Friday, January 09, 2015

ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் : பகுதி 1

ஒரு வீட்டைக் கட்டி முடிச்சோம். குடி போனோம் என்றதோடு வீட்டுவேலைகள் ஏதும் முடிவடைவதில்லை. என்னதான் திட்டம் போட்டுக் கட்டி முடிச்சாலும், அங்கே போய் வசிக்கத் தொடங்கின பிறகுதான்.... இது இன்னும் கொஞ்சம் நல்லா இருந்துருக்கலாம். இந்த இடத்தில் இப்படி இருந்தால் தேவலை.  கட்டும்போதே  இதைக் கவனிக்கத் தவறிட்டோம், பாருங்கன்னு பலதும் தோன்றும்.

வீட்டுக்குள் வெளிச்சம் போதலைன்னு ஆரம்பிச்சேன்.  நம்மது ஓப்பன் கிச்சன், டைனிங்ன்னு லிவிங் ஏரியா  கொஞ்சம் பெருசுதான்.  கண்ணாடிக் கதவெல்லாம்   யூவியைத் தடுக்க டபுள் க்ளேஸ்ட் & டின்ட்டட். அதனால் கிடைக்கும் வெளிச்சம், கொஞ்சம் மங்கல். குளிர்காற்றுக்குப் பயந்து கதவை எப்போதும் மூடியே வேற வைக்கிறோம்.

Sky lights வகையில்   Solatube போட்டுக்கலாமுன்னு முடிவாச்சு.

 சம்பந்தப்பட்டவர்களிடம் சொன்னதும்   ஸோலாட்யூப்  போட வேண்டிய ஏரியாவை அளந்து என்ன சைஸ் சரியா இருக்குமுன்னு பார்க்க ஒருத்தர் வந்தார். அளந்தார். போனார்.

என்னிக்கு வரப் போறாங்கன்னு  சேதி கிடைச்சது.  மழை இல்லாத நாளா இருக்கணுமேன்னு வேண்டினேன். பெருமாள்  க்ருபை  காமிச்சார்.

குறிப்பிட்ட நாள் ரெண்டு பேர் வந்து சரசரன்னு வேலையை ஆரம்பிச்சாங்க.  வடக்குப் பார்த்த கூரையில்  ஒரு பெரிய துளையும், நமக்கு வெளிச்சம் வேண்டிய இடத்தில் (கூடத்தில்) ஒரு துளையும் போட்டாங்க. உலகின் தென் கோளம் என்பதால் வடக்குதான் இங்கெல்லாம் விசேஷம். சூரிய வெளிச்சம் வடக்கில்தான் கிடைக்கும்.
கூரைக்கும் , சீலிங்குக்கும்  நேரான குழாய் துண்டு சின்ன  சைஸில்,  ரெண்டு துளைகளையும் இணைச்சு. பெரிய  ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் குழாய்  ஒரு கோணத்தில்  வச்சு  அதை  ரெண்டு நேர்குழாயில்  பொருத்திட்டாங்க.  இந்தக் குழாய்களின்  உட்புறம் பாதரசம் பூசுனாப்போல ஒரு கோட்டிங்.அப்படியே முகம் பார்க்கும் கண்ணாடி போல் ஜொலிப்பு.  குழாய்கள் சேரும் இடத்தில்   இதைவிட மினு மினுக்கும்  ஒரு  வட்டமான தகடு.வடக்குக் கூரைத் துளையின் மேல் உருண்டையான  ஒரு   பெரிய கண்ணாடி கிண்ணம் போன்ற  அமைப்பைப் பொருத்துனாங்க. சூரிய வெளிச்சம்  அதன் மூலமாக  குழாய்க்குள்  வந்து, அங்கிருக்கும் பிரதிபலிப்பான்கள் மூலம் அந்த வெளிச்சம் வீட்டுக்குள்ளே வருது. ஸீலிங் பகுதியில்  இருக்கும் துளையில்  'சள்' என்ற வெளிச்சத்தைக் குறைக்கும் டிஃப்யூசர் போல ஒரு பெரிய  குழித்தட்டு. அதைப் பொருத்தியதும்  கூடம் முழுசும் பளிச்!நமக்கு  விருப்பம் என்றால்  இந்த  ஸீலிங் குழித்தட்டை,  ஜன்னல் திரை போல் மூடித் திறக்க  ஒரு  ஸ்விட்ச் பொருத்தியும் தருவாங்க.  மின்சார இணைப்புக் கொடுக்க எலக்ட்ரீஷியன்  செலவு எக்ஸ்ட்ரா.  அதெல்லாம்  இப்போதைக்கு வேணாமுன்னு சொன்னோம்.  எவ்ளோ வெளிச்சம், எப்படி இருக்குமுன்னு பார்த்துட்டு முடிவு செய்யலாம்.

எல்லா வேலையும் ஒரு ரெண்டு மணி நேரத்துக்குள் முடிஞ்சு போச்சு.   நம்ம  கோகி (கோபால க்ரிஷ்ணன்) அப்போ இருந்தான். வெளிச்சம் போதுமான்னு செக் பண்ண உதவி செஞ்சான்:-)


இதுவே வீடு கட்டி முடிச்சு நாலு வருசம் கழிச்சுத்தான்.  அதுவரை குற்றம் கண்டு பிடிச்சுக்கிட்டு  இருந்தேன். எனக்கு  இந்தத் துறையில்  வல்லமை அதிகமுன்னு கோபால் சொல்றார்! கில்லாடியாம்:-)))) அடுத்த குற்றம் கண்டுபிடிக்க ஆரம்பிச்சேன்.

அடுத்த  ப்ராஜெக்ட்டா     ஒரு ஆட்டிக் லேடர். பரண் ஏணி. வீடு கட்டும்போதே  மேற்கூரைக்கும்  ஸீலிங்குக்கும் இடையில் உள்ள  இடத்துக்குப் போக   ஒரு  வழி அமைச்சுத்தான் இருக்கு.  அவரவர் சௌகரியத்தின் படி இந்த  வழியை  எந்த அறையில் வேணுமானாலும்  வச்சுக்கலாம்.  நம்ம வீட்டில் இதை  கராஜ் ஸீலிங்கில்  போடச் சொன்னோம்.  இதன் வழியா  மேலேறிப் போக ஏணியைப் பயன்படுத்திக்கலாம்.  கூரையில் பழுது பார்க்கணுமுன்னா இதன் வழியா ஏறிப்போகணும்.  இந்த இடம்  வீட்டின் மொத்த பரப்பளவு சைஸ்தான்.  தாராளமா அங்கே ரெண்டு ரூம் கூடப் போட்டுக்கலாம்.

 நடுப்பகுதி நல்ல உயரமாத்தான் இருக்கும்.  வீடு கட்டும்போது ஸீலிங் பகுதியில் மரத்தண்டுகளால்  கட்டம்கட்டமா  அடிச்சு வைப்பாங்க.  இந்தக் கட்டத்துக்கு அடியில் (வீட்டின் உட்புறம்)  ஸீலிங்  வரும். இதுக்குன்னு தனி வகை ஜிப் போர்டுகளுண்டு.  பரணில்  இருக்கும் கட்டங்களில்  பிங்க்பேட் என்னும் கண்ணாடி இழை நுரைப் பஞ்சு நிரப்பி வைக்கணும். இது வீட்டுக்குள்ளில் இருக்கும் வெப்பம் வெளியேபோகாமல் தடுக்கும்.  குளிர் நாடுகளுக்கு இதெல்லாம் அவசியம். (இதை நம்ம வீடு வா வாங்குது தொடரில் எழுதி இருக்கேன்)இந்த நுரைப்பஞ்சுக்கும்  ஸீலிங் போர்டுக்கும் நடுவில் ஸாண்ட்விச் போல கட்டங்கட்டமா  இருக்கும் மரத்தண்டுகள். (சரியா விளக்கி இருக்கேனான்னு தெரியலை!) ஆனாலும்  மரத்தண்டுகள் நம் பார்வைக்குப் புலப்படும் வகையே!


