கதையை ஆரம்பிக்கலாம். பரசுராமரை யாருக்காவது நினைவிருக்கா? இவர் க்ஷத்ரியர்களையெல்லாம் அழிச்ச பிறகு, தனக்கே தனக்குன்னு ஒரு இடம் வேணுமுன்னு நினைச்சுத் தன் கோடாரியைக் கடலில் எறிஞ்சார். சமுத்திர ராஜன், இந்தாங்க இந்த பூமியை எடுத்துக்குங்கோன்னு கடலில் இருந்து ஒரு நிலத்தை வெளிவரச்செஞ்சு கொடுத்தான். (லேண்ட் ரீக்ளெய்மிங்!) கன்யாகுமரியில் இருந்து கோகர்ணம் வரை உள்ள பகுதி. (அதனால்தானே காட்'ஸ் ஓன் கண்ட்ரின்னு கேரளாவைச் சொல்லிக்கிட்டு இருக்காங்க) அந்த நிலத்துலே ஏராளமான புண்ணீய தீர்த்தங்களும் நீர்வளமும் நிறைஞ்சு இருக்கு. அமைதியான இயற்கை அழகினால் கவரப்பட்ட முனிவர்கள் இங்கே வந்து தவம் செஞ்சு ஆனந்தமா இருக்காங்க.
ஒரு சமயம் திடீர்னு நிலநடுக்கம் ஏற்பட்டுச்சு. என்னவோ ஏதோன்னு கலங்கிப்போன முனிவர்கள் நாரதரிடம் போய் எங்களையெல்லாம் காப்பாத்தணுமுன்னு வேண்டி நின்னாங்க. அப்போ ஒரு அசரீரி முழக்கம். காது கொடுத்துக் கேக்குறாங்க எல்லோரும்.
"சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம். ரெண்டுக்கும் இடையில் ஒரு அரசமரம் தெரியுதுலே. அதுக்குப்பக்கம் தோண்டிப்பாருங்க. யோகத்தில் இருக்கும் நரசிம்மர் இருக்கார். இவர் சிவன் & ப்ரம்மாவினால் பூஜிக்கப்பட்டவர். அவரை வெளியே எடுத்துப் ப்ரதிஷ்டை செஞ்சு வழிபடுங்க."
'அட! இதே நியூஸ் நமக்கும் 'முந்தாநாள்' தியானம் செஞ்சுக்கிட்டு இருந்தப்ப மனசுக்குள்ளே யாரோ வந்து சொன்னமாதிரி இருந்துச்சே'ன்னு நாரதருக்கு ஒரே ஆச்சரியம். (முதலில் நாரதருக்கு, இப்போ மறு ஒலிபரப்பு முனிவர்களுக்கு!)
தோண்டிப் பார்த்தால் நெசந்தான். யோகத்தில் அமர்ந்திருக்கும் பாவனையில் நரசிம்மர் சிலை கிடைச்சது. நாரதரே தன் கைப்பட அதை அங்கே ரெண்டு தீர்த்தங்களுக்கிடையில் பிரதிஷ்டை செஞ்சு வழிபட்டார்.
கோதாவரி நதிக்கரையில் இருந்து பட்டாச்சார்யா என்றவரைக் குருவாக ஏற்றுக்கொண்ட அந்தணர்கள் இந்த இடத்துக்கு வந்துருக்காங்க. யானையும் சிங்கமும் சண்டை ஏதுமில்லாமல் சமாதானமா இந்தக் காடுகளில் ஜாலியா இருந்துச்சாம். ஆஹா..... பிள்ளையாரும் நரசிம்மனும் இருக்குமிடம் இதுதான்னு புரிஞ்சுக்கிட்டு வழிபட்டு வந்துருக்காங்க. அப்போ இந்த தேசத்தை ஆண்ட அரசர் லோகாதித்யா நாட்டின் நலனுக்காக யாகம் ஒன்னு நடத்தித் தரணுமுன்னு இவுங்களைக் கேட்டுக்கிட்டார். யாகமும் நல்லபடியாக நடந்து முடிஞ்சது. ' நீங்க எல்லோரும் இங்கேயே தங்கிடுங்க'ன்னு 14 கிராமத்தை அவுங்களுக்கு அன்பளிப்பாத் தந்தாராம்.
