Monday, January 12, 2015

99 ரூபாய்க்கு 99 வகைத் தோசைகள் ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 12)


தட்டுத்தடுமாறி ஒருவழியா  மேம்பாலத்தைப் பிடிச்சப்போ மணி மூணு!   பனிரெண்டே முக்காலுக்கு  ஹொட்டேலை விட்டுக் கிளம்புனவங்க  ஒரு ரெண்டேகால் மணி நேரமா  ஊரைச் சுத்திப் பார்த்துருக்கோமுன்னு  வச்சுக்கலாம்:)  சென்னைப் போக்குவரத்தே மேலுன்னு  ஆகிப்போச்சு!  பச்சை  போர்டில் 'ஹோசூர் நேராப்போ' ன்ற  அம்பு பார்த்ததும்தான் உசுரு வந்துச்சு. கலவரபூமியை விட்டு வெளியிலே வந்தாச்சு:-)   கொஞ்சதூரத்தில்  டோல்கேட். நேஷனல் ஹைவே டோல்  விவரம் மட்டும்  பக்கா.
சாலைக்கு  ரெண்டு பக்கமும்  பட்டாஸ் கடைகள்.  ஊருக்கு வெளியேதான் கடை போட அனுமதியாம்.  பட்டாஸ் வாங்கும் கூட்டம்   கலகல. இவ்ளோ  பட்டாஸ் கடைகளை நான் பார்த்ததே இல்லை! அதுபாட்டுக்கு சாலையின் நீளத்துக்குப் போட்டியா வளர்ந்துக்கிட்டே  போகுது!

எங்கெயாவது சாப்பிட  நல்ல  இடம்  கிடைக்குமான்னு  கண்ணு நட்டுக்கிட்டு  இருக்கோம். மணி மூணரையாகுதுன்னு பதைபதைக்கிறார் கோபால்.  'நல்ல  ஹொட்டேல்  பார்த்தா நிறுத்துங்க சீனிவாசன்' என்றார். அதுக்குள்ளே  கார்டன் பார்க் இன் என்று ஒன்னு கண்ணில் பட்டது. சீனிவாசன் கொஞ்சம் தயங்குன மாதிரி எனக்கு ஒருதோணல்.

வண்டியை நிறுத்திட்டு உள்ளே போனோம்.  கட்டிட முகப்பு தவிர மத்ததெல்லாம்..... ப்ச். சொல்ல ஒன்னுமில்லை. தென்னிந்திய சாப்பாடு  சீனிவாசனுக்கும், கோபாலுக்கு  சப்பாத்தி & பருப்பு. எனக்கு....  ஊஹூம்.... ஒன்னும் சரி இல்லை.  கோபாலின் வற்புறுத்தலால்  கால் சப்பாத்தியைக் கடிச்சு வச்சேன்.

வெளியே வந்ததும்....  ' சாப்பாடு ரொம்ப சுமார். இன்னும் கொஞ்சம் போயிருந்தால்  ஹோஸுருக்கு முன்னே சங்கீதா வந்துருக்கும்' என்றார்  சீனிவாசன். அடையார் ஆனந்த பவனா இல்லை சங்கீதாவான்னு   எனக்கு ஒரு குழப்பம். பசி மயக்கத்தில் சரியா காது கேக்கலை!  'உங்களுக்குப் பசிக்குமேன்னுதான்  இங்கே நிறுத்தச் சொன்னேன்' என்றார் கோபால்.  'உங்களுக்குப் பசின்னு வண்டியை நிறுத்தச் சொன்னீங்கன்னு நான் நினைச்சேன்' என்றார் சீனிவாசன்.  என்ன ஒரு  கம்யூனிகேஷன் குழப்பம் பாருங்க:-)  வெளியே இருந்த  கடையில் மூணு வாழைப்பழம் வாங்கினேன். ஆளுக்கு ஒன்னு. பசிக்கு சோளப்பொரி. மணி மூணே முக்கால்.


