Showing posts with label அனுபவம் vishranth Ghat விஷ்ராந்த் காட் மதுரா. Show all posts
Showing posts with label அனுபவம் vishranth Ghat விஷ்ராந்த் காட் மதுரா. Show all posts

Friday, December 03, 2010

கம்ஸனைக் கொன்றபின்.......

லேசுப்பட்ட ஆளா இந்தக் கம்ஸன்? பலசாலியான அவனுடன் ஒண்டிக்கு ஒண்டி நேரா நின்னு சண்டை போட்டா, கடவுளா இருந்தாலுமே களைப்பு வந்துருக்காதா?

நம்ம கீதா எவ்வளவு அழகா, கம்சனோடு நடந்த சண்டையை எழுதி இருக்காங்க பாருங்க!
http://sivamgss.blogspot.com/2009/12/blog-post_6518.html

லிங்கு வேலை செய்யலைன்னு நினைக்கிறேன். சுட்டி மேலே இருக்கு.


சண்டைன்னுகூடச் சொல்லக்கூடாது. இது வதம். கம்சவதம். ஒரு பாவமும் அறியாத பிஞ்சுக்குழந்தைகளை ஈவு இரக்கம் இல்லாம உடனுக்குடன் வெட்டிக் கொன்னதுமில்லாமல், தங்கையின் எட்டாவது குழந்தையைக் கொல்லணும் என்ற ஆவேசத்தில் ஊரில் அப்போப் பிறந்த அத்தனை குழந்தைகளையும் கொன்னுபோட்ட பாவியை வதம் செய்ஞ்சது நியாயம்தானே? வதைச்சு முடிச்சுட்டு கொஞ்சநேரம் ஓய்வெடுக்கன்னு வந்து உக்கார்ந்த இடம் இந்த விஷ்ராம் ( ஹிந்தி வார்த்தை. தமிழில் ஓய்வு) Gகாட் (படித்துறை) யமுனை நதிக்கரையில் இருக்கும் ஏகப்பட்ட படித்துறைகளில் இதுக்கு ரொம்ப முக்கியத்துவம்!

சம்பவத்துக்குப் பொருந்தி வரும்வகையில் கொஞ்சதூரத்திலேயே கம்ஸனின் கோட்டை இருக்கு!

மதுராவில் ஏகப்பட்ட கோவில்களும் பார்க்க வேண்டியவைகளும் இருந்தாலும் அத்தனைக்கும் போக நேரமேது? முக்கியமான சிலதை விட்டுடாமப் பார்த்தால் போதும் என்ற எண்ணம்தான். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்தாம்!

(ஆமாமாம்...இதுலே மட்டும்........ )

விடுங்க. கோபாலும் தன் மனசில் இருப்பதைச்சொல்ல ஒரு ச்சான்ஸ் கொடுக்கலாம்:)

ரொம்பக் குறுகலா இருக்கும் வீதிகள்.ரெண்டு பக்கமும் வெளியே ரெண்டடி நீட்டி இருக்கும் பலகைகளுடன் நெருக்கமான கடைகள். நிரம்பி வழிஞ்சு தெருவெல்லாம் ஓடும் சாக்கடைகள். இது எங்க இடம். அப்படித்தான் மேய்வோம்ன்னு மக்களை உரசிக்கிட்டுப் போகும் மாடுகள். போதாக்குறைக்குப் பள்ளி மாணவர்கள் கூட்டம் வேற. ஷிஃப்ட் ஸ்கூல் முடிஞ்சுருக்கு போல.


ரொம்பப் புராதன ஊர்ன்னு சொல்லும் பழைய கட்டிடங்கள் எல்லாமே! நம்ம வண்டியோ கொஞ்சம் பெருசா இருக்கு. யார்மேலேயும் இடைக்காம, திறந்துகிடக்கும் சாக்கடையில் சக்கரம் இறங்காமப் போறதே பெரிய சவாலா இருக்கு. திரும்பிப்போயிடலாமுன்னு நினைச்சாலும் வண்டியைத் திருப்ப இடம் ஏது? ஆனது ஆகட்டுமுன்னு போய்க்கிட்டே இருக்கோம். இதுலே நம்ம ட்ரைவர் வேறு ஊருக்குப்புதுசு. வழி தெரியாம பத்து மீட்டருக்கொரு முறை விசாரிச்சுக்கிட்டே முன்னேறுனோம்.

விஷ்ராம் காட் னு கை காமிச்சவருக்கு நன்றி சொல்லி இடதுகைப்பக்கம் அந்தப் பாதையில் நுழைஞ்சால் யமுனா தெரிஞ்சது. படகுகள் ரெண்டுமூணு கட்டிப் போட்டுருக்காங்க. எங்கே பார்த்தாலும் குப்பையும் கூளமுமா......... ஓடிவந்து பார்க்கிங் சார்ஜ் முப்பது ரூபாயை வாங்கிக்கிட்டு அந்த அழுக்குப்பக்கம் கைகாட்டுறார் ஒருத்தர். படகுலே கொண்டுபோய் காமிப்பாங்களாம். கம்சனின் கோட்டை, விஷ்ராம் காட் , மற்ற படித்துறைகளையெல்லாம் காமிச்சு இங்கே கொண்டுவந்து விடறேன்னு சொல்றார் படகோட்டி.

படகுலே உக்கார ஆசனங்கள், பெஞ்சு ஒன்னும் இல்லை. தட்டையான மரப்பலகையில் தரையில் உக்காருவதுபோல உக்காரணும்! கீழே உக்காருவது ஒரு கஷ்டமுன்னா திரும்ப எந்திரிப்பது மகா கஷ்டம் எனக்கு. இது என்னடா நமக்கு நேர்ந்த கொடுமைன்னு நான் முழிக்கறேன்.

யமுனையில் கண்ணை ஓடவிட்ட கோபால்......'ஏம்மா...இந்த அழுக்குத் தண்ணியிலா போகப்போறே?' ன்றார். ஏம்ப்பா அந்த விஷ்ராம் காட் எங்கே இருக்குன்னு பார்க்கிங் வார்டனை(!) கேட்டால்..... நீங்க இங்கே திரும்பாம இன்னும் கொஞ்சம் முன்னாலே போயிருக்கணுமுன்னு பதில் வருது.

சரி. அங்கேயே போகலாமுன்னு வண்டியைக் கிளப்பிட்டோம். மறுபடி ஜனத்திரளில் மாட்டிக்கிட்டுப் போகுது வண்டி. சந்து திரும்பும் இடத்தில் ஆஞ்சநேயருக்கு கோவில். ஆரஞ்சு நிற அனுமனுக்கு வெள்ளி ரேக்குகளை ஒட்டிக்கிட்டு இருக்காங்க.. என்னை என்னடா இம்சிக்குறீங்கன்னு அவர் முழிச்சுப்பார்க்கறார்!
சந்திலே ஆளாளுக்கு வண்டியை நிறுத்தி, 'கைடா வரேன்'னு ஒரு இம்சை. அதுக்குள்ளே விஷ்ராம் காட் இங்கேதான். வண்டியை அந்த ஓரமா நிறுத்திட்டுப் போய் தரிசனம் செய்யுங்கன்னார் ஒரு காவி ஜிப்பாக்காரர். ஏடாகூடமான இடம். அதனால் நாங்க ரெண்டு பேர் மட்டும் இறங்கிப்போனோம். நாம் தரிசனம் முடிச்சுட்டு வந்து ட்ரைவரை அனுப்பலாமே.(நம்ம ட்ரைவர் ப்ரதீப் பயங்கர பக்திமானாக்கும்)
இந்தப் பக்கம் வாங்கன்னு, கடைகளுக்குப் பக்கவாட்டில் இருந்த ஒரு வாசலில் நுழைஞ்சார் காவி ஜிப்பாக்காரர். ஸெல்ஃப் அப்பாய்ண்டட் கைடு!!!! சின்ன சந்துக்குள்ளே போறோம். கோவில் முற்றம் போல ஒரு இடம். வலதுபக்கம் தூண்களில் பெரிய பெரிய காண்டாமணிகள் சங்கிலியால் கட்டித் தொங்குது. படிகள் இறங்கினால் யமுனைக்கரையும் ஓசைப்படாமல் ஓடும் யமுனையும். நல்ல அகலமான நதிதான். நேரா அக்கரையில் ஒரு தோரணவாசல் தெரிஞ்சது. அதுலே குழந்தையைக் கூடையில் வச்சு சுமந்துவரும் வசுதேவர் சிலை. ஆற்றைக் கடந்த இடம் இதுவாக இருக்கலாம்.


