புது நகரின் முதல் கட்ட நிர்மாணத்தில் 30 தொகுதி (செக்டர்)களுக்கான வேலை ஆரம்பிச்சது. நகரின் சனத்தொகை அப்போ ஒன்னரை லட்சம். புது நகரில் வீடு கட்ட நிலம் ஒதுக்கறோமுன்னு அரசு சொல்லுது. .வாங்க ஆளில்லை. நாலைஞ்சு கனால்களா விசாலமான இடங்கள். நாம் க்ரவுண்டுன்னு சொல்வதை இங்கே கனால்''னு சொல்றாங்க. ராணுவத்தில் இருப்போருக்கும், அரசு உத்தியோகஸ்தர்களுக்கும் முன்னுரிமை. ( இப்பவும் புது வீடுகள் விற்பனையில் மேற்பட்டோருக்கு ஸ்பெஷல் டிஸ்கவுண்டு உண்டு. உள்ளூர் தினசரியில் பார்த்தேன்.) அஞ்சாயிரமுன்னு கூவிக்கூவி வித்தாங்களாம். இப்போ அதே இடங்கள் கோடிகளில். (அப்போ ரொம்பவே சல்லிசு இல்லை?. ஆனா அப்பப் பவுன் அம்பது ரூபாயா இருந்த காலம். கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் கணக்கு சரியா வருமோ!)தாராளமா இடம் இருக்கேன்னு பெரூசா பங்களாக்கள் கட்டிக்கிட்டு மிச்சம் இருக்கும் இடங்களில் பூச்செடிகள், புல்வெளிகள்ன்னு போட்டு வச்சுருந்துருக்காங்க. செடிகள் கொழிச்சு வளர்ந்ததைப்போல சனமும் இத்தனை வேகமாப் பெருகுமுன்னு நினைச்சுக்கூடப் பார்த்திருக்க மாட்டாங்க. அடுத்த கட்ட வேலையா ஒரு 17 செக்டர்கள் கட்டுனப்ப மூணரை லட்சம் மக்கள் அந்த 17 இடத்துக்கும் வர ரெடியா நிக்கறாங்க. சின்னச்சின்னதா வீட்டுமனைகளைப் பிரிச்சுக் கொடுக்கும்படியா ஆச்சு. அரை கனால், ஒரு கனால்ன்னு கிடைச்சதால் இண்டு இடுக்கு விடாம தோளோடு தோள் சேர்த்து நிக்கும்படியா வீடுகள் முளைச்சது. அவுங்கவுங்க விருப்பத்தின் படி வர்ணமடிச்ச சுவர்கள்.
நியூஸியில் இருக்கும் பூக்கள் வகை எல்லாம் இங்கேயும் இருக்கு. குளிர்காலநிலையும் அப்படித்தான். அதான் நியூஸியில் இருக்கும் பஞ்சாபிகள் ஹோம்சிக்கே இல்லாம இருக்காங்க போல்!
வீட்டின் கேட்டுக்கு முன்னால் ஆறடி இடம் விட்டுத்தான் காம்பவுண்ட் சுவர் கட்டணும். அதனால் எந்த தெருவைப் பார்த்தாலும் ரெண்டு பக்கமும் ஆறாறடி இடம் கிடக்கு. பெரிய சாலைகளில் இதெல்லாம் நடைபாதைகளா இருந்தாலும்., ரெஸிடென்ஸி ஏரியாக்களில் சரியான விதி முறைகள் இல்லையோன்னு ஒரு தோணல். சில குடியிருப்புப் பகுதிகளில் அந்த இடங்களை அழகான பூந்தோட்டமாக மாத்தி வச்சுருக்காங்க. அசோக மரங்களை ஒரே அளவு கன்றுகளா நட்டு வச்சு அவை வளர்ந்து உயரமாகும் சமயங்களில் ஒரே அளவில் அதுகளை கீழ்ப்பகுதியில் உள்ள இலைகளைத் தரிச்சு டோப்பியாரி செஞ்சு வச்சுருக்காங்க.அசோகமரமுன்னு இல்லை இன்னும் வெவ்வேறு மரங்களையும் ஒவ்வொரு டிசைனில் வெட்டி வச்சுருக்காங்க. சில வீடுகளில் அருமையான கத்தாழைச்செடிகள். சிலதில் பூச்செடிகள் இப்படிக் கண்ணுக்கு விருந்தா இருக்கு. இன்னும் பலவீடுகளில் கூடுதல் அழகுன்னு மண்தொட்டிகளில் பூச்செடிகளை வச்சு காம்பவுண்டுச் சுவற்றில் ஏற்றியிருக்காங்க. செடிகளுக்குத் தண்ணீர் விடும்போது மண் கரைஞ்சு சுவர் அழுக்கு ஆகாதோ? இதுலே பக்கத்து வீட்டுக்காரரோடு போட்டி உண்டோ என்னமோ! ஒன்னுக்கொன்னு வாங்கலை!!!என்னமோப்பா......இதெல்லாம் இந்த ரெண்டாங்கட்டமா வந்த செக்டர் பகுதிகளில் அதிகம்.