   வெளிநாடுகளில் வசிக்கும் நம்மவர்களுக்குப்  பயணம் போக பெரிய பெரிய பெட்டிகள் வேண்டித்தான் கிடக்கு.  அதிலும் கோபால் வேலை விஷயமா பொழுதன்னிக்கும் வெளிநாட்டுப்  பயணம் போய்  வர்றவர்.  அவருக்கு என்னன்னா.....  எத்தனைநாள் பயணமோ அதுக்கு ஏத்தமாதிரி பொட்டிகள் வேணுமாம். ரெண்டு நாளைக்குப் போகும் போது கொண்டு போகும் பொட்டியை ஒரு நாள் பயணத்துக்குக் கொண்டு போக முடியாதாம். அதனால் நம்மூட்டில்   ஒரு நாள்முதல் 365 நாள்வரைக்குமான ( ஒரு பேச்சுக்குச் சொல்றேன்!) வகைவகையான  அளவில் பெட்டிகள் நிறைஞ்சு போய்  எல்லா அறைகளையும் நிரப்பிக்கிட்டு இருக்கே. அதையெல்லாம் பரணில் அடுக்கி  வச்சுக்கிட்டால் தேவையான போது எடுத்துக்கலாம் தானே!

மேலே  இடம் இருக்கு. ஆனால்  இப்ப இருக்கும்  'இந்த ஏணி'யை நம்பி  பொட்டியோடு ஏறக்கூடாதுன்னு  சொன்னேன்.  ஏற்கெனவே விழுந்து  தோள் மூட்டு இடம்பெயர்ந்து  ஆம்புலன்ஸில்  ஆஸ்பத்திருக்கு ஓடுனதெல்லாம் வரலாறு. (கொசுவத்தி ஏத்திக்கிச்சே!)

வீட்டுக்குள்  நிறைய இடம் இருந்தால் நிரந்தரமான படிக்கட்டுகளே கூட கட்டிக்க ஆசைதான்.    மாடிக்குப் போவதைப்போல் போய் வரலாம். என் மாடி வீட்டு ஆசையும் ஒரு மாதிரி நிறைவேறும். இப்ப காராஜில் அவ்ளோ இடமில்லை.

ஆட்டிக் லேடர் போட முடிவாச்சு. வேணும்போது படிகளை இழுத்துக்கலாம்.  புல்டௌன் மாடல்:-)

அதற்கான  ஏற்பாடுகள் ஆரம்பிச்சோம்.  இது  நம் இந்திய வாசம் முடிஞ்சு  நியூஸி திரும்பின பிறகு 2011 இல்.  பெட்டிகளின் எண்ணிக்கை கூடுனது அப்பதானே:-))))


சுபயோக சுபதினத்தில் ரெண்டு பேர் வந்தாங்க. அதுலே ஒருத்தர்  நாலு வருசம் முன்பு ஸோலாட்யூப் போட வந்தவராக இருந்தார்!

ரெடிமேட் கிட் கொண்டுவந்துருந்தாங்க. ஏற்கெனவே  பரணுக்கு இருந்த திறப்பு சின்ன  சைஸ். ஜஸ்ட் ஒரு ஆள் உள்ளே நுழைய முடியும் அளவுதான்.  இப்பப் படிகள் இணைக்க இன்னும் கொஞ்சம் நீளமா வேணுமுன்னு  அந்தத் திறப்பை இன்னும் கொஞ்சம் வெட்டி எடுத்தாங்க.


புதுசாக் கையோடு கொண்டு வந்த ஃப்ரேமைப் பொருத்தி, அதற்குப் பொருத்தமான மரக்கதவை இணைச்சாங்க.  அந்த மரக்கதவிலேயே  ஏணிப் படிகளை இணைச்சாங்க. மடக்கு ஏணி.  ரெண்டாய் மடங்குது.  முதல் பாதி கதவோடு சேர்த்தே  இருக்கு இப்போ. கதவைத் திறந்து  அது கீழே வந்ததும்  அடிப்பாகத்தில் மடங்கி இருக்கும் ஏணியை இழுத்தால் அதுதரை  தொடும்.


