Friday, May 05, 2017

கழுத்துலே துண்டைப் போட்டுட்டாங்க ....... ( நேபாள் பயணப்பதிவு 38 )

காலையில் வழக்கத்தைவிடக் கொஞ்சம் சீக்கிரமாவே எழுந்து ரெடி ஆனோம். ஃபைனல் பேக்கிங் எல்லாம் ஆச்சு. எதிர்வாடையில் கட்டிக்கிட்டு இருந்த ஸ்தூபாவை முடிச்சுட்டாங்க. சகுனம் நல்லாத்தான் இருக்கு!  ஓம் மணி பத்மேஹூம்......  பெயின்ட் பண்ணுவாங்களோ?

காலை ஆறுமணிக்கே ப்ரேக்ஃபாஸ்ட் மெனுவைக் கொண்டுவரச் சொல்லி என்னென்ன வேணுமுன்னு டிக் பண்ணி அனுப்பியாச்சு. ஆறரைக்குக் கீழே போய் காலை உணவை முடிச்சுக்கிட்டோம்.
நாம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போதே லெமன்ட்ரீ ஓனர் ப்ரகாஷ் வந்துட்டார்.  கோபாலுடன் உக்கார்ந்து கணக்குகளைச் சரிபார்த்ததும்,  நாம் கட்ட வேண்டிய பாக்கித் தொகையைக் கட்டினோம்.  பணியாளர்களுக்குத் தனித்தனியா டிப்ஸ் கொடுக்கவேணாமாம்.  அங்கே  இருக்கும் ஒரு பெட்டியில்  காசைப் போட்டுட்டால்  அதை எல்லோருக்கும் சமமாகப் பிரிச்சுக் கொடுப்பதுதான் வழக்கமாம். ரொம்ப நல்ல விஷயம். இதெல்லாம் ஒரு டீம் ஒர்க் தானே. எல்லோருக்கும்  சமம் என்றது ரொம்பவே நியாயமா எனக்குப் பட்டுச்சு.
நல்ல ஹொட்டேல்தான். வீடு போலவே இருந்துச்சு. நல்ல கவனிப்பும் கூட. இந்த ஒரு வாரத்தங்கலிலேயே என்னமோ குடும்பத்துடன் இருந்த உணர்வுதான். ப்ரகாஷ் ஒரு உல்லன் சால்வையை நம்மவர் கழுத்தில் போட்டுக் கைகுவிச்சு வணங்கினார். நம்மவரும் கைகூப்பி வணங்கி அதை ஏத்துக்கிட்டார்.  இங்கே நியூஸியில் நம்ம எட்மண்ட் ஹிலரி அவர்களின் நேபாள் படங்களையும்  மற்ற சம்பவங்களையும்  எத்தனை முறை பார்த்துருக்கோம்!  இதுதான் அவர்கள் வகையில் செய்யும் மாலை மரியாதை! கழுத்தில் ஒரு துண்டு போட்டுவிடறது!
துண்டை ப் பிரிச்சு எடுக்கும்போதே எனக்குப் புரிஞ்சு போச்சு. கையில் இருந்த செல்லில் க்ளிக்கத் தயாரானேன். அதுக்குள்ளே  அங்கிருந்த கேஷவ்வை படம் எடுக்கச் சொல்லிட்டார் ப்ரகாஷ்!  நாங்கெல்லாம் சின்னதா கைதட்டி  ஆமோதிச்சோம். அடுத்து இன்னொரு பொதியைப் பிரிச்சவர்,  என் கழுத்திலும் ஒரு துண்டைப் போட்டுட்டாரே!  ஹைய்யோ!!
(பார்க்கப் பெருசா இருந்தாலும் ரொம்பவே லைட் வெயிட்!  யானைச் சல்வார் கமீஸுக்கு இனி இதுதான் துப்பட்டா ! )

