Tuesday, January 20, 2015

ஒரு அர்பன் விவசாயியின் அனுபவங்கள்! நன்றி தோழியே!


முதலில்  'நானும் ஓரு அர்பன் விவசாயிதான்' என்று ஒரு சமயம் சொன்ன  தோழிக்கு  முதல்மரியாதை. எனக்கென்னவோ  அவுங்க வாயில் இருந்து உதிர்ந்த முத்துக்கள் ரொம்பவே பிடிச்சுப்போச்சு! சட்னு பொறுக்கி எடுத்துக்கிட்டேன்.:-)   குச் காம் கோ ஆயேகா!!!


தோழி மாடித்தோட்டம் வச்சு அமர்க்களப்படுத்திக்கிட்டு இருக்காங்க. இந்தப்பயணத்தில் அங்கேயும் போய் தலையைக் காமிச்சுட்டு வந்தேன். சாம்பிள் படம் ஒன்னு இங்கே. பாக்கியை நம்ம பயணப்பதிவில் பார்த்துக்கலாம்!

 நிற்க....

நம்ம வீட்டுலே பச்சை வீடு போட்டது உங்களுக்குச் சொல்லி இருக்கேன்.  அப்பப் பார்க்காதவர்கள் இப்ப இங்கே போய் பார்த்துக்கலாம்.

டிசம்பர்   துவங்கி ஒரு பத்து நாளானபிறகு,  ஐயோ.... நம்ம சம்மரில் பத்து நாள் இப்படி குளிரும் காத்துமா வீணாகிப் போச்சேன்னு  கவலைப்பட்டக் கையோடு, க்ரீன் ஹவுஸ்ஸில் இருந்த  கருவேப்பிலை, வாழைமரம், கொய்யாச் செடிகளை வெளியில் சூரிய வெளிச்சத்துக்காகக் கொண்டு வந்து வச்சோம்.  வாழையில்  ஒருவிதமான  மாவுப்பூச்சின்னு  சொல்லும்  ஒயிட் ஃப்ளைஸ் ஒட்டிப்பிடிச்சு இருந்துச்சு.

நம்ம மாடித்தோட்டத் தோழிதான்  அவுங்க வீட்டுச் செடிகளுக்கு பெப்ஸி தெளிச்சேன்னு  சொன்னாங்க. நானும் இங்கே பெப்ஸி கிடைக்குதானு தேடிப்பார்த்து  வாங்கியாந்து ஒரே ஒருமுறை வாழைக்கு  ஸ்ப்ரே  செஞ்சேன்.  பூச்சீஸ் எல்லாம் கான்! போயே போச்!!!!!

கொஞ்சநாளைக்கு முன் டாய்லெட் சுத்தம் செய்ய  'இதை'ப் பயன்படுத்தலாமுன்னு சேதி வாசிச்ச நினைவு. இன்னும் சோதனை பண்ணிப் பார்க்கலை. ஆனா.....பசங்களுக்குப் பேதி மருந்து கொடுத்து வயித்துப்புழுக்கள் வெளியே வரவச்ச காலத்தை நினைச்சால்.... (அதுகளும் அந்த மருந்தைக்குடிக்கப் படாதபாடு படுத்தும். நான் எவ்ளோ  படுத்தி இருக்கேன் என் சின்னப்புள்ள வாழ்க்கையில்!)  பேசாம 'இதை'யே  வாரம் ஒருக்காக் கொடுத்துப்பிடலாம். அதுகளும் ஜாலியாக் குடிச்சுக்கும்:-)

முக்கிய செடிகள் எல்லாம் இப்போ வெளியில்தான் கொஞ்சநாள் இருக்கப்போகுது. அவுங்க இடத்தை வேஸ்ட் செய்யாமல்   வேற எதாவது   வச்சுப் பார்க்கலாமான்னு நினைச்சப்பதான் காய்கறி தோட்டம் போட்டுக்கலாம் என்ற ஐடியா நம்ம கோபாலுக்கு வந்துச்சு. (இப்படித்தான் சிலசமயங்களில் அவருக்கு நல்ல ஐடியாஸ் தோணிப்போகும்!  அவர் ஆசையை உடனே நிறைவேத்தினேன். அவர்  தினமும் தோட்ட வேலை  செய்வது  தியானம் செய்வதற்கு சமம் என்று சொல்லியிருக்கேன்) 