வழி நெடுக இருக்கும் பட்டாஸ் கடைகளை வேடிக்கைப் பார்த்துக்கிட்டே போறோம்.  அரைமணியில்  இன்னொரு அட்டகாசமான கட்டிடம் கண்ணில் பட்டது.  சரோவர் ஹொட்டேலாம். Claresta Sarovar Portico, Hosur.  இங்கே எதாவது உனக்குக் கிடைக்குமுன்னு சொல்லி வற்புறுத்திக் கூட்டிப்போனார் கோபால்.
ரிஸப்ஷன் பார்த்தவுடன் தெரிஞ்சது,  நல்ல இடம்தான்னு.  டைனிங் ஹால் போனோம்.
மெனுகார்டைப் பார்த்தால்....  99 தோசை வகைகள்.  ஒன்னு  99 ரூபாயாம்.  வேறெதாவது இருக்கான்னு பார்த்தால்   அடை, ஆப்பம் இப்படி அகரவரிசை:-)  பணியாரம் கண்ணில் பட்டதும் எனக்கு  பணியாரமுன்னு  சொன்னேன். இனிப்பா இல்லை காரமா?  இனிப்பு மதி :-) தொன்னுத்தியொன்பது  வகை இருந்தும் கோபாலுக்கு ஒரு  சாதா தோசை:-)  அஞ்சு வகைச் சட்னி, சாம்பார்ன்னு வந்துச்சு.


பணியாரம் செஞ்சுக்கிட்டு இருக்காங்களாம்.    பரவாயில்லை. லேசான இனிப்போடு நல்லாவே இருந்தது. அப்புறம் ஆளுக்கொரு காஃபி.  அம்பது நிமிசம் போயே போச்.  மணி அஞ்சு.ரெஸ்ட் ரூம் சூப்பர்.  நீச்சல் குளம், ஜிம், பார் போன்ற வசதிகளுடன்  ஏகப்பட்ட அறைகளோடு (108  அறைகள்!) அட்டகாசமாக் கட்டி விட்டுருக்காங்க.

இந்த ஊருக்கு இப்படி ஒரு ஹொட்டேலான்னால்....   SIPCOT இருக்குல்லே இங்கே. பெரிய  இண்டஸ்ட்ரீஸ்  வேற இருக்கு. அதுக்கு  வெளிநாட்டு ஆட்கள் பிஸினெஸ் விஷயமா ஏராளமா வர்றாங்களாம்.  இது ஒரு செயின் ஹொட்டேல்னு சொன்னாங்க. ஹோசூர்லே இருப்பது மூணு  ஸ்டார்தான்.  அதுவே  இந்த ஏரியாவுக்கு  பெரிய விஷயம்தான்! சின்ன வயசுப் பெண்கள் நிறையப்பேருக்கு  ஹொட்டேலிலும் ரெஸ்ட்டாரண்டிலும் வேலை கிடைச்சிருக்கு. மலர்ந்த முகங்களைப் பார்க்கும்போது நமக்கும் மகிழ்ச்சி ரெட்டிப்பு, இல்லையோ!

தீபாவளி ஸ்பெஷலா   பூக்களம் போட்டு வச்சுருக்காங்க!

'காஞ்சீபுரத்துக்கு எப்பப் போவோம்?   ஏழுமணிக்குள்ளே போயிருவோமா?' என் கவலை.  கோபாலின்   சாம்சங்கில் பார்த்தால்  ட்ராஃபிக் இல்லைன்னா மூணரை மணி  நேரம் ஆகுமாம். ஐயோ....

காஞ்சீபுரம் இங்கிருந்து  238 KM போகணும். கிருஷ்ணகிரி, ஆம்பூர், வேலூர் அப்புறம்தான் காஞ்சீபுரமாம்.

அப்ப  இதுவரை  நாலேகால் மணி நேரப் பயணத்தில்  வெறும் 45கிமீட்டர்தான் வந்துருக்கோமா? அட ராமா.....

