Sunday, January 11, 2009

All because of Uthappa

வீட்டுலே ஸ்மோக் அலார்ம் போட்டுருக்கீங்களா? அது வீட்டு செக்யூரிட்டி அலார்ம்கூட இணைஞ்சுருக்கா? வெரிகுட். நல்லது. மாசாமாசம் வரும் பில்லுக்குப் பணம் கட்டறோமுல்லே? இதெல்லாம் ஒழுங்கா வேலை செய்யுதா? இதை எப்படிப் பரிசோதிச்சுப் பார்க்கணும்?

எப்படின்னு தெரியலைன்னா இதோ நாங்க செஞ்சதுபோல செஞ்சுதான் பாருங்களேன்.....

முதல்நாள் 'மகேஷ், சரண்யா மற்றும்பலர்' னு ஒரு படம் பார்த்தோம். குடும்பக் கதை. அருமையான வீடு. திண்ணை, முற்றம் எல்லாம் வச்ச பிரமாண்டமான வீடு. இப்படியெல்லாம் வீடுகள் இன்னும் இருக்கான்னு கோபாலுக்கு ஒரே ஆச்சரியம். 'இது எல்லாம் ஸ்டெர்லிங் லே எடுத்ததுன்னு நான் என்னுடைய மேதாவிலாசத்தை (நானே) மெச்சிப் பதில் சொல்லிக்கிட்டு இருந்தேன். அதுலே நம்ம எஸ்.பி. பாலாவின் 'வைகறைப் பனியே பூமியின் அழகு' ன்னு ஒரு பாட்டு.... அருமை. இசை வித்யாசாகர். இப்பெல்லாம் அதிகமாப் படங்களில் இசை அமைக்கும் யுவனோட, கடமுடாக் காட்டுக்கத்தல்களால் பாட்டுசீன் என்றாலே மனம் வெறுத்துப் போயிருந்த எங்களுக்கு கொஞ்சம் ஆசுவாசம்னு வச்சுக்குங்க. (அதுக்காக வித்யாசாகரைத் தலையில் தூக்கிவச்சு ஆடமுடியாது. இந்தப் பாட்டு நல்லா வந்துருக்கு.)

ஒரு வாரத்துக்குன்னு அரைச்சுவச்சுக்கும் மாவில் முதல் நாள் மட்டும் இட்டிலி. மறுநாளில் இருந்து தோசை. ஆறாம் நாளுவரைத் தாக்குப் பிடிக்கும் தோசைமாவு கடைசிநாளில் பொங்களமாகி மங்களம் பாடிரும் நம்ம வீட்டில். அது என்ன பொங்களம்? பயந்துறாதீங்க. ரெஸிபி இதோ.

மீந்துகிடக்கும் ஒன்னரைக் கப் அளவு இருக்கும் தோசை மாவில் அரைக் கப் பொடி ரவை, கால் கப் துருவிய தேங்காய்ப்பூ, ஒரு கைப்பிடிக் கடலைப் பருப்பு, கால் டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கலக்கி வச்சுறணும். ரவை எல்லாம் ஊறி மறுநாள் கெட்டியான மாவா ஆகி இருக்கும். அதுலே கொஞ்சூண்டு தண்ணீர் சேர்த்து இட்டிலி மாவுப் பதத்துக்குக் கொண்டுவந்துருங்க. உங்களுக்கு விருப்பமுன்னா பொடியா நறுக்குன வெங்காயம் பச்சை மிளகாய்ச் சேர்த்து ஊத்தப்பமா ஊத்திக்கலாம். இல்லைன்னா கலக்கி வச்சுருக்கும் மாவையே ரெண்டு கரண்டி எடுத்துச் சூடானத் தோசைக்கல்லில் ஊத்தி லேசாப் பரத்திவிடுங்க. அடை செய்யும் கனம் இருக்கணும். ஒரு டீஸ்பூன் எண்ணெயைச் சுத்திலும் ஊத்தி, ஒரு மூடி போட்டு மூடி சிறுதீயில் வேகவிடணும்.

