Friday, August 04, 2006

வரலக்ஷ்மி வருவாயம்மா......
ஆடி மாசம் வந்துருச்சு. இந்த மாசம் பவுர்ணமி வர்றதுக்கு முன்னாலே வர்ற வெள்ளிக்கிழமைஒரு விசேஷ நாள். வரலக்ஷ்மி நோம்பு/விரதம் தான் இந்த நாளில் வருது.


ஏன் இந்தப் பண்டிகையைக் கொண்டாடறோம்? இருக்கு இருக்கு, அதுக்கும் ஒரு கதை இருக்கு.


ம்ம்ம்ம்ம்ம். எல்லாரும் சத்தம் போடாம அமைதியா இருந்தாத்தான் சொல்லுவேன். ஆமா.......முந்தி ஒரு காலத்துலே, பார்வதியும் பரமசிவனும் அக்கடான்னு .... உக்காந்து பேசிக்கிட்டு இருந்தாங்க.அப்ப பார்வதி கேட்டாங்க, 'பிராண நாதரே( அந்தக் காலத்துலே இப்படித்தானே கூப்புட்டிருக்கணும்?)'பெண்கள் சகல செளபாக்கியங்களும் பெற்று வாழணுமுன்னா என்ன செய்யணும்? 'னு.


'அதென்னபெண்களுக்கு மட்டும்? ஆணுங்க எக்கேடு கெட்டாலும் பரவாயில்லையா'ன்னு ஆணியவாதிகள் கேக்கறாங்களா?
பொறுங்க. எதுக்கு இவ்வளோ கோபம்? 'நாங்கெல்லாம் நல்லா இருந்தோமுன்னா நீங்க ஆட்டோமாட்டிக்கா நல்லா இருப்பீங்க'ன்றது அந்தக் காலத்துலேயே தெளிவுபடுத்தப்பட்ட உண்மை. சரி. கதைக்கு வர்றேன்.


பரமசிவன் கொஞ்சம்கூட யோசிக்கவேயில்லை. இதுதான் சாக்கு 'டக்'னு சொல்ல ஆரம்பிச்சார்.


'லக்ஷ்மியைக் கும்பிட்டு விரதம் இருந்தால் எல்லா ஐஸ்வர்யங்களும் பெருகும்.கேட்ட வரங்களைத் தருவதால் அவள் வரலக்ஷ்மி'


ஏன் சொல்ல மாட்டார்? லக்ஷ்மி யாரு? சாக்ஷாத் அந்தப் பரமேஸ்வரனின் தங்கை.( என்ன இருந்தாலும் அவரும் ஆம்புளைதானே. சமயம் பார்த்துப் பழி தீர்த்துக்கிட்டாரு) நாத்தனாரைக் கும்பிடணுமுன்னு சொன்னதும் நியாயமா பார்வதிக்குக் கோபம் வந்திருக்கணும்.ஏன்? என்னைக் கும்பிடக்கூடாதா? உங்க தங்கச்சின்னா உங்களுக்கு எப்பவும் உசத்திதான். ஹ்ம்ம்ம்ம்ம்ம்.


ஆனா......அவுங்க என்ன நம்மைப்போல மானிடப் பிறவியா?
சாதாரண மனுஷப்பிறவிகளுக்கு இருக்கற கஷ்டங்களை என்னன்னு பட்டியல் போடுறது?நாட்டை அழிக்கப் போடுற குண்டு வீச்சுலெ இருந்து, சாகாமத் தப்பிக்கறது முதல், நாளைக்கு என்ன கொழம்பு வைக்கலாம்ன்றது வரை விதவிதமான கவலைகள் கஷ்டங்கள். ஆனா பார்வதி மேற்படி விஷயம் பரமேஸ்வரன் கிட்டே கேட்டப்ப இந்த நாடுகளை அழிக்கறதுன்றதெல்லாம் அவுங்க அதுவரை கேள்விப்படாத ஒண்ணாத்தான் இருந்திருக்கணும்.


சரி, கதைக்கு வர்றேன்.


