Friday, March 22, 2019

ஒளி கிடைத்த கண்ணினாய்....... !!!!!(பயணத்தொடர், பகுதி 82 )

திருமீயச்சூர் லலிதா மேகநாதனைச் சந்திக்கவே இல்லையே.... அடுத்தாப்லெ ஒரு அஞ்சரை கிமீ தூரம் தானாமே......  ஹைய்யோ..... இன்றைக்கு அவுங்களைப் பார்த்தே ஆகணுமுன்னு  கலைவாணி கோவிலில் இருந்து ஒரு காமணியில் திருமீயச்சூர்  கோவில் வாசலுக்கு வந்துட்டோம்.
அஞ்சு நிலை ராஜகோபுரம் !  கோபுரவாசலை நோக்கி நடக்கும்போதே  அர்ச்சனைப் பொருட்கள் விற்கும் கடையில்  கொலுசு சமாச்சாரம் விளம்பரம் பார்த்தேன். அம்பாளே கொலுசு வேணுமுன்னு கேட்டு வாங்கிப் போட்டுக்கிட்டாள் என்றதுதான் சிறப்பு!
இதுகூட இப்போ சமீபத்துலே  பத்தொன்பது வருசத்துக்கு முந்தி நடந்த சம்பவம்தானாம்!   திருமீயச்சூர் லலிதாம்பிகை, தன்னுடைய பக்தை ஒருவரின் கனவில் வந்து தங்கக்கொலுசு கேட்டதாகவும்,  இதைப்பற்றிக் கோவில் குருக்களிடம் விசாரிச்சப்ப,  சிலையில் காலில் கொலுசு போடும் வகையில் அமைப்பு  இல்லையேன்னு சொல்லி இருக்கார்.  பக்தை மீண்டும் வற்புறுத்திக் கேட்டப்ப, அம்பாள் காலைக் கவனிச்சுப் பார்க்கும்போது   சின்ன துளை ஒன்னு  காலுக்கும்  சிலை இருக்கும் பீடத்துக்கும் இடையில் இருந்துருக்கு. காலங்காலமா அபிஷேகம் பண்ண பொருட்கள் அந்தத் துளையை அடைச்சு மூடி இருந்ததால் யாரும் கவனிக்கலை. 
அந்தத் துளையைச் சுத்தம் செஞ்சதும் அதன்வழியா கொலுசு மாட்ட முடிஞ்சுருக்கு.  அதிலிருந்து  கொலுசு 'வாங்கி' மாட்டுறது ஒரு வழிபாடாக ஆகிருக்கு!  தங்கக்கொலுசு எல்லோருக்கும் கட்டுப்படி ஆகுமா? அதான்  அதை வெள்ளின்னு குறைச்சு நம்ம மேல்  கருணை காமிச்சுருக்காள் லலிதாம்பிகை! இல்லேன்னா 'நம்மவர்' நிலையை  எண்ணிப் பாருங்க ! 
இந்த கொலுசு சமாச்சாரம்  கொஞ்சநாளைக்கு முன்னே கேள்விப்பட்ட நினைவு.  இங்கே தகவல் பார்த்ததும், நாமும் ஒரு கொலுசு வாங்கி 'அம்பாளுக்கு'ப் போடலாமுன்னு தோணுச்சு. ஜிஆர்டி கடை கொலுசுகள் கிடைக்குமுன்னு போர்டு பார்த்ததும் வாங்கறது வாங்கறோம். கொஞ்சம் நல்லதாவே வாங்கினால் ஆச்சுன்னு அங்கே போனோம். 

இது கடைக்காரர் வீடுதான். ஜிஆர்டியில் இருந்து வாங்கி விற்கிறாராம். கொலுசுப்பெட்டியைக் கொண்டு வந்து காமிச்சார். சட்னு என் பார்வை போனது.... திருகாணி இருக்கும் கொலுசுகள்!  ஹைய்யோ.... எவ்ளோ நாள் ஆச்சு  பார்த்து. இப்பெல்லாம் ( ஒரு நாப்பதம்பது வருசங்களா) 'எஸ் ஹூக்' வச்சவைகள்தானே  கிடைக்குது.   சின்னப்பிள்ளையா இருந்த காலத்தில்  (மதுரை மாவட்டம் ) திருகாணி வச்ச கொலுசுகள்தான் போட்டுருக்கேன்.  சில சமயம்  அது திருகாணி தானே திருகிக் கழண்டு போய் ஒத்தைக் கொலுசைக் காணாமல் போக்கிட்டு வீட்டுலே  மொத்து வாங்கி இருக்கேன்.  கொசுவத்தி சட்னு ஏத்திக்கிச்சு மனசுக்குள்.

இதுக்குள்ளே கடைக்காரரிடம் பேச்சுக்கொடுத்ததில் கொலுசு வாங்கிப்போடுவது ஆரம்பிச்சு ஒரு பத்துப்பதினைஞ்சு வருஷமாச்சுன்னார். நாம் அர்ப்பணிக்கும் கொலுசுகள் ரொம்ப நேரம் அம்மனின் கால்களில் இருப்பதில்லையாம். அடுத்தடுத்து மக்கள் கொண்டுவரும்போது முதலில்  போட்டதைக் கழட்டிட்டுத்தான்  அடுத்ததைப் போட வேண்டி இருக்கு.   இப்படிக் கோவில்களில் சேரும் கொலுசுகளையெல்லாம்  வித்துடறாங்களாம். (ரீ ஸைக்கிள்?)

நமக்கு என்ன சைஸ் வேணுமுன்னு கேட்டதும், 'நம்மவர்' முந்திக்கிட்டு  என்னோட கால் அளவுக்கு வேணுமுன்னுட்டார்.  திகைச்சு நின்ன  என்னிடம்,  'அம்பாளின் கொலுசுக்குண்டான தொகையை கோவிலுக்குக் கொடுத்துடலாம். இப்போ வாங்கறது உனக்கு' ன்னார்.  இந்தத் திருகாணி  டிசைன்தானே தேடிக்கிட்டு இருந்தேன்னதும் எப்பவோ மதுரை தங்கமயிலில் தேடுனது இவருக்கு இன்னும் ஞாபகம் இருக்கு பாரேன்ன்னு ஆச்சரியம்தான் :-)

இப்ப அளவு பார்க்கணுமே.... கடைக்காரர் ஒரு சின்ன நூலை என்னிடம் கொடுத்து காலளவை பார்க்கச் சொன்னார்.  கொலுசாகவே போட்டு அளவெடுக்க வேணாம். இதெல்லாம் கோவிலுக்குப் போறதுன்னார். ரொம்பச் சரி.  நம்ம காலைத் தொட்டது சாமிக்கா?  நோ நோ.....   (ஆனால் ஒரு முறை திருப்பதி உண்டியலில்  என் கால்களில் இருந்த கொலுசுகளைக் கழட்டிப் போட்டது தனிக் கதை. அதை அப்புறம் ஒருநாள் பார்க்கலாம்)

நூலில் அளந்து அதே நீளத்துக்கு ஒரு கொலுசு செட்  எனக்காச்சு! எல்லாம் அம்பாளின் அனுக்ரஹம்.....

