Monday, May 29, 2017

திருக்கண்டம் என்னும் கடிநகர் ஸ்ரீரகுநாத்ஜி (இந்திய மண்ணில் பயணம் 10 )

வந்த நோக்கத்துக்காகப் பயணம் புறப்படும் நாள் வந்தாச்சு. காலையில் கொஞ்சம் சீக்கிரமாவே எழுந்து  வைஃபை இருக்கும்போதே 'செய்ய வேண்டிய கடமைகளை' முடிச்சுக்கிட்டு   துணிமணிகளை எல்லாம் ஒழுங்காப் பொட்டிகளில்  அடுக்கி வச்சோம். மணி ஏழு ஆச்சுன்னாலும் சூரியனைக் காணோம்.  மசமசன்னு  கண்ணுக்குத் தெரியறாள் கங்கா.
ஏழரைக்குத்தான் ப்ரேக்ஃபாஸ்ட்க்கு  ஸிட்டிங் எலிஃபெண்ட் போகணும். முதல் ஆள் அன்றைக்கு நாம்தான். அறையை விட்டுக் கிளம்பும்போது போனால் போகட்டுமுன்னு சூரியன் எட்டிப் பார்த்தான். பயணம் என்பதால் நான் சாப்பிடும் சமாச்சாரத்தில் கொஞ்சம் கவனமா இருந்தேன். ஆனாலும் வடையைப் பார்த்தால்  விடமுடியுதா?  தயிர் நல்லாதாக் கிடைச்சது.
பயணங்களில் மட்டும் தயிர் கிடைச்சால் அதுவும் காலை நேரத்தில் நான் விடவே மாட்டேன்.  வயித்துக்கு நல்லது. குளுமை. உப்புமா போல ஒன்னு. பஃபேதான்  என்றாலும் கூட  வயித்துக்குத் தொந்திரவு தராத சாப்பாடுதான் என் ச்சாய்ஸ்.  நம்மவர் பூரிக்கு சொன்னார்.
நாங்க கீழே அறைக்கு வரும்போதே  முகேஷும் வந்துட்டேன்னு  செல்லில் கூப்பிட்டார்.  கங்கா வியூ ஊழியர் ஒருவர் பெட்டிகளைக் கொண்டுபோய்  வண்டியில் வச்சதும், நாமும் அறைக்  கணக்கைத் தீர்த்துட்டு, இன்னும் நாலுநாளைக்குப் பிறகு மீண்டும் ஒருநாள் இங்கேயே தங்கும் ப்ளான் இருப்பதால்  அதுக்கான புக்கிங்கை செஞ்சுக்கிட்டோம்.  இப்பக் கொடுத்ததை விட இன்னொரு ஆயிரம் கூடுதலாக் கொடுக்க வேண்டி இருந்துச்சு.  முதல் புக்கிங் மட்டும்தான் டிஸ்கவுண்ட் ரேட்டாம். ப்ச்....

 இந்தமாதிரி சமயங்களில் எல்லாம் நான் சட்னு ரூபாயை எங்கூர் டாலரில் மாத்திப் பார்ப்பேன். சின்ன எண்தான் வரும்.

எட்டு நாப்பதுக்கெல்லாம்  கிளம்பிட்டோம்.  நம்மவர் முகேஷ்கிட்டே  'வர்றதுக்கு  நாலைஞ்சு நாள் ஆகுமுன்னு வீட்டுலே சொல்லிட்டீங்கதானே?' ன்னு  குசலம் விசாரிக்கப்போக,  அவர் 'அதெல்லாம் சொல்லிட்டேன். இவ்ளோ பெரிய வண்டியில் ரெண்டே பேர்தான் போறாங்களா.... நானும் கூட வரட்டுமான்னு  மனைவி கேட்டாங்க'ன்னார்.  அந்தக் குரலில் 'நீங்க சம்மதிச்சா இப்பவே போய்  அவுங்களையும் பிக்கப் பண்ணிக்கலாம்' என்ற  தொனி இருந்தாப்லே  எனக்குப் பட்டது.  நம்மவருக்கும் அதே தோணுச்சு போல.... என்னைத் திரும்பிப் பார்த்தவர்  ஒன்னும் சொல்லாமலேயே  அந்தப்பக்கம் திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சார். இதெல்லாம் சரிப்படாது. தொழில் வேற....  குடும்பப்பயணம் வேற இல்லையோ.....  நாங்க ரெண்டு பேரும் ஒன்னும்  சொல்லலைன்னு முகேஷுக்கே புரிஞ்சுதான் இருக்கும்.  எனக்குத்தான் உள்ளுக்குள் கொஞ்சம் சங்கடமாப் போச்சு......ப்ச்
ரிஷிகேஷ்  ஊர் எல்லைக்குப் பக்கம் எங்கே பார்த்தாலும்  River Rafting அட்வெஞ்சர் ட்ரிப்ன்னு  விளம்பரமாப் போட்டு வச்சுருக்காங்க.  ஆன்மிகத் தேடலுக்கும், யோகா சென்ட்டருக்கும் வரும் கூட்டம் போலவே இதுக்கும் ஏகப்பட்ட   இளைஞர் கூட்டம்,  முக்கியமா வெளிநாடுகளில் இருந்து வருது.  Inflatable Boat Raft களைத்  தலையில் ஏத்திக்கிட்டு ஃபோர்வீல் ட்ரைவ் வண்டிகள் இங்கேயும் அங்கேயுமா பறக்குது.

பத்ரிநாத் போகும் பாதையில்தான் போறோம்.  இது தேசிய நெடுஞ்சாலைதான். மெள்ளமெள்ள  சாலை மலை மேலே ஏறிப்போகுது.  ரெண்டு பக்கமும் மலைகள் அடுக்கடுக்காய் இருக்க நடுவில் கங்கை  ரொம்ப கீ......ழே ஓடிக்கிட்டு இருக்காள். கார்களும் ட்ரக்குகளுமா ரொம்பவே பிஸியான ட்ராஃபிக்.
நமக்கு முதல் நிறுத்தம் 73 கிமீ தூரத்துலே. கண்டங்கடிநகர் போறோம். அப்படி ஒன்னு இருக்கா என்ன? இருக்கே!  அதுக்குப் பெயர்  இப்ப தேவப்ரயாக்.

108 திவ்யதேசக் கோவில்களில் ஒன்னு!  ஆழ்வார்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்காங்க.

இந்த 73 கிமீ தூரம் பயணமே  ரெண்டு மணி நேரத்துக்கு மேலே ஆகிருச்சு. வளைஞ்சு வளைஞ்சு போகும் மலைப்பாதை. அதுவும் ஏத்தம் வேற!   கடல்  மட்டத்துலே இருந்து  2265 அடி உசரமாம். வர்ற வழியிலே ரொம்ப உசரமா ஒரு சிவன் நின்னுக்கிட்டு இருந்தார்.  பக்கத்துலேயே ஒரு பெரிய சிவலிங்கம்.  யாத்திரைக்காரர்கள் தங்கும் வசதி இருக்கும் மடம் என்று கேட்டதா நினைவு.
முகேஷ் ஒரு இடத்தில் காரை நிறுத்திட்டு, இங்கிருந்து பாருங்கன்னார்.
இறங்கிப் பார்த்தா  தூரத்துலே ஒரு மலைப்பகுதி போல உசரமா இருக்கும் இடத்துக்கு ரெண்டு பக்கமிருந்தும் ரெண்டு நதி வந்து ஒன்னா சேருது. இதுதான் இரு நதிகளின் சங்கமம். ப்ரயாக். தேவர்கள் இங்கே வந்து தவம் செஞ்ச இடம் என்பதால் தேவ்ப்ரயாக்னு பெயர் வந்துருக்கு. படத்துலே என்னவோ  கலர் சரியாத் தெரியலை.  வெயில் காரணமா இருக்குமோ?
ஒன்னு வெள்ளையாவும் இன்னொன்னு  பச்சையாவும் இருக்கு.
ஒன்னு பாகீரதி இன்னொன்னு அலக்நந்தா.  பச்சையா இருப்பது பாகீரதி.  ப பா  ன்னு ஞாபகம் வச்சுக்கலாம்.   இந்த ரெண்டும் சேர்ந்தபிறகு  இந்த நதிக்கு கங்கைன்ற பெயர் இங்கேதான் லபிக்குது. இந்த ரெண்டு நதிகள் இல்லாம சரஸ்வதியும் இங்கே கலந்துக்கறாள்னு  ஐதீகம்.  மானாவில் ஒரு குகைக்குள் இருந்து  வர்றவள்  இவள்.
தன் முன்னோர்களின் அஸ்திகளைக் கரைச்சு அவர்களைக் கரையேத்த கங்கையை பூமிக்கு  வரவைக்கணுமுன்னு     பகீரதன் தவம் செஞ்ச கதை  உங்களுக்குத் தெரியுமில்லையா?  கங்கை மனம்  இரங்கி அங்கே இருந்து கிளம்பும் சமயம்.... தன்னுடைய  அதிவேகத்தால்  பூமியைக் கடந்து பாதாளத்துக்கு போயிருவேன்னு சொல்லி  நடுவில் என்னைத் தாங்கிப்பிடிச்சு தரையில் விட  ஒருத்தர் வேணுமுன்னு கேக்க,  இது என்னடா வம்பாப் போச்சு. ஏற்கெனவே பல வருசமா கடும் தவம்செஞ்சு  இவளும் வரேன்னுட்டு இப்படி வேஸ்ட்டா பாதாளத்துக்குப் போயிட்டா  என்ன செய்யறதுன்னு  திகைச்சு, கொஞ்சம் பொறு.  தாங்கறதுக்கு யாரையாவது ஏற்பாடு பண்ணபிறகு இறங்கி வான்னு மன்றாடிக் கேட்டுக்கறான்.

மறுபடியும் விஷ்ணுவை தியானிச்சு, இதுக்கொரு வழி சொல்லேன்னு  கேட்க, அவரும் 'இதுக்கெல்லாம் சரியான ஆள் என் மச்சான்தான். அவராண்டை கேளு'ன்னார். திரும்ப கடுந்தவம் சிவனை நினைச்சு ஆரம்பம் ஆச்சு.

நாஞ்சொல்லலை.... சிவன் பார்க்கத்தான் புலித்தோலும் சுடுகாட்டுச் சாம்பலுமா பயங்கரமா இருப்பாரே தவிர  ரொம்பவே இளகிய மனசுக்காரர். யாராவது தன்னை நினைச்சாலே போதும்.... ஓடி வந்து காப்பாத்துவார். இல்லாமலா... யாரும் வேணான்னு பயந்த  ஆலகால விஷத்தை,  மற்ற எல்லோருடைய நன்மைக்காக நான் முழுங்கறேன்னு முன்வந்து முழுங்கி வச்சது....

இங்கேயோ தவம் ரொம்பக் கடினமா இருக்கு.  சுத்திவர தீயைக் கொளுத்தி வச்சுக்கிட்டு,  கருங்கல் மேலே ஒத்தைக் கட்டை விரலை மட்டும் ஊன்றிக்கிட்டெல்லாம்  தவம் செய்வாங்களாமே!  ஐயோ....

