Saturday, August 05, 2006

எவ்ரிடே மனிதர்கள் -12 ராஜகோபால்

வீட்டுக்குப் பின்னாலே இருக்கற மரத்திலே இருந்து மெல்லிசா இருக்கற கிளைய ஒடிச்சு அதுலே இருக்கற இலையை உருவிப் போட்டுட்டு, நீளமான சின்னக் குச்சியா எடுத்துக்கிட்டு மூணாங்கட்டுலே இருக்கற முற்றத்துப் பக்கம் போறார் நம்ம ராஜகோபால்.


ரெண்டு சின்னப் புள்ளைங்க மூணும் நாலுமா வயசு இருக்கும் போல, அங்கெ உக்காந்து வெளிக்குப் போய்க்கிட்டு இருக்குங்க. அய்யய்ய.... இது என்னா பழக்கம், இங்கெ உக்கார்றது?.... அப்ப வீட்டுக்குள்ளே இருந்து ஓடிவருது இன்னொண்ணு. அதுவும் அங்கதான்..... ச்சீச்சீ.... இது என்னடா கண்றாவி?


ராஜகோபால் இதுகளை அடிக்கத்தான் குச்சி கொண்டு வர்றாரோன்னு நினைச்சிங்கன்னா.....? ஊஹூம்... இல்லை.


மொதல் குழந்தை பிறந்து நடக்க ஆரம்பிச்ச புதுசில் ஒரு நாள் குழந்தைக்கு பேதி மருந்து( எல்லாம் விளக்கெண்ணெய்தான்)கொடுத்தாங்க பாருங்க அன்னைக்கு ஆரம்பிச்ச விஷயம் இது. குழந்தையை வெளியே 'உக்காரவச்சுட்டு' அது போன சமாச்சாரத்துலே புழு இருக்கான்னு பார்க்கறது. ரெண்டு மூணு முறை 'வெளியானதுக்கு' அப்புறம் 'பரிசோதிச்சுட்டு'அப்பாடா.... குழந்தை வயத்துலே புழு இல்லை'ன்னு ஏற்படுற திருப்திக்கு இவர் அடிமை.


இப்பத்தெரிஞ்சுதா... எதுக்கு அந்தக் குச்சின்னு?


குடும்பம், மனைவி, பிள்ளைகள் மேலே ரொம்பப் பாசமா இருப்பார்.
குடும்பத்துக்காக அயராம உழைக்கிறவர்.அவ்வளவாத் தமிழ்ப் பேச வராது. அந்தக் காலகட்டத்துலே அது ஒரு பிரச்சனையாவும் இருக்கலை. அப்ப அந்த ஊர் வெறும் சென்னப்பட்டணம்.


இப்ப ஆந்திரான்னு சொல்லப்படுற மாநிலத்துலே நெல்லூர்ன்னு ஒரு ஊர்லெ இருந்து ஊர் மக்களால் ஒதுக்கப்பட்டு,இங்கே வந்து குடியேறிய ஒரு குடும்பம். அப்படி என்ன தப்பு செஞ்சாங்களாம், ஊரே ஒதுக்கி வைக்குமளவுக்கு?



தப்புதான். பெரிய தப்பு. ஊர்க் கட்டுப்பாட்டை மீறுனது தப்புதானே. எதுக்காக ஊர்க் கட்டுப்பாட்டை மீறுனாங்களாம்?


விஷயம் இல்லாமயா? இருக்கே. ஆறு வயசுலே கல்யாணம் முடிச்சு, எண்ணி ஏழே மாசத்துலே கைம்பெண்ணாகிய மச்சினிக்கு, ஊர் வழக்கப்படி தலையை மழிக்க இடைஞ்சலா நின்னது தப்பில்லையா? ஊர் சொல்லிப் பார்த்துச்சு.நம்ம ராஜகோபாலோட மூத்த மகனுக்கும், இவரோட மைத்துனிக்கும் வயசு வித்தியாசம் வெறும் மூணுதான். தன்னோட பிள்ளையைப் போலத்தான் அந்தப் பொண்ணையும் நினைச்சார். அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு இப்படி விதவைக்கோலம் கட்ட அவர் மனசு சம்மதிக்கலை. அதுக்காக ஊர் மக்களோடு போட்ட சண்டையிலேதான், இந்தக் குடும்பத்தையே ஒதுக்கி வைக்கும்படி ஆச்சு.