(அம்பாள் ஒரு காலை மடிச்சு  இன்னொரு காலைமட்டும் தொங்கவிட்டு உக்கார்ந்துருக்காள். அழ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்ன்ன்ன்ன்ன் அந்தக் காலில் மட்டும்தான் கொலுசு போட  முடியும். அப்புறம் எதுக்கு  ஒரு செட் கொலுசு வாங்கிக் கோவிலுக்குக் கொடுக்கறோம்? ஒத்தை கொலுசு சமர்ப்பித்தால் போதாதா?  )

அம்மாவுக்கு ஒத்தாசையா ரஜ்ஜு வந்து கொஞ்சம் எழுதிட்டுப் போனான் :-)

வியாபாரத்தை முடிச்சுட்டு, அஞ்சுநிலை ராஜகோபுர வாசல் வழியா கோவிலுக்குள் போறோம். கண்ணெதிரே இன்னொரு மூணு நிலை கோபுரம்.  இதுக்கு முன்னால்  பலிபீடம், கொடிமரம்,  நந்தி சந்நிதி ஒன்னு  அந்தக்  கோபுரவாசலைப் பார்த்தபடி!

நமக்கு வலப்பக்கம்  ஏழெட்டுப் படிகளோடு உயரத்தில் நம்ம லலிதாம்பிகை சந்நிதி!   நல்ல தரிசனம். அம்பாள் காலில் கொலுசு இருக்கான்னு  பார்த்தேன். போட்டுருக்காள் ! நம்ம கொலுசு சமாச்சாரத்தை அம்பாளிடம் சொல்லி மன்னிப்பு கேட்டுக்கிட்டேன்.
பண்டாசுரன் என்ற அரக்கனை வதம் செய்ய லலிதாம்பிகையா இங்கே  அவதாரம் செஞ்சவள், வந்த காரியம் முடிஞ்சதும், தன் கோபம், ஆவேசம் எல்லாம் அடங்க இங்கேயே இருந்துடறாள், நமக்கெல்லாம் அருள் செய்யறதுக்காக!  சும்மாச் சொல்லக்கூடாது.... என்ன ஒரு கம்பீரமா உக்கார்ந்துருக்காள், பாருங்க !
இந்த அம்பாள்  தன்னிலிருந்து வெளியான  வசிநீ என்ற வாக் சக்திகளைக் கொண்டே பாட வைச்சதுதான் அம்பிகையின் ஆயிரத்தெட்டு நாமங்கள் கொண்ட  ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம்! இதுக்கு பாஷ்யம் எழுத  நம்ம ஆதிசங்கர் ஆசைப்பட்டுருக்கார். அது நடக்கலை. ஒவ்வொரு சமயமும் இவருக்கு ஸ்ரீ விஷ்ணுசகஸ்ரநாமம்தான்  கிடைச்சுருக்கு. இதுதான்  கடவுளின் விருப்பமுன்னு  ஸ்ரீ விஷ்ணுசகஸ்ரநாமத்துக்குப் பாஷ்யம் எழுதிட்டார்.  அதுக்கப்புறம்  பல நூற்றாண்டுகள் கழிச்சுத்தான்
ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்துக்கு பாஸ்கர ராயர் (பதினேழாம் நூற்றாண்டு ) பாஷ்யம் எழுதினார்.
இனி கோவிலின் மூலவரை தரிசிக்க மூணுநிலைக் கோபுர வாசல் வழியாக உள்ளே போறோம். த்வாரபாலகர்கள் அருமை!   மேகநாதர் அமைதியாக தரிசனம் கொடுத்தார்.
கோவில் உள்ளும் புறமும் சுத்தமோ சுத்தம் !  எனக்கு அதிர்ச்சி வைத்தியம் செஞ்சுட்டாருன்னுதான் சொல்லணும்:-)
வேளாக்குறிச்சி ஆதீனத்தின் நிர்வாகத்தில் இருக்கு இந்தக் கோவில் !  வேளாக்குறிச்சி ஆதீன கர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அஜபா நடேஸ்வர பண்டார சன்னதிகள்  பரம்பரை அறங்காவலர்.
மூலவர் இருக்கும் கருவறை விமானம் கஜ பிருஷ்ட விமானம். வேறெங்கேயும் கேள்விப்படவுமில்லை, பார்த்ததும் இல்லை!   யானை அப்படியே உக்கார்ந்துருக்கும்போது அதன் பின்னம்பக்கம் எப்படி இருக்குமோ அதே போலத்தான் இருக்கு!  வாவ்!

இந்தக் கோவிலுக்குள்ளே ரெண்டு கோவில்கள் இருக்கு ! அம்பாள் சந்நிதியைச் சேர்த்தால் மூணு கோவில்கள்னும் சொல்லலாம். மேகநாதர் திருக்கோவில் தவிர  ரெண்டாவதுக்கு  திருமீயச்சூர் இளங்கோவில்னு பெயர். இந்த ரெண்டு கோவில்களுமே பாடல் பெற்ற தலங்கள் ! (அந்த இருநூத்தி எழுபத்திநாலு லிஸ்ட்!)
ரெண்டு கோவிலுக்குமா சேர்த்து  அங்கே இங்கேன்னு கணக்கில்லாத எண்ணிக்கைகளில் சிவலிங்கங்கள் !  இவைகளில்  முக்காலும், தேவர்கள் வந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டவைகளாம்!

கஷ்யப முனிவருக்கு கத்ரு, விநிதைன்னு ரெண்டு மனைவிகள்.  இந்த ரெண்டுபேரும்  குழந்தை வேண்டி சிவனை  வணங்குனாங்க.  சிவன் ரெண்டு பேருக்கும் ஆளுக்கொரு முட்டையைக் கொடுத்துருக்கார். ஒரு வருஷம் வச்சுக் காப்பத்தணும்.  இதிலிருந்து உங்களுக்கு சத்புத்ரன் பிறப்பான் என்ற ஆசிகளோடு !