எங்கிட்டே கொஞ்சம் கீரை விதை இருந்துச்சு.நம்ம நியூஸியிலே  ஸ்பினாச் தவிர வேறு கீரைகள் கிடைக்காது.  ஃபிஜியில் இருந்து இந்தியன் கடைகளுக்கு வரும் கீரைக் கட்டு  வாங்கியாந்தப்ப, ஒரு சோதனைக்காக அதன் தண்டுகளை எடுத்து நட்டு வச்சுப் பார்த்தேன். அதுலே நாலைஞ்சு  முளைச்சு, அதை விதைக்கு விட்டு, அதுலே இருந்து கிடைச்ச விதைகள் இவை. ஒரு தொட்டியிலே நட்டு வச்சது  ஒருவாரத்துலே முளைக்க ஆரம்பிச்சது.

இதுவரை  மூணுமுறை மேலாக மட்டும்  எடுத்து  சமைச்சாச்சு!  நாசுக்கா  அறுத்தெடுக்கணுமுன்னு  சின்னூண்டு ப்ரூனிங் சிஸ்ஸர்ஸ் வாங்கியாந்தேன்:-)


தமிழ்நாட்டுலே கிடைக்கும் கீரை வகைகள் என்னைப் பெருமூச்சு விடவைக்கும் என்றாலும் தப்பித்தவறி ஒரு விதையை  நாட்டுக்குள்ளே கொணாரமுடியாது. நாய் புடிச்சிரும்! புடிச்சா?  குறைஞ்சபட்சம்  $ 200  அபராதம்:-((((

சமிபத்துலே  ஃபிஜியில் இருந்து  வந்த கோங்கூராவை ஒரு இந்தியன் கடையில் வாங்கினோம். வழக்கத்துக்கு மாறா  தண்டுகளோடு இருந்துச்சு. ஆஹான்னு தண்டுகளை நட்டுக் காப்பாத்திக்கிட்டு இருக்கேன்.  ஒன்னே ஒன்னு மட்டும் துளிர் விட்டுருக்கு!

நம்ம வீட்டுலே முக்கால்வாசி கண்டெய்னர் கார்டன் தான்.  வேலியோரமா மட்டும்  கொஞ்சூண்டு இடம் விட்டு ரோஜாச் செடிகள் வச்சுருக்கோம்.  புல்வெளி போக மீதி இடத்துலே பொடிவகை கூழாங்கற்கள்  நிரவி இருந்தோம்.  களை பிடுங்கும்  வேலையை ஒழிச்சுக்கட்ட. ( ஒழிச்சுக்கட்ட முடியலை என்பது இன்னொரு சோகம்:(நாமொன்று நினைத்தால் களையொன்று நினைக்குது!)


பீன்ஸ் போட்டால் அவ்வளவா வேலை இல்லன்னு கேள்விப்பட்டு  மார்கெட்டில் இருந்து  பீன்ஸ் நாத்துகள் வாங்கி வந்து வெளியில் தரையில் நட்டு வச்சோம். கடைசியில் அது ப்ராட் பீன்ஸ் செடிகளா இருந்துச்சு. நல்ல ருசி. ஆனால்  ஒரே சமயத்தில் காய்ச்சுட்டு நின்னுருது.
இங்கே  விதைகளை வாங்கியாந்து நட்டு வச்சு அது முளைக்குமா முளைக்குமான்னு தேவுடு காப்பதை விட  நாத்துகளாவே வாங்கிட்டால்  கவலை மிச்சம். கார்டன் செண்டர்களில் கொஞ்சம் விலை கூடுதல். ஆனால்  அதே செடிகள் நம்ம ஞாயித்துக்கிழமை சந்தையில் கிடைக்கும்.


விலை என்னவோ  எதையெடுத்தாலும்  ரெண்டு டாலர்!  கத்தரிக்காய் ,மிளகாய், வெள்ளரின்னா  ரெவ்வெண்டு   நாத்துகள்.  லெட்டூஸ் ஒரு  அஞ்சு வகை,  பச்சைப் பட்டாணி, பாலக் (ஸ்பினாச்) இன்னும் கூட என்னென்னவோ  இருக்கு.  நாங்க வாங்கிக்கலை. முதல்லே  இதை வச்சுப் பார்த்துட்டு  அடுத்த வருசம் பொழைச்சுக் கிடந்தால் இன்னும் கொஞ்சம் அதிகமான வகைகளை வாங்கினால் போச்சு.

