Monday, May 08, 2017

கங்கையைப் பார்க்கணும்.... ம்? பார்த்துக்கோ... (இந்திய மண்ணில் பயணம் 1 )

ஜாலி க்ராண்ட்  ஏர்ப்போர்ட், டெஹ்ராடூனில் இருந்து  இப்ப ரிஷிகேஷ் போய்க்கிட்டு இருக்கோம்.  தூரம் ஒரு இருவது கி மீதான். சரியாச் சொன்னால்  டெஹ்ராடூன் நகருக்கும் ரிஷிகேஷ் நகருக்கும் இடையில் இந்த  ஏர்ப்போர்ட் இருக்கு :-)   ரிஷிகேஷ்தான் பக்கம் வேற :-)  இந்தாண்டை டெஹ்ராடூன் நகருக்குப் போகணுமுன்னால்   முப்பது  கி மீ தூரம் போகணும். பேசாம ரிஷிகேஷ் ஏர்ப்போர்ட்டுன்னே பெயர் வச்சுருக்கலாம்.
ஏற்கெனவேதான்  நம்ம சண்டிகர் வாழ்க்கையில்  ஒருமுறை  ஹரித்வார்,  ரிஷிகேஷ் வந்துட்டுப்போனோமே... இப்ப எதுக்கு இங்கே மறுபடியும்?

எல்லாம் காரணமாத்தான் :-)   நம்ம 108 திவ்யதேசக் கோவில்களில்  தரிசிக்காத நாலு, வட இந்தியாவில் இருக்குன்னு  முந்தி சொல்லி இருந்தேனே.... அதுலே  மூணு கோவில்களுக்கு ரிஷிகேஷ் வழியாத்தான் போகணும்.

பயணத்திட்டம் உருவாகும்போதே  வட இந்தியப் பயணங்களில்  ஒரு கலக்கு  கலக்கும் பதிவுலக நண்பர் வெங்கட் நாகராஜிடம்தான்  முதலில் விசாரித்தார் நம்மவர். அவரும் இவருமா சிலபல மின்மடல்கள் மூலம் பேசிக்கிட்டு இருந்தாங்க. இவர் இப்ப நம்ம குடும்பநண்பரும் ஆகிட்டதால் அதிக உரிமையுடன்  தொல்லைப் படுத்தறோம்:-)

திட்டம் முதலில் தில்லியில் இறங்கி அங்கிருந்து ஏற்பாடு செய்யலாம் என்றிருந்தது, ' இப்போ எதுக்கு தில்லி?  அந்தக்கூட்டத்திலும் ட்ராஃபிக்கிலும்  மாட்டிக்கணுமா?' ன்னு திட்டத்தையே ரிஷிகேஷுக்கு மாத்தியாச்:-)

நேபாளில் லெமன்ட்ரீ  ப்ரகாஷை வலையில் பிடிச்சதைப்போல, ரிஷிகேஷில் Shubh Yatra  ட்ராவல் சர்வீஸ் நடத்தும்  நவீனையும் வலையிலெயே பிடிச்சுட்டார் நம்மவர். அவரிடம் நம்ம பயண விவரம் சொல்லி, அவரும் ஒரு திட்டம் போட்டு அனுப்பி அதன்படித்தான் டெஹ்ராடூன் வந்து இறங்குனது.  ஒரு பத்து மின்மடல் இங்குட்டும் அங்குட்டுமாப் போச்சு.  இப்பெல்லாம் வலையில் இருக்கு வழின்றது எல்லாத்துக்குமே பொருந்திப்போகுது பாருங்களேன்!

நவீன் அனுப்பியவர்தான் முகேஷ். முதலில் ரிஷிகேஷ்  போய்  நாங்க நியூஸியில் இருந்தே புக் பண்ணிய ஹொட்டேலில்  செக்கின் செஞ்சுக்கிட்டு  நவீனை சந்திக்கணும். இந்த ஹொட்டேல் பெயர்  எல்பீ கங்கா வ்யூ.  (EllBee Ganga View ) என்னுடைய ஒரே கண்டிஷனான கங்கையைப் பார்த்தபடி அறை இருக்கணும் என்பதுக்கு இது ஒத்துப்போனதால் சரின்னுட்டேன்.
முக்கால்  மணி நேரத்தில்   ஹொட்டேல் கங்கா வியூவுக்கு வந்து சேர்ந்தோம்.  ரிஷிகேஷ்  டவுன் போறதுக்கு   இன்னும்   மூணு கிமீ போகணும்.  இது முன்னாலேயே வந்துருது.  செக்கின் ஆச்சு. ஒருதடவைக்கு ரெண்டு தடவையா  கங்கை தெரியும் அறைதானேன்னு கேட்டுக்கிட்டேன். நாலாவது மாடியில் நாலாவது அறை.  நல்லவேளையா லிஃப்ட் இருக்கு.
அறை வாசலில் ரெண்டு யானைகளின் வரவேற்பு!   உள்ளே போனதுமே  ஜன்னல் திரைச்சீலையைப் பணியாளர் திறந்து விட்டதும்....  ஹைய்யோ.....   கங்கை  கண்ணெதிரே தோன்றினாள் :-)