முதல் கட்டத்தில் வந்த பங்களாக்களில் உள்ளே இருக்கும் அலங்காரமும் கவனிப்பும் அவ்வளவாக வெளியில் இல்லை. சிலர் அப்படியே மொட்டையாவும் விட்டு வச்சுருக்காங்க. எல்லாம் வீட்டு உரிமையாளர்களின் ரசனையைப் பொறுத்தது. வெள்ளைக்கார நாடுகளில் இப்படி பசேல்ன்னு வீட்டுத்தோட்டங்களை வச்சாலும் நாங்களேதான் மாங்குமாங்குன்னு தோட்ட வேலையும் செய்வோம். மணிக்கணக்கில் கூலி கொடுத்துக் கட்டுப்படி ஆகாதே! ஆனால் இந்தியாவில் வேலையாட்களுக்கு தினக்கூலி, மாசச் சம்பளம் என்பதால் வீட்டுவேலைகளுடன் தோட்ட வேலைக்கும் ஆள் கிடைச்சுருது. தோட்டவேலை தெரிஞ்சவங்களுக்கு (?) இங்கே 'வேலை போயிருச்சு' என்ற நிலமை இல்லவே இல்லை. அழகாத்தான் பராமரிக்கிறாங்க.
இன்னொரு விஷயம் இங்கே தண்ணீர் பஞ்சமும் இல்லையாம். அதே போல பவர் கட்டும். அங்கே சந்திச்ச ஒரு தோழி ஒருவருடன் (அதெல்லாம் ஃப்ரெண்ட் பண்ணிருவொம்லே) கொஞ்சநேரம் உரையாடிக் (?)கொண்டிருந்தபோது கேள்விப்பட்டவை இவை. அநேகவீடுகளில் வேலைக்காரர்களுக்கு ஒரு அறை இருக்கு. 'லிவ் இன் செர்வெண்ட்ஸ்'. வீடுகளில் காய்கறிகள் வெட்டிக்கொடுக்கன்னே 'சிலர்' உதவியாளர்களை வச்சுருக்காங்களாம். 'இதுக்குன்னு தனியா வேணுமா என்ன?' சட்னு உடனே கோபாலைத் திரும்பிப் பார்த்தேன், பொருள்பட:-) . பணக்காரன் அப்படித்தான் இருப்பான்னு சொல்லலாமுன்னா..... எல்லோருமே அந்த வகையில் இல்லை. அந்தச் 'சிலர்' நம்மைப்போன்ற மிடில் க்ளாஸ் மக்கள்தான்.
இன்னும் மக்கள்தொகை நெருக்கமா இருக்கும் பக்கம் போகலை. பொருளாதாரத்தில் கீழ்ப்படியில் நிக்கும் மக்கள்ஸ் எந்த இடத்தில் இருக்காங்கன்னு பார்க்கணும். தனிநபர் வருமானமுன்னு அரசு புள்ளிவிவரம் அறிவிப்பது 99262 ரூபாய்களாம். .இந்திய மாநிலங்களிலும் சரி, இல்லை, இருக்கும் ஏழு யூனியன் பிரதேசங்களிலும் சரி இந்தச் சண்டிகர்தான் முதலிடத்தில் நிக்குது. நாட்டின் பணக்கார ஊர்.
நாட்டின் பிரபலங்கள் பலர் இந்த ஊர்லேதான் இருக்காங்களாம். நம்ம கபில் தேவ், ப்ளையிங் சிக் மில்க்கா சிங், தங்கப் பதக்கம் கொண்டுவந்த அபிநவ் பிந்த்ரா, இன்னும் சிலபல க்ரிக்கெட் வீரர்(???) கள், சினிமா நடிகை(கொஞ்சம் பழையவர்) பூனம் தில்லான்னு சொல்லலாம். இந்தக் கூட்டத்துலே..............ப்ச்......... வேணாம்...............என்னதான் ஒட்டி ஒட்டி இருந்தாலும் 'நீ வேற நான் வேற'ன்னு காமிச்சுக்கணும். இப்படித்தான் இருக்கு சண்டிகரும் ஹரியானாவும். ட்ராஃபிக் போலீஸ் யூனிஃபார்மில்கூட வெவ்வேற நிறம். அங்கே வெள்ளையும் நீலமும், இங்கே வெள்ளையும் காக்கியும். அங்கே நிறைய டர்பன்கள், குருத்வாராக்கள். இங்கே இந்த ஹரியான மாநிலத்துலே இந்துக்கள் 90 சதமானமாம். சீக்கியர்கள் வெறும் 6 சதமானம்தான். அங்கே பஞ்சாப்லே ஏறக்கொறைய 60 சதம் சீக்கியர்கள். இந்துக்கள் கிட்டத்தட்ட 37 சதம். பாக்கி மற்றவர்கள். சண்டிகர் ஏற்கெனவே பஞ்சாப் மாநில ஊர்தானே அதனால் ஊர் முழுசும் சீக்கியர்கள் நிறையவே இருக்காங்க. ஏற்கெனவே ஒரு இடத்தில் குறிப்பிட்டதுபோல ஒரு படத்தைக் கவனமாக் க்ளிக் செய்யும்போது(ம்) எதாவது ஒரு ஓரத்துலே டர்பன் விழுந்துருது:-)
இன்னொன்னும் கண்ணுலே பட்டது. சண்டிகர் பகுதிகளில் ஏராளமான குருத்வாராக்கள். சர்ச்சும் மசூதியும் எங்கியோ ஒன்னு. பஞ்ச்குலாப் பகுதிகளில் நாலைஞ்சு இந்துக்கோவில்கள் இருக்குன்னு கேள்வி. போய்ப் பார்க்க நேரம் இல்லை. இங்கே நம்ம தமிழ்நாட்டிலே ஏராளமான சர்ச்சுகளும் மசூதிகளும் வந்திருப்பதைக் கவனிச்சேன். 35 வருசத்துக்கு முன்னே சென்னையில் இருந்தப்ப இவ்வளவு இல்லை. மக்கள் தொகையும் அப்போ இவ்வளவு இல்லைன்னு வையுங்க. சரி அது இருக்கட்டும்.பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் எங்கே வசிக்கிறாங்கன்னு கொஞ்சம் தேடியதில் சண்டிகர் ஹௌஸிங்க் போர்டு அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டி விட்டுருக்கு. ஒரு அறை ஃப்ளாட்களும், வெறும் ஒற்றை அறைகளும் சில செக்டர்களில் இருக்காம். செக்டர் 17 என்பது நகர மையம். அதைச்சுற்றி இருப்பவை கொஞ்சம் வசதியான ஏரியாக்கள். இப்படிச் சுற்றுச்சுற்றாப்போய் நகருக்கு வெளிப்புறச் சுற்றில் ரொம்பச் சின்ன வீடுகள் இருக்காம்.