ரெண்டு பேரும் அவரவர் முட்டையைக் கவனமாகப் பாதுகாத்து வர்றாங்க. ஒரு சுபயோக சுபதினத்தில்   விநிதையின் முட்டையிலிருந்து ஒரு பறவை பிறந்தது. புள்ளையைக் காணோமே இப்படிப் பறவை முட்டையைக் கொடுத்து நம்மை ஏமாத்திட்டீரேன்னு  அழுதுகிட்டே சிவனிடம் போய் முறையிட்டதும், இதைச் சாதாரணப் பறவைன்னு நினைக்காதே.... மஹாவிஷ்ணுவுக்கு வாகனமா இருந்து  ரொம்பப் புகழோடும், சக்தியோடும் விளங்கப்போறான் உன் பிள்ளைன்னு சமாதானப்படுத்தி அனுப்பறார் சிவன்.

பக்கத்து வீட்டுலே குழந்தை பொறந்துருச்சு. நம்ம வீட்டுலே இதுவரை ஒரு அனக்கமும் இல்லையேன்னு  யோசிச்ச கத்ரு,  தன்னுடைய முட்டையை எடுத்து  உடைச்சுப் பார்த்தாள் !  முழுசும் வளர்ச்சி இல்லாத ஒரு குழந்தை அதுக்குள்ளே இருக்கான்.  உடம்பின் மேல்பாகம்  முழுவளர்ச்சி, கீழ்பாகம்..... ஒன்னும் சொல்றதுக்கில்லை.....

ஓடு.... சிவனாண்டைபோய் முறையிடலாமுன்னு போறாள் கத்ரு. 'அவசரப்பட்டு இப்படி முட்டையை உடைச்சுட்டேயே.... உள்ளே மனுஷக்குழந்தை  வச்சுருந்தேனே. இப்படிக் காரியத்தைக் கெடுத்துட்டியே....  போனாப் போகட்டும். அழுது புலம்பாதே.....   இவன் வளர்ந்து பெரியவனானதும், இவனுக்கொரு நல்ல இடத்தில் வேலைக்கு ஏற்பாடு பண்ணறேன். உலகத்தைச் சுத்தி வருவான் பாரு'ன்னார். குழந்தைக்கு அருணன் என்ற நாமகரணமும் ஆச்சு.

அதேபோல் சூரியனின் ஏழுகுதிரைகள் பூட்டிய தேரை ஓட்டும் தேரோட்டி வேலையும் வாங்கிக் கொடுத்துட்டார். தேவலோகத்துலே மாற்றுத்திறனாளிக்கும்  மதிப்பு உண்டுன்னு தெரியுது இல்லே! தேரில் என்ன ஒரு சௌகரியமுன்னா..... ப்ரேக் போடக் கடிவாளங்களைக் கையால் இழுத்தால் போதும்.  காரில் ப்ரேக் போடக் கால் வேண்டி இருக்கே! 

அருணன், தன்னுடைய வேலையைக் கவனமாச் செஞ்சுக்கிட்டு இருக்கான்.  இவன் சிவபக்தன் வேற !  சிவனருளால் பிறந்தவன் இல்லையோ?  ஒரு சமயம், கைலாசத்துக்குப்போய்  சிவனை தரிசனம் பண்ணிக்கணுமுன்னு ஆசை வந்துருக்கு.  முதலில் எஜமானரிடம் சொல்லி லீவு வாங்கிக்கணும். சூரியனாண்டை போய்,  பயணம் ஒன்னு போகணும்.  கொஞ்சநாள் லீவு வேணுமுன்னு கேட்க, எங்கே என்னன்னு விசாரிச்ச சூரியன்,  'என்னது கயிலாயம் போகணுமா? காலே இல்லாத நீ எப்படி மேருமலை மீது ஏறப்போறே?' ன்னு கிண்டல் பண்ணினான்.
அருணனுக்கு துக்கமாப் போயிருச்சு. ஒன்னும் சொல்லாமத் திரும்பிப்போய் சிவனை தியானம் செஞ்சான். 

அடப்பாவமேன்னு சிவன், தரிசனம் கொடுத்துட்டு, நடந்ததை விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டார். 'கூப்பிடு அந்த சூரியனை'ன்னதும்  சூரியன் வந்தான்.  இப்படி  ஒரு மாற்றுத்திறனாளியை அவமதிச்சுப்பேசுன  உன்னைச் சும்மா விடக்கூடாது. இனி உனக்கு ஒளியே இல்லாமல் போகட்டும்னு சபிச்சுடறார்.  சூரியனும் இருட்டாகிட்டான்.

மன்னிப்பு மன்னிப்புன்னு அவன் கதறனதும்,  பூலோகத்துலே ஒரு இடம் சொல்றேன். அங்கெ போய் எங்களை (அர்த்தநாரீ இல்லையோ!)   மேகமண்டலத்தில் யானை மேலே உக்கார்த்திவச்சு, தினமும் கும்பிட்டுவா.  அப்புறம் ஒருநாள்  உனக்கு  என்ன செய்யலாமுன்னு யோசிச்சுச் சொல்றேன்னுட்டார், மேகநாதர் !

இங்கே வந்து அதே போல் வழிபட்டுக் காத்திருக்கான். (கஜ பிருஷ்ட விமானம்.... வந்தது இப்படித்தான் போல ! )

சூரியன் இல்லாமல் போனதும் தேவலோகத்திலும் கொஞ்சம் கஷ்டம்தான் ஆகிப்போச்சு.  தேவர்களும் இங்கே வந்து சிவனை வணங்கி 'எதாவது செய்யுங்க'ன்னு விண்ணப்பிக்கறாங்க.  அவுங்கெல்லாம் வந்து சிவனை லிங்க ரூபியாப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால்தான் அந்த லிங்கங்கள்  அந்த தேவர்கள் பெயரிலேயே இங்கே இருப்பதைப் பார்த்தோம்.  குபேர லிங்கம், வாயு லிங்கம், தேயுலிங்கம், இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம்னு  எக்கச் சக்கம். ( இருபத்தியஞ்சுன்னு சொல்றாங்க. தேவர்கள் எண்ணிக்கை முப்பத்து முக்கோடின்னு தெரியுமோ?)