அதேபோல  மூடும்போது ஏணியை மடிச்சுட்டுக் கதவை அதற்கான கம்பி கொண்டு மூடிறலாம்.  நல்ல கம்பிதான். மடித்துணி  உலர்த்தப் பயன்படும்  கழி நினைவுக்கு வந்துச்சு.

வெளிச்சத்துக்காக உள்ளே ஒரு லைட்டும் போட்டுக்கிட்டோம். இப்ப எல்லாக் கண்டா முண்டா சாமான்களும்  மாடியில்:-))

ஏறி எடுக்கும்போது  கவனமா மரச்சட்டத்தில் காலை வச்சு நடக்கணும். தெரியாத்தனமா பிங்க் பேட்டில் காலை வச்சோமோ......   போச்!

இப்ப  கனம் குறைஞ்ச உறுதியான மரப்பலகைகளைத் தேடிக்கிட்டு இருக்கோம்.  இப்பெல்லாம் எனக்கு, சூப்பர் மார்கெட்டை விட ஹார்ட் வேர் ஸ்டோர் ரொம்பப் பிடிச்ச இடமா ஆகிக்கிடக்கு. டைம்பாஸுக்கு ஏற்ற  இடம்:-)

சட்டங்களுக்கு மேல் பலகை அடிச்சுட்டால்....  பயமில்லாம நடக்கலாம் பாருங்க! (அதான் கார்ட்லெஸ் ஸ்க்ரூ ட்ரைவர், சாண்ட்டா கொடுத்துருக்காரே:-)இந்தப் பதிவு நம்ம  வடுவூர் குமாருக்கு சமர்ப்பணம்.

  மேலே உள்ள இரண்டு படங்களும் நம்ம ஜிஎம்பி ஐயாவின் ஐயம் தெளிவிக்க:-)

33 comments:

said...

கில்லாடி என்பதில் சந்தேகமே இல்லை அம்மா...

said...

சரி ஊரு சுத்தின பதிவை எழுதலாம் என்று வந்த போது இந்த பதிவு கண்ணில் பட்டது.கடைசி வரை படித்த பிறகு தான் சமர்பனம் கண்ணில் பட்டது.நன்றி.
இந்த சோலோடூப் பார்த்த போது இது தாய்லாந்தில் ஒருவர் எளிமையாக செய்ததின் அடவான்ஸெடு மாடல்.அவர் என்ன பண்ணார் என்றால் ஒரு பாட்டிலில் தண்ணீரில் வாஷிங் சோடாவை போட்டு வைத்துவிட்டார் அது சூரிய ஒளியில் மின்னி வீட்டின் உள்ளே வெளிச்சத்தை கொட்டிச்சாம்.நார்த் லைட் - இதை இங்கும் தொழிற்சாலையில் பயன்படுத்துகிறார்கள்.இதன் முழு உபயோகத்தை பெங்களூர் விமான நிலையத்தில் பார்க்கலாம்.
எதையுமே தேவையில்லை என்று விடாமல் படம் பிடித்து பலரது அறிவுக்கண்ணை திறக்கிறீர்கள்.

said...


காங்கிரீட் கூரை இல்லையா. எனக்கு எங்கள் பூர்வீக வீடு நினைவுக்கு வந்தது.வெளிச்சத்துக்குக் கண்ணாடி ஓடுகள் பதிப்பார்கள்.

said...

அட்ரா சக்கைன்னானாம். ஒவ்வொரு ஊர் தட்பவெட்பநிலைக்குத் தக்கதான் அந்தந்த ஊர் கட்டிடங்கள் கட்டப்படனும். முந்தியெல்லாம் அப்படித்தான் இருந்தது.

நம்மூர்ல ஒரு முற்றம். அதுல காத்து வெளிச்சம் மழை எல்லாமே வரும். அப்பப்ப காதலர்கள் வந்ததாக் கவிதைகளும் திருடர்கள் வந்ததாப் போலிஸ் குறிப்புகளும் சொல்லும்.