சிவன் தோன்றினார். ' கவலைப்படாதே.... கங்கை  இறங்கட்டும். என் தலையால் தாங்கிக்கறேன். பிரச்சனை இல்லை'ன்னார்.  அதுவரை உக்கார்ந்துருந்த  காளை வாகனத்துலே இருந்து குதிச்சு  இறங்கி  ரெண்டு கால்களையும்  கொஞ்சம் திடமாப் பரத்தி வச்சுக்கிட்டு  ரெடின்னார்.

 கங்கைக்கு  கொஞ்சம் (!) கர்வம் உண்டு. இவள்தான் தேவலோகத்துலே ஓடும் ஆகாய கங்கையாச்சே!  தாங்கப்போறது  முப்பெரும் தெய்வங்களில் ஒன்னான சிவன் என்றதுமே  இன்னும் கொஞ்சம் தன் பலத்தையும் வேகத்தையும்  அதிகரிச்சுக்கிட்டுச் சடார்னு இறங்கினாள்.

இதையெல்லாம்  பார்வதியும்,  அவுங்க  காளை  ரிஷபரும், பகீரதனும், இன்னும் தேவர்கள் முனிவர்கள் சிலரும்  அண்ணாந்து பார்த்துக்கிட்டு நிக்கறாங்க.

சடாமுடிக்குள் புகுந்த கங்கை வழிஞ்சு  முகத்தின் வழியா வெளியே வரவேணாமோ?  ஊஹூம்.... அதுதான் இல்லை.  மேலோகத்துலே இருந்து  தண்ணீர்  பெரிய நீர்வீழ்ச்சியாக் கொட்டிக்கிட்டு இருக்கு. ஆனால் தண்ணி?
சடைமுடிக்குள்ளே சிக்கிக்கிட்டு  மூச்சுத் திணறுது. வெளியேற வழி இல்லை. 'அச்சச்சோ.... இவர் சாதாரணப்பட்டவர் இல்லை  போல.... இப்படி மாட்டிக்கிட்டேனே' ன்னு   பரிதவிச்சுப்போய் சிவனாண்டை மனப்பூர்வமா மன்னிப்பு கேக்கறாள்.  நாஞ்சொல்லலை.... சிவனுக்கு இளகுன மனசுன்னு... :-)

 போனாப் போகுதுன்னு  மன்னிச்சுட்டேன். இப்பப்பாருன்னு  சடை முடியைக் கொஞ்சூண்டு ஓரமா  விலக்குனதும்....கங்கைத் தண்ணீர் மெள்ள ஒழுகிவெளியே வந்து தரையில் விழுது. இப்படியே அங்கங்கே சின்னச்சின்னதா  சடையை விலக்கினதும் நீர்த்தாரை  மெள்ள மெள்ள இறங்கி  ஒவ்வொரு நதியா ஒவ்வொரு திசையிலே  ஓட ஆரம்பிச்சது.  அதுலே  வந்ததுதான் இந்த பாகீரதியும் அலக்நந்தாவும்.

பகீரதன் தவத்தால் வந்த காரணம் பாகீரதின்னு பெயர். அப்ப அலக்நந்தா?  ஙே......  நாமே  இதுக்கொரு காரணத்தை உண்டாக்கலாமுன்னு....  கற்பனை ஓடமாட்டேங்குதே... :-(  (குளிரில் முடங்கிப்போச்!)

பெட்டிக்கடைகள் போல சாலை(!)யின் ஒருபக்கம் வரிசை கட்டி இருக்க, எதிர்ப்பக்கம் ஏராளமான வண்டிகள் நிக்குமிடத்தில்  நம்மை இறக்கி விட்ட முகேஷ், எதிர்வரிசை யில் கைகாட்டி அது வழியாப் போனா கோவில் வரும். தரிசனம் பண்ணிக்கிட்டு இதே இடத்துக்கு வந்துருங்கன்னார்.

நாங்களும் மக்கள் சிலர்  போகும் பாதையில் நுழைஞ்சோம்.  அங்கங்கே கடைகளும் சின்னச்சின்ன வீடுகளுமா இருக்கும் பகுதி. பாதை கொஞ்சம் கீழிறங்கி வளைஞ்சு போனதும் குறுகலான  தெரு ஒன்னு. ரெண்டு பக்கமும் கடைகளே!  ஏற்கெனவே சின்னதா இருக்கும் தெருவில் ரெண்டு பக்கமும்  பைக்குகளை வேற நிறுத்தி வச்சுருக்காங்க.
இதையெல்லாம்கடந்து போய்க்கிட்டு இருக்கும்போதே பாதை போய் சேர்ந்தது ஒரு கம்பிப் பாலத்தாண்டை. கீழே நதி... சுழிச்சோடுது!


