Monday, December 13, 2004

கரும்புத் தின்னக் கூலியா?

கிறிஸ்மஸ் அன்றும் இன்றும் நிஜமாகவே கடைசிப் பகுதி!


கிறிஸ்மஸ்ஸுக்கு என்ன செய்வீங்க? இந்தக் கேள்வியை எனக்குத் தெரிஞ்ச(!) அக்கம் பக்கத்து வீட்டு ஆளுங்ககிட்டேயும், மகளோட
பள்ளிக்கூடத்துலே சந்திக்கறவங்ககிட்டேயும் விடாமக் கேட்டுகிட்டே இருக்கேன்.


"ஒண்ணும் பெருசா இல்லே. வெளியே சாப்பிடப் போறோம்"

" மாமியார் வராங்க. க்ராண்ட் கிறிஸ்மஸ் லஞ்ச்/டின்னர் சாப்பிடுவோம்!"

"முதியோர் இல்லத்துலே இருக்கற எங்க அப்பா/அம்மாவைக் கூட்டிக்கிட்டு வருவோம். மத்தியானம் எல்லோருமாச் சேர்ந்து சாப்பிட்ட
பிறகு திருப்பிக் கொண்டுபோய் விடுவோம்."

" ஃபேமிலியோட டின்னர்"

" கேர்ள் ஃப்ரெண்ட்/பாய் ஃப்ரெண்ட் வீட்டிலே சாப்பிடக் கூப்பிட்டிருக்காங்க!"

" ரொம்பக் கொயட் கிறிஸ்மஸ்தான். வெயில் வந்தா பார்க், பீச்சுன்னு போகறதா இருக்கோம்."

" காலையிலே எழுந்து, கிஃப்ட்டெல்லாம் பிரிச்சுப் பார்த்துட்டு, 10 மணிக்குச் சர்ச்சுக்குப் போகணும்"

நான் எதிர்பாக்கற பதில் இதுவரைக்கும் வரவே இல்லை! தாங்கமுடியாம கேட்டுட்டேன்,'நீங்க கிறீஸ்மஸ் ஈவுக்கு
ராத்திரி 12 மணிக்குச் சர்ச்சுக்குப் போவீங்கதானே?'

ஒரு ஆளு, ஒரே ஒரு ஆளு, ஆமாம்ன்னு சொல்லாதான்னு மனசுக்குள்ளே ஒரே ஆத்தாமை! வந்த பதிலு என்ன தெரியுமா?

"நாங்க அவ்வளவு ரிலிஜியஸ் கிடையாது!"

"அப்போ, மூலைக்கு மூலை இவ்வளவு சர்ச்சுங்க இருக்கே, அங்கெ யாருமே சாமி கும்பிடப் போகமாட்டீங்களா?"

" ஓ, எங்க க்ராண்ட் பேரண்ட்ஸ் சிலசமயம் போவாங்க!"

" சரி. கிறிஸ்மஸுக்குப் புதுத்துணி எடுத்தாச்சா? புது உடுப்பு போடுவீங்கதானே?"

" இல்லையே! புது உடுப்பு எல்லாம் கிடையாது!"

" என்ன! பண்டிகைக்கு புது உடுப்பு இல்லையா?"

பரிசு வாங்கறதுலெயும், கொடுக்கறதுலெயும் பரபரப்பா இருக்காங்களே அதுதான் கிறிஸ்மஸ்! இதுலே கடைக்காரங்கதான்
விக்கறதுலே தீவிரமா இருக்காங்க. எல்லாக் கடைகளிலும், மால்களிலும் கிறிஸ்மஸ் மரம் அலங்கரிச்சு வச்சிருக்காங்க.
கேரல்ஸ் மெல்லிசான குரலில் பாடிகிட்டே இருக்கு. அதுக்குன்னு இருக்கற டேப்பைப் போட்டுடுவாங்க போல. அது
பாட்டுக்குப் பாடிகிட்டே இருக்கு. அந்தப் பாட்டுங்கல்லாம் காதுவழியா மண்டைக்குள்ளே போய் நல்லா 'செட்டில்' ஆகிடுச்சு!
அதைக் கேக்கக் கேக்க எனக்கு என் ஸ்கூல் ஞாபகம் வந்துகிட்டே இருக்கு!

