Friday, January 30, 2015

வானத்தில் ஒரு வெள்ளைக்குதிரை!


பட்டத் திருவிழா நடக்கப்போகுதுன்னு எங்கூர் சம்மர் டைம்ஸ் ஈவன்ட் புக்கில் போட்டுருந்தாங்க.  சிட்டிக் கவுன்ஸில் ஸ்பான்ஸர் செய்யும்  ஐட்டங்களில் இதுவும் ஒன்னு.  வருசாவருசம்  நம்ம  சிட்டி கவுன்ஸில், சம்மர் டைம்ஸ் கேலண்டர் புத்தகம் ஒன்னு போட்டு வீட்டுவீட்டுக்கு (நம்ம தபால் பெட்டிக்கு) அனுப்பிருவாங்க.

பலசமயம், இந்தப் புத்தகமும் குப்பைப் பேப்பரோடு பேப்பராக் காணாமப் போயிரும். அப்புறம் ஒரு நாள் முழிச்சுக்கிட்டுத் தேடோ தேடுன்னு தேடியும் கிடைக்கலைன்னா.....பேசாம பக்கத்துலே இருக்கும் எதாவது சிட்டிக்கவுன்ஸில் லைப்ரரிக்குப்போய் எடுத்தாறலாம். இதுக்குள்ளே இதை மறந்து போய் பல நிகழ்ச்சிகளைக் கோட்டை விட்டுருப்பேன்:(
இந்த முறை கொஞ்சம் கவனமா இருந்து புத்தகத்தை எடுத்து  நம்ம வீட்டு லைப்ரரியில்(!) வச்சேன்.

எங்க கோடைகாலம் டிசம்பர் முதல் தேதி முதல்  ஃபிப்ரவரி கடைசி நாள் வரை என்பது ஒரு கணக்கு. கூடக் கொஞ்சம் கொசுறு போட்டுத்தான் தரும் சூரியன் என்பதால் மார்ச் பாதிவரையும் (கிடைக்கும்வார இறுதிகளைப் பொறுத்து)  நிகழ்ச்சிகள் நடத்திருவாங்க. இதுலே டிசம்பர் பிறந்ததும் வரப்போகும் க்றிஸ்மஸ் பண்டிகைக்குஏற்பாடு செய்யணுமுன்னு சனம் ஆலாப் பறந்து பறந்து ஷாப்பிங் செஞ்சுகிட்டு இருப்பதால்  கோடை  முதல் மாசக் கொண்டாட்டத்தை அவ்வளவாக் கணக்கில் எடுத்துக் கொள்ளமாட்டோம்.

ஆனால் எப்படியும்  ஃபயர் ஒர்க்ஸ் மட்டும் கூடியவரை தவறவிடுவதில்லை. வானவேடிக்கை நாட்களில் மாலை 6 மணிக்கே இசை நிகழ்ச்சிகள் ஆரம்பிச்சு  நடந்துக்கிட்டு இருக்கும். நியூஸி வந்த புதிதில் போய்வந்துக்கிட்டுத்தான் இருந்தோம்.அப்புறம் வரவர   'போயிட்டுப்போகுது, இளையராஜா நிகழ்ச்சியா பாழாப்போகுது'ன்னு ஒரு மெத்தனம் வந்துருச்சு. அதனால்  ஒரு ஒன்பதரை மணி வாக்கில்  கிளம்பிப்போய்  சரியாப் பத்துமணிக்கு பட்டாஸ் விடும் நேரத்தில்   அங்கே  மைதானத்தின் பக்கம்  சாலை ஓரம் வண்டியை நிறுத்திட்டு, காரில் இருந்தே  வானவேடிக்கையைப் பார்த்துவிட்டு வீடு வருவது வழக்கம். இந்த வருச நியூ இயர் ஈவ் நிகழ்ச்சிக்கு இப்படிப் போனால் நம்மைப்போலவே  நினைக்கும் சனம் ஏகப்பட்டது இருக்குன்னு தெரிஞ்சது:-))))
மேலே: புதுவருசம் பொறந்தப்ப:-)