பொங்களம் போட்டுக்கிட்டு இருக்கேன். இவர் பேசாமச் சாப்புட்டுட்டுப் போகலாமில்லே? அதான் தொட்டுக்க மிளகாய்ப்பொடி இருக்கே. அத்தைவிட்டுட்டு, நேத்துப்பாட்டு அருமையா இருக்கு. எஸ்பி எவ்ளோ நல்லா பாடறார். அதைக் கேட்டுக்கிட்டே தின்னா உனக்கென்னன்னு ஆரம்பிச்சு டிவிடியைப் போட்டார். இவருக்குண்டானதைச் சுட்டுப்போட்டுட்டு(?) நானும் என்னோட தேவைக்குச் சுட ஆரம்பிச்சேன். அழகா அம்சமா எண்ணெய் குறைவா ரெண்டு ஆச்சு. இன்னும் கொஞ்சூண்டு மாவு இருக்கு,கூடுதலா ஒன்னு சாப்புடுங்கன்னா ...... ஐய...இருக்கற நோணாவட்டம் கொஞ்சமா? த(வ்)வா சூடா இருக்கும்போதே மீந்த மாவையும் ஊத்திவச்சுட்டா வேலை முடிஞ்சது, இல்லையா? ஊத்துனேன். மூடியையும் போட்டேன். அம்புட்டுதான்

இங்கே 'வைகறைப்பனியே ரெண்டாம் முறை ஓடிக்கிட்டு இருக்கு. ஒரு கையில் என் தட்டும் மறுகையில் கணினியில் ஸ்டெர்லிங்கைத் தேடுவதுமா உலகையே மறந்தேன்............................ஊஊஊஊஊய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்......... சத்தம் எங்கே இருந்து வருதுன்னே ஒரு நிமிஷம் கண்டுபிடிக்கமுடியலை.....ஆஹா..... ஸ்மோக் அலார்ம் வெளுத்துவாங்குது. ஏன் இப்படின்னுப் பார்வையை அடுப்பின் பக்கம் திருப்புனா...... மூடியையும் மீறிப் புகை.

அலார்மில் பேட்டரியை எடுத்துருங்கன்னு அலாரத்துக்குமேலே அலர்றேன். இதுக்கு பேட்டரி ஏது? மெயின்லே கனெக்ட்டட்ன்னு அவரும் பதில் அலறல். ஓடிப்போய் அதுக்குண்டான ஸ்விட்சை ரீசெட் பண்ண முயற்சிக்கிறார். குட்டிக்குட்டியா லைன்கட்டி இருக்கும் ஃப்யுஸ் தொகுப்பில் எது எங்கே இருக்குன்னே புரியலை.

இதுக்குள்ளே அடுப்பை அணைச்சு, மூடியைத் திறந்தால்...... காக்கைச் சிறகிலே...... கரிய நிறம் தோன்றியிருக்கு! வீட்டுக்குள் மண்டும் புகையை விரட்ட எல்லாக் கதவு ஜன்னல்களையும் 'பாம்'ன்னு விரியத் திறந்தாச்சு. அலார்மின் அலறலும் நின்னது. நல்லா எஃபெக்டிவா இருக்கு நம்ம ஸ்மோக் அலார்ம்ன்னு சொல்லிப் பாராட்டிக்கிட்டே, ஹோம் செக்யூரிட்டி இப்பப் போன் பண்ணுவாங்க அவுங்ககிட்டேக் 'கோக்குமாக்கா ஒன்னும் சொல்லாம, ஸ்மோக் ஃப்ரம் குக்கிங்'னு சொல்லுங்கன்னு சொல்லி வாய் மூடலை, ஃபோன் வந்தே வந்துருச்சு. சமாளிச்சு முடிக்குமுன் வீட்டுவாசலில் ஃபயர் எஞ்சின் வந்து நிக்குது! ஓ மை காட்!!!!!

அதான் முன்வாசக் கதவு உள்பட எல்லாம் விரியத் திறந்து கிடக்கே...... என்ன ஆச்சுன்னு கேட்ட ஃபயர் ஆபீஸர்கிட்டே...'.பொங்களம் கருகிங்'ன்னா புரியாதேன்னு 'பர்ண்ட் டோஸ்ட்'னு அவுங்களுக்குப் புரியும்விதமாச் சொல்லித் திருப்பி அனுப்புனோம் ஏராளமான நன்றிகளுடன்......

"ஈஸ் எவ்ரிதிங் ஓகே......?"