பலர் கணக்கு வழக்கில்லாம க்ரெடிட் கார்டை உபயோகிச்சு, பரிசுகள் வாங்கிடுவாங்களாம். அப்புறம் அதுக்குண்டான பணத்தைக்
கட்ட முடியாம ரொம்பவே கஷ்டப்படுவாங்களாம். அவுங்களுக்காக அரசாங்கமே 'பட்ஜெட் எப்படி செய்யணும்' ன்னு சொல்லிக்
கொடுக்க இலவச ஆலோசனைகள் வழங்க கவுன்சிலர்களை ஏற்பாடு செய்யுதுன்னு பேப்பர்லே செய்தி வந்துகிட்டே இருக்கு!
டி.வி. யிலேயும் அடிக்கடி வெல்ஃபேர் டிபார்ட்மெண்ட் விளம்பரம் கொடுத்துக்கிட்டே இருக்கு!

நம்ம வீட்டு 'மெயில் பாக்ஸ்'லே 'பர்த்டே பார்ட்டி இன்விடேஷன்'களா வந்து நிறையுது! என்னன்னு பார்த்தா, அவ்வளவும்
நம்ம பேட்டையிலே இருக்கற வித விதமான சர்ச்சுங்களிலே இருந்து வந்திருக்கு! கிறிஸ்மஸ் தினத்துக்கு எல்லோரும் வந்து
'ஜீசஸ் பிறந்தநாளைக் கொண்டாடுங்க'ன்னு சொல்லி நம்மையெல்லாம் அழைக்கறாங்க. வெத்தலை பாக்குதான் பாக்கி!

டிசம்பர் 24! கிறிஸ்மஸ் ஈவ்! எனக்குச் சர்ச்சுக்குப் போய்ப் பார்க்கணுமுன்னு ஆசையா இருக்கு. நம்ம தெருவிலேயே ஒரு
சின்ன சர்ச்சு இருக்கே! அங்கேயாவது போயிட்டு வரலாமென்னு மனசு துடிக்குது! எங்க வீட்டுக்காரரைக் கேட்டேன்.

"அதெல்லாம் வேணாம். நம்ம என்ன கிறிஸ்தவங்களா? ச்சும்மா ஒரு ரைடு வேணுமுன்னா போயிட்டு வரலாம்!"

அது போதுமே! கிளம்பி இந்த நகரத்தை ஒரு சுத்து சுத்திட்டு வரலாம். 'சிடி கவுன்சில்' மரங்களிலே எல்லாம் அலங்கார
லைட் போட்டு வச்சிருக்காங்களே. அதையெல்லாம் பார்க்கலாம்ன்னு போனோம். சுத்திக்கிட்டு இருந்தப்ப சர்ச்சு மணி
ஓசை கேக்குது! எங்கே இருந்து வருதுன்னு பார்த்தா, நாங்க அப்பப் போய்க்கிட்டு இருக்கற 'கொழும்புத் தெரு'விலே இருக்கற
தேவாலயத்துலே இருந்துதான் மணியோசை வருது! மணி ராத்திரி பதினொன்னரை! உள்ளே போய்ப் பார்க்கலாமான்னு கேட்டேன்.
என் ஆசையை ஏன் கெடுப்பானேன்னு இவரும் சரின்னு சொல்லிட்டார். உள்ளெ பாய்ஞ்சு போனேன். பரவாயில்லாமக் கூட்டம்
இருக்கு! பாட்டுங்க பாடிகிட்டு இருக்காங்க! ஆளாளுக்குக் கையிலே பேப்பருங்களை வச்சுப் பாடறாங்க! ஃபோட்டோக்காப்பி
எடுத்துவச்சிருக்கற பேப்பருங்களை முன்னாலே இருக்கற மேசையிலே வச்சிருந்தாங்களா,நானும் ஒண்ணு எடுத்துகிட்டேன்.