குரு பட்டாசார்யா, சிஷ்யர்களை அங்கேயே தங்கி இருந்து நாட்டின் நலனுக்குண்டானதைச் செய்யுங்க சொல்லிட்டுக் கிளம்பிப்போறார் தான் வந்த கோதாவரி நதிக்கரைக்கு. சிஷ்யர்களுக்கு கவலையாப் போயிருச்சு. குரு இல்லாம எங்களால் நியமங்கள் செய்ய இயலாதுன்னு அழுதுருக்காங்க. இந்த யோக நரசிம்மந்தான் இனி உங்களுக்கு குரு. இவரை வழிபட்டு உங்கள் கடமைகளைச் செய்யுங்கன்னுட்டார். அதனால்தான் இங்கே மூலவருக்கு குரு நரசிம்ஹர் என்ற பெயர்.இப்போ இங்கே இருக்கும் கோவில் ஆயிரம் வருசங்களுக்கு மேலே ஆனதாம். தேரடித் தெரு. நேஷனல் ஹைவேயில் இருந்து பிரியுது. பெரிய வளாகம். முழுசும் தட்டுப்பந்தல் போட்டு வச்சுருக்காங்க.
தசாவதாரம் செதுக்கிய அலங்காரக் கதவைக் கடந்து உள்ளே போனால் பெரிய திண்ணைகளோடு ஒரு வெளிப்ரகாரம். நடுவில் இன்னொரு வாசல். உள்ளே இன்னொரு ப்ரகாரம்.. கேரளப் பாணி கோவில். நேரெதிரா மூலவர். சந்நிதி சாத்தி இருக்கு. ஆனாலும் கம்பிக் கதவுக்குப் பின் உள்ள மரக்கதவில் ஒரு சின்ன ஆறுக்காறு அங்குல ஜன்னல் கதவு போல இருந்தது அரைக்கால் வாசி ஓரமா திறந்து வச்சுருக்கு. தலையை இப்படியும் அப்படியுமாச் சாய்ச்சுத் மினுக்கும் எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் 'தெரிஞ்சவரை'ப் பார்க்கலாம்.
நான் கழுத்தைத் திருப்பிக் கஷ்டப்படும்போது பின்னால் இருந்து ஒரு கை நீண்டு மரச்சன்னலை நல்லாத் திறந்து விட்டது. ஒரு காலை மடிச்சு, மறுகாலை குத்துக்காலிட்டு, வலது கையில் சக்ரமும், தொடையில் வச்ச இடது கையில் சங்கும் ஏந்தி......................கடவுளே '! உன் கருணையே கருணை'ன்னு திரும்பிப் பார்த்தால் மந்தகாஸச் சிரிப்புடன் கோபால். கையில் குழல்தான் இல்லை. 'அச்சச்சோ.... அபச்சாரம்' னு சொன்னால் 'ஒருத்தருக்கு உதவுனா அது சேவை'யாச்சே'ன்றார்.'தரிசனம்' முடிஞ்சு வெளிவந்ததும், நம் பின்னாலேயே வந்த கோவில் ட்ரஸ்டி உள் ப்ரகாரக் கதவை பூட்டிட்டுக் கிளம்புனார். நல்லவேளை நேரம் பிந்தி இருந்தால் இந்த சிம்ஹனைப் பார்த்திருக்க முடியாது.
இந்தக் கோவிலுக்கு நேர் எதிரே 'படு சுத்தமான' தேரடித்தெருவின் அடுத்த கோடியில் ( ஒரு 400 மீட்டர் இருக்கும்) ஆஞ்சநேயர் கோவில். இங்கே மேற்கே நோக்கிய சிம்மமும் அங்கே கிழக்கே நோக்கிய நேயரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி!! இன்னிக்கு நேயருக்கு ஹேப்பி பர்த்டே ஆச்சே. அங்கே மலர் தோரணங்கள் அலங்காரமும் புதுசாப் பூசுன சிந்தூரமுமா ஜொலிக்கிறார். ஸைடு போஸ்தான். வாசலில் நின்னு மூலவரைப் படம் எடுக்க முடிஞ்சது.
மூலவரை வலம்வந்தால் ஒரு இடத்தில் தரையில் பதிச்ச கல்லில் இதே போஸில் இருக்கார். அவருக்கும் சிந்தூர அபிஷேகம் செஞ்சுருக்காங்க. நல்லவேளையா அங்கே ஒரு விளக்கு வச்சுப் பூவும் சார்த்தி இருந்ததாலும், நான் கண் கண்ணாடியைக் கழட்டாமப் போட்டுருந்ததாலும் அவர் தப்பிச்சார்.