"எஸ் ப்ளீஸ். தேங்க்ஸ் ஃபார் கமிங். "

மேற்படி டயலாக் ஒரு 10 ரிப்பீட்டு:-)

பரவாயில்லை விடுமுறைநாளில் கூட ஜரூரா வேலை செய்றாங்க!!!!

நம்ம விடுமுறை இப்படி ஜாலியாகப் போகப்போகுதுன்னு யார் கண்டா?



நேத்து மகள் வந்துருந்தாள். எனக்குக் கிடைச்ச கிறிஸ்துமஸ் பரிசு ரெண்டு யானைகள். கோபாலுக்கு ஒரு எலி. பயணத்துக்குப் பயன்படுத்தும் வகையில் வாலைச் சுருட்டி வயித்துலே வச்சுருக்கு:-)

மகளிடம் நடந்த விஷயத்தைச் சொன்னதும் ,'ஓ மை காட். ஹௌ குட் யூ?'

டோண்ட் ப்ளேம் மீ...... ஐ டிட்ண்ட் மீன். பட் ஒன் திங் ஃபார் ஷ்யூர்.. இட்ஸ் ஆல் பிகாஸ் ஆஃப் ஊத்தப்பா. டெஃபனைட்லி ஆல் பிகாஸ் ஆஃப் ஊத்தப்பா!!!!

Friday, January 09, 2009

Dahliaஸ் கோ இதர் டால் தியா

முடியலைப்பா.... முடியலை.....விட்டுவைக்க முடியலை. அழகெல்லாம் கொட்டிக்கிடக்கும்போது இருந்துட்டுப் போகட்டும் கழுதைன்னு விட்டுவைக்க முடியலை.

டாலியாப் பூக்களைப் பார்த்துருப்பீங்கதானே? இல்லைன்னா இங்கே இருப்பதைப் பார்த்துக்குங்க.

இது கோடைகாலத்தில் மலரும் பூ. இதுக்கு விதைன்னு ஒன்னு அநேகமா இல்லை. ட்யூபர்ன்னு சொல்லும் கிழங்குதான் நட்டுவைக்கணும். நம்மூர்ச் சக்கரைவள்ளிக் கிழங்குபோல நீளமா இருக்கும். அதை குளிர்காலம் முடிஞ்சு வசந்தம் வருது பாருங்க அப்ப காலநிலைக் கொஞ்சம் 15 டிகிரி செ.கிரேடு வரும்போது நட்டுவைக்கணும். விதைக் கிழங்குலே இருந்து முளைச்சுவருவது கண்ணில் பட்டால் ( உருளைக்கிழங்குலே முளை வருது பாருங்க சிலசமயம் அதைப்போல) அந்தக் கிழங்கை முளையோடு இருக்கும் பகுதி ஒட்டிக்கிட்டு இருப்பதுபோல ரெண்டாய் நறுக்கியும் நட்டுவைக்கலாம். ஒரு செடி ரெண்டு செடியாகும் மாயம் காணீர்:-)

ஒருவருசம் நட்டாலே போதும். அந்த இடத்தில் மீண்டும் மீண்டும் முளைச்சு வரும். இதுலே கிட்டத்தட்ட 35 வகைகள் இருக்காம். அப்ப 35 நிறத்தில் பூக்குமோ என்னவோ!!!! இதுலே ஒரு வகைக்கு PomPomனு பெயர். குளிர்க் குல்லாய்லே உச்சியில் உருண்டையா வைக்கும் அலங்காரப் பந்துபோல இருக்கும்.


பூவிதழ்கள் சாதாரணமா இருக்கும் வகை பார்க்கச் சுமாராத்தான் இருக்கும். நூலைத் திரிச்சு ஒட்டவைச்சமாதிரியும், குழல்குழலா அடுக்கிச் சொருகிவச்சதுபோலவும் இருக்கும் பூக்கள் கொள்ளை அழகு. Aztecs இன மக்கள் இந்தச் செடியின் தண்டை எடுத்துச் சின்ன ஊதுகுழல்கள் செஞ்சுக்கிட்டாங்களாம் அந்தக் காலத்துலே. இந்தக் கிழங்கையெல்லாம் சாப்புட்டும் இருக்காங்க!

இந்தச் செடிவகைகளின் தாய்மண் மெக்ஸிகோ, கொலம்பியா நாடுகள். பூக்களின் அழகைப் பார்த்த டச்சுநாட்டுக்காரர்கள் 1872 லே ஒரு பெரிய பெட்டி நிறைய இந்தச் செடிகளின் கிழங்குகளை மெக்ஸிகோ நாட்டில் இருந்து நெதர்லாந்துக்கு அனுப்புனாங்களாம். கப்பல் பயணம் முடிஞ்சு அங்கே போய்ச் சேர்ந்தப்ப ஒரே ஒரு கிழங்குதான் கிழங்கா இருந்துருக்கு. மத்ததெல்லாம் கெட்டுப்போய்க் கிடந்துச்சாம். உப்புக்காத்து ஒடம்புக்கு ஆகலை(-: அதுவும் சிகப்புக் கலர் பூ. அதைவச்சே நர்ஸரிக்கலையில் தேர்ந்த நிபுணர்கள் வகைவகையான நிறங்களில் இப்பக் கிடைக்கும் செடிகளை உருவாக்குனாங்களாம்.

18வது நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தாவர இயல் நிபுணரின் பெயரை இந்தப் பூக்களுக்குச் சூட்டியிருக்காங்க. அவர்பெயர் Anders Dahl. இவர் ஸ்வீடன் நாட்டுக்காரர்.

ஜெர்மனியில் இந்தப் பூக்களுக்கு ஜியார்ஜைன்னு பெயராம். ரஷ்ய நாட்டுகாரரான Johann Gottlieb Georgi என்றவரைக் கவுரப்படுத்த ஜெர்மனி தாவர இயல் நிபுணர் ஒருவர் ( Carl Ludwig Willdenow) இந்தப் பெயரைச் சூட்டினாராம்.

இப்படி ஆளாளுக்குப் பேர் வச்சுருக்காங்க. பேசாம நாமும் ஒரு பெயர் வைச்சுக்கலாமான்னு இருக்கு.













Wednesday, January 07, 2009

வரவேற்பூ:-))))))))))))

ரெண்டுவாரம் லீவு விட்டாலும் விட்டேன், கை அரிப்பு தாங்கலை. நிறைய சம்பவங்கள் என்னைத் துரத்தித் துரத்தியடிக்குது. லீவைக் கேன்ஸல் செஞ்சுறலாமான்னு துடிக்கிறேன், துவளுறேன்...... மாணவமணிகளுக்கு அதிர்ச்சி தரணுமா? ஊஹூம்ம்........

அதிசயமா இந்த வருசம் இவருக்கும் ஒரு ப்ரேக் கிடைச்சிருக்கு. வீட்டுவேலை செஞ்சு ஆனந்திக்கட்டுமே ஃபார் அ சேஞ்ச்:-))))
நமக்கு இப்போக் கோடை காலம். அதுவும் இப்போ மூணுநாளா வெய்யில் சக்கைப்போடு போடுது. ஒரு நாள் 30 டிகிரி செ. வந்துச்சு. ஓஸான் லேயர்லே பெரிய ஓட்டை இருக்காம் இங்கே நியூஸிக்கு மேலே. போதாக்குறைக்குப் பொன்னமான்னு தெந்துருவக் காத்தும் அடக்கி வாசிச்சதா...... ஐயோ...செமச் சூடு. பொழுதன்னிக்கும் குளுருன்னு புலம்புவயே...இனி வாயைத் திறப்பயான்னு மிரட்டல். கோகிவேற சடாமுனியா இருக்கானா...சூடு தாங்காம அடுத்த வீட்டுத் தோட்டத்துலே போய் பதுங்கிட்டான். அங்கே நிறைய மரங்கள் இருக்கு.

மரங்கள்னு சொன்னதும் கொஞ்சம் அப்படியே பின்னோக்கி ஒரு சரித்திர நிகழ்வைப் பார்க்கலாமா?

ஆதாம் ஏவாள் எங்கூரில் தின்ன முதல் பழம் எது? பேரிக்காய்!!!!!

