Friday, May 10, 2013

சும்மாச் சொல்லக்கூடாது !!!

சாங்கி விமான நிலையம் வழக்கம்போல் சூப்பரா இருக்கு. எப்பப்போனாலும் புதுசா ஒரு அழகு. பயணிகளின் மனச்சோர்வு நீங்க அங்கங்கே புதுசுபுதுசா எதாவது  செஞ்சுக்கிட்டே இருக்காங்க.





 ஒவ்வொன்னும் கண்ணை இழுக்குது. எதை விட எதைப்போட?????? நான் பெற்ற இன்பம் வகையில் 35 படங்கள் தாளிச்சுருக்கேன்:-))))


ஆர்க்கிட் மலர்களும், பெரணிச்செடிகளும், சின்னதா மூங்கில் குத்துகள் இருக்கும்  அமைப்புமா அங்கங்கே வச்சுருப்பாங்க.  தொட்டிகளில் மீன் வைக்காமல் குளம் (Koi Pond )கட்டிவிட்டு அதில்  ஓயாம இங்கும் அங்குமா பயணம் போகும் மீன்கள் எல்லாம்  பார்க்கவே அருமையா இருக்கும். நமக்கு  இந்தியா வரணுமுன்னா சிங்கை வழிதான் எப்போதும். எங்கூரிலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மட்டுமே தனியாட்சி நடத்திக்கிட்டு இருக்கு. அதனால் டிக்கெட் எப்பவுமே கூடுதல்தான்.  போட்டியே இல்லைன்னா ........  எப்படி விலை குறைப்பாங்க? ஏன் குறைக்கணும் என்ற எண்ணம் வந்துருதே!

டைரக்ட்டா கிறைஸ்ட்சர்ச் வரணுமுன்னா  எங்களுக்கும் இதைவிட்டா வேற வழி இல்லை. முனகிக்கிட்டே  டிக்கெட் புக் பண்ணுவோம். ஆனால் ஒன்னு  பயணம் ரொம்ப போரடிக்காம இருக்கும்படி பார்த்துக்குவாங்க. நமக்குத்தான் பத்து மணி நேரம்   ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி இருக்கும்:-)


இந்த Bபோரடி எங்கே ஏர்ப்போர்ட்லேயே ஆரம்பிச்சுருமோன்னு  நினைச்சு அவுங்களே பயணிகளுக்கு  மனமகிழ்ச்சிதரும் சமாச்சாரங்களா ஏகப்பட்டவைகளைக் கவனிச்சுச் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.

இப்போ புதுசா இன்னும் சில ஏற்பாடுகள். அவைகளை எங்கே கோட்டை விட்டுருவோமோன்னு தனியா ப்ரோஷர் ஒன்னு போட்டு விளம்பரப்படுத்தி இருக்காங்க.  Garden Trail @ Changi.  இப்ப மூணு டெர்மினல் ஆகிருச்சு பாருங்க, அதனால் குறைஞ்சபட்சம் டெர்மினலுக்கு  ரெண்டு அமைப்புகள். நேரம் அதிகம் இருந்தால்  ஸ்கை ட்ரெய்னில் இங்கேயும் அங்கேயுமாப்போய்ப் பார்த்துட்டு வரலாம். எதுக்கும் எக்ஸ்ட்ரா காசு செலவு செய்யவேணாம் என்பது கூடுதல்  கவர்ச்சி:-)


டெர்மினல் மூணு:  ஃபெர்ன் கார்டன்  பழசு.  அதுவுமில்லாமல்  ஏற்கெனவே  நிறைய படங்களை நம்ம தளத்தில் போட்டுருக்கேன். சாம்பிளுக்கு ஒன்னு இங்கே:-)

புத்தம்புதுசுன்னு  சொன்னால்  பட்டாம்பூச்சித் தோட்டம்.  சங்கிலித் திரை கடந்து உள்ளே போகணும்.


நல்லா இயற்கை அழகு மாதிரி(!) செஞ்சு வச்ச அலங்காரச்செடிகள். கற்பாறைகள்.ஆறு மீட்டருயர நீர்வீழ்ச்சின்னு மாடியும் கீழேயுமா ரெண்டடுக்கு.  பூக்களுக்கு எப்படி சீஸன் இருக்குதோ அதே போல பட்டாம்பூச்சி வகைகளுக்கும் சீஸன் இருக்குதாமே!!!  அந்தந்தக் காலத்தில் பிறக்கும் வகைகளைக் கொண்டு வந்து  வைக்கிறார்களாம்.  இப்ப நாம் பார்த்தவைகள் ஒரு நாலஞ்சு வகைகள்.







முட்டை, புழு, கூட்டுப்புழு , பட்டாம்பூச்சி என்ற நாலடுக்கு பரிணாமம் எப்படி ஆகுதுன்னு விளக்கப்படங்களும் தகவல்களுமாக் கொட்டிக்கிடக்கு. வேடிக்கையோடு கொஞ்சம் கல்வி அறிவும் கிடைச்சுருது!  ப்யூப்பாக்கள்  (Pupae)தொங்குறதைச் சட்னு பார்த்தால்  ஃபேஷன் ஜூவல்லரிகடைகளில் தொங்கவிட்டுருக்கும்  ஆட்டுக்கம்மல்கள் ( ட்ராப்ஸ்க்கு  சின்னக்குழந்தையா இருந்தபோது மகள் வச்ச பெயர்) நினைவுக்கு வருது:-)



Gerbera மலர்களையே பட்டாம்பூச்சி டிஸைனில்  அடுக்கி வச்சுருக்காங்க. எப்படி வாடாம இருக்குன்னு  பார்த்தால்  ஒவ்வொன்னும் தனியா தண்ணீரில் நிக்குது. உண்மையில் இவை சூரியகாந்திக் குடும்பத்தைச் சேர்ந்த ரகம்தான்.



T3 டெர்மினலில்  எப்பவுமெ கூட்டம் அவ்வளவா இல்லை.  'ஹோ'ன்னு பரந்து கிடக்கு.  Han Meilin   என்ற பிரபல சீன ஆர்ட்டிஸ்ட்டின்  மதர் அண்ட் சைல்ட் சிற்பங்கள்  (வெங்கலம்) வச்சுருக்காங்க இங்கே. இவர்தான்  பீய்ஜிங் ஒலிம்பிக்ஸ் mascot வடிவமைச்சவர்.

இன்னொன்னு சூரியகாந்தி தோட்டம். இது ரெண்டாவது டெர்மினலில் இருக்கு.  இங்கே எப்பவுமே கூட்டம் அதிகம்.  சுருக்கமாச் சொன்னா மூணாவது டெர்மினல் நியூஸி. ரெண்டாவது இந்தியா:-) அப்படி ஒரு ஃபீலிங்ஸ் வந்துரும். ஸ்கை ட்ரெய்ன் சர்வீஸ்கள்   இந்த மூணு டெர்மினல்களுக்கும் சுத்த வசதியா இருக்கு.  காலையில் அஞ்சு மணிக்கு  ஓட ஆரம்பிக்கும் ரயில்கள்  ராத்திரி ரெண்டரைவரை ஓடிக்கிட்டேதான் இருக்குதுகள்.



போனபதிவில் சொன்ன அம்பாஸிடர் லவுஞ்சுக்குப் பக்கத்தில்தான் சூரியகாந்தித் தோட்டம். பெரிய பெரியவட்டத் தொட்டிகளில்  வளர்ந்து நின்னு சிரிக்குது பூக்கள். மொட்டைமாடி என்பதால்  கொஞ்சநேரம் ஓய்வா விளக்கு மேலே (!)உக்கார்ந்து இயற்கைக் காற்றை சுவாசிக்கலாம்.   அமைதியான அலங்கார விளக்குகள் இருப்பதால் இரவு நேரத்திலும்   ரிலாக்ஸ் செய்ய முடியுது.  இவ்வளவு பிஸியான ஏர்ப்போர்ட்டில் இருக்கோம் என்பதே  மறந்து போகுது  கண்ணாடித் தடுப்பு மூலம் எட்டிப்பார்க்கும்வரை:-)

பயணிகள் மனதைக் கவரும் வண்ணம் எல்லாம் பார்த்துப்பார்த்து  வடிவமைச்சு இருக்கும் அழகைப் பாராட்டத்தான் வேணும். எழுபதாயிரம் சதுர அடிகள் அளவில் ஷாப்பிங் ஏரியா.  பொதுவா எல்லா விமானநிலையங்களிலும் இருப்பது போல் 'தீ பிடிச்ச விலை'  என்றாலும் நாம் என்ன வாங்கவா போறோமுன்னு சும்மா விண்டோ ஷாப்பிங் செய்வதுதான். ஆனால் பொருட்கள் தரமானவைகளா இருக்கு என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேணும்.

நிறைய இடங்களில்   வலை மேய்ஞ்சுக்க ஏராளமான கணினிகளும், குழந்தைகளுக்கு வீடியோ கேம்ஸ், கார்ட்டூன்ஸ் ன்னு வசதிகளும் இருக்கைகளுமா இருக்கு. ஜங்கிள் ஜிம் கூட ஒன்னு பார்த்தேன். நம்முடைய சொந்த மடிக்கணினின்னா  இன்னும் சௌகரியம். இலவசமா  வலையில் மேயலாம்.  நெட் கனெக்‌ஷன் ஃப்ரீ.

எதுவும் வேணாமுன்னா.... ச்சும்மாவே  சுத்திவரலாம்.  அஞ்சு கிலோமீட்டர் நடைப்பயிற்சி கிடைச்சுரும். ஷாப்பிங் ஏரியா தவிர்த்து  விமானம் ஏறும் கேட்டுகளுக்குப்போக ட்ராவலேட்டர்ஸ் ஏராளம். அதுலே  ட்ராவல் பண்ணிக்கிட்டேகூட பொழுது போக்கலாம்.

விமானநிலையத்துலேயே உக்கார்ந்து போரடிக்குது. போதும் வேடிக்கைன்னு நினைச்சால்  சிங்கப்பூரை ரெண்டு மணி நேரம் இலவசமாச் சுத்திப்பார்க்கும் ஏற்பாடு ஒன்னும் செஞ்சுருக்காங்க  இங்கே.  தினமும் நாலு முறை பகல் பொழுதிலும் ரெண்டு முறை .இரவு நேரத்திலும்  டூர்கள் உண்டு. இதுக்கு பதிவு செஞ்சுக்க  தனி கவுன்ட்டர் வச்சுருக்காங்க. ஒரே ஒரு கண்டிஷன்  உங்களுக்கு அடுத்த ப்ளேன் பிடிக்க குறைஞ்சது 5 மணி நேரம் இருக்கணும்.

ரெண்டு மணி நேரம் சுத்திட்டு வரலாம்.  ஹெரிடேஜ் டூர்னு முக்கிய இடங்களைக் காமிச்சுட்டு, திரும்ப ஏர்ப்போர்ட்டுக்குக் கொண்டு வந்து விட்டுடறாங்க. ஹெரிடேஜுன்னதும்  மெர்லயன் நினைவுக்கு வருது. போனவருசம் அதுக்கு  வயசு 40! ஸ்பெஷல் கொண்டாட்டங்கள் நடக்குது!




முதலாம் டெர்மினலில் ஒரு  காக்டெஸ் கார்டனும், ஹெலிகோனியா கார்டனும் வச்சுருக்காங்க. இன்னும்  அவைகளை நான் பார்க்கலை.  காக்டெஸ்ஸில் நூறு வகை இருக்காம் அங்கே. அடுத்தமுறை அதைக் கண்டுக்கணும் என்பது இப்போதைய ப்ளான்.

தனி உலகமா இருக்கும் இடங்கள்ன்னு நான் எப்பவும் நினைச்சு அதிசயப்படுவது  விமானநிலையங்களும், மருத்துவ மனைகளும்தான்.  ரெண்டு இடங்களிலும் ஒரு எதிர்பார்ப்போடுதான் இருப்போம். புது அனுபவங்கள் கிடைக்கும். மருத்துவ மனைகளுக்கும் நோயாளியாப் போககூடாது. பார்வையாளராப் போக வேணும் கேட்டோ!

எங்க நேரம் வந்ததும் விமானத்துக்குள்ளே   பத்து மணி நேரம் அடைஞ்சு கிடந்து ஊர் வந்து சேர்ந்தோம்.  நம்ம சென்னை, சிங்கைப்பயணம் இனிதே முடிஞ்சது. அடுத்து  எல்லாம் வழக்கம்போலே!


கூடவந்த அனைத்து நண்பர்களுக்கும் வாசகப்பெருமக்களுக்கும் மனம் கனிந்த நன்றிகள்.



பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும்.

ஆதலினால் பயணம் செய்வீர்!




Wednesday, May 08, 2013

சிங்கைப்பெருமக்கள்ஸ்:-)

இந்தமுறை சிங்கையில் அறை எடுக்கப்போவதில்லை. இன்னிக்கு மாலையே நியூஸி ஃப்ளைட் பிடிக்கணும்.  எப்பவும் ஒரு 'டே ரூம் 'புக் பண்ணிட்டு காலையில் அங்கேபோய்ச் சேர்ந்தால்  ரூம் ரெடியாகலை. பத்து மணிக்குத்தான் கிடைக்கும். அதுவரை பெட்டிகளை  இங்கே வச்சுட்டு நீங்க ஸ்விம்மிங்பூல் பக்கம் இருக்கும் பாத்ரூம் வசதிகளைப் பயன்படுத்திக்கலாம்னு  சொல்வாங்க. ஒவ்வொரு பயணத்திலும் அவுங்களோடு சண்டைபோட்டு 'அறை' வாங்குவதற்குள் போதும்போதுமுன்னு ஆகிரும்:(

ஏர்ப்போர்ட்லேயே  அம்பாஸிடர் லவுஞ்சில்  போய் குளிச்சுட்டு(ஆளுக்கு 8 டாலர் சார்ஜ்) எம் ஆர் டி எடுத்து நேரா செராங்கூன் ரோடு சீனுவைப் பார்க்கப் போயாச்சு. நேத்து சென்னையிலேயே எல்லாப் பெட்டிகளையும் நியூஸிவரை  செக்த்ரூ பண்ணிட்டு  ஒரே ஒரு  தோள்ப்பை மட்டும் கையில். அதுலேயும்  சிங்கை நண்பர்களுக்குக் கொண்டு போகும்  இனிப்புகளும்  ஒரு செட்  மாற்றுடைகளும்தான். காலை நேரம் என்பதால் ரயிலில் கூட்டம் இல்லை.




சீனுவை முதலில் கண்டுக்கணும்.அப்புறம் கோமளாஸ்னு பக்காவா ப்ளான்.  ஆனால் அவன் வேற மாதிரி திட்டம் போட்டு நமக்கு  விருந்து வச்சுட்டான். கோவிலில் நல்ல கூட்டம். அன்னதானம் நடக்குது.உள்ளே நுழைஞ்சதும்  வாங்க வாங்கன்னு சாப்பிடக் கூப்புடறாங்க. கொஞ்சம் பொறுங்க.சாமி தரிசனம் முடிச்சுக்கிட்டு வந்துடறோமுன்னு கெஞ்சவேண்டியதாப்போச்சு:-)



இப்பெல்லாம் சனிக்கிழமைகளில் கூட்டம் அம்முதாம்.  சனீஸ்வரனின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க எள் விளக்கு போட்டால்  நல்லதுன்னு  கருப்புத்துணியில் எள்ளை முடிஞ்சு தீபமேற்றத்தோதாக  அடுக்கி வச்சுருக்காங்க.   வாங்கி தீபமேற்றி சனியை மகிழ்விக்கலாம். கருப்பு மூட்டையை எடுத்துட்டால் ஜஸ்ட் எண்ணெய் விளக்கு இப்படி 2 இன் 1. கண்ட இடத்தில் கொளுத்தி வச்சு,  இடத்தை மாசுபடுத்தாமல் இருக்க  ஒரு இடத்தில்  பெருமாள் ஓவியத்தின் திரைச்சீலையைத்  தொங்கவிட்டு அடுக்குப்படிகள் அமைச்சுருக்கு நிர்வாகம்.









