Sunday, December 05, 2004

சாப்பிட வாங்க!!!!!!

அனைவருக்கும் வணக்கம்!!!!

இந்தப்பதிவு ச்சும்மா 'சாப்பாட்டுக்காக!'எங்க பாட்டி சொல்வாங்க, 'கோடி வித்தலு கூட்டி குறைக்கு'( தெலுங்குங்க! குறைக்குலுன்னு
போட்டுடலாமா?)

உலகத்துலே கஷ்டப்பட்டு சம்பாரிக்கறது( கற்ற வித்தையெல்லாம் காட்டி) எல்லாம் வயிறார சாப்பிடத்தானாம்!

நம்ம அவ்வையார், அதாங்க தமிழ்ப்பாட்டிகூட

'ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்

இரு நாளைக்கேலென்றால் ஏலாய்.....

( அடுத்த வரியெல்லாம் நினைவுக்கு வரலே)

இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது!' என்று முடியும் பாட்டைப் பாடியிருக்காங்கல்லே!

( இப்ப இதைப் பாடியது அவ்வையாரா இல்லையான்னு வேற சந்தேகம் மனசுலே எட்டிப் பார்க்குது.

ச்சீ... ச்சும்மாக் கிடன்னு மனசை அதட்டி வச்சிருக்கேன்!)

பண்டிகைகள் வருதே. அதனாலே உங்களையெல்லாம் அன்போடு சாப்பிடக் கூப்பிடலாம் என்று
பார்த்தால், உலகின் பல மூலைகளில் இருக்கும் உங்களை எப்படி ஒரே நாளிலே திரட்டறது?

அதுக்குத்தான் ஒரு வழிகண்டு வச்சிருக்கேன்.

நான் சமையல் குறிப்பை எழுதுவேனாம். நீங்க அதை சமைச்சு சாப்புடுவீங்களாம்! சரிதானே?

எல்லாமே ரொம்ப எளிமையா செய்யக்கூடியதுதான்! பயந்துராதீங்க! நானே பலமுறை செய்து பார்த்த
வெற்றிகரமான 'ரெஸிபி'கள்தான் இவை. எல்லாமே 'ஈஸி பீஸி இண்டியன் குக்கிங்!!!!'

இந்தப்பதிவில் வரும் சமையலில் உபயோகப்படுத்திய மைக்ரோவேவ் அவென் 1000 பவர் உள்ளது!


முதலில் ஒரு இனிப்போடு ஆரம்பிக்கலாம்.

பாதாம் பர்ஃபி ( மைக்ரோவேவ் ரெஸிபி)

தேவையான பொருட்கள்:
********************

150 கிராம் பாதாம் பருப்பு ( 1 கப் வரும்)

1 கப் பால் பவுடர்

300 மில்லி ஃப்ரெஷ் க்ரீம்

1 டின் கண்டென்ஸ்டு மில்க்

செய்முறை:
*********

ஒரு தட்டுலே ( மைக்ரோவேவ் அவன்லே வைக்கக் கூடிய தட்டு) பாதாம் பருப்பை பரத்திவச்சு,
30 வினாடி சூடு செய்யணும். அப்புறம் இன்னொரு 30 விநாடி சூடு செஞ்சுக்கோங்க!

ஆறியதும், ஃபுட் ப்ரோஸசர் இல்லேன்னா மிக்ஸியிலே போட்டு பொடிச்சு வச்சிக்குங்க! தோலெல்லாம் எடுக்க வேணாம்!

அப்புறம் மேலே சொன்ன எல்லாப் பொருட்களையும் ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் போட்டு நல்லா
கலந்துடுங்க.

இப்ப ஹை' பவர்'லே 5 நிமிஷம் வையுங்க. வெளியே எடுத்து ஒரு கலக்கு கலக்குங்க.
இன்னொரு 5 நிமிஷம் வச்சுட்டுக் கலக்குங்க. அப்புறம் மூணாவது முறை இன்னொரு 5 நிமிஷம் &
கலக்குங்க!

இப்ப ஒரு நெய்தடவிய தட்டிலே பரப்பி, ஆறியதும் வில்லை போட்டுருங்க!

ஆச்சா? இப்ப ஒரு வில்லையை எடுத்து, உங்க வீட்டு அம்மா/ அய்யாவுக்கு ஊட்டிவிடுங்க!

நல்லா இல்லேன்னா ஆட்டோ அனுப்பாதீங்க! ( ச்சும்மா....)


அடுத்தது இன்னொரு இனிப்பு. இங்கே ஆல்மண்ட், முந்திரி எல்லாம் மலிவாதான் இருக்கு. அதுமட்டுமில்லை. நல்ல தரமாவும்
கிடைக்குது. அதனாலே நம்ம 'ரெஸிபி'களிலே இதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவெ அடிச்சுவிட்டிருப்பேன். 'தூபரதண்டி'ன்னு
திட்டாதீங்க! உங்க இஷ்டத்துக்குக் கொஞ்சம் குறைச்சும் போட்டுக்கலாம். சாப்பிடறதுக்குச் சுவையா இருக்கணுமே தவிர, கணக்குப்
பார்த்து, அதே அளவிலே போடணும் என்ற 'கெடுபிடி'யெல்லாம் கிடையாது!

இன்னும் ஒரு சின்னக் குறிப்பு சொல்லிடறேன்.