குடும்பத்தோடு கலந்துகொள்ளும் வகையில் இருக்கும் நிகழ்வுகள் எல்லாம்  வார இறுதிகளுக்கே நேர்ந்துவிட்டுருக்கும் என்பது நமக்கு(ம்) ஜாலி.
 இந்த வருசம் உலகக்கோப்பை க்ரிக்கெட் போட்டி நம்மூரில் நடப்பதால்  ஃபிஃப்ரவரி 12 தேதி மாலை  ஓப்பனிங்  ஸெரிமனியும் வா(ண)ன வேடிக்கையும் கூடுதல் கவர்ச்சி.

போன சனிக்கிழமை (ஜனவரி 24)  பகல்  ஒன்னரைவரை வீட்டுவேலையே சரியாக இருந்துச்சு. சாப்பாடு ஆனதும், இன்றைய நிகழ்ச்சி எதேனும் உண்டான்னு சம்மர்டைம்ஸ் பார்த்தால்  (kite day) கைட் டேன்னு போட்டுருக்கு! பகல்  ஒன்னு முதல் நாலு மணி வரை.

நம்ம வீட்டில் இருந்து  நியூ ப்ரைட்டன் கடற்கரை  சுமார் 19  கிமீ தூரம்தான். சிட்டிக்குள்ளே போகும் பாதை என்பதால்  அரைமணியாவது ஆகும். கிளம்பினோம். எங்கூரில் நிலநடுக்கம்வந்து ஊரில் பாதி அழிஞ்சுபோன கதை தெரியுமோ?  அப்படியா? தெரியாதே என்பவர்கள் இங்கே பார்க்கலாம்,  அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  இந்த நியூ ப்ரைட்டன்னும் உண்டு.
மேலே:  நிலநடுக்கம் 2011 


 கிழித்தெறியப்பட்ட சாலைகளை  அப்போது பழுது பார்த்து ஓரளவு சரி செஞ்சுருந்தாங்கன்னாலும், ( இந்த தாற்காலிக பழுது பார்த்ததே நாலுவருசம்  ஆச்சு. இன்னும் நல்லாத்தான் இருக்கு ) இன்னும் நல்ல சாலையாக  இருக்கணுமேன்னு  தொடர்ச்சியா  ஊர்முழுக்க சாலை மேம்பாடு நடந்துக்கிட்டு  இருக்கு இந்த நாலு வருசங்களாக. அதனால் ஒரு குறிப்பிட்ட இடத்தில்  வேலை நடப்பதால்  மாற்றுவழியில் போகணுமுன்னு அம்புக்குறியோடு அறிவிப்பு பார்த்து  அந்த வழியில் போய்க்கிட்டு இருக்கோம்.  நகரின் அத்தனை வண்டிகளும் ஊர்வலம் போற தினுசில்  மெதுவான  நகர்தலில்.  நாமும்  அங்குலம் அங்குலமா முன்னேறிக்கிட்டு இருக்கோம்.  சாலை விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்றும் மக்கள் என்பதால் எல்லாமே ஒரு ஒரு ஒழுங்கோடு முன்னேறுது.


'இங்கே இருக்கு பாரு, நாம்ம  தேடிக்கிட்டு இருந்த  நர்ஸரி'ன்னார் கோபால்.  அட!  ஆமாம்.  நாம் இந்தியாவில் கொஞ்சநாள் இருந்துட்டு நியூஸி   திரும்பி வந்தப்ப,  நம்ம தோட்டத்துச் செடிகளெல்லாம்  போச்சுன்னு ஒப்பாரி வச்சேன். மீண்டும் தோட்டம் போட  மலிவுவிலை நர்ஸரிகளைத் தேடுனபோது உள்ளுர் பத்திரிகை சொன்ன  இதுக்கு வந்து நல்ல நல்ல பூச்செடிகளை வாங்கினோம்.  அப்புறம் காலப்போக்கில் இந்த நர்ஸரி விலாசம் மனசில் தங்காமல் போச்சு:(
இப்போ தேடிப்போன மூலிகை காலில் ஆப்ட்டது போல்:-)  பெயர், விலாசம் எல்லாம் சரியாப்பார்த்து வச்சுக்கிட்டோம்.