மொதல்லே ஒரு பாட்டுக்குக் கொஞ்சம் தடுமாறுன மாதிரி இருந்துச்சு. அப்புறம் பிடி பட்டுடுச்சு! சமாளிச்சுகிட்டேன். கூட்டத்தோட
சேர்ந்து நானும் சத்தமாப் பாடிகிட்டே இருக்கேன். என் பொண்ணு ( அஞ்சு வயசு) 'அம்மாவுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்?'
ன்னு ஆச்சரியத்தோட பார்க்கறா! சரியாப் பன்னெண்டு மணி அடிச்சதும் 'மெர்ரிக் கிறிஸ்மஸ்' வாழ்த்துச் சொல்லிட்டு பிரசங்கம்
ஆரம்பிச்சாங்க. நாங்க கிளம்பி வந்துட்டோம்.அதையெல்லாம் கேக்கற பொறுமை எங்க இவருக்குக் கிடையாது! எப்படியோ 20
வருஷம் கழிச்சு, எனக்கு இப்படி ஒரு ச்சான்ஸ் கிடைச்சது! ரொம்ப சந்தோஷமா இருந்தது!


'கோயிலில்லா ஊரிலே குடியிருக்க வேணாம்' அப்படின்னு ஒரு மூதுரை இருக்குல்லே! ஆனா இந்த ஊருலே இந்துக்
கோயில் கிடையாது. இஸ்கான் ஆளுங்க நடத்தற ஒரு 'ஹரே கிருஷ்ணா' கோயில் மட்டும்தான் இருக்கு! இதுவும் பார்க்கறதுக்கு
வீடு மாதிரிதான் இருக்கும்! கோபுரம், மற்றும் கோயிலுக்குண்டான அம்சம் எல்லாம் இல்லை! நகரத்தோட
மத்தியப் பகுதியிலே 164 வருஷம் பழமை வாய்ந்த ஒரு தேவாலயம் இருக்கு. முதல் முதலிலே வெள்ளையர்கள் இங்கே
குடிபெயர்ந்து வந்தப்போ கட்டுனதாம்.அந்தக் காலத்துலே, இதைச் சுத்தித்தான் நகரையே நிர்மாணிச்சிருக்காங்க! எப்ப சிடிக்குப்
போனாலும், ஒரு அஞ்சு நிமிஷம் இந்த தேவாலயத்துக்குப் போயிட்டுதான் வருவேன். எனக்கு எல்லா மதமும் ஒண்ணுதான்!
என் இஷ்ட தெய்வத்தை எங்கே வேணுன்னாலும் கும்பிடுவேன். இது சரியா, இல்லையான்னும் தெரியாது!

அதுக்கு அடுத்த வருஷத்துலே இருந்து இப்படி, கிறிஸ்மஸ் ஈவுக்குக் கோயிலுக்குப் போறதை ஒரு பழக்கமா வச்சிகிட்டோம்! ஆச்சு
பதினாறு வருஷம்!

இங்கே கிறிஸ்மஸ் தினமும், மறுநாள் பாக்ஸிங் தினமுமாக ரெண்டு நாளுக்கு அரசாங்க விடுமுறை கட்டாயம் இருக்கு! முதலிலே
'பாக்ஸிங்' குத்துச்சண்டை எதுக்குப் போடணும்? அதுக்கு ஏன் அரசாங்க விடுமுறை? ஒருவேளை கணக்கு வழக்கில்லாம செலவு
செஞ்சிட்டு, குடும்பத்துலே சண்டை வந்துரும்ன்னு அதுக்காக ஒரு நாள் லீவு விடுறாங்களோன்னு நினைச்சேன். அப்புறம் தான்
விஷயம் தெரிஞ்சது! பழைய காலத்துலே ப்ரிட்டன்லே பெரும் செல்வந்தர்கள் எல்லாம், கிறிஸ்மஸ் நல்லபடியாக் கொண்டாடுவாங்களாம்.
அப்போ அந்த பார்ட்டிங்களிலே மீந்து போற கேக் முதலான தின்பண்டங்களை எல்லாம் அட்டைப் பெட்டிகளில் அடைச்சு, அனாதை
ஆஸ்ரமங்களுக்கும், வசதி குறைஞ்சஆட்களுக்கும் விநியோகிப்பாங்களாம். அதுனாலே அதை 'பாக்ஸிங் டே'ன்னு கூப்பிட்டாங்களாம்.