இங்கே நம் சென்னையைப்போல நடைபாதை குடித்தனங்கள் இல்லவே இல்லை. அங்கே வசிக்கும் நிலமையில் இருப்பவர்களைப்போல் சண்டிகர் மாநிலத்திலும் மக்களே இருக்கமாட்டாங்களான்ற என் கேள்விக்கு ஊர் சுற்றும் சமயம் ஒரு நாளில் பதில் கிடைச்சது. நகருக்கு வெளியே மண்சுவர்களால் குடிசைகள் கட்டிக்கிட்டு இருக்காங்க இவுங்க எல்லோரும். அதுவும் ஹரியானா பகுதிகளில்தான் பார்த்தேன். ஒருவேளை மொஹாலி பக்கம் போயிருந்தால் அங்கேயும் இருக்குமோ என்னவோ.
ஆனால் ஒன்னு. உழைச்சுப் பிழைக்கும் மக்கள் இவுங்க. அதனால் வந்த ஒரு பெருமிதம் முகத்தில் தெரியத்தான் செய்யுது! சைக்கிள் ரிக்ஷா இன்னும் இருக்கு இங்கே. ஒரு நாள் ச்சும்மா ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி வந்தேன். ரெண்டு ரெண்டரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும். சட்னு தெருவின் குறுக்காலே பாயாமலும், ஒருவழிப்பாதையில் நுழையாமலும் முறைப்படி அத்தனை பெரிய ரவுண்டாணாவைச் சுத்திக் கொண்டுவந்து விட்டார். இத்தனைக்கும் தெரு காலியா இருந்துச்சு. எவ்வளவுன்னு கேட்டப்ப .... முப்பது ரூபாய். முப்பதுக்குத்தான் போவேன் முப்பதுக்குத்தான் வருவேன்னார்:-)
Monday, March 22, 2010
சும்மாச் சுத்துனபோது...............கண்ணில் பட்டவை
Posted by
துளசி கோபால்
at
3/22/2010 02:50:00 PM
27
comments
Labels: அனுபவம்
Friday, March 19, 2010
மனஸா & மனஸா
ஷிவாலிக் குன்றுகளின் அடிவாரத்தில் இருக்கும் ஊர் பிலாஸ்பூர். இந்தக் குன்றுகள் இமயமலைத் தொடர்களில் அப்படியே கடைசியில் சேர்ந்துக்கிட்டதாம். இளவயசு மலைன்னு சொல்றாங்க. ரொம்ப உசரமான பகுதி 1200 மீட்டர்கள்) ஹிமாச்சல் பிரதேசத்தில் இருந்து ஆரம்பிச்சு அப்படியே சைடுவாக்கில் கீழே ஹரியானா மாநிலத்தில் வந்து சேருது.
மணிமாஜ்ரா (இந்தப் பெயர் எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு1) என்ற ஊர் வழியா (இது பஞ்ச்குலா மாவட்டத்தில்தான் இருக்கு) பயணம் செஞ்சு பிலாஸ்பூர் வந்து சேர்ந்தோம். இன்னிக்கும் அந்தச் சண்டி கோவிலைத் தேடிக் கிளம்புனதுதான். நம்ம ட்ரைவர் பையர் ரோஹித், மனசா, சண்டி மந்திர்கள் எல்லாம் ஒரே லைனில்தான் வருது. பிரச்சனையே இல்லை. போயிறலாமுன்னு சாதிச்சார்.
இப்போ ஒரு முன்குறிப்பு: பாவம் கோபால். வேலைக்கும் வீட்டுக்கும் நடுவிலே மாட்டிக்கிட்டார். கடைசியில் முற்பகல் வீட்டுக்கும், பிற்பகல் வேலைக்கும் ஒதுக்கி வச்சதால் கொஞ்சமா ஊர் சுத்திப் பார்க்க முடிஞ்சது. இதுக்குத்தான் சொல்றாங்க 'ஆத்துலே ஒரு கால் சேத்துலே ஒரு கால்.'