கும்பிடப் போறதென்னவோ மனுசங்கதானே, கும்பிட்டுக்கிட்டுப் போகட்டுமுன்னு இருந்துட்டாங்க. நாத்தனார் மனம்குளிர்ந்தா, எல்லாக் குடும்பத்துலேயும் சமாதானமும் அமைதியும் நிரந்தரமாயிருமுன்னு இந்த நோம்பை மனுசங்களுக்குக்கத்துக் கொடுத்துட்டாங்க.


நோம்பு கடைப்பிடிக்கும் முறைகள் எல்லாம் அந்தந்த குடும்பத்துக்குத் தக்கபடி. சில வீடுகளில் கொண்டாடும் வழக்கமும் இருக்காது. ஆனா அதுக்கு பதிலா வேற எதாவது நோம்பு/விரதம் இருக்கும்.ஆகக்கூடி நாத்தனார் பூஜைதான் இந்த நோம்பு. நானுமிங்கே ஒரு பூஜைக்குப் போயிட்டு வந்தேன். அப்புறம் இன்னும் ரெண்டு தோழிகள் வீட்டுலே வெத்தலை பாக்கு/ஹல்தி குங்கும் வாங்கிக்கப் போக வேண்டியதாப் போச்சு.( அவுங்களுக்கும் நாத்தனார்கள் ( இங்கே) இல்லாத குறையைத் தீர்க்க என்னை விட்டா வேற யார் இருக்கா?


வலை உலக அக்கான்ற முறையில் நிறையப்பேருக்கு இப்ப வலை நாத்தனாரா இருக்கறதுலே ரொம்ப சந்தோஷம்தான்.


ஆங்.... சொல்ல மறந்துட்டேனே. இந்த வச்சுக்கொடுக்கறது அதாங்க 'ப்ளவுஸ் பிட்' எல்லாம் இப்ப சமீப காலங்களில் பொருளாய் மாறி இருக்கு. தட்டு, கிண்ணம் இப்படி. அதையும் கவனம் வச்சுக்குங்க. போன வருஷம் ஒரு தோழி கொடுத்த தட்டுக்கு ஜோடி இப்பத்தான் இன்னொரு தோழி கிட்டே இருந்து கிடைச்சது. முதல் தோழி இந்த வருஷம் கொடுத்தது கிண்ணம். அதோட ஜோடி அடுத்தவருஷம் ரெண்டாவது தோழி கிட்டே இருந்து வரணும். வந்துரும்அதெல்லாம். எங்கே போகப்போது?


தோழி வீட்டின் நோம்புக் கலசத்தின் படம் இத்துடன். கூடவே பிரசாதங்களும்( அதானே... இது இல்லாமையா?)


'அனைவருக்கும் வரலக்ஷ்மி அருள் புரியணும்' என்று மனமார வாழ்த்துகின்றேன்.

42 comments:

said...

மிஸ்,

வலை உலகில் பட்டம் கொடுக்கும் கம்பெனி ஒன்னு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன், அதுக்கு chief adviser நீங்க தான் :-)

அதே மாதிரி gifts awaiting for pair அப்படீன்னு ஒரு pay வலை தளம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன், மொத உருப்பினர் தொகை அனுப்பி அட்டை பெறவும் :-)

said...

வாங்க நன்மனம்.

ஆரம்பமே இப்படின்னா 'உரு'ப்பட்டாப்பலதான்.

//உருப்பினர்//

உறுப்பினர்

said...

நன்மனம்,

சிரிப்பானை விட்டுட்டேனே(-:

தேவையானதைப் 'போட்டு'க் கொள்ளவும்

:)))))))))))))))))))))))))))))

said...

Thanks thulasi
nanaum innikku indha pooja pannen
ana ippathan indha story terium

said...

மிஸ்னு சொன்னதுக்கு சரியா தான் திருத்தி இருக்கீங்க :-)

உருப்பிடியா ஒரு வேலை செஞ்சு உருப்படலாம்னு பாத்தா இந்த "ரு" இப்படி படுத்திடுச்சே :-(

சரி சரி ஒரு "ரு" க்கு எவ்வளவு "தள்ளு"படி வேணும்னு சொல்லுங்க, அதுக்காக உறுப்பினர் (எப்பா சரியா அடிச்சிட்டேன்) ஆகாம இருக்காதீங்க, நீங்க மொத உறுப்பினரா வந்தா அமோகமா நடக்கும்னு பேசிக்கறாங்க.:-)

said...

