா முண்டு பாரம்பரிய உடைதானே? அதை எடுத்துக்கிட்டுப் போகலாம். தேவைப்பட்டால் சல்வார் மேலேயே அடிமுண்டு சுத்திக்கிட்டு, மேல்முண்டை தாவணியாப் போட்டுக்கலாம். அப்ப ப்ளவுஸ்? நோ ஒர்ரீஸ். அதான் கமீஸ் போட்டுருக்கோமே!!!!! சரிகை முண்டு என்பதால் ப்ளவுஸுக்கு எந்தக் கலரும் ப்ரிண்டும் ஓக்கே:-) கட்டிப் பார்த்தேன். ரெண்டே நிமிஷம். பர்ஃபெக்ட்!
குட்டிச்சாத்தான் வேலையைச் செய்யாம இருந்துருக்கலாம்!!!!! சலோ!
PIN குறிப்பு:
ரெண்டுபேருக்கும் அப்பப்பப் பொழுது போக்க இப்படி ஒரு மேட்டர் சிக்குமுன்னு நான் நினைச்சும் பார்க்கலை. சாமி வந்தது உண்மைன்னு இன்னும் அப்பாவித்தனமா நம்புறவரை என்னன்னு சொல்றது? போய் நம்ம சின்ன அம்மிணி கதையைப் படிங்கன்னேன். ஊஹூம்..... எங்கூர்லே சாமி வருமுன்னு............. ஒரே முடவாதம். பேசாம நான் ஒரு நாள் சாமியாடத்தான் போறேன்னேன். சவுக்கு வச்சு அடிப்பாங்களாம் அவுங்க ஊர்லே! அப்ப அது பேய்க்கு இல்லையா? சாமிக்குமா!!!!!
'அச்சச்சோ.... நான் தப்பாச் சொல்லிட்டேன். சாமிக்கு மஞ்சத்தண்ணி ஊத்துவாங்க. பேய்க்குத்தான் அடி'ங்கறார்! இதுக்கே ஒரு நாள் ஆடத்தான் வேணும்.
பேசாம உங்களைத்தான் கேக்கணுமுன்னு சொல்லிக்கிட்டு இருக்கார்.
சனங்க மேலே சாமி வருவது நெசமா?
ஆமாம்ன்னாலும் இல்லைன்னாலும் சொல்லுங்க
நானே ஆரம்பிச்சு வைக்கிறேன்: உண்மை இல்லை.
Posted by
துளசி கோபால்
at
4/04/2010 06:21:00 PM
58
comments
Labels: அனுபவம்
Saturday, April 03, 2010
வேணுமான்னு சொல்லுங்க
'திடுக்'ன்னு ஒரு பயணம் கிடைச்சது. சொல்லாமக் கொள்ளாம ஓடவேண்டியதாப் போச்சு. பயணத்தைப் பற்றி எழுதணுமா வேணாமான்னு முடிவு செஞ்சுக்கலை.
'சுருக்'காச் சொன்னால் அரபிக் கடலோரம் போய் அழகனைக் கண்டேன்.
அது என்ன, எப்பப் பார்த்தாலும் பயணக் கட்டுரைன்னு சிலர்( அட, ஒருத்தர்தாங்க!) சொன்னாங்க. அதெல்லாம் கண்டுக்காம நாம் போற வழியில்தான் போகணுமுன்னாலும், இப்ப உங்ககிட்டே கேக்கறேன். பயணம் எழுதவா வேணாமா? எப்படியும் நம்ம நினைவுகளுக்குன்னு எழுதத்தான் போறேன். அதை வெளியிடவா வேணாமான்னு சொல்லுங்க மக்கள்ஸ்.
Posted by
துளசி கோபால்
at
4/03/2010 03:30:00 PM
37
comments
Labels: Western India, அனுபவம்