ஏலக்காய் விதைகள் இப்பெல்லாம் தனியாக் கிடைக்குதில்லையா! அது ஒரு 2 அல்லது 3 டீஸ்பூன் எடுத்து, 10 விநாடி மைக்ரோஅவன்லே
சூடு பண்ணி, ஆறியதும் மிக்ஸியிலே 'ட்ரை'யாப் பொடி செஞ்சு, ஒரு சின்ன பாட்டில்லே வச்சிக்கிட்டா, எந்த இனிப்பு செய்யவும் வசதியா
இருக்கும். நானு அதைப் பொடிக்கறப்பயே கூடவே ரெண்டுமூணு துண்டு பச்சைக் கற்பூரத்தையும் சேர்த்துக்குவேன். அப்பப்ப தூளாக்கற வேலை
மிச்சம்!

பாதாம் கேசரி. (சாதாரண அடுப்பு)
***********

ரவை 1 கப்
சீனி 1/2 கப்
நெய் 1/4 கப்
குங்குமப்பூ கொஞ்சமே கொஞ்சம்
பால் 2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் கொஞ்சம்.
பாதாம் 1/4 கப்

செய்முறை:
********

கொஞ்சம் சுடுதண்ணிலே பாதாம் பருப்பை ஊறவையுங்க. 15 நிமிஷம் ஊறட்டும். இப்ப அதை லேசா அமுக்கினா தோலு கழண்டு
வந்திடும். ( இதெல்லாம் தெரியாதான்னு முணுமுணுக்காதீங்க! சொல்றப்ப விளக்கமா சொல்லணும்லே!)

இப்ப வெள்ளையான பருப்பை 'மிக்ஸியிலே' போட்டு தண்ணிவிட்டு அரைச்சுடுங்க. ரெண்டரைக் கப்புத் தண்ணீவரை தாராளமா
விடலாம். நல்லா பாலாட்டம் இருக்கும்.
கொஞ்சம் சூடான பால் (சாதாப் பால்தாங்க) 2 டீஸ்பூன் எடுத்து அதுலே குங்குமப்பூவை ஊறவிடுங்க.

இப்ப ஒரு அடி கனமான வாணலியில் ( எல்லா சமையல் எழுதற ஆளுங்களும் இப்படி எழுதறாங்களேன்னுதான் நானும் இப்படிச்
சொல்றேன்!) ஜஸ்ட் ஒரு 'நான் ஸ்டிக்' வாணலிகூடப் போதும். அதுலே அந்தக் கால் கப் நெய்யைவிட்டு, நல்லா சூடானதும்
ரவையைப் போட்டு வறுங்க! இப்ப அடுப்பு நிதானமா எரியணும். ரவை நல்லா பொன்நிறமா வாசனையா வறுபட்டவுடனே நாம் செஞ்சு
வச்சிருக்கற ரெண்டரைக் கப்பு பாதாம் பாலை விட்டுக் கிளரணும். கெட்டியா வரும்போது, சீனியைச் சேருங்க. இப்ப கொஞ்சம்
இளகி,'தளக் தளக்'குன்னு கொதிக்கும். பத்திரம். மேலே தெறிக்கப் போகுது! இப்ப குங்குமப்பூப் பாலையும் ஏலக்காயும் சேர்த்துடுங்க!
கேசரி பதம் வந்துரும். இறக்கி, ஒரு தட்டுலே பரப்பி சமனாக்கி, வில்லை போடலாம்.

மஹாராஷ்ட்ராவிலே இந்த கேசரியை பிரசாதமாப் பரிமாறதுக்குன்னே ஒரு சின்னக் கரண்டி விக்கறாங்க. அதுலே எடுத்து,ஒரு அமுக்கு அமுக்கித்
தட்டுனா அழகா சின்ன டிஸைன்லே தட்டுலே விழும்!

சரி அப்புறம் பார்க்கலாம். சரியா?
*************************************************************************************


8 comments:

said...

அடாடா என்ன ஒரு தோழமையோட பேசற நடை. படிச்சதுமே சாப்பிட்டமாதிரி இருக்கு. நாளைக்கு இரண்டில் ஒண்ணு, அதாவது இந்த இரண்டு ஐட்டத்தில் ஒண்ணை செய்யச்சொல்லிப் பாத்துரணும்.
நன்றிங்க,
-காசி

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

ம்.. வாயூறுகிறது.
செய்து பார்க்கிறேன்... இல்லையில்லை சாப்பிடுகிறேன்.

said...

கேசரியை வடக்கே ஹல்வான்னுதான சொல்லுவாங்க. ஹல்வா- பூரி ஒரு பிரமாதமான நாஷ்தாவாச்சே.

அன்புடன்
ஆசாத்

said...

//அடுத்த வரியெல்லாம் நினைவுக்கு வரலே// ஒருநாளும் என் நோவறியாய் இடும்பை கூர் என் வயிறே உன்னோடு வாழ்தலரிது.
//இதைப் பாடியது அவ்வையாரா இல்லையா// ஔவையார் பாடியதுதான் அது.
~~~~
ஏலக்காய்ப்பொடி நல்ல ஐடியா. பொடித்து வைக்கப் போகிறேன். கடைசி குறிப்பையும் குறிச்சு வைச்சாச்சு. விடுமுறையில் செய்துவிடுவதுதான். :-)