ஏசியே தேவைப்படாத கட்டிடக்கலை நம்ம ஊர்க்கலை. சுண்ணாம்புச் சுவர் வெயில்காலத்துல குளுமையாக்கும். குளிர்காலத்துல கதகதப்பாக்கும்.

இப்ப எல்லாம் கான்கிரீட் வீடுகள். அதான் பேனும் ஏசியுமா இருக்கோம். தவிர்க்க முடியாதான்னு தெரியல. அடுக்குமாடிக் குடியிருப்புகளை ஆர்சிசி இல்லாமக் கட்ட முடியுமான்னு தெரியல.

முந்தி ஓட்டு வீடுகள்ள ஒரு ஓடு மட்டும் கண்ணாடி வெச்ச ஓடா இருக்கும். அதுவழியா அழகா வெளிச்சம் வீட்டுக்குள்ள வரும்.

அதோட மார்டன் வெர்ஷன் நீங்க வெச்சிருக்குறதுன்னு நெனைக்கிறேன். ஆனா நல்ல திட்டம். வீட்டுக்குள்ள வெளிச்சம் இருக்கனும்.

said...

பழைய வீடுகள்ள ஓடுலேர்ந்து மழைத்தண்ணிக்காக தோணித்தகரம் வெச்சது, வெளிச்சத்துக்கு கண்ணாடி பதிச்சதுன்னு இருந்த ஞாபகம் வந்தது.

said...

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு டெக்னிக் தேவைப்படுகிறது. உங்க ஊர்ல வெயில எப்படி ஊட்டுக்குள்ளாற கொண்டு வர்றதுன்னு பிரச்சினை. எங்க ஊர்ல வெய்யிலை எப்படி வெளியேத்தறதுன்னு பிரச்சினை. கடவுள் எப்படியெல்லாம் லோகத்தைப் படைச்சிருக்கார்?

said...

இது தாய்லாந்தில் ஒருவர் எளிமையாக செய்ததின் அடவான்ஸெடு மாடல்.//

சகோ குமார் அவர் மோசெர் ,பிரேசில் நாட்டுக்காரர் ..
இவருத பின்பற்றி MIT பிலிப்பைன்ஸில் இதே போல செஞ்சிருக்காங்க .

said...

துளசி அக்கா :) ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கேன் இங்கே :)

உங்க வீட்டுக்கு சோலார் லாம்ப் பொறுத்த வந்தவர் படு உற்சாகத்தில் இருக்காரே ..போட்டோவுக்கு போஸ் கொடுக்கறதிலே தெரியுது ..எங்க வீட்டுக்கும் போட யோசிச்ருக்கோம் .விண்டர் டைம் 80 சதவீதம் சப்ளை கிடைக்கும்ன்கிறாங்க ..நாங்களும் எல்லா சாமானும் LOFT இல் தான்
.எங்க ஏரியாவில் CELLAR இல்லை ..இருந்தா பொருட்களை அதில் வைக்கலாம்

said...

This simple system was designed by Moser. See link below

http://www.bbc.com/news/magazine-23536914

I askd my school going nephew to demonstrate the same for a school project... after which his face was 'lit' up 100 W!!
thyagarajan

said...


சிறந்த பதிவு
தொடருங்கள்

தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
படித்துப் பாருங்களேன்!

said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி பகிர்ந்துள்ளேன்

http://blogintamil.blogspot.in/2015/01/6.html

முடிந்தால் பார்த்து கருத்திடுங்களேன்.

said...

புதிதாய் நிறையத் தெரிந்து கொண்டேன். ஒரு அன்புமல்லி கதைக்கான சமாசாரம் கிடைத்தது உங்க தயவில்.

said...


எல்லாமே புதுசாத்தான் இருக்கு....

said...

நெறைய விஷயங்கள் தெரிஞ்சுகிட்டேன் . நல்லா விளக்கி படங்களோட அருமையா சொல்றீங்க . நன்றி !!

said...

எத்தனை வெளிச்சம் கிடைக்கிறது?

said...