இதுக்கிடையில் ஒரு ஏழு மாசம்   கடந்து போயிருச்சு. இன்னும் தனக்கு  ஒளி கிடைக்கலையேன்னு  வருந்தின  சூரியன், ' ஹே மிஹரா'ன்னு அலறலா  சத்தம் போட்டு சிவனைக் கூப்பிடறான். (சிவனுக்கு மிஹரா என்று ஒரு பெயரும் இருக்கு ! ) அப்பதான் சிவனும் பார்வதியும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க ஆரம்பிச்சுருக்காங்க. இந்த அலறல் கேட்டதும் பார்வதிக்குக் கோபம் வந்துருது.  கொஞ்சம் கூட மட்டுமரியாதை இல்லாமல் வூட்டுக்காரர் பெயர் வேற சொல்லிக் கூப்பிட்டா கோபம் வருமா இல்லையா? 

கோபத்தோடு சாபம் கொடுக்க வாயைத் திறந்ததும், சட்னு  மனைவியின் தாடையைப் பிடிச்சு, 'சாந்தமாகுடா செல்லம். ஏற்கெனவே ஏழுமாசமா இருண்டு கிடக்கான்.  அவனுக்கு இன்னும் சாபம் கொடுத்தா அவ்ளோதான்.... அழிஞ்சே போயிருவான். கொஞ்சம் பொறுமையோடு நினைச்சுப்பார்'னு கெஞ்சினார். இதெப்படி எனக்குத் தெரியுமுன்னு கேக்கறீங்களா?

அதுதான் க்ஷேத்ரப்புராணீஸ்வரர் சிலையாவே  நின்னு  'நடந்தது என்ன?'ன்னு காமிக்கிறாரே!
ச்சும்மாச் சொல்லக்கூடாது.... என்ன ஒரு அழகான  சிலைகள் பாருங்க!   இந்தச் சிலையைக்கூட ஒரு பக்கமிருந்து பார்த்தால்  பார்வதி  கோபமா இருக்கற மாதிரியே  தெரிகிறாள். இந்தாண்டை நின்னு பார்த்தால் சாந்தமான முகம்!  இந்த பாவனைகளை எப்படித்தான் சிற்பத்தில் கொண்டுவந்தாங்களோ!    அமேஸிங்....

அப்புறம்  இங்கே சூரியனுக்கு ஒளி மீண்டும் கிடைச்சதால் இந்த ஊருக்கு மீயச்சூர்னு பெயர்க் காரணம் சொல்றாங்க. திரு அடைமொழி சேர்ந்து திருமீயச்சூர் ஆச்சு.
கோஷ்டத்தில்  மஹா விஷ்ணு, ப்ரம்மா, லிங்கோத்பவர், சந்திரசேகரர், சதுர்முக சண்டிகேஸ்வரர்னு  அமர்க்களம் போங்க !
மகிஷனின் தலைமேல் நிற்கும் விஷ்ணுதுர்கை எட்டுக் கைகளுடன் அருள் பாலிக்கிறாள் !  ஒரு கையில் மரக்கிளையில் உக்கார்ந்துருக்கும் கிளி!

மஹாலக்ஷ்மிக்குத் தனியா ஒரு சந்நிதி.  அப்புறம் அந்த இளங்கோவில்னு இருக்கு பாருங்க அங்கத்து மூலவர்  சகலபுவனேஸ்வரர், அம்பாள் பெயர் மின்னும் மேகலையாள்!

புள்ளையார்கள் அங்கங்கே!  சுப்ரமணியருக்கும் ஒரு சந்நிதி உண்டு.  பிரகார மண்டபத்தில் ஒரு ஓரத்தில் காவடிகளை அடுக்கி வச்சுருந்தாங்க.

நம்ம ஸ்ரீரங்கம் கோவிலில் இருக்கும் அமுதகலச கருடர் பதிவில்   பெரிய திருவடியைப் பற்றி ஒரு கதை எழுதி இருந்தேன்.  இப்ப என்னடான்னா.....    அந்தக் கதையை அப்படியே (எப்படியெப்படியோ!) மாத்தி இங்கெ ஒரு கதை வந்துருக்கு!  ரெண்டு வெவ்வெறு கதாசிரியர்கள் ஒரே சம்பவத்தை  அவரவருக்குத் தோணும்படி எழுதி இருக்காங்க போல!!!
காலை  ஆறு முதல் பனிரெண்டரை, மாலை நாலரை முதல் எட்டரை வரை கோவில் திறந்துருக்கும். ஆனால் நீங்க பகல் நேரத்தில் போனால்தான்  கோபுரம், விமானங்கள், கோஷ்டத்தில் இருக்கும் சிலைகள் இப்படி எல்லாத்தையும்  பார்க்க முடியும். ரொம்பப் பெரிய கோவிலாகவும் இருக்கு பாருங்க.
இன்னொரு சுவாரஸ்யமான சமாச்சாரம் நம்ம அருணனின் 'கதை'யில் இருக்கு!  கயிலைக்குப் போகும் போது தன்னை ஒரு அழகிய பெண்ணாக உருவம் மாத்திக்கிட்டுப் போனானாம்.  தரிசனம் முடிச்சுட்டு வரும்போது இவளைப் பார்த்த இந்திரன், இந்த  அழகால் மயங்கிட்டான். அதன் பலன்?  வாலி பிறந்துருக்கான்!

தன் எஜமானன் சூரியனிடம் இப்படி பெண்ணாக உருவம் எடுத்துப் போனேன்னு (அதைமட்டும்) சொன்னதும், எங்கே காட்டு எப்படி இருந்தேன்னு பார்க்கலாமுன்னு கேட்கத் திரும்பவும் அதே பெண்வேஷம் கட்டிக் காமிச்சான். காமிச்சானா........... அழகியைப் பார்த்த  சூரியனுக்கு அவளை விடமுடியலை. பலன்? சுக்ரீவன் பொறந்துட்டான்!

அப்ப....  ராமாயண காலத்துக்கு(ம்)முந்தி மேகநாதனும், லலிதாம்பிகையும் இங்கே கோவில் கொண்டாச்சு !

நம்ம சனைச்சரண், யமதருமன்,  கருடர், அருணன்,  வாலி, சுக்ரீவன்  இப்படி அறுவரின் அவதார ஸ்தலமாம் இந்த திருமீயச்சூர்! !

சொல்லமுடியாத மகிழ்ச்சியோடு  கிளம்பி  வரும் வழியில்  ராஜகோபுர வாசலாண்டை ஒரு பெண்மணி  மஞ்சள் குங்குமம், தாலிச்சரடு, வெற்றிலைபாக்குன்னு எனக்குக் கொடுத்தாங்க. அந்த அம்பாளே கொடுத்துருக்கான்னு நினைச்சு  வாங்கிக்கிட்டேன். என்ன பிரார்த்தனையோ? நல்லா இருக்கட்டும்.