கொஞ்ச தூரத்தில் ரெண்டு நதிகள் சேருமிடமும் அதையொட்டியே கொஞ்சம் உயரத்தில் நிறையப் படிகளும், ஆத்தங்கரை மண்டபம், கோவில் கோபுரமாட்டம் ஒன்னும் தெரிஞ்சதும் அதுதான் கோவில் போலன்னு   பாலத்துமேலே நின்னு ரெண்டு க்ளிக்ஸ் எடுத்துக்கிட்டோம்.
பாலம் எங்களுக்கும்தான்னு  மாடுகன்னுகள் வேற  போய் வந்துக்கிட்டு இருக்குதுகள்.  கூடவே ஒட்டிக்கிட்டு நாங்களும் போனோம்.  அந்தாண்டையும் குறுகலான தெரு ஒன்னு போய்க்கிட்டு இருக்கு.   ரெண்டு பக்கமும் நெரிசலாக்கட்டடங்களும் கடைகளும்தான்.  இரும்புப் பாத்திர பண்டமெல்லாம் ஜோர். எனக்கும் கூட நல்லதா ஒரு வாணலி இருந்தால் தேவலை. கூடவே  ஒரு அரிவாளும் :-)
அஞ்சு நிமிச நடைக்கப்புறம்  நமக்கிடதுபக்கம் திடீர்னு ஒரு படிக்கட்டு வரிசை. மாடியில் என்ன இருக்கோன்னு தலையை உசத்தினால்.... அதுபாட்டுக்கு மேலே மேலே போய்க்கிட்டே இருக்கு.  மேலேறிப் போனால்தான் கோவிலாம்!
திக்னு ஆகிப்போச்சு எனக்கு.... நூறுபடிகளுக்கு மேல் இருக்கணும்.... வந்ததே இந்தக் கோவிலுக்காகத்தானே.... இப்ப பயந்தால் ஆகுமோ? ஏறு... மெள்ள மெள்ள ஏறுன்னு  கால்களுக்குக் கட்டளை இட்டேன்.  (இதுவே  என் கட்டளை.  என்  கட்டளையே சாஸனம்!   அப்போ  இந்த ஃபேமஸ் டயலாக் தெரியாது. தெரிஞ்சுருந்தால் சொல்லி இருப்பேன்....     ஹிஹி...) 
கடைசி பத்துப்பதினைஞ்சு  படிகள் இருக்கும்போது  தலைக்கு மேலே ஒரு  காண்டாமணி தொங்குது. எனக்கு எட்டாதேன்னு நம்மவரை மணியை அடிக்கச் சொன்னேன்.  பெருமாளே.... துளசியும் கோபாலும் ஆஜர்  ஹை!

பாக்கிப்படிகள் ஏறி கோவில் வளாகத்துக்குள்  போறோம்.  கண்ணுக்கு நேரா கொஞ்ச தூரத்துலே   மண்டபம்   போல  இருக்குமிடத்தில் ஒரு சிவலிங்கம். இடது கைப் பக்கம் அஞ்சு படி ஏறிப்போகும் உயரமான மேடையில் கோவில் .
படிகள்  ஏறும்போதே  கவனிக்கிறமாதிரி  படம் எடுக்கத்தடைன்னு  போட்டுருந்தது. கருவறையில்தானே எடுக்கக்கூடாது..... பொதுவா  நம்ம பக்கம்  எல்லாக் கோவில்களிலும் சொல்றதுதான்.  வடக்கே அப்படி இல்லைன்னாலும்.....   நம்ம ஆழ்வார்கள்  வந்து பாடியதால் நம்ம பக்க வழக்கம் வந்துருச்சு போல :-)

உள்ளே போனால்... சின்னதா (முன் மண்டபமுன்னு சொல்ல முடியாது) ஒரு ஹால்.  அந்தாண்டை கருவறையில் கருப்பு மேனியனா, பளபளன்னு  பெரிய உருவத்துலே   நின்ற திருக்கோலத்தில் இருக்கார் புருஷோத்தமர்.  புருஷர்களில் உத்தமர்,  ராமர் அல்லாது வேற யார்? (ஒரே மனைவி!)  கருப்புப் பளிங்குக்கல் சிலை!  அயோத்தியாவில் இருந்தே கொண்டு வந்து இங்கே பிரதிஷ்டை பண்ணி இருக்காங்களாமே!  பதினைஞ்சடி  உயரம்னு பட்டர் சொன்னார். (ரெண்டால் பெருக்கிட்டார் போல!) நம்ம திருநின்றவூர் ராமர் எட்டடி. ஏறக்கொறைய அதே உயரமோன்னு எனக்கொரு தோணல்.
(கூகுளார் அருளிய படம்: நம் நன்றிகள்!)

அப்புறமும் மனசு கேக்காம இங்கே அங்கேன்னு தேடி ஓடி (எல்லாம் வலையில்தான்) தேவ்ப்ரயாக் வலைப்பக்கத்தில் மூலவர் 6  அடின்னு  வாசிச்சதும்   உண்மையிலுமே திருப்தி ஆச்சுன்றது நிஜம்.

கனகம்பீரமா நிற்கும் மூலவர் பச்சை வண்ண உடுப்பில் ஜொலிக்கிறார். அட! நம்ம பச்சை.... ஆஹான்னு இருந்துச்சு. ஆனால் நம்ம பக்கத்துத் துணி கிடையாது. வடக்கே உள்ள ஜிலுஜிலு. எனக்காகப் பச்சை வண்ணம் தரித்தீரோ பச்சை மாமலை போல் மேனியாரே.....   அதெல்லாம் ஒன்னுமில்லையாக்கும். இன்றைக்கு புதன். அதுதான் பச்சை! அப்ப மற்ற நாட்களில்?

ஞாயிறு - சிகப்பு, திங்கள்- வெள்ளை, செவ்வாய் - சிகப்பு, புதன் - பச்சை, வியாழன் - மஞ்சள், வெள்ளி - வெள்ளை, சனி - கருப்பு.  ஓஹோ.... நவகிரக வரிசைப்படியா? பேஷ் பேஷ்!

இவருக்கு வேற ரெண்டு பெயர்களும் இருக்கு. நீலமேகப்பெருமாள், வேணிமாதவன் இப்படி தெற்கும்  வடக்குமா  வச்சுருக்காங்க. தாயார் பெயர் புண்டரீகவல்லி.

எட்டாம் நூற்றாண்டு கோவில்னு சரித்திரம் சொல்லுது. ஆதி சங்கரர் கட்டுன கோவில்னு சொல்றாங்க. அதே காலக்கட்டம்தானே  நம்ம பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை, குலசேகரர் எல்லாம்..... ......

 அதிலும்  நம்ம  பெரியாழ்வார்  இந்த  ராமனைப் பாடிப்பாடிப் பத்து பாசுரங்களால் மங்களாசாஸனம் செஞ்சுருக்காரே!

தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்தஎம் தாச ரதிபோய்
எங்கும் தன்புக ழாவிருந்து அரசாண்ட எம்புரு டோத்தம னிருக்கை
கங்கை கங்கையென்ற வாசகத் தாலே கடுவினை களைந்திட கிற்கும்
கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற கண்டமென் னும்கடி நகரே.

’’மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால் மூன்றெழுத்துஆக்கி மூன்றெழுத்தை
ஏன்று கொண்டு இருப்போர்க்கு இரக்கம்நன்குடைய எம்புருடோத்தமன் இருக்கை
மூன்றடி நிமிர்ந்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுருவானோன்
கான் தடம்பொழில் சூழ் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடிநகரே’’

ஆர்வம் இருப்பவர்கள்  பாசுரம் 391 முதல் 400 வரை  பாருங்களேன்.

எனக்கு என்ன தோணுதுன்னா...... புருஷோத்தமர் சிலை  ப்ராச்சீனா இருக்கணும்.  அப்போ வடநாட்டுக்கு  வந்த ஆதி சங்கரர் இங்கேயும் வந்து  இங்கே இந்தப் பகுதியில் ஆட்சியில்  இருந்த  மன்னர் மூலம் கோவிலைக் கட்டக் காரணமா இருந்துருக்கலாம்.  எங்கே போனாலும் ஒரு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்வது ஆதிசங்கரர் வழக்கம் இல்லையோ?  அப்படி ஒன்னு இங்கே இருக்கறாப்போலத் தெரியலையேன்னு.....

இதுக்குத்தான்  மனசுக்குள்ளே அங்கே இங்கே எப்பவோ வாசிச்சதையெல்லாம்  அடைச்சு வச்சுக்கக்கூடாதுன்னு.....   (அதொன்னுமில்லை....மைண்ட் வாய்ஸ்தான்!)


தீபாராதனை காமிச்சார் பட்டர்.  இங்கேயும்  நமக்கு ஏகாந்த தரிசனம்தான். கிழக்கு பார்த்து நிக்கும் புருஷோத்தமருக்கு நாலு கைகள் இருக்கு. ஆனால் ராமர் என்றதுக்காக வெள்ளி வில் ஒன்னு கையில் கொடுத்துருக்காங்க. சாமி கும்பிட்டவுடன் நம்மவர் வெளியில் போயிட்டார். நாந்தான்  சுத்திமுத்திக் கண்ணை ஓட்டிக்கிட்டு  அங்கிருக்கும் மற்ற சமாச்சாரங்களை மனசுக்குள் எடுத்துவச்சுக்க்கிட்டு இருக்கும்போது ஒரு பெரிய கூட்டமா கிட்டத்தட்ட இருவது  ஆட்கள் உள்ளே வந்து,  இருக்கும் கொஞ்சநஞ்ச வெளிச்சத்தையும்  மறைச்சுக்கிட்டாங்க. பெரிய குழு!  நான் உடனே இன்னொரு கும்பிடு சாமிக்குப் போட்டுட்டு வெளியே வந்துட்டேன்.

வெளியே வந்து  கெமெராவை எடுத்து நம்ம வேலையை ஆரம்பிச்சேன்.  கருவறை வாசலுக்கு நேரெதிரா பெரிய திருவடி இருக்கார். அவருக்குச் சின்னதா ஒரு கூம்பு கோபுரத்தோடு சந்நிதி. உள்ளே தங்க நிறத்தில் இருக்கார் கருட்ஜி.  ஆரஞ்சு ட்ரெஸ் கூட உண்டு.  முகம் பார்த்தால்..... எனெக்கென்னமோ  புத்தர் மாதிரித் தெரிஞ்சது. காது வளர்த்துருக்கோ? மூக்கு  நீண்டு இல்லையே.....   ஙே....
கருவறை கோபுரம், நம்ம பூரி ஜகந்நாத்  கோபுர ஸ்டைலில் (Nagara style) இருக்கு.  இந்தக் கோவிலுமே 1803 ஆம் ஆண்டு  நிலநடுக்கத்தில் இடிஞ்சு விழுந்துட்டதாமே! அதுக்குப்பிறகு திரும்பக் கட்டுனதுதானாம். ராஜா தௌலத் ராவ் ஸிந்தியா கோவிலைக் கட்டிக் கொடுத்தாராம்.  (நிலநடுக்கமுன்னதும் என் நெஞ்சு நடுங்கிப்போயிருது. நானும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட  ஊர்க்காரி என்பதால்...ப்ச்....)4715

கோவில் வெளிச்சுவரை ஒட்டுனமாதிரி ஒரு கட்டடம். அதுலே   பளிங்குக்  கல்வெட்டு. எல்லாம் ஹிந்தி எழுத்துகள்தான்.  நின்னு வாசிக்க நேரம் இல்லை.  எனக்குக் குறைஞ்சது ஒரு மாசமாவது வேணும்:-)

வெளிப்ரகாரத்தில் அங்கங்கே இன்னும் சில சந்நிதிகள். மொத்தமே ஒரே ஒரு பிரகாரம்தான். கும்பிட்டபடியே வலம் வந்தால் ஆச்சு.  வலத்தின் ஆரம்பத்தில்  அன்னபூரணி!