எங்கிருந்தாலும் நீங்கள் எல்லோரும் சம்பிரதாயங்களையும் கலாசார நிகழ்ச்சிளையும் குறைக்காமல் பழகுவது மிகவும் இனிமையாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்.

வரலஷ்மீ விரதம் கந்த புராணத்தில் இருக்கிறது. இது ஒரு elective விரதம். வேணுமானவர்கள் எடுத்துக்கொண்டு பண்ணலாம். இந்த விரத்த்தில் முக்கிய அம்சம் சரடு பூசை செய்து கையில் கட்டிக்கொள்வது.

பிரசாதங்களின் படத்தை பார்த்தால் நல்ல கொண்டாட்டம் என்றுதான் தோன்றுகிறது...

தங்கள் பதிவுக்கு நன்றி

said...

இப்பிடி கிப்ட் கிப்டா வர்ர பூஜைங்கறதால வரலட்சுமி பூஜையா!

அக்காவாயிருந்து பின்னூட்டநாயகியா இருந்து டீச்சராயிருந்து இப்ப நாத்தனாராயிட்டீங்களா....

பார்வதி நல்லவங்க போல...இல்லைன்னா நாத்தநாரா வாழநாரான்னு கிழிச்சிருக்க மாட்டாங்களா!

said...

எங்க வீட்ல கூட ஒவ்வொரு வருஷமும் எங்க அம்மா குடும்பத்தோட செய்வாங்க. ஆன இப்போ அப்பாவும், அம்மாவும் ஊரூரா போயி அஸ்வமேத யாகம் நட்த்திவற்றாங்க. வரலட்சுமி விரதம் அனுஷ்டித்தார்களா தெரியவில்லை, இன்னக்கி கேட்கனும்.

said...

துளசியக்கா!
கோவிக்கக்கூடாது. இது நம்பிக்கை என்பதைவிட; சடங்கு போல் ஆகிவிட்டது. இங்கே கோவில்களில் நடக்கும் கூத்துக்கள்; சொல்லிமாளாது. நடக்கட்டும். ஐயர்மாருக்காவது பை நிறையுது.
யோகன் பாரிஸ்

said...

அன்பு துளசி, நன்றாக இருந்தது பூஜைப் படங்கள்.

இங்கேயும் நவராத்திரி போது ச்சுண்டல் சேர்வது போல டிஷ் பாத்திரங்களும் சேரும்.
இப்பொ 20 வருடமாய் நான் ஏதாவது நியூ ஐடெம் வாங்கிக் கொடுத்துவிடுவேன். ரவிக்கை பிட் ஒரு மீட்டர் வாங்கணும்.
75ரூபாய்க்கு நல்லா வகையா பூம்புகாரில் கிடைக்கும்.

said...

நியூசியின் குளிர்காலத்தில் சுடச்சுட வடை சாப்பிட வரலக்ஷ்மி விரதமும் வேண்டியதுதான் :))

said...

HAPPY வரலட்சுமி விரதம், துளசி அக்கா :)

said...

நானும் கெளம்பிக்கிட்டே இருக்கேன், பாத்திரக்காரி கணக்கா "கலக்ஸன்"-க்கு. எங்க ஊட்டுல இந்த பூஜை பழக்கம் கெடையாது, ஆனா, "கலக்ஸன்" செஞ்சிட்டு வரும்போது, ஊட்டுக்காரர் "அவங்க வீட்டுல சாப்பிட என்னா குடுத்தாங்க"ன்னு பாப்பாரு:-) அடுத்தவங்க வீட்டு சாப்பாடு எப்பவுமே நல்லாருக்கும்.

இதுல இன்னொரு முக்கியமான கணக்கு என்னான்னா, நமக்கு கொடுத்த பொருள் உபயோகப்படாதுன்னாக்க, அத வேறு யாராவது ஒருத்தருக்கு "வச்சு கொடுத்துடலாம்". நியாபகமா, யாரு கொடுத்தாங்க, நாம் யாருக்கு கொடுக்கறோம் (அவங்களுக்கே திருப்பி வச்சு கொடுக்கக் கூடாதே!) - ஒரே அன்புத் தொல்லை தான்:-) எனக்குப் பிடிச்ச விளையாட்டு:-))

said...