PINகுறிப்பு: பதிவு கொஞ்சம் (!) நீண்டுபோனதால் படங்களைக் குறைச்சுக்கிட்டேன். ஆனால் அந்த அற்புதமானவைகளை அப்படி லேசில் விட்டுட முடியாது. தனி ஆல்பமாப் போட்டு விரைவில்  சுட்டியை இங்கே போட எண்ணம்.

தொடரும்.......... :-)


Wednesday, March 20, 2019

மாதா சரஸ்வதி...... ஷாரதே...... !!!!!(பயணத்தொடர், பகுதி 81 )

இந்தமுறை இன்னும் ஒருநாள் கும்மோணத்துலே தங்கறோம். எல்லாம் என் பிடிவாதத்தினால்தான்.... எப்ப வந்தாலும்  குறிப்பிட்ட சில கோவில்களோடு முடிச்சுக்கிட்டுக் கிளம்பிடறோம்....  மனசுலே இருக்கும் ஒரு சில கோவில்களையாவது  பார்த்துக்கணுமுன்னா  ஒரு ரெண்டுநாள் கூடுதலாத் தங்கத்தானே வேணும்?  அடிச்சுப்பிடிச்சு ஒருநாள் எக்ஸ்ட்ராவாக் கிடைச்சதோ?  இல்லை.... மதுரை ரெஸிடன்ஸி புண்ணியம் கட்டிக்கிச்சு.  அங்கே ஒருநாளைக் கேன்ஸல் பண்ணினதால் இன்றைக்கு என் நாள் :-)

முப்பத்தி மூணு கிமீ போக ஒன்னரை மணி நேரம்  அதிகம் இல்லையோ?  ரோடு அழகு இப்படி... ப்ச்  ....
கூத்தனூர் மஹா சரஸ்வதியம்மன் திருக்கோவில்!  கோவில் வாசலுக்கு ஒரு  அம்பது மீட்டர் இருக்கும்போதே  தகரக்கூரையின் கீழ் ரெண்டு பக்கமும் கடைகள் தொடங்கிருது.
முக்காலும்...  பேனா, பென்ஸில், நோட்டுப்புத்தகம் விற்பனைதான்.  கல்விக் கடவுள் ஆச்சே.....

கோவிலுக்குச் சின்னதா ஒரு மூணு நிலை ராஜகோபுரம்.  இங்கேயும் மேற்கூரைக்கான  ஏற்பாடு நடக்குது. போட்டு முடிச்சுட்டா, ராஜகோபுரம்  நம் கண்பார்வையில் இருந்து மறைஞ்சுரும்..........  ப்ச்...

உள்ளே போறோம்.  கண் எதிரே கருவறையில் தாமரை மலரில் அமர்ந்த திருக்கோலத்தில்  நான்கு கரங்களுடன் ஸேவை சாதிக்கிறாள்!  வலப்பக்கம் மேற்கையில்  அக்ஷரமாலை,  கீழ்க்கை சின்முத்திரை காண்பிக்க, இடப்பக்கம் மேற்கையில் அமிர்த கலசம், கீழ்க்கையில் சுவடியுடன் மடியில் ஒரு வீணை!
அடுத்த பிறவியிலாவது  கல்வியறிவைக்கொடுன்னு வேண்டிக்கலாமான்னு நினைச்சேன். சரின்னுட்டு அடுத்த பிறவி எடுக்கும்படி ஆகிருச்சுன்னா?  இனி...பிறவி வேண்டேன். பிறவி கிடையாதுன்னு பெருமாளே சொல்லிட்டான்.  அதனால்  இந்தப் பிறவியில் எழுத வேண்டிய  பதிவுகளை நல்ல முறையில் எழுதும் அறிவைக்கொடுன்னு மனசார வேண்டிக்கிட்டேன்.  கொஞ்சம்  முன்னாதாகவே ஒரு பதினைஞ்சு வருசத்துக்கு முன்னால் வந்துருக்கணுமோ? 
கோஷ்டத்தில் ப்ரம்மா......

கருவறையைச் சுத்தி ஒரு பிரகாரம். அவ்ளோதான் கோவிலே!  எல்லா இடத்திலும் டைல்ஸ் போட்டு வச்சுருக்காங்க.  இதெல்லாம் ஒரு இருவது முப்பது வருசங்களில்  போட்டுருக்கலாம்.
கோவிலுக்கு வயசுன்னு  ஒரு ஐநூறு முதல் ஆயிரமுன்னு சொல்றாங்க.
(இருக்கும் ஒரே ஒரு பிரகாரத்தை நல்லா சுத்தமா, நீட்டா வச்சுக்கக்கூடாதா?  )

புலவர் ஒட்டக்கூத்தர் காலம் என்ன?   ராஜராஜ சோழன் இவருக்கு ஒரு ஊரை மான்யமாக் கொடுத்தாருன்னும்,  அதனால் ஊருக்குக் கூத்தனூர் என்ற பெயரும் வந்ததுன்னும்  ஒரு தகவல் உலவிக்கிட்டு இருக்கு!

சரஸ்வதிக்குன்னு தனிக்கோவில் இருப்பது  தமிழ்நாட்டுலேயே இங்கே மட்டும்தானாம்!   நிறைய கோவில்களில் சரஸ்வதிக்குன்னு சந்நிதிகள் இருப்பதைக் கணக்கில் எடுக்கலை, கேட்டோ !  இதைப்போலவே  பலகோவில்களில் கோஷ்டத்தில் ப்ரம்மா இருந்தாலும், தனிக்கோவிலாத் தமிழ்நாட்டில் இல்லை.  திருப்பட்டூர் கோவிலில் பிரம்மாவும்  முக்கியமானவராக இருக்கார் என்றாலும் கோவில் அவருக்கு மட்டுமானது இல்லையே...  ராஜஸ்தான் புஷ்கர் நகரில் மட்டும்தான் ப்ரம்மாவுக்குத் தனிக்கோவில் இருக்கு. அவரை நாம் நம்ம ராஜஸ்தான் பயணத்தில் பார்த்துருக்கோம். நினைவிருக்கோ?

இந்தக் கணக்கில் புருஷனுக்கும் மனைவிக்கும்  தனிக்கோவில்  ஆளுக்கு ஒன்னுதான். அதுவும் வடக்கில் ஒன்னு, தெற்கில் ஒன்னு :-)  அது ஒரு கோடி, இது ஒரு கோடி.......