கடற்கரை டவுனுக்குப்போய் சேரும்போதே  மூணு மணிக்கு  சமீபம். பார்க்கிங் கிடைக்காமல் சுத்தோ சுத்துன்னு  சுத்த வேண்டியதாப் போச்சு. வந்தவர் எல்லாம் தங்கிவிட்டதால்  அந்த மண்ணில் நமக்கு இடமில்லை!  எந்த வண்டியாவது  கிளம்பும் நிலையில் இருந்தால் அதுக்குப் பத்துப்பேர் காத்திருக்காங்க.  ஒருவழியா பார்க்கிங் கிடைச்சு  வண்டியை நிறுத்திட்டு  சாலையைக் கடந்து எதிர்ப்புறமிருக்கும் மணல்மேட்டில் ஏறிப்போனோம்.

தலைக்குமேல் காற்றாடிகள் . முதலில் தூரத்தில் இருந்து பார்த்தப்பவே அசையாமல் வானத்தில் மிதக்கும் உருவங்களைப் பார்த்திருந்தோம். காற்றே இல்லையோ.... எல்லாம்  ஒரே இடத்தில் அப்படியே நிக்குதே!

ஏகப்பட்ட கூட்டம். நம்மூர் க்றிஸ்மஸ் பரேடுக்கு அடுத்து இவ்ளோ மக்கள்ஸ் பார்ப்பது எனக்கு  முதல்முறை! அறுபதினாயிரம் பேர் வந்தாங்கன்னு  மறுநாள் உள்ளூர் பத்திரிகைத் தகவல்!

சமுத்திரக்கரையில்  ஜன சமுத்திரம்!


குன்றின் அடுத்த பக்கத்தில் இறங்கி தண்ணீருக்குப் பக்கம் போனால்  காற்றாடிகள் அசையாமல் இருக்கும்  மர்மம் விடுபட்டது:-)  காரோடு கட்டிப்போட்டு வச்சுருக்காங்க. கூடுதல் சப்போர்ட்டுக்கு  ஈரமணல் குவிச்ச  சாக்குப்பைகள்!  ஆஹா.....

படங்கள் எடுத்துத் தள்ளிக்கிட்டு இருந்தேன்.  கெமெரா ஸ்க்ரீனில்  ஒன்னுமே  தெரியாத அளவுக்கு வெய்யிலின் வெளிச்சம்.  ஈஸ்வரோ ரக்ஷிது....க்ளிக் க்ளிக் க்ளிக்...... (ஜஸ்ட் 415தான் எடுத்தேன்) 

சின்னதும் பெருசுமா காற்றாடிகள் வானத்தில்.  பட்டம்  மட்டும் இருந்தால் நாமும் பறக்கவிடலாமேன்னு நினைக்கும்போதே.... பட்டக் கடை ஒன்னு!  பதினைஞ்சில் தொடங்கி  120  டாலர் வரை விதவிதமாய்.  'கையில் காசில்லை, ஐ மீன் கேஷாக இல்லையே'ன்னு  ஆசையை நிறைவேத்திக்காமப் போகும் மனுசர்களைக் கரையேத்த  எஃபோஸ் EFOS மிஷின் வச்சுருக்காங்க கடைக்காரம்மா.

ஒரு பட்டம் வாங்கிக்கலாமுன்னா..... கடை(சி)யில் என்னை பட்டம் வாங்க விடலைங்க, நம்ம கோபால்:-(
அதுக்காக சும்மா இருக்கமுடியுமா? துப்பட்டா இருக்க பயம் ஏன்?