1846இல்.டீன் சகோதரர்கள் நட்ட மரம். இவுங்களைப் பத்திக் கொஞ்சம் கூடுதலான விஷயம் இருக்கு. அப்புறம் ( இன்னும் ரெண்டொரு நாளில்) சொல்றேன்.இது நம்ம ஆயிரத்து நூறில் வராது:-))))

ஏவான் நதிக்கரையில் 1863 ஜூலை 9 ஆம்தேதி இளவரசர் ஏழாம் எட்வர்டு & இளவரசி அலெக்ஸாண்ட்ராவின் திருமணத்தை நினைவுகூரும் விதமா தோட்டத்துக்காக ஒதுக்குன இடத்தில் ஒரு OAK மரத்தை நட்டாங்க. ஊருக்கு நடுவுலே வளைஞ்சு நெளிஞ்சு போகும் ஆத்தையொட்டி 405 ஏக்கருக்கும் கொஞ்சம் கூடுதலா வரும் இடத்தைத் தோட்டத்துக்குன்னேத் தனியா எடுத்துவச்சாச்சு:-))))


இதுக்கு அடுத்தவருசமே 1864 இல் ஹார்ட்டிகல்ச்சுரல் சொஸைட்டி ஒன்னு ஆரம்பிச்சு, என்னென்ன பூச்செடிகளைக் கொண்டுவரலாமுன்னு திட்டம் போட்டாங்க. தாவர இயல் பூங்கா. இதுக்கு ஒரு 52 ஏக்கர். மானாவரியா ஆளில்லாமக் கிடக்கும் இடத்தை அள்ளிக்கோ அள்ளிக்கோன்னு .....


இங்கிலாந்தில் இருந்து Beech, Chestnut, Oak,Elm, Pine மரக்கன்னுகளைக் கொண்டுவந்து நட்டாங்க. அப்படி நட்டவங்க, உள்ளூர் மரங்களை(Ferns, Tussock, Cabbage trees, and Flax )யும் புதர்களையும் அங்கங்கே எடுத்து வீசிட்டு அவுங்க ஊர் மரத்தை நட்டாங்க. அதுபாட்டுக்கு அது இது பாட்டுக்கு இதுன்னு விட்டுருக்கலாமுல்லே. எல்லாம் பூனைக் குசும்பு. இதனாலேயும் மவோரிகளுக்கும் வெள்ளைக்காரகளுக்கும் கொஞ்சம் லடாய் ஆச்சு.



அஞ்சாறு வருசத்தில் நர்ஸரியில் மேலும் மரக்கன்னுகளை வச்சு வளர்த்தாங்க. ஊர்முழுசும் மரம் நட ஏற்பாடுகள் நடந்துச்சு. கொஞ்சநஞ்ச எண்ணிக்கை இல்லை. ஏழுலட்சத்துச் சொச்சம். சரியாச் சொன்னா 763,034 மரக்கன்னுகள். இது போதாதுன்னு ரெயில்வே லைன் போட்ட கம்பெனி தெற்குத்தீவுப் பாதைகளில் ஓக் மரங்களை நட்டுக்கிட்டே போச்சு.

தோட்டம் ஒரு பக்கம் தாவர இயல் பூங்கா ஒரு பக்கமுன்னு வேலைகள் பரபரன்னு நடந்து இன்னிக்கு உலகப்புகழ்(???)பெற்ற ஹேக்ளி பார்க், உலகம்பூராவும் உள்ள தாவரப் பிரேமிகளைக் கவர்ந்து இழுக்குது. வருசம் 365 நாளும் திறந்து வைக்கிறாங்க. மேலும் உள்ளே நுழைஞ்சுச் சுற்றிப் பார்க்க அனுமதி இலவசம். வண்டிகளைப் பார்க் செய்யவும் ஏராளமான இடங்கள். அதுவும் இலவசம்தான்.



சும்மாக் கிடைச்சா, சும்மா இருக்க முடியுதா? அதான் வகுப்புக் கண்மணிகளுக்காக வாரிக்கிட்டு வந்தேன்.


வரவேற்பூ:-)

ரோஜாவுக்குன்னே ஒரு தனி இடம். அதுக்கு முன்னாலே வரவேற்புக்குன்னு வருசம்பூராவும் மலர்ந்து சிரிக்கும் பூ.















இந்தப் பூக்கள் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
(சந்தடிச் சாக்கில் நம்மூட்டுப் பூக்களையும் கோர்த்துவிட்டுருக்கேன்)


என் கண்ணுக்கு ஒரு யானைக்குட்டி தெரியுது. உங்களுக்கு????