பெரிய ஜன்னல்னு சொல்ல முடியலை. அந்தப்பக்கம் முழுசுமே கண்ணாடிச் சுவர் ! நம்மது கார்னர் ரூம் என்பதால் இடதுபக்கமும் சுவர் உயரத்துக்குப் பெரிய ஜன்னல்.  கங்கையில் அவ்வளவா தண்ணீர் இல்லை..... என்ன ஆச்சுன்னு என் கவலை.

கவலையோடு திரும்பிப் பார்த்தா.....   எப்பவுமே கண்ணுலே கங்கை தெரியணுமுன்னு குளிமுறியில்  பெரிய கண்ணாடி ஜன்னல் கங்கையை நோக்கி:-)  போச்சுடா  .... முதல்லே  அதுக்கான கர்ட்டனை இழுத்து விடுங்க....  இப்படி ஒன்னு தில்லி ஹொட்டேலில்  இருந்தது  படா பேஜார் :-)
கொஞ்சம் ஃப்ரெஷப் செஞ்சுக்கிட்டு  நவீனோட ஆஃபீஸுக்குக் கிளம்பினோம். ஹொட்டேலில் இருந்து  ஹரித்வார் சாலையில் மூணு கிமீ போகணும்.  அவர் நமக்காகக் காத்திருந்தார்.  நமக்காக அவர் போட்டு வச்ச பயணத்திட்டத்தைப் பார்த்து ஓக்கே பண்ணியாச்.   நாளைக்கு இங்கே ரிஷிகேஷில் தங்கிட்டு, நாளை மறுநாள் காலையில் கிளம்பணும்.  பயணம் மட்டுமில்லை, நமக்கு இன்று முதலே  வண்டியும் தேவைப்படுது. அதையும் சொல்லி இந்தப் பயணம் முடிச்சுட்டு அடுத்து போகப்போகும் இடத்துக்கும் சேர்த்தே  அத்தனை நாளுக்கும் கார் ஏற்பாடு செஞ்சுக்கிட்டார்  நம்மவர்.

வந்த  வேலை முடிஞ்சதும் கிளம்பி இப்போ பாலாஜியைப் பார்க்கப் போறோம். நம்ம ஹொட்டேலைத் தாண்டி அந்தாண்டை  ஒன்னரை கிமீ  போகணும். திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ வெங்கடேஷ்வர் பகவான்(பாலாஜி)கா மந்திர்.  போன பயணத்துலே வந்து கண்டுக்கிட்டவர்தான்.  கோவிலுக்குள் போனால்....  பழைய ஆட்களை ஒன்னும் காணோம். பரிச்சயமானவராகப் பெருமாள் & கோ தான் இருக்காங்க.  ஆச்சே ஆறேழு வருசம். போனமுறை பார்த்த  சவுத் இண்டியன் பட்டர்களைக் காணோம்.  இப்ப  பண்டிட்கள் முழுக்க முழுக்க  நார்த் இண்டீஸ்.


பெருமாளையும், தாயாரையும்,  தாயாருக்கு நேரெதிரா இருக்கும் ஆண்டாளையும் தரிசனம் செஞ்சுக்கிட்டு,  நம்ம ஆண்டாளம்மாவுக்காகத் 'தூமணி மாடத்து...'  மனசுக்குள்ளே பாடிட்டு கோவிலை ஒரு சுத்து சுத்திக்கிட்டு வெளியே வந்தோம்.

