Showing posts with label திருச்சி மலைக்கோட்டை. Show all posts
Showing posts with label திருச்சி மலைக்கோட்டை. Show all posts

Wednesday, July 08, 2015

ஒளிச்சு வைக்க முடியாத ஒரு லேண்ட் மார்க், திருச்சியில்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 64)

கண்டதையும் வாங்கிக் குழந்தைக்குக் கொடுக்காதீங்க.  அன்பு இருந்தால் காசாக் கொடுங்க.  அவள் உடல்நலத்துக்கு எது உகந்ததோ அதை நாங்களே வாங்கித் தந்துருவோம்.  காசைக்கூட நாங்க கைநீட்டி வாங்கமாட்டோம். அதா...அந்தப் பொட்டியில் போட்டுருங்க.  இப்படி நம்ம நண்பர் வீட்டுக்கு நாம் போகும்போது  அவுங்க  சொன்னாங்கன்னா....  மனசுக்கு பேஜாராப் போயிறாது?  ஆனா....  எனக்கு அப்படிக் கொஞ்சம் கூடத்தோணலை.  நியாயம்தானேன்னு  பட்டது:-)   நம்ம சனம் சொன்னால் கேக்குமோ?



செல்லக்குழந்தை  லெட்சுமி ,  சின்னச்சின்ன  கண்களால்  என்னைப் பார்த்துச் சிரிச்சாள்.   இந்தா உன் ஆளுக்குப் போடுன்னு ஒரு நல்ல தொகை எடுத்துக் கொடுத்தார் நம்ம கோபால். புண்ணியவான். நல்லா இருக்கணும்.மேலே போகலாமான்னு  கேட்ட கோபாலிடம் எஸ் சொன்னேன்! வெறும் மூணே ரூபாய்தான். போனமுறை (அதாச்சு கால் நூற்றாண்டு)  போனபோது  ஏறணுமா என்ற தயக்கம் துளி கூட இல்லை. இப்போ.... நம்ம முழங்கால் சமாச்சாரம் ஊர் அறிஞ்சதாச்சே!




417 படிகள் என்று நினைக்கும்போதே மலைப்பா இருக்கு. இப்படி   மலைச்சு நின்னால் மலைக்கோட்டையைப் பார்க்க முடியுமோ? மெள்ள மெள்ள  ஏற ஆரம்பிச்சேன்.  இளம்வயசு மக்கள்  சின்னச்சின்ன குழுக்களா  (மினிமம் 2 பேர்) பரபரன்னு படிகளில் ஏறிப்போய்க்கிட்டு இருந்தாங்க. அடடா....  இந்தச் சின்னவயசுலே என்ன ஒரு பக்தி............

முதலில் அம்மன் சந்நிதிக்குப்போய்  தரிசனம் முடிச்சுட்டு,  தாயுமானவரை தரிசிக்க அடுத்த நிலைக்குப் படி ஏறும்போதே....  சீக்கிரம் போங்க.  சந்நிதி மூடப்போறாங்கன்னு  கேட்ட குரல்,  கொஞ்சம் பதற்றத்தை உண்டாக்குச்சு.  கோவில் காலை 6 முதல் பகல் 12, மாலை 4 முதல் எட்டரை வரை மட்டும் திறந்திருக்கும். இப்பவே 12 ஆக மூணு நிமிட்தான் இருக்கு.  ஓடோடிப்போய்  தரிசனம் ஆச்சு.  நல்ல பெரிய சிவலிங்கம்!  சுயம்புவாம்!

சந்நிதி மூடினபிறகு  நிதானமா வெளியே மண்டபத்தில் இருக்கும் சித்திரங்களைப் பார்த்துக் க்ளிக்கிக்கிட்டு இருந்தேன். (கேமெரா டிக்கெட் கூட  வெறும் 20 ரூ தான்)  கீழே உள்ள அம்மன் மட்டுவார் குழலியின் விமானம் மேலே வந்து எட்டிப் பார்க்குது!