வந்த விலைக்கு, இருந்த நிலபுலன்களை வித்துட்டு மாமனார் மாமியார் குடும்பத்தோட சேர்ந்து இவரும் இங்கே வந்துசேர்ந்தார். ச்சின்னதும் பெருசுமா சில வியாபாரங்களைப் பண்ணி இருக்காங்க. ச்சின்ன மகளோட வாழ்க்கை இப்படிஆகிப்போச்சேன்ற மனக்கவலையிலே பெரியவர் சீக்கிரமே உலகை விட்டுப் போனாராம். அவர் அந்தக் கால மருத்துவர்.


நெல்லூர் பகுதியிலேயே ரொம்பப் பேர் போனவராம். சுத்துப்பட்டு கிராமங்களிலெ இருந்து ஓயாம நோயாளிங்க வந்துக்கிட்டு இருப்பாங்களாம்.நல்ல கைராசிக்காரர். பெண்கள் கையைப் பிடிச்சு நாடி பார்க்கக் கூச்சப்பட்டுக்கிட்டு,ஒரு பட்டுத்துணியை நோயாளி கைமெலே போட்டு அதும்வழியா நாடி பிடிச்சுப் பார்ப்பாராம். அவ்வளோ நல்லமனுஷன்.

ஆனாலும் ஊர்க் கட்டுப்பாட்டுக்கு தலை வணங்கித்தானே ஆகணும்.
மாமனார் போனவுடன் மாமியார், மச்சினியோட பொறுப்பும் இவருக்குத்தான் வந்தது. ஏற்கெனவே கூட்டுக்குடும்பமா இருந்ததாலே ரொம்பக் கஷ்டப்படலையாம். அப்படி இப்படின்னு இவருக்கும் ஏகப்பட்ட புள்ளைகுட்டிங்க. அதுகளோடயே மச்சினியையும் படிக்க வச்சார். இவருக்கே 12 புள்ளைங்க. இதுலே கூட இன்னொரு புள்ளையா அந்த மச்சினி.


ரொம்பக் கணக்கா செலவழிப்பாராம். ஒவ்வொரு வியாபாரமாப் பார்த்துக் கடைசியிலே ஒரு பொடிக் கம்பெனி ஆரம்பிச்சார்.அசல் பட்டணம் பொடி. நல்ல சரக்கு. சீக்கிரம் நல்ல பேர் வாங்கிருச்சு. வெள்ளைக்காரன் ஆண்டுக்கிட்டு இருந்த காலம்.இந்தப் பொடியைப் போட்ட யாரோ ஒரு மகானுபாவராலே இது இங்கிலாந்துக்கு ஏற்றுமதியாற அளவுக்குப் போச்சு.
மதராஸுலேயே நாலு இடத்துலே கடைங்க போட்டாச்சு. பிஸினஸ் அமோகம். எல்லாப் பிள்ளைகளுக்கும் பார்த்துப்பார்த்துச் செய்வாராம். புள்ளைங்க ஆரோக்கியத்துலே எப்பவும் கண்ணு. அதான் இப்படிக் குச்சி வச்சிக்கிட்டு.......


என்னதான் பணவரவு இருந்தாலும், சீரும் செட்டுமா இருந்தாத்தானே நல்லது. இவரோட மனைவிக்கு கை கொஞ்சம் தாராளம். எல்லாம் பெரிய அளவுலெதான் சமையல் இன்னும் எல்லாமும். இவரோ கணக்கு. கொஞ்சம் கருமி கூட.இந்தக் கருமித்தனம் இவர் வரைக்கும்தான். புள்ளைங்களுக்கு குறை ஒண்ணும் வைக்கலை.


பொடி செய்யறதுக்காக, அசல் நெய் பெரிய பெரிய டின்களிலே வீட்டுக்கு வந்து இறங்குமாம். பகல் சாப்பாட்டுக்கு இவர் வந்ததும் சாதம் பறிமாறிட்டு, நெய் ஊத்தறப்ப, நாலு சொட்டு இலையிலே விழறதுக்குள்ளேயே போதும் போதும்ன்னு சொல்லி இலைக்குக் குறுக்கா கை வச்சு மறிப்பராம். சாப்பிடும்போது, ஆஹா.... என்ன மணமான நெய். நாலு சொட்டுலேயே எவ்வளவு ருசின்னு ஒரே பாராட்டு. இருக்காதா பின்னே? அதான் சாதம் பறிமாறும்போதே நல்ல விழுது நெய் ரெண்டு முட்டைக்கரண்டி அளவு அந்த சாதத்துக்குள்ளே ஒளிச்சு வச்சிருப்பாங்களே அவர் மனைவி.