இடப்பக்கம் நேரா யமுனாதேவிக்கான சந்நிதி. முற்றத்தின் எல்லாப் பக்கங்களிலும் சந்நிதிகளா இருக்கு. அந்தப் பக்கம் காசி விஸ்வநாதரும் அன்னபூரணியும். விச்சு தங்கத்தலை வச்சுருக்கார். தினமும் மாலை ஆறு மணிக்கு யமுனா ஆரத்தி நடக்குதாம். ரொம்ப நல்லா இருக்குமுன்னு சொன்னார் காவி.

த்வார்க்காதீஷ் கோவில் ஒன்னு கொஞ்சதூரத்திலே இருக்கு. ஆனா நாலுமணிக்குத்தான் திறப்பாங்கன்னதும் மணியைப் பார்த்தால் ரெண்டு. இன்னும் பகல் சாப்பாடு ஆகலை. நாம்தான் ஒரிஜனல் த்வார்க்காதீஷை சேவிச்சுட்டோமேன்னு அங்கிருந்து கிளம்பிட்டோம். யமுனைக்குப் பூஜை பண்ணுங்கன்னு பண்டிட்/பண்டாக்கள் துளைச்சு எடுத்துட்டாங்க. இங்கேயும் அழுக்கும் குப்பையுமாத்தான் கிடக்கு. நம்ம மக்கள் அதுலே முங்கிக்குளிச்சுப் பூஜை செஞ்சுக்கிட்டு இருந்ததையே சேவிச்சுக்கிட்டோம்.


வெவ்வேற சந்துகளில் நுழைஞ்சு கொஞ்சம் அகலமான கடைத்தெருவில் புகுந்து ஒருவழியா ஹொட்டேலுக்கு வந்தோம். கடைத்தெருவில்கூட ஆனந்தமா பாடி ஆடிக்கிட்டுப்போகும் குஜராத்தி யாத்திரீகர்கள் கூட்டம் கண்ணில் பட்டது. ஒரே குழு என்று காமிக்க ஆரஞ்சு நிறத் ஸ்கார்ஃப் எல்லோரும் கழுத்துலே சுத்திக்கிட்டு இருந்தாங்க.
நாம் தங்கி இருந்த ஹொட்டேலில் இருக்கும் ரெஸ்ட்டாரண்டு பரவாயில்லை. குறைஞ்சபட்சம் சுத்தமாக இருக்கே என்ற மனநிறைவுதான்.

நாமும் கொஞ்ச நேரம் விஷ்ராம் எடுத்துக்கிட்டு ஒரு மூணரைக் கிளம்பலாம்.

தொடரும்.................................:-)

PIN குறிப்பு : அழுக்குப் படம் போட்டதுக்கு மன்னிக்கணும். தினமும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்யும் புண்ணிய க்ஷேத்ரம் இருக்கும் ஊர். பயணிகளால் நல்ல வருமானம் இருக்கும் ஊர். அந்த மாநில அரசு, மக்களின் நலத்தை முன்னிட்டு ஊரை, சாலைகளை எல்லாம் மேம்படுத்தி இருக்கலாமே என்ற ஆதங்கம்தான்.