சோலோ டியுப் மகாத்மியம் சூப்பர்.ஜிகே பார்த்து திக்குன்னு இருந்தது.ரஜ்ஜு எப்படி இப்படி மாறினான் ஒரே ஷாக். எல்லாம் ஒரே கறுப்பு டி ரே ஸ்ஸில இருக்கீங்களே .பார்த்து ஏறுங்க. இறங்குங்க. சுவாரஸ்யமா இருந்தது.

said...

Vaduvur Kumar paarkkamudinthathil santhOsham.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஐயோ..... நீங்களுமா:-))))))

said...

வாங்க குமார்.

பெங்களூர் விமானநிலையத்தில் இறங்குனபோது இரவுமணி 10.

மிரண்டு போயில்லே நின்னேன்:-))))

வாஷிங்ஸோடா தன்ணீர் பாட்டில் பரிசோதனை ஒன்னு செஞ்சு பார்க்கணும். வெயில் வரணுமே பெருமாளே!!!!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

உங்களுக்காக ரெண்டு படங்களைச் சேர்த்துருக்கேன். கூரையில் பொருத்திய கண்ணாடி. இதை ஸீலிங் வராத இடத்தில்தான் போடணும். நமக்கு காஃபி மார்னிங் கோர்ட் என்று சொல்லும் இடத்தில் போட்டுருந்தாங்க.

காலையில் அங்கே உக்கார்ந்து வானம் பார்த்துக்கிட்டே காஃபி குடிக்கணுமாம். அந்த இடத்துக்கு மேலும் ஒரு கண்ணாடிச் சுவர் வச்சு அதைக் கன்ஸர்வேட்டரி ஆக்கிக்கிட்டேன்:-)

நீங்க சொல்லும் கண்ணாடி ஓடு எங்க பாட்டி வீட்டில் இருந்தது. வத்தலகுண்டு வீட்டில் மொட்டை மாடியில் காங்க்ரீட்தரை என்றாலும் அதிலும் கண்ணாடி பதிச்சு இருந்தாங்க. ஹாலுக்குள் வெளிச்சம் வர. மேலும் அங்கே மொட்டை மாடியில் ஒரு துளை வேறு இருந்தது. காயப்போடும் நெல்லை வீட்டுக்குள் கொண்டு சேர்க்கவாம். அதன் வழியாக அக்காக்களைக் கூப்பிட்டு மிரட்டுவேன்:-)))))

said...

வாங்க ஜிரா.

என் கனவுகளில் ஒன்னு முற்றமும் திண்ணையும் வச்ச வீடு. அதுக்குத்தான் கொடுப்பினை இல்லாமல் போச்சு:(

இந்தக் குளிரில் எங்கே திறந்த வெளி முற்றம்? அதான் திண்ணை என்ற பெயரில் வாசக்கதவுக்கருகில் ஒரு பெஞ்சு போட்டுருக்கேன்.

குறைஞ்சபட்சம் நிறைவேத்திக்க முடிஞ்சது நம்ம ஊஞ்சல் ஆசைதான்.

அதுக்குப் பெருமாளுக்கு நன்றி.

கிடைச்சதைக் கொண்டு திருப்திப் பட்டுக்க வேண்டியகாலமிது!

said...

வாங்க புதுகைத் தென்றல்.

ஓட்டுத்தகரத் தண்ணி பெருமழை பெய்யும்போது நீர்வீழ்ச்சிகளாக முற்றத்தில் விழும் நினைவு வருது.

அப்போ அண்டாக்களை வச்சு அந்த மழை நீரில் பித்தளைப் பாத்திரங்களையெல்லாம் வேகுவேகுன்னு தேய்ப்பாங்க நம்ம வீட்டில். ரொம்பநாளைக்குக் கருக்காதாம்!

அதுஒரு கனாக்காலம்!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

அதேதான் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பிரச்சனை!

நம்மூரில் தெற்கே பார்த்த வீடு தென்றல் காற்றுன்னுவோம். இங்கே அதுக்கு நேர்மாறா இருக்கணும்.

வடக்கு பார்த்த வீட்டுக்குத்தான் மதிப்பு அதிகம்.

