Monday, May 01, 2017

கண்டதும் காதல் கொண்டேன்... .......( நேபாள் பயணப்பதிவு 36 )

கூட்டத்துக்கிடையே  நுழைஞ்சு நேராக் கூட்டிப்போய் நிறுத்திட்டு ' இதோ நான் சொன்ன கருடா'ன்னார் பவன். ஹைய்யோ....  என்ன ஒரு அழகு!   கண்டதும் காதல் கொண்டேன்.  எவ்ளோ அழகான லக்ஷணமான முகம்!  சிரிக்கும் உதடுகள். அளவான மூக்கு! ஹைய்யோ!! ஹைய்யோ!!!!

"நாஞ்சொல்லலை....  "   பெருமிதம்,  பவன் முகத்தில்!
முன்னழகும் பின்னழகும் என்னமா..... இருக்கு, இல்லே?   க்ளிக்கி மாளலை. அக்கம்பக்கம் பூரா இடிபாடுகள். செங்கற்குவியல்கள்.  எதுக்கும் அசைஞ்சு கொடுக்காம கம்பீரமா உக்கார்ந்துருக்கார் நம்ம பெரிய திருவடி :-)

இந்தப்பக்கம்  அசோக் பிநாயக் !  சோகத்தைப்போக்கும் விநாயகர்!  அங்கே போகும் பாதை இடிஞ்சுகிடக்கு. சுத்திக்கிட்டுப் போகலாம், வேணுமானால்....  இங்கிருந்தே ஒரு நமஸ்கார்.  நேத்து நாம் ஜல்பிநாயக் பார்த்தோமே நினைவிருக்கோ? அதில் சொன்ன நாலு  புள்ளையார் கோவிலில் இதுவும் ஒன்னு!  மற்ற ரெண்டும் கார்ய பிநாயக், சூர்ய பிநாயக் !



இந்த  இடத்தில் பூ  விற்பனையாளர்கள் வரிசை கட்டி உக்கார்ந்துருக்காங்க. எல்லாம்  மெர்ரிகோல்ட்ன்னு சொல்லும் துருக்க சாமந்திதான்.  ஒரே ஆரஞ்சு....... மந்தாரை இலைமாதிரி  ஒன்னு வித்துக்கிட்டு இருந்தாங்க. எதுக்குன்னு தெரியலை.......  டிஸ்போஸபிள் ப்ளேட்ஸ்?
இந்தப்பக்கம் இருந்த  கஸ்தமண்டப் அடியோடு போயிருச்சு. இப்படி இருந்துச்சுன்னு  ஒரு படம் வச்சுருந்தாங்க. மூணு அடுக்கு மரக் கட்டடமாம்.

பதினோராம் நூற்றாண்டு சமாச்சாரம்.  1048 ஆம் வருசமாம். தப்பா ஒரு நூற்றாண்டை முழுங்கிட்டாங்க  பாருங்க படத்துலே :-(    முழுசும் ஒரே மரத்தின் பலகைகளாமே! அடடா....  உள்ளே இருந்த கோரக்நாத் சாமியை மட்டும்  வச்சு சின்னதா ஒருகூரை போட்டு வச்சுருக்காங்க....

இத்தனை இடிபாடுகளுக்கு மத்தியில் என்னவோ ஒன்னுமே நடக்காத மாதிரி  மக்கள் கூட்டமும் சிறு வியாபாரிகளின்  கடைகளும் அதுபாட்டுக்கு அதுன்னு  இருக்காங்க. ஆனாலும் நேபாள் மக்களுக்கு நெஞ்சுரம் அதிகம்தான்.   எங்க ஊருலேயும்தான் நிலநடுக்கம் வந்து பாதி ஊரேஅழிஞ்சு போச்சு. உடனே  பாதுகாப்பு வளையத்துக்குள் அந்தப் பகுதியை வச்சுட்டு, ஊர் மக்கள் கண்ணுலேயே மூணு வருசத்துக்குக் காட்டலைன்னா பாருங்க!

