Monday, July 11, 2022

வெயிலை விடப்டாது..........

புதன்கிழமை யோகா வகுப்பு, சனிக்கிழமை கோவில் விஸிட், சிலநாட்களில்  நம்ம சநாதன் தர்ம ஹாலில் ராமாயண வாசிப்புன்னு  ஒரு ஒழுங்கில்தான்  வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கு.   மற்ற நாட்களில் எது வருதோ அதுன்னு ஒரு எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல்தான் இருக்கோம்.  இந்தக் கோவிட் சனியன் நம்மை, நாட்டைவிட்டு வெளியில் எங்கேயும் போகவிடாமல் முடக்கி வச்சுருக்கே..... 



கவனிச்சுப் பார்த்தால் நம்ம ரஜ்ஜுதான்  ரொம்பவே வாழ்க்கையை ரசிச்சு வாழ்ந்துக்கிட்டு இருக்கான்.  ஹாஸ்டல்னு ஒன்னு இருந்ததை மறந்தே போயிட்டான்.  ஆண்டு அனுபவிக்கிறதுன்னு சொல்வாங்களே அதைத்தான் வீடு முழுசும்  செஞ்சுக்கிட்டு இருக்கான்.  எல்லா அறைகளிலும் சிரமபரிகாரம் செஞ்சுக்குவானாம். 

நமக்குத்தான் இப்படியேதவிர இயற்கை அதுபாட்டுக்கு அதன் வேலையைச் செஞ்சுக்கிட்டு இருக்கு.  நியூஸியின் கோடைகாலம் ஃபெப்ரவரியோடு  முடிஞ்சுருது.  கொஞ்சம் நல்ல வெயில் இருக்கும் நேரங்களில்  பீச் வரை போய் வர்றது,  கால்வலி குறைஞ்சுருக்கும் நாட்களில் நம்ம பேட்டையில்  ஒரு அஞ்சாறு தெருக்கள் வழியா நடந்துட்டு வர்றது,  செடிகள் பராமரிப்பு,  சின்னச்சின்ன அறுவடைகளில் ஒரு சின்ன மகிழ்ச்சின்னு  இருக்கோம்.

சொந்த சாகுபடி பீட்ரூட்டில் ஹல்வா  செஞ்சாச்.  எது சமைச்சாலும் அதுதான் அன்றைக்கான ஸ்வாமி நைவேத்யம் என்பதால் நம்ம  பெருமாள் எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு இருக்கப் பழகிட்டார். 

