Monday, September 05, 2016

ராமசாமியின் தூதன் நானடா ராவணா, என்றவன்.... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 82)

ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான்'னு பாடிக்கிட்டே ராம(ர்)சாமி கோயிலுக்குள் நுழைந்தேன். வயதான பட்டர், ராமலக்ஷ்மண சீதை திருமேனிகளைக் காமிச்சு விளக்கிக்கிட்டு இருந்தாலும் என் மனசென்னவோ வீணை வாசிக்கும் ஹனுமானைப் பார்க்கப் பரபரத்துக்கிட்டே இருந்துச்சு. இரா.முவின் பத்திகளில் படிச்சேனே...... மலர்வனம் லக்ஷ்மியும் மடலில் நினைவுபடுத்திட்டுப் போயிருந்தாங்களே......உள்பிரகாரத்தை ரெண்டு முறை வலம்வந்தேன். கண்ணில் அனுமனைக் காணோம்....

      "இன்னும் எத்தனை முறை சுத்தறதா இருக்கே? காணோம் காணோமுன்னா ..... யாராவது எடுத்து ஒளிச்சுவச்சுட்டாங்களா என்ன? பேசாம யாரையாவது கேளேன்" ( 'பேசாம' எப்படிக் 'கேக்கறதாம்'?)

யாருமே கண்ணுலே படலையே.....'பேசாம ' அந்தப் பட்டரையே 'கேக்கலாமு'ன்னு மூலவர் சந்நிதிக்குள் பாய்ஞ்சேன். பாவம் ரொம்பவே வயசானவர். கண்ணும் மங்கலா இருக்கு போல. ரெண்டு நிமிசத்துக்கு முன் என்னைக் 'கண்ட' பாவம் அடியோடு இல்லை. ஆள் நடமாட்டம் பார்த்ததும் 'டகால்'னு எண்ணெய் தீபத்தின் பிடியைப் பிடிச்சுத் தூக்கியபடி ஸ்ரீ ராமர், லக்ஷ்மணன், சீதாப் பிராட்டின்னு டேப் ரிக்காடர்போல ஆட்டோமாடிக்காச் சொல்ல ஆரம்பிச்சுட்டார். வீணை வாசிக்கும் ஹனுமார் எங்கே இருக்கார்ன்னு தவிப்போட கேட்டேன். அதே தீபத்தால் இங்கேன்னு வலதுபக்கம் கையைக் காமிச்சார். அட! கர்ப்பகிரகத்துக்குள்ளேயே ஓசைப்படாம உக்கார்ந்துருக்கார், காலை மடிச்சு அரைமண்டி போட்டவிதமா. வெயிஸ்ட் கோட்டா போட்டுருக்கார்? தங்க(???)க்கவசம் போல இருக்கே!!!!
சைடு போஸ் மட்டும்தான் தெரியுது. ராமனுக்கு மட்டுமே முகம் காட்டும்விதமா.......... நான் ஒருத்தி...முதலில் இங்கே சந்நிதிக்கு வந்தப்பயே கண்ணைச் சுழற்றி இருந்தால்..... பட்டுருப்பார். நான்தான் ஒரு மனசா, ஒரு முகமா ராமன் மேல் கண்ணு நட்டுவச்சுட்டேனே...  

  பிரகாரம் முழுசும் ஸீன் பை ஸீனா ராமாயணம்தான். அழகானச் சித்திரங்கள். சுவர்களில் காமிக்ஸ் புத்தகம். கும்பகர்ணனை எழுப்பும் யானைகள். ஹைய்யோ..........
வயசான பட்டரைத் தவிர்த்து இதெல்லாம் அப்படிக்கப்படியே!!!!    நான் என்ன அரசியல்வியாதியா?  அப்ப ஒரு பேச்சு இப்ப ஒரு பேச்சுன்னு  மத்தி மாத்திச் சொல்ல?