ஆரம்ப ஜோரில்  நாத்து விஷயம் தெரியாம,  விதைப்பொட்டலம் ரெண்டு (ரன்னர் பீன்ஸ்,  ஸுக்கினி ) வாங்கி வந்து தோட்டத்தில் ரோஜாவாண்டை நட்டு வச்சோம். இப்பத்தான் பீன்ஸ் பூ விட்டுருக்கு.

நாம் வாங்குன செடிகள் எல்லாம்  மூணு, நாலு மாசத்துக்குள்ளே பலன் தரும் வகைகள்தான். நம்ம சம்மரோ எண்ணி மூணேமாசம். அதுக்குள்ளே  அறுவடை செஞ்சு தின்ன முடியுமான்னு பார்க்கணும், இல்லே?

வெள்ளரிக்காய் மட்டும்  ஜம்முன்னு  முளைச்சு  காய்ச்சுருக்கு.  Telegraph, lebanese ரெண்டு வகைகள்.  'விளைஞ்சு சரியான பருவத்தில் இருக்கும்போது, நான் ரெடின்னு தந்தியடிச்சுச் சொல்லுமா'ன்னு நம்ம அமைதிச்சாரல் கேட்டாங்க.  டக் டகடக, டக் டக் ன்னு  சொல்லிவச்சேன். பறிச்சு வந்து  பொங்கலுக்கு வச்சு சாமி கும்பிட்டுட்டு நறுக்கிப் பார்த்தால்.....இந்த வெள்ளரிக்குக்கூட , நம்மூர்லே தந்தி சேவை நிறுத்திட்டாங்கன்னு  தெரிஞ்சுருக்கு!கீழே.... தந்தி நினைச்சது தபாலாப் போயிருச்சு:(


என்னிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களில் ஒன்னு , வாழ ஆசையா இருக்குன்னு லேசா ஒரு கோடி காமிச்சாப்போதும், குழியைத்தோண்டி புதைச்சுருவேன். வெள்ளை வெங்காயம் நடணும் இன்னிக்கு:-)

கார்டன்  லுக் & ஃபீல் வேணுமுன்னு ஒரு பார்க் பெஞ்ச் வாங்கியாந்து போட்டால்....  ஓக்கே!  தேங்க்ஸ்ன்னு   தனக்காக எடுத்துக்கிட்டான் ரஜ்ஜு! இந்த 20 டிகிரிக்கே க்ரீன்ஹவுஸில் வெக்கை அதிகமா இருக்குன்னு  வாடி நிற்கும் செடிகளுக்காக  குடை போட்டுருக்கார்  நம்மூட்டு பேகன்!இந்தப் பதிவு  மாடித்தோட்ட நிபுணரும்,  பிரபல எழுத்தாளருமான  ராமச்சந்திரன் உஷாவுக்குச் சமர்ப்பணம்.  தலைப்பு உதவிக்கு  நன்றி, எழுத்தாளர் ஏகாம்பரியே!


PIN குறிப்பு:  அறுவடைகள்,  அவ்வப்போது  வெளியிடுவேன்:-)34 comments:

said...

தந்தி சேவை தெரிஞ்சி போச்சா...? ஹா... ஹா...

பெப்ஸி பூச்சிக்கொல்லி மருந்து...!!!!!

said...

அர்பன் விவசாயி - பலே விவசாயியா இருக்காரே!

வாழ்த்துகள் டீச்சர்....

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

மனுச வயித்துப் பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுத்தணும்:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தியானத்தின் அளவு வரவரக் கூடிக்கிட்டுப்போகுது!

நான் கேமெராக் கையோடு ஊக்குவிக்கறேன்:-)

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

super and thanks Thulasi:-)

said...

