Friday, December 10, 2004

போவோமா ஊர்கோலம்!!!

கிறிஸ்மஸ் அன்றும் இன்றும் ( கடைசிப் பகுதிக்கு முந்தின பகுதி)

இப்ப நாங்க இருக்கறது, முக்குக்கு முக்கு சர்ச்சுங்க இருக்கற ஊரு! இந்த ஊருக்கு வந்த வருசம் கிறிஸ்மஸை ரொம்ப ஆவலோட எதிர்ப்பார்த்துகிட்டு
இருந்தேன். நவம்பர் மாசம் மூணாவது வாரம் 'சேன்ட்டா பரேட்' இருக்குன்னு பேப்பரிலே விளம்பரம் வந்தது!


வெளிநாட்டுலே, வெள்ளைக்காரங்க ஊருலே கொண்டாடப் போற மொதக் கிறிஸ்மஸ்!

இந்த ஊரோட மத்தியிலே இருக்கற ஒரு பெரிய தெருவிலெதான் பரேடு நடக்குமுன்னு போட்டிருந்துச்சு. இந்தத் தெருவுக்குப் பேரு 'கொலம்போ'த்தெரு!
நம்ம ஸ்ரீலங்கா கொழும்புதாங்க. இன்னும் மெட்ராஸ்த்தெரு, காஷ்மீர் ஹில்ஸ், குங்குமப்பூத்தெரு இப்படியெல்லாம் இங்கே தெருப் பேருங்க இருக்குது!

மத்தியானம் ரெண்டு மணிக்கு ஆரம்பிக்குது பரேடு! ஊரே அங்கேதான் இருக்கு! கூட்டம்ன்னா கூட்டம்! அந்தத்தெருவிலே, வாகனங்களோட
போக்குவரத்தையெல்லாம் நிப்பாட்டி இருந்தாங்க. நடைதான். பக்கத்துத் தெருவிலே,கண்ணுலே பட்ட இடங்களிலே காருங்களை நிறுத்திட்டு,
ஜனக்கூட்டம் கொழும்புத்தெருவை நோக்கி நடக்குது! நாங்களும் அந்த ஜோதியிலே கலந்துட்டோம்.

தெருவுக்கு ரெண்டு பக்கமும் வரிசையா ஜனக்கூட்டம். ஒரு லட்சம் பேரு வந்திருந்தாங்கன்னு மறுநாள் பேப்பரிலே பார்த்துத் தெரிஞ்சு கிட்டோம்.
ச்சின்னப் புள்ளைங்க எல்லாம் கீழே தெருவிலேயே உக்காந்துகிட்டு இருக்காங்க. பல பெரியவுங்களும் அப்படியப்படியெதான். வாழையிலே
போட்டு, விருந்து பரிமாற வேண்டியதுதான் பாக்கி!

கென்டக்கி சிக்கன், மக்டோனால்ட்ஸ் ஆளுங்க, எல்லாருக்கும் வெயில் தொப்பி இலவசமாக் கொடுத்துக்கிட்டே இருக்காங்க. இன்னும் பலூன்,
நியூஸிலாந்து கொடி, மிட்டாய்ங்கன்னு இலவச சப்ளை நடந்துக்கிட்டே இருக்கு! பிள்ளைங்கெல்லாம், கிடைக்கறதையெல்லாம் சளைக்காம
வாங்கிகிட்டே இருக்காங்க!

சரியா ரெண்டுமணி ஆனதும் ஒரு போலீஸ் கார் மொதல்லே வருது! அதுக்குப் பின்னாலே ஒரு பேண்டு வாத்தியக் குழு. அப்புறம் மார்ச்சிங்
கேர்ல்ஸ், பேக் பைப் வாசிச்சுகிட்டே ஒரு ஹைலேண்ட் ம்யூஸிக் குழு, கார்ட்டூன் கேரக்டர்ஸ் மிக்கி மவுஸ், டோனால்ட் டக், ஸ்கூபிடூ,
மிஸ் பிக்கி, கெர்மிட் இப்படி பலதரம், நியூஸிலாந்து ஜிம்னாஸ்டிக் ஸ்கூல் பிள்ளைங்க சர்க்கஸ் வித்தை காட்டறது போல குட்டிக் கரணம்
போட்டுகிட்டே வராங்க, ஃபேரி டேல்ஸ் வண்டிங்க வரிசையா வருது! கோல்டிலாக்கும் 3 கரடிங்களும், சின்ட்ரெல்லா, ஹான்சல்& க்ரேடல்,
ஸ்நோ ஒயிட்டும், 7 குள்ளர்களும், இன்னும் ஸ்பெல் போட்டுகிட்டே வர்ற விட்சுங்க, பேய் வீடு, கடற்க் கொள்ளைக்காரர்கள் இப்படி
ஏகப்பட்டது! அலங்கார வண்டிகள் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வியாபார நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்ததாம்!

நடுநடுவிலே உள்ளூர் ப்ரெட் கம்பெனிங்க பெரிய பெரிய ப்ரெட் லோஃப்பைத் தூக்கித்தூக்கி பெரியவங்களுக்கு கொடுத்துகிட்டே போறாங்க!
பிள்ளைங்களை மிகவும் கவர்ந்த விஷயம் என்னன்னா, உள்ளூர் தொலைக்காட்சிகளில் சின்னப் பசங்க நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிற
டி.வி. ஸ்டாருங்க! திறந்த டாப் உள்ள பெரிய வண்டிகளில் இவுங்க எல்லாம் ஒரு பந்தாவும் இல்லாம கையையும் காலையும் ஆட்டிகிட்டே
வராங்க!

பெரியவங்களைக் கவர்ந்தவங்க யாருன்னா, ரேடியோ நிகழ்ச்சி நடத்தறவங்க! இப்படிப் பெரியவங்களும், ச்சின்னப் புள்ளைங்களுமா குதூகலமா
இருக்காங்க!

நடுநடுவிலே ஒத்தைச் சக்கர சைக்கிள்களிலே விதூஷகருங்க. அதுலெயெ உக்காந்துகிட்டு, 4 பந்து, 5 பந்துங்களைத் தூக்கிப் போட்டு'ஜக்ளிங்'
செஞ்சுகிட்டு வராரு மிஸ்டர் மூன்! இவர் இந்த ஊர்லே குழந்தைகள் உலகிலே ரொம்பப் பிரபலமானவராம். அவர் தலையிலே பின்பக்கம்
பிறைநிலாவும் நட்சத்திரங்களும் இருக்கும்! முடியைக் கொஞ்சம் ஒட்ட வெட்டி, அதுலே இந்த நிலா டிஸைனை வேற கலருலே சாயம் ஏத்தி
இருக்காரு. (இன்னவரைக்கும் அப்படித்தான் இருக்காரு. இது அவரோட ட்ரேட் மார்க்!)

ஒரு ரயில் எஞ்சின்கூட 'கூ'ன்னு கத்திக்கிட்டே நீராவி வெளியே விட்டுகிட்டு, ரோடுலே வருது! இப்பல்லாம் நீராவி எஞ்சின் கிடையாதுல்லையா?
அதனாலெ இது அரியகாட்சியாக இருக்கு!

அப்புறம் வருது ஒரு யானை! அம்பாரியெல்லாம் வச்சு ஜோடிச்சு இருக்கு. 'இண்டியன் எலிஃபெண்ட்' ன்னு பேரு எழுதியிருக்கு அதன்
ரெண்டு பக்கத்திலும். அலாவுதீன் அற்புதவிளக்குலே வர்ற பொண்ணுமாதிரி அரபி உடை போட்டுகிட்டு, முகத்துலே சல்லாத்துணியை வாயை
மறைச்சு கட்டிகிட்டு ரெண்டு பொண்ணுங்க அந்த இந்தியன் யானை மேலே! யானையுமே பொம்மைதாங்க! இந்த ஊருலே ஏது நிஜ யானை?

உள்ளூர் மேஜிக்காரர் ஒரு கூண்டிலே ஒரு பெரிய கொரில்லாவை(!)கொண்டுவராரு. அது அப்பப்ப கூண்டுக்குள்ளே இருந்து வெளியே
வந்து கையை ஆட்டிட்டு, மறுபடி கூண்டுக்குள்ளே போகுது! இவருடைய மேஜிக் ஷோ, எல்லா ஸ்கூல் லீவு சமயத்திலேயும், ஷாப்பிங்
மால்களிலே இலவசமா நடக்கும். அந்தக் கொரில்லாவும் அந்த ஷோவிலே கலந்து கொள்ளும். இரண்டு ஷோவுக்கு இடைவெளி இருக்கறப்ப,
அங்கே மறைவுக்காக வச்சிருக்கற திரைக்கு அந்தப் பக்கம் ஒரு நாற்காலியிலே உக்காந்துகிட்டு, பேசிகிட்டே காஃபி குடிச்சுகிட்டு இருக்கறதை,
உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தாப் பார்க்கலாம்!

உள்ளூர் போலீஸ் நாய்ங்க அணிவகுப்பு! பார்வையில்லாதவர்களுக்கு உதவி செய்யும் நாய்களுடே அணிவகுப்பு! எல்லா நாய்ங்களும்
கிறிஸ்மஸ் கலரில், பச்சையும், சிகப்புமா மேலங்கி போட்டுகிட்டுப் போவுதுங்க! போற போக்கிலேயே, தெருவிலே ரெண்டுவரிசையிலும்
உக்காந்துகிட்டு இருக்கற சின்னப் பசங்ககிட்டே நின்னு, தடவிக்கிட்டுப் போதுங்க! பிள்ளைங்களும்,கையை நீட்டிக் கூப்பிட்டுக்கிட்டே
இருக்குங்க!

ரெண்டு மூணு அலங்காரவண்டிங்களுக்கு ஒண்ணு என்ற மாதிரி பேண்டுவாத்திய கோஷ்டிங்க வேற வந்துகிட்டு இருக்கு! இங்கே பேட்டைக்குப்
பேட்டை இந்த மாதிரி பேண்டு குழு இருக்கு! இதுலே வாசிக்கறவங்க இதை முழுநேரத் தொழிலாச் செய்யறவங்க இல்லை! இசை ஆர்வம்
இருக்கறதாலே, நல்ல வேலைகளில் இருக்கற நிறைய பேர் இதுகளிலே இருக்காங்க. என் கணவரோட வேலை செய்யற ஒரு எஞ்சினீயரும்
இப்படி ஒரு பேண்டுலே வாசிக்கிறாராம். வரிசையா வர கோஷ்டிகளிலே அவரு எங்கே இருக்காருன்னே தேடிக்கிட்டு இருந்தோம். ஒரே
மாதிரி யூனிஃபார்ம் போட்டுகிட்டுப் போற கூட்டத்துலே இது ரொம்பக் கஷ்டமாப் போயிருச்சு! இதுலே எனக்கு, எல்லா வெள்ளைக்காரங்க
முகங்களும் ஒண்ணுபோல வேற தெரியுது! ( வந்த புதுசு ஆச்சுங்களே? இப்பப் பரவாயில்லை!)

அக்கார்டியன் ம்யூஸிக் ஸ்கூல் மாணவ மாணவிகள் இன்னோரு வண்டியிலே உக்காந்துகிட்டு வாசிச்சுகிட்டே வராங்க. எல்லா வண்டிங்களுக்கும்
கடைசியிலே, ரெயிண்டீர் ஓட்டற ஸ்லெட்ஜ் அமைப்பா இருக்கறதுலே கிறீஸ்மஸ் தாத்தா எல்லோரையும் பார்த்து கையை அசைச்சுகிட்டே
வராரு. மிட்டாய்ங்களை கைநிறைய அள்ளி அள்ளி, பிள்ளைங்களைப் பார்த்து வீசறாங்க, 'சேன்ட்டாஸ் லிட்டில் ஹெல்ப்பெர்ஸ்'!
எங்க தலையிலே எல்லாம் மிட்டாய் மழை!

அவருக்குப் பின்னாலே 'சிடி போலீஸ்' வண்டி, தலையிலே சிகப்பு, நீலம் லைட்டுங்களோட வந்தது! இதுதான் கட்டக் கடைசி! சரியா
ஒருமணி நேரம் ஆயிருக்கு இந்த ஊர்வலம் நம்மைக் கடந்து போறதுக்கு!

அடுத்த நிமிஷமே கூட்டம் கலைய ஆரம்பிச்சுடுச்சு! தெருவிலே எங்கே பார்த்தாலும் குப்பைங்க! கலர் கலர் காகிதங்களா இறைஞ்சு கிடக்கு.

நாங்களும் இடத்தைக் காலிபண்ணிட்டு, நம்ம வண்டி நிறுத்தியிருந்த தெருவுக்குப் போனோம். அது ஒரு வழிப் பாதை என்றதாலே, திருப்பி
இந்த ஊர்வலம் போன வீதியிலேயே வரவேண்டியிருந்தது. எல்லாம் ஒரு பத்து நிமிஷ இடைவெளிதான். திரும்பி வந்தா, மந்திரமோ மாயமோ
போட்டமாதிரி, இந்தத் தெரு படு சுத்தமா, ஒண்ணுமே நடக்காதது போல சாதுவா இருக்கு! ஒரு லட்சம் ஜனங்க கூடியிருந்த அறிகுறியே
காணோம்! மருந்துக்கு ஒரு கலர் பேப்பர்(!)? ஹூ..ஹூம்!!

உங்களை ரொம்ப சோதிக்க மாட்டேன். அடுத்த பதிவுதான் அநேகமா(!) கடைசி.


0 comments: