Showing posts with label அனுபவம். ஆன்ஸாக் டே. Show all posts
Showing posts with label அனுபவம். ஆன்ஸாக் டே. Show all posts

Thursday, April 25, 2013

ANZAC DAY!

Australia New Zealand Army Corps Day.

ஒவ்வொரு வருசமும் ஏப்ரல் மாசம் 25 ஆம் தேதி இந்த தினத்தை இங்கே
நியூஸிலாந்துலே அனுஷ்டிக்கிறோம். தலைப்பே உங்களுக்கு விஷயத்தைச் சொல்லிடும். ஆனாலும் அப்படியே விட்டுட்டா நான் 'துளசி'யா இருக்க முடியுமா?


உங்க பள்ளி நாட்களிலே அசோகரின் காலம், பொற்காலம் என்று ஏன் கூறப்படுகிறது என்ற கேள்வி, கட்டாயமா எல்லோருக்கும் ஒருமுறையாவது பரீட்சையில் கேக்கப்பட்டிருக்குமே!

இல்லைன்றவங்க கை தூக்குங்க! இதெல்லாம் ஹிஸ்டரிங்க!!!

1915லே உலக மஹா யுத்தம் நடந்ததுன்னு அநேகமா எல்லோரும் சரித்திரப் பாடத்தில் படிச்சிருப்பீங்கதானே! இது முதல் யுத்தம்!

யுத்தம் மஹா மும்முரமா நடந்துக்கிட்டு இருக்கு. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு ஒத்தாசையா இருக்கறதுக்காக நியூஸிலாந்து,  அஸ்ட்ராலியாவிலிருந்து ராணுவ உதவியாக போர்வீரர்கள் போறாங்க.என்ன இருந்தாலும் தாய்நாட்டுப் பாச உணர்வு போகாதில்லையா?  அங்கிருந்து வந்தவங்கதானே இவுங்க!

இப்ப இந்த நாடுகளிலே அரசாங்கம் சுயேச்சையா நடந்துக்கிட்டு இருந்தாலும், இங்கே நாட்டு அதிபர், முதல் குடிமகனா( ப்ரெஸிடெண்ட் கிடையாது). இப்பவும் கவர்னர் ஜெனரல்தான் இருக்கார்!

இவுங்களுக்கு போஸ்டிங் துருக்கியிலே இருக்கற Gallipoli Peninsula என்ற இடத்துலே. முக்கிய காரணம் கருங்கடலிலே மாட்டிக்கிட்ட கோதுமைக் கப்பலை Dardanelles Straits வழியாக் கொண்டு போகறதுக்கு உதவியா, அந்த ஜலசந்தியைத் திறக்கணும்.

நியூஸியிலே இருந்து 8556 வீரர்கள் புறப்பட்டுப் போனாங்க. அதில் முக்காவாசிப் பேரு இளைஞர்கள்.அங்கே யுத்தத்திலே ஈடுபட்டு 2721பேர் 'வீரமரணம்' அடைஞ்சாங்க! மொத்தம் 260 நாட்கள் யுத்தம் நடந்தது.4852 பேருக்கு காயம்! மீதி ஆட்கள் நல்லபடியா சேதமில்லாம திரும்பி வந்துட்டாங்க!

இவுங்க அங்கே போய்ச் சேர்ந்த நாளுதான் இந்த ஏப்ரல் 25ன்றது! அதுக்கப்புறம் இந்த நாளை நினைவிலே வைக்கணும்,
இவ்வளவு ச்சின்ன நாட்டுலே எவ்வளவு தேசபக்தி, ராஜ விசுவாசம், தைரியம் எல்லாம் இருக்குன்னு வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லணுமுன்னு திரும்பி வந்த ராணுவ வீரர்களும், வீராங்கனைகளும் முடிவு செஞ்சு, அரசாங்கமும் இவுங்களோட தேசபக்தியைப்
பாராட்டும் விதமா இதை அரசாங்க விடுமுறையாக அறிவிச்சது!

மரணமடைஞ்சவங்களை புதைச்சிட்டு,துருக்கியிலேயே ஒரு நினைவு மண்டபம்( வார் மெமோரியல்) கட்டினாங்க.
இங்கேயும் எந்தெந்த ஊர்களிலே இருந்து ராணுவ வீரர்கள் போனாங்களொ அங்கெல்லாமும் நினைவு மண்டபம்
எழுப்பினாங்க. வீரமரணம் அடைஞ்சவங்க பேருங்களையும் அங்கே செதுக்கி வச்சிருக்காங்க.