சிற்பங்களையெல்லாம் பார்க்கணுமுன்னு  நினைச்சப்பயே...   '12.30க்கு இந்த மண்டபங்களை அடைக்கணும்' என்று கோவில் பணியாளர் சொன்னதால்  கிட்டியவரை போதுமுன்னு நினைக்க வேண்டியதாப் போச்சு. ஆனாலும் நம்ம ரோஷ்ணியம்மா சொன்ன  அஞ்சு உடம்பு குரங்கைப் பார்க்கணுமுன்னு விசாரிச்சால்...' ஙே' ன்னுமுழிச்சார்:(



சங்கர  'நாராயணர்' கையில்  சங்கு இருக்கவேணாமோ?  ஏன் சக்கரம்?

தாயுமானவரைப் பற்றி நமக்குத் தெரிஞ்சதை அளக்கலாமுன்னு பார்த்தால்.... அதுக்கு இடங்கொடுக்காம கோவில் சுவரிலேயே படக்கதை போட்டு வச்சுட்டாங்க.


அதுக்காக, நாம் சும்மா இருக்க முடியுமோ?  உச்சிப்பிள்ளையார் எதுக்கு இருக்கார்?  அவர் கதையைச் சொல்லித்தான் ஆகணும்:-)

த்ரேதாயுகம்.  ராமாயணம் நடந்த காலக்கட்டம். நம்ம ராமர், காட்டுக்குப்போய் சீதையைத் தொலைச்சுட்டு,  ராவணனோடு யுத்தம்  செஞ்சு அவனை அழிச்சு சீதையை மீட்டார்.  இந்த  சம்பவம் நடக்கும்போது, ராவணனின் தம்பி,  அண்ணனின் தகாத எண்ணம் (அயலான் மனைவி சமாச்சாரம்)  பிடிக்காமல், அண்ணனின் எதிரியோடு கூட்டு சேர்ந்துக்கறார். எல்லோருமாத் திரும்பி அயோத்யாவுக்கு வர்றாங்க.  முடி சூட்டும் விழாவும் நடக்குது.

விழாவுக்கு வந்து சிறப்பித்தவங்களுக்கு  ரிட்டன் கிஃப்டு  கொடுக்கும் சமயம்,  சூரிய குல அரசர்கள் பூஜித்து வந்த ரங்கவிமானத்தை  விபீஷணனுக்கு தாரை வார்த்துட்டார் ராமன். அவனும்  ரொம்பவே மகிழ்ச்சியோடு  அதை இலங்கைக்குக் கொண்டு போறான், கீழே எங்கேயும் வைக்கக்கூடாது என்ற நிபந்தனையோடு!

அநேகமா,  அவன் கிளம்புனதும், அயோத்யா  அரண்மனையில் சண்டை ஆரம்பிச்சுருக்கும். " நீங்க செஞ்சது நல்லா இருக்கா?  பரிசு கொடுக்கணுமுன்னாபொன்னும் பொருளுமாக் கைநிறையக் கொடுத்தனுப்பாம,  வழிவழியா நம்ம  முன்னோர்கள்  பூஜித்து வந்த  ரங்கவிமானத்தைத் தூக்கிக் கொடுக்கலாமா?  எப்பேர்ப்பட்ட தேவலோகத்து சமாச்சாரம். இனி அம்மான்னா வருமா? அய்யான்னா வருமா? "  பிடுங்கல் தொடங்கி இருக்கும்! (நானா இருந்தால்...... என்று  நினைச்சுப் பார்த்தேன்..ஹிஹி)

"கொடுத்தது கொடுத்ததுதான்.  அதைப்போய் இப்பத் திருப்பிக் கேட்டால் அல்பமா இருக்காதா?  இப்ப என்னை என்னா செய்யச் சொல்றே? " ( கோபால்)

அப்ப ஒன்னு செய்யலாம். என்னமோ பழமொழி சொல்வாங்களே... அதி ஏமிட்டி? ஆ...  சூழ்ச்சி  சேஸ்த்தாம்னு தேவர்களிடம்  சொல்லப்போக பக்காவா 'ஆபரேஷன் ரங்கவிமானம்'  உருவாச்சு.  தேவர்கள் சூழ்ச்சி செய்வதில் கில்லாடிகள் இல்லையோ!

'ஆபரேஷன் 'சொல்லுக்கு  நன்றி, அமைதிச்சாரல்!

கூப்பிடு அந்த சூரிய பகவானை. அப்படியே அந்தப் புள்ளையாரையும்! திட்டத்தைத் தெளிவு படுத்துனதும் ஓக்கேன்னு சொல்லிக் கிளம்புனாங்க ரெண்டு பேரும்.

திடீர்னு  இருட்டிக்கிட்டுப் பொழுது போய் சந்தியா நேரமாகுது. கண்ணை உசத்தி சூரியனைப் பார்க்கிறான் விபீஷணன்.  மேற்கே அஸ்தமிக்கும் கோலம் காட்டறான் சூரியன்.  அச்சச்சோ....   மாலை நேரத்து சந்தியாவந்தனம் செய்யணுமே....  கையில் இருக்கும் ரங்கவிமானத்தைக் கீழே வைக்கக்கூடாதுன்னு ஆக்ஞை இருக்கே என்ன செய்யலாமுன்னு சுத்தும் முத்தும் பார்க்க, அங்கே  ஒரு சின்னப்பையன் ஆத்துமணலில் (காவிரி ஆறு)  விளையாடிக்கிட்டு இருக்கான்.

"ஏ பையா, இங்கெ வா. இத்தைக் கொஞ்ச நேரம் பிடிச்சுக்கோ. அஞ்சே நிமிட்லே சந்தி செஞ்சுட்டு வாரேன். தப்பித்தவறிக் கீழே வச்சுறாதே"

"அய்ய... நாமாட்டேன். வூட்டுக்குப் போகணும். ஆத்தா வையும்"

"அதெல்லாம் வையாது ....  நான் பார்த்துக்கறேன்.  செத்தப் பிடி. அஞ்சே நிமிட்"

'ஊம்.... மாட்டேன்....'னு பையன் சொல்ல அவங்கிட்டே கெஞ்சிக் கூத்தாடி(!)  சம்மதிக்க  வைக்கிறான் விபீஷணன்.

பையன் சொல்றான்  'த பாரு, நான்  மூணு வாட்டி உன்னைக் கூப்புடுவேன். அதுக்குள்ள நீ வரலை...  நான் கீழே வச்சுட்டுப் போயிருவேன்'

"அதெல்லாம் அம்மாந்நேரம்  ஆவாது.   தோ... போனேன் வந்தேன்னு  வந்து வாங்கிக்கறேன்"

விபீஷணன், ஆத்துலே இறங்கி  கைகால் கழுவும்போதே,   சீக்கிரம் வாய்யா, சீக்கிரம் வாய்யான்னு மூணுதபா  மெல்லிசாக் கள்ளக்குரலில் ரகசியமாக் கூப்பிட்ட பையன்,  ரங்கவிமானத்தைக் கீழே வச்சுட்டு ஓடிட்டான்.

அவசர அவசரமா சந்தியா வந்தனம் செஞ்சு முடிச்சு  நாலே நிமிட்டுலே ஓடி வந்து பார்த்தா.......  விமானம் கீழே இருக்கு. சட்னு தூக்கி எடுக்கப் பார்த்தால் அது கல்குண்டாக் கனக்குது. கிளப்ப முடியலை:( அடப்பாவி,  சதிச்சயேன்னு  கண்ணை ஓட்டுனா.... பையன்  அந்தாலெ தூரமா ஓடிக்கிட்டு இருக்கான்.  அவனைத் துரத்திக்கிட்டே  போனால்...   பையன் சின்ன வயசுல்லே....  குடுகுடுன்னு ஓடிப்போய் மலைமேலே தாவி ஏறி  ராக் க்ளைம்பிங் செஞ்சு உச்சிக்குப் போயிட்டான்.

விபீஷணனால் அவ்ளோ சட்னு மலை ஏறிப்போக முடியலை.  அப்ப ஏது இந்தப் படிக்கட்டெல்லாம்?   கஷ்டப்பட்டு  மேலேறிப்போய், பையன் தலையில் நறுக் னு ஒரு குட்டு வச்சுக்  காதைப் பிடிச்சுத் திருகப் போறான்.  கையில் சிக்குச்சு யானைக் காது!  என்னடான்னு பார்த்தால் புள்ளையார்  நிக்கறார்.  அப்பப் பார்த்து சூரியன் பளிச்னு ஆகாசத்துலே  வந்து நிக்கறான். அநேகமா மணி ஒரு ரெண்டு ரெண்டரைதான் இருக்கும்:-)

அட ராமா.... இதெல்லாம்  இவுங்க வேலையா?  கைக்கு எட்டுனது, வாய்க்கு எட்டலை பாருன்னு  வெறுங்கையா தன் நாட்டுக்குப்போய்ச் சேர்ந்தான்.
விபீஷணன் குட்டியது,  ஒரு தழும்பா புள்ளையார்  மண்டையிலே  இப்பவும் இருக்காம்!

காவிரிக் கரையிலே விட்டுட்டு வந்த அந்த ரங்க விமானம்தான் இப்போ  நம்ம ரெங்கனின்  வீடு!

மேலே உச்சிப்பிள்ளையார் சந்நிதி  மட்டும் காலை 6 முதல் மாலை 8 வரை திறந்தேதான் இருக்கு. அங்கே போக தனியா ஒரு கட்டணம்  உண்டு.  டிக்கெட் விற்பனையில் இருந்தவர்,  போறீங்களாமான்னார்.   வேணாமுன்னு தலையை ஆட்டி வச்சேன். இங்கே  மலைக்கோட்டை வரை  ஏறும் படிகளை விட  புள்ளையார் படிகள் இன்னும் கொஞ்சம்  ஸ்டீப்பா இருக்கும். இங்கிருந்தே  புள்ளையாருக்கு ஒரு கும்பிடு.

திருச்சி என்றதும் மலைக்கோட்டையும் உச்சிப்பிள்ளையாரும்தான் சட்னு மனசுக்குள் வருவாங்க. அட்டகாசமான லேண்ட் மார்க்!  இந்த மலையே மூவாயிரத்து ஐநூறு  பில்லியன் வருசப்பழசுன்னு  ஆராய்ச்சி செய்து சொல்லி இருக்காங்க.  இதுலே கோவிலும் ஒரு ஆயிரம், ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னே கட்டுனதாம்.  எப்படித்தான் மலையைத் துளைச்சு இப்படி எல்லாம் கட்டிப்போடும் ஐடியாக்கள் வந்துச்சோ!


அங்கங்கே இருந்த சாளரங்கள் வழியா  எட்டிப் பார்த்தேன். காட்சிகள்  அருமையோ அருமை!

மறுபடியும்  417 படிகள் இறங்கி வந்தோம்.  ஏறும்போது  25 நிமிட்.  இறங்கும்போது  வெறும் 18 நிமிட் தான். படி ஏறுவது கஷ்டம் என்றாலும்  வேடிக்கை பார்த்து நின்னு  நின்னு  போனேன்  பாருங்க. (ஸூட் கேஸில் டைகர் பாம் இருக்குன்னுதான் நினைக்கிறேன்)

கீழே  வந்து சேர்ந்தால் லெட்சுமி லஞ்சுக்குப் போயிருக்காப்லெ:-) சின்ன  சந்து மாதிரி  இருக்கும் தெருவைக் கடந்து எதுத்தவாடைக்குப்  போனோம்.  கோவில் கடைகளைக் கடந்து படிகள் இறங்கிப் போனால்  மூணுபக்கமும் தடுப்புக் கம்பிகளுக்கு   மத்தியில் நம்ம மாணிக்க விநாயகர் இருக்கார்.  ஸ்பெஷல் தரிசனத்துக்கு  டிக்கெட் எடுக்காதீங்கன்னு கோபாலிடம் கண்டிப்பாச் சொன்னேன். எல்லாம் போன முறை அனுபவம்தான் காரணம்:-)

 கில்லாடிப் புள்ளையார்   விவரம் இங்கே!


கடைகளைச் சும்மா ஒரு பார்வை பார்த்துட்டு, இந்த வாசலில் இருந்து  எதுத்தாப்லே இருக்கும் மலைக்கோட்டைக்குப்போகும் வாசலையும் உச்சியில் தெரியும் புள்ளையார் கோவிலையும் க்ளிக்கிட்டுக் கிளம்பிட்டோம்.


 இன்னும் பல்லவர் குகை எல்லாம்பார்க்கவே இல்லை.  அடுத்த பயணத்தில் ஒரு நாள் தாயுமானவருக்கு  இப்பவே  எடுத்து வச்சுட்டேன்!


சாப்பாட்டு நேரம் வந்தாச்சுன்னு சங்கீதாவுக்குப் போனோம்.  இது ஷ்ரீ சங்கீதா'ஸ்.   இதுலே சிந்தூர் ஹாலுக்குள்ளே,  ஷாங்காய் இட்லியும், சைனீஸ் பராத்தாவும்,  மசாலா ஆப்பமும்  கிடைக்குமாம்!  இங்கேயே துளசி ஏஸி டைனிங் இருக்குன்னாலும்  அங்கே இடமில்லை.  என்ன  அநியாயம் பாருங்க. துளசிக்கே  துளசியில் இடமில்லை(யாம்).

எனக்கு   ப்ளெயின் ஆப்பம் வித் தேங்காய்ப்பால், கோபாலுக்கு  சவுத் இண்டியன் ஸ்பெஷல் மீல்.  அப்படி  என்ன ஸ்பெஷலாம்? ஒன்னுமில்லை  ஒரு ரஸகுல்லா!  அதை நான் லபக்கிட்டேன்:-)


மீண்டும் அறைக்கு வந்து  ஒருமணி நேர ஓய்வு.   இன்றே இப்படம் கடைசி என்றதால்  மூணேகாலுக்கே கிளம்பிட்டோம்.  ரெங்கா....  தோ வரேன்டா.....

தொடரும்.......:-)



PINகுறிப்பு:   சித்திர மண்டபத்துப் படங்களை அங்கங்கே போட்டுருக்கேன். கதைக்கும் இதுக்கும் சம்பந்தம்தேடவேண்டாம்:-)

Friday, April 19, 2013

கில்லாடிப் புள்ளையார்!


நம்ம ரெங்கனிடம் இன்னுமொரு விசேஷம் என்னன்னா....மற்ற கோவில்கள் பகல் 12 முதல் மாலை 4 வரை மூடி வச்சுடறாங்க பாருங்க அதைப்போலில்லாமல் கோவில், காலை  6 மணி முதல் இரவு  9 வரை திறந்தே இருக்கு. முக்கிய சந்நிதிகளான  தாயார் சந்நிதியும் ரெங்கநாதர் சந்நிதியும் கூட   பகல் தரிசனத்துக்குக் குறிப்பிட்ட நேரங்களில் திறந்துதான் இருக்கு. அதான் உள்ளூர் மக்கள்ஸ் பகல் ரெண்டு மணிக்குப்போய்  ஹாயா ஸேவிச்சுக்கிட்டு வந்துடறாங்க.  நம்மைப்போல வெளியூர் மக்களுக்கு இந்த ரகசியம் தெரியாததால்  பகல் 12 மணிக்கு கோவில் மூடி இருக்குமுன்னு நினைச்சுக்கறோம்.



கோவிலில் கிடைச்ச தகவலை இங்கே பகிர்ந்துக்கறேன்.   ஒருமுறை பார்த்து வச்சுக்குங்க. உதவலாம்.
ஒரு நாளைக்கு மூணுமுறை பூஜை நேரம் தவிர  மற்ற நேரங்களில் பெரியவர் ஃப்ரீதான்.

உற்சவரோ வருசத்துக்கு 322 நாள் பயங்கர பிஸி.  அலங்கரிச்சுக்கிட்டு ஊர்வலம் வந்துக்கிட்டும் மக்களுக்குக் காட்சி கொடுத்துக்கிட்டும் இருக்கார்.
பதிவில் அங்கங்கே இருக்கும் படங்களைப் பாருங்களேன். புரிஞ்சுரும்:-)



  பெருமாள் சந்நிதி:


Sri Ranganathar Sannathi
 Viswarooba Seva            -      6.00  to  7.30
  Pooja Time[no Seva]   -    7.30  to  8.45
  Seva                             -    8.45  to 13.00
  Pooja Time[No Seva]  -   13.00 to 14.00
  Seva                             -   14.00 to 18.00
  Pooja Time[No Seva]  -   18.00 to 18.45
  Seva                             -   18.45 to 20.00
  Free Seva                     -   20.00 to 21.00
  No Seva  after 21.00
  Quick Seva Rs. 250/= per head.
Viswarooba Seva Rs. 50/= per head.
General Entrance - Free in all Seva time.


ரங்கநாயகி தாயார் சந்நிதி
Sri Ranganachiar Sannathi

Viswaroobam Paid Seva  -  6.30 - 7.15
Viswaroobam Free Seva  -  7.15 - 8.00
Pooja Time [No Seva]     -   8.00 - 8.45
Paid Seva                         -   8.45 - 12.00
Free Seva                         - 12.00 - 13.00
Pooja Time[No Seva]      - 13.00 - 15.00
Free Seva                         - 15.00 - 16.00
Paid Seva                         - 16.00 - 18.00
Pooja Time[No Seva]      - 18.00 - 18.45
Paid Seva                        -  18.45 - 20.00
Free Seva                        -  20.00 - 21.00
[No Seva after 21.00. Timings are subject to change during Festival days.]

திருச்சிவரை வந்துட்டு உச்சிப்பிள்ளையாரைப் பார்க்காமல் போக மனசு வரலை. ஆனால்  இப்போ இருட்டிப் போச்சு. மணிவேற ஏழாகப்போகுது. மேலும் முழங்கால் வலி. பேசாம தாயுமானவரை தரிசனம் செஞ்சுக்கலாமுன்னு  'நாங்களே' முடிவு பண்ணி மலைக்கோட்டைக்குப் போகச் சொன்னோம் நம்ம சீனிவாசனை.

ரொம்பவே குறுகலான ஒரு தெருவுக்குள் காரைக் கொண்டு போறார். எதிரில் வண்டி வந்தால் அம்பேல்.  பக்கத்துலே சின்னக்கடைத் தெரு இருக்கு. அதன் வழியா வந்துருக்கலாம். ரெண்டு பக்கமும் வீடுகள். இடையிடையே  தேங்காய்பழம் விற்கும் கடைகள்.இங்கேயே வண்டியை நிறுத்துங்க. இனி மேலே போக வழி இல்லை. இப்படி ஓரமா(!!)  நிறுத்திட்டு இதை வாங்கிக்கிட்டு போங்கன்னு  பூஜைப்பொருட்கள் தட்டை நீட்டுறாங்க. எப்படி நிறுத்தி எப்படி இறங்கறது? கார்க் கதவைத் திறக்கவும் இடம் இல்லையே:(  கண் முன் கொஞ்ச தூரத்தில் கார்களின் பின்னால் இருக்கும் சிகப்பு விளக்கு வெளிச்சம்தெரியுது. அப்பவண்டி இன்னும் போகலாம், இல்லையா?

கொஞ்சதூரம் மெள்ள வண்டியைச் செலுத்திக்கிட்டே போனதும்   வலப்பக்கம்  கடைவீதியின் கலகல!  திரும்பாமல் இன்னும் கொஞ்சதூரம் மேலே போனதும் பாதை கொஞ்சம் அகலமா ஆச்சு. வண்டி நிறுத்தவும் இடம் கிடைச்சது. இடது பக்கம் கோவில் வாசல் போல ஒன்னு.  சனம் போறதும் வாறதுமா இருக்கு. நாங்களும் இறங்கிப்போனோம்.அருள்மிகு  மாணிக்க விநாயகர் கோவில்

கோவில்களுக்கே உரித்தான  காவியும் வெள்ளையும் பட்டைகளாப் போட்ட  படி வரிசைகள்.  ஆனால் கீழே போகுது. விடுவிடுன்னு இறங்கிப்போறோம்.  பேஸ்மெண்ட் போயிட்டோம்.  தனிக்கோவிலாட்டம்  ஒரு சின்ன சந்நிதி. செவ்வகமா மூணு பக்கமும் கம்பித்தடுப்பு.  எட்டிப்பார்த்தால் புள்ளையார்!  நின்னு ஒரு கும்பிடு போட்டுட்டு இடப்பக்கம் திரும்பினால்  ஒரு பெரிய ஹால். பாட்டுக் கச்சேரி நடக்குது !  அருமையான கணீர் என்ற குரல்!  ' கணபதியே வருவாய்.....'