தெற்குவாசல்... குளிரோ குளிர்:(

said...

வாங்க ஏஞ்சலீன்.

அட! தாய்லாந்துக்காரரா!!! ஆஹா.....

நம்மது ஸோலார் லேம்ப் இல்லைப்பா.

அதுக்குத் தனியா ஸோலார் பேனல் வச்சு பேட்டரி சார்ஜ் செய்யும் வேலை எல்லாம் இருக்கு. இங்கே விண்ட்டரில் 25 சதவீதம் வெயில் வந்தாலே கொண்டாடிருவோம். அதனால் நம்ம வீட்டில் போட்டது வெறும் இயற்கை வெளிச்சம் மட்டுமே.


சூரியன் இல்லைன்னாலும் வெளியே இருக்கும் வெளிச்சம் இந்த குழாயில் பிரதிபலிச்சு மங்கலாகவாவது வீட்டுக்குள் தெரியும்.

இங்கேயும் ஸெல்லர் சமாச்சாரமெல்லாம் கிடையாது:(

கார்டன் ஷெட் ஒன்னு போட்டுருக்கோம். கொஞ்சம் கண்டா முண்டா எல்லாம் அங்கே:-)

இந்த நிலநடுக்கம் வந்தபின்தான் கண்டெய்னர் மகிமை தெரிஞ்சது. முன்னாடியே அதாவது வீடு கட்டும்போதே ஒரு 40 அடி கண்டெய்னரை வீட்டுக்குப் பின்பக்கம் தோட்டத்தில் வாங்கி வச்சுருந்தோமுன்னா பிரச்சனையே இல்லை. அப்பெல்லாம் வெறும் ரெண்டாயிரம்தான் இந்த கண்டெய்னர்களுக்கு!

said...

வாங்க தியாகராஜன்.

சுட்டிக்கு நன்றி.

மருமான் முகத்தில் வெளிச்சம் கண்டு மகிழ்ச்சிதான்:-)

said...

வாங்க யாழ்பாவாணன்.

சுட்டிக்கு நன்றி.

முயற்சி வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

அறிமுகம் செய்தமைக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.

வலைச்சரம் தொடுப்பதில் கூடவே பயணத்தைச் சேர்த்து நீங்க எழுதும் ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!

இனிய பாராட்டுகள் !

said...

வாங்க துரை.

அன்புமல்லி.... ஆஹா....
கதைக்காகக் காத்திருப்போம்!

said...

வாங்க கில்லர்ஜி.

நீங்கள் இருக்கும் கொதிக்கும் இடத்துக்கு நேரெதிர் இங்கே.

சம்மர் வந்தாலும், சட்னு ஹாயா வெளியே போக முடியாது. நாலு சீஸனும் ஒரே நாளில் வரும் ஊர்:(

கங்காருபோல் எந்நேரமும் ஒரு ஜாக்கெட்டோ, ஸ்வெட்டரோ கையில் சுமந்து கொண்டுதான் போகணும்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க சசி கலா.

நம்மது படங்கள் வரைந்து பாகத்தைக் குறித்து விளக்கமும் சொல்லும் வகுப்புகள்:-))))

said...

@ துரை.

குளிர்காலம் தவிர நல்ல வெளிச்சம்தான். டிவியை அப்பப்ப ஆங்கிள் மாற்றிக்கிட்டே இருப்பார் கோபால். வெளிச்சம் அதிகமாக இருக்குன்னு:-))))

said...

வாங்க வல்லி.

சம்பவம் நடந்தது 2009 ஃபிப்ரவரி.
அப்ப ஜிகே இருந்தான்ப்பா.

எங்க நியூஸியின் அஃபீஸியல் நிறம் கருப்புதான். அதுதான் எல்லோரும் அதிகமாக அணிவது கருப்பே:-)))

கவனமாத்தான் இருக்கோம்ப்பா. தேங்க்ஸ்.

குமார் தவறாமல் வந்து வாசிச்சது எனக்கும் மகிழ்ச்சியே!

said...

எத்தனை எத்தனை விஷயங்கள் உங்கள் தளத்தில்!

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.