திரெளபதி அம்மன் கோயிலில் சுண்டல் கொடுப்பது போல 'தட்டு ஜாக்கெட் பிட்டு' அப்படித்தானே அக்கா அதுவும்.

said...

போரும் குண்டு வீச்சும் பற்றி நீங்க எழுதியதைப் படித்ததும் இன்றைக்குக் காலையில் இந்துவில் பார்த்த புகைப்படம் நினைவுக்கு வந்தது. ஒரு அம்மா இரண்டு பிள்ளைகளோட பயந்த முகத்துடன் நிற்கிறாங்க. எல்லோருக்கும் நல்ல அறிவு வந்து இந்த அழிவுகள் நிற்க அருள் கிடைக்க வேண்டும்.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

நன்மனம்,

உங்கமனசு என்னத்து வீணா நோகணும். நானே நேரில் வந்து 'போணி ' பண்ணிடறேன்.
வந்து போகறதுக்கான டிக்கெட்டை உடனே அனுப்புங்க.:-))))

said...

வாங்க ஜயராமன்,

சரடு எல்லாம் பூஜித்துக் கையில் கட்டியாச்சுதான்.

என்ன ஒரு மனக்குறைன்னா, நமக்கு அப்புறம் இந்த சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்க
யாரும் இல்லைன்றதுதான். மகளும் பூஜைக்கு என்கூடவே வந்திருந்தாள்ன்னு சொன்னாலும்,
எவ்வளவுதூரம் அவள் வாழ்க்கையில் இதைச் செய்வாள்னு நினைக்கக்கூட முடியலை(-:

நாம இருக்கறவரை முடிஞ்சவரை செஞ்சுறலாமுன்னுதான் எல்லாப் பண்டிகைகளையும்
கஷ்டம் பார்க்காமச் செஞ்சுடறேன்.

நடக்கறபடி நடக்கட்டும். எதுவும் நம்ம கையில் இல்லை.

said...

ராகவன்,
சாமிங்களுக்கு நடுவிலே பிரச்சனை ஒண்ணும் இல்லை. எல்லாம் மனுஷங்களாலெ வர்றதுதான்.
பார்வதிக்கு பெரிய மனசு. அப்படியே எல்லோருக்கும் லபிக்கணுமுன்னு என்னோட ஆசை.

said...

சிவமுருகன்,

என்ன சொல்றீங்க.... அஸ்வமேத யாகமா? நிஜமா? நிஜ அஸ்வமா?
அப்பாஅம்மாட்டே கேட்டு கொஞ்சம் விவரம் சொல்லுங்களேன்.

said...

யோகன்,
நம்பிக்கையோ இல்லை சடங்கோ எப்படி வச்சுக்கிட்டாலும் நாலு நண்பர்களைப் பார்க்கவும்,
முக்கியமா ஒரு புடவை மற்ற நம் கலாச்சார உடைகளை உடுத்தவும் இதையெல்லாம் விட்டா
வெளிநாட்டுலெ இருக்கப்பட்ட ஆளுங்களுக்கு வேற ஏது ச்சான்ஸ்?

said...

வல்லி,
ரவிக்கை பிட்டுக்கு இந்த பாத்திரங்கள் எவ்வளவோ மேல். ச்சின்னச் சின்ன கலைப்பொருள்கள் கூடக்
கொடுக்கலாம். சொல்ல மறந்துட்டேன், பூஜை முடிஞ்சதும் ஒரு ச்சின்ன புள்ளையார் ( சுவத்துலே மாட்டறமாதிரி)
கிடைச்சார். நம்ம யானை/புள்ளையார் கலெக்ஷனுக்கு ஆச்சு:-)))

said...

மணியன்,

வடையும் பருப்புவடைதான். ஏறக்குறைய மசால்வடை. வெங்காயம் & மசாலா சாமான்கள் மிஸ்ஸிங்.
அது பரவாயில்லை. சமாளிச்சுட்டோம். லஞ்சும் அங்கேதான்.
அப்பம், வடை, சக்கரைப்பொங்கல், பஞ்சாமிர்தம், இட்டிலி, சாம்பார், எலுமிச்சை சாதம், தயிர் சாதம்,
தேங்காய் சாதம், அவியல், பீன்ஸ் பருப்பு பொரியல், பொரித்தவடாம், மோர்க்குழம்பு இருந்தது.
இன்னொரு தோழி 'சக்கரை போளி' செஞ்சு கொண்டு வந்திருந்தாங்க. அதெல்லாம் ஜமாய்ச்சுட்டோம்.

said...

ரமணி, நன்றி. உங்களுக்கும் வாழ்த்து(க்)கள்.

said...

ஏங்க கெக்கெபிக்குன்னு,

வச்சுக் கொடுக்க( வாங்க)றதுலே 'ப்ளவுஸ் பிட்' தான் பிடிக்காத ஒரே விஷயம். முதலாவது
கலர். வேண்டாத கலர்கள்தான் பெரும்பாலும் வந்து சேரும். அதுக்குன்னு புடவை வாங்க முடியுமா?

அப்படியே சில சமயம் வேண்டிய கலர் கிடைச்சாலும் துணியின் அளவு பத்தாம இருக்கும். இல்லைன்னா
தரம் அவ்வளவா நல்லா இருக்காமப் போகவும் வாய்ப்பு இருக்கு.
இதையெல்லாம் நாம ரீ சைக்கிள் முறையிலே 'வச்சு' கொடுக்கப்போய், அது கொடுத்த வீட்டுக்கே திருப்பிப் போச்சுனா
அவ்ளோதான். இந்த வம்பெல்லாம் வேணாமுன்னுதான் 'கலைப் பொருள்கள்' கொடுத்துடறது. இல்லைன்னா இருக்கவே
இருக்கு பாத்திரங்கள். ஆனா சைஸ்தான் 'ச்சின்னதா' இருக்கும். அதைப் பார்த்தா முடியுமா? :-))))

said...

என்னார்,
இது அப்படி இல்லைங்க. திரெளபதி அம்மன் கோயில் சுண்டலுக்கு யாரு வேணுமுன்னாலும் கை நீட்டிறலாம்.
இங்கே? நம்மளைக் கூப்புட்டுக் கொடுக்கணும், ஆமா.:-)))

said...

சிவகுமார்,

மனசுக்கு வருத்தமாத்தான் இருக்கு. மனுஷ இனம் ஏந்தான் இப்படி கொன்னுகுவிக்க ஆசைப்படுதுன்னு தெரியலை.
நல்ல புத்தி வேணுமுன்னு வேண்ட இன்னொரு விரதத்தை ஏற்படுத்தணும் நாம்.

said...

அனிதா,

கதை தெரிஞ்சுக்கிட்டீங்க. அடுத்து நாத்த'நாரை' கவனிக்கணும்:-))))

said...

அக்கா
அது எனக்குத் தெரியாதல்லவா? கதையைச் செல்லி சுண்டல் கொடுத்தார்கள் தூங்கி முழித்து வாங்கி வந்திருக்கேன் .

said...

அனைவருக்கும் வரலக்ஷ்மி அருள் புரிய வேணும்னு மனமார வாழ்த்துகிறேன்

said...

எங்க வீட்டுக்கு முருகனும்,ஒரு கண்ணாடி ஸ்வானும் வந்தஆங்க. பரிசா.
ரவிக்கைத் துணி வாங்கி நான் சந்தோஷப்பட்ட நாளே கிடையாது.
நம்மா வாகு அப்படி. :-)))அதனாலெ மத்தவங்களுக்கும் குறைச்சு கொடுக்க மனசு வராது/.
கிஃப்ட்ஸ் பெஸ்ட்.

said...

என்னார்,
இப்படி 'கதை'ன்னதும் தூங்குனா எப்படி?:-)))))

said...

சிஜி,

நீங்க பெரியவர். உங்க ஆசீர்வாதம் அப்படியே பலிக்கட்டும்.

said...

வல்லி,

'முருகனும், கண்ணாடி அன்னமும்'

பேஷ் பேஷ்.

said...

//என்ன சொல்றீங்க.... அஸ்வமேத யாகமா? நிஜமா? நிஜ அஸ்வமா?
அப்பாஅம்மாட்டே கேட்டு கொஞ்சம் விவரம் சொல்லுங்களேன்.\\


அஸ்வமேத யாகம் பற்றி ஒரு பின்னூட்டமாக இடுவதை விட ஒரு பதிவாக இடலாமென இட்டுள்ளேன்.

said...

'அதென்னபெண்களுக்கு மட்டும்? ஆணுங்க எக்கேடு கெட்டாலும் பரவாயில்லையா'ன்னு ஆணியவாதிகள் கேக்கறாங்களா?
பொறுங்க. எதுக்கு இவ்வளோ கோபம்? 'நாங்கெல்லாம் நல்லா இருந்தோமுன்னா நீங்க ஆட்டோமாட்டிக்கா நல்லா இருப்பீங்க'ன்றது அந்தக் காலத்துலேயே தெளிவுபடுத்தப்பட்ட உண்மை.//

அதானே.. குடும்ப பொண்ணுங்நல்லாருந்தா குடும்பமே நல்லாருக்கறா மாதிரிதானே..

said...

வாங்க டிபிஆர்ஜோ.

எங்க பாட்டியும் எப்பவும் இதைச் சொல்வாங்கதான். வீட்டுப் பொண்கள் கண்ணீர் விட்டா அந்த வீடு
உருப்படாதுன்னு. அது என்னவோ நிஜம்தான். சந்தோஷம் இருக்கற வீடு கொடுப்பனைதானே?

said...

வரலக்ஷ்மி விரதம் - கூகிளில் தேடிய உடன் முதலில் முந்தி நிற்கிறது, வாழ்த்துக்கள்!

said...

துளசிம்மா
நீங்க என்ன தான் வலைநாத்தனாரா இருந்தாலும் வலையம்மாதானே?
என்ன சொல்றீங்க?

///.( அவுங்களுக்கும் நாத்தனார்கள் ( இங்கே) இல்லாத குறையைத் தீர்க்க என்னை விட்டா வேற யார் இருக்கா?///

இங்க வந்து பாருங்க நாத்தனாரை.
http://madhumithaa.blogspot.com/2006/08/blog-post.html


பட்டம் கம்பெனி ஆரம்பிக்கிறவங்க இங்க கேட்காம ஆரம்பிக்கக்கூடாதுன்னு நீங்களாவது சொல்ல வேணாமா:-))))))

கொஞ்ச நாள் ப்ளாகுக்கு வரலைன்னா இப்படியும் மறந்து போவாங்களா என்ன?

/// சந்தோஷம் இருக்கற வீடு கொடுப்பனைதானே?///

ரொம்பவும் கொடுப்பனை தான்

said...

அட, ஜீவா.

வாங்க வாங்க. என்ன ரொம்பநாளா ஆளைக்காணோமே?
நலம்தானே?

முதலில் நிக்கறேனா க்யூவிலே? :-))))
பரவாயில்லையே.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

மது,
அம்மா நாத்தனாரா இருக்கக்கூடாதா?
"ஒரு நாத்தனார் அம்மா ஆகிறாள்" புதுப் பதிவுக்குத் தலைப்பு நல்லா இருக்கா?

கொஞ்சநாள் வரலைன்னா 'மறதி' சகஜம். அவுட் ஆஃப் சைட் அவுட் ஆஃப் .......
இதெல்லாம் வலை உலகில் சகஜமப்பா:-)))))

தோழியே நாத்தனார் ஆனால்........ கவிதை நல்லா இருக்கு.

said...

/// "ஒரு நாத்தனார் அம்மா ஆகிறாள்" புதுப் பதிவுக்குத் தலைப்பு ///

ஆஹா!
அருமையான தலைப்பும்மா.

தோழியான நாத்தனார்
நாத்தனார் மட்டுமானார்.

இது தான் கருத்து.

கவிதைக்கு கருத்து விளக்கம் சொல்றவங்களை என்ன சொல்லணும்?????

said...

மது,

:-)))))))))))