மணிமாஜ்ரா ஒரு ரெண்டுங்கெட்டான் கிராமம்போல இருக்கு. கடைவீதிகள், நெருக்கமான மண்தெருக்கள், வீடுகள்ன்னு வளைஞ்சு நெளிஞ்சு போகுது. ஊரைவிட்டு வெளியில் வந்து கோவிலுக்குப் போகும் வழியில் ஒரு இடத்தில் ரயில்பாதையைக் கடந்து போகணும். இப்போ அங்கே சுரங்கப்பாதை ஒன்னு போட்டுக்கிட்டு இருக்காங்க. அநேகமா வேலை முடியும் தறுவாயில் இருக்கு. இதனால் நாங்க இன்னும் கொஞ்சம் சுத்துவழியாப் போகவேண்டியதாகிப்போச்சு.போற வழியில் இந்த இடத்துக்குக் கொஞ்சமும் பொருத்தம் இல்லாம அட்டகாசமான அடுக்கு வீடுகள். மூணு பெட் ரூம் ஃப்ளாட்டுகள். ரெண்டு கோடியாம். ஏன் இப்படித் தீ பிடிச்ச விலை? ( இது ஒரு மலையாள வாக்கு) அடுத்துக் கொஞ்சதூரத்துலே' ராஜீவ் காந்தி டெக்னாலஜி பார்க்' வந்துக்கிட்டு இருக்கு. ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏகப்பட்ட இடத்தை வளைச்சுப்போட்டு, அந்தப் பக்கம் சண்டிகர் நகரின் எல்லையைத் தொட்டுக்கிட்டு நிக்குது. கட்டிடங்கள் வர ஆரம்பிச்சு எல்லாம் ஒவ்வொருவித நவீன டிஸைன்கள். ஏர்டெல் அட்டகாசமா நிக்குது!
போற போக்கில் ஒரு ஃப்ளாட்டை ஒருநாள் பார்த்தோம். நாலு மாடிதான். ஆனால் சின்ன டப்பாக்களை அடுக்கி வச்சதுபோல அறைகள். நீச்சல் குளம், ஜிம் இப்படி நவநாகரீக வாழ்க்கைக்கு எல்லாம் தேவைப்படி அமைஞ்சுருக்கு. ஆனால்..... 'யே ஹமாரா ச்சாய்ஸ் நஹி ஹை பேபி! '
சரி வாங்க கோவிலுக்குப் போலாம். மணிமாஜ்ரா அரசர் ( இங்கே ஒரு கோட்டை கூட இருக்காம். போகலை) கோபால் சிங் இந்த மனஸா தேவி கோவிலைக் கட்டி இருக்கார். காலம் 1811 முதல் 1815 வரை. சின்னதா ஒரு குன்றின் மேல் இருக்கு. இங்கே நித்யப்படி பூஜைக்குன்னு பூஜாரிகளை நியமிச்சு இருந்தார். சுதந்திர இந்தியாவோடு சமஸ்தானங்கள் இணைஞ்சப்ப இந்தக் கோவில் மட்டும் தனியா சுதந்திரமாவே நின்னுருக்கு. கோவிலுக்குச் சேர்ந்த நிலபுலன்கள், வருமானம் இதெல்லாம் பூஜாரிகள் வசம் போனதால் கோவிலோட பராமரிப்பு பூஜ்யம். பக்தர்கள் வருகை குறைஞ்சுக்கிட்டே போச்சாம். சில நல்ல உள்ளங்கள் சேர்ந்து கோவிலை க்ஷீணமடையாமல் காப்பாத்த முன்வந்து ஒரு போர்டு அமைச்சாங்க. கமிட்டி சேர்மேன் ஹரியானா மாநில முதலமைச்சர். அரசாங்கத்தின் கவனத்துக்கு வந்ததும் பரபரன்னு வேலைகள் நடந்து இப்போ அருமையா இருக்கு. குன்றுக்குப் போகும் அகலமான பளிங்குப் படிகளுக்கு மேல் கூரை. நெடூக மின்விசிறி, ரெண்டு பக்கமும் அங்கங்கே உட்கார்ந்து போகத் திண்ணைன்னு சூப்பரா இருக்கு. படு சுத்தமும் கூட. கீழே செருப்புகளை விட்டுப்போக இலவச ஜூத்தா கர், குடிநீர் இப்படிப் பக்தர்களுக்கு பல சேவைகள். கோவிலுக்கு முன்னால் இருக்கும் மைதானத்தில் பூஜைப்பொருட்கள் கடை, சாப்பாட்டுக்கடைகள். மக்கள் உட்கார மரத்தைச்சுற்றிக் கட்டி இருக்கும் மேடைகள் எல்லாமே வசதிதான்.இமயமலைப் பகுதிகளில் சக்தி வழிபாடு ஆதிகாலம் முதலே நடந்துருக்குன்னு காமிக்கும் கண்ணாடி இது. ஹிமயமலையில் சிவன் இருக்கார் என்ற நம்பிக்கை. அதனால் சிவனின் மனைவி பார்வதியும் அங்கேதானே இருக்கணும். மலையில் சிவன், ஷிவாலிக் குன்றில் தேவி. அந்தப்புரமோ?
