Friday, September 20, 2019

தயா என்னும் (ரத்த) ஆறு..... (பயணத்தொடர், பகுதி 145 )

ராஜாராணி கோவில் தரிசனம் முடிக்கும்போதே பொழுது சாயத்தொடங்கிருச்சு.  சூரியன் , இதோ போறேன்னு புறப்பட்டுட்டான்.....   கொஞ்ச தூரத்தில் உயரமான கோபுரம் கண்ணில் பட்டது. ஸ்ரீ பாஸ்கரேஸ்வர் ஆலயம்! சிவன் கோவில்தான். சூரியன் வழிபட்ட ஸ்தலம்.  ஒரிஸ்ஸா சுற்றுலாத்துறை கொடுத்த கையