Monday, May 26, 2025

ஏன்தான் நாக்கு இப்படி புது சுவைக்கு அலையுதோ..... (2025 இந்தியப்பயணம் பகுதி 25 )

பகல் சாப்பாட்டுக்கு வேறெங்கே போகலாமுன்னு வலைவீசிய நம்மவரின் கண்ணில் ஏழாம்சுவை விழுந்துருக்கு !  போகலாமான்னார்.  எனக்கு ஒன்னும் பிரச்சனையே இல்லை.  எங்கே போனாலும் எனக்குள்ளது தனி, இல்லையோ ? அது எட்டாம் சுவை  ....  உப்பு காரம்னு ஒன்னும் இல்லாதது.....
திருவானைக்கோவில் ஏரியாவில் மெயின் ரோடுலேயே, ஏதோ ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்லெ இருக்கு. ஃபேமஸ் ரெஸிடன்ஸி வளாகம். நம்ம ஹயக்ரீவாவில் இருந்து ஒரு மூணேகால் கிமீ தூரம்தான்.ரெஸ்ட்டாரண்ட், பேஸ்மென்ட்டில் !  படிகள் இறங்கவேண்டியதாப் போச்சு.  
டைனிங் ஹால் நல்லா நீட்டாத்தான் இருந்தது.  அவரவருக்கு வேண்டியதை ஆர்டர் செஞ்சாச்சு. எனக்குச் சப்பாத்தி.
திரும்ப ஹயக்ரீவா வரும் வழியில் ஒரு பழக்கடையில் ஆப்பிளும், செவ்வாழையும் , கொய்யாவும் வாங்கினோம்.  திருவானைக்கோவில் கோவிலுக்குப் போகலையேன்னு இருந்தது. எப்ப ஸ்ரீரங்கம் வந்தாலும்  இங்கேயும் ஒருக்காப் போய் வர்றதுதான்.  இப்ப எங்கே ? கோவில் நாலுமணிக்குத் திறப்பாங்க. அப்பப் போகலாமுன்னேன். அதுவரை ரெஸ்ட்.
எனக்கு அகிலாவைப் பார்க்கணும்.  சாயங்காலம் நாலு மணிக்குக் கிளம்பிப்போனால்.....  கோவில் வாசலுக்கு முன்னால் பெருசா ஒரு ஷெட்!  முந்தி இப்படி இருக்காதேன்னு யோசனையோடு உள்ளே நுழைஞ்சால்..... ஷெட்டுக்குள் அறை! ஜன்னலில் இருக்கும் ஊழியர்கள்,  செல்ஃபோன் இருக்கா இருக்கான்னு கூவறாங்க.  இருக்கு.   என்னவாம் ?   அனுமதி இல்லையாம். அங்கே கொடுத்துட்டுப்போகணுமாம். 

அட! எப்போலெ இருந்து ? இங்கே கொடுக்கறதுக்குப் பதிலா நம்ம விஜிகிட்டே கொடுத்துட்டுப்போனால் ஆச்சு. 

ராஜகோபுரம் நெடுநெடுன்னு நிக்க,  வலப்பக்கம் பார்த்தால்  அகிலாவைக் காணோம்.  அந்தப் பகுதியும் வேறெப்படியோ இருக்கு.  உள்ளே நுழைஞ்சுபோனால்.... ரெண்டுபக்கமும் பெருசா மண்டபங்கள்.  கண்ணுக்கெதிராக் கொடிமரம் ! தகதகன்னு இருக்கு. இந்தாண்டை நந்தி !  மூலவரை தரிசிக்கணுமுன்னால்.... உள்ளே ரொம்ப தூரம் நடக்கணுமே.....  நம்மவர் மட்டும் போனார். நான் மண்டபத்துலே உக்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்.  கோவிலில் ஏதோ விசேஷம் போல இருக்கு!  வண்ணவிளக்குத் தோரணங்கள்  கொடிமரம் ஏரியாவில். பக்கத்துலே குடங்குடமாத் தண்ணீர் கொண்டுவந்து அண்டாக்களில் ரொப்பிக்கிட்டு இருக்காங்க.

