கோலமகரிஷி என்றவர் சிவனைக் கும்பிட்டு தவம் செஞ்சுக்கிட்டு இருந்தார். அதே சமயம் கௌமாசுரன் என்ற ஒரு அசுரனும் சிவனை நோக்கித் தவம் செய்யறான். சிவன்தான் யாரு தவம் செஞ்சாலும், மனம் மகிழ்ந்துபோய் 'என்ன வரம் வேண்டுமானாலும் கேள்'ன்னு சொல்றவராச்சே! மற்ற தேவர்கள் அசுரன் ஏதாவது கேட்டு. நமக்கு ஆபத்து விளைவிச்சுருவானோன்னு பயந்துக்கிட்டே போய் அன்னை பார்வதியிடம் முறையிடுறாங்க.
'அஞ்சேல்' ன்னு சொல்லி, அசுரனின் பேசும் சக்தியைப் பறிச்சுட்டாங்க 'வாக்கு' தேவி. இனி 'பே பே' தான் என்ன வரம் வேண்டுமுன்னு கேக்கமுடியாதாம்! அதனால் அந்த அசுரனுக்கு மூகாசுரன்னு பெயர் வந்துருச்சு. ஆனாலும் அவன் விடாமல் தவம் செய்யறான். அப்போ அவனிடம், சண்டைக்குப் போனாங்க, அம்மா. போரில் அசுரனால் ஜெயிக்க முடியலை. பராசக்தி நீயே கதின்னு அன்னையைச் சரணடைஞ்சான். அவன்மேல் இரக்கம் கொண்டு அவனுக்குப் பேசும் சக்தியைத் திருப்பித் தந்தாள் பார்வதி. அப்போ அவன் வணங்கிக் கேட்டுக்கிட்டானாம். 'அம்மா. நீ இந்த இடத்துலே கோவில் கொண்டு எல்லாரையும் காப்பாற்றணும்'னு. 'விஷ் க்ராண்டட்.' மூகாசுரன் வேண்டுதலுக்காகத் தங்கிய அன்னைக்கு மூகாம்பிகை என்ற பெயரும், கோல மகரிஷி தவம் செய்யததால் இந்த ஊருக்குக் கொல்லூர் என்ற பெயரும் வந்துச்சுன்னு ஒரு புராணக் கதை இருக்கு. மூகாசுரனை தேவி இங்கே வதம் செஞ்சதாவும் சொல்றாங்க. 'மரண கட்டே'ன்னு ஒரு இடம் இருக்காம்.
சரணமடைஞ்சவனை வதம் செய்வதா? சீச்சீ.... நல்லா இல்லே:(
சக்தி பீடமுன்னு இந்தக் கோவிலைச் சொல்றாங்க. பரசுராமர் ஏழு கோவில்களை உண்டாக்கினார். அதுலே பார்வதிக்கான கோவில் இது ஒன்னுதான்னு சொல்றதும் உண்டு.
தாய் மூகாம்பிகை படம் எல்லோரும் பார்த்துருப்பீங்கதானே?
நம்ம ஆதிசங்கரர், அன்னையை நோக்கித் தவமிருந்து 'சௌந்தர்ய லஹரி'யை எழுதுனது இங்கே தானாம். கைலாசத்தில் இருந்து அன்னையை, தன் தேசத்துக்குக் (பரசுராமரால் கிடைச்ச தேசமான இப்போதைய கேரளா) கூட்டிப்போகணுமுன்னு ஆதிசங்கரர் வேண்டினாராம். அன்னையும் அவர் சொல்லுக்கு இணங்கி ஒரே ஒரு கண்டிஷனோடு புறப்பட்டு வர்றாங்க. சங்கரர் தம்பாட்டுக்குத் திரும்பிப் பார்க்காமல் முன்னால் நடக்கணும். தேவி பின்னாலே நடந்து வருவாங்க. அப்போ சங்கரர் கேட்டுக்கிட்டார், அம்மா, நீ என்னைத் தொடர்வது எனக்கு எப்படித் தெரியும்? உன் கால்கொலுசுச் சலங்கைச் சப்தம் கேட்டுக்கிட்டே வந்தால் நீ வர்றேன்னு நானும் நிம்மதியாத் திரும்பிப் பார்க்காம முன்னால் போறேன்னு மறு கண்டிஷன் போட்டார்.(வெளிப்ரகாரச் சந்நிதிகள் வரிசை )
அப்படி நடந்து வரும்போது இந்த ஊரில் இந்த இடத்துக்கு வரும்போது , அதுவரை கேட்டுக்கிட்டு இருந்த கொலுசுச்சத்தம் நின்னு போச்சாம். என்ன ஆச்சுன்னு தன்னையறியாமல் திரும்பிப் பார்த்துட்டார் சங்கரர். உடனே அங்கே ஒருசிவலிங்கமா உருமாறித் தங்கிட்டாங்களாம் தேவி. அந்த சிவலிங்கத்தில் தேவியின் இருப்பைக் காமிக்க ஒரு தங்கரேகை பளபளன்னு தங்கிருச்சாம். ஆஹா............................ரொம்ப சிம்பிள்! பெண் = பொன்!!!! அப்ப இருந்துதான் பெண்களுக்கு நகை ஆசை வந்துருக்கும்.இல்லே?