அருள்மிகு இராமஸ்வாமி திருக்கோயில்  (தென்னக அயோத்தி) என்ற போர்ட்
அழகான அஞ்சு நிலைக் கோபுரவாசலைக் கடந்தால் அழகழகான சிற்பங்களைத் தாங்கி நிற்கும் தூண்களுடன் பெரிய மண்டமம். நடுவிலே  பலிபீடம், கொடிமரம். இங்கிருந்து பார்த்தாலே மூலவர் அதோ....  அங்கே தெரிகிறார்!
இந்த மண்டபத்துலே மட்டும் 62 தூண்கள். ஒவ்வொன்னிலும் நாலு பக்கமும் சிற்பங்களைச் செதுக்கி இருக்காங்க.  நின்னு ஒவ்வொன்னா ரசிக்க ஒரு முழு நாள் எடுத்து வச்சுக்கணும்.  அது வர்ற பயணத்துக்கு ................
மூலவரைப் போய் சேவிச்சுக்கிட்டோம்.  ராமனும் சீதையும்  ஒரே  ஆசனத்தில் அமர்ந்து இருக்க, லக்ஷ்மணன்,   பாடிகார்ட் மாதிரியும் அதே சமயம் பவ்யமாயும் நிக்கறார். அப்பவும் கையில் வில் இருக்கு.  பரதன் குடை பிடிக்க, சத்ருக்னன் சாமரம் வீசறார்.  அப்ப நம்ம ஆஞ்சி?  இதோ... நமக்கிடதுபக்கம் கருவறைக்குள்  ஒரு கையில் வீணையும், இன்னொரு கையில்   ஓலைச்சுவடியுமா (ராமாயணம்) காலை ஒருமாதிரி மடிச்சு    உக்கார்ந்துருக்கார்!  இப்ப இவரிருக்குமிடம் நமக்குத் தெரிஞ்சு போச்சுன்றதால்   அங்கே  போய் நின்னதும், தலை தானாகவே இடப்பக்கம்தான் முதலில் திரும்புது எனக்கு :-)
தென்னக அயோத்தின்னு சொன்னது ரொம்பச்சரி. அண்ணந்தம்பிகள் நால்வரை இப்படி ஒரே இடத்தில் பார்ப்பது அபூர்வம்தான்!

பிரகாரத்தில் வலம் வந்தால் இன்னொரு  வியப்பு காத்திருக்கும்!

 ராமாயணம் முழுசும் சித்திரங்களாக!!   மூணு வரிசையில்!  இடப்பக்கம் மேல் வரிசையை மட்டும் பார்த்துக்கிட்டே போகணும் ஒரு முழு சுத்து வந்ததும் ரெண்டாவது வரிசை அதேபோல்  வலம் வந்து பார்க்கணும். கடைசியில்  மூணாவது வரிசை மட்டும்...........   நமக்கும் கருவறையை வலம் வந்து  மூணு சுத்தும் ஆச்சு!  முழு ராமாயணத்தைப் பார்த்தும் ஆச்சு!












சின்னப்பசங்களுக்கு சித்ரக்கதை ரொம்பப்பிடிக்கும்!  இங்கே பாருங்க    கணையாழி கொடுக்கும் ஸீனில் ரெண்டு அனுமன் ரெண்டு சீதை :-)

தஞ்சாவூர் மன்னர் ரகுநாத நாயக்கர் இந்தக் கோவிலை 400 வருசங்களுக்கு முன்னே கட்டி இருக்கார்.  ராமனுக்காகவும் ராமாயணத்துக்காகவும்  இப்படி ஒரு கோவில் கட்டணுமுன்னு தோணி இருக்கு பாருங்க அவருக்கு!
இங்கே கும்பகோணத்துலே நடக்கும் மகாமகத் திருவிழாவில்  உள்ளூரில் இருக்கும் 12 சிவன் கோவில்களுடன், அஞ்சு பெருமாள் கோவில்களும் தீர்த்தவாரியில் கலந்து கொள்ளும்.  அவைகளில்  இந்தக் கோவிலும் ஒன்று.

சார்ங்கபாணி கோயில்,
சக்கரபாணி கோயில்
இராமஸ்வாமி கோயில்
ராஜகோபாலஸ்வாமி கோயில்
வராகப்பெருமாள் கோயில்
என்ற அஞ்சு கோவில் பெருமாள்கள் காவிரிக்குப்போய் வருவாங்க.

கொடிமரம் தங்கமா ஜிலுஜிலுன்னு ஜொலிக்குது.  பழைய கொடிமரம் பழுதாகிப் போனதால் இது போன வருசம் வச்ச புதுக்கொடிமரம்!
துண்களைப் பார்க்கன்னே இன்னொருக்கா வர என்னை சகாயிக்கணும் என்ற கோரிக்கையை ராமனுக்கு வச்சுட்டே அங்கிருந்து கிளம்பினேன்.
கோவிலுக்கு வெளியே வந்தால்... கும்பகோணம் ஸ்பெஷல்ஸான  உலோகச்சிற்பங்களின் கடைகள்.  விற்பனை மட்டுமில்லாம இங்கேயே செய்யறாங்க.  ஒரு குறிப்பிட்ட வகைக் களிமண்ணால்  வார்ப்பு செய்யும் வேலைகள் நடக்குது.