சமையலில் பொழுதன்னிக்கும்   எக்ஸ்பெரிமென்ட்  வேற .  அதான் சுரைக்காய் காய்க்குதே.... அதை மோர்க்குழம்பில் போட்டால்  என்ன ஆகும் ?  ஒன்னும் ஆகாது... நல்லாவே இருக்கும் ! இருக்கு :-)
கோடையில் உள்ளூர்க் காய்கறிகள் கொஞ்சம் மலிவாகக்கிடைக்கும். இதில்  ஃப்ரீஸ் பண்ணக் கூடியவைகளை வாங்கி அததற்கான வழிமுறைகளைப் பின்பற்றி ஃப்ரீஸ் செய்து வச்சுக்கிட்டால்  ஒரு ஆறு மாசம் தள்ளலாம்.  பச்சைப்பட்டாணி, பீன்ஸ் இவைகள்தான் தாங்கவும் தாங்கும்.   ஆனால் எதுக்காக இந்த ரெண்டு வகைகளுக்காக மெனெக்கெடணும்? அதான் பதப்படுத்திய வகைகள் சூப்பர் மார்கெட்டிலேயே கிடைக்குதே !  
ஒன்னு வேணுமுன்னால் செய்யலாம். இந்தத் தக்காளி இருக்கு பாருங்க..... இது குளிர்காலத்தில் உச்சாணிக்கொம்பில் போய் உக்கார்ந்துக்கும்.  விலை குறைஞ்சபட்சம் கிலோ15 $.  அதனால் கோடையில்  நம்ம வீட்டாண்டை இருக்கும் காய்கறிக்கடையில்  ஒரு பக்கெட்  6$னு  கிடைக்கும்போது வாங்கிக்கணும்.  நம்ம வீட்டில் வேற தக்காளிச் செடிகள் காய்க்குது. கழுவி நறுக்கிட்டுக் கொஞ்சம் எண்ணெயில்  வதக்கி எடுத்து, அதை ஐஸ்க்யூப் ட்ரேயில் நிரப்பி ஃப்ரீஸ் செஞ்சு, ஐஸ்க்யூப்களா  எடுத்து ஃப்ரீஸர் பையில் போட்டு  ஃப்ரீஸரில் போட்டு வச்சால்  குழம்பு , ரஸம், கறிகளுக்குத் தேவைப்படுப்போது அதிலிருந்து ஒரு நாலைஞ்சை எடுத்துக்கலாம்.    இங்கே வந்த புதுசுலே தக்காளியை அப்படியே  பச்சையா ஃப்ரீஸ் செஞ்சதுலே,  தேவைப்படும்போது  எடுத்து வெளியில் வச்சால் டீஃப்ராஸ்ட் ஆக நேரமும் எடுக்கும்,  தண்ணீராகவும் இருக்கும் . ரஸத்துக்குத்தான் லாயக்குன்னு அப்புறம் தெரிஞ்சது.  அதனால்தான் வதக்கல் ஐடியா. 
இதுலே நான் கொஞ்சம் அடுத்தக்கட்டத்துக்குப் போய்ப் பார்த்தேன். வெற்றியோ வெற்றி, வேலை நேரமும் மிச்சம். தக்காளியுடன் வெங்காயத்தையும்  நறுக்கிச் சேர்த்து  வதக்கினேன்.  நினைக்கும்போது  சட்னு குழம்பு, க்ரேவி, கறிகள் உண்டாக்க முடியுது ! அப்ப  'நம்மவர்' உக்கார்ந்து  கண்ணீர் பெருக வெங்காயம் நறுக்க வேண்டாம்.  நிறைய வெட்டும்போது உதவிக்குத்தான் ஃபுட்ப்ராஸஸர் இருக்கே! 

நம்ம யோகா குழுவின் கோ ஆர்டினேட்டராக 'ஸ்போர்ட்ஸ் கேண்டர்பரி'யால் நியமிக்கப்பட்டவர், வேறு வேலைக்குப் போறார்.  போகுமுன் கடைசியாக ஒருநாள் நம்ம வகுப்புக்கு வர்ற நாளில்,  மூணு வருஷமா எங்களுக்கு உதவி செய்த நன்றியை மறக்காமல் ஒரு ஃபுட் யோகா நடத்திட்டோம். :-) 


ரொம்ப நல்ல பொண்ணு.  இனி புதுசாக வரும் நபர் எப்படி இருப்பாரோன்னு ஒரு கவலை இப்போதைக்கு !


கோடை முடியுமுன்   ஃபிஜி நண்பர் அவிநாஷ் வந்து பெயின்ட் வேலைகளை முடிச்சுக்கொடுத்தார். ஒரு போஸ்ட் நடணுமுன்னு சொல்லி இருந்தேனே.... அதுக்காக க்விக் காங்ரீட் வாங்கி வச்சுருந்தோம். குழி தோண்டி அதுக்குள் ப்ளாஸ்டிக் பக்கெட்டுகளை வச்சு அதுக்குள் இரும்புத்தூண்களை இறக்கிட்டு, அதில் இந்த காங்க்ரீட் நிரப்பித் தண்ணீர் சேர்த்தால் ஆச்சு.  காமணி நேரம் போதுமாம்.   
இந்த பக்கெட் ஐடியாவை நானே உக்கார்ந்து யோசிச்சேன் !  ஒருவேளை இந்த போஸ்ட் வேணாமுன்னு  எப்பவாவது நினைச்சால்  பக்கெட்டோட  எடுத்துப் போட்டுடலாம். கீழே இருக்கும் மண்ணைப் பாழ்படுத்த வேணாம்.  குழி தோண்டி எடுத்த மண்ணை, ரெண்டு தொட்டிகளில் நிரப்பி, ஏற்கெனவே  சில செடிகளில் இருந்து விழுந்த விதைகளால் தானாய் முளைச்சுருந்த பூச்செடிகளின் கன்றுகளை எடுத்து நட்டு வச்சேன். 
விவசாயி வீட்டில் எதையும் சட்னு குப்பைக்கு அனுப்ப முடியாது :-) ஒரு பக்கம் அடுத்த  நடவுக்கான  விதைகள் சேகரிப்பும் நடந்துக்கிட்டே இருக்கு.  இதில் ரொம்ப ஈடுபாடோடு உதவி செய்யும் நம்மவரைப் பாராட்டத்தான் வேணும் !  

கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக்கிட்டு இருக்கும் கோடையின் மிச்சம் அடுத்து வரும் மார்ச் மாசத்தில்  சிலசமயம் கிடைக்கும். அதையும் விட்டால் குளிர்வந்து அமுக்கிருமே ! ஆனால் மார்ச், ஏப்ரல், மே மூணும் இங்கே   இலையுதிர்காலமாம். 
இந்த வருஷம் மஹாசிவராத்ரி மார்ச் முதல் தேதிக்கு வந்தது. நம்ம் வீட்டில் பொதுவா இதைக் கொண்டாடும் வழக்கமில்லை என்றாலும். உள்ளூர் ஃபிஜி இந்தியன் கடையில் வில்வ இலை கிடைக்க ஆரம்பிச்சதில் இருந்து, நம் வீட்டில் இருக்கும் சிவனுக்கும் சின்னதா ஒரு பூஜை நடத்திக்குவேன்.   சொந்தமாய் ஒரு ஜ்யோதிர்லிங்கம் வச்சுருக்கேனே ! நம்ம பக்தி மிய்யாவ் சிவபக்தன் என்பது எனக்கும் அதிசயமே! 

நம்ம சநாதன் தர்ம சபாவில் காலை 6 முதல் மாலை 6 வரை சிவபூஜை செஞ்சுக்க ஏற்பாடு செஞ்சுருக்காங்க. வேலைநாள் என்பதால் அவரவருக்கு நேரம் கிடைக்கும்போது வந்து கும்பிட்டுப் போகலாம்.  இதைப்போலவேதான்  ஆஞ்சி பொறந்தநாளுக்கும் காலை முதல் மாலை வரை பூஜிக்க  ஒரு ஏற்பாடு உண்டு. வீட்டுப்பூஜை முடிச்சுக்கிட்டு அங்கேயும் போய் வந்தோம். நம்ம பண்ட்டிட் கூட அடுக்களையில் ப்ரஸாதத் தயாரிப்பில் இருந்தார்,

அந்த வீக் எண்டில் நம்ம யோகா குழுவினருடன், உள்ளூரில் இருக்கும் விக்டோரியா பார்க் வரை போய் வந்தோம்.  நியூஸி நாட்டைத் தன்வசமாக ப்ரிட்டிஷார் எடுத்துக்கொண்ட சமயம் இங்கிலாந்திலே மஹாராணி  விக்டோரியாவின் ஆட்சி காலம்தான்.  அதனால்  இங்கே அப்போ பெயர்வைக்கும் போது.... எதுக்கெடுத்தாலும் விக்டோரியாதான். அப்பதான் இந்தக் காஷ்மியர் (Cashmere )  பகுதிகளில் அமைத்த தோட்டத்துக்கும் அதே பெயர்.  போர்ட் ஹில்ஸ் என்ற இந்த   குன்றுகளுக்கு   அந்தாண்டை  நம்மூர் துறைமுகம்.  இங்கிருந்து பார்த்தால்  ஊரே தெரியும்.  ஏற்றவும் உயரமான சிகரத்தில் டிவி டவர் இப்போ வச்சுருக்காங்க.  சின்னதும் பெருசுமா வாக்கிங் ட்ராக்ஸ் போட்டு வச்சுருக்கு நம்ம ஸிட்டிக் கவுன்ஸில் !
முதலில் 'அங்கே சாப்பாடு'ன்னு ஆரம்பிச்சதை சட்னு நிப்பாட்டினேன். 'உள்ளூர்தானே ? ஒரு லஞ்சுக்கப்புறம் போனால்  நல்லதா ஒரு வாக் முடிச்சுட்டு வரலாம்.  சாப்பாட்டு மூட்டைகள் வேணாம்'னதும்  எல்லோரும் சரின்னாங்க.  சின்ன சிறுதீனிகள்  கொஞ்சம் அவரவர் கொண்டுவந்தால் போதுமே !   