மேலே 2 படங்களும் நம்ம பழைய பதிவில் இருந்து !

சனம், ஒத்தையாவும்,  இருவராகவும், குழந்தை குட்டிகளோடு குடும்பமாகவும் விதவிதமாஉள்ளே வந்துக்கிட்டு இருக்காங்க.  வேடிக்கை பார்த்துக்கிட்டு உக்கார்ந்திருந்தேன்.  கையிலே கெமெரா இல்லைன்ற எண்ணமே மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சு.   நேரம் போகுதே தவிர, நம்மவரைக்காணோம்.  கால் சரியா இருந்துருந்தால் இந்த மண்டபத்தூண்களை ஓடியோடிப் பார்த்துருப்பேன்.  போகட்டும்...... முந்தி பலமுறை வந்ததில் எடுத்த படங்கள் எல்லாம் ஹார்ட்ரைவில் போட்டு வச்சுருக்கேன்தானே? அதையே எடுத்துப் பார்த்தால் ஆச்சு. புதுசுபுதுசாவா செதுக்கி இருக்கப்போறாங்க ? 

ரொம்ப நேரம் கழிச்சு வந்த நம்மவர், கையில் இருந்த விபூதியை நீட்டினார்.  இன்னும் அம்மனை ஸேவிக்கலையாம்.  போயிட்டு  வாங்கன்னேன். ஒரு இருவது நிமிட்டுக்கும் கூடுதலா ஆச்சு.  சுவாரஸியப்படலைன்னு கிளம்பிட்டோம்.  போற வழியில் ஒரு வேனில் பெரிய பெரிய ஸ்பீக்கர்களைக் கட்டி வச்சு, ஊர் முழுக்கக் கேக்கும்படியா  அம்மன் பாட்டுகளைப் போட்டுக்கிட்டு  எதிரில் வர்றாங்க. வேன் நிறைச்சு மக்கள் ! சின்னப்பசங்ககூட இருக்காங்க. ஐயோ.... காது என்ன ஆகும் ? ப்ச்..... 
பொதுவா வட இந்தியப்பயணங்களில்தான்  இப்படி சின்ன கிராமங்களில் இருந்து மக்கள் கூட்டமா வேனில் வர்றதைப் பார்த்திருக்கேன். அங்கங்கே நிறுத்தி ரோடோரத்தில் சமையல் செஞ்சு சாப்பிட்டு, தண்ணீர் கண்ட இடத்தில் குளிச்சுத் துவைச்சுக் கோவில் கோவிலாப் பயணம் போவாங்க. அவுங்களுக்கு இருக்கும் பக்தி எனக்கில்லைன்னு நினைச்சுக்குவேன்.  நானெல்லாம் நோகாம நோம்பு கும்பிடும் ரகம். 

ஹயக்ரீவா திரும்பும்போதே இருட்ட ஆரம்பிச்சது. பெரிய கோவிலுக்குப் போக ஆசைதான்.  ஆனால் நடக்க முடியாது.  வேறெங்கேயும் போகவும் தோணலை. காலுக்குத் தைலம் தடவிக்கிட்டு  உக்கார்ந்திருந்தேன்.  ஃபேஸ்புக்தான் இருக்கே !

எட்டேகாலுக்குக் கிளம்பி ஸ்ரீ ரெங்கவிலாஸில் டின்னர்.  பனங்கல்கண்டு பால், சுமாரா இருந்தது. 

மறுநாள் காலை சீக்கிரமா எழுந்து அம்மாமண்டபம் வரை போகணும். அது சம்பந்த நினைவே கொஞ்சம் மனசுக்கு பேஜாரா இருந்தது உண்மை.  

சரியாப் பதிமூணு வருஷம் நம்மகூடவே இருந்துருக்கான். யார் பெத்த புள்ளையோ....  நம்மூர் நிலநடுக்கம் ஏற்பட்ட சமயம்.....   தன் வீட்டைவிட்டு ஓடிவந்தவன், கடைசியில் வந்து தங்கியது நம்ம வீட்டுப் புழக்கடையில் !  இந்தியாவில் ரெண்டரை வருஷம் இருந்துட்டு, நியூஸிக்குத் திரும்பிக்கிட்டு இருந்தோம்.  வழியெல்லாம் என் காதில் உபதேசம் செஞ்சுக்கிட்டே வர்றார் 'நம்மவர்'.     "இனி பூனையெல்லாம் வளர்க்க முடியாது.  போதும்மா. நமக்கும் வயசாகிக்கிட்டுப் போகுது.....  "  ஒன்னும் சொல்லாமக் கேட்டுக்கிட்டே வர்றேன்.  வீட்டுக்கு வந்து பார்த்தால்..... அழகா ஒன்னு தோட்டத்தில் ! அக்கம்பக்கத்து வீட்டுக்காரனா இருக்குமுன்னு பார்த்தால்............   இல்லையாம் ! எங்கிருந்தோ வந்தவன் !  விடமுடியுமா சொல்லுங்க.....  அப்புறமும் ஃபேஸ்புக்கில் படமெல்லாம் போட்டுச் சின்ன விளம்பரம் எல்லாம் கொடுத்துருந்தேன். குழந்தையைக் காணோமேன்னு சொந்தக்காரன் தவிச்சுக்கிட்டு இருக்க மாட்டானான்னு.....  ஊஹூம்....  அப்போ, உயிருக்கு பயந்து ஊரைவிட்டுப்போன  பதினெட்டாயிரம் பேர்களில் அவுங்களும் போயிட்டாங்க போல ! 

இனி இவன் நம்மவன்னு மெடிக்கல் செக்கப் கொண்டுபோனப்பதான் தெரிஞ்சது, இவன் இவள் என்பதும்,  ஃபிக்ஸ் பண்ணப்பட்டவள் என்பதும்..... !!!!  பொறுப்பான மக்கள்தான்  ! ஆனால்.... எப்படி இப்படி செல்லத்தைத் தேடாமல் விட்டுருக்காங்கன்னு....    ப்ச்.... வயசும் ஒரு அஞ்சு இல்லை ஆறு இருக்கணும் என்று 'வெட்' சொன்னார்.  அந்தக் கணக்கில்  பதினெட்டு, பத்தொன்பது வயசுவரை  ஆயுசு  இருந்துருக்கு !  உடல்நலம் ரொம்ப மோசமான காரணத்தால்.....  உலகைவிட்டுப் போகும்படியா ஆச்சு. 

எங்களுக்கும்  மனசுலே (மயான) வைராக்யம் வந்தது அப்போதான்.  இனி போதும்.....

இதோ அவனுடைய சாம்பலில் ஒரு சிட்டிகை... காவிரியில்  கலக்கவேணும்.  கூடவே மகளின்  செல்லத்தின் சாம்பலும். ஜூபிடர் என்று பெயர். பதினாலு வயசுக்காரன்.  ப்ச்....
அம்மா மண்டபம் வழக்கம்போல் கூட்டமா கலகலன்னு இருக்கு ! நதியை நோக்கிப்போறார் நம்மவர். பின்னாலேயே நானும்.  நம்ம சனம், சாஸ்த்திரம் சம்ப்ரதாயம் கடைப்பிடிக்கிறோமுன்னு  வழியெல்லாம் . உருவிப்போட்ட பழைய துணிகளால்  நதியையும் கரையையும் அசிங்கப்படுத்தி வச்சுருக்கு ! இப்படிப்போட்டுட்டுப்போனால்..... அவுங்க நினைக்கறதுபோல் தரித்திரம்  அவுங்களை விட்டுப்போகாது.  இன்னும் கூடுதலா தரித்திரமும்,  அதிகமாப் பாவமும்தான் வந்து சேரும்!   

காவிரியிலும் தண்ணீர் அவ்வளவா இல்லை. கணுக்காலளவு நீரில் போய் நின்னு,  பசங்க சாம்பலைத் தூவிட்டு வந்தார். நான் இங்கே நின்னே பெருமாளை வேண்டினேன்....  ப்ச்....
இந்த ஏரியாவில்தான் இன்னொரு நெருங்கிய தோழியும் இருக்காங்க.  கொஞ்சம் உடல்நலக்குறைவு என்பதால் போய்ப் பார்க்கத்  தயக்கமா இருந்தது. நேரம் அவுங்களுக்குச் சரிப்படுமா, நாம் தொந்திரவு செய்துருவோமோன்ற மனக்குழப்பத்தால்  அவுங்களைத் தொடர்பு கொள்ளலை.  பெருமாளிடம்,  அவுங்க உடல்நலத்துக்குப் பிரார்த்தனை செஞ்சேன். 
ஹயக்ரீவா வந்துட்டு ஒரு காமணி நேரத்தில் கிளம்பிப்போய் தெற்குவாசல் ராஜகோபுரத்தாண்டை இறங்கிக்கிட்டோம்.  இங்கிருந்து ஒவ்வொரு கோபுரவாசலுக்குள்ளும் நுழைஞ்சு ,  பொடிநடையில்  ஸ்ரீரங்கா ஸ்ரீ ரங்கா   கோபுரவாசல் வரை போய்வந்தோம். இதன் பழைய பெயர் நான்முகன் கோபுரம். 


வழியில் ஒரு கடையில் சின்னதா ஒரு சக்கரத்தாழ்வார்.  மூக்கும் முழியும் திருத்தமா இல்லைன்னு நம்மவர் சொல்றார்.  கனமும் கூடாது, சின்னதாவும் இருக்கணும்னு ஏகப்பட்ட கண்டிஷன்ஸ் போட்டால் இப்படித்தான், இல்லையோ !   பக்கத்துக்கடையில் பாலராமன் !  வாடா... நீயும் என்கூட!
  
ரங்கா கோபுரத்தாண்டை விஜியை வரச் சொல்லியாச்.  ஹயக்ரீவா வந்ததும், மூட்டை முடிச்சுகளை எடுத்துக் காரில் வச்சதும்..... பதினொன்னரைக்கெல்லாம் நம் ரங்கயாத்திரை முடிஞ்சது. போயிட்டு வரேன்டான்னு ராஜகோபுரத்தைக் கும்பிட்டேன்.
சரியா ஒரு மணி நேரப்பயணத்துலே தஞ்சைக்கு வந்தாச்சு.  அதே சங்கம்தான். செக்கின் ஆச்சு.  ரூம் வித் கோபுர வியூ கிடைக்கலை.  ரொம்ப பரபரப்பா எல்லோரும் இருப்பதைப்போல் தோணுச்சு ! சுத்துச்சுவர் பக்கமெல்லாம் ஒரே தாமரைக்கொடிகள் ! 



பகல் சாப்பாட்டுக்குக் கிளம்பிப்போறோம்.  ஆரியபவன். திவ்யம் ரெஸ்ட்டாரண்ட்.  மண்சட்டி பிரியாணியாம் ! எனக்கொரு ஜீரா ரைஸ்.  உள்ளேயே அல்வாக்கடை. இளநீர் அல்வா கொஞ்சமா வாங்கினேன். எங்க மூவருக்கும் ஆளுக்கொரு ஸ்பூன். 





திரும்ப சங்கம் வந்தால்  வாசலிலும் வரவேற்பிலும் கூட்டமான கூட்டம். உள்ளுர் போலிஸ் தவிர ஏகே 47 கையில் ஏந்திய ராணுவமும், கருப்புப்பூனைகளும்.....  நமக்கெதுக்கு இப்படி ஒரு வரவேற்புன்னு திகைச்சுப்போய், வரவேற்பில் விசாரிச்சேன்.  மத்திய அரசு, ரயில்வேஸ்  மந்திரி வந்துருக்காராம். 

ஓ.......

தொடரும்............. :-) 

Friday, May 23, 2025

தாயார் (2025 இந்தியப்பயணம் பகுதி 24 )

காலையில் சீக்கிரமாவே கோவிலுக்குப் போகலாமான்னேன்.  அப்புறம்ன்னா ரொம்ப வெயிலா இருக்கு.  ஆமாம்னு சட்னு  ரெடியாகி  ஸ்ரீரெங்கவிலாஸில் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு எட்டே முக்காலுக்கேக் கிளம்பிப்போனோம்.  வந்து இன்றைக்கு மூணாம் நாள் ! இதுவரை தாயாரை ஸேவிக்கலை...... ப்ச்.... 
தாயார் சந்நிதியாண்டை இருக்கும் வாசல்வழியாகப் போனால்  ரொம்ப நடக்கவேணாம்தானே ?  மேற்கு கோபுரம் வழியாப்போய் வடக்கு உத்திரை வீதியில் (திருவிக்ரமன் திருச்சுற்று ) கோவில் வாசலாண்டை இறங்கினோம்.  இதுதான் நமக்கு முதல்முறை இந்த வாசல்வழியா வர்றது.....  கோபுரவாசல் தாண்டியதும் கண்ணெதிரே கம்பர் மண்டபம், அடுத்து மேட்டழகியசிங்கர், நமக்கு வலப்பக்கம் தாயார் சந்நிதி. 
கோவிலில் கூட்டம்  இன்னும் வரலை. தாயார் சந்நிதிக் கதவு   மூடியிருக்கு.  பக்தர்கள் அங்கங்கே தரையில் உக்கார்ந்துருக்காங்க. இந்தாண்டை மேட்டழகியசிங்கர் சந்நிதியும்  மூடித்தான் இருக்கு. நம்மவர் மட்டும் மேலே ஏறிப்போய் கதவாண்டை நின்னுட்டு வந்தார்.  இன்னும் எங்கேயும் தரிசனநேரம் ஆரம்பிக்கலை போல ! 
ச்சும்மா நிக்காம, மெது நடையா அந்தாண்டை அஞ்சுகுழி மூணுவாசல் வரை போனேன்.  நம்மவரிடம்  'முடியுமா'ன்னு கேட்டதுக்கு, 'இடுப்பை ஒடைச்சுக்கிட்டால் கஷ்டம்'னார். 
அடுத்த வாசல் கடந்துவந்தால்  சந்திரப் புஷ்கரணி கேட்டை யாரோ திறக்கறாங்களேன்னு போனால்....  அந்த மனிதர், கம்பிக்கிடையில் கை நுழைஞ்சுக் கும்பிட்டுக்கிட்டு இருந்தார்.  

இந்தப்பக்கம் உள்ளே நுழைஞ்சு பார்க்க நமக்கின்னும் வேளை வரலை. கோவில்  ஸ்தலவிருட்சம் புன்னைமரம் இங்கேதான் இருக்கு.  குளத்தையொட்டி உள்பக்கம் நிறைய சந்நிதிகள் இருக்கு.  ரொம்ப வருஷத்துக்குமுன்னே ஒரு சமயம்  கோவிலில் பரிச்சயமான பக்தை ஒருவருடன்  கோதண்டராமர் சந்நிதிப்பக்கம் இருந்த கேட் வழியா நான் உள்ளே போய் பார்த்திருக்கேன்.

இந்தப்பதிவை எழுதும்போது இந்த இடத்தை இன்னொருக்கா பார்க்கலாமேன்னு போய்ப் பார்த்தேன். ஸ்ரீதேவியின் தயவால் உள்ளே போனதும் க்ளிக்கிய படங்களும் எனக்கே பிடிச்சுப்போச்சு. நீங்களும் விரும்பினால்  இதோ லிங்க்கு !

 https://thulasidhalam.blogspot.com/2017/11/74.html

புஷ்கரணியாண்டை,  கோவில் பூனைக்குப் பால்சோறு வச்சுட்டுப்போயிருக்காங்க.  முந்தியெல்லாம் காலை ப்ரேக்ஃபாஸ்ட், பெடிக்ரீயாத்தான் இருந்தது. எப்போ மெனு மாறுச்சோ ? 
இந்தாண்டை சொர்கவாசலை விடமுடியாது. எப்போ நேரில் பார்க்க வாய்ப்பு வருமோ? தெரியலையே.....
இந்தப்பெரிய கோவில் ஏழு சுற்றுகளுடன் கட்டப்பட்டுருக்கு ! ஏழும்,  ஏழுலகக் கணக்குதான் !  ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு தனிப்பெயரும்கூட இருக்கு !  இந்த சொர்கவாசல் இருக்கும் சுற்று, குலசேகரன் திருவீதி ! மொத்தம் இருபத்தியொரு கோபுரங்கள்.  மொட்டை மாடியில் இருந்து பார்த்தால்  ஜே ஜேன்னு இருக்கும் ! 
சந்நிதிகள் திறக்கட்டும்.   நாம் ராமர் வரை போகலாமுன்னு போனால்..... கோதண்டராமர் சந்நிதி திறந்துருக்கு !  ராமா......   பட்டர்ஸ்வாமிகள்  ஆரத்தி காண்பிச்சார்! நமக்கு ஏகாந்த தரிசனம்.  சந்நிதி இப்போ மூடும் நேரமாம்.  ஒரு முக்காமணியில் திறந்துருவோம்னு சொன்னார். சின்னப்பேச்சு சமயம், நாம் அயோத்யா போய் வந்ததைச் சொன்னோம். ஆர்வமா அதைப்பற்றி விசாரிச்சார்.  அவர் கம்பிக்கதவை பூட்டிக் கிளம்பினதும்  ராமனுக்குத் துணையா இங்கேயே கொஞ்ச நேரம் இருக்கலாமேன்னு மண்டபப்படியாண்டை ரெண்டு பக்கங்களிலும் இருக்கும்  குட்டித்திண்ணைகளில் இடம் பிடிச்சோம். முழங்காலுக்கு சிரமம் இல்லாமல் கொஞ்சம் உயரமா இருக்கு. 
ராமா.... நீ சின்னப்பையனா இருந்தப்ப எப்படி இருந்தாய்னு உனக்குத் தெரியுமோ ?  அந்தக் காலத்தில் ஃபோட்டோ எல்லாம் ஏது ?  உன் பால்ய கால ரூபத்தைக் கையோடு கொண்டு வந்துருக்கேன். உனக்குப் பார்க்கணுமுன்னா ஒரு எட்டு ஹயக்ரீவாவரைப் போய்ப் பார்த்துக்கோ ! டெலிபதிதான் .
அடுத்த அரைமணிக்கூறு  நமக்குப் பொழுது போகணுமேன்னு  ஆஞ்சு குடும்ப அங்கங்கள் வந்து  சர்க்கஸ் ஆட்டம்  போட்டதும் சந்தோஷமே ! 

கோபுரக்கிளிகளும் வந்து போயின !

நிம்மதியா உக்கார்ந்து, அக்கம்பக்கம் பார்த்து, நல்ல நினைவுகளை அசைபோடுவதும்  ஒரு தியானம்தான் இல்லை ? எனக்கு ரொம்பப்பிடிச்சதே இதுதான். கோவில்களுக்குப் போனோமா.... சிரமப்படாமல் மூலவரை தரிசித்தோமா..... கொஞ்சநேரம் ஒரு பக்கம் ஓரமா நிம்மதியா உக்கார்ந்துட்டு வந்தோமான்னு ......   அதுவும் இங்கே பெரியவரையும், தாயாரையும்    தரிசிக்கலைன்னாக் கூடப் பரவாயில்லை. கோவிலுக்குள் போய் ஒரு இடத்தில் உக்கார்ந்துட்டு வரலாம்.  

காசு வசூலில்   ரொம்பவே பிரபலமான  ஒரு கோவிலில் ஜஸ்ட்  ச்சும்மா  இப்படி உள்ளே போக முடியுமா என்ன ?  இல்லாத டிமாண்ட் உண்டாக்கி வச்சு, காத்திருந்து காத்திருந்து, கடைசியில் மூச்சடைச்சு,  நல்ல இருட்டுக்குள் நிற்பவனைப் பார்க்க,   ஒரு விநாடி நேரம் கொடுக்காமக் கையைப் பிடிச்சு இழுத்து வெளியே கடாசும் வல்லரக்கர்களை வேலைக்கு  வச்சுருப்பவனை என்னன்னு சொல்றது ?  மனக்குமுறலை  அப்பப்பக் கொட்டிவிடறதுதான்  நல்லது..... 
 கண்ணாடி ஆண்டாளைப் பார்க்கலாமுன்னு  மெல்ல எழுந்து போனால்  அங்கேயும்  கம்பிகேட் மூடி  இருந்தது. பட்டர் ஸ்வாமிகளுக்கெல்லாம்  காஃபி ப்ரேக் டைம் போல !  அந்தப் பெரிய மண்டபத்தில் தடுப்பு வச்சு நீளமா மறைச்சுருக்காங்க.  முதலுதவி மருத்துவ மையமாம்!  சரியாப் போச்சு.....
இவ்ளோ பெரிய கோவிலில்  ( 155 ஏக்கர்) ஏதோ ஒரு மூலையில் ஒருவருக்கு உதவி தேவைப்பட்டால் இம்மாந்தூரம் தூக்கி வருவாங்களா  ? இல்லை....தகவல் அனுப்பி, இங்கேயிருந்து உதவியாளர் அம்மாந்தூரம் போவாரா ?

  "பெருமாளே.... யாருக்கும் ஒன்னும் ஆகாமல் நீயே காப்பாத்து..... "
மணி பத்தாச்சேன்னு அங்கிருந்து கிளம்பி, நம்மவருக்குக் கம்பிவழியாகவாவது ஸ்ரீ பரமபதநாதரை காண்பிக்கலாமுன்னு போனால்...... ட்டடா.....    சந்நிதி ஓப்பன் ! உள்ளேபோய் கண்ணாடி ஆண்டாளையும்,  பரமபதநாதரையும் 'மற்றவர்களையும்'  தரிசனம் செஞ்சுட்டு அந்தாண்டை போய் மணல்வெளியைக் க்ளிக்கிட்டு  குலசேகரன் திருச்சுற்று (ஹா.... நம்ம சொர்கவாசல் இருக்கும் ) வழியாகத் திரும்பறோம்.

இந்தாண்டை  ஸ்ரீ தன்வந்த்ரி ,'வா'ன்னார்.  கொஞ்சம் படிகள் ஏறத்தான் வேணும்.  பக்கவாட்டில் ஒரு சறுக்குப் பாதை புதுசா இருக்கு.  கால் சரியில்லா மக்களுக்குக் கருணை காமிச்சுருக்காங்க.  'முழங்கால் வலியை நீரே குணப்படுத்தணும்' வேண்டுதல் ஆச்சு.
தாயார் சந்நிதிக்குள் போய் தரிசனம் முடிச்சுப்ரகாரம் சுற்றிவந்து, துளசிமாடத்தாண்டை ஒரு அஞ்சு நிமிட் உக்கார்ந்தாச்.  வாசலில்  இருக்கும் பூக்களில் மனோரஞ்சிதம்!  விடமுடியலை. 
உக்ரநரசிம்ஹர் சந்நிதியும் திறந்திருந்தது.  நம்மவர் போய் ஸேவிச்சுட்டு வந்தார்.   பத்தரை மணி இப்போ !  வெயிலுக்கு ஸ்ருதி ஏறுது.....  சரி... கிளம்புன்னுட்டு , விஜியை வரச் சொல்லி, ஹயக்ரீவா வந்துட்டோம். 
ஆயிரங்கால் மண்டபம், சேஷராய மண்டபம்னு எதையும்  இந்தமுறைப் போய்ப் பார்க்கலை என்றது ஒரு பெரிய குறைதான். இவ்ளோ சொல்றேனே..... இங்கே  தெப்போற்சவம் நடக்கும் தெப்பக்குளத்தை  இத்தனை பயணங்களிலும் ஒருமுறை கூடப்போய்ப் பார்த்ததில்லை.  வழக்கம்போல் இந்த முறையும்.....  ப்ச்..... 

ஆசையா, மனோரஞ்சிதத்தை முகர்ந்து பார்த்தால்..............  மணம்.....  கொஞ்சம்கூட இல்லவே இல்லை. ரொம்பப் பழைய பூ போல இருக்கு. விலையும் அதிகம்தான்..... ப்ச்.... படம் ஒன்னு க்ளிக்கி மகளுக்கு அனுப்பினேன். 

கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு லஞ்சுக்குப்போகலாம்.  சரியா ?    

தொடரும்........... :-)