இன்னும் ரெண்டு தனித்தனிக் கூடாரங்களில்  ஸ்ரீநிவாசனின் மூர்த்திகளை வச்சு விசேஷ பூஜைகள் நடந்துக்கிட்டு இருக்கு.  இந்த முறைதான் சனிக்கிழமை காலை வேளைகளில், இந்த நேரத்துக்குச் சிங்கைச்சீனுவின் கோவிலுக்குப்போக எனக்கு அமைஞ்சுருக்கு. இதுதான் முதல்முறைன்னு நினைக்கிறேன். மத்தபடி சிங்கையில் தங்க நேரும் சனிகளில் அதிகாலை 6 மணிக்குக் கோவிலுக்குப்போயிட்டு வர்ற வழக்கம்தான்.  கொடிமரத்துக்கு  இந்தாண்டை வெளிமண்டபத்துத் தூண்களில் கூட நம்ம தூண் என்று ஒரு இடம் புடிச்சு வச்சுருக்கேன். எப்பவும் அங்கேதான் உக்காருவோம். இந்த முறையும் தூண் நமக்காகக் காத்திருந்தது:-)

கோவிலை வலம் வந்து மூலவரைக் கும்பிட்டு நம்ம தூணருகில்  கொஞ்ச நேரம்  உக்கார்ந்து  நடப்புகளைப் பார்த்துக் க்ளிக்கிட்டு இருந்தேன்.  இங்கே மூலவரைக்கூடக் கிளிக்கலாம். பிரச்சனை இல்லை. இதனால் கோவிலுக்குள்ள புனிதம்,ஐஸ்வர்யம் இதுக்கெல்லாம் குறைபாடொன்னும் இல்லை.  ஒவ்வொரு முறை போகும்போதும்  இன்னும் ஜ்வலிப்பாத்தான் இருக்கு கோவில்.  எப்போதும்போல் படு சுத்தம்.










கோவில் வளாகத்தில் இருக்கும்  ஃபங்க்‌ஷன் ஹாலுக்கு முன்புறமும்  வெயில் தாக்காமல் இருக்க நாகரிகக் கொட்டாய் போட்டுருப்பதால் பிரசாதம்(சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல் சுண்டல்) ஜூஸ், குடி நீர், பாயஸம்போல ஒரு சமாச்சாரம் எல்லாம்  அவுங்க அடுக்கி வைக்க வைக்க  மக்கள்ஸ் எடுத்து சாப்பிடச் சாப்பிடன்னு எல்லாம் அமோகம். ஜோதியில் நாங்களும் கலந்தோம்.  நமக்கு ப்ரேக் ஃபாஸ்ட் ஆச்சு.  லஞ்சுக்கு  இருந்துட்டுக்கூடப் போகலாம்:-)  வெவ்வேற குழுக்களா வந்து  பிரசாத விநியோகம் பண்ணிக்கிட்டே இருப்பாங்களாம். (அடடா....இது தெரியாமப்போச்சே!)

பெருமாள் இதையெல்லாம் கண்டுக்காம 'நின்னமேனி'க்கு  இருக்கார். அவருக்கு இன்னொரு கும்பிடு போட்டு தேங்க்ஸ் சொல்லிட்டுக் கிளம்பினோம். கோவிலுக்குப் பக்கம் இருக்கும்  ஃபேர்ரர் பார்க் ஸ்டேஷன் . வந்து போக நல்ல வசதி.

ரொம்ப நெருங்கிய நண்பர்களில்  மூன்று பேரை (மட்டும்) இந்த முறை சந்திச்சுட்டு திரும்பி ஏர்ப்போர்ட்டுக்கு  மாலை ஆறரைக்குள் ஓடணும். ரெண்டு தோழிகள் புது வீடு வாங்கி இருக்காங்க. முதல்முறையாகப் புது வீட்டுக்குப் போறோம். புது ஏரியா என்பதால்  ரெண்டு மூணு முறை செல்லில் கூப்பிட்டு வழியைத் தெரிஞ்சுக்கிட்டோம்.

முதல் விஸிட் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வீட்டுக்கு.  வீடு அருமையா  பளபளன்னு இருக்கு. ஒரு மணி நேரம் போல இருந்து  விட்டுப்போன கதைகளை அளந்துக்கிட்டு இருந்தோம்.  பகல் சாப்பாட்டுக்கு  நிக்கலைன்னு அவுங்களுக்கு  கொஞ்சம் வருத்தம்தான்.  சாமி வயிறு நிறைய  போட்டு அனுப்பிட்டாருன்னு சொன்னேன்.

அங்கிருந்து  கிளம்புபோது மழை!  சிங்கப்பூரில் நாள் தவறினாலும் மழை வரத் தவறாது. எல்லாம் சட் சட்னு வந்துட்டு ஓடிப்போயிரும். சுருக்கமாச் சொன்னா எங்கூர் நிலநடுக்கம் போல! தினம் குறைஞ்சது மூணு. சின்ன ஆட்டம்தான். நடுக்கம் அளக்கப் புதுக் கருவிகளும் வந்தாச்சு. தனியா வலைப்பக்கம் போட்டுருக்கு அரசு.  காலையில்  இமெயில் செக் பண்ணுவது போல  இதையும் ஒரு முறை பார்த்துக்கும்  பழக்கம் எங்களுக்கு. உண்மையைச் சொன்னால்  (நில)நடுக்கம் இல்லேன்னா நாங்கள் நடுங்கிருவோம். அன்றிலிருந்து இன்று வரை 13 376 ஆகி இருக்குன்னா பாருங்க.

ஜெயந்தி வீட்டில் இருந்து கிளம்பி ஒரு டாக்ஸி எடுத்துக்கலாமுன்னா.....  அரைமணி நேரமா நின்னும் ஒன்னும் அகப்படலை. சமீபகாலமா சிங்கையில் கவனிச்ச ஒன்னு இது.  வாடகைக்கார்களின் எண்ணிக்கை குறைஞ்சு போச்சா இல்லை   செராங்கூன் ரோடு , விமானநிலையம் இப்படி  எப்பவுமே பிஸியா இருக்கும் பக்கங்களில் மட்டும் இவுங்க சுத்தறாங்களா?  ஒருவேளை பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் அருமையா  அமைஞ்சுட்டதால்  டாக்ஸிக்காரர்களுக்கு வருமானம் குறைஞ்சு போய்.... வேற வேலைக்குப் போயிட்டாங்களா?

காருக்குக் காத்திருந்து கண்கள் பூத்தபின் பஸ் ஒன்னு பிடிச்சு  ஒரு எம் ஆர் டி ஸ்டேஷன் போய் அங்கிருந்து சிங்கை எழுத்தாளர் சித்ரா ரமேஷ் வீட்டிற்கு ரயிலில் போனோம். வரும் விவரம் சொன்னதும்  ஸ்டேஷனுக்கு வந்து கூப்பிட்டுப் போனார் ரமேஷ். இவுங்க ரெண்டு பேருமே எழுதுவாங்க. மரத்தடி கால நண்பர்கள். ரமேஷ்  ஏனோ இப்பெல்லாம் எழுதுவதில்லை:(
சித்ரா உள்ளூர் பத்திரிகையில்  சிங்கப்பூர் சரித்திரம் தொடர் எழுதிக்கிட்டு இருக்காங்க இப்போ. சிங்கை எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய அங்கம்  நம்ம சித்ரா.

அஞ்சு நிமிஷ ட்ரைவ்தான் வீட்டுக்கு. நான் இப்போதான் முதல்முறையா வர்றேன். உண்மையைச் சொன்னால் கோபால்தான் நம்ம வீட்டுலே அதிகம் பயணிக்கிறவர்.  அவர் பயணக்கதை எழுதக்கூடாதான்னு நான் நினைப்பேன்.  எப்பேர்ப்பட்ட இடமானாலும்   ஒரே ஒரு வரியில்  சொல்லிருவார்:-) கோபாலுக்குச் சிங்கை வழியாகவே அநேகமா நிறைய பயணங்கள் அமைஞ்சுருது. அவர்  ஏற்கனவே சிலமுறைகள்  சித்ரா ரமேஷின் புது வீட்டுக்குப் போயிருக்கார்.  அருமையான  வீடு. சிங்கையில் அடுக்குமாடிகள்தானே எங்கே பார்த்தாலும்!  இவுங்க கட்டிடத்துக்குப் பக்கத்தில்  அரைவட்டத்தில் அழகான  பழைய கட்டிடங்கள் சில அட்டகாசமா இருக்கு! தரைத்தளத்தில் இருந்து பார்த்தால் இந்த அழகு கண்ணில் பட்டுருக்காது!



பால்கனியில் குட்டியா ஒரு தோட்டம்!  அடிச்சுப்பிடிச்சு அந்தக்கூடத்தில் நானும் இருக்கேன்:-)

ஊர்க்கதைகளையெல்லாம் பேசி நிதானமா சாப்பிட்டுக்கிட்டு இருந்தபோதே  'காலம்' கோவி கண்ணன் , நண்பர் வெற்றிக்கதிரவனோடு  வந்துட்டார் எங்களைக் கடத்திப்போக:-)  அவர்களையும்  சாப்பிடச்சொன்னால்..... லஞ்சு முடிச்சாச்சுன்னாங்க. எல்லோருமாச் சேர்ந்து  பதிவர் மாநாடு ஒன்னு நடத்தி முடிச்சதும்  கண்ணனோடு கிளம்பினோம்.

பழையபடி வாடகைக்கார் கிடைப்பதில்  தாமதம்.  பஸ் ஸ்டாப் வரை போகலாமுன்னு  நடந்து நடந்தே பாதி தூரம் போயிருந்தோம். பேச்சு சுவாரஸியத்தில் களைப்பு தெரியலை.  கண்ணன் இன்னும்  மெலிஞ்சு போயிட்டார்.  அதனால் நடையில் வேகம் இருந்துச்சு.  முயலும்  ஆமையுமாப் போனபோது  வாடகைக்கார் கிடைச்சுருச்சு. நாலு நிமிசத்தில் வீடு.

கண்ணனின் அழகிய குடும்பம் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம்.  சிவ செங்கதிர் வளர்ந்துருந்தார். ஆறுமாசக் குழந்தையா இருந்தப்போ பார்த்தது. இப்போ 25 மாசம்! பேசும் கண்கள்!  அப்படியே கிருஷ்!  (சுவரில் யசோதாவும் கிருஷ்ஷுமாய் ஒரு அழகான ஓவியம்)  மகளும் வளர்ந்துவிட்டாள். தம்பிப்பயலைக் கண் போல் பார்த்துக்கும் குணம்!

ஏன்தான் 'காலம்' இப்படிப் பறக்குதோன்னு  நினைச்சேன்.  பேச்சு இன்னும் முடியலை. தொடரும் போட்டுட்டுக் கிளம்ப வேண்டியதாப் போச்சு.  வாரவிடுமுறை என்பதால்  நண்பர்கள் அனைவரையும் பார்க்க முடிஞ்ச திருப்தி எங்களுக்கு.

விமானநிலையம் போக மறுபடி வாடகைக்கார் கிடைப்பதில் சுணக்கம்.  நாங்களே போயிருவோமுன்னா கேட்டால்தானே? கண்ணனும் வெற்றிக்கதிரவனும் கூடவே  வண்டியில் ஏறுனதும், செங்கதிருக்கு அழுகை.  அப்பா கூடப்போனால் நல்லா இருக்குமே! அம்மா வேடிக்கை காமிச்சு ஏமாற்றி உள்ளே கொண்டு போயிட்டாங்க:(

விமானநிலையத்தில் நாங்க எல்லோருமா ஒரு பத்து நிமிசம் 'பேச்சு எங்கள் மூச்சு 'என்ற நம் தேசிய குணத்தைக் கடைப்பிடிச்சுட்டு  அங்கே  தரை முழுசும் வரைஞ்சு வச்சுருக்கும்  3D படத்தையும்  ரசிச்சுட்டு நண்பர்களுக்கு  டாடா  பிர்லா சொல்லிட்டு  உள்ளே போனோம்.

தொடரும்.............:-)





Thursday, May 02, 2013

மறந்தே போச்சு...ரொம்பநாளாச்சு......

கடைசியா எப்போப் பார்த்தேன்னே நினைவில்லை. ஆனால் கண்டதும் கண்கள் விரிஞ்சதென்னவோ உண்மை! நீலமும் வெள்ளையுமா அழகோ அழகு!  இறைவன்/இயற்கை படைப்பில்தான் எத்தனையெத்தனை அற்புதங்கள்!!  சங்கு புஷ்பம்! இதுக்கு மட்டும் பூன்னு சொல்லாம ஏன் புஷ்பம் என்கிறோம்?

பூவை மட்டும் ரசிச்சால் போதுமா? எங்களையும் கொஞ்சம் பாரேன்னு அவுங்க மொழியில் கீக்கீ..... கீக்கீன்னு கூப்பிட்டன காதல் பறவைகள்.  ஹைய்யோ!!!! இத்தனையா?  வாங்குனது  நாலே நாலுன்னு நினைக்கிறேன். குடும்பம் பல்கிப்பெருகி இருக்கு!  ஒரு விநாடி ஒரு இடத்துலே நின்னு போஸ் கொடுக்குதுங்களா? ஊஹூம்......

வீடுகளில் இப்போ வெற்றிலை வளர்ப்பு வேற!  ஹப்பாடா..... நமக்கும் சொல்ல ஒரு சங்கதி கிடைச்சுருச்சு. நானும் வெற்றிலை (கொடிக்கால்) வச்சுருக்கேன்னு  சொல்லி மகிழ்ந்தேன், எட்டு இலைதான்  என்பதை கவனமா மறந்துட்டு :-)



போயிட்டு வாறோமுன்னு சொல்ல அப்போ மச்சினர் வீட்டுக்குப் போயிருந்தோம்.  வீட்டு வாசலில் நாம்  மணி ப்ளாண்டுன்னு சொல்வோம் பாருங்க அந்தக்கொடி  அழகா ஒரு மரத்தைப் பிடிச்சுக்கிட்டு மேலே போகுது!  இவ்ளோ நல்ல பெரிய இலைகளை ப்ரிஸ்பேனில்தான் பார்த்திருக்கேன்.  இந்தப் பக்கங்களில்   இதுக்குப்பேரு டெவில்'ஸ் ஐவி.  பணத்துக்கும் பேய் பூதத்துக்கும் ஒரு சம்பந்தம் வச்சுட்டாங்க பாருங்க!!!

செடிகளையும் பறவைகளையும் பார்க்கும்போது திடீர்னு நம்ம 'வீடு திரும்பல் மோகன் குமார் 'வீட்டுத் தோட்டம் நினைவுக்கு வந்துச்சு.

இனி நெருங்கிய தோழிகளையும் ஒரு முறை சந்திச்சுட்டுக் கிளம்பணும். வெளியே போய் சாப்பிடலாமுன்னு கூப்பிட்டேன்.  மனசில் இருந்தது அடையார்  மண்வீடு. இன்னொரு தோழியையும்  கூப்பிட்டால் அவுங்க அருணாஸ்லே சாப்பிடலாமுன்னு தீர்மானமாச் சொல்லிட்டாங்க. புது வீடு வாங்கி இருக்காங்க அவுங்க. ஆனால் வீடு இன்னும் ரெடியாகலை. அடுத்தமுறை நான் வந்தால் கண்டுபிடிக்க  சௌகர்யமா இருக்கணுமேன்னு  இப்பவே வீட்டைக் காமிக்கப்போறேன்னு  மிரட்டுனதால்  ஓக்கேன்னுட்டேன்:-)

கிளம்புமுன் 'பெரிய ஆள்'கிட்டேயும் விடை பெறணுமே எனக்கு. அனந்தபத்மநாபன் சந்நிதியில்  சந்திக்கலாமுன்னு  சொல்லிட்டுக் கிளம்பினேன். போகும் வழியிலேயே நம்ம நாச்சியார் வீட்டுக்குப்போய் அவுகளையும் கூட்டு சேர்த்துக்கிட்டே போனோம்.  அருணா'ஸ்லே சாப்பாடுன்னதும்  சிங்கம் பதுங்கிட்டார்:-)

கோவிலுக்குள்ளில் நுழைஞ்சால் நிம்மதியாப் படுத்தபடி  'வா' ன்னான்.  'இப்படிக்கிடந்தால் நல்லதுல்லை. பெட்ஸோர்தான் வரப்போகுது'ன்னு மிரட்டியபடி பெரிய திருவடி, புதுசா வந்துருக்கும் அன்னபூரணி, சக்ரத்தாழ்வார், தங்கத்தேர், திருப்பதி வெங்கடாசலபதி ஃபேமிலி, தஞ்சாவூர்  பெயிண்டிங் கிருஷ்ணன், ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மன்  எல்லோருக்கும்  கும்பிடு போட்டு,  நாடுவிடும் சமாச்சாரம் சொல்லிக்கிட்டே   உற்சவர்கள் அறைக்குப்போனால்  தாயார்களுடன்  பிரமாதமான அலங்காரத்தில்  அறைக்கு வெளியே வந்து காத்துக்கிட்டு இருக்கார்  நம்ம பெரும் ஆள்!