எங்கூர்லே   நியூப்ரைட்டன், சம்னர் என்ற பெயரில் ரெண்டு பீச் இருக்கு.  இதுலே  சம்னர்தான் எனக்குப் பிடிக்கும். இயற்கை அழகில் இருக்கும். கண்களை உறுத்தும் கட்டிடங்கள்  இல்லாத கடற்கரை. அடிக்கடி போகுமிடம்.

போனமாசம் ஒருநாள் சம்னர்  பீச்சுக்குப்  போனபோது  ஒரு பாட்டி(!)  காத்தாடியைப் பறக்கவிட முயற்சி செஞ்சுக்கிட்டே இருக்காங்க. அது  பறப்பேனான்னு  இழுக்குது.  பாட்டியுடன் வந்த மகள், பேரன், பேத்தி, செல்லம்  (அல்சேஷன்)  எல்லோரும் உதவி செஞ்சாலும் வானத்தின் மீது ஏறாமல் பழி வாங்கிக்கிட்டு இருந்துச்சு அந்தக் காத்தாடி.  'ஒரு பக்கம் மட்டும் கயிறு இருக்கு அதான் மேலெழும்பலை'ன்னு என் கண்டுபிடிப்பைச் சொல்லிக்கிட்டு இருந்தேன்.  அன்றைக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எனக்கு இதுதான் வேடிக்கை. பாட்டி ஒரு பசுப்ரேமி போல !

இன்றைக்குப் பார்த்தால் பாட்டி ஜெயிச்சுட்டாங்க. மணல் மூட்டை ஆதாரத்தில் கொடிகட்டிப் பறக்குது  கன்னுக்குட்டிகள்  காத்தாடி.

வெள்ளைக் குதிரை யொன்னு மனத்தைக் கொள்ளை கொண்டுட்டுப் போகுது!  இதுதான்  இருப்பதில் டாப்ன்னு என் நினைப்பு.

பெரிய பெரிய பலூன் காத்தாடிகளா இருக்கே. ஒருவேளை ஹீலியம் நிறைச்சுட்டு காத்துலே பறக்கவிடறாங்களோன்னு ஒரு சம்ஸயம். அப்பதான்  ஒரு வானவெளிவீரரை மேலே ஏத்திக்கிட்டு இருந்தவரிடம்போய் மேட்டர் என்னன்னு விசாரிச்சார் கோபால்.





ஹீலியம் நிரப்பும் வேலை  எல்லாம் இல்லையாம். ஜஸ்ட் ப்ளெயின் உருவம்.  நெற்றியில் ஒரு துளை. அதன்வழியா இயற்கைக் காற்று உள்ளே போனதும் மேலெழ ஆரம்பிச்சுருது.  ஒரு விசேஷத் துணி பயன்படுத்தறாங்க, உருவங்களுக்கு என்று சொன்னார்.  tapa cloth .  ஃபிஜியில் தாபா துணிகள் என்றால் மரப்பட்டையில் செய்யப்பட்டவைகள்.  இங்கே.... எப்படின்னு தெரியலை.  விண்ட் சீட்டர் துணி போல  இருக்கு  இது.

அப்புறம் கவனிச்சுப்பார்த்தால் குறி பார்த்துச் சுட்டாப்லெ  எல்லா உருவங்களின் நெற்றியிலும் துளை!  நம்ம கப்புகூட பறந்துக்கிட்டு இருந்தான்.

சின்னதா ஒரு பாய்மரப் படகு. ஹாங்காங் ஸ்டைலில் . வட்டவட்டமா சுத்தும்வகைகள்  சில நல்லாவே இருந்தன!

சம்மர் டைம் கொண்டாட்டத்தில் ஒரு  நிகழ்வா 'பஸ்க்கர்' திருவிழா நடக்கப்போகுது. அதுக்கான கலைஞர்கள் உலகெங்கிலும் இருந்து வந்து குவிய ஆரம்பிச்சுட்டாங்க. அதுலே ஒருத்தர்   கடற்கரை வார் மெமோரியலை அடுத்து இருக்கும்  ஹாஃப் பாஸ்கெட்பால் கோர்ட்டில்  'வித்தை' காமிச்சுக்கிட்டு  ஒத்தை ஏணிமேல் நின்னுக்கிட்டு  கத்திகளோடு ஜக்கிள் பண்ணிக்கிட்டு இருந்தார்.