அடுத்துப்போக வேண்டிய இடம் பெருமாளுக்குப் பக்கத்து வாசல்.  போனமுறை   பார்த்தும் போகாமல் வந்த இடம். மெட்ராஸ் ஹோட்டல்.
வாசலைக் கடந்து உள்ளே போகுமுன் கண்களை மூடிக்கொள்ளணும். இந்தப் பகுதிகளில் எல்லாம் ஓப்பன் கட்டர்தான்  :-(  புராதன நகரங்களில் பாதாளச்சாக்கடை  அமைப்பது கஷ்டம். இத்துனூண்டு ரோடு. அதுலே எதிரும் புதிருமா வண்டிகள்  இடிச்சுக்காம வர்றதே கஷ்டம். இதுலே எங்கிருந்து தோண்டிப்போட்டு வேலை செய்ய முடியும்?  இருக்கற சாக்கடை வெளியே தெரியாதபடி மூடி போட்டால் தேவலை.  கடைகளும் வீடுகளும் வாசலுக்கு எதிரில் மட்டும்  கல்லைப் போட்டு  வச்சு மூடிக்கிறாங்க.  பாக்கி இடம் எல்லாம் ஓப்பனே ஓப்பன். இதுலே  ப்ளாஸ்டிக் குப்பைகள்  வேற  அடைச்சுக்குது....  மக்களுக்கு விழிப்புணர்வு வந்தால் சரி ஆகும். வரணுமே... :-(
உள்ளே அரை இருட்டாக் கிடக்கு. ரொம்பப்பெரிய ரெஸ்ட்டாரண்டு ஸ்டைல், இதுலே மட்டும்தான்!  எதாவது லைட் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். எனக்கு ஒரு சௌத் இன்டியன் ஃபில்டர் காஃபி. இப்படி  ஆசை. .....

இட்லி வடை கிடைச்சது.  ஒரு பெரிய கிண்ணம் நிறைய சாம்பார்.
நார்த்தீஸ்களின் ஃபேவரிட்.  முகேஷ் தனியா இன்னொரு டேபிளில் உக்கார்ந்து தோசையும் டீயும் முடிச்சுட்டுச் சட்னு கிளம்பி வண்டியாண்டை போறேன்னு போயிட்டார்.  இட்லி வடைக்குத்தான் கொஞ்ச நேரம் ஆச்சு.
 காஃபி வந்துச்சு டீ க்ளாஸில்!  இங்கேயும் மருந்துக்குக்கூட மெட்ராஸ் ஆட்கள் இல்லை. ஆரம்பிச்சு வச்சுக் கொடுத்தவர் போயிட்டார்.  இப்ப  பல கைகள் மாறி, புராணப்பெயருடன் இருக்கு இது.
இப்ப இது தோஸா ப்ளேஸ்! டோர் டெலிவரி கூட இருக்குன்னதும்  விவரம் வாங்கி வச்சுக்கிட்டார் நம்மவர்:-) எல்பீ கங்கா வ்யூ  வெறும் ஒன்னரை கிமீ தானே! ரூம் நம்பர் 404 :-)

தோசையின் மகிமைகள் விக்கிபீடியாவில் இருந்து கூட சுவரை அலங்கரிக்குது :-)
காபி சூடா இருக்கே  டபரா இல்லையான்னதுக்கு ஒரு பெரிய கிண்ணம் கொண்டு வந்து கொடுத்தார் பரிமாறினவர்.
வெளியே வந்தப்பதான் கவனிச்சேன் கோவில் வாசலுக்கு அந்தப் பக்கமும் ஒரு  சௌத் இண்டியன் ரெஸ்ட்டாரண்ட் , ஆந்த்ரா ரெஸ்ட்டாரண்ட்ன்னு இருக்கு. போனமுறை இது இல்லை.  நார்த்தீஸுக்கு சட்னு அடையாளம் தெரியட்டுமுன்னு  இட்லிப்பானையை  போர்டுலே ஏத்தி வச்சுருக்காங்க :-)
பக்கத்துக் கடையில் தோஸான்னா  இங்கே இட்லி. சரியான போட்டி போல!
 இட்லி, தோஸா, சாம்பார்னு தெக்கத்திச் சொற்கள் எல்லா வடக்கத்திகளுக்கும் தெரிஞ்சுருக்கே!  தேசிய ஒருமைப்பாடு இதோ... இப்படி !  எதுக்கும் பார்த்து வச்சுக்கலாமுன்னு உள்ளே போய் எட்டிப் பார்த்துட்டு உடனே வெளியே வந்துட்டேன்.  மெட்ராஸ் ஹோட்டல் தேவலையோ?