இதுவும் ஒரு ஹிஸ்ட்டாரிக்கல் ப்ளேஸ் தான். ரெண்டு மணி நேரம் பொடிநடையில் நடந்தோம். ஒரு அஞ்சு கிமீ இருக்கலாம். இல்லைன்னு சாதிக்கிறார் 'நம்மவர்'.  கால் ஓய்ஞ்சுபோன ஒரு சமயம், 'இங்கேயே இரு. நான் போய்  வண்டியைக் கொண்டு வர்றேன்'னு போனவர் அடுத்த ரெண்டாவது நிமிட் வண்டியோடு வர்றார்.  நான் நின்ன இடத்திலிருந்து, நாலு அடியில் வலப்புறம் திரும்புனதும் கார்பார்க் இருந்துருக்கு :-)     

8 comments:

said...

//நம்ம பக்தி மிய்யாவ் சிவபக்தன் என்பது எனக்கும் அதிசயமே! // தாய் பெருமாள் பக்தை
பூனையார் சிவ பக்தை, வாவ் அருமை.

said...

கோடை சேகரிப்பு,வீட்டுதோட்டம், யோகா, சிவராத்திரி பூசை, ரஜ்ஜூவின் பக்தி, பார்க் நடை பயிற்சி என அனைத்தும் ஒரே பதிவில் கண்டு கொண்டோம்.


said...

பெருமாள் எல்லாவற்றையும் சகிச்சுக்கப் பழகிட்டார் என்பது புன்னகைக்க வைத்தது.  தக்காளி எல்லாம் கூட ஃப்ரீஸ் செய்வதா?  ஆறு மாதத்துக்கு தாங்குமா?

said...

ஹ்பபா ரஜ்ஜுவைப் பார்த்ததும் ஒரு சந்தோஷம். ரஜ்ஜுவைப் பத்தி சொன்னது சிரிக்க வைத்தது. அதுவும் ரஜ்ஜுவும் நந்தி பின்னாடி!! உக்காந்துருப்பது அங்கங்க படுத்து ரெஸ்ட் எடுப்பது எல்லாம்..
பெருமாள் எல்லாத்தையும் சகிச்சுக்கப்பழகிட்டார் ...ஹாஹாஹாஹா...

கீதா

said...

வாங்க விஸ்வநாத்,

இந்தக் காலத்துப்புள்ளைங்க எங்கே தாய்தகப்பன் பேச்சைக் கேட்குதுங்க ? ஹூம்....

said...

வாங்க மாதேவி,

வாசிக்க போரடிக்கலைதானே ?

said...

வாங்க ஸ்ரீராம்,

இந்த மாதிரி வதக்கியோ, பேஸ்ட்டாகவோ ஃப்ரீஸ் செய்தால் சுவையும் மாறுவதில்லை. வந்த புதிதில் தக்காளியை அப்படியே ஃப்ரீஸ் செஞ்சு, அது 'ரசத்துக்கு மட்டுமே' சரியாச்சு.

said...

வாங்க கீதா,

1999 லே தைரியமா நியூஸிக்கு வரும்போதே அவர் யோசிச்சுருக்கணும். இப்ப ட்டூ லேட். நானும் வந்திறங்கிய அன்றே சொல்லிட்டேன்.... இங்கே என்ன கிடைக்குதோ அது.... என்னால் என்ன செய்ய முடியுமோ அது ன்னு !

சிலசமயம் எனக்கே பாவமா இருக்கும்.... இப்படி வந்து மாட்டிண்ட்டாரேன்னு....

எல்லோருக்கும் விதின்னு ஒன்னு இருக்கேப்பா.... அது யாராக இருந்தாலுமே !