வார் மெமோரியலுக்கு  ஏறும் படிக்கட்டுகளால்  இந்த இடத்துக்கு ஒரு ஆம்ஃபி தியேட்டர்  எஃபெக்ட்  இருக்கும். இங்கேயும் நல்ல கூட்டம்!



மகள் செல்லில் கூப்பிட்டு 'எங்கே இருக்கீங்க'ன்னாள்.  'கடல் குதிரைக்குக் ' கிட்டேன்னேன். அவள் 'நீலத்திமிங்கிலத்தின்' பக்கமாம்.  சுட்டு முடிச்சு கடற்கரைக்கு எதிரே இருக்கும் நியூப்ரைட்டன் மாலுக்குப் போனோம்.

 அன்றைக்கு அங்கே மார்கெட் டே!  இது  அடுக்கு மாடிகள் இல்லாத  ஒற்றைக்கட்டிடங்களால் ஆன திறந்த வெளி மால்.

எங்கூர்லே பீச்சில் ஒரு  நூலகம்  இருக்கு தெரியுமோ!

கோபாலின் பின்புலம் நூலகத்தின் புழக்கடைக் கதவு:-) இந்தப்பக்கம் நேரா நடந்தால்  Pier முனைக்குப் போயிடலாம்.

கீழே: நூலகத்தின் முன்பக்கம். 


மார்கெட் தினம் முடிஞ்சு கடைகளை ஏறக் கட்டிக்கிட்டு இருந்தாங்க. நமக்கு ஒன்னும் தேறலை. கார் நிறுத்தியிருந்த இடத்துக்கு  நடந்து போகும்போதும்   திமிங்கிலங்களையும், காதல் பாம்பையும், ஆக்டபுஸ்ஸையும் பார்த்துக்கிட்டே நடந்ததில் களைப்பு தெரியலை.

இதையெல்லாம் நீ வீடியோவா எடுத்துருக்கணும் என்றார் கோபால். அப்பத் தோணாமப் போச்சே:(

வீட்டுக்கு வந்ததும்  நம்மூரில் இந்தக் காத்தாடித் திருவிழா எப்போலே  இருந்து ஆரம்பிச்சு இருக்காங்கன்னு 'ஆராய்ஞ்சால்'  பெரிய அளவில்  நடப்பது இப்போ சில வருசங்களாத்தானாம்.  போன வருச விழாவை புண்ணியவான் ஒருவர் வீடியோ எடுத்து யூட்யூபில் ஏத்தி இருக்கார். அட்டகாசம்!



அவருக்கு ஒரு பின்னூட்டம் போட்டுப் பாராட்டினேன்.  அப்பப்ப பட்டம் விடுவது உண்டாம். 'ஒரு நாள்  பீச்சுக்கு வந்து, ஹலோ சொல்லேன்' என்றார். சொன்னால் ஆச்சு:-)

எந்த பீச்சுன்னு கேட்டுக்கணும்!

PINகுறிப்பு:  முப்பதுசொச்சம்  படங்களை மாய்ஞ்சு மாய்ஞ்சு வலை ஏத்தினபிறகுதான் இந்த வீடியோ  கிடைச்சது. முதலிலேயே  பார்த்து வச்சுருந்தால்..... மெனெக்கெட்டிருக்க வேணாம்:(

 ஆங்..... அதெப்படி? அது போன வருசம். இது நாம் போன,  இந்த வருசம் இல்லையோ:-))))


29 comments:

said...

நூலில் படித்தால் கூட முழுமையாகப் படிக்கமுடியாது. அதுபோல நேராகப் பார்த்தால்கூட இந்த அளவு பார்க்கமுடியாது. எங்களை நிகழ்விடத்திற்கே கொண்டுபோய்விட்டீர்கள். புகைப்படங்கள் மிகவும் அருமையாக உள்ளன. பதிவைப் படித்ததும் இனிய பொழுதாக அமைந்த உணர்வு.

said...