என்னடா ஆச்சு? இன்னிக்கு திருவோணம்  நட்சத்திரம் கூட  இல்லையே.... ன்னால் எல்லாம் உனக்காகத்தான்னு சொல்லிச் சிரிக்கிறான் கள்ளன்! இரு மனசில் புடிச்சு வச்சுக்கிறேன். அடுத்த ட்ரிப்வரை தாங்கணுமேன்னு  க்ளிக்கினேன்.   இந்தப்பக்கம்  நேயுடு  வெற்றிலைமாலையோடு  நிக்கறார்.   பெரிய கோவில் இல்லைன்னாலும் எல்லாம் அம்சமா அமைஞ்சுருக்கு இங்கே!  சென்னையில் எனக்கு ரொம்பப்பிடிச்ச கோவில்  லிஸ்டில்  இதுக்குத்தான் முதலிடம். கோவிலில்  சிலபல இம்ப்ரூவ்மெண்ட் வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு.  நல்ல மேனேஜ்மெண்ட் அமைஞ்சது  பப்பனின் பாக்கியம்!

என்ன  ரொம்பநாளாக் காணோமே? ன்னு விசாரிச்சார்கள் கோவில் ஃப்ரெண்ட்ஸ்.  சென்னை வாழ்க்கையில்  அநேகமா தினம்தினம் பார்த்த முகம், சட்னு நினைவுக்கு வந்துஇருக்கும்:-)

அதுக்குள்ளே சந்திக்கறேன்னு சொன்ன எழுத்தாளர் தோழி அலைகள் அருணா வந்துசேர்ந்தாங்க. எல்லோரையும் அறிமுகப்படுத்திட்டு மீண்டுமொருமுறை வலம் வந்து  'கிடப்பவனிடம் 'சொல்லிவிட்டுக் கிளம்பி  அருணாவின் புது வீட்டுக்குப் போனோம்.  எப்படியும் ஒரு மூணுமாசமாவது ஆகும் போல இருக்கு வேலைகள் முடிய.  நான் திடீர்னு போனாலும்   எனக்கு புடவை பரிசளிக்க நல்ல சௌகரியம், நல்லி சில்க்ஸ் ரொம்பப் பக்கத்தில்  இருக்கு.

எல்லோருமாக் கிளம்பி  அருணாவின் (பழைய) வீட்டுக்குப் போனோம்.  சூப்பர் சாப்பாடு. வாழைத்தண்டு பச்சடி....  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்  நல்ல காரம்!

இன்னும் கடைசி நேர வேலைகள் ரெண்டு இருக்கு.  அப்புறமுன்னு தள்ளி வைக்கக் கூடாதது.  அடையார் நேரு நகர் தெருக்கள் எல்லாம் சரியா இருக்கான்னு  நாலைஞ்சு ரவுண்டு போய்ப் பார்த்தோம். ஒரு விலாசம் கண்டு பிடிக்கறதுக்குள்ளே தாவு தீர்ந்துடுது.  இத்தனைக்கும்  நாலைஞ்சு தடவை போய்வந்த இடம்தான்.  லேண்ட்மார்க்கா இருந்த கடையை  இப்போக் காணோம்!  எல்லாம் நம்ம  ஹோப் ஃபவுண்டேஷன் ஆஃபீஸைத் தேடித்தான்  அலைஞ்சோம்.   வரப்போகும் கிறிஸ்மஸ் விழாவுக்குக் குழந்தைகள் செலவுக்கு ஒரு தொகை கொடுக்கணும்.   நமக்குப் பரிசாக அருமையான படம் ஒன்னு  எடுத்து வச்சுருந்தாங்க.  கொஞ்சம் பெரிய சைஸ்னு  கண்ஜாடை காமிக்கிறார் கோபால்:-)  அன்புக்கு நன்றின்னு படத்தை ஒருபடம் எடுத்துக்கிட்டேன்.

Mrs. Malarvili Prabath Exec. Officer-Women & Children Programs. அவர்களுடன்  சந்திப்பு.  ஹோப் பள்ளிக்கூடம் ரொம்ப நல்லா நடக்குது!



அடுத்த ஸ்டாப் இன்னொரு பதிவர் வீடு. பத்து நிமிசம்  NineWest நானானியோடு  பேச்சு.  பாவம், நாச்சியார்!!  இழுத்த இழுப்புக்கு  வாயைத் தொறக்காம வந்தாங்க  கூடவே!   முகத்தில் கொஞ்சம்  களைப்பு தெரிஞ்சது.  அவுங்களைக் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கவிடேன்னு  கோபால் (ரகசியமா) என்னிடம் சொன்னார்.:-)  கூடவே இருந்து கொடுமைகளை அனுபவிக்கறவராச்சே!

நாச்சியாரை வீட்டில் விட்டுட்டு  விஷ்ராந்தி அலுவலகத்துக்குப் போனோம். நம்ம அதிர்ஷ்டம் பாருங்க. மாடியில் இருக்கும் ஃப்ளாட், கதவு பூட்டி கிடக்கு. பக்கத்து ஃப்ளாட்டுலே ஒரு மரணம். அதனால்  சீக்கிரம் பூட்டிட்டாங்கன்னு துக்கத்துக்கு வந்திருந்த ஒருத்தர் சேதி சொன்னார்.  பேசாம ஒரு செக் எழுதி அவுங்க  மெயில் பாக்ஸ்லே போட்டுடலாமேன்னு பார்த்தால் கைவசம் என்வலப் ஒன்னும் இல்லை.  ஹேண்ட்பேகில் இருந்த எதோ கடை ரசீதின் பின்புறம் நம்ம விலாசமும் அமௌண்டும் குறிப்பிட்டு செக்கையும் அதுலேயே வச்சு மடிச்சு  கீழ்தளத்தில் இருக்கும் மெயில்பாக்ஸ்களில் இவுங்க பெயருள்ளதைத் தேடிப்போட்டோம்.  க்ராஸ்டு செக் என்பதால்  பரவாயில்லைன்னு  நினைப்புதான்.

நேரா  தி.நகர் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்.கல்யாணச் ச் சீர்வரிசைக்கு வேண்டியவைகளையெல்லாம் கூட செஞ்சு கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. குட்டிக்குட்டி ஜாங்கிரி வேணும் நமக்கு.   கிடைக்கலை.  கொஞ்சம் இனிப்புகளும் காரவகைகளும் வாங்கிக்கிட்டு நேரா திநகர் சரவணபவன். அங்கே  மினி வகை கிடைச்சது. இன்னும் கொஞ்சம் உப்புச் சமாச்சாரங்கள்.  இன்னும் வேற வகை இனிப்புகள் எல்லாம் வாங்கினோம்.  பால் சேர்த்த இனிப்புகள் , வட இந்தியவகைகள் ஒன்னும் வாங்கிக்கலை.  மேட் கௌ டிஸீஸ்  பயத்தால் நியூஸியில் இவைகளை அனுமதிப்பதில்லை:(

அப்படியே கடைக்குள் நுழைஞ்சு கடைசி முறையா ஒரு காஃபி! இனிப்பு வாங்க ஆரம்பிச்சதுமே இதுதான் பயணத்தின் கடைசி ஷாப்பிங், இனி கிளம்பிருவோம் என்பது உறுதியாகிரும்.  என் மனசில்  லேசா ஒரு சஞ்சலமும் ஆரம்பிக்கும்.

பயணங்களில் காணாமப்போகும் சமாச்சாரங்களில் ஒன்னு சாவிகள். குட்டியூண்டு சாவிகள் என்பதால் எங்கே வச்சோமுன்னு  அல்லாடணும். இதுலே ஆயிரத்தெட்டு  ஸிப் வச்ச அறைகள் இந்தப் பொட்டிகளுக்கு.  இப்பெல்லாம் யாராவது  எதையாவது நம்ம பொட்டிகளில் திணிச்சு அனுப்பிட்டால்..... என்ற பயம் வேற இருக்கே.  ஜஸ்ட் ப்ளெயினா ஒரே  ஓப்பனிங்  இருக்கும் பெட்டிகளா  விக்கக்கூடாதா?   அக்கம்பக்கத்துக் கடையில்   ஒரு அஞ்சாறு நம்பர் லாக்குகள்  வாங்கிக்கிட்டோம். ப்ளாட்பாரப் புத்தகக் கடை, ஒன்னும் வாங்கிக்கலையான்னது.  அங்கே ரெண்டு புத்தகங்கள்.  வெயிட் வெயிட் னு அலறின கோபாலை, வெயிட் வெயிட் இது  கையிலே வச்சுக்கும் ரீடிங் மெடீரியல்ஸ்ன்னு சொல்லி சாந்தப்படுத்தினேன்:-)

ஏழுமணிக்கு அறைக்கு  வந்ததும் பெரிய வண்டி  மாத்தி எடுத்துக்கிட்டு  எட்டரைக்குள்ளே வந்துருங்கன்னு சீனிவாசனை அனுப்பிட்டு  ஃபைனல் பேக்கிங் முடிச்சுக் கீழே போய் அக்கவுண்ட் செட்டில் செஞ்சு முடிக்கும்போது சீனிவாசன் வந்துட்டார்.

ஏர்ப்போர்ட் போய்க்கிட்டு இருக்கோம்.  மனசுக்குள்ளே சின்னதா  ஒரு ஏக்கம். இதுலே பாருங்க... நியூஸியில் இருந்து இந்தியா வரும்போது மனசு பூராவும் மகிழ்ச்சியா இருக்கும்.  இந்தியாவுக்குப் போகாம வேற இடங்களுக்குப் போகும்போதும் மனசுலே  ஏக்கம் கலக்கம் இப்படி ஒன்னும் இருக்காது. ஹாலிடே போறோம் என்ற உணர்வு மட்டும்தான்.  இதே... இந்தியாவிலிருந்து கிளம்பும்போது வீட்டுக்குப் போறோம் என்ற மகிழ்ச்சி இருந்தாலும் கூடவே  ஒரு ஏக்கம், ' இனி எப்போ?'ன்னு வந்துருது.

 இந்தியாவிலேயே  வந்து இருந்துடலாமுன்னா.... இப்போ அங்கிருக்கும் சிஸ்டத்துக்கு  நான் லாயக்கில்லைன்னு  ஆகிருச்சு.  அதிகபட்சம் ஒரு மாசம் தாக்குப்பிடிக்கலாம். அம்புட்டுதான்.  நடக்கும் அட்டூழியங்களைப் பார்த்து 'எப்படா ஊருக்குப் போய்ச்சேருவோமு'ன்னு தோணிப்போகும்.  கிளம்பும்போது ....  மறுபடி....   என்னவோ  இது  ஒரு மாதிரி  'லவ் அண்ட் ஹேட்' உறவு!

முக்கால் மணியில் ஏர்ப்போர்ட் வந்து சேர்ந்து ட்ராலியில் பெட்டிகளை அடுக்கிக்கொடுத்த  சீனிவாசனுக்கு நன்றி சொல்லிட்டு ட்ராவல்ஸ்க்கான பில்லை செட்டில் செஞ்சுட்டு உள்ளே போனோம்.

செக்கின் செய்யும் இடத்துலேயே  ஏக்கம் காலி:-)

லவுஞ்சில் போய் உக்கார்ந்ததும்  மறுநாள் செய்யவேண்டியவைகளை லிஸ்ட்போட ஆரம்பிச்சார் கோபால்.

தொடரும்........:-)