சத்யலோகத்தில் (ப்ரம்மாவின் இருப்பிடம்! ) கணவனும் மனைவியுமா உக்கார்ந்து ஒருநாள் பேசிக்கிட்டு இருக்காங்க. பேச்சுப்போனபோக்கில் வாக்குவாதம் வந்துருது....எல்லாம் யார் வல்லவன்/ள் னுதான்....  மொத்தத்துலே ஈகோ  க்ளாஷ்...

இதைத்தான் சண்டைன்னுது சனம் ....  கணவன் மனைவிக்குள் சண்டையாம். ரொம்ப சண்டை போட்டுக்கறாங்க. குடும்பத்துலே எப்பப் பார்த்தாலும் சண்டை.   ஒத்துமையே இல்லைன்னு சொல்லும்...ஊர்.   ஆனால் இந்தச் சண்டையே போடாத  கணவன் மனைவி  பூலோகத்திலும் இல்லை,   ஈரேழுலகங்களிலும்கூட   இல்லைன்னு இப்பத் தெரிஞ்சு போச்சு பாருங்க  இவுங்களால்... 

பேச்சு தடிச்சுப்போய்  ரெண்டுபேரும் ஒருவரை ஒருவர்  சபிச்சுடறாங்க. சாபம் கிடைச்சதும்....... பூலோகத்தில் வந்து ஒரே வீட்டில் அண்ணன் தங்கையாப் பிறந்துடறாங்க.......

(சாபம் கூடச் சரியா விடத்தெரியலை பாருங்க...!  என்னத்தை ஈகோ வேண்டிக்கிடக்கு?  ஒருத்தர் கோபத்துலே சொன்ன வார்த்தையை இன்னொருத்தர் ரிபீட் பண்ணி இருக்காங்க போல . காப்பிக் கேட்... )

வளர்ந்து பெரியவங்களானதும், தாய் தகப்பன்  இவுங்களுக்கேத்த  ஜோடிகளைத் தேட ஆரம்பிக்கறாங்க. அப்பதான் இவுங்க ரெண்டு பேருக்கும்  தாங்கள் யார் என்ற  உண்மை விவரம்   புத்தியில் உரைக்குது.  அடடா.....   நம்மை வேறொருத்தருக்குக் கல்யாணம் கட்டிக்கொடுத்துருவாங்க போல இருக்கே....  நாமேதான் ஜோடி என்றாலும், அண்ணன் தங்கையா பொறந்து தொலைச்சுட்டோமே....  ப்ச்....

(ஒரு  அத்தை பொண், மாமன் பையனாப் பொறந்துருக்கக்கூடாது?  உறவுக்குள்ளே கல்யாணம்னு செஞ்சுக்கிட்டு இருக்கலாமுல்லே? )

இப்ப என்ன ஆயிருச்சுன்னா.... இவுங்க வேறொருத்தரைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. அண்ணன் தங்கையா பிறப்பெடுத்ததால் தங்களுக்குள்ளும் கல்யாணம்  செஞ்சுக்க முடியாது.  நியதின்னு ஒன்னு இருக்குல்லெ...

தர்மசங்கடமாப் போச்சேன்னு முழிக்கிறாங்க.  பேசாம, பூலோக வாழ்க்கையை விட்டுட்டுக் கிளம்பி இருக்கலாம்.  சிவனிடம் போய்  தீர்ப்பு சொல்லக் கேட்டதும், அவரும்....  'ஆமாமா..... இப்ப இருக்கும் உறவு முறையில் கல்யாணம் பண்ணிக்கிட்டால் அது சமூக விரோதச் செயல். க்ரைம். உள்ளே தூக்கி போட்டுருவாங்க.  அதனாலே....   ப்ரம்மனே... நீ இல்லாததால்  படைப்புத் தொழிலுக்கு அங்கே ஆளில்லாம ஏற்கெனவே  கஷ்டம்.  பேசாமக் கிளம்பிப்போய் உன் உத்யோகத்தை ஒழுங்காச் செய்.'

'சரஸ்வதிப் பொண்ணே .....  நீ என்ன பண்ணறேன்னா.... பூலோகத்துலேயே தங்கி இம்மக்களுக்குக் கொஞ்சம் கல்வி அறிவைக் கொடுத்துக்கிட்டு இருந்துரு'ன்னு தீர்ப்பு சொல்லிட்டார்.  அதுதான் சரவஸ்வதியம்மன் இங்கே கோவில் கொண்ட 'வரலாறு' !

(சொன்ன தீர்ப்பின்படி நடக்கலைன்றது வேற விஷயம். பலருக்குக் கல்வி மட்டும் கொடுத்துட்டு அறிவைக் கொடுக்கலை பாருங்க.....  படிப்பு வேறு, அறிவு வேறு!!! )

கணவனும் மனைவியும் வெவ்வேற லோகத்தில் இருந்தால் சண்டையே வராதுன்னு என்னமா  கணிச்சுருக்கார் பாருங்களேன், நம்ம சிவன் !!!
இப்பெல்லாம் வெவ்வேற நாடுகளில் இருந்தாலும் ஸ்கைப், வாட்ஸப் மூலமெல்லாம்  சண்டை போட்டுக்கற அளவுக்கு முன்னேறி இருக்கோம்.  மனுஷன் லேசுப்பட்டவனா?  இதெல்லாம் கூட  வித்யா ரூபிணி சரஸ்வதி   மனுசனுக்குக் கொடுத்தக் கல்வியறிவை வச்சுக் கண்டு புடிச்சதுதானே :-)

விஜயதசமி சமயம் கூட்டம் அப்படி வருமாம்  இந்தக் கோவிலுக்கு!  அக்ஷராப்யாஸம்தான் காரணம்! மற்ற நாட்களில்  சுமாராத்தான் மக்கள் வருகைன்னு  ஒரு கடைக்காரம்மாவோடு பேசுனதில் தெரிஞ்சது.
ஒரு கடையில்  ரொம்பவே அழகழகான பொம்மைகள்  வச்சுருக்காங்க. எடைப் பிரச்சனை காரணம் ஒன்னும் வாங்கிக்கலை.....
காலை ஆறுமுதல் பகல் பனிரெண்டு,  அப்புறம் மாலை நாலு முதல் ஒன்பதுவரை கோவில் திறந்துதான் இருக்குமாம்.
முப்பெரும் தேவியருக்கான நவராத்ரி விழாக்களில்  ஷாரதா நவராத்ரியும், வஸந்த நவராத்ரியும்  இங்கே சிறப்பாகக் கொண்டாடறாங்களாம்!  ஆமாம்.....   வருசத்துலே  மொத்தம் நாலு நவராத்ரிகள் இருக்குன்னு தெரியுமோ?
ஆடி அமாவாசைக்கு மறுநாள் வராஹி நவராத்ரி,  புரட்டாசி அமாவாசைக்கு மறுநாள் ஷாரதா நவராத்ரி  (இதைத்தான்  தென் இந்தியாவில் கொலு வச்சுச் சிறப்பாக் கொண்டாடறோம்.)