பார்க்க ஸாலிடா இருக்கார் பாடகர். உள்ளூர்க்காரர்.  இளம் கலைஞர்.  பக்க வாத்தியங்களுடன் தூள் கிளப்பறார். வாசலில் நின்னுக்கிட்டு இருந்தவரிடம் பெயர் விசாரிச்சேன். கஷ்யப் மஹேஷாம்.  ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களிடம் அவார்ட் வாங்கியவராம்.

விசேஷம் என்னன்னு  கேட்டேன்.  விநாயகச் சதுர்த்தி விழா.பத்து நாள்கோலாகலமா நடக்குமாம்.  தினம் பாட்டு, ஆன்மிக உபந்நியாசம், பேச்சுன்னு  விதவிதமான நிகழ்ச்சிகள்.  கூட்டம் சுமாரா இருக்கு சபையில்.  பாட்டு கேக்கலாமுன்னு உக்காரப் போனவளை, சாமி பார்க்க வரலையான்னார் கோபால்.

அவர் கையில் ரெண்டு சீட்டுகள். அர்ச்சனைக்கான்னு கேட்டதுக்கு  விசேஷ தரிசனம் என்றார்.  ரொம்ப நேரம் வரிசையில் நிக்காமச் சட்புட்ன்னு சாமியைப் பார்த்துட்டுப்போகலாம். அம்பது ரூபாய்.  அதை எடுத்துக்கிட்டு எங்கே எந்தப்பக்கம் போகணுமுன்னு பார்த்தால்....  விநாயகர்  சந்நிதிக்கருகில்  இருந்தவர்  கையில் உள்ள சீட்டைப் பார்த்துட்டுக் கம்பித்தடுப்பைத் திறந்து வழிவிட்டார் . இதில் நுழைஞ்சு தான்  மலையேறும் படிக்கட்டுகளுக்குப் போகணும் போலன்னு நுழைஞ்சவளை  புள்ளையார் சந்நிதிக்குப்பக்கம் நிக்கச்சொன்னார். அடுத்த பக்கம் இதே போல கோபால். துவாரபாலகனும் பாலகியுமா நிக்கறோம். புள்ளையாருக்கு அபிஷேகம், தீபாராதனை எல்லாம் ஜாம் ஜாம்ன்னு நடக்குது.  நம்மைச் சுத்தி இருக்கும் கம்பித்தடுப்புக்கு வெளியில் சனம் நின்னு சாமி கும்பிடுது.


தீபாராதனையை முதலில் நமக்குக்காமிச்சு விபூதி பிரசாதம் வழங்கியபின் மற்ற சனங்களுக்குக் கொண்டு போறார் அர்ச்சகர்.  அப்பத்தான்புரியுது  இந்த விசேஷ தரிசனச் சீட்டு இங்கே இந்தப் புள்ளையாருக்குன்னு!!!!  எதுக்கு  ஸ்பெஷல் தரிசனச் சீட்டு வாங்குனீங்கன்னு  கேட்டால்   தாயுமானவரைத் தரிசிக்கன்னு நினைச்சேன் என்று முழிக்கிறார் கோபால்:-))))

புள்ளையார்  பலே கில்லாடிதான். கோபாலை எப்படி ஏமாத்தணுமுன்னு  தெரிஞ்சுருக்கு:-) முந்தி ஒருக்கில் ஸ்வாமிமலை  ஸ்வாமிநாதனைத் தரிசிக்க படிகளேறிப்போனதும்  முதல்லே கண்ணில் பட்டவர் புள்ளையார்தான்.  அங்கிருந்த குருக்களும் வாங்கோன்னு கூப்பிட்டு  தீபாராதனை காமிச்சுட்டுத் தட்டை நீட்டறார். கண்ணில் ஒத்திக்கிட்டு தட்சணை போட கோபால் சட்டைப்பைக்குள் கையை விட்டு ரூபாய் நோட்டை எடுத்து தட்டில் வச்சார். அப்பதான் தெரியுது அது அம்பதுன்னு!  புள்ளையாரைப் பார்த்தால்  சிரிச்சமுகமாத் தெரிஞ்சது.  என்ன தாராளப்பிரபுவா இருக்கீங்கன்னு அப்புறம் கேட்டால்..... பைக்குள் பத்து வச்ச  நினைவுன்றார்.