மச்சினிச்சியும் நல்லாப் படிச்சாங்க. பாட்டுச் சொல்லிக் கொடுக்க ஒரு டீச்சர் வீட்டுக்கு வருவாங்களாம். அதான் ஏகப்பட்ட பிள்ளைங்க, ஒரு வகுப்புக்கு வர்ற அளவுக்கு இருக்கே. மச்சினிச்சி ரொம்ப நல்லாப் பாடுவாங்களாம்.அதுக்கப்புறம் அவுங்களை டீச்சர் வேலைக்குன்னு டீச்சர் ட்ரெயினிங்குக்கு அனுப்புனார். இவுங்கதான் இந்தக் குடும்பத்துலெயே வெளியே வேலைக்குன்னு போன முதல் பொண்ணு.


இவரோட மூத்த பொண்ணும் நல்லாப் படிக்கிறவங்கதானாம். மாமனாரின் நினைவா இவுங்களை மருத்துவம் படிக்க வச்சார். அந்தக் காலத்துலெ மெட்ராஸ் மெடிகல் காலெஜிலே படிக்கறதுன்னா சும்மாவா? இவரோட பையனுங்கதான் யாருமே சரியாப் படிக்கலை. இவருக்கு ஆறு பையனுங்க. எல்லாரும் ஸ்கூல் ஃபைனலைத் தாண்டவே சிரமப்பட்டுருக்காங்க. அதான் கடைங்க இருக்கே, ஆளுக்கொண்ணாப் பார்த்துக்குங்கன்னு விட்டுருக்கார்.


சுதந்திரப் போராட்டம் வலுவடைஞ்சுக்கிட்டு இருந்த நேரம். காங்கிரஸ் கட்சிமேலே மக்களுக்கு ஒரு ஈர்ப்பு.இவரோட ரெண்டாவது மகன் இதுலே ரொம்ப ஆர்வமாப் பங்கெடுப்பாராம். எப்பவும் கதர்துணிகள் தான் போட்டுக்குவாராம். நேரு ஸ்டைல் குர்த்தா, வெஸ்ட்கோட்டுன்னு இருப்பாராம். இதெல்லாம் பார்த்த ராஜகோபாலுக்கு மனசுக்கு திருப்தியாத்தான் இருந்துச்சாம். ரெண்டாவது பொண்ணைத்தவிர, அதுக்குக் கீழே இருந்த மத்த பொண்ணுங்க எல்லாரும் படிச்சு வாத்தியார் வேலைக்கே போக ஆரம்பிச்சாங்க. கடைசி ரெண்டு பொண்ணுங்க மட்டும் பட்டப்படிப்பு படிச்சு அப்புறம் டீச்சரானாங்களாம்.



குடும்பத்துலெ, பிள்ளைங்களுக்குக் கல்யாணம் காட்சின்னு நடந்துருக்கு. இதுக்கு நடுவிலே தூரத்து சொந்தக்காரங்கமூலமா, தான் ஒரு விதவைன்னு தெரிஞ்சுக்கிட்ட மச்சினி பொட்டு வைக்கிறதையும் பூச்சூடுறதையும் விட்டுட்டாங்களாம்.அப்பதான் அவுங்க வேலைக்குப் போக ஆரம்பிச்ச நேரமாம். இவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்துருக்கார்' இதெல்லாம் வேணாம்மா. பேசாம ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கோ'ன்னு. அவுங்க கேக்கலையாம். இது அவருக்கு ஒருபெரிய மனக்குறையா ஆயிருச்சு.