முதலில் இங்கே தேவியின் உருவம் சின்னதா வெறுங்கல்லா இருந்துருக்கு, பிண்டின்னு சொல்றாங்க. அப்புறம் கோவிலா எடுத்துக் கட்டுனபிறகு பளிங்கில் ஒரு முகம் செஞ்சு, அந்தச் சிறுகல்மேல் சார்த்தி இப்போ தலைமட்டும் உள்ள சிலையா இருக்கு. தலையை மட்டும் பார்த்ததும் இது 'அந்த' சக்தி பீடங்களில் ஒன்னா இருக்குமோன்னு சம்சயம். தலை விழுந்த இடமுன்னும் சொல்லிக்கிட்டு இருக்காங்க சிலர். ஆனால் இது, அது இல்லை. (இதைப்பற்றி வரும் இடுகைகளில் பார்க்கலாம்) இது சித்த பீடமாம். இஷ்ட சித்தி வாய்க்கும் என்றொரு நம்பிக்கை. இது உண்மைன்னு நிரூபிக்கும் வகையில் தலவிருட்சத்தில் கைக்கு எட்டும் உயரம்வரை சரிகை வச்சச் சிகப்புத் துணிகளை பக்தர்கள் கொண்டுவந்து சாத்தி இருக்காங்க. மரம் இருக்கும் ஏரியா முழுசும் செக்கசெவேலுன்னு ஜரிகையும் அதுவுமா வெய்யிலில் ஜொலிக்குது. மக்கள் கூட்டம் பெருகப்பெருக கோரிக்கைகள் கூடும்தானே?
மனஸா தேவி கருவறைன்னு சின்னதா அலங்காரத்தோடு வட இந்திய டிசைனில் ஒரு வெராந்தாபோல முன்மண்டபத்தோடு இருக்கு. அழகான சாண்ட்லியர் ஒன்னும் போட்டுருக்காங்க. கருவறையின் பின்புறத்தில் சின்னச்சின்னதா தேவியின் கருங்கல் உருவங்கள் சுவற்றிலே பதிச்சு வச்சுருக்காங்க. இடப்பக்கம் தல விருட்சமா அரசமரம். ஒரு மூலையில் பத்துப் படிக்கட்டு உசரத்துலே மாடம். ஏறிப்போனால் சிவன் லிங்க உருவில். பளிங்குக்கல்லில் சின்னதா இருக்கார். அரை உடம்பா வளைஞ்சு குனிஞ்சு போகணும் என்பதுபோல் இறங்கும் வழிப் படிக்கட்டுகள்.
மசூதிபோல வெங்காய டிசைனில் இந்தக் கோவில் இருக்கு. நாலுபக்கமும் மினாராக்கள். ஒருவேளை முகமதிய கலாச்சாரம் ஊடுருவியதால் இருக்கலாம். முன்பக்கம் அவ்வளவா இது தெரியலை. ஆனா.... பின்பக்கத்தோற்றம் பார்க்கும்போது அசல் மசூதியேதான்! இந்துக்கோவிலை எப்படி இப்படிக் கட்டுனாங்க என்பதே ஆச்சரியமா இருக்கு.இங்கே இருந்து இன்னும் ஒரு 200 மீட்டர் ஏறிப்போனால் இன்னொரு மனஸா தேவி கோவில். ஒன்னு வாங்கினால் ஒன்னு ஃப்ரீ என்பது போல!
'ச்சோட்டுக்கே பாஸ் போலோ...'பயபக்தியுடன் சாமிகிட்டே பேசிக்கிட்டே போறாங்களோ? செல்லை விடமாட்டேங்கறாங்களேப்பா:(
போகும் வழியெங்கும் விஸ்தாரமான பளிங்குப் படிக்கட்டுகள். ஏற்றம் தெரியாம அப்படியே சும்மா நடந்து போவது போல அமைச்சிருக்காங்க. பத்து மீட்டர் நடை. ரெண்டு படிகள். அப்புறம் பத்து மீட்டர் நடை இப்படிப்போகுது. ரெண்டு பக்கமும் திண்ணைகளின் தொடர்ச்சி. பாதி வழியில் ஒரு பைரவர் சந்நிதி. அந்தப்பக்கம் இருக்கும் விஸ்தாரமான இடங்களைச் சமன்படுத்தி ரெண்டு அழகான கட்டிடங்கள், யாக சாலையும் தியான மண்டபமும். நிழல்தரும் மரங்களும் பூச்செடிகளுமா அருமையான தோட்டம்.நடைமுடியும் இடத்தில் எதிரில் இன்னொரு கோவில். இடையில் ஒரு சின்ன ரோடு, காரிலும் நேராக இங்கே வர ஒரு பாதையாக. பாட்டியாலா மன்னர், கரம் சிங் கட்டிய கோவில். இதுவும் மனஸா தேவிக்கே! இந்தக்கோவில் 1840 வதுவருசம் கட்டப்பட்டது. வட இந்திய ஸ்டைலில் கூம்பு கோபுரத்துடன் விஸ்தாரமான இடத்தில் இருக்கு. நாலு பக்க மூலைகளிலும். சிவன், பிள்ளையார், காளி, ஹனுமன் இப்படி சின்னதா நாலு சந்நிதிகள்.