கருவறைக்குப் பின்னம்பக்கம்  மேடான ஒரு இடத்தில் ஆலமரம் ஒன்னு விழுதுவிட்டு நிக்குது.  பரந்து விரியாமல் கொஞ்சம் ஒல்லிமரம்தான்.
ஆனால்...    இந்த யுகம் முடிஞ்சு   எல்லாம் அழிஞ்சு, மீண்டும்  புது யுகம் ஆரம்பிக்கும்போது இந்தமரம் மட்டும் அழியாமல் இருக்குமாம்.  பெருமாள் இந்த ஆலமரத்து இலையில்தான்  குழந்தையாகத் தோன்றுவாராம்!  (நாஞ்சொல்லலைப்பா... மத்ஸ்ய புராணம் சொல்லுதாம்! )

பதினெட்டு புராணங்களில் நாலு புராணங்களில்  ( பத்ம, மத்ஸ்ய, கூர்ம, அக்னி புராணங்கள்) இந்தக் கோவிலைப் பத்தி வந்துருக்காம். தேவேந்திரன் இந்த இடத்தைக் காக்கிறான். முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கே வாசம் செய்யறாங்கன்னும் கேள்வி. ஆலமரத்துக்குப்பக்கம் இருக்கும் குகைக்கு நாங்க போகலை.
வலத்தைத் தொடந்தால் ஆஞ்சிக்கு ஒரு சந்நிதி. வட  இந்திய வழக்கப்படி செந்தூரம் பூசி வச்சுருக்காங்க. தனியா சிலையா இல்லாம புடைப்புச்  சிற்பமா இருக்கார். இவரைத் தாண்டி வந்தால்....  தரையில் இப்படி  யாரோ பாய்ஞ்சு வந்தமாதிரி. ஹைய்யோ.... நல்ல ச்சான்ஸ் .... கோட்டை விட்டுட்டாங்க பாருங்க.  கொஞ்சம் சந்தனம் குங்குமம் பூசி, ஆஞ்சியின் காலடின்னு  எழுதி வச்சுட்டு, பக்கத்தில் ஒரு 'தான்பாத்ர' (எல்லாம் நம்ம உண்டியல்தான்)  வச்சுருக்கலாம்!
அடுத்து கோவில் வளாகத்துக்குள்  நாம்  நுழைஞ்சதுமே கண்ணுக்கு நேராத் தெரிஞ்ச சிவலிங்கம். ஒரு பெரிய கல்மேடையில் இருக்கு. இந்தப் பாறைக்கு   ஸ்ரீ ரகுநாத் கத்தா னு(Shri Raghunath  Gadhdha) பெயரெழுதி வச்சுருக்காங்க.
ராமர்  வந்து தவம் செய்த இடம். இந்தக் கற்பலகை மேலே உக்கார்ந்து, சிவனைத் தியானம் செய்து  தவம் இருந்தாராம். எதுக்கு?  ராவணனைக் கொன்னதால்  ஏற்பட்ட பாவத்தைப் போக்க! ப்ரம்மஹத்தி தோஷம் பிடிச்சுருக்கக்கூடாதே....  ராவணன்  ஒரு ப்ராமணன் இல்லையோ!
இதே இடத்தில் தசரதரும் ஒரு காலத்தில்  வந்து தவம் செஞ்சுருக்காராம். அவருக்கு என்ன பாவம்னு தெரியலை....
இந்தக் கோவில் இருக்குமிடத்தைச் சுத்தியே  இன்னும்  மூணு  மலைகள் இருக்குது.  ஹிமாச்சல் மலைத்தொடர்களில்தான்  தசரதாஞ்சல், நரசிம்ஹாஞ்சல், கிரிதாஞ்சல் னு இந்த  மூணும் வருது.

அபிஷேகப்ரியரான  சிவனுக்கு தலையில் கங்கை சொட்டும்  குடம் ஒரு ஸ்டேண்டுலே!  எதிரில் ஒரு நந்தி,  இன்னும் மூணு குட்டிச்சிற்பங்கள். மூணில் ஒன்னு  விஸ்வகர்மாவோ?  மாடத்தில் சஞ்சீவி மலையைக் கையில்  ஏந்தி நிற்கும் குட்டி ஆஞ்சின்னு ஒரு சந்நிதி.
ஸ்ரீ ஆதி குருன்னு எழுதி ஆதிசங்கரர் சந்நிதி. பின்னால் ஒரு லலிதாம்பிகை படமும், ஸ்ரீராமானுஜர் படமும்!  இந்த சந்நிதிகளில் எல்லாம் ஊமத்தங்காய் போல ஒன்னு தட்டுலே  சாமிக்கு முன்னால் சில பூக்களோடு.   ஊமத்தங்காய் மாதிரிதான் முள்ளு முள்ளா இருக்கு.  இல்லே வேறெதாவுதா?  எதுக்கு இதை வச்சுருக்காங்க? ....  ஙே....  தெரிஞ்சவங்க சொல்லலாம்.
ஒரு ஏழு படிகளேறிப்போனால்  நரஸிங் மந்திர்.  அடடா.... நம்ம நரசிம்மராச்சேன்னு போய்ப் பார்த்தால்  நரசிம்ஹர்தான். ஆனால் சந்நிதி இருக்கும் அழகைப் பாருங்க.... பக்கத்துலே புள்ளையாரா என்ன?
இன்னும் கொஞ்சம் நல்லா வச்சுருக்கக்கூடாதான்னு  புலம்பிக்கிட்டே வெளி முற்றத்துக்கு வந்தால்  ஒரு தமிழ்க்காரர்,  நம்ம  ரகுநாத்தை தரிசிக்க வந்துருக்கார். நெய்வேலியாம். மகன்   ப்ரதீஷ் குமார்  செல்ஃபோனில் படம் எடுத்துக்கிட்டு இருந்ததைப் பார்த்துட்டு நாம் சும்மா இருக்கலாமா?  நம்ம செல்லைக் கொடுத்து  நம்மை  க்ளிக்கச் சொன்னோம் :-) சின்னப் பசங்க இப்பெல்லாம் செல்ஃபோனில் வெளுத்துக் கட்டுதுங்கப்பா!
இன்னொருக்கா  நீலமேகப்பெருமாளை ஸேவிச்சுக்கலாமுன்னு  பார்த்தால்.... பட்டர் கதவைப் பூட்டிக்கிட்டு படி இறங்கிப்போறார். கோவில் மூடியாச்சா என்ன?  இன்னும் பனிரெண்டாகலையே.....  ப்ச்....போகட்டும் வேறெதாவது  'அவசர வேலை'யாக இருக்கலாம்....  வெளியில் இருந்தே  பெருமாளுக்கும், பெரிய திருவடிக்கும் கும்பிடு போட்டுட்டு வளாகத்தைவிட்டு வெளியே வந்தோம்.
கோடை காலத்தில் காலை 5 முதல்  பகல் 12 வரையும், மாலை 5 முதல்9 வரையும், குளிர்காலத்தில்  காலை 6 முதல் 12, மாலை 4 முதல் 8 வரையும் கோவில் திறந்திருக்கும்.