இப்படி இருந்தவருக்கு அவர் வியாபாரத்துலே பழக்கமான ஒருத்தர் மூலமா, ராமலிங்கசுவாமிகளைப் பத்தித் தெரியவந்து அப்படியே ரொம்ப பக்திமானா ஆயிட்டாராம். 'அருட்பெருஞ்சோதி-தனிப்பெருங்கருணை'ன்னு எப்பவும் சொல்ல ஆரம்பிச்சாராம். முக்காவாசித் தெலுங்குக்காரர்களைப்போல இவுங்க குடும்பம் அந்தத் திருப்பதிப் பெருமாளையே வழிபடும் குடும்பம்தானாம். ஆனா இவர் மட்டும் விபூதி பூசறதும், அருட்பா சொல்றதுமா மாறிட்டாராம். இந்தப் புத்தகம் படிக்கறதுக்காகவே தனியா ஒரு வாத்தியார் வச்சுத் தமிழ்ப் படிக்கக் கத்துக்கிட்டாராம் அந்த வயசுலே.


கடைசி மகள் பட்டப் படிப்பு கடைசி வருசம் படிக்கிறப்ப, இவருக்கு முதுகுலே ஒரு கட்டி வந்துருக்கு. அதுலே இருந்து உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமா கீழே போக ஆரம்பிச்சிருக்கு. தினமும் வீட்டுக்கு ஒரு நர்ஸ் வந்து கட்டி உடைஞ்சு புண்ணாக இருந்ததுக்கு ட்ரெஸ்ஸிங் செஞ்சுட்டுப் போவாங்களாம்.

ஒரு வெள்ளிக்கிழமையன்னிக்கு சாயந்திரமா குத்து விளக்கை ஏத்தி பக்கத்துலே கொண்டு வைக்கச் சொன்னாராம். மனைவி விளக்கைக் கொண்டுவச்சாங்களாம். அருட்பா சொல்ல ஆரம்பிச்சார். முடியலைன்னு கொஞ்சம் சாஞ்சு படுத்தவர் திடீர்ன்னு எழுந்து உக்காந்து," அடடா... என்னப்பனே நடராஜா.... எவ்வளோ ஆனந்தமா இருக்கு உன் ஆட்டம்"ன்னு சொல்லிக்கிட்டேக் கையாலே தாளம் போட்டுருக்கார். பார்வை மட்டும் எங்கியோ தொலை தூரத்துலே நின்னிருக்கு. அப்படியே ஒரு ரெண்டு நிமிஷம். அவ்வளவுதான்........................ அவர் கதை முடிஞ்சது. பக்கத்துலே இருந்த குத்து விளக்கும் தானா அணைஞ்சது.

சமுதாயத்துக்காக பெரிய அளவுலே புரட்சின்னு செய்யாட்டாலும், பெண் விடுதலைக்கு அவராலே ஆனதைச் செஞ்சிருக்காருன்னுதான் சொல்லணும். மேற்படி விஷயங்கள் எல்லாம் என் அம்மா பலமுறை சொல்லிக்கேட்டதுதான். என் அம்மாவோட தகப்பனார்தான் இந்த ராஜகோபால்.
--------------
அடுத்த வாரம்:

சிந்தியா
--------------

நன்றி: தமிழோவியம்

18 comments:

said...

சமூகப் புரட்சியாளர் ஒருவரின்
பேத்தியா நீங்க..good...very good

said...

//," அடடா... என்னப்பனே நடராஜா.... எவ்வளோ ஆனந்தமா இருக்கு உன் ஆட்டம்"ன்னு //


தில்லையில் ஆடுபவன் இருக்கான்னு சொல்லாம சொன்ன உங்க பதிவுக்கு என் மனப்பூர்வமான, வாழ்த்துகளும், நன்றியும்!


என்ன ஒரு நல்ல மனிதர்!
இவரை அடையாளம் காட்டி ஒரு கணம் நெகிழ வைத்து விட்டீர்கள்! நன்றி!

said...

துளசி, ரொம்பப் பெருமையா இருக்கு தாத்தா ராஜகோபாலனைப் பற்றிக் கேட்க.
இத்தனை குழந்தைகளுக்கும் படிப்பு,சாப்பாடு,உடை எல்லாம் சமாளித்துக்
கொள்கைப்பிடிப்போடும் இருந்து இருக்கிறார்.
எஙக வீட்டுத் தாத்தாவும் ராஜகோபாலன் தான். அவர் வக்கீல் தொழிலுக்கு முழுக்குப் போட்டு கிராமத்துக்குப் போனார்.
எவ்வளவோ பேருக்கு உதவி செய்தார்.
அவருக்கு கிசான்களிடம்(!!) கொஞ்சமாக வசூல் செய்வதில் மிக விருப்பம்.
அவர்களுக்கு நிறைய கொடுத்துவிட்டு வீட்டுக்கும் அரிசி ,பருப்பும் கொண்டுவர அப்போது வசதி இருந்தது.
பாட்டி அலுத்துக் கொள்வார்.
ஆனாலும் மாட்டு வண்டியை கும்பகோணத்திலிருந்து ஓட்டி வரும்
வண்டிக்காரருக்கு மணக்க மணக்க்க் குழம்பும் சோறும் ரெடியாகப் போட்டு விடுவார்.!!

said...