நட்டநடுவில் இருக்கும் பெரிய ஹாலின் நேர் எதிர்ப்புறத்தில் மனஸா தேவியின் முகம். ரெண்டு பூஜாரிகள் தீர்த்தம் கொடுப்பதும் பக்தர்கள் கொண்டுவரும் நிவேதனங்களை வாங்கி சாமிக்குக் 'காமிச்சுத் திருப்பித்தருவது'மா ரொம்ப பிஸி. இடைக்கிடைக் கலெக்ஷனையும் பார்த்துக்கணுமே! இங்கே நைவேத்தியத்துக்கு பொரிதான் விசேஷமாம். வெளியே இருக்கும் சந்நிதிகளில் இங்கே நிவேதனத்தை போடாதீங்கன்னு நாலு மூலை கம்பிக் கதவிலும் ஹிந்தியில் எழுதித் தொங்கவிட்டுருந்தாலும் அதைப் படிச்சுப் பார்த்துட்டு ஜனங்கள் பயபக்தியோடு பொரிப் பொட்டலத்தைப் பிரிச்சு கம்பி வழியா மூர்த்தங்கள் முன் போட்டுட்டே போறாங்க. வெறுமனே 'போடாதே'ன்னு சொல்லாம 'போட்டால் உங்கள் இஷ்டங்கள், சித்தி ஆகாது. கேன்சலாகிரும்' னு எழுதிப்போடலாம்.
ஹாலின் சுவர்களில் 'சந்த்ரகண்டா, க்ருஷ்மாண்டா, ஷைலபுத்ரி, ப்ரஹ்மச்சாரிணி, ஸ்கந்தமாதா, காத்யாயனி, மஹாகௌரி, ஸித்திதாத்ரி, காலராத்ரி' ன்னு ஓவியங்களை வரைஞ்சு வச்சுருக்காங்க. கொஞ்சம் பழசாகி அங்கங்கே மூக்கு, வாய் எல்லாம் மிஸ்ஸிங். மக்களும் சித்திரத்தைத் தொட்டுக் கும்பிட்டே ஆகணும் என்ற நிர்பந்தத்தில் இருக்காங்களே:(நல்ல பெரிய வளாகம். நிறைய மாமரங்கள் மேடைகளுடன் அங்கங்கே இருந்தாலும் ஆலமரம் ஒன்னுதான் வேண்டுதல் முடிச்சுகளைத் தாங்கி நிக்குது. தரையெல்லாம் பளிங்குகள், பளிச்சுன்னு சுத்தம். கோவிலுக்கு வெளியே வலப்புறம் 'பாபா பாலக்நாத் மந்திர்' ஒன்னு கூப்பிடு தூரத்தில் இருக்கு. கொஞ்சம் படிகளேறிப் போகணும். வீட்டுக்கான 'அரைநாள்' தீரும் நிலமை. அதனால் போகலை.
பண்டாரான்னு பெருசா எழுதி வச்சக் கட்டிடத்தில் புகுந்து பார்த்தால் அது பக்தர்களுக்கு இலவசமா உணவு அளிக்கும் இடம். இதைப்போல் இங்கே மூன்று இடங்களில் பண்டாராக்கள் இருக்கு. வரிசையாய் இலைமுன் அமர்ந்திருக்கும் பக்தர்களுக்கு ஏற்றத்தாழ்வில்லாமல் உணவு அளிக்கிறாங்க.
நவராத்திரி திருவிழாக்காலங்களில் கூட்டம் நெரியுமாம். நான்கு நவராத்ரிகளில் ரெண்டு (மக்/ குப்த் நவ்ராத்ரி & சைத்ர நவ்ராத்ரி) ரொம்பவே விசேஷம், சம்மருக்கு ஒன்னு விண்ட்டருக்கு ஒன்னு. இந்த மாதம் 16 க்கு சைத்ர நவராத்ரி ஆரம்பிக்குதாம். (ஆமாம். யுகாதி வேற. வருசப்பிறப்பு. சைத்ர மாசம் ஆரம்பம். ) மொத்தம் 9 நாள் உற்சவம். முதல் ஆறு நாட்கள் கோவில் திறந்தே இருக்குமாம். ஏழு & எட்டாம் நாளில் மட்டும் ராத்திரி ஒரு ரெண்டு மணி நேரத்துக்குக் கோவிலை மூடுவாங்களாம். இது சுத்தம் செய்வதற்காக மட்டுமே.திருவிழாக் காலங்களில் தேவஸ்தானம் யாத்திரீகர்களுக்கு தங்குமிடம்,. கம்பளி, போர்வை, தாற்காலிகக் கழிவறை, ஆஸ்பத்ரி, மக்களுக்குப் பாதுகாப்பா போலீஸ் ன்னு எல்லா ஏற்பாடுகளையும் அருமையாச் செஞ்சு கொடுக்குதாம். புண்ணீய யாத்திரைக்கான கோவில் என்பதால் விழாக்காலம் தவிர்த்தும் தினமும் மக்கள் எங்கெங்கிருந்தோ வந்துக்கிட்டேதான் இருக்காங்க. காலை அஞ்சு முதல் இரவு 10 வரை கோவில் திறந்தே இருக்கு.
பி.கு: படங்கள் ஏனோ ஓவரா எக்ஸ்போஸ் ஆனமாதிரி வெள்ளை அடிச்சுக்கிடக்கு. கேமெரா செட்டிங் மாறிடுச்சோ இல்லை மொட்டை வெயிலோ எதோ ஒன்னு காரணமா இருக்கலாம்.