பட்டங்கள் காரை தூக்கி செல்லாமல் இருந்தால் சரி தான்...

உங்கள் பட்டம் சூப்பர் அம்மா....

said...

ரீச்சர்

என்னதான் அண்ணாந்து பார்த்தாலும் அது வானவேடிக்கை இல்லை. வாணவேடிக்கைதான்.

கோபால் சார் பட்டம் வாங்க விடலைன்னா என்ன அதான் மாதாமகி ரீச்சர்ன்னு ஏகப்பட்ட பட்டம் ஸ்டாக்கில் இருக்கே. எடுத்து விட வேண்டியதுதானே!

said...

இயற்கையாக காற்றைப் பிடித்து பறக்கும் பட்டங்கள். இங்கே ஹீலியம் பட்ட்டங்கள் உண்டு. தில்லியில் பட்டம் சீசன் சுதந்திர தின சமயத்தில் - அதாவது ஜுலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை.... ஆகஸ்ட் 15 அன்று வானமே மறையும் அளவிற்கு பட்டங்கள்!

said...

ஐராவதம் வெள்ளைக்குதிரை அங்கே வந்துடுச்சா?

சீக்கிரம் திரும்ப சொல்லுங்க.

பெருமாள் காத்துக்கிட்டு இருக்காரு.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

பதிவு கொஞ்சம் நீண்டு(!) போச்சேன்னு பயந்தேன்.

உங்க பின்னூட்டம் பார்த்து மனம் நிம்மதி ஆச்சு!

நன்றி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அதானே!!!! ரெண்டு கார்களை ஒரு அம்பது மீட்டர் இடைவெளிவிட்டு இரும்பு ஒயரால் இணைச்சு அதுலேதான் பட்டங்களைக் கோர்த்து விட்டுருந்தாங்க. கூடவே மணல் சாக்கு மூட்டைகளும்.

அதான் தாக்குப்பிடிச்சிருக்கு:-))))

அடிச்ச காற்றிலே என் பட்டம் மட்டும் கைவிட்டுப்போயிருந்தால்.... நான் அம்பேல்:-)))

said...

வாங்க கொத்ஸ்.

தப்பித்தவறி ஒரு எழுத்து விட்டுப்போயிறக்கூடாதே.... அப்பதான் 'டண்'னு ஆஜர் ஆவீர்:-)

வா(ன)ண என்றுதான் வழக்கமா எழுதும் நான் உங்களை வரவழைக்கவே இப்படித் தட்டுனேன்னு சொல்லி 'அப்பீட்'ஆகிக்கறேன்:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆடிமாசம்தானே நம்மூர் பட்டம்!

இங்கே கோடை போனால் எல்லாம் போச்:(

இதுக்கு ஒரு வாரம் முந்திதான் இண்டியன் கல்ச்சுரல் க்ரூப் என்ற புதுக்குழு, பட்டம் பறக்கவிட்டு ஒரு கொண்டாட்டம் வச்சாங்க. அன்னிக்கு நம்ம கோபால் அஸ்ட்ராலியா கிளம்பற நாள் என்பதால் போகமுடியலை:(

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

ஐராவதம் யானை இல்லையோ!

உச்சைசிரவஸ் என்று வேணுமானால் சொல்லிக்கலாம். பால் வெள்ளைக்குதிரை. இந்திரனோடது. பாற்கடல் கடைஞ்சப்ப கிடைச்ச ஐஸ்வர்யங்களில் இதுவும் ஒன்னு.

said...

ஐ பட்டம், காத்தாடி, பட்டாசு, குர்ரே,
பீச்சு, கலக்குறே துள்சி. எனக்கும் கடல் காத்து அடிச்சு ஆளத் தூக்கிட்டுப் போச்சுன்னாப் பாரேன் :)

சுண்டல் மட்டும் மிஸ்ஸிங் கண்மணி.

said...