வண்டியைத் திருப்பி ஹைவேயில் விரட்டினார் ப்ரஷாந்த். தேரில் உக்கார்ந்து போரடிச்சுப்போன குட்டி குருக்கள் காலை மடக்கிக் குறுகிப் படுத்துருந்ததை ஓரக்கண்ணால் பார்த்தேன். ஆனகுடே கோவில் நாம் கட்டாயம் பார்க்கணுமுன்னு ட்ராவல் வண்டி ஓனர் ராவ் சொன்னது நினைவில் இருந்துச்சு. கோவில் வாசலில் போய்ச்சேர்ந்தோம்.
ஆனைக்கோவில். ஆனை Gகுடி இப்போ ஆனேகுடே. குடேன்னா குன்று(கன்னடமொழியில்) கணபதிக்கான கோவில். சித்தி விநாயகர். ஸர்வ சித்திப் ப்ரதாயகா. கேட்ட வரம் கொடுப்பவர். இது ஒரு முக்தி ஸ்தலம். இவரை இங்கே வந்து தரிசனம் செஞ்சு வழிபட்டோருக்கு நேரே மோட்சம்தான். ( இறந்த பிறகு!)
இந்த ஊரைக் கும்பாஷின்னும் சொல்றாங்க. காரணம்?
கதை இருக்கு:-)
ஒரு சமயம் மழை இல்லாமல் ஊரெல்லாம் வரண்டு போய் மக்கள் அவதிப்படறாங்க. அப்போ அங்கே விஜயம் செஞ்ச அகத்திய முனிவரை வணங்கி மழைக்காக ஒரு யாகம் செய்ய வேண்டுனாங்க. அவரும் யாகத்தை ஆரம்பிச்சார். கும்பாசுரன் என்னும் அரக்கன் (அசுரகுல வழக்கம்போல்) யாகத்தைக் கெடுத்துத் தொந்திரவு செய்யறான்.
இடுக்கண் களையணுமுன்னு வேண்டி கணபதியைக் கும்பிட்டதும் அவர் ஒரு வாளைக் கொடுக்கறார். அப்போ அந்த ஏரியாவில்தான் பஞ்சபாண்டவர்கள், வெவ்வேறு காடுகளில் வனவாசம் செஞ்சுக்கிட்டே வந்து 'கேம்ப்' போட்டது. அகத்திய முனிவர் பீமனிடம் இந்த வாளைக் கொடுத்து அசுரனுடன் போர் புரிஞ்சு அவனைக் கொல்லச் செய்தார். யாகம் இனிதாக முடிஞ்சு வேண்டியமட்டும் மழை பொழிஞ்சு வறட்சி நீங்குச்சு.ரொம்ப அழகான கோவில் . செல்வம் நிறைஞ்ச கோவில்ன்னு வளாகத்தைப் பார்த்தாலே தெரியுது. துலாபாரம் காணிக்கை இங்கே விசேஷமாம். சுற்றிவர அட்டகாசமான கட்டிடங்கள். பக்தர்கள் தங்க வசதி செஞ்சுருக்காங்க. சோமாஸ்ப்புள்ளையார் சூப்பரா இருக்கார். அப்பாடா.... முருகனின் சல்லியம் இல்லை!
மூலவரும் பெரிய சைஸ். கருவறையைச் சுத்தி வெளிப்புறச்சுவர்களில் அட்டகாசமான புடைப்புச் சித்திரங்கள். பக்தர் 'கைகளில் இருந்து பாதுகாப்பு'க்குன்னு கண்ணாடி போட்டு வச்சுருக்காங்க. பாண்டவர்களும் த்ரௌபதியுமா வரிசையில் நின்னு அகஸ்தியரிடம் ஆசி வாங்குவது, பீமன் கும்பாசுரனுடன் போர் புரிவதுன்னு மகாபாரதத்தின் காட்சிகள் சும்மா சூப்பர் போங்க! இதுவரை நான் எங்கேயும் பார்க்காத வகைகள்!!!! படம் எடுக்க அனுமதி இல்லைன்னு அறிவிப்பு பார்த்து மனசு அப்படியே நொந்து போச்சு எனக்கு:( எடுத்துருந்தாலும் கண்ணாடியின் ப்ரதிபலிப்பில் ஒன்னும் சரியா வந்துருக்கவும் வாய்ப்பில்லை. ச்சீச்சீ...... பழம் ரொம்பவே புளிக்குது! யாருக்கு வேணும்?.....
Showing posts with label Anegudde. Show all posts
Showing posts with label Anegudde. Show all posts
Monday, April 19, 2010
சிங்கம், குரங்கு, யானை.....ஒரே ஜாலிதான் போங்க!
Posted by
துளசி கோபால்
at
4/19/2010 01:02:00 AM
22
comments
Subscribe to:
Posts (Atom)