Posted by
துளசி கோபால்
at
3/19/2010 03:46:00 PM
38
comments
Thursday, March 18, 2010
அச்சச்சோ..... பீங்கான் கிண்ணம் உடைஞ்சுருச்சா? த்ஸொ த்ஸொ.... இங்கே கொண்டா....
நேக் சந்த் ஸேணின்னு ஒருத்தர் 18 வருசமா ரகசியமாச் செஞ்ச காரியம் ஒன்னு அம்பலத்துக்கு வந்துருச்சு! குர்தஸ்பூர் என்ற ஊரைச்சேர்ந்தவர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினை வந்தப்ப இவரோட ஊர் பாகிஸ்தானுக்குப் போயிருச்சு. அப்ப இவுங்க குடும்பம் கிளம்பி சண்டிகர் வந்துட்டாங்க. இவருக்கு வயசு அப்போ 23. இங்கே அபோதான் புதிய தலைநகர் நிர்மாண் வேலைகள் தொடங்கப்போகும் சமயம். திட்டம் தீட்டிக்கிட்டு இருந்தாங்க. சாலைகள் போடணும். அதுக்கு ஆய்வாளர்கள் நிறையப்பேர் தேவைபட்டாங்க. அப்போ இவருக்கும் பொதுப்பணித் துறையில் ஒரு ரோட் இன்ஸ்பெக்டரா வேலை கிடைச்சது. இவருக்கு தன்னுடைய 60 வது வயசுலே பத்மஸ்ரீ பட்டம் கிடச்சது. எதுக்கு? நல்லா ரோடு போட்டதுக்கா? ஊஹூம்....... பின்னே?
ரோடு இன்ஸ்பெக்டரா வேலை பார்த்த சமயம், தன்னுடைய ஓய்வு நேரங்களில் இடிபாடுகளுக்கிடையில் ச்சும்மாச் சுத்திப் பார்த்து உடைஞ்ச பீங்கான் துண்டுகளைப் பொறுக்கி எடுத்து சேமிச்சுக்கிட்டு இருந்தார். அப்போ சண்டிகர், அங்கங்கே சில வீடுகள், கட்டிடங்கள்ன்னு சின்ன ஊரா இருந்துச்சு. சுக்னா ஏரிக்குப் பக்கத்துலே( இப்போ இந்த ஏரி சுற்றுலாத்தலமா இருக்கு. அன்னப்பறவைப் படகை . 'உலவும் தென்றல் காற்றினிலே.....' பாடிக்கிட்டே ஓட்டிக்கிட்டுப் போகலாம்) (சிங்கிளுக்கு நல்ல படம் சிக்குச்சு. ஆனால்..... அனுப்ப முடியலை)
காடாட்டம் புதர்கள் இருந்த பகுதியில் இந்த சேகரிச்ச சாமான்களைச் சேர்த்துவச்சு அதைக் கொண்டு சிற்பமோ இல்லை பொம்மையோ ஏதோ ஒன்னு பண்ணி அங்கங்கே வச்சுக்கிட்டு இருந்துருக்கார். கற்பனை வளம் கூடுனதால் பலவித மிருகங்கள், மனிதர்களின் பலவிதமான போஸ்கள்னு மனுசர் தன்னுடைய 'ஓய்வு நேரத்துல்லே இதே வேலை'யா இருந்துருக்கார். இது இந்த ஏரிக்குத் தண்ணீர் வரும் வழியா இருப்பதால் இந்த இடத்தை அரசாங்கம் ச்சும்மாப்போட்டு வச்சுருந்துச்சு. ஊருக்கு ஒதுக்குப்புறமா வேற இருந்துச்சா...அதனால் யார் கவனமும் இதில் படலை.ஒருநாள் யாரோ எப்படியோ இதைக் கண்டுபிடிச்சுட்டாங்க. இது 1975வது வருசம் 1957வது வருசத்துலே இருந்து ஆரம்பிச்ச பொம்மை வரிசைகள் இந்தப் பதினெட்டு வருசத்துக்குள்ளே 12 ஏக்கர் இடத்தைப் பிடிச்சுருந்துச்சு.
