Thursday, August 31, 2006

எவ்ரிடே மனிதர்கள் -15 சாவித்திரி

சீராக ஓடிக்கிட்டு இருந்த பஸ் ஒரு குலுக்கலோடு நின்னுச்சு. நடத்துனர் அருகே வந்து,'நீங்க இறங்கவேண்டிய இடம் இதுதாம்மா'ன்னு சொல்லி என் பையையும் கையில் எடுத்து நான் கீழே இறங்குன பிறகு என் கையில் கொடுத்தார்.


கனவு கண்டுக்கிட்டு இருக்கேன்னு நினைக்கிறீங்கதானே? உண்மைக்குமே இப்படித்தான் நடந்தது. பின்னே? இது என்ன நம்ம சிங்காரச் சென்னையா?
இன்னும் தென் மாவட்டங்களில் மரியாதைக்குக் குறைவு வரலைங்களே.

மெயின் ரோடிலிருந்து கிளை பிரியும் ஒரு மண்ரோடில் இறங்கி நிக்கறேன். சுத்துமுத்தும் ஒரு பார்வை. ரோட்டின் ரெண்டு பக்கமும் வரிசையா நிக்கும் மரங்களோட வரிசையைத் தவிர ஒரு ஆளு அம்பைக் காணொம்.


முன்பின் தெரியாத இந்த ஊருலே ........... நான் எதுக்கு வந்து இறங்கி இருக்கேன்?


பை கொஞ்சம் கனம். தூக்கிக்கிட்டு நடக்கக் கொஞ்சம் சிரமமாத்தான் இருக்கு. மண்ரோடின் வளைவிலே திரும்புனதும் பளிச்சுன்னு ஒரு தெரு. ரெண்டு பக்கமும் வரிசையாத் திண்ணை வச்ச வீடுங்க. மொத வீட்டுத் திண்ணையிலே விளையாடிக்கிட்டு இருந்தச் சின்னப் பையனுங்க, ஒரு புதுமுகத்தை, அட நாந்தாங்க பார்த்ததும் ஓடிவந்து யார் வீட்டுக்குன்னு கேக்குதுங்க.


'இங்கே குருக்கள் வீடு........' ன்னு ஆரம்பிச்ச வாக்கியத்தை முடிக்கறதுக்குள்ளே என்னக் கையோடு அங்கே கொண்டு போய் சேர்த்துட்டாங்க. உள்ளெ இருந்து ஒரு வயசான அம்மா வெளியே வந்து, 'வாம்மா, கார்த்தாலே இருந்து பார்த்துண்டிருக்கேன். ஏன் இத்தனை நேரம்?' ன்னு அன்பா விசாரிச்சாங்க.


'பஸ் விசாரிச்சு வர லேட்டாயிருச்சு'ன்னு ஒரு அசட்டு சமாதானம் சொல்லிக்கிட்டே பையைக் கொண்டுபோய் உள்ளே வச்சுட்டு, அங்கே இருந்த முற்றத்தில் கைகால் கழுவிக்கிட்டு வந்து பையைத் திறந்தேன். ஆப்பிளும்,ஆரஞ்சும், சாத்துக்குடியும் வெளியே வந்தபிறகு பை காத்தா இருந்துச்சு. மூணே மூணு செட் துணிகள்தான்.


"சாவி நன்னா இருக்காளா? இப்படி உக்காந்துக்கோ. நல்லா காத்து வரும். காஃபி குடிக்கிறயா? காலம்பரப் பலகாரம்ஆச்சா? "


'சாவி நல்லா இருக்காம்மா'ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே வாசப்பக்கமிருந்து ஒரு கனைப்புச் சத்தம்.வந்தவர் சாவியோட அப்பாவாத்தான் இருக்கணும். 'சட்'னு எழுந்து 'நமஸ்காரம் மாமா'ன்னேன்.


'வாம்மா வா. பிரயாணம்செளக்கியமா இருந்ததா?' அந்த ஒரு கேள்வியிலேயே, இதுவரை இருந்த என் தயக்கம் எல்லாம் ஒரே ஓட்டம்தான். அந்தக் குரலிலிருந்த சிநேகபாவம் மனசுக்குள்ளே ஊடுருவினமாதிரி இருந்துச்சு. ஏன் இருக்காது? சாவியோட அப்பா இல்லியா, அப்ப சாவிக்கு இருக்கும் குணம் இல்லாமப் போகுமோ?


சிநேகமான பேச்சுக்கு முன்னாலே நாமெல்லாம் மனம் குழைஞ்சு, குழந்தையாயிடறோம் இல்லையா?

சாவித்திரியை சந்திச்ச அந்த சாயங்காலம் ரொம்ப நல்லா நினைவிலே இருக்கு. என்னுடைய ஒரு ஹாஸ்டல் வாசத்து முதல்நாள். நானே அங்கே அன்னிக்கு மத்தியானம்தான் போய்ச் சேர்ந்திருந்தேன். வார்டன் அம்மா சொன்னாங்க,அந்த அறையிலே நாலு பேராம். 'ஐய்யோ நாலா? ரொம்பக் கூட்டமா இருக்குமோ'ன்னு ஒரு பயம். அறைக்குப் போனப்ப,அவ்வளவா மோசமில்லைன்னு தோணுச்சு. செவ்வகவடிவா பெரிய அறைதான். பெரிய ரெட்டைக் கதவுகள்.நாலு மூலையிலும் ஒவ்வொரு கட்டில். கதவுக்கு நேரா பிரமாண்டமா ஒரு ஜன்னல். ஆமாமா, நாலு பேருக்குக் காத்து வேணாமா?
சுவருக்குள்ளேயே பதிச்சமாதிரி அறையின் ரெண்டு பக்கத்திலும் நீளத்தில் சரிபாதி தூரத்தில் ரெவ்வெண்டு அலமாரிகள்.பெரிய அளவு ஷெல்ஃப்.

அதுக்குள்ளேயே ஸூட்கேஸ்/பெட்டிகளை வச்சுக்கலாம். கீழ்த்தட்டுலே பெட்டி. அதுக்கு மேலே உள்ள தட்டில் புத்தகம் இன்ன பிற. நடுத்தட்டில் அலங்காரச்சாமான்கள், சீப்பு, கண்ணாடி வகையறா. மேலே உள்ள ரெண்டுதட்டில், ஒரு தட்டில் நிஜமான தட்டு! புரியலையா? நாம சாப்பிடும் தட்டு, ஃப்ளாஸ்க், டம்ளர் , டிஃபன் டப்பா இத்தியாதிகள்.அதுக்கும் மேலே கொஞ்சம் துணிமணிகள், நைட்டி இன்னும் அது இதுன்னு பலதும். மத்த மூணு அலமாரியிலும் இப்படித்தான் இருந்துச்சு. அதையே பார்த்து நானும் காப்பி அடிச்சுட்டேன். அதான் அலமாரிக்கெல்லாம் கதவில்லையே!



ஒரே ஒரு நடுத்தட்டில் மட்டும் ஒரு ஓரமா சாமிப் படம் இருந்தது. அதுக்கு முன்னாலே ஊதுவத்தி ஸ்டேண்டு வேற. சாயங்காலம் பறவைகள் ஒவ்வொண்ணாக் கூட்டுக்குத் திரும்புச்சு. கடைசியா வந்து சேர்ந்த பறவைதான் சாவித்திரி. அறிமுகம்ஆச்சு. என்னைவிட ஒரு ஆறேழு வயசு கூடுதல். கொஞ்சம் உயரம் குறைவுதான். பெரிய கண்கள். நீளமான சடை.முகத்துலே மட்டும் ஒரு அமைதி. கொஞ்சமா எத்துனாப்போல பற்கள்.


கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தோம்.குரலில் ஒரு சிநேக உணர்வு. அப்படியே வீட்டுலே அக்காகிட்டே பேசிக்கறதைப்
போல.எனக்கு அவுங்களை அந்த வினாடியே பிடிச்சுப்போச்சு.


இதோ, அஞ்சு நிமிஷத்துலே குளிச்சுட்டு வரேன், அப்புறமா சாப்பிடப் போலாமுன்னு போனாங்க. குளிச்சிட்டு வந்துசாமி முன்னாலே ஊதுவத்தி ஏத்திவச்சு கண்ணைமூடி ரெண்டு நிமிஷம் கும்பிட்டாங்க. பேசிக்கிட்டே சாப்பிட்டோம். சொந்த ஊர் கும்பகோணம் பக்கத்துலெ ஒரு ச்சின்ன கிராமம். இங்கே ஒரு மருந்து கம்பெனியில் வேலை.


மறுநாள் தூக்கக் கலக்கத்துலே இருக்கும்போதே, என்னை எழுப்பி காஃபி கொடுத்தது சாவி( நேத்தே பேரைச் சுருக்கிட்டேன்!)தான்.குளிச்சு, சாமி கும்பிட்டு வேலைக்குப் போகத் தயாராகிக்கிட்டு இருக்காங்க. சரியா எட்டுமணிக்கு பஸ் பிடிக்கணுமாம்.( ஆ......நான் எட்டு மணிக்கு முன்னாலே எழுந்ததே இல்லை) பத்து நிமிஷம் ஆடிஆடி நடந்தா பஸ் ஸ்டாப். ஏழே முக்காலுக்குக் கிளம்பிருவாங்களாம். கீழே போய் டைனிங் ஹாலில் டிபன் டப்பாவிலே பகல்சாப்பாட்டை எடுத்துக்கிட்டு, காலை உணவைப் பார்சல் செஞ்சுக்கிட்டுப் போகணுமாம். கம்பெனிக்குப் போனதும், கொண்டுபோன ப்ரேக்ஃபாஸ்டைச் சாப்பிட்டுட்டு வேலையை ஆரம்பிக்கச் சரியா இருக்குமாம்.



அதுக்கு அடுத்தநாள் பஸ்ஸ்டாப் வரை நானும் கூடவே போனேன். ஆச்சு காலம்பற ஒரு நல்ல வாக். அங்கே போனபிறகுதான் ஒருஇன்ப அதிர்ச்சியும் கிடைச்சது. பஸ் ஸ்டாப் பக்கத்திலே ஒரு இண்டியா காஃபி ஹவுஸ் இருக்கு. மறுநாளில் இருந்து ரெகுலரா 'வாக்'போக ஆரம்பிச்சேன்:-) பஸ் வர நேரம் இருந்தால் ரெண்டு பேரும், இல்லைன்னா சாவியை பஸ் ஏத்தி விட்டுட்டு நான் மட்டும் ஒரு 'நல்ல' காஃபி குடிச்சுட்டு மறுபடி ஆடிஆடி ஒரு வாக். எனக்கு ஆஃபீஸ் 10 மணிக்குத்தானே.


எப்படியோ எங்க மனசுக்கு ஒரு நெருக்கம் ஏற்பட்டுப்போச்சு. அப்பா ஊரிலே கோயில் குருக்கள். மூணு அக்கா, ஒரு தம்பி.பெரிய அக்காவுக்கு மட்டும் கல்யாணமாச்சு. மாப்பிள்ளையும் இன்னொரு பெரிய ஊரில் புகழ்பெற்ற கோயிலில் குருக்கள்தானாம். ஏகப்பட்ட வரும்படியாம். ஆனா............


கல்யாணமான ரெண்டே வருசத்துலே இறந்துட்டாராம். மூணுமாசக் கைக்குழந்தையோடு அக்கா, அப்பா வீட்டுக்கே வந்தாச்சாம். அந்த அதிர்ச்சியோ என்னவோ, மத்த ரெண்டுஅக்கா கல்யாணத்தைப் பத்தியும் வீட்டுலே அப்பா பேச்சே எடுக்கலையாம்.


வரதட்சிணை நிறையக் கேக்கறாங்களான்னு கேட்டு வச்சேன். அவுங்க சமுதாயத்திலே வரதட்சிணை இல்லையாமே! எனக்கு ஒரே ஆச்சரியமாப் போச்சு. அந்த ரெண்டு அக்காவுக்கும் எப்பக் கல்யாணம் முடிஞ்சு, எப்ப சாவியின் முறைவர்றது?ஹூஊஊஊம்.


இப்ப அக்காவின் குழந்தைக்கு எத்தனை வயசாம்? பதினோரு வயசாச்சாம். ஊரிலே இருக்கும் கொஞ்சூண்டு நிலத்தைஇப்ப அக்காவே பார்த்துக்குறாங்களாம். மனக்கவலையை மறக்கவோ என்னவோ எப்பவும் உடல் உழைப்புதானாம். வீட்டுக்கு ஒரு ஆம்புளைபோல எல்லா வயல் வேலையும் இழுத்துப் போட்டுக்கிட்டுச் செய்வாங்களாம்.

மருந்தடிக்கிறது,களை எடுக்கறது, அடுப்பெரிக்க விறகு வெட்டி எடுக்கறது எல்லாம் அக்கா தானாம். தம்பி சின்னவன் இல்லையா,அவன் ஹைஸ்கூல் முடிச்சுட்டு ஒரு ரேடியோ ரிப்பேர் கடையிலே வேலை.


அப்போ மத்த ரெண்டு சின்னக்காங்க? இன்னொரு ஊரில் வேலை செய்யறாங்களாம்.


எல்லாரையும் போலவே நம்ம சாவிக்கும் இளவயதுக்கே உரிய காதல், கல்யாணம் ஆசைகள் எல்லாம் இருந்தாலும் குடும்பத்தை மீறி ஒண்ணும் செய்ய விருப்பம் இல்லைதான். கொஞ்சம் பயந்த சுபாவம் வேற. ஒரு தடவை வேற ஒரு வேலைக்கு முயற்சி செஞ்சு கிடைக்கறதுபோல இருந்துச்சாம். இங்கே வேலையை விட்டுடறேன்னு சொல்லிட்டாங்களாம்.அவுங்களும் எதோ பரிசு கொடுத்து பார்ட்டி எல்லாம் வச்சாங்களாம். புதுவேலையில் சேர்ந்தப்பத்தான் அங்கே சரியில்லைன்னு மனசுக்குப் பட்டுச்சாம்.

ச்சென்னையிலே வேலை இல்லாம என்ன செய்யறது, ஏது செய்யறதுன்னு பயந்து பதறிப்போய் பழைய கம்பெனிக்குப் போனாங்களாம். முதலாளியும் ஒரு வார்த்தை மனம் நோகப்பேசாம உடனே மறுபடி வேலைக்கு எடுத்துக்கிட்டாராம். அதுலெ இருந்து சாவி வேற வேலை எதுக்கும் முயற்சிகூட செய்யலையாம். இங்கே நல்ல முதலாளி, அப்புறம் சூப்பிரவைஸரும் நல்லவங்களாம். எல்லாமே பெண்களாவே இருக்கறதாலே வேலைச்சூழல் நல்லா இருக்காம். முதலாளி நல்லவர்தான்........... ஆனால் கொடுக்கும் சம்பளம்தான் கொஞ்சம் 'கட்டை'.


எனக்கு ஒரு முறை டைஃபாயிடு ஜுரம் வந்து ஆஸ்பத்திரியில் சேரும்படி ஆச்சு. அப்பவும் என்னைப் பார்த்துக்கிட்டது நம்ம சாவிதான். காலையில் 7 மணிக்கு வந்து எனக்குத் தேவையான ஜூஸ் எல்லாம் பிழிஞ்சு வச்சிட்டு வேலைக்குப் போவாங்க. மறுபடி மாலை வந்து கூடவே இருந்து வேண்டிய உதவியைச் செஞ்சுட்டு எட்டுமணி போலத்தான் விடுதிக்குப் போவாங்க. இப்படி கிட்டத்தட்ட ஒரு மாசம்.


நல்லா ரெஸ்ட் எடுக்கணுமுன்னு சொன்னதாலேயும், இடமாற்றம் மனசுக்கு இதமா இருக்கும் என்றதாலெயும்தான் இப்ப ஓய்வுக்காக நான் சாவி வீட்டுக்கு வந்திருக்கேன். ஏற்கெனவே நாலு பொண்கள் இருக்கும் வீட்டிலே அஞ்சாவது ஒரு பொண் வந்தா அதிகமா என்ன?


கொஞ்சம்கூட பதற்றமே இல்லாத, காவிரியின் கிளை நதி ஒண்ணு அமைதியா ஓடும் ச்சின்னக் கிராமம். நல்லகாத்து, வீட்டுச் சாப்பாடு. பெரியக்கா கூடவே வயலுக்குப் போய் கொஞ்ச நேரம்,அப்புறம் ஆத்துலே குளியல், சாயந்திரம் கோயில், பள்ளிக்கூடம் விட்டதும் என்கூட விளையாடறதுக்காக ஓடிவரும் அக்கா மகள்ன்னு ரெண்டு வாரம் போனதே தெரியலை. அவுங்களையெல்லாம் விட்டுப் பிரிஞ்சு மறுபடி ச்சென்னைக்கு வந்தப்ப மனசுக்கு நல்லாவே இல்லை.



கால ஓட்டத்துலே நானும் காதலில் விழுந்தேன், கல்யாணமும் ஆச்சு. அப்புறம் ஊர் ஊராய்ப் போனதுலே, என் சாவியின் கூட இருந்த தொடர்பு அறுந்தே போச்சு. ரொம்ப நாளைக்கு அப்புறம் ச்சென்னைக்குப் போனப்ப மனசெல்லாம் சாவியைப் பார்க்கணும்ன்னே இருந்துச்சு. ஆனா.......... நாந்தான் சாவி வேலை செய்யும் கம்பெனி பேரை கடைசிவரை கேட்டுக்கவே இல்லையே(-:


விடுதியிலும் அவுங்க இப்ப இல்லையாம். ஒரு வேளை ஊருக்கே திரும்பப் போயிருப்பாங்க. அடுத்தமுறையாவது, ஊர்ப்பக்கம் போய் விசாரிக்கணும்.


ரெண்டு வருசப் பழக்கத்துலே இப்ப நான் சொன்னது ஒரு கால்வாசிதான். சாவியைப் பத்திச் சொல்ல இன்னும்எவ்வளவோ இருக்கு. இன்னொருநாள் சொல்றேன். ஆனா இப்ப ஒரே ஒரு வார்த்தை.


சாவின்னா அன்பு.
-------------


அடுத்தவாரம்: மணி.


நன்றி: தமிழோவியம்
-------------

16 comments:

said...

//சாவின்னா அன்பு//
ஆமாம் டீச்சர். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

//நாந்தான் சாவி வேலை செய்யும் கம்பெனி பேரை கடைசிவரை கேட்டுக்கவே இல்லையே//
அய்யோ, நானும் இது மாதிரி தான், நல்ல கிராமத்து நண்பன் ஒருவன் முகவரி/தொலைபேசி புக்கை, ஊர் மாறி வந்தபோது தொலைத்துவிட்டு, அவன் பிறந்த நாள் வந்தபோது பட்ட அவஸ்தை இருக்கே!...அப்பப்பா...அப்பறம் எப்படியோ கண்டுபுடிச்சேன், இரண்டு வருஷம் கழித்து!

இந்தப் பதிவைப் படிக்கும் போது, சேரன் படம் பார்த்த effect வந்தது என்னவோ உண்மை!

said...

துளசி, அன்பு செலுத்த சாவித்திரி கிடைத்தது தான் பெருமை.

இன்னும் இந்த மாதிரி எத்தனை பேர்களை நாம் சந்தித்து கடந்து விடுகிறோம்? இந்த உறவுகளுக்கெல்லாம் என்ன சொல்லி அழைக்கிறது. ஏதொ ஒரு பந்தம் நம்மைக் கட்டுகிறது. நானும் என் தோழியும் 30 வருடம் கழித்து சந்தித்தொம். பிறகு டச் இல்லை. என் மனசிலிருந்து அவள் போகவில்லை.
நானும் அவளைத்தேடி போகலை.
அவள் பெயரும் ஆறுமுகத்தாய்.உங்கள் அன்பு மாதிரி.

said...

அவங்க வீட்டுக்கு எல்லாம் போயிருக்கீங்களே, ஒரு கடிதாசி எழுதிப் போட வேண்டியதுதானே. அந்த மாதிரி சின்ன ஊரில் எல்லாம் பேரும் பதவியும் எழுதினாக் கூட போதுமே.

said...

தென் மாவட்டங்களில் மரியாதைக்கு இன்னும் "குறைவு" வரவில்லை என்பது இன்றும் உண்மைதான்.இதை நான் பல சமயம் நாகூரில் இருந்து கும்பகோணம் போகும் போது பலதடவை பார்த்திருக்கிறேன்.

நாலஞ்சு வீடு உள்ள கிராமத்துக்கு போய் யாராவது வீடு என்று கேட்டால் நம்மை அந்த வீட்டுக்கு கொண்டுவந்துவிட்டு விட்டு நாம் உள்ளே போனதும் சில நிமிடங்கள் வெளியில் நின்று பார்த்துவிட்டுத்தான் போவார்கள்.நமக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் அது அவர்கள் பழக்கம். அதோடு மட்டுமல்லாமல் சரியாகத்தான் கொண்டுவந்துவிட்டிருக்கோமா என்ற கவலை இருக்குமோ,என்னவோ?

said...

வாங்க KRS.

இளவயசுலே நான் செஞ்ச முட்டாள்த்தனமான காரியத்துலே ஒண்ணு இப்படி விலாசம், விவரம் எல்லாம்
தெரிஞ்சு வச்சுக்காமப் போனது(-:

அடுத்தமுறை எப்படியாவது கண்டு பிடிக்கணும். அதிர்ஷ்டம் இருக்கான்னு தெரியலை.

( சேரன் லெவலுக்குக் கொண்டு போனதுக்கு ஸ்பெஷல் நன்றி சொல்லலேன்னா, அந்தப் பாவம் என்னைச் சும்மா
விடுமோ? )

said...

வல்லி,

வாங்க. நலமா?
உங்க ஆறுமுகத்தாய் மாதிரிதான் சிலபேர் மனசுக்குள்ளே வந்து நல்லா
சம்மணம் போட்டு உக்காந்துக்கிறாங்க. அடிக்கடி நேரில் பார்க்காட்டாலும்
இந்த அன்பு மட்டும் குறையறதே இல்லை.

said...

கொத்ஸ்,

நாந்தான் அப்ப ஆறு மாசத்துக்கொரு ஊருன்னு அலைஞ்சுக்கிட்டே இருந்தேனே. அப்பவே தொடர்பு
அறுந்து போச்சு. மீட்டுக்கணுமுன்னு எண்ணம் வந்தப்ப வருஷங்கள் கடந்து போயிருந்தது. அதனாலேயே
ஒரு தயக்கம் வந்துருச்சு. சாவியோட அப்பா இறந்துட்டாருன்னு தெரியும். அதுக்கப்புறம் எதாவது
துன்பச் செய்தி வந்துருமோன்ற பயத்துலேயே இருந்துட்டேன். நேரில் போய்ப் பார்க்கறதுதான் நல்லதுன்னு
மனசுக்குப் படறது.

said...

வாங்க குமார். நீங்க சொல்றது மாதிரிதான் இருக்கும். சரியான வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோமான்னு
நினைப்பாங்க போல. நகர மக்களுக்கு இது என்னவோ 'நோசி'யான சமாச்சாரம்.

said...

அன்பு சினேகிதியின் பரிவையும் பாசத்தையும் பகிர்ந்ததிற்கு நன்றி. அவர்கள் குடும்பத்தின் அவல நிலை மனத்தைக் கனக்க வைக்கிறது.

said...

டைய்ஃபாய்டும் அதுவுமா நீங்க ஆத்துல குளிச்சுருக்கீங்க! (இல்ல ஐயர் வீட்ட தான் ஆகம்னு சொன்னேன்னு தப்பிக்காதீங்க..)

said...

வருகைக்கு நன்றி மணியன்.

பணம்ன்னு சொல்றது எவ்வளவு
முக்கியமுன்னு புரியறது இந்த மாதிரி சமயங்களில்தான்.
அதே போல் அன்பு காமிக்கறது எவ்வளோ பெரிய செல்வம்ன்றதும்.

said...

பொற்கொடி,

காய்ச்சல் விட்டப்புறம்தான் ரெண்டு ஆத்துக்கும் போனேன்:-))))

said...

என்னங்க துளசி, ஒரே ரூம்ல தங்கியிருந்திருக்கீங்க, ரெண்டு வருசம் பழகியிருக்கீங்க.. வேலை செஞ்ச கம்பெனி பேர தெரிஞ்சிக்காம இருந்திருக்கீங்களே.. ஒங்க கொணம் மாதிரி தெரியலையே.. ஹும்.. இப்படியெல்லாம் நடக்கறதுதான்..

ப்ராப்தம் இருந்தா நீங்க கொஞ்சமும் நெனச்சிப் பாக்காத நேரத்துல சந்திப்பு நடந்தாலும் நடக்கும்.. யார் கண்டா?

said...

வாங்க டிபிஆர்ஜோ.
32 வருசத்துக்கு முந்தி அறிவு கொறைச்சலாத்தான் இருந்து இருக்கு எனக்கு( இப்ப மட்டும் என்ன வாழுது?)
எப்படி இவ்வளொ அசட்டையா இருந்துருக்கேன்னு நினைக்கிறப்ப எனக்கு ரொம்ப அவமானமா இருக்குங்க.
உங்க வாய் முகூர்த்தம் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கணும்.

said...

///சிநேகமான பேச்சுக்கு முன்னாலே நாமெல்லாம் மனம் குழைஞ்சு, குழந்தையாயிடறோம் இல்லையா?//

உங்க துளசிதளமும் என்னை இந்த அளவு ஈர்த்தது ஸ்நேகமான நடையும் அதைவிட அதிக ஸ்நேகத்தொடு பின்னுா ட்டத்திற்கு பதில்கள் . (என் கணவர் என்னை அடிக்கடி வாங்க சசிகலா என்று சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க . )ரம்யா nice நு சொல்வா . பெரியவ சாரு (தேவிஷரண்யா ) க்கு உங்க தஞ்சாவூர் கோவில் பதிவுகளை படிக்க சொல்லி லிங்க் அனுப்பினேன் ,இப்படியாக எங்க குடும்பத்துல ஒருத்தர் ஆகிட்டீங்க .

சாவித்திரி மாதிரி ஒருத்தர் ரொம்ப ரொம்ப அபூர்வம் . இப்போஎதும் விவரம் கிடைத்ததா .

said...

வாங்க சசி கலா.

சாவியைமீண்டும் நினைக்க வச்சுட்டீங்க. இன்றையத் தூக்கம் போச்.


என்ன ஒரு அன்பு, பரிவு உள்ள ஆத்மா நம்ம சாவி!!!!

சந்திக்க இன்னும் அமையலையேப்பா:(