தை அமாவாசைக்கு மறுநாள் ஷ்யாமளா நவராத்ரி, பங்குனி அமாவாசைக்கு மறுநாள்  வஸந்த நவராத்ரினு  இருக்கு.  என்னுடைய வட இந்தியத் தோழி ஒருவர் இந்த நான்கு நவராத்ரிகளிலும் விரதம் இருப்பாங்க !


 இதுவரை வரணுமுன்னு  ரொம்பநாளா  நினைச்சுக்கிட்டே இருந்த கூத்தனூர் சரஸ்வதி கோவிலைத் தரிசனம் செஞ்ச திருப்தியோடு இங்கிருந்து கிளம்பறோம்.

கூடவே வாங்க,  இதுவரை போகாத இன்னுமொரு கோவிலுக்குப் போகலாம். சுவாரஸ்யம் இருக்கு அங்கே !!!
இன்றைக்கு ரொம்பத்தான் சுத்தப்போறோமோ...... 

தொடரும்....... :-)


Monday, March 18, 2019

அடைப்பும் திறப்பும்..... !!!!! (பயணத்தொடர், பகுதி 80 )

நம்ம நாச்சியார்கோவிலில் இருந்து நேராப் போனது நம்ம சக்கரராஜா கோவிலுக்குத்தான்.   என்ன விசேஷமோ.... கோவில் வாசலிலும் வளாகத்திலும் ஏகப்பட்ட கூட்டமும் நெரிசலும். வண்டி பார்க் செய்ய இடமே கிடைக்கலை.  நாங்க மட்டும் இறங்கி நடந்து போறோம். ரமேஷ் எங்கியாவது வண்டியை  நிறுத்திட்டு வந்து சேர்ந்துக்குவார்.
போற போக்கில் வலதுபக்கம் ஆஞ்சிக்கு ஒரு கும்பிடு போட்டுட்டுப் படியேறிப்போகும்போதே.... தேசிகனை எட்டிப் பார்த்தால், நேத்து சொன்னதைப்போலவே  ' சீக்கிரம் மேலே போங்க'ன்னார்!

உத்தராயண வாசல் வழியாத்தான் போகணும் என்பதால்  அந்தப்பக்கம் சுத்திக்கிட்டு மூலவரை தரிசிக்கப்போனோம்.  அங்கே வாசலாண்டை ஒருத்தர் நின்னுக்கிட்டுச் சீக்கிரம் போங்கன்னார்.  நல்ல கூட்டம் வேற வெளியில் நிக்குது.  என்னவோ ஏதோன்னு நாங்க போய் ஸ்ரீ சக்கர ராஜாவைக் கும்பிட்டு வெளியே  உத்தராயண வாசலைத் தாண்டியதும் நமக்குப் பின்னால் வந்த பட்டர்ஸ்வாமிகள் இருவர் வாசலை மூட ஆரம்பிச்சாங்க.  நாம்தான் கடைசி போல!
அதுக்குள்ளே நாதஸ்வரமும் மேளமுமா இசை ஒலிக்க ஆரம்பிச்சது.  என்னவோ விசேஷம்னு நின்னு பார்க்கும்போதே....  இந்த  உத்தராயண வாசல் கதவுகளை ஜஸ்ட் ஒரு மூணு இஞ்ச் இடைவெளி விட்டு மூடிட்டுப் பூஜை செய்ய ஆரம்பிச்சாங்க பட்டர்கள்.

ஆஹா.....  இன்றைக்கு உத்தராயண வாசல் மூடி தக்ஷிணாயண வாசல் திறக்கும் உற்சவமா................

(இதைப்போல் ரெண்டு வாசல்கள் இருக்கும் விஷ்ணு கோவில்களில்  ஆறுமாசம் ஒரு வாசல், அடுத்த ஆறுமாசம் இன்னொரு வாசல்னு  திறந்து வச்சுருப்பாங்க!   நம்ம பூலோக ஒரு வருஷம்,தேவலோகத்துலே  ஒருநாள்.  அங்கே இப்போ பகல் பொழுது முடிஞ்சு இரவு ஆரம்பிக்கும் சமயம். நல்லவேளை  இந்த டேலைட் ஸேவிங் என்ற சனியன் அவுங்களுக்கு இல்லை!! )
நாலுபேர்கள் சுமக்கும் சின்ன சிவிகையில் இருந்தபடி படியேறி வர்றார் பச்சை அலங்காரத்தில் இருக்கும்  க்ஷேத்ரபாலர்!  அவரே சாட்சி.

வாசல்கதவுக்கு விஸ்தாரமான அபிஷேகம், பூஜைகள் எல்லாம் முடிச்சுக் கதவை பூட்டியாச்சு.   ஒரு சின்ன வீடியோ போட்டுருக்கேன் பாருங்க.!









பூட்டிய கதவு !  இனி ஆறு மாசம் இப்படியேதான் இருக்கும்.

இனி தக்ஷிணாய வாசல் திறக்கும் வைபவம். சீக்கிரம் அங்கே போகலாம் வான்னுட்டு 'நம்மவர்' பரபரன்னு படிகள் இறங்கி அங்கே போயிட்டார்.  சனக்கூட்டத்தைத் தொடர்ந்து நானும் அங்கே போனேன்.

இதுக்குள் 'நம்மவர்' நிகழ்ச்சிகளைப் படங்களாக எடுத்துத் தள்ளிக்கிட்டு இருந்தார். இந்தப் பதிவில் நிறைய படங்கள், வீடியோ க்ளிப்புகள்  எல்லாம் எடுத்து துளசிதளத்துக்கு உதவிய 'நம்மவருக்கு' நம் வாசக நண்பர்களின் சார்பாக  நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். படங்கள் சுமாராத்தான் இருக்கு. ஆனாலும் நிகழ்ச்சிகள் பதிவாகி இருக்கே.... அது போதும்!