மாணிக்கவிநாயகரின் ஒரிஜினல் பெயர் சித்தி விநாயகர்.  கேட்ட வரங்கள் அனைத்தையும் கொடுக்கும் பெரிய மனசு!  ஒரு காலத்தில் மாணிக்கம் பிள்ளை என்ற ஒரு பக்தர்  இவருக்குண்டான  அனைத்து செலவுகளுக்கும் ஸ்பான்சார் செஞ்சுட்டதால் இவர் பக்தனின் பெயரையே தனக்கும் சூட்டிக்கிட்டார். உண்மையாவே பெரியமனசுதானே!!!



கோவில் கடைகள் ஜேஜேன்னு இருக்கு. பிள்ளையார்  பொம்மைகள் கொட்டிக்கிடக்கு. நம்ம கலெக்‌ஷனுக்கு  புதுவகையில் இருக்கும் ஒன்னு தேடிக்கிட்டே இருந்தேன்.  டக்ன்னு மனம் கவரும் விதமா ஒன்னும் கண்ணுலே ஆப்டலை.  புதுமையா இருக்கணும்,கூடவே சின்ன அளவாகவும் இருக்கணும் என்ற கண்டிஷன் வேற இருக்கே:(


மலைக்கோட்டையைச் சுத்தி இருக்கும் கிரிவலப்பாதையில்  மட்டும் பதினோரு பிள்ளையார்கள் இருக்காங்க. ஏழைப்பிள்ளையார்னு கூட ஒருத்தர் இருக்கார். ஆனால்...நம்ம மாணிக்க விநாயகர்  பணக்காரர். இவர் கோவில் விமானத்துக்குத் தங்கத்தகடு போர்த்தி இருக்காங்க.  கோவிலில் அன்னதானம் நடக்குது.சிதர் தேங்காய் உடைக்கத் தனி இடம்.  விழாக்கள் நடத்தத் தனி ஹால் இப்படி   ஜமாய்க்கிறார்.



என்ன ஒன்னு....காலணிகள் பாதுகாக்க  இருக்கும் இடம் பிள்ளையார் சந்நிதி கடந்து கடைகள் ஆரம்பிக்கும் இடத்தில் இருப்பது.... கஷ்டம்:(  படிக்கட்டுகளில் இறங்கி செருப்புக்காலோடு  சந்நிதித் தடுப்பைக் கடந்து போகணும் அங்கே போக.  இந்தப்பக்கம் படிகள் இருக்குமிடத்தில் ஏதாவது  அரேஞ்ச் செஞ்சுருக்கக்கூடாதோ?

ஒரு வேளை கடைகள் இருக்கும் பகுதிக்கு அப்பால் போனால் கோவில் வாசல்  இன்னொன்னு வருதோ? அப்படித்தான் இருக்கும் போல!  அந்தப்பக்கம் நாம் போகலையே:(   படத்தைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கு. எதா இருந்தாலும் அடுத்த பயணத்தில் கொஞ்சம்  எக்ஸ்ஃப்லோர்  பண்ணிக்கணும்.

மேலே தாயுமானவரைப் பார்க்கப் போகலாமான்னு  கேட்டதுக்கு,  'வேணாம்மா. இப்பவே நேரமாகிருச்சு.  நாளைக்கு வேற நீண்ட பயணம் இருக்கு.  அறைக்குப்போய் ரெஸ்ட் எடுக்கலாம்.
இன்னொருக்கா  பார்க்கலாம் ' என்றார்  என் தாயுமானவர்.


தொடரும்.............:-)


இன்று ஸ்ரீ ராமநவமி விழாவைக் கொண்டாடும் அனைத்து அன்பர்களுக்கும்  விழாக்கால வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.