Showing posts with label Dahlia. Show all posts
Showing posts with label Dahlia. Show all posts

Friday, January 09, 2009

Dahliaஸ் கோ இதர் டால் தியா

முடியலைப்பா.... முடியலை.....விட்டுவைக்க முடியலை. அழகெல்லாம் கொட்டிக்கிடக்கும்போது இருந்துட்டுப் போகட்டும் கழுதைன்னு விட்டுவைக்க முடியலை.

டாலியாப் பூக்களைப் பார்த்துருப்பீங்கதானே? இல்லைன்னா இங்கே இருப்பதைப் பார்த்துக்குங்க.

இது கோடைகாலத்தில் மலரும் பூ. இதுக்கு விதைன்னு ஒன்னு அநேகமா இல்லை. ட்யூபர்ன்னு சொல்லும் கிழங்குதான் நட்டுவைக்கணும். நம்மூர்ச் சக்கரைவள்ளிக் கிழங்குபோல நீளமா இருக்கும். அதை குளிர்காலம் முடிஞ்சு வசந்தம் வருது பாருங்க அப்ப காலநிலைக் கொஞ்சம் 15 டிகிரி செ.கிரேடு வரும்போது நட்டுவைக்கணும். விதைக் கிழங்குலே இருந்து முளைச்சுவருவது கண்ணில் பட்டால் ( உருளைக்கிழங்குலே முளை வருது பாருங்க சிலசமயம் அதைப்போல) அந்தக் கிழங்கை முளையோடு இருக்கும் பகுதி ஒட்டிக்கிட்டு இருப்பதுபோல ரெண்டாய் நறுக்கியும் நட்டுவைக்கலாம். ஒரு செடி ரெண்டு செடியாகும் மாயம் காணீர்:-)

ஒருவருசம் நட்டாலே போதும். அந்த இடத்தில் மீண்டும் மீண்டும் முளைச்சு வரும். இதுலே கிட்டத்தட்ட 35 வகைகள் இருக்காம். அப்ப 35 நிறத்தில் பூக்குமோ என்னவோ!!!! இதுலே ஒரு வகைக்கு PomPomனு பெயர். குளிர்க் குல்லாய்லே உச்சியில் உருண்டையா வைக்கும் அலங்காரப் பந்துபோல இருக்கும்.


பூவிதழ்கள் சாதாரணமா இருக்கும் வகை பார்க்கச் சுமாராத்தான் இருக்கும். நூலைத் திரிச்சு ஒட்டவைச்சமாதிரியும், குழல்குழலா அடுக்கிச் சொருகிவச்சதுபோலவும் இருக்கும் பூக்கள் கொள்ளை அழகு. Aztecs இன மக்கள் இந்தச் செடியின் தண்டை எடுத்துச் சின்ன ஊதுகுழல்கள் செஞ்சுக்கிட்டாங்களாம் அந்தக் காலத்துலே. இந்தக் கிழங்கையெல்லாம் சாப்புட்டும் இருக்காங்க!

இந்தச் செடிவகைகளின் தாய்மண் மெக்ஸிகோ, கொலம்பியா நாடுகள். பூக்களின் அழகைப் பார்த்த டச்சுநாட்டுக்காரர்கள் 1872 லே ஒரு பெரிய பெட்டி நிறைய இந்தச் செடிகளின் கிழங்குகளை மெக்ஸிகோ நாட்டில் இருந்து நெதர்லாந்துக்கு அனுப்புனாங்களாம். கப்பல் பயணம் முடிஞ்சு அங்கே போய்ச் சேர்ந்தப்ப ஒரே ஒரு கிழங்குதான் கிழங்கா இருந்துருக்கு. மத்ததெல்லாம் கெட்டுப்போய்க் கிடந்துச்சாம். உப்புக்காத்து ஒடம்புக்கு ஆகலை(-: அதுவும் சிகப்புக் கலர் பூ. அதைவச்சே நர்ஸரிக்கலையில் தேர்ந்த நிபுணர்கள் வகைவகையான நிறங்களில் இப்பக் கிடைக்கும் செடிகளை உருவாக்குனாங்களாம்.

18வது நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தாவர இயல் நிபுணரின் பெயரை இந்தப் பூக்களுக்குச் சூட்டியிருக்காங்க. அவர்பெயர் Anders Dahl. இவர் ஸ்வீடன் நாட்டுக்காரர்.

ஜெர்மனியில் இந்தப் பூக்களுக்கு ஜியார்ஜைன்னு பெயராம். ரஷ்ய நாட்டுகாரரான Johann Gottlieb Georgi என்றவரைக் கவுரப்படுத்த ஜெர்மனி தாவர இயல் நிபுணர் ஒருவர் ( Carl Ludwig Willdenow) இந்தப் பெயரைச் சூட்டினாராம்.

இப்படி ஆளாளுக்குப் பேர் வச்சுருக்காங்க. பேசாம நாமும் ஒரு பெயர் வைச்சுக்கலாமான்னு இருக்கு.