இங்கே முதலில் வந்து குடியேறியவர்கள் ப்ரிட்டிஷ்காரர்கள் என்பதால் அவர்கள் பழக்க வழக்கங்களும் ஒட்டிக்கிட்டே வந்திருக்கு. ஆனால்
வந்து குடியேறினவுங்க யாரும் பெரும் செல்வந்தர்கள் இல்லை! சாதாரண விவசாயிகள்தானாம்!

இந்தியர்கள் இப்ப நிறைய இங்கே குடியேறிகிட்டு இருக்காங்க. கேரளத்துலே இருந்து ஒரு பதினைஞ்சு குடும்பங்கள் இப்படி வந்திருக்காங்க.
அவுங்க எல்லோருமே கிறிஸ்த்துவ மதத்தைச் சேர்ந்தவுங்க. அவுங்க எல்லாம் வந்து இப்ப ஆறேளு வருஷமாச்சு! அவுங்க எல்லாம் சேர்ந்து
கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடிவராங்க. அந்தக் குழுவிலே நாங்களும் இருக்கோம். நமக்குத்தான் 'யாதும் ஊரே, யாவரும் கேளீர்'
ஆச்சே! ரெண்டு வருஷமா, இந்தக் கொண்டாட்டத்துலே, குழுவாச் சேர்ந்து 'கேரல்ஸ்' மேடை மேலே பாடறாங்க! இதுலே நானும் இருக்கேன்னு
சொல்லவும் வேணுமா? நமக்குத்தான் 'பாஷை ஒரு ப்ரஷ்ணமே' இல்லையே!

இந்த இரண்டு வருஷத்திலே இன்னும் நிறைய சேச்சிமாரும், சேட்டன்மாரும் வந்துட்டாங்க! இங்கே எங்க ஊர் ஆஸ்பத்திரியிலே நர்ஸ்
உத்தியோகம் பார்க்க ஆளு ரொம்பக் குறைவா இருக்கே! ( நிஜமாத்தாங்க!)

இவுங்க எல்லாம்தான் நம் இந்தியாவிலே உள்ள வழக்கப்படிப் புது உடுப்பு எல்லாம் அணிஞ்சு, கிறிஸ்மஸ் ஈவுக்குத் தப்பாம சர்ச்சுக்குப்
போறாங்க! வெள்ளைக்காரங்க போறது ரொம்பவே குறைவு!

ரெண்டு வாரத்துக்கு முன்னே, இந்தக் குழுவினர் கேட்டாங்க, 'இந்த வருஷம் வீடுகளில் போய் கிறிஸ்மஸ் கேரல்ஸ் பாடலாம்ன்னு
இருக்கறோம். உங்க வீட்டுக்கு வந்து பாடவா?'

நான் ஒரு இந்து என்றதாலெ ஒரு தயக்கம் அவுங்க குரலிலெ இருந்தது! அட!கரும்பு தின்னக் கூலியா? தாராளமா வாங்கன்னு
சொன்னேன்.

நேத்து ஒரு முப்பத்தி நாலு பேரு பெரியவுங்களும், சின்னப் பசங்களுமா வந்தாங்க! கூடவே கிடார் வாசிக்க ஒரு லோகல் பையன்.
அவுங்க போற சர்ச்சைச் சேர்ந்தவராம்.

ச்சும்மா ஒரு நாலு பாட்டு! ஒரு எவர்சில்வர் தட்டுலே பஞ்சு நிரப்பி ( பஞ்சு மெத்தைன்னு வச்சுக்கணும்!) அதுலே ஒரு ச்சின்ன
குழந்தை ஏசு!

சேன்ட்டாவும் வந்தார்! எல்லோருமா சேர்ந்து பாடுனோம்! இதுலே வேடிக்கை என்னன்னா, என் கணவரும் பாடினார்!

நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!
***********************************************************************************

1 comments:

said...

காலேஜில் படிக்கு போது நண்பர்/நண்பிகளுடன் இரவு ஒரு பஸ்ஸில் மேள தாளத்தோடு பாடி (கத்தி..)யிருக்கேன்.
:))