தொடரும்......... :-)


20 comments:

said...

தசரதன் பெற்ற சாபம் [பிரம்மகத்தி தோஷம் ]===

சிரவண குமாரன் , இராமாயணத்தில் வரும் ஒரு கதாபாத்திரம். பெற்றோர் சேவைக்கு ஒரு உதாரணமாக காட்டப்படும் அற்புத சிறுவன் .

இவர் கண்பார்வையற்ற தம்பதிகளுக்கு பிறந்தவர். இவர்களின் முதிர்ந்த வயதில் இருவருக்கும் வாழ்க்கை ஆதாரமாக சிரவண குமாரன் விளங்க வேண்டியதாயிற்று.

இவர் காவடி எடுத்துச்செல்வது போல் தம் பெற்றோரை இரு பக்கமும ஒரு தராசில் போகும் இடமெல்லாம் சுமந்து செல்வார். ஒருமுறை காடு ஒன்றின் மத்தியில் சென்றுகொண்டிருக்கும் போது தம் பெற்றோர் அவனை தாகம் காரணமாக குடிநீர் கொண்டுவர சொன்னார். நீரை ஒரு பெட்டகத்தில் எடுக்கும் போது துல்லிய செவியுணர்வு கொண்ட தசரத சக்கிரவர்த்தி அங்கு வேட்டையாட வந்திருந்தார்.

நீர் பெட்டகத்தில் நிறையும் ஒலி கேட்டு மான் ஒன்று நீர் அருந்த வந்திருக்கும் என்று நினைத்து அந்த திக்கை நோக்கி அம்பெய்தார். வீழ்த்திய பிராணி ஒரு சிறுவன் என்பதை அறிந்த மன்னன அதிர்ச்சியுற்று அவனிடமே அப்பாவச்செயலுக்கு பிராயச்சித்தம் கேட்டார். சிறுவன் அப்போதும் தன்னை பற்றி வருந்தாமல் தம் பெற்றோர் தாகம் தீர்க்குமாறு மன்னனிடம் வேண்டினான்.

நீர் பெட்டகத்தை சிறுவனின் பெற்றோரிடம் கொண்டு சென்ற தசரதன் தன் மகன் அல்ல என்று கூட அறியாது நீரை பெற்றனர் அவனின் பெற்றோர். தசரதன் நிகழ்ந்த சம்பவத்தை பற்றி அவர்களிடம் சொல்ல மிகவும் வேதனையுற்ற அத்தம்பதிகள் தசரதனும் அவ்வாறே தன் மக்களிடம் இருந்து பிரிந்து உயிர் விடும் தருணம் வரும் என்று சாபம் இட்டனர்.

தம் மகனை கொன்ற கொலைகாரனிடம் இருந்து பெற்ற நீரை அருந்த மறுத்து அக்கணமே உயிர் துறந்தனர். இச்சம்பவம் நடந்த இடம் இன்று சிரவணதீ என்று அழைக்கபடுகிறது. உத்தர பிரதேசத்தில் காசிபூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 30 கி.மீ அருகில் உள்ளது இவ்விடம்.

தசரதன் இராமனிடம் இருந்து பிரிந்து சோகத்தில் மாள நேரிடவைத்த சாபம் இது என்று இராமாயணம் கூறுகிறது.

சிரவண குமாரன் தம் உயிர் நீத்த அந்த நிமிடத்திலும் தம் பெற்றோரின் சேவையை மறக்கவில்லை, அதனை தன் உயிரினும் மேலாக கொண்டிருந்தார் என்பதையும் தருமத்தின் போக்கு என்ன என்பதையும் இதன் மூலமாக நாம் உணரலாம்

said...


வாங்க வீரமணி.


தங்கள் பதிலுக்கும், நேரம் செலவு செய்து எழுதியதற்கும் மனம் நிறைந்த நன்றிகள். ச்ரவணகுமாரனை எப்படி மறந்துருந்தேன்னு தெரியலை !!!

said...

அருமை நன்றி தொடர்கிறேன்.

said...

உங்கள் இடுகையின்மூலம் கண்டம் என்னும் கடிநகர் சேவித்தாயிற்று. அலக்னந்தா, பாகீரதி இரண்டு நதிகளும் சேரும் இடம் பார்க்கவே பரவசம். அங்கே நீராட முடியாத அளவு வேகமாக இருக்குமா?

தொடர்கிறேன்.

said...

அந்த டிரைவரின் வேண்டுகோளுக்கு நீங்கள் செய்ததுதான் சரி. இது போன்ற வேண்டுகோள்களை ஏற்க வேண்டிய அவசியமில்லை.