எங்கிருந்தோ நம்மைக் கவனிச்சுக்கிட்டு இருந்த முகேஷ் சட்னு வண்டியைக் கொண்டு வந்தார்.  அடுத்த இடமா இங்கே பக்கத்துலே ஒரு முன்னூறு மீட்டரில் இருக்கும் த்ரிவேணி காட் போறோம்.  கலகலப்பான மெயின் ரோடுலே இருந்து சட்னு உள்ளே  பிரிஞ்சு போகும் இன்னொரு கலகலப்பான தெரு. ரெண்டு பக்கமும் கடைகளோ கடைகள். போனமுறை வேற வழியா உள்ளே வந்துருந்தோம் போல. அப்ப ஒரு கைடு நம்மைப் பிடிச்சுட்டாரே....
நம்மை இறக்கி விட்டுட்டுப் பார்க்கிங்கில் வண்டியைப் போடப்போன முகேஷின் செல்நம்பரை வாங்கி வச்சோம். வேணும்போது கூப்பிட்டால் ஆச்சு.

இங்கே கங்கைக் கரை ஓரமா நடக்கும்போது, மனசு பழசை நினைச்சுக் கண்ணில் குளம் கட்ட ஆரம்பிச்சது  உண்மை.....  ப்ச்...

தொடரும்....:-)


21 comments:

said...

இன்று உணவுக்கு முக்கியத்துவமா? படங்களை சொல்கிறேன். கோவில் படம் சூப்பர்.

said...

வாங்க ஸ்ரீராம்.

// இன்று உணவுக்கு முக்கியத்துவம்....//

ஹாஹா அப்படியும் வச்சுக்கலாம். இன்று 'திங்க'க்கிழமையாச்சே :-)

said...

எங்கு சென்றாலும் நமக்கு அந்த இட்லி தோசைதான்... எங்களது வட இந்தியப் பயணம் நினைவிற்கு வந்தது.

said...

வணக்கம்
பயண அனுபவம் பற்றிய சிறப்பு தொகுப்பை படித்து மகிழ்ந்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

said...

இந்த வாரத்தில் மெட்ராஸ் கபேஐப் பற்றிப் படிச்சதும் ஶ்ரீ.எம் எழுதிய அவர் அனுபவ நூலில் இந்த மெட்ராஸ் கபேஐப் பற்றிக் குறிப்புட்டிருந்தது நினைவில் வந்தது (இங்குதான் மசால் மோசைகளைச் சாப்பிட்டு அவரின் ஆசையைப் போக்கிக்கொண்டாராம். அதன்பின் தியானம் இடையூரில்லாமல், மசால்தோசை ஆசை போய்விட்டது என்று எழுதியிருந்தார்). வெங்கடாசலபதி தரிசனமும் கங்கா தரிசனமும் ஆச்சு.

நீங்க கண்ணாடிச் சுவர் உள்ள பாத்ரூமைப் பற்றி எழுதியது, தில்லி தாஜ் அறையை ஞாபகப்படுத்தியது. எப்படி அதை மூடுவது என்று தெரியாமல் விழித்தேன்.

said...

இட்லி வடைனா, ஒரு இட்லி ஒரு வடையா? ஆந்திரா கடையின் விலைப்பட்டியலைப் பார்த்டு மீல்ஸ் 250ரூவா என்று நினைத்தேன். அப்புறம்தான், ஜிலேபியில் விலைப்பட்டியல் எழுதியிருக்கிறார்கள் என்று கண்டுபிடித்தேன்.

said...

பார்த்தாச்சா

said...

நன்றி. தொடர்ந்து தொடர்கிறேன்.

said...

கண்ணாடிச் சுவருள்ள குளிமுறியா... ஆகா... இப்ப வடக்கர்கள் இதையெல்லாம் விரும்புறாங்க போல. தெற்கர்களுக்கு சரிப்பட்டு வராது.

கங்கையிலேயே தண்ணி இல்லைன்னா பரமசிவன் கிட்டதான் புகார் கொடுக்கனும். எல்லாரும் எல்லாத்தையும் கொண்டு வந்து கொட்டி அழுக்காக்குறாங்கன்னு வெளிய விடாம வெச்சிருக்காரோ என்னவோ!

வடக்கர்களில் சிலர் சாம்பார் குடிப்பதையும் பாத்திருக்கேன். அதான் பெரிய கிண்ணத்துல சாம்பார் வைக்கிறாங்கன்னு நெனைக்கிறேன்.

நார்த் இண்டியன் பட்டர்ஸ் திருப்பாவையும் பாசுரமும் பாடுனா எப்படியிருக்கும்னு யோசிச்சுப் பாத்தேன். ம்ஹூம். ஒன்னும் சொல்றதுக்கில்ல.

said...