'கவலைப் படாதீங்க. எந்த ஊருக்குள்ளும் நுழையாம பைபாஸ் பண்ணிக்கிட்டுப் போயிடலாம். டோல் ரோடுதான்' என்று  மனசில் பாலை வார்த்தார் சீனிவாசன்.

பாண்டவதூதா....  மோசம் பண்ணிறாதே.....

வழியெங்கும் மலைகளும்  மலைக்கோவில்களுமா  இருக்கு.

 நெடுஞ்சாலையில் விர்றிட்டுக்கிட்டுப் போகுது வண்டி.  சாலை வளைவில் சட்னு கண்முன்னே  மலை எழுந்து மறைக்கும் கோணம்!  கொஞ்ச நேரம் க்ளிக்கினேன்.  ஆறு மணி ஆனதும்  இருட்டு அப்படியே   கவ்விப்பிடிக்குது. ட்வைலைட் சமாச்சாரமெல்லாம் இந்தியாவில் இல்லவே இல்லை.
இதுக்கு நடுவிலே டீஸல் போட்டுக்கலாமான்னு  பார்த்தால்....  ஒரு  பங்குலே  நுழையும்போதே....  டீஸல் காலின்னு கத்தறார்  ஊழியர்.  அடக்கடவுளே....  இருட்டுலே  எங்காவது  நிக்கப்போறோமோ?

அடுத்த சில கிலோமீட்டரில்  ஒரு பங்க்   ஆப்ட்டது. டீஸல்  ஒரு ரெண்டாயிரத்துக்குப் போட்டுக்கிட்டோம்.

எட்டு மணி இருக்கும்போது காஞ்சீபுரம் வரப்போகுதுன்னார் சீனிவாசன்.  ஹைவேவிட்டு ஊருக்குள் போக ஒரு  அரைமணி,  முக்கால் மணி ஆகிருமாம்.  'அவ்ளோதூரம் போய் கோவில் பூட்டி இருந்தால் நேரம் விரயம் இல்லையோ'ன்றார் கோபால். கூடவே.... 'நீ போய்ப் பார்க்கலாமுன்னா போகலாம். கோவில் மூடி இருந்தால் உனக்கு மனக்கஷ்டமா இருக்கும்.   நீயே முடிவு பண்ணிக்க,  போகணுமா இல்லை வேணாமான்னு....   அப்புறம் என்னால்தான் போக முடியலைன்னு  குய்யோ முறையோன்னு .....'  பேச்சுக்குரல் மட்டும்  கேக்குது. இருட்டில் முகம் தெரியலை.  சிரிக்கிறாரோ....


கடுகடுன்னு இருக்கும் என் முகமும்  அவருக்குத் தெரிய சான்ஸே இல்லை, அந்த இருட்டில்:-)


ஒன்னும் சொல்லாமச் சும்மா இருந்தேனா....    'சென்னையில் இருந்து ஒரு நாள் காஞ்சீபுரம் வந்துட்டுப் போகலாம்' என்று குரல் ஒலி. அசரீரி சொன்னாச் சரி. "முடிவை நீயே  ட்ரைவருக்குச் சொல்லு. சென்னையா, காஞ்சியா?"


'சென்னைக்கே  நேராப் போயிருங்க , சீனிவாசன் ' என்றேன்.

தொடரும்............:-)


20 comments:

said...

பெங்களூரு இப்படியாயிடுச்சா? என்ன பண்ண முடியும்?

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

ஒன்னும் பண்ண முடியாது.
காலம் செய்யும் மாற்றங்கள் நம் கையில் இல்லை!

said...

கார்டன் பார்க் இன் (சாப்பிட்டதால்...?) கண்டதால் தான் 99 கிடைத்தது...?

said...

எதார்த்தமான நடையில், எத்தனை சுவையாக எழுதுகிறீர்கள்!