அவங்க வீட்டு தோட்டத்துக்கு நீங்க விசிட் அடிச்சது பத்தி உஷா முகநூல்ல சொல்லியிருந்தாங்க. வாழ ஆசைப்படணும்னு கோடி காட்டினா போதும் எனக்கு, பிடிச்சு பூமிக்குள்ள புதைச்சிடுவேன்னு சொல்லியிருக்கீங்க பாருங்க அந்த வரிகளை ரொம்ப ரசிச்சேன்.

ரஜ்ஜூ சூப்பரா சன் பாத் எடுக்கறாப்ல இருக்கே

said...

பெப்ஸிக்கு இப்படி ஒரு உபயோகமா? அப்ப குடிச்சா நம்ம வயிறு என்ன ஆகும்? நெனைக்கவே பயமா இருக்கே?

said...

பெப்ஸிக்கு இப்படி ஒரு உபயோகம் இருக்கா..? இங்க எல்லாப் பய புள்ளைங்களும் பேஷன்னு அதத்தான குடிச்சிட்டிருக்குது. அவ்வ்வ்வ்வ்.... வெள்ளரக்காய் பாத்ததுமே பறிச்சு தின்னத் தோணுது டீச்சர்.

said...

ஆஹா அருமையான தோட்டம்.எத்தனை உழைப்பு உள்ள போயிருக்கு. மிகவும் பெருமையா இருக்கு துளசிம்மா. படங்கள் மிகக் கச்சிதமா வந்திருக்கு. விருந்தே வைக்கலாம் போல. உஷாவுக்கு நல்ல பெயர் தான். அர்பன் விவசாயி. சூப்பர் பதிவு.பச்சையும் அழகு,. ரஜ்ஜுவும் அழகு.

said...

தந்திசேவை?? என்னனு புரியலையே! ம.கு. தாங்கலை! போகட்டும் கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியா இருக்கு. எல்லாத்தையும் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கறேன். வேறே என்ன செய்யறது?

said...

அருமை டீச்சர்.
பெரிய வெங்காயம் கிடைச்சா நட்டுப் பாருங்க. சீக்கிரம் லீக்ஸ் மாதிரி இலை விட்டுடும். சமைக்க சுவையா இருக்கும்.

இப்பொழுது தமிழ்நாட்டில் மாடித்தோட்டம் செய்ய விரும்புபவர்கள் பாதிவிலையில் கன்றுகள் நட்டுத்தருகிறார்களாம். டீச்சர் அடுத்த முறை போகும்போது சொல்லுங்கள். தொலைபேசி, தொடர்பு விபரம் தருகிறேன்.

said...

மாடித் தோட்டம் அருமை. பீன்ஸ் படம் நீங்கள் எடுத்ததா? அசத்தல். தோட்டம் அழகாய் இருக்கிறது. நானும் மொ. மாடியில் சில செடிகள் வைத்தேன் - கரும்பு உட்பட! சில நன்றாக வந்தன!


said...

பட்டர் பீன்ஸ் , வெள்ளரி , கீரை , சூப்பர் !!!!தோட்டக்காரருக்கு வாழ்த்துக்களை சொல்லிடுங்க

said...

ஜூப்பரு :-)

said...

தந்தியை விடுங்க...தபாலுன்னு சொன்னவுடனே நாங்களும் வந்தோட்டோமுல்ல... நீங்க அர்பன் விவசாயியே தான் துள்சிம்மா :) கலர்புல் ஈல்ட் பாருங்க :)

said...

வாங்க உஷா.

வருகைக்கும் தலைப்புக்கும் நன்றி.
மீண்டும் வருக!

said...

வாங்க புதுகைத் தென்றல்.

ரஜ்ஜூ, குடில் கொஞ்சம் அதிகமா சூடாச்சுன்னா பெஞ்சுக்கு அடியில் போயோ, இல்லை கீரைத்தொட்டிக்குப் பின்னால் போயோ படுத்துக்குவான்:-)

ரசிப்புக்கு நன்றீஸ்.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

புள்ளைங்க வயத்துக்கு பேதி மருந்தா இருக்குமே, மைனஸ் பேதி:-))

said...

வாங்க பால கணேஷ்.

வெய்யிலுக்கு வெள்ளரிக்காய் சும்மா ஜில்லுன்னு இருக்குமே!