நமக்கு ப்ளைட்  9.50க்கு.  எப்படியும்  குறைஞ்சது ரெண்டு மணி நேரத்துக்கு முன்னால் ஏர்ப்போர்ட்டில் இருக்கணுமாம். இன்ட்டர்நேஷனல் ஃப்ளைட் இல்லையோ! முக்கால்மணி நேரப்பயணம்  வேற     இருக்கே.....  ஏழரைக்குக் கிளம்பிட்டோம்.  சொந்தங்களை விட்டுப்போறது மாதிரிதான்  அப்போ கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு இருந்தோம் அங்கிருந்த எல்லோருமே!  ஒருவருக்கொருவர் நன்றி சொல்லி மாளலை.....  இப்ப இந்தப் பதிவை எழுதும் போதும்  அதே மனநிலை கொஞ்சநேரம் வந்து போச்சு!
நம்ம முக்திநாத் பயணம் நல்லபடி அமைஞ்சதுக்குப் ப்ரகாஷ் போட்டுக்கொடுத்த திட்டமும் ஒரு காரணம் இல்லையா? அது சரியாக அமைஞ்சு போனதால்தானே நமக்கு இங்கே காத்மாண்டு சுத்திப் பார்க்கவும் ரெண்டு நாள் முழுசாக் கிடைச்சது!

ரவிதான் வண்டி கொண்டு வந்துருந்தார் விமானநிலையம் போக.  இன்னும் ட்ராஃபிக் ஆரம்பிக்கலை. அரைமணியில் போய்ச் சேர்ந்துட்டோம். தக்ஷிண்காளி கோவில் கயிறு இன்னும் அவர் கழுத்துலே இருந்தது!




த்ரிபுவன் விமானநிலையம் முழுக்க குரங்குகளின் நடமாட்டம். யாரையும் உபத்திரவம் செய்யலை.  நம்மை வேடிக்கை பார்ப்பதும் நாம் வேடிக்கை பார்ப்பதுமாப் போகுது :-)





செக்கின் செஞ்சு லக்கேஜை உள்ளே அனுப்பிட்டு நாங்க  ஹாலில் உக்கார்ந்து நேரம் போக்கினோம். கூட்டம் அவ்வளவா இல்லை.....  நாம் போக வேண்டிய ஜெட் ஏர்வேஸ் விமானம் வந்து சேர்ந்துச்சு.


ஏர் இண்டியா ஃப்ளைட்டுக்கு  நல்ல கூட்டம்!  பெருமாளே பத்திரமாப் போய்ச் சேரணும் அவுங்க எல்லாம்....
ஒரு வழியா நமக்கு நேரம் வந்து  வண்டியும் கிளம்பிருச்சு. வெறும் ஒன்னேமுக்கால் மணி நேர ப்ளைட்டுதான் தில்லிக்கு.   இந்த நேபாள் பயணம் நாம் பயந்துக்கிட்டு இருந்ததைப்போல் இல்லாம ரொம்பவே மனசுக்குத் திருப்தியா அமைஞ்சு போனதைப் பற்றி நாங்க கொஞ்சம் பேசிக்கிட்டு இருந்தோம்.

பொதுவா சுற்றுலா போய் வந்த இடங்களில் சரியாப் பார்க்காத வகைகளில் சில இடங்கள் எப்பவும் மனசுக்குள்ளே இருக்கும், இன்னொருக்காப் போய்ப் பார்க்கணுமுன்னு.... முந்தியெல்லாம்    லூவர் ம்யூஸியம் (பாரீஸ் ) 'இன்னொருக்கா  லிஸ்ட்டில்' இருந்துச்சு. இப்ப அதை  மாத்திட்டு இந்த நேபாளை  அங்கே வச்சுட்டேன்.

சுவாரசியமான இடங்கள் இங்கே ஏராளம்.  அதுவும் சங்கு நாராயண்,  மற்ற தர்பார் சதுக்கங்கள் இப்படி  நிலநடுக்கத்தால் இடிஞ்சும் உடைஞ்சும்  கிடக்கும் இடங்களை சரிப்படுத்தும்  வேலை முடிஞ்சதும்  இன்னொருக்காப் போய்ப் பார்த்து  அதன் அழகையெல்லாம் ரசிக்கணும்.
இதுக்கெல்லாம் வழி செய் பெருமாளேன்னு வேண்டிக்கிட்டேன், நேபாளை விட்டுக் கிளம்புமுன்.   சரி பார்க்கலாமுன்னு சொல்றதைப்போல்  மேகக்கூடங்களுக்கிடையில்  தொலைவுலே  பனிக்குவியலுக்கூடே  ஹிமயமலையில் எதோ ஒரு சிகரம் கண்ணில் பட்டது!  கைலாசமா இருக்குமோ? (ஆசைதான்!)  பைபை நேபாள்!


கண்ணில் பட்ட ஹிமயமலையைக் க்ளிக்கும்போது  இனி எப்போன்னு ஏக்கம் வந்தது உண்மை. க்ளிக் க்ளிக்  க்ளிக்.....

இது வேற நாட்டுக்குப் போகும்  விமானமாச்சே....  சாப்பாடு கொடுத்தாங்க. அவ்வளவா பசி இல்லை.
சரியான நேரத்துக்கு  தில்லியில் வந்து இறங்கியாச்சு.  இறங்கும்போதே  ஏர் இந்தியா  கண்ணில் பட்டது.  பத்திரமா வந்து சேர்ந்துருச்சு போல!  இல்லே  வேற ப்ளேனா?
அடுத்த ப்ளைட்டுக்கு  நாம்  ரெண்டரை மணி நேரம் தேவுடு காக்கணும் இப்போ  :-(

தில்லி ஏர்ப்போர்ட் வழக்கம் போலத்தான் கூட்டமும் இரைச்சலுமா.....   இமிக்ரேஷன் முடிச்சு, யானைகளைக் க்ளிக்கிட்டு நேரம் போக்கினோம்.
ஹல்திராம் கடை ஒன்னு இருக்கு உள்ளே. அங்கே கொஞ்சம்  தீனி  வாங்கி வச்சோம். இன்னும்  பயணம் பாக்கி இருக்கே.....
நம்மவர் கொஞ்சம் உடற்பயிற்சி எல்லாம் செஞ்சு பார்த்தார் :-)


ஒன்னே முக்காலுக்கு  நம்ம வண்டி கிளம்பிருச்சு. சலோ  டெஹ்ராடூன்!

 முதல்முறையாப் போறோம். இதுலேயும் ஸ்நாக்ஸ் என்ற பெயரில் தின்னக் கொடுத்தாங்க. அதுலே ஒரு சமாச்சாரம்....   புளி உருண்டை!  இதெல்லாம் எப்ப இருந்துன்னு  தெரியலை:-)
சின்னப்பிள்ளை காலத்துலே மத்த பசங்களோடு சேர்ந்து,  வத்தலகுண்டு பள்ளிக்கூடத்துலே புளி, உப்பு, மிளகாய் வெல்லம் வச்சுக் கல்லில் இடிச்சு உருட்டித்தின்னுட்டு நாக்கெல்லாம்  தோலுரிஞ்சதை நினைக்கவச்சுட்டாங்க இந்த ஜெட் ஏர்வேஸ்காரங்க.  
ரெண்டு அம்பதுக்குப் போய்ச் சேர்ந்தாச்சு. 65 நிமிட்ஸ்தான்.
டெர்மினலுக்கு நடக்க வச்சுட்டாங்க. பெட்டிகளை எடுத்துக்கிட்டு வெளியே போனால்.... நம்மவர் பெயர் எழுதுன பேப்பரை வச்சுக்கிட்டுக் காத்திருந்தார் முகேஷ்:-)
இனி அடுத்த பதிவில் பயணத் தலைப்பை மாத்திக்கலாமா?


தொடரும்.............:-)


14 comments:

said...

டிப்ஸ் ஐடியா நல்ல ஐடியா. சிலசமயம் இங்கு மருத்துவமனைகளில் (தனியார் உட்பட) இருந்து வரும்போது படும் பாடு...

பணத்தைத்தான் செட்டில் பண்ணிட்டார் என்று எழுதி இருக்கிறீர்களே... அப்புறமும் ஏன் கழுத்தில் துண்டு போட்டார்?!!! ஹிஹிஹி...

பார்க்காமல் விட்டுப்போன இடங்கள்னு ஏதும் இருந்ததா? படங்கள் சூப்பர் வழக்கம்போல.

said...

// எல்லோருக்கும் சமம் என்றது ரொம்பவே நியாயமா எனக்குப் பட்டுச்சு// நொம்பச் சரி

//யானைச் சல்வார் கமீஸுக்கு இனி இதுதான் துப்பட்டா !// துப்பட்டா ல்லா வயசானவங்க போட்டுக்கறது டீச்சர்.

said...

வாங்க ஸ்ரீராம்.

எங்கூர்லே இந்த டிப்ஸ் வழக்கமே இல்லை. ஆஸியிலும்தான். பழக்க தோஷத்தில் டிப்ஸ் கொடுத்தால் அதை அவமரியாதையா நினைச்சுக்குவாங்க. வாங்க மாட்டாங்க. இங்கத்து டிப்ஸ் ஒரு தேங்க்யூ மட்டும்தான்.

இதே பழக்கத்தில் நாங்க முதல்முதல் யூஎஸ் போனப்ப தேங்க்யூ சொல்லிக்கிட்டு இருக்கோம். அந்த ரூம்பாயும் சிரிச்சுக்கிட்டே தலையை ஆட்டிக்கிட்டு அங்கேயே நிக்கறார். ரொம்ப நேரம் கழிச்சுத்தான் இந்த டிப்ஸ் ஞாபகம் வந்து ரெண்டு டாலரை எடுத்துக்கொடுத்தார் நம்மவர். :-)

இப்பப் பார்த்தது ஒரு துளிதான். இன்னும் ஏகப்பட்ட இடங்கள் இருக்கு அங்கே! மீண்டும் போகத்தான் வேணும் :-)

said...

குஜராத்தில் தங்கிய இடத்தில் இப்படித்தான் டிப்ஸ் பெட்டி இருந்தது....

அடுத்த பயணம் பற்றி தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

said...

மிக அருமையானதொரு பயணம். கூடவே வந்த நிறைவு.

இன்னும் பயணம் பல பல்லாண்டு செய்து பதிவும் பல எழுதும் வல்லமையை பொன்னரங்கம் தென்னரங்கம் திருவரங்கம் நமது உள்ளரங்கம் உறங்கும் பெருமான் துணையிருக்கட்டும்.

said...

முக்திநாத் பயணம் முடிந்து டேராடூனா? முக்திநாத் பயணம், படங்கள் அருமை. நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் காத்மண்டுவில் இன்னும் பார்க்கவேண்டிய இடங்கள் இருக்கும் போலிருக்கே. சுமாரா பயணத்துக்கு என்ன ஆனதுன்னு நீங்க எழுதறதில்லை. தொடர்கிறேன்

said...

ஆரம்ப காலங்கள்ல ஜெட் ஏர்வேசில் பறப்பது எனக்குப் பிடிக்கும், அவர்கள் தரும் உணவுக்காக. அவங்கமாதிரி நல்லா சாப்பாடு வேறயாரும் போட்டதில்லை. அப்புறம் கிங்ஃபிஷர், ஆனால் அவங்க நூடுல்ஸ் போன்ற இந்தியத்தனம் இல்லாத உணவுவகைகளையும் அறிமுகப்படுத்தினர். இப்போ ஜெட் ஏர்வேஸ் உணவு எப்படி?

said...

பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
கண்ணில் பட்ட இமயமலையை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி. கிடைத்தற்கரிய வாய்ப்பு, காணுதற்கரிய காட்சி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நேபாளைத் தொடர்ந்து இந்தியாதான். தொடர்வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜிரா.

இவ்ளோ தூரம் வந்துட்டு, ஒரு வாரத்தோடு பயணத்தை முடிச்சுக்கமுடியுதா? அங்கிருந்து இந்தியா வந்து ஆறுவாரம் சுத்திட்டுத்தான் போனேன் :-)

'அவனும்' கிடந்தவாறே தொடர்ந்தும் உதவி செஞ்சுக்கிட்டுதான் இருக்கான் :-)

said...

வாங்க விஸ்வநாத்.

துப்பட்டா வயசானவங்களுக்கா? அப்ப நான்?

சின்ன மக்கள்ஸ் துப்பட்டாவை நீட் தேர்வுலே உருவிட்டாங்கன்னு கேள்விப்பட்டேனே.....

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நேபாளிலும் கண்டது கடுகளவு, காணாதது (ஹிமய) மலை அளவுதான்!

குழுப்பயணமாப் போகாம இப்படித் தனிப்பயணமாப் போறதுலே செலவு அதிகமுன்னு உங்களுக்குத் தெரியும்தானே? அதான்.... ஒன்னும் வாயைத் திறக்கறதில்லை :-)

எனக்கு எந்த ஏர்லைன்ஸ் சாப்பாடும் பிடிக்காது. 1994 லே இண்டியன் ஏர்லைன்ஸ் தில்லி - சென்னை ஃப்ளைட்லே வெஜிடபிள் பிரியாணி கொடுத்தாங்க. அது பிடிச்சிருந்தது. இப்பக் கொடுத்தால் பிடிச்சுருக்காது :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

பணி ஓய்வு வாழ்க்கையில் உங்களுக்கு விருப்பமான முறையில் எல்லாம் நடக்க எம்பெருமாளை வேண்டிக்கொள்கின்றேன்.

said...

நேபாள் பயணித்து மகிழ்ந்தேன்.நன்றி.