அங்கே நம்மாள் ஒன்னு....... ரொம்பப் பெருசு......  ரொம்பப்புளிக்குதே  இந்தப் பழமுன்னு க்ளிக்கினதோடு சரி :-)
அறைக்குப்போய்ச் சேர்ந்தோம்.  கீழே இருக்கும் ரைஸ் இன் ஸ்பைஸில்  ராச்சாப்பாடு ஆச்சு. நம்மவருக்குப் பூரியும் எனக்கு தோசையும்!

நாளைக்கு  இங்கே இருந்து கிளம்பறோம்.  போய் எல்லாத்தையும்  பொட்டியில் அடைச்சு வச்சுட்டுக் கிடக்கலாம். நாளைக்கு கொஞ்சம் நீண்டபயணம் இருக்கு.

தொடரும்.......  :-)



Friday, September 02, 2016

ஸ்ரீசக்கர ராஜா திருக்கோவில் கும்பகோணம் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 81)

பயணத்தில் இருக்கும்போது, நெருங்கிய தோழி ஒருவருடன் வாட்ஸ் அப்பில் பேசிக்கொண்டிருந்தப்ப,  சக்ரபாணி கோவிலுக்குப் போகலையான்னு கேட்டாங்க.  போகணும். 'போனமுறை போனப்ப கோவிலில் பவர் கட். இருட்டுலே தட்டுத்தடுமாற வேண்டியதாப் போச்சு. இந்தமுறை பொழுதோட போகணும்'னு சொன்னேன்.  'அங்கே  சக்கரைப்பொங்கல் வழிபாடு ஒன்னு செஞ்சுருங்க. குடும்பத்துலே சுபகாரியம் நடக்கட்டும்'னு சொன்னாங்க.  'அதுக்கென்ன.... செஞ்சாப் போச்சு'ன்னேன்.  குடும்பநலன் என்ற கொக்கி அப்படியே நம்மை இழுத்துருது பாருங்க.

ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் தரிசனத்துக்குப்பின் நேரா சக்ரபாணி கோவிலுக்குப் போயிடலாமுன்னு நம்ம சீனிவாசனிடம் சொல்லிட்டு  ரிலாக்ஸா வேடிக்கை  பார்த்துக்கிட்டு இருந்தேன்.  பத்து கிமீ கூடக் கிடையாது. அஞ்சரைக்குள்ளே போயிடலாமுன்னு நினைச்சால்....  யானையும் குதிரையுமா கண்ணில் பட்டதும்  ஸ்டாப் போட்டாச். யானைக்கு தும்பிக்கை ஸ்டாண்ட் இருக்கு :-)

நல்ல அழகான யானையும் குதிரையும்! கிராமதேவதைக் கோவில்போல  இருக்கு.  கோவில்னு பெருசா ஒன்னும் இல்லை. ஒரு மரத்தில் சாமியை ஆவாஹனம் பண்ணி இருக்காங்க போல! மரச்சாமி.  பக்கத்துலே ஒரு ஓலைக்குடிசையில் ஒரு  சாமி சந்நிதி.  மாரி அம்மன்னு நினைக்கிறேன். இல்லே எல்லையம்மனா?

இறங்கிப்போய் க்ளிக்கலும் தரிசனமும் ஆச்சு. காவிரி ஆற்றுப் பாலத்துக்குப் பக்கத்துலே இது இருக்கு.  பாலம் கடந்து  இடப்பக்கம் திரும்பினால் சக்ரபாணி கோவில்!
ஸ்ரீசக்கர ராஜான்னு  பெயர் போட்ட அழகான அஞ்சு நிலை  ராஜகோபுரம்! கோபுர வாசலுக்குள்   நுழைந்தால்  ஒரு வட்ட வடிவ  வசந்த மண்டபம்.  ரொம்ப அழகா இருக்கு! அப்புறம் கண்ணுக்கெதிரே பலிபீடம் கொடிமரம் எல்லாம் ஜொலிப்போ ஜொலிப்பு!

கொடிமரத்துக்கு  இடப்பக்கம் கோவிலுக்குள் வருவதற்கான இன்னொரு வாசல்!   கொடிமரம் தாண்டி   கோவில்மண்டபத்துக்குள் போகும் வாசல் முகப்பில் ஸ்ரீ சக்கர ராஜா ன்னு மூணு முறை எழுதி   இருக்கும் நியான் விளக்கு. மேலே  ஆதிசேஷன்மேல் தேவிகளுடன் வீற்றிருக்கும் பெருமாள்!
கோவிலில்  வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. இன்னும் ரெண்டரை வாரம் கூட இல்லை, மகாமகத்துக்கு இல்லையா? அதான் பெயிண்டிங்  எல்லாம் செஞ்சு  வண்ணக்கலவைகளில்  கோபுரமும் அதில் இருக்கும் சிலைகளும், மற்ற இடங்களும் பளிச் பளிச்!

கோவில் புஷ்கரணி சுத்தமா இருப்பது மகிழ்ச்சி . பக்கத்தில் இருக்கும் மரங்களின் இலைகள் உதிர்ந்து மிதக்குதே தவிர ப்ளாஸ்டிக் கழிவுகள் எல்லாம் இல்லையாக்கும்! இது அமிர்த புஷ்கரணி! அளவான  திருக்குளம்!
மண்டபம் தாண்டி அந்தாண்டை இருக்கும் கோபுரவாசல் வழியா அடுத்த பிரகாரத்துக்குள் போறோம்.  நல்ல   கருங்கல் மதில்சுவருக்குள்ளே  கருவறை.  உசரத்தில் விமானம் எட்டிப் பார்க்குது!    மூலவர்சந்நிதிக்கு  ஒரு இருவது படிகள் ஏறிப்போக வேணும்.  இங்கே போக ரெண்டு வாசல்கள்.  உத்தராயண வாசல், தக்ஷிணாயண வாசல்.

வலம் வரும்போது  தக்ஷிணாயண வாசல்  முதலில் வருது. ஆனால்  மூடி வச்சுருக்காங்க. ஆடி மாசம் முதல்  மார்கழி வரைதான் இதன்வழி போகமுடியும்.


தை முதல் ஆனிவரை உத்தராயணகாலம் என்பதால் அந்த வாசல்  திறந்து வச்சுருக்காங்க.  சுத்தி வந்து படிகள் ஏறி  அந்த வழியாகப் போறோம்.  வெளியே ஒரு பக்கமா பெண்கள் குழு ஒன்னு  ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம்  சொல்லிக்கிட்டு இருக்காங்க. தெரிஞ்ச சமாச்சாரம் என்பதால் காதுக்கு இதமா இருக்கு!  ஒரு நிமிசம் நின்னு கேட்டுட்டு   உத்தராயண வாசல் உள்ளே நுழைஞ்சு போறோம்.
அர்த்தமண்டபம் தாண்டி கருவறையில் நின்ற கோலத்தில் மூலவர்!  எட்டு கைகள்! சங்கு, சக்கரம், வில், கோடாரி, உலக்கை, மண்வெட்டி, கதை, செந்தாமரைன்னு ஒவ்வொரு கையிலும் ஒன்னு!  முகத்தில் மூணு கண்கள்!
நம்ம சூரியனுக்குத் தான்தான் ரொம்பவே முக்கியப்பட்டவன். தான் இல்லையென்றால் உலகமே இருளில்  என்று கர்வம் ஏற்பட்டுருக்கு.  இதைத் தெரிஞ்சுக்கிட்ட நம்ம சார்ங்கபாணிப் பெருமாள், ஒரே கல்லில் ரெண்டு  மாம்பழமுன்னு  இன்னொரு இடத்தில்  தேவர்களுக்கு இம்சை கொடுத்து வந்த  ஜலந்தாசுரனை  அழிக்கத் தன்னுடைய கையில் இருக்கும் சக்கரத்தைச் சுழற்றி அனுப்பி இருக்கார்.  அது போய்  வேலையை முடிச்சுக்கிட்டு  நேரா வந்து காவிரியில் மூழ்கி, அப்படியே போய் அங்கே கரையில் உக்கார்ந்துருந்து தவம் செஞ்சுக்கிட்டு இருந்த பிரம்மாவின் முன்னால்  காவிரியில் இருந்து  எழுந்துருக்கு! அந்த இடத்தில்  இவரை சக்கர ராஜான்னு  பிரதிஷ்டை செஞ்சு பிரம்மா வழிபட்டுருக்கார். காவிரியில் இந்த இடத்துக்கு சக்கரப் படித்துறைன்னு பெயர்!
இதுக்குள்ளே கர்வம் கூடிப்போன சூரியன் வழக்கத்தை விட அதிகமான  ஒளியையும் உஷ்ணத்தையும் அனுப்பிக்கிட்டு இருக்கான். ஜீவராசிகள் சூடு தாங்காம வெக்கையில் வாடுது.  சக்கரராஜா பார்த்தார். சூரியனிடமிருந்த அத்தனை ஒளியையும்  தன்னுடைய ஆகர்ஷண சக்தியால்  தனக்குள்  இழுத்துக்கிட்டார்.

உலகமே இருட்டாகிப்போச்சு. திக்குதிசை தெரியாம தவிக்குது ஜீவராசிகள் எல்லாம். தேவர்கள் அனைவரும் வந்து சேர்ந்து  சக்கரராஜனிடம், சூரியனுக்கு ஒளியைக் கொடுக்கவேணுமுன்னு  விண்ணப்பிக்கிறாங்க.  அப்போ மும்மூர்த்திகளும் தம்மில் சங்கமிக்க அக்னி கொழுந்துவிட்டு எரியும் கேசத்துடன்  தோன்றியவர்,  சரி போகட்டுமுன்னு ஒளியைத் திருப்பிக் கொடுத்தார்.

 எனக்கு இங்கே நியூஸியில் கண்கண்ட தெய்வம் சூரியன்தான்.   குளிர்காலம் ஆரம்பிக்கப்போகுதுன்னு  ரெண்டு மாசத்துக்கு முன்பே உடல்ரீதியா உணரத்தொடங்கிருவேன்.  குளிர்காலம் முடிஞ்சதுன்னு இங்கே எல்லோரும் கூத்தாடினாலும் அதுக்குப்பிறகும் ரெண்டு  மாசம் போனால்தான் லேசா சூடு உரைக்கும்.

ஒளி மங்கிப்போன சூரியனுக்குத் தன்னுடைய தவறு புரிஞ்சது.   மனம் வருந்தி இங்கே வந்து சக்கரராஜாவை  தியானம் செஞ்சு  மன்னிப்புக்கேட்டு, தன்னுடைய ஒளியை திரும்பவும்  அடைஞ்சார்னு  கோவில் புராணம் சொல்லுது.

மூலவர் சக்கரம் தரித்துள்ளதால் சக்கரபாணின்னும் பெயர்.  ஊர் மக்கள்  சக்ரபாணி கோவில் என்றுதான் சொல்றாங்க. கோவிலிலும் முந்தி சக்ரபாணி கோவில் என்ற பெயர்ப் பலகைதான் இருந்துச்சு. இப்ப சக்கர ராஜான்னு  நியான் விளக்கால் சொல்றாங்க.
சக்கரராஜா... சூரியன், பிரம்மன், மார்க்கண்டேயர், அகிர்புதன்ய மகிரிஷி, அக்னிபகவான் ஆகியோருக்கு   நேரில்  தோன்றி தரிசனம் கொடுத்துருக்கார். முகத்தில் வேற  முக்கண்!  அதனால்  இவர்களுரிய செவ்வரளி, செம்பருத்தி, வில்வம், வன்னி, துளசி , குங்குமம் ஆகிய பொருட்களை கொண்டு சுவாமிக்கு அர்ச்சனை செய்யறாங்க.  உலகில் வேறெங்கும் இப்படி இல்லையாம்.

இவரையும் பெருமாளாவே நினைச்சு கும்பிட்டுக்கிட்டேன். பெருமாள் எந்த அவதாரம் எடுத்தாலும்  கூடவே போற குணம் இருக்கே!  நம்ம தஞ்சாவூர் மன்னர் ஸெர்ஃபோஜி அவர்கள் இந்தக் கோவிலை விரிவுபடுத்திக் கட்டி இருக்கார்.  இவருக்கு வந்த கடும் நோயை குணப்படுத்தியதற்கான நன்றிக் கடன். மன்னருடைய  ஆளுயரப் பித்தளைச் சிலை மகாமண்டபத்துச் சுவரையொட்டி இருக்கு. என்னவோ வெள்ளையா பெயிண்ட் அடிச்சு வச்சுருக்காங்க.