தொடர்ந்து படிக்கத் தவறியது வருத்தமளிக்கிறது. மற்ற பகுதிகளையும் படித்து முடிப்பேன்.

நன்றி துளசி கோபால்

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

இன்னும் அரைமணி சமாளிச்சு இருந்தால் அந்த அடையார் ஆனந்தபவன்/சங்கீதா சாப்பாடு கிடைச்சிருக்கும்!

99 ரூ ரொம்ப மலிவுன்னு கோபால் சொல்றார். அஞ்சு சட்னி அம்பது ரூ. ஒரு சாம்பார் பத்து. போக முப்ப்பத்தியொன்பதுதான் தோசைக்கு:-))))

said...

இப்பதான் மத்த பதிவுகளை படிச்சிட்டு உங்க கூடவே பிரிட்ஜை பிடிச்சு வந்திட்டேன். அயித்தானும் கோபால் சார் மாதிரி தான். ஹோட்டல் போனா ஊத்தப்பம் மட்டும்தான் ஆர்டர் செய்வாங்க. :))

said...

வாங்க 'பசி' பரமசிவம்.

முதல் வருகைக்கு நன்றி.

இது நமக்குப் பதினோராவது வருசம். இதுவரை 1625 இடுகைகள் துளசிதளத்தில் வந்துருக்கு. பயணக்கதைகள் இதில் ஏராளம்.

வெளிவந்த நூல்கள் நான்கு.

உலகின் தென்கோடியில் இருக்கு நியூஸியில் இருந்து எழுதும் ஒரே தமிழ்ப் பதிவர் (இப்போதைக்கு) நான் மட்டுமே.

நேரம் கிடைக்கும்போது துளசிதளம் பாருங்கள். சில பயனுள்ள கட்டுரைகள் கிடைக்கலாம்:-)

வருகைக்கு நன்றி.

மீண்டும் வருக!

said...

வாங்க புதுகைத் தென்றல்.

கொஞ்சூண்டு வெங்காயம் நறுக்கித் தந்தால் வீட்டுலேயே இருக்கும் லேசான புளிப்பு மாவில் நானே செஞ்சு தந்துருவேன். ஆனால்...... நறுக்கிட்டாலும்....:-)

கடையில் ஏகத்துக்கும் புளிச்சுக்கிடக்கும் ஊத்த(ல)ப்பம்தான் பிடிக்குதுன்னா நாம் என்ன செய்ய:-))))

said...

நெடுந்தொலைவு போகும் போது என்னோட கணக்கு 40-45 கி.மீ /மணிக்கு.

said...

நம்ம புரிதலே தப்புங்க. 99 ரூபாய்க்குத் 99 வகை தோசை என்றதும் முதலில் என்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். பின்ன இல்ல புரியுது விஷயம்.

said...

99 ரூபாயில் தோசை.....

அது என்னவோ சிலருக்கு தோசை சாப்பிட அப்படி ஒரு ஆவல்! எங்க வீட்டுல அம்மணியும் அப்படித்தான்!

இந்திய சாலைகளில் இப்படி பயணிப்பது பல சமயங்களில் கஷ்டம் தான். வடக்கில் இன்னமும் மோசம் - குறிப்பாக உத்திரப் பிரதேசம், ஹரியானா! :(

said...

//கடுகடுன்னு இருக்கும் என் முகமும் அவருக்குத் தெரிய சான்ஸே இல்லை, அந்த இருட்டில்:-)//

விடுங்க டீச்சர்..இருட்டிலாவது கோபால் அண்ணா நாலு வார்த்தை பேசட்டும் :)

காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளுக்கு புகழ்பெற்றது இல்லையா? முன்பு இலங்கையிலும் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளுக்கு அதிக கிராக்கி. விலையும் அதிகமாம். வீட்டில் சொல்லக் கேட்டிருக்கேன் டீச்சர். நீங்க ஒண்ணும் வாங்கிக்கலையா?

said...

வாங்க குமார்.