Returned Service men & women Association (RSA) இதையெல்லாம் செயல்படுத்தறதுலே கவனம் செலுத்தி எல்லாம் முறைப்படி நடக்க உதவிச்சு!

ஒவ்வொரு வருஷமும், இந்த நாளுலே அதிகாலையிலே அந்தந்த ஊர்களிலே இருக்கற நினைவு மண்டபங்களில் விசேஷமான ப்ரேயரும், அங்கங்கே உள்ள ராணுவ வீரர்களின் அணிவகுப்பும் நடக்கும். அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செய்வார்கள். லோகல் கம்யூனிட்டி ஆட்களும் ஏராளமா இதுலே பங்கெடுத்துக்குவாங்க.

வீரமரணம் அடைந்தவரின் குடும்பத்துக்கு( அவுங்க பரம்பரைக்கு) அன்னைக்கு விசேஷ மரியாதை! அவுங்களும் அவருக்குக் கிடைத்த மெடல் மற்ற சமாச்சாரங்களை நல்லா மினுக்கி எடுத்துக் கொண்டுவருவாங்க!

முதியோர்கள் இல்லத்துலே இருக்கற வயதான ராணுவ வீரர்கள், இந்த நாளுக்கு ஒரு மாசத்துக்கு முன்னேயே அவுங்க மெடல்களையெல்லாம் பாலீஷ் செஞ்சு, அடுக்கி, ராணுவ உடையோட கம்பீரமா இதுலே பங்கெடுக்க
ஆர்வம் காட்டுவாங்க. சக்கர நாற்காலியிலே இருந்தாலும் கம்பீரம் கொஞ்சம் கூட குறையாம, ஒரு பெருமிதத்தோட அன்னைக்கு வலம்வருவதைப் பார்த்தா நமக்குமே ஒரு உற்சாகம் வந்துரும்!

நம்ம ஊர் கொடிநாள் போலத்தான் இதுவும். சிகப்புக் கலருலே இருக்கற பாப்பிப் பூ( ப்ளாஸ்டிக் தான்)சட்டையிலே குத்திக்கிட்டு, உண்டியல் குலுக்குவாங்க. காசு போட்டவுடன் நமக்கும் ஒரு பாப்பிப் பூ கிடைக்கும். அன்னைக்கு டெலிவிஷனில் வர்றவுங்க( செய்தி அறிவிப்பாளர், வானிலை சொல்றவுங்க, விளையாட்டு நியூஸ் சொல்றவுங்கன்னு) எல்லாம் பாப்பிப் பூவோட தரிசனம் தருவாங்க! இந்தக் கூட்டத்துலே நாமும் சட்டையிலே பூவோடு இருப்போம்.

இந்த 'பாப்பி டே'ன்றது ஏப்ரல் 25 க்கு முன்னாலே வர்ற வெள்ளிகிழமை. அதனாலே இந்த வருசத்து'டே'  19 ஆம்தேதியே முடிஞ்சிடுச்சு! நிறைய வாலண்டியருங்களும், பழைய ராணுவ வீரருங்களுமா எங்கே பார்த்தாலும்,
குறிப்பா எல்லா ஷாப்பிங் மால்களிலும் நிறைஞ்சு இருப்பாங்க( இருந்தாங்க!)

அரசாங்க விடுமுறையை எல்லோரும் அனுபவிப்பாங்க. கடைகண்ணிங்கெல்லாம் பகல் 12 மணிவரை மூடி இருக்கணும்.
காலையிலே தேவாலயங்களிலும் விசேஷ பூஜை நடக்கும். இதேமாதிரி அண்டைநாடான அஸ்ட்ராலியாவிலேயும் நடக்குது.

கல்லிபோலியிலே இருக்கற வார் மெமோரியலுக்கு, இந்த நாட்டுப் பிரதமர் வருசாவருசம் போய், அங்கே நடக்கற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, அரசாங்க மரியாதையைச் செலுத்திவிட்டு வருவார்!