கங்கையை பார்க்கும் வரை துடித்துக் கொண்டிருந்தேன் ,பிணங்கள் மிதக்கும் கங்கையைப் பார்த்ததும் ,ஏண்டா பார்த்தோம்னு ஆயிடுச்சு :)

said...

கூகுள் ஆண்டவருக்கு இணையாக
பதிவுலகும் இருப்பது பெருமைக்குரியது

படங்களுடன் பகிர்ந்தவிதம் அருமை

நானும் திரிவேணி சங்கமம் பார்க்க
ஆவலுடன்...

பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

தெரிஞ்ச பெயர் என்பதால்தான் கிடைக்குமுன்னு பார்த்ததும் வாங்கிடறோம். ஆனால்... ருசி? ப்ச்.....

அந்தப் பெயர்களை வச்சே பொழைச்சுக்கறாங்க ..... தென்னிந்தியாவை விட்டால் வேறெங்கும் இந்தப் பெயரைப் பார்த்து மயங்கக்கூடாதுன்னு கண்டிப்பா இருக்கணும், இனிமேல் :-)

said...

வாங்க கவிஞரே!

ரசித்தமைக்கு என் நன்றிகள்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

அவர் சொன்னது ரொம்பச் சரி. இங்கே சாப்பிட்டால் ஆசையை அழித்துவிடலாம் :-) ஆசை தொலைஞ்சால் பின்னே நேரடியா மோட்சம்தான்!

கண்ணாடிச்சுவருக்கு மேல் ஒரு ரோலர் கர்ட்டன் இருக்கே:-)

ஒருவடை ஒரு இட்லிதான். அதுவே யதேஷ்டம்தான் .

ஜிலேபியில் எழுதி இருப்பது விலை இல்லை. பொருட்களின் பெயர்கள். போஜனம், தோசா, இட்லி , வடா உப்மா :-)

said...

வாங்க ராஜி.

பார்த்தாச் :-)

said...

வாங்க விஸ்வநாத்.

தொடர்வதற்கு நன்றி.

said...

வாங்க ஜிரா.

கண்ணாடி குளிமுறி எல்லாம் தேன்நிலவு ஜோடிகளுக்கான ஸ்பெஷலா இருக்கலாம் .

நார்த் பட்டர்ஸ், பாசுரம் பாடுவாங்களான்னே ஒரு சம்ஸயம் வந்துருச்சே இப்போ :-)

ரொம்ப அகலமா இருக்கு கங்கை. மேலும் அங்கங்கே மண் திட்டு. மழைக் காலத்தில் நிறையத் தண்ணி இருக்கும். அங்கே மணல் கொள்ளை இல்லை போல இருக்கே! இருந்தால் மண் திட்டே இருக்காதுல்லையா?

said...

வாங்க பகவான் ஜி.

நீங்க.... காசியில் பார்த்துருப்பீங்க. சுத்தமான கங்கையைப் பார்க்கணுமுன்னா ரிஷிகேஷ், பின்னேஅங்கிருந்து மேலே போகணும். அவ்ளோ பரிசுத்தமான பளிங்கு நீர்!

நல்லவேளை, என் காசிப் பயணத்தில் ஒன்னும் மிதக்கலை ! தப்பிச்சேன். அங்கே விசாரிச்சப்ப, இப்ப அதெல்லாம் கூடாதுன்னு ரொம்ப கடுமையான விதிகள் இருக்குன்னாங்க.

said...

வாங்க ரமணி.

எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா உங்களை இந்தப் பக்கம் பார்க்கலையே?

said...

ஆஹா... நம்ம மின்னஞ்சல்களையும் நினைவில் வச்சு பகிர்ந்திருக்கீங்களே! :)

வடக்கே இருக்கும் பெரும்பாலான தென்னிந்திய உணவகங்கள் வடக்கத்தியர் நடத்துவது! வேலை செய்வதும் வடக்கத்தியர்கள்/நேபாளிகள்! அதனால் நமது சுவையை அங்கே எதிர்ப்பார்ப்பது தவறு! அந்த ஊர் உணவினைச் சாப்பிடுவது உத்தமம்!

போலவே எத்தனை பழைய உணவு என்று உங்களால் கண்டுபிடிக்க முடியாது! ஒரு வாரத்திற்குத் தேவையான சட்னி செய்து Deep Freezer-ல் வைத்து தான் பயன்படுத்துவார்கள்!

said...

Beautiful descriptions... well explained