அரசாங்க இடத்தைப் பயன்படுத்துனது சட்டத்துக்கு புறம்பான செயல். உடனே இதையெல்லாம் இடிச்சு நொருக்கி அப்புறப்படுத்தணுமுன்னு உத்தரவாச்சு. மனசு உடைஞ்சுபோச்சு மனுசருக்கு. ஆனால் பொதுமக்கள் கிட்டே இந்தப் பிரச்சனையைக் கொண்டுபோனார். ஏகோபித்த மக்கள் ஆதரவு கிடைச்சது. இதை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கலாமுன்னு இந்தத் தோட்டத்தை 1976 இல் அரசே திறந்து வச்சுருச்சு. நேக் சந்துக்கு 'ராக் கார்டன் சப் டிவிஷனல் எஞ்சிநீயர் என்ற பதவியையும் கொடுத்து சம்பளமும் கொடுத்த அரசு 50 பேரை அவருக்கு உதவியாளர்களா வச்சுக்கச் சொல்லிருச்சு. இப்ப முழுநேரமும் பொம்மை செய்வதே தொழில். 1983வது வருசம் இந்தக் கல்த்தோட்டத்தைப் பாராட்டி அரசு ஒரு தபால்தலைகூட வெளியிட்டு இருக்காங்க
(பள்ளிக்கூடப் பசங்க கூட்டம் வந்துருக்கு)
அரசின் ஆதரவும் கிடைச்சதும் நகரின் பலபாகங்களில் உடைஞ்ச பீங்கான்கள், கண்ணாடித்துண்டுகள், மறு சுழற்சிக்கான பொருட்கள் எல்லாத்துக்கும் சேகரிப்பு நிலையங்கள் தொடங்கினார் நேக் சந்த். இந்தத் தோட்டம் முழுக்க முழுக்க ரீசைக்க்ளீங் மெட்டீரியல்ஸ் வச்சே உண்டாக்கப்பட்டது. 1996 வது வருசம் மனுசர் வெளிநாட்டுக்குப் போயிருந்த சமயம் விஷமிகள் உள்ளே புகுந்து சேதம் பண்ணிட்டாங்க. அதுக்குள்ளே பொதுமக்கள் ஆதரவால் ராக் கார்டன் சொஸைட்டி ஒன்னு அமைஞ்சு இருந்ததால் அவுங்க ஆதரவோடு எல்லாத்தையும் சரிப்படுத்தி மீண்டும் காட்சிக்கு வச்சாங்க. கொஞ்சம் கொஞ்சமா இந்த 12 ஏக்கர் இப்போ 40 ஏக்கரா வளர்ந்து போயிருக்கு. அங்கங்கே நீர்வீழ்ச்சிகள், குளங்கள், விதவிதமான பொம்மைகள், காங்க்ரீட்பொம்மைகளுக்கு பீங்கானால் ஆடைகள்ன்னு ஒரே அட்டகாசம்.முதலில் வெறும் கல் காங்க்ரீட் பொம்மைகள்னு ஆரம்பிச்சு, நீர்நிலைகள், பீங்கான் மிருகங்கள் மனிதர்கள்ன்னு போய் இப்ப மூணாவது கட்டமா பொழுதுபோக்கு, விளையாட்டுப்பகுதிகள்னு பரவிக்கிடக்கு. வளைவு வளைவான வாசல்களுடன் மீன்காட்சி சாலைகள், குழந்தைகளுக்கான ஒட்டகச்சவாரி, கோட்டைவாசல் போன்ற அமைப்பில் வரிசைவரிசையா ஊஞ்சல், கலை நிகழ்ச்சிகள் நடக்கும்போது உக்கார்ந்து பார்க்க ஆம்பிதியேட்டர்கள் படிவரிசைகள் இப்படி ஏராளம். சினிமாப் படங்களுக்கு ஏற்றமாதிரி இடம். எப்படி விட்டு வச்சுருக்காங்கன்னு தெரியலை. அட்லீஸ்ட் ஒரு டூயட்டாவது எடுத்துருக்கலாம்.
உடைஞ்ச கண்ணாடி வளையல் புடவைகள் கட்டிக்கிட்டு நிற்கும் அழகிகள்:-)
இது நம்ம ஸ்பெஷல்:-)சிரிக்கவைக்கும் கண்ணாடியில்:-)
ஒரு இடத்தில் நினைவுப்பொருட்கள் விற்பனைக்கு சின்னதா ஒரு ஸ்டால். கல்தோட்டம் பற்றிய புத்தகம் ஒரு 12 பக்கம் விற்பனைக்கு இருக்கு. விலை 60 ரூபாய். யாரும் வாங்கறதில்லை போல. படம் எடுக்கத் தடை ஒன்னும் இல்லாதப்ப யார் புத்தகம் வாங்குவா சொல்லுங்க? விலையை 20 ரூ. வச்சுருந்தால் அநேகமாக ஒரு 10% மக்களாவது வாங்க வாய்ப்பிருக்கு.
வெளியே போகும் வழின்னு எங்கேயும் போர்டு வைக்கலை. நாங்கள் நடந்து களைச்சு மூணாம் கட்டம் வந்தபிறகு வெளியேறும் வழியைக் காணோமேன்னு விசாரிச்சால் மூணாம் கட்டத்துக்குப் போகும் வழின்னு ஒரு அறிவிப்பு இருந்துச்சு பாருங்க. அதுக்கு எதிர்த்திசையில் போகணுமுன்னு சொல்றாங்க. எல்லா இடங்களையும்விட இந்த மூணாம் கட்டத்துலே தான் சனம் கூடுதல். தீனிக்கடைகளில் வாங்கிக்கிட்டு ஓய்வா உக்காந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. அதுக்குத் தகுந்த மாதிரி பெரிய ஹாலில் இருக்கைகளும் திண்ணைகளும் ஏராளம். குப்பைகள் இல்லாம இந்த தோட்டம் பூராவும் பளிச்ன்னு இருக்கு.
நேக் சந்தின் பல பொம்மைகள் / சிலைகள் இப்போ உலகம் முழுசும் பரவலா அங்கங்கே இருக்கும் ஆர்ட் கேலரிகளில் இடம்பிடிச்சுருக்காம்
தரை முழுசும் கல்லுகள் பதிச்சே கரடு முரடாக இருப்பதால் கால் சரியில்லாம இருந்தால் இங்கே நடப்பது ரொம்பக் கஷ்டம். வீல் சேர் ஆக்ஸெஸ் கிடையாது.
Posted by
துளசி கோபால்
at
3/18/2010 02:39:00 PM
39
comments
Labels: Rock Garden, அனுபவம்