வாழையைப் பார்த்தபின் 'அதை'க் குடிக்க இப்போ பயமாத்தான் இருக்கு!

said...

வாங்க வல்லி.

எதுக்கு என்னை எல்லோரும்(!!) புகழ்கிறார்கள்? நீயல்லவோ தோட்டத்தின் பண்ணையாரம்மா.

நான் பண்ணையில் வேலை செய்யும் தொழிலாளி அல்லவோ என்கிறார் நம்ம கோபால்.

நம்ம மேற்பார்வையில் உழைச்சால் இப்படித்தான் நல்ல பெயர் கிடைக்குமுன்னு சொல்லி இருக்கேன்:-))))

said...

வாங்க கீதா.

என்ன நீங்க கோபால் மாதிரியே சொல்றீங்க? அவருக்கும் தந்தி புரியலையாம்!

நம்ம நாட்டிலே தந்தி சேவை நின்னு போனது தெரிஞ்சுக்கிட்டு, இந்த டெலக்ராஃப் வெள்ளரி, சாதாரண வெள்ளரிக்காயை காய்க்குது!

(ஐயோ.... எனக்கிந்த நிலையா!!!)

said...

வாங்க ரிஷான்.

பெரிய வெங்காயம் ஏராளமா நட்டு வச்சு ஒவ்வொன்னும் செண்டு மல்லி மாதிரி குண்டுப்பந்துகளா பூத்து நிக்குதே!

இந்த ஊரில் சின்ன வெங்காயம்தான் விலை அதிகம். கிலோ 15 டாலர் வரை போகும்.

பெருசு சீஸனில் கிலோ ஒரு டாலர்தான். 'இவ்ளோ மலிவானதை எதுக்கு நட்டுவச்சு இருக்கும் இடத்தையெல்லாம் வேஸ்ட் செய்யறே'ன்றார் உங்க கோபாலண்ணா:-)

// டீச்சர் அடுத்த முறை போகும்போது சொல்லுங்கள். தொலைபேசி, தொடர்பு விபரம் தருகிறேன்.//

அதை இப்பவே சொன்னா.... சென்னை வாசிகளுக்குப் பயன்படுமே!

said...

வாங்க ஸ்ரீராம்.

அந்த முதல் படம் மாடித்தோட்டம் சென்னையில் இருக்கு! நம்ம பதிவர் ராமச்சந்திரன் உஷா வீட்டுத் தோட்டம்.

அதைத்தவிர மற்றதெல்லாம் நியூஸி துளசியின் வீடு:-)

நான் இல்லாத படங்கள் எல்லாம் நானே எடுத்தவை என்று உறுதி அளிக்கிறேன்,யுவர் ஆனர்!

said...

வாங்க சசி கலா.

தோட்டக்காரர்...... ஓக்கே.சம்மதிக்கிறேன். இது ஒரு கூட்டு முயற்சி:-))))

said...

வாங்க சாந்தி.

டேங்கீஸ் :-)

said...

வாங்க கவிதாயினி.

தபால்ன்னதும் கபால்னு வந்துட்டீங்க!!! வெரி குட்.

ஸார்...போஸ்ட்!!!!

பாதிப்புகழை கோபாலுக்குக் கொடுக்கணும். அவர் தன் நண்பரின் கொடைக்கனால் தோட்டம் பற்றிச் சொல்லிக்கிட்டே இருக்கார். கட்டாயம் ஒருக்கா போய் பார்த்தே ஆகணுமாம்:-)))

said...

உங்க அருமையான தோட்டம் என்னை வேகமா இங்க கூட்டிட்டு வந்துவிட்டது...ஒவ்வொன்னும் அவ்ளோ அழகு, பார்த்துட்டே இருக்கிறேன்.

இரண்டு வருடமா பெப்ஸி தான் எங்க வீட்டு செடிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து. :-)

செடி கொடிகளை பார்க்கும் போது உங்கள் இருவரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் நன்றாக தெரிகிறது. சந்தோசமாக இருக்கிறது.

வாழ்த்துகள் மேடம்.

said...

//அதை இப்பவே சொன்னா.... சென்னை வாசிகளுக்குப் பயன்படுமே!//

நிச்சயமாக. கீழே தருகிறேன் டீச்சர்.