மாஞ்சா நூலில் பட்டம் விட்டு டீல் விடுவது எல்லாம் இல்லையா. பட்டத்தை நாம் செலுத்தாமல் காரில் கட்டி வைத்து/// த்ரில்லே இருக்காதே. படங்களுடன் பதிவை ரசித்தேன்.

said...

பட்டம் பறக்கட்டும்னு ஒரு படம் டிவில போட்டாங்க. அதுதான் நினைவுக்கு வந்தது மொதல்ல.

எப்பட்டம் பறந்தால் என்ன துப்பட்டம் பறக்கும் போட்டோ அட்டகாசம்.

எத்தனையெத்தனை பட்டங்கள். சின்ன வயசுல நிறைவேறாமப் போன ஆசைகள்ள ஒன்னு பட்டம்.

அப்பல்லாம் பட்டம் வாங்க முடியாது. பசங்க காகிதத்தை மடிச்சி ஒட்டி தென்னங்குச்சியெல்லாம் வெச்சு செய்வாங்க. எனக்குச் செய்யவும் வராது. அதுனால பாத்ததோட சரி.

said...

கிழிந்த சாலைகள்!

ஆனால் இந்தியாவில் நைந்த சாலைகளைப் பார்க்கலாம் - நிலநடுக்கம் இல்லாமலேயே!

பறக்கும் வெள்ளைக் குதிரை டாப்!

said...

எல்லாப்பட்டங்களை விடவும் துப்பட்டாதான் மனதில் பட்டா போட்டு உட்கார்ந்து கொண்டது.

நம்மூரிலும் சங்கராந்தி சமயம் வட மாநிலங்களில் குறிப்பாக குஜராத்தில் பட்டம் விடும் திருவிழா நடக்கும்.

ராஸ்பெர்ரி பிழைத்துக்கிடக்கிறதா? :-)

said...


புகைப்படம் அனைத்தும் அருமை காணொளியும் கண்டேன்

said...

அப்பா எத்தனை படங்கள். காத்தாடியோட காத்தாடியா பறக்க ஆசையாக இருக்கு. நூசி சம்மர் அழகா இருக்கு. பறக்குது பறக்குது முன்னாலே மஞ்சள் துப்பட்டா தன்னாலேன்னு கோபாலைப் பாடச் சொல்லி இருக்கணும். அறுபதனாயிரம் பேரா உங்க ஊரிலா. அதிசயம் தான்.

said...

நேரில் பார்த்தால் கூட இத்தனை நுணுக்கமா பார்த்த்திருக்க முடியாது . சின்ன சின்ன விவரங்கள் சொல்வதில் தான் சுவாரஸ்யம் கூடுகிறது .
அத்தனை பட்டங்களிலும்
உங்க துப்பட்டா பட்டம் தான் சூப்பர் , முகத்தில் என்ன ஒரு சந்தோசம் :)))

said...

நாங்க எங்கேயும் போகலை. எப்பவும் இங்கதான். என்ன தமிழ்மணம் என்ற ஸ்கூல் பஸ்ஸில் வராமல் பீட்லி என்ற சொந்த சைக்கிளில் வரேன். அவ்வளவுதான்!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஐயோ.... மாஞ்சா நூல் டீல் எல்லாம் விட்டா.... வெளியே இருக்கமுடியாது. உள்ளே வாசம் ஆகிரும்.

இந்த சைஸ் ராக்ஷச காற்றாடிகளைக் கையில் பிடிச்சா, பாஸ்போர்ட் இல்லாமலேயே அடுத்த நாட்டுலே போய் இறங்கவேண்டி இருக்கும்!

அடுத்த நாடுன்னதும் நினைவுக்குவருது.

ஆகாயத்தில் தொட்டில் கட்டிப் பறந்ததைச் சொன்னேனோ?
http://thulasidhalam.blogspot.com/2007/06/blog-post.html

said...

வாங்க ஜிரா.

ரசிப்புக்கு நன்றீஸ்.