பட்டர்ஸ்வாமிகள் கதவருகே காத்திருந்தார். க்ஷேத்ரபாலரும் படியேறி வந்தவுடன் பூஜை ஆரம்பிச்சது. மூடும்  கதவுக்குச் செஞ்ச அத்தனை மாலை மரியாதை அபிஷேகம்,   எல்லாம் இங்கேயும் விஸ்தாரமாக நடந்து முடிஞ்சதும், தீபாராதனை காண்பித்து, க்ஷேத்ரபாலரிடம் சாவியை வாங்கிக் கதவைத் திறந்தாங்க!

க்ஷேத்ரபாலர் உள்ளே நுழைஞ்சார்!   கூடவே சனமும். நாங்களும் ஜோதியில் கலந்தோம்.   இன்றைக்கு ரெண்டு வாசல் வழியாகவும் போய் ஸ்ரீ சக்கரராஜாவை ஸேவிக்கும் பாக்கியம் கிடைச்சது நமக்கு!

வருஷத்தில் ரெண்டே நாட்கள்தான்  இப்படி.  உள்ளூர்வாசிகள் கொடுத்து வச்சவங்க. நமக்கு(ம்) லபிச்சதே!
கீழே: தக்ஷிணாயவாசல் திறப்பு.

என்ன ஒன்னு.... பாலும், தயிரும், மஞ்சளும், சந்தனமும், தண்ணீருமா கீழே வழிஞ்சு நம்ம காலாண்டை உலகப்படம் வரையும் போதும் , அப்புறம்  வாசலை நோக்கி நாம் நகரும் போதும்  எங்கே வழுக்கிருமோன்னு கொஞ்சம் பயந்தது நிஜம்...
மூடிய உத்தராயண வாசலுக்கு உள்ளே ஒரு மூலையில் சரபோஜி மஹாராஜா, வெண்கலச்சிலையா நின்னுருக்கார்.
அந்தத் தொடைப்பக்கட்டையையும், குப்பைத் தொட்டியையும் வெளியே வச்சுருக்கக்கூடாதா.....   ப்ச்.

ஸ்வாமியைக் கும்பிட்டதும், கீழே இறங்கி வந்தோம்.இந்தப் படிகளுக்கு நேரெதிராத்தான்  மடப்பள்ளி.  இங்கே சின்ன சுவர் மாதிரி  ஒரு அமைப்பு. சனம் வரிசையா அங்கே இடம்பிடிச்சு உக்கார்ந்துருக்க, நம்ம தேசிகன்,  நைவேத்யப் பிரஸாதங்களைத் தோளில் சுமந்துக்கிட்டுப் படியேறிப்போனார்.  அவர் கண்டருளப்பண்ணித் திரும்பி வந்ததும் பிரஸாத விநியோகம் ஆரம்பிச்சது.

நம்மைப்போலவே பலரும் அன்றைய பிரஸாதத்துக்குக் கொடுத்துருக்காங்க. அவரவருக்குத் தனிப் பாத்திரங்களில்  சக்கரைப்பொங்கல் தயாராக  இருக்கு. ஒருத்தர் விநியோகம் பண்ணி முடிச்சதும் அதே இடத்தில் அடுத்தவர் தொடரலாம்.
அவரவர் ஏற்பாடு செய்தவைகளை அவரவரே விளம்பலாம். விளம்பினோம்.  பாத்திரம் காலி!  அப்புறம்தான் நினைவுக்கு வருது நாம்  பிரஸாதம் எடுத்துக்கலைன்றது.  கடைசியில் பாத்திரத்தில் ஒட்டி இருந்ததைத் தேடிப்பிடிச்சு எடுத்த துளியில் ஆளுக்கு அரைத்துளி! அமிர்தம்!

த்ரோபதியின் அக்ஷயப் பாத்திரத்தில் ஒட்டி இருந்த துளிக் கீரையைக் கிருஷ்ணன் வழிச்சு வாயில் போட்டுண்டான்.... நினைவிருக்கோ? 

இன்றைக்கு ஏகப்பட்டபேர்...  தெரிஞ்சுருந்தால் இன்னும்  கொஞ்சம் அதிகமாவே ஏற்பாடு செஞ்சுருக்கலாம். இந்த தேசிகன் ஒரு வார்த்தை சொல்லி இருக்கப்டாதோ?

திரும்ப ஒருக்கா மேலே சந்நிதிக்குப்போய், ஸ்ரீ சக்கரராஜாவுக்கு நம்ம விண்ணப்பத்தை  ஞாபகப்படுத்திட்டு மனநிறைவோடு ராயாஸுக்குத் திரும்பி வந்தோம்.

(விண்ணப்பம் ஸாங்க்ஷன்டு! இதோ மே மாசம் கல்யாணம், மச்சினர் மகனுக்கு! பெருமாளே......  எல்லாம் உன்  கருணை!)

வெளிமுற்றத்து வாசல் மண்டபத்தாண்டை ரமேஷ்  இருந்தார். உள்ளே வரவே இல்லையாமே...........  அட ராமா...........
பொதுவாக் கோவில்வாசல்களில் வண்டியை நிறுத்தியதும், நம்ம சீனிவாசனுக்குச் சொல்றதைப்போலவே ரமேஷிடமும், உள்ளே வந்து சாமி கும்பிட்டுக்குங்கன்னுவேன். ஆனால் இவர்  அவருக்கு இஷ்டமுன்னா வருவார்.  கஷ்டமுன்னா  தலையை ஆட்டிட்டு வர்றதே இல்லை.  இதைக் கவனிச்சுக்கிட்டு இருந்த 'நம்மவர்' எதுக்கு வீணாக் கூப்புடறேன்னுவார். ஆனாலும் மனசு கேக்குதா?  இவ்ளோ தூரம் வந்துட்டு ஒரு எட்டு உள்ளே வரலை பாருன்னு ஆதங்கமா இருக்கே... ப்ச்...

அறைக்குப் போகும்போது மணி ஒன்பது.  ரூம் சர்வீஸில் எதாவது வாங்கி ராச்சாப்பாட்டை முடிச்சுக்கணும்.

இட்லி, தோசை, பஜ்ஜி.  எல்லாம் ஹாட் கேஸில்  அழகா வச்சு அனுப்பி இருக்காங்க. சூப்பர் சர்வீஸ்!
இன்றைக்கு ரொம்பவே சுத்தி இருக்கோம். ஆனாலும் உடலுக்குத்தான் களைப்பே தவிர  'கிடைச்சது பாரேன்'னு மனசு ரொம்ப குஷியாத்தான்  இருக்கு!

ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பது இதுதான், இல்லே?


தொடரும்.......  :-)