ஆதி சங்கரர், ஒரு சமயம் தேவியின் முன்னால் தியானம் செஞ்சு முடிச்சதும் இடத்தைவிட்டு எழுந்திரிக்க முடியாமல் தடுமாறினாராம். அவருக்கு உடல்நலமில்லைன்னு உணர்ந்த அன்னை பராசக்தி, தானே 'கஷாயம்' செஞ்சு அந்த 'காஷாயத்துக்கு'க் கொடுத்துருக்காங்க. அந்த நிகழ்ச்சியை நினைவு கூறும்விதமா தினமும் ராத்திரி கடைசி பூஜைக்குக் கஷாயம் நைவேத்தியம் இங்கே உண்டாம். (பலி உத்ஸவ கஷாயா)
இங்கே மூகாம்பிகை சிலை ப்ரதிஷ்டை செஞ்சு 1200 வருசங்களாகி இருக்காம். சங்கு சக்கரம் தரிச்சு, காளி, சரஸ்வதி, மஹாலக்ஷ்மின்னு முப்பெரும்தேவியரா இங்கே இருந்து அருள்பாலிக்கிறாள்.ஆதிசங்கரர், 'கலாரோஹணம்' பாடுனதும், இந்த சரஸ்வதியை தியானிச்சுத்தானாம். நவராத்ரி காலங்களில் அப்படி ஒரு கூட்டம் வந்து அலைமோதுமாம். மூலவருக்கு ரெண்டு பக்கமும், காளிக்கும் கலைவாணிக்கும் ஐம்பொன்சிலை செஞ்சு வச்சுருக்காங்க.இந்தக் கோவில் அரசியல்வாதிகளுக்கும் சினிமா உலகத்தின் முக்கிய புள்ளிகளுக்கும் ஃபேவரிட்டா ஆகிருச்சு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் நடிகர் எம் ஜி.ஆர், இந்தக் கோவில் அம்மனுக்கு ஒரு கிலோ எடையில் ரெண்டரை அடி நீளமான ஒரு தங்க வாளைக் காணிக்கையா அளிச்சுருக்கார். அதே சைஸ்லே ஒரு வெள்ளி வாளை , அப்போதிருந்த கர்நாடகா அரசின் முதலமைச்சர் குண்டு ராவ் காணிக்கையாத் தந்தாராம். ( Y வாள்? எதிரிகளைப் போரிட்டு அழிக்கவா?) அன்னைக்குச் சார்த்தும் முகக்கவசம், விஜயநகரப்பேரரசு காலத்தில் அம்மன்னர்களின் காணிக்கை. இப்போ இருக்கும் கோவிலும் 1200 வருசப் பழசுன்னு சொல்றாங்க. ராணி சென்னம்மாஜி கட்டுனதாம். நம்ம இளையராஜாவும் அம்மனுக்கு வைரக்கைகள் கொடுத்துருக்கார். அடுத்து வைரக்ரீடம் கொடுக்கப்போவதாச் சொல்லி இருக்காராம்.
கோவிலில் அஞ்சு காலப்பூஜை தினமும் நடக்குது. காலையில் தேவிக்குப் பல்விளக்கும் சம்பிரதாயம் கூட இருக்கு. தந்தாடவன் பலி பூஜா..... ! சந்தியாக்காலப்பூஜைக்கு சலாம் மங்களாரத்தின்னு ஒரு பெயர். திப்பு சுல்தான் ஒரு சமயம் இங்கே வந்தப்பக் கோவிலில் சந்தியாகாலப் பூஜையைப் பார்த்துட்டு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு, தேவிக்கு, ஒரு' சலாம்' வச்சாராம். இப்பவும் வருசத்துக்கொரு முறை சிறப்பு நிகழ்ச்சியா இங்கே பூஜை சமயம் இசுலாமிய அன்பர்கள் வந்து தேவி தரிசனம் செய்யறாங்களாம்.கோவில் கொடிமரத்துக்குப் பக்கத்துலே 21 அடுக்குள்ள தீபஸ்தம்பம் இருக்கு. விசேஷம் என்னன்னா..... அந்த தீபஸ்தம்பத்தைத் தாங்குவது நம்ம கஜராஜன். நேரா மூலவரைப் பார்த்துக்கிட்டு இருக்கார். அவரைத் தாங்குவது ஒரு கூர்ம பீடம். அட்டகாசமா இருக்கு. கிட்டப்போய்ப் படம் எடுக்க முடியலை. அதான் அங்கே ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருந்துச்சே!
கேரளப்பாணியில் திண்ணைகள் ஓடும் கோவில்தான் இது. கருவறையை ஒட்டி இருக்கும் உள்ப்ரகாரத்துலே, வெள்ளையைப் பளிங்குலே ஒரு புள்ளையார் இருக்கார். பலமுரி விநாயகர். தும்பிக்கை வலது பக்கம் சுழிச்சிருக்கும் வலம்புரி விநாயகர்தான் இவர்! இந்தப் ப்ரகாரத்துலே நாலுவித கணபதிகள் இருக்காங்க. ஒருத்தருக்கு தசபுஜம் இருக்கு.வெளிப்பிரகாரம் வலம் வரும்போது மூலவருக்குப் பின்பக்கச் சுவர் வரும் இடத்தில் வரிசையா சுப்ரமண்யர், சரஸ்வதி, ப்ராணலிங்கேஸ்வரர், பார்த்தீஸ்வரர், வாலில் மணி கட்டி இருக்கும் நேயடு(வாதிராஜர் ப்ரதிஷ்டை செய்த ஆஞ்சநேயர் இவர்), விஷ்ணு ப்ருந்தாவனத்தின் நடுவில் நிற்கும் கோபாலகிருஷ்ணன்னு சந்நிதிகளை தரிசனம் செஞ்சுக்கிட்டே வந்தால் பெரிய துளசி மாடம் ஒன்னு அருகம்புல்லா நிறைஞ்சு கிடக்கு. அடுத்த சந்நிதி வீரபத்திரருக்கு.
ஒரு க்ரிக்கெட் மட்டையும், பந்தும் வச்சு விசேஷப்பூஜை நடந்துக்கிட்டு இருந்துச்சு. நாலு சிதறுதேங்காய் உடைச்சாங்க. தேங்காய் ஓடைவிட்டு ஜம்முன்னு எகிறித் துண்டா நம்மகிட்டே வந்து விழுந்துச்சு. அங்கே நாங்க ரெண்டு பேர் மட்டுமே இருந்ததால் அதை எடுத்துத் தின்னோம். பேச்சுக் கொடுத்தப்பத் தெரிஞ்சது, அது அனில் கும்ப்ளேவின் மட்டையாம். நாம் சென்னைவாசிகள்னு தெரிஞ்சதும் அவுங்களுக்கு ரொம்ப சந்தோஷம். 'இன்னிக்கு இப்போ கொஞ்ச நேரத்துலே உங்க ஊர்லேதான் கேம் ஆரம்பிக்கப்போகுது. அனில் கும்ப்ளே வெற்றிக்காகத்தான் இந்த பூஜை'ன்னு சொன்னாங்க. ( வீரபத்திரர் வேண்டுதலை நிறைவேற்றலைன்னு அன்னிக்கு ராத்திரியே தொலைக்காட்சியில் தெரிஞ்சது.
முதல் வேண்டுதல் ஒருவேளை, எதிரணி செஞ்சுருக்கலாம்.:- ) ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் செர்வ்டு!கோவில் தேர் அட்டகாசமான மரவேலைப்பாடுகளுடன் கம்பீரமா இருக்கு. சக்கரங்களைச் சுலபமாத் திருப்ப ஒரு ஸ்டியரிங் வீல் கூட இருக்கு. கோவில் ப்ரஸாதமா இங்கே லட்டு விக்கறாங்க. 'ஒந்து, ஹத்து ருப்யா'
கோவில் யானையும் கோவில் பூனையும்,கோவில் குருவியும் கூட இங்கே இருக்கு. ( இப்பத்தானே குருவிகள் இனம் அழிஞ்சு வருதுன்னு ஒரு பதிவு போட்டார் செந்தழல் ரவி)
ஒரு ஹால் சுவற்றுக்கு மேல் மொஸைக் டிஸைனில், பாம்பணைமேல் பள்ளிகொண்ட பரந்தாமன், இன்னும் சில கடவுளர்களின் சித்திரங்களுடன் ஒரு கும்பினிக்காரனும், ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியும் இருக்காங்க.படப்பிடிப்புக் குழுவில் ஒருத்தர் வந்து நம்மைக் கண்டுக்கிட்டார். தேங்காயை அரைச்சுக்கிட்டே மேல்விவரம் எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டோம். நாயகி, கேரளத்துலே ரொம்ப ஃபேமஸாம். டிவி சீரியலில் வர்றாங்களாம். அவுங்களைப் பத்தித் தெரிஞ்சுக்காத ஜென்ம(மும் உண்டோன்னு அவருக்கு அதிசயம்:-)
Showing posts with label Kollur அனுபவம். Show all posts
Showing posts with label Kollur அனுபவம். Show all posts
Thursday, April 29, 2010
வாய்(ஸை) கட்டிட்டாப்பா.....
Posted by
துளசி கோபால்
at
4/29/2010 02:38:00 AM
22
comments
Labels: Kollur அனுபவம்
Subscribe to:
Posts (Atom)