நானெல்லாம் பட்டம் செய்வதில் கில்லாடி ஒரு காலத்தில். வீட்டில் இருக்கும் தென்னந் துடைப்பத்தை ஒரு வழி செஞ்சுருவேன் பட்டம் சீசன் வரும்போது!

பெரிய வால் ஒன்னு ஒட்டி கைகளை உயர்த்திப் பிடிச்சு பட்டத்தைத் தலைக்குமேல் தூக்கிக்கிட்டு ஓடுவேன். அப்பதான் மேலெழும்புமாம்:-)

பட்டம், கோலி, கிட்டிப்புள் இப்படி சட் சட்ன்னு சீஸனல் கேம்ஸ் மாறிமாறி வரும். யாரு இதுக்கான ஆரம்பம் செஞ்சு வைப்பாங்களோ:-)))))

said...

வாங்க ஸ்ரீராம்.

இந்த சாலைகள் பராமரிப்பு சமாச்சாரத்தில் நியூஸிதான் பெஸ்ட்ன்னு என் எண்ணம்.

மாலை ஆறுமணிக்கு மேல் வேலை ஆரம்பிச்சு,காலை 6 மணிக்குப் புத்தம் புதிய சாலை! பகுதி பகுதியா தொடர்ந்து பராமரிப்பு ஊரின் பகுதிகளில் சும்மாவே நடக்கும்!

வெள்ளைக்குதிரை எனக்கும் ரொம்பவே பிடிச்சது!

said...

வாங்க தேனே!

சுண்டல்.... மூச்! பேசப்டாது.

போனாப்போகுதுன்னு ஐஸ்க்ரீம் மட்டும் சிலசமயம் கிடைக்கும். அதுவும் கோன் ஐஸ். பிஸ்கெட்டில் செஞ்ச கோன் என்பதால் வீசி எறியும் குப்பைகள் இருக்காது:-)

கடற்கரைச் சாலையை ஒட்டி இருக்கும் கடைகள் ஒன்றிரண்டு இருக்கும்தான். ஆனால் மணல் வெளியிலில்லை.

என்ன பீச்சோ!!!!

said...

வாங்க சாந்தி.

துப்பட்டமே பட்டம் என்று பட்டா போட்டுக்கொடுத்த உங்களுக்கும் நம்ம ஜிராவுக்கும் போனஸ் மார்க் பத்து:-)

ராஸ்பெர்ரி, நானும் இருக்கேன்னு சொல்லி நாலு பழம் கொடுத்துச்சு.


வேலியையொட்டித்தரையில் இருப்பதால் பொழைச்சுக் கிடக்குன்னாலும் இந்த வருசம் விளைச்சல் மகாமோசம்:(

said...

வாங்க கில்லர்ஜி.

ரசித்தமைக்கு என் நன்றிகள்.

said...

வாங்க வல்லி.

நாள் பூராவும் கடற்கரைக்கு வந்து போகும் கூட்டம் இருக்கே. அதுவும் வீக் எண்ட். பஸ்க்கர் ஃபெஸ்டிவல் வேற வருது.

நம்மூரில் மொத்த ஜனத்தொகை இப்போ நாலு லட்சம்.ஊரை மீண்டும் திருப்பிக் கட்டும் Rebuild சமாச்சாரத்துக்காக ஏகப்பட்ட மக்கள் வந்துருக்காங்க வேலை செஞ்சு கொடுக்க. பிலிப்பீனோக்கள் மட்டுமே இருபதினாயிரம்!

15% மக்கள் கூடுனால்.... தப்பா:-))))

said...

வாங்க சசி கலா.

பார்த்தால் அலுக்காத சமாச்சாரங்களில் கடலும் ஒன்று இல்லையோ!!! அதான் முகத்தில் மலர்ச்சி:-))))

said...

@கொத்ஸ்,

ஆஹா.... சொந்த வண்டியில் வருவது சிறப்பு. ஆனால் வந்ததுக்கு அடையாளமா வகுப்பு ரெஜிஸ்டரில் ஒரு கையெழுத்து போட்டுருக்கலாம்:-))))

said...

சூப்பர்.