நாங்க இருக்கற ஊரான கிறைஸ்ட்சர்ச்சிலே ஊருக்கு நடுவிலே ஒரு வார் மெமோரியல் இருந்தாலும், இங்கே ஓடற நதியின் குறுக்காக ஒரு பாலம் கட்டி, அதுக்கு 'ப்ரிட்ஜ் ஆஃப் ரிமெம்பரன்ஸ்'ன்னு பேரு வச்சிருக்காங்க.
அங்கே ஒரு நுழைவாயில் ஒண்ணு, கற்களால் கட்டி, ஒவ்வொரு கல்லுலேயும் இந்த போரிலே ஈடுபட்ட நாட்டோட பேரையெல்லாம் செதுக்கி இருக்காங்க! வருசாவருசம் இதுக்கு பெயிண்ட் அடிச்சு, இந்த இடத்தை
அழகுபடுத்தி வைப்பாங்க. இதுவும் ஒரு டூரிஸ்ட் அட்ராக்ஷந்தான்!


சமீபத்து நிலநடுக்கத்தால் சிட்டி மாலுக்கு முன்னால் நிக்கும் ப்ரிட்ஜ் ஆஃப் ரிமெம்பரென்ஸ் (Bridge of remembrance) வளைவுக்கு நல்லவேளையா சேதம் ஒன்னும்  அதிகமில்லை. (முதலாம் உலகப்போரில் உயிர்நீத்த நியூஸி ராணுவத்தினர் நினைவுக்காக கட்டியது நவம்பர் 11, 1924 ) வயசு தொன்னூறுன்னாலும், இதை, சிட்டிக்கவுன்ஸில் அப்பப்பப் பழுது பார்த்துச் சுத்தப்படுத்திப் புதுசு போல வச்சுருக்கும். ராணுவ வீரர்கள் ஆற்றின் குறுக்கா அப்போ இருந்த மரப்பாலத்தின் மீது நடந்து போருக்குப் போனாங்களாம். அதான் இந்த இடத்தின் விசேஷம்.




எங்கூர் வார் மெமோரியல் (இடது பக்கம் இருப்பது) இடிபாடுகளில் சிக்கிக்கிடக்கு:(

ரெண்டு வருசத்துக்கு முன்னே வந்த  நிலநடுக்கம்  எங்க வார் மெமோரியலையும் விட்டு வைக்கலை. கிட்டே போகமுடியாத நிலை. கம்பிக்குப்பின் நின்னு பார்க்க வேண்டியதுதான்:(

இங்கிருந்து டூரிஸ்ட்டுங்களைக் கொண்டுபோய், கல்லிப்போலியைச் சுத்திக் காமிச்சு, அங்கே 'அன்ஸாக் வாக்' கொண்டு போய் திருப்பிக் கூட்டிட்டு வர்றதும் இப்ப ஆரம்பிச்சு,நல்ல பிஸினெஸா ஓடிக்கிட்டு இருக்கு!

இப்ப 98 வருசமாச்சு. நூறாவது ஆண்டு விழாவை அட்டகாசமாக் கொண்டாடுறதுக்காக இப்பவே தீவிரமாத் திட்டம் தீட்டறாங்களாம்.


எது எப்படி இருந்தாலும், ராணுவம்ன்னு சொல்றது ஒரு நாட்டுக்கு எவ்வளவு தேவையானதுன்னு உங்களுக்கேத் தெரியும். நியூஸியில் எனக்குரொம்பப்பிடிச்ச விஷயம் என்னன்னா நன்றி மறவாமை. ரொம்பச்சின்ன ஊர்களிலும் கூட ஒரு வார் மெமோரியல்  கட்டாயம் இருக்கும். இத்தனைக்கும் அங்கே  இருந்து போருக்குப் போன ராணுவவீரர் ஒரேஒருத்தரா  இருந்துருப்பார்!

உலக நாடுகளிலே எதுவானாலும் சரி, தாய் நாட்டுக்காக உயிரிழந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தறது அந்தந்த நாட்டுலே இருக்கற ஒவ்வொரு குடிமகன்/மகளுக்கும் கடமை இல்லையா?

ராணுவ வீரர்கள் செய்யற பணி நிஜமாவே மகத்தானதுதான்!!!!


 ஜெய் ஜவான்!

PIN குறிப்பு : வேறொரு பேட்டையில் இன்று எடுத்த சில படங்கள் (கடைசி மூன்றும்) இத்துடன்.