இந்த வழி தெரியாமச் சுத்துனதுலேதான் இப்படி 45 கிமீக்கு ரெண்டேகால் மணி ஆச்சு:(

எங்கூர்லே ஊருக்குள் மட்டும் 50. ஊருக்கு வெளியே வந்தாட்டு 100. இப்படித்தான் போய்க்கிட்டு இருக்கோம்!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஆஹா..... ஆசை தோசை
அப்பளம் வடைன்னு சொல்றது இதுக்குத்தானோ:-)))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தோசை எதுக்குன்னால்... சுடச்சுட ஃப்ரெஷாப் பண்ணிக் கொடுப்பாங்களே அதுக்காக இருக்குமோ!

உங்க தில்லி ட்ராஃபிக்கும் லேசுப்பட்டதில்லை:-) தில்லி எல்லைக்குள் (அதான் அந்த ரப்பிஷ் குன்று) இருக்குதே அங்கிருந்து கூர்காவ்(ன்) போறதுக்குள்ளே விடிஞ்சுல்லே போயிருது!

said...

வாங்க ரிஷான்.

அதென்ன அண்ணாவுக்கு இப்படி சப்போர்ட்:-)

காஞ்சீபுரம் ஊருக்குள்ளேயே போகாம பட்டு எப்படி வாங்குவதாம்?

said...

அடுத்த தடவை பார்த்துக்கலாம் துளசி. நீங்க முதல் ஹோட்டலில் சாப்பிடும்போ துதான் சீனு எங்க ஓட்டுனர் ரெட்டியாரிடம் பேசினார். அவர் கோவித்துக் கொண்டார். அங்க நல்லா இருக்காதேப்பானு. அனுபவந்தான். படங்கள் அஸ் யூஷுவல் பிரமாதம்.

said...

அசல் நான் தான் நீங்க . கோபால் கண்ணன் மாதிரி. யப்பா இவங்களோட எல்லாம் கோயில் பார்க்கப் போனா இப்பிடித்தான். நாம் கோவமாகி தனியா நம்மளையே திட்டிக்கிட்டு வரணும் :)

said...

99 தோசைல ஒண்ணு சாப்பிட்டு இருக்கலாம். ஃபோட்டோ கிடைச்சிருக்குமே எங்களுக்கு :) ( ஜொள்ஸ் விட )

said...

தோசை எத்தனை தோசையடி
அது நல்லவர் விரும்பும் ஆசையடி
தோசை எத்தனை தோசையடி

பதமான மாவில் சுட்ட சாதா தோசை
பதமான மாவில் சுட்ட சாதா தோசை
முறுகலாய் நொறுங்கும் அந்த பேப்பர்தோசை
தோசை எத்தனை தோசையடி

மெட்டுக்குச் சரியா வருதான்னு பாருங்க.. :)

பெங்களூர் ஊர விட்டு வெளிய வரதுக்குத்தான் நேரம் ஆகும். அந்த நீளமான பாலத்துலதான் தெனமும் வீடு-ஆபிஸ்-வீடு பயணம் பெங்களூர்ல இருந்தப்ப. நான் உக்காந்திருந்த பில்டிங் கூட பாலத்துல இருந்து தெரியும்.

பெங்களூர் மக்கள்ளாம் கார் எடுத்துக்கிட்டு ஹோசூர் போய் (அதாவது தமிழ்நாடு பார்டர்ல நுழைஞ்சதும்) பட்டாசுகள் வாங்கீட்டு வருவாங்க. விலை குறைவா இருக்குமாம்.

ட்வைலைட்லாம் எங்கம்மா இங்க. லைட்டப் போட்டா பகல். அணைச்சிட்டா இரவு. அப்படித்தான சூரியனார் நடந்துக்கிறாரு. இரவும் பகலும் சரியா பன்னிரண்டு மணி நேரமா இருக்கும் ஊர்கள்ள அப்படித்தானாம் :)