அழகான யானைகள் இழுக்கும் தேர் மண்டபத்தில் தாயாருக்குத் தனிச்சந்நிதி.  விஜயவல்லி, சுதர்ஸனவல்லின்னு  பெயர்கள். தாயார் சந்நிதி வாசலில் விஜயவள்ளி தாயார்னு தான் எழுதி இருக்கு.


வலம் வரும்போது  இன்னொரு அழகான மண்டபத்தை இடிச்சுக் கட்டிக்கிட்டு இருக்காங்க. மஹாமகம் கொடியேற்றம் இன்னும் பத்தேநாளில் (ஃபிப் 13) இருக்கு என்பதால் வேலைகள் பரபரன்னு நடக்குது.
அங்கே  குளத்தில் விசேஷமுன்னா இங்கே ஏன்னு  சம்ஸயம்.  மஹாமகக் குளத்தில் நீராடி, கரையில் இருக்கும் பதினாறு மண்டபக் கோவில்களை தரிசனம் செஞ்சதால் நமக்குக் கிடைக்கும் புண்ணியத்தின் பலன்கள் எல்லாம் நமக்கில்லையாம்.  அவை சக்கரபாணிக்கே சமர்ப்பிக்கறதுதான் மரபாம்.  அதுதான்.... ஊருலே கல்யாணம், மார்பிலே சந்தனமுன்னு  இங்கே ...
சும்மாச் சொல்லக்கூடாது.... கோபுரச்சிற்பங்கள் எல்லாம் பளிச் பளிச்!
ராமாயண ஸீன் ஒன்னு....  தூக்கமுடியாமல்  சிவதனுஸைத் தூக்கிட்டு வர்றாங்க அஞ்சுபேர்!  ராமர் எடுத்தார் ஒடித்தார்..........
வழிபாட்டுக்கான கட்டணம் செலுத்த  அலுவலகத்தில் கேட்டதுக்கு,  'கொஞ்சம் இருங்க. மடைப்பள்ளியில் இருந்து கோபி ன்னு  ஒருத்தர்  இதுக்கெல்லாம் பொறுப்பு. அவரை வரச் சொல்றோ'முன்னு சொன்னாங்க.  அதுவரை இங்கே அங்கேன்னு  தூண்களின் அழகைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். அஞ்சு நிமிசத்தில் வந்துட்டார் கோபி.
அவரிடம் நம்ம தேவைகளைச் சொல்லி அதுக்கான கட்டணம் கட்டினோம்.  மறுநாள் காலை  எட்டு மணிக்கு  வந்துருங்கன்னு  சொன்னார்.  நம்முடைய பயணத்திட்டத்தில்  இதுக்கான நேரம் இல்லை என்பதால்  நீங்க பிரஸாதங்களை  இங்கே வர்ற மக்களுக்கு விநியோகம் பண்ணிருங்கன்னோம். பூஜைக்கான  மாலை, மற்ற பூஜை சாமான்களை  இப்பவே எப்படி வாங்கித் தர்றதுன்னு அதுக்கு ஒரு தொகையையும் பெரியவரிடம் கொடுத்துட்டு,  மனசுக்குள் பெருமாளிடம் பிரார்த்தனை பண்ணிக்கிட்டேன்.

சும்மா சொல்லப்டாது!...  ஊர் திரும்பிய ரெண்டே மாசத்தில் பிரார்த்தனை பலிச்சுருச்சு. நம்பணும். நம்புனாதான் சாமி!  மகளுக்குக் கல்யாண நிச்சயமாகி எங்கள் மனசு குளிர்ந்தது உண்மை.  வர்ற தையில் திருமணம்!  வழிபாடு நடத்திக்கோன்னு சொன்ன தோழிக்கு என் மனம் நிறைந்த நன்றியை இங்கேயும்  பதிவு செஞ்சுக்கறேன்.

பொதுவாப் பெருமாள் கோவில்களில் சக்ரத்தாழ்வார் சந்நிதி இருக்குன்னாலும், தனிப்பட்ட கோவில் இது மட்டும்தான்னு   சொல்றாங்க.

வாங்க,  இன்னொரு இஷ்டக்கோவில் ஒன்னும் பார்த்துக்கலாம்.  நாளைக்கு நேரம் இருக்காது........

தொடரும்.........  :-)