அலக்நந்தாவுக்கு ஒரு கதையை உங்களால உருவாக்க முடியலையா? என்ன ஒரு சோதனை. டீச்சராலயே முடியலைன்னா யாரால முடியும்? இப்பிடி யோசிச்சுப் பாப்போம். ஓடி வந்த கங்கை நதி ஒரு ஒடத்தில் பெரிய பள்ளத்தில் விழுந்துருச்சு. எந்திரிச்சு மேல வர முடியல. அப்போ நந்தாங்குற ரிஷி அலக்கா தூக்கி எடுத்து மறுபடியும் ஓட விட்டதால அந்தப் பேரே அமைஞ்சிருச்சு.

ரெண்டு ஆறுகளோட நிறமும் வெவ்வேறா இருக்குறது போட்டோல அழகாத் தெரியுது.

படியேறும் வழியில் கோபால் சார் மணி அடிக்கிறதை ஒருத்தர் ரொம்ப ஆர்வத்தோடு பாத்துக்கிட்டே இருக்காரே. இதுக்கு முன்னாடி மணியைப் பாத்ததேயில்ல போல.

ஆழ்வார்கள் நேரில் போயிருக்கனும்னு இல்லை. மானச மங்களாசாசனம் பண்ணியிருக்கலாம்னும் எங்கயோ படிச்ச நினைவு. இது அருணகிரிக்குமே சொல்வாங்க.

said...

கூடவே சுற்றி வந்து பார்த்துக் கொண்டேன்.

said...

இவ்வாறான ஒரு கோயிலைக் கண்டு அதிசயித்தேன். நன்றி.

said...

இத்தனை தூரம்வந்து மங்களா சாசனம் செய்ய ஆழவார்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் நீங்களும் சிரமப் பட்டு போய்ப் பார்க்கிறீர்கள் ஆனால் அடுத்திருந்த குருவாயூருக்கு எந்த ஆழ்வாரும் ஏன் வரவில்லை.

said...

vazallam pol pala idangkaLil sirithtuk kondey padithen. arumai Tulsi :)

said...

ஜி.எம்.பி சார்... உங்கள் பின்னூட்டம் யோசிக்க வைத்தது. மலை'நாட்டுத் திருப்பதி என்று 14 உண்டு. அங்கெல்லாம் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்திருக்கின்றனர். இந்த 14ஐத் தவிர, நிறைய புராதான கோவில்களும் இருக்கலாம். அங்கெல்லாம் அவர்கள் சென்று இறையைப் பாடியதில்லை. காரணம் யாரே அறிவர்? இராமானுசர், 1000 ஆண்டுகளுக்கு முன்பு, கோவில்களைத் திருத்திப் பணி செய்தார் (என்ன என்ன வழிபாடு முறை, என்ன என்ன மாதிரி விழாக்கள் என்று). அவரையும், திருவனந்தபுர கோவில் வழிபாட்டு முறையைத் திருத்த 'இறை' விடாமல், அங்கு நம்பூதிரிகளின் முறையிலேயே வழிபாடு நடைபெறட்டும் என்று ஆக்ஞையிட்டதாம் (ராமானுசர் திருவனந்தபுரத்தில் துயிலும்போது மறு'நாள் திருக்குறுகூர் (?), நெல்லையில் எழுந்தாராம்)

திருமங்கையாழ்வார், முக்திநாத் கோவில் மட்டும் முயற்சி செய்தும் அடைய முடியாமல், தூரத்திலிருந்தே மானசீகமாக மங்களா சாசனம் செய்ததாகப் படித்திருக்கிறேன். மற்ற எல்லாத் தலங்களுக்கும் நேரில் தரிசனம் செய்ததாகத்தான் படித்திருக்கிறேன்.

said...

அருமை டீச்சர், திவ்ய தேசம் போக முடியவில்லை என்றாலும் உங்கள் பதிவுகள் மூலமாய் கதையும் படித்துப் படமும் பார்க்கின்றோம். நன்றி. பக்தி எங்களுக்கு,புண்ணியம் உங்களுக்கு.

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

அடுத்த பதிவில் இருக்கும் படத்தைப் பாருங்க. நீராட வசதி உண்டு. கம்பித் தடுப்புக்குள்ளே இருந்து நீராடலாம்.

said...

வாங்க ஜிரா.

கதை அருமை. அஞ்சாறுமுறை சொல்லிக்கிட்டே இருந்தால்... அப்படியே நிலைச்சுரும். அதுவும் ரகசியமுன்னு சொன்னால் போதும். உடனே பரவிடாதா? :-)

மானசிகமாத்தான் முக்திநாத்தை நினைச்சு சாளக்ராமத்தில் இருந்து பாடி இருக்கார் ஆழ்வார். அப்போ அந்தக் காலங்களில் மலை நாடுகளில் பயணம் ரொம்பவே கஷ்டம்தான்.

நடந்து நடந்தேதான் போகணும்.

said...

வாங்க ஸ்ரீராம்.

இன்னும் ஒரு பதிவு இதே இடத்துக்கு உண்டு. அதையும் சுத்திப் பார்த்துருங்க :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

கேரளாவிலேயே பதிமூணு திவ்ய தேசங்களைத் தரிசனம் செஞ்சு பாடி இருக்காங்களே! குருவாயூர் அம்பலம், ஆழ்வார்கள் காலக் கட்டத்துக்குப்பின் உருவானதாக இருக்கணும்.

ஒருவேளை அவுங்க டூர் ஏஜென்ட் தகவல் சொல்லலையோ? :-)

said...

வாங்க தேனே.

நன்றீஸ்ப்பா !

said...

வாங்க பித்தனின் வாக்கு.

உங்களுக்கெல்லாம் இன்னும் வயசு இருக்கு. திவ்ய தேசம் தரிசிக்க அவன் ஏற்பாடு செய்வான். வரிசையில் இருக்கீங்க :-)

said...

அட அங்கேயும் ஒரு நெய்வேலி ஆளு! :)

தொடர்கிறேன்.