சிஜி,

இப்ப நீங்க சொன்னதுக்கப்புறம்தான் எனக்கு இப்படி ஒரு பெருமை இருக்கறது தெரியுது.:-)
நன்றி.

said...

வாங்க SK.

நலமா? அதாங்க எனக்கும் ஆச்சரியமா இருக்கும். நம்ம வீட்டுலெ மத்த எல்லாரும்
கொஞ்சம் வீர வைஷ்ணவர்கள். அப்படி இருக்க இவர் மட்டும் எப்படி சிவனை மனசுலே
சுமந்தார்? ஒருவேளை நாம்தான் இப்படி ஹரி, சிவன்னு பாகுபாடு சொல்றோம். கடைசியிலே
எல்லாம் ஒண்ணுன்னு கடவுளே காமிச்சுட்டார்போல.

said...

வல்லி,
நம்ம முன்னோர்கள் மனசுலெ கருணையும் தயையும் இருந்ததாலேதான் தர்மம் நியாயம் எல்லாம்
வழிவழியா வந்துக்கிட்டு இருக்கு. தர்மச்சக்கரம்ன்றது இதுதான். அது எப்பவும் நம்மைக் கைவிடாது.

said...

//என்ன ஒரு நல்ல மனிதர்!
இவரை அடையாளம் காட்டி ஒரு கணம் நெகிழ வைத்து விட்டீர்கள்! நன்றி! //

இதே தான் சொல்லனம்னு தோணிச்சு!

said...

நன்றி நன்மனம்.

அம்மா இருந்து இதைக் கேட்டுருந்தா
ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க.

said...

ஒரு ஊரேஎதிர்த்தபோதும் கொள்கையை விடாமல் ஊரை விட்ட பெரியவரின் பேத்தியின் பதிவிது என்று எங்களுக்கும் பெருமையாக இருக்கிறது.
எல்லாமே வணிகநோக்கில் இயங்கும் உலகில் அவரது போன்ற மனிதநேயப் பண்புகள் அருகி வருகின்றனவோ ?

said...

Alexander the Great என்று பாடம் படிக்கும் இந்தக் காலக் குழந்தைகளுக்கும் கிரேட் என்றால் என்ன என்று நமது முன்னோர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். இப்படி வாழ்ந்தவங்கதானே உண்மையிலேயே கிரேட். நல்ல ஒரு மனிதரை அறிமுகம் செய்ததற்கு நன்றி அக்கா.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

வாங்க மணியன்.

அவர் இருந்த காலத்தில் பரவலாக இதுபோல எத்தனையோ நடந்திருக்கலாம். அப்பெல்லாம் இவர்
ஏன் எதிர்ப்பு தெரிவிக்கலை? இல்லே எதிர்ப்பைக் காமிச்சுக்கிட்டுத்தான் இருந்தாரா? எனக்கு விவரம்
தெரியாது. ஆனா தன்னோட குடும்பத்துலே நடக்க இருந்த விபரீதத்தை, நடக்கவிடாம துணிஞ்சு
செயல்பட்டிருக்கார். அதோட நிறுத்திக்காம, அவுங்களைப் படிக்கவச்சார் பாருங்க, அதுதான் இன்னிக்கு
நம்ம குடும்பத்துலெ ஒரு சிலரைத்தவிர எல்லாருமே வேலை செய்யும் பெண்களா ஆனதுக்கு முன்னோடி.

said...