மாடித்தோட்டம் அமைக்க இப்போது மானியம் வழங்கப்பட்டு வருகிறது. எவரும் வாடகை வீட்டில் வசித்தாலும் கூட மாடித்தோட்டம் போடலாம். பத்து வகையான காய்கறிகளை உற்பத்தி செய்ய தேவையான 2,650 ரூபாய் மதிப்பிலான இடுபொருட்கள் அடங்கிய தளை ஒன்றினை (KIT) 50 சதவிகித மானிய விலையில் 1,325 ரூபாய்க்கு இங்கு பெற்றுக் கொள்ளலாம். ஒரு தளை மூலம் தோட்டம் அமைக்க, 150 சதுர அடி இடம் போதுமானது. அதிகபட்சமாக ஒருவருக்கு 5 தளைகள் வரை இவ் விலையில் பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு தளையிலும் தென்னை நார்க்கழிவு கட்டி, பாலித்தீன் பை, காய்கறி விதைகள், பாலித்தீன் விரிப்பு, உயிர் உரங்கள், உயிர் பூஞ்சணக்கொல்லி, இயற்கை வேம்பு பூச்சிக்கொல்லி என்று 13 விதமான பொருட்கள் இருக்கும். மண்ணைவிட எடைகுறைந்த, அதேசமயம் நீர்ப்பிடிப்பு அதிகம் கொண்டது என்பதால்தான், தென்னை நார்க்கழிவு செடிகள் வளர்ப்பதற்கான ஊடகமாகக் கொடுக்கப்படுகிறது.

செடிகளை வளர்க்க வழங்கப்படும் பாலித்தீன் பைகள் எடை குறைந்த மற்றும் யு.வி.கதிர்களைத் தாங் கும் திறன்கொண்டதாக இருக்கும். காய்கறி விதைகளில் கத்திரி, தக்காளி, மிளகாய், வெண்டை, கொத்தவரை, செடிஅவரை, முள்ளங்கி, சிறுகீரை, பாலக்கீரை மற்றும் கொத்தமல்லி ஆகிய விதைகள் மூன்று பருவங்களுக்கும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன. இதனைப் பெற்றுக் கொள்ள இணையம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
இணையதள முகவரி: http://tnhorticulture.tn.gov.in/horti/do-it-yourself-kit

தொடர்பு விபரங்கள் - செந்தில்குமார்
தொலைபேசி: 04425554443. செல்போன்: 9841317618

said...

இன்னும் சென்னை வளசரவாக்கத்தில் நாச்சாள் எனும் பட்டதாரிப் பெண் வீட்டுத் தோட்டத்துக்கான தரமான விதைகளை குறைந்த விலையில் அளிப்பதோடு பயிற்சியை இலவசமாக அளிக்கிறார். மேலும் விவரங்கள் அறிய நாச்சாளை தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு : 9444529301

said...


வாவ் அழகு அருமை ! ரஜ்ஜு நல்ல பிள்ளையா சூப்பர்வைஸ் பண்ணுதே :)
நானும் கண்டெய்னர் தோட்டம் தான் போட்டேன் போன சம்மர் ..தக்காளி காரட் உருளை அமோக விளைச்சல்

நாயார் ஸ்மைல் செஞ்சுகிட்டே வரும்க்கா :)

said...

வாங்க கௌசல்யா ராஜ்.

வணக்கம்.
முதல் வருகைக்கு நன்றி.

ஆஹா.... நீங்களும் பெப்ஸியா:-)))

தினம் காலை எழுந்ததும் முதல் வேலையா தோட்டத்தில் ஒரு சுத்து. செடிகளை நலம் விசாரிக்கும்போது மனசுக்கு மகிழ்ச்சியாத்தான் இருக்கு!

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

said...

@ தகவலுக்கு நன்றி ரிஷான்.

சென்னைத் தோழிகளிடம் பகிர்ந்தாச்சு.

said...

வாங்க ஏஞ்சலீன்.

விளைச்சல் பார்த்தாலே மகிழ்ச்சி கூடுதேப்பா:-)))

நாயார் சிரிப்பார்.பூனையார் கோச்சுக்குவார். கண்ணில் கோபம் தெரியுது:-))))

said...

அழகானதோட்டம். வாழ்த்துகள்.