இன்னொருபக்கம் இருந்த வெள்ளைக் கட்டடம்  சுத்தி இருக்கும் செங்கல் கட்டடங்களுக்கு சம்பந்தமே இல்லாம  வித்தியாசமா இருக்கு. Gaddhi Baithak என்று பெயராம்.  லண்டனிலிருக்கும் நேஷனல் கேலரி கட்டடத்தைப் பார்த்துட்டு வந்த  அரசரோ,  இளவரசரோ  விரும்பினதால்  கட்டிட்டாங்களாம். அரண்மனையின் ஒரு பகுதியாத்தான் இதுவும் இருந்துருக்கு. இது ரொம்பப் பழைய காலத்துக் கட்டடம் இல்லை. நூறு வயசுதான்....   இதையும் நிலநடுக்கம் விட்டு வைக்கலை.  அமெரிகா தூதரகம், திருப்பிக் கட்டிக்கொடுக்கப் போகுதாம்.
இந்தச் சதுக்கமும்   யுனெஸ்கோவின் பாரம்பரியக் கட்டடங்கள் பட்டியலில் இருக்கு! (UNESCO World Heritage Sites)  இப்படி அடுத்தடுத்து பாரம்பரியக் கட்டடங்கள் இருப்பதை இங்கெதான் பார்க்கிறேன்!!!


இந்த காத்மாண்டு தர்பார் சதுக்கத்தில் மட்டும் சின்னதும் பெருசுமா பத்துப்பனிரெண்டு கோவில்கள் இருக்காம்.   ஒன்னு கூட  நல்ல நிலையில் இல்லை.....  நிலநடுக்க பாதிப்பு  :-(
மல்லா அரசர் பிரதாப்  மல்லாவின் அழகான சிலை ஒன்னு பெரிய தூண்மேலே இருந்தது  கீழே விழுந்துருச்சாம்.  உடைஞ்சே போச்சா இல்லை  தப்பிச்சதான்னு தெரியலை :-(   (வலையில் தேடிப் பார்த்தேன்.  மனைவி, பிள்ளைகுட்டிகளோடு உண்மையிலேயே அழகாத்தான் இருந்தது!)
இந்த சதுக்கத்துக்கு பழைய புராணப்பெயர் ஒன்னும் இருக்கு. பஸந்தபூர் தர்பார் க்ஷேத்ர!

சின்னதா திண்ணை மாதிரி இருந்த இடத்தில் ஒரு பெரியவர் காசுகளை வித்துக்கிட்டு இருந்தார். நாணயமுன்னு சொல்லணும் இல்லே?  பழைய நாணயங்கள்.  நம்ம கலெக்‌ஷனுக்குக் கொஞ்சம் தேறுதான்னு எட்டிப் பார்த்தேன். பொதிகளாக் கட்டிப்போட்டுருக்கு. நடுவில்  ஒரு  குவியல்!

 இதுலே தேடிப் பொறுக்கி எடுக்க நேரமில்லை. இவர்கிட்டே ராமர் லக்ஷ்மணன் சீதை ஹனுமன் போட்ட பழைய காலத்துக் காசு இருக்காம். எடுத்துக் காமிச்சார்.
விற்பனைக்கில்லையாம். பித்தளைக் காசு போலத்தான் இருக்கு. அவர் ஏற்கெனவே  வச்சுருந்த  'நேபாள் காயின்ஸ் ஃபார் கலெக்ஷண்' அட்டையில் 20 காசுகள்  இருந்துச்சு.  அதுலே ஒன்னு மட்டும் வாங்கிக்கிட்டேன். ஓட்டைக் காலணா !!!


பறவைகளுக்குப் போட தானியம் வித்துக்கிட்டு இருக்காங்க ஒரு பெண். பறவைகளும் எப்போ எப்போன்னு  அக்கம்பக்கம் கூரைகளின் மேல் காத்துக்கிட்டு இருக்கு.
வாங்க,  முதலில் அரண்மனைக்குப் போயிட்டு வந்துடலாமுன்னு பவன் சொன்னதால் அங்கே போனோம். வாசலில் ஒரு உயர மேடையில் ஹனுமன்(ஸ்வயம்பு) இருக்கார். இவரால்தான் இந்த இடத்துக்கு ஹனுமன் தோக்கான்னு பெயர் வந்துருக்கு. Hanuman Dhoka. ஹனுமன் எதுக்கு தோக்கா  (ஏமாத்துதல் - ஹிந்தி) கொடுத்தார்னு பார்த்தால்....   நேபாளின் நெவாரி மொழியில் இந்த தோகாவுக்கு  வாசல் என்று பொருளாம்.  த்வார் என்பது தோக்கா!  ஹனுமான் வாசல் :-)
லிச்சாவி அரசர்கள் காலம். நாலாம் நூற்றாண்டு சமாச்சாரம். சிகப்பு போர்த்துக்கிட்டு, செந்தூரம் பூசிக்கிட்டு நிக்கறார்.  பவனுக்கு ஒரு வேலை கொடுத்தாச் :-)
போற வழியில்   முகப்பில் துர்கை இருக்கும்   கதவில் சூரியனும் சந்திரனும் இருக்காங்க.  கோவிலாக இருக்குமோ? பெருசாத்தான் இருந்தது. ஒருவேளை   அரண்மனைக் கட்டிடத்தில் ஒன்னு போல!

அதுக்குப் பக்கத்தில்  வெள்ளைச் சிங்கங்கள் காவல் காக்கும் அரண்மனைக் கதவு. சிங்கத்தின்மேல் ஏறி சவாரி செய்யும் உபதெய்வங்கள்!  வாசலுக்கு மேலே இருக்கும் முகப்பில் யாருன்னு பார்த்தால்.....  அட! நம்ம நரசிம்ஹர்!  மடியில் ஹிரண்யகசிபுவைப் போட்டுக்கிட்டு, 'கீசிடுவேன் கீசி' ன்னு உறுமுறாரோ?

வாசலுக்குள் நுழைஞ்சு போனதும் இடதுபக்கம் கொஞ்சம் இருட்டா இருக்குமிடத்தில் எதோ சாமி சந்நிதி இருக்கு. அங்கே ஒரு  ஆர்மி  ஜவான் நின்னுக்கிட்டு இருக்கார்.  அவர் நகர்ந்ததும்  கேமெராவில் உள்ள ஃப்ளாஷை  ஆன் செய்து க்ளிக்கினால்....  அச்சச்சோ.... நரசிம்ஹம்! கீசிண்ட்ருக்கு ...
பக்கத்து சந்நிதியில் காளி  உருவம். இன்னும் சில உருவங்களும் இருக்கு.
அரண்மனைக் காப்பாளர்...  பக்கிங்ஹாம் பேலஸில் இருக்கறவரைப்போல் இல்லாமல்  நாம் பேச்சுக் கொடுத்தால் பேசறார். அவரையும் க்ளிக்கிட்டு அவரோடு சேர்ந்து நின்னு படம் எடுத்துக்கவான்னு  கேட்டுட்டு கொஞ்சம் க்ளிக்ஸ் ஆச்சு :-)




பெரிய வெளிமுற்றம். சுத்திவர அடுக்கடுக்காக் கட்டடங்கள்.  இடப்பக்கம் ஆரம்பத்தில்  கணக்குப்பிள்ளை உக்கார்ற  இடம் போல திண்டு திம்மாஸ் எல்லாம் போட்டு வச்சுருக்காங்க. காரியஸ்தர் இருக்கையாம். அரசர் உக்கார தனியா இன்னொரு இருக்கை.  தினப்படி அலுவல்கள் கவனிக்கிற இடமாம். சின்னத் தூண்கள், சட்னு மைசூர் அரண்மனையை நினைவு படுத்திச்சு.
இங்கேயும் இடிபாடுகள் இருந்ததை அப்புறப்படுத்திச் சுத்தம் செஞ்சுட்டு, இருக்கும் சுவர்களுக்கு முட்டுக் கட்டைகள் நிறுத்தி  சப்போர்ட் கொடுத்துருக்காங்க.  இதுக்குள்ளேதான்  த்ரிபுவன் ம்யூஸியம் இருக்கு. நம்ம டிக்கெட் ம்யூஸியத்துக்கும் சேர்த்துதான். ஆனால்  நாலு மணிக்கு  ம்யூஸியம் அடைச்சுடுவாங்க. நாம் இங்கே வந்தப்பவே  நாலே முக்கால் ஆகிருச்சே.........
கண்ணாடி வழியே தெரிஞ்சதை நம்மவர் க்ளிக் பண்ணிட்டு வந்தார்.  சரியான வெளிச்சமும் இல்லாம, படங்களில்  பிரதிபலிப்பும் அதிகமா இருந்ததால் ஒன்னும் சரிப்படலை....

நானும்    பனோரமா செட்டிங்கில் வளாகத்தைக் கொஞ்சம் க்ளிக்கி வச்சேன்.



ஒரு கதவு ரொம்ப நல்லா இருக்கு!

தொடரும்.........  :-)


11 comments:

said...

எத்தனை இடிபாடுகள்.....

தொடர்கிறேன்....

said...

கருடாழ்வார் அழகா இருக்கார். சிலைகளை இவ்வளவு அழகாக வடிப்பது அபூர்வம்.

நாணயம் சேர்க்கறது ஒரு பொழுதுபோக்கு இல்லை? தினமலர் ஆசிரியர் இதில் சுவாரஸ்யமிருக்கறவர்.

said...

அருமை. நன்றி.

said...

பெரிய திருத்தமான கருடன். பெரிய திருவடிங்குற பேருக்கு ஏத்த மாதிரி பெரிய கருடன். இறக்கைகளின் வடிவமும் மிக அழகு.

ஆசிய நாடுகளின் மக்களுக்கு எப்பவுமே துணிச்சல் அதிகம். ஒரு பொழுது அழுதுட்டு அடுத்த வேலையைப் பாக்கப் போயிருவாங்க. மேற்கத்தியர்களுக்கு அப்படியில்ல. ஒன்னு நடந்தா அத வாழ்க்கைக்கும் பேசிக்கிட்டேயிருப்பாங்க. அவங்க மனநிலையே வேற. அதுனாலதான் நியூசில அந்தப் பக்கம் யாரையும் போகவிடலன்னு நெனைக்கிறேன்.

அவ்வளவு பெரிய அரண்மனைக்குக் காவல் ஒரேயொரு ஆள்தானா?

said...

படங்களும் இடங்களும் ரொம்ப நல்லா இருக்கு. கருடன் சிலையும் வெகு நேர்த்தி. ஆனாலும் இயற்கைக்குத்தான் எத்தகைய சீற்றம். ஒரு நொடியில், பல வருடக் கனவைச் சிதைத்துவிடுகிறதே.

said...

வாங்க ஸ்ரீராம்.


கலை அழகும், நுணுக்கமான வேலைப்பாடுகளும் பிரமிக்கத்தான் வச்சது அங்கே!

நாணயம் மட்டுமா? ஒரு பெரிய தபால்தலைகள் கலெக்ஷனும் வச்சுருக்கேன்.

சேகரிப்புன்னு சொன்னால்.... நம்ம யானைகளும் இருக்காங்களே :-)

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க ஜிரா.

நம்ம மக்களுக்கு உயிரின் அருமை தெரியறதில்லையோன்னு ஒரு சம்ஸயம் எனக்கு. மக்கள் தொகையை அளவில்லாமல் பெருக்கிக்கிட்டு இருப்பது கூட ஒரு காரணமோ என்னவோ?

இங்கெல்லாம் ஒரு உயிர் இப்படி அசம்பாவிதங்களால் போறதைப் பொறுத்துக்க முடியலை... அந்த பயத்தால் காபந்து அதிகம்.

கையில் துப்பாக்கியோடு ஒரு ஆள் போதாதா? ஒரு வாசல் ஒரு காவல் !

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

இயற்கைச் சீற்றம்..... ப்ச்.... வெறும் நாற்பதே நொடிகளில் எங்க ஊரில் பாதி போயிருச்சு :-(

என்னன்னு சொல்ல ?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இடிபாடுகளைப் பார்க்கும்போது மனசுக்குக் கஷ்டமாப் போயிருச்சு. ஆனால் மக்கள் தைரியமாக இருப்பது மகிழ்ச்சியே!

தொடர் வருகைக்கு நன்றி.

said...

இங்கு நான் கிளிக்கியவை:
https://photos.app.goo.gl/qBHh3QJqVPRwmpQE8

அரண்மனைக் காப்பாளர், பக்கிங்ஹாம் பேலஸில் இருக்கறவரைப்போல் இல்லாமல் நாம் பேச்சுக் கொடுத்தால் பேசுகிறார் என்று இங்கு படித்த ஞாபகம் இருக்க, அரண்மனைக் கதவருகில் நிற்பவரை நெருங்கிப் போனேன். பல சுற்றுலா பயணிகள் அருகிருக்க, பக்கத்தில் தரையில் பொலிச்சென்று துப்பினார். நான் தப்பித்து வந்துவிட்டேன். ச்சுவச்ச் நேபாள்!