சிவகுமார்,

எப்பவும் நமக்கு அயல்நாட்டுக் கண்டுபிடிப்பு, மனுஷர்கள், நாகரீகம், பழக்கவழக்கம் இதெல்லாம்தான்
பெருசா இருக்கு. உள்ளூர் விஷயத்தைக் கண்டுக்கறதே இல்லை. நல்லா கவனிச்சுப் பார்த்தா எவ்வளோ
நல்லமனிதர்கள், சமூகத்தை மேலே கொண்டு வர நினைச்ச சாதாரண மனிதர்கள் அநேகமா ஒவ்வொரு
குடும்பத்திலும் குறைஞ்சது ஒருத்தராவது இருந்துருக்காங்கதான். அவுங்களைப் பத்திச் சொல்றதுக்கும்,
அப்படிச் சொன்னா கேக்கறதுக்கும் யாரும் இல்லை, அதுக்கு நேரமும் இல்லை.(-:

said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
துளசியக்கா

said...

வணக்கம்.மலேசியாவில் கூட அந்த காலத்தில் பெண் பிள்ளைக்கு ஏன் படிப்பு என்று தமிழ்ப்பள்ளியோடு நிறுத்தி விடுவார்கள்.அதுவும் 6ஆம் வகுப்பைத் தாண்ட முடியாது.ஆண் பிள்ளைகளை மட்டும் ஆங்கிலப்பள்ளியில் சேர்த்து பல்கலைக்கழகம் வரையில் படிக்க வைப்பார்கள்.ஆனால் உங்கள் தாத்தாவோ அவர் குடும்பத்துப் பெண்களை இந்த அளவுக்குப் படிக்க வைத்தது ரொம்ப பெரிய விஷயம்தான்!

said...

நாகை சிவா,

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் மற்ற நம் வலை நண்பர்களுக்கும் வாழ்த்து(க்)கள்.
ஆமாம், எங்கே கொஞ்ச நாளா ஆளைக் காணோம்?

said...

வாங்க துர்கா. நலமா? முதல்முதலா வந்துருக்கீங்க. சந்தோஷம்.

இந்த ஆம்புளைப் புள்ளைங்களை மட்டும் அதிகம் படிக்கவைக்கிறது இன்னும் சில
இடங்களில் நடந்துகிட்டுத்தான் இருக்கு.
சிலர் சொல்ற காரணம் கேட்டால் அபத்தமா இருக்கும். நம்ம சமூகம் அப்படி. பெண் படிப்புக்குக்
கொஞ்சம் அதிகமாப் படிச்ச மாப்பிள்ளை பார்க்கும்படி ஆயிருமாம். அப்ப வரதட்சிணை கூடுதல்
ஆகுமாம். என்ன செய்யறது? எல்லாத்துலேயும் பெண் கொஞ்சம் 'மட்டமா' இருந்தாத்தான்
மாப்பிள்ளை வீட்டுக்குப் பிடிக்கும். ஆனா 'தட்சிணை' மட்டும் 'உசத்தி'யாச் செய்யணும்.:-)))

தாத்தா, ஆம்புளைப் புள்ளைங்களையும் படிக்கவச்சார். ஆனா எதுவும் படிச்சு உருப்படலை(-:

said...

ஆறு வயசுலே கல்யாணம் முடிச்சு, எண்ணி ஏழே மாசத்துலே கைம்பெண்ணாகிய மச்சினிக்கு, ஊர் வழக்கப்படி தலையை மழிக்க இடைஞ்சலா நின்னது தப்பில்லையா? ஊர் சொல்லிப் பார்த்துச்சு.நம்ம ராஜகோபாலோட மூத்த மகனுக்கும், இவரோட மைத்துனிக்கும் வயசு வித்தியாசம் வெறும் மூணுதான். தன்னோட பிள்ளையைப் போலத்தான் அந்தப் பொண்ணையும் நினைச்சார். அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு இப்படி விதவைக்கோலம் கட்ட அவர் மனசு சம்மதிக்கலை. அதுக்காக ஊர் மக்களோடு போட்ட சண்டையிலேதான், இந்தக் குடும்பத்தையே ஒதுக்கி வைக்கும்படி ஆச்சு.//

அந்த காலத்திலயே இப்படியொரு புரட்சிக்காரரா.. பேஷ்.. பேஷ்..

said...

டிபிஆர்ஜோ,

அவர் ஆரம்பிச்சு வச்சார். நாங்கெல்லாம் அந்தப் பாதையிலே போய்க்கிட்டு இருக்கோம்.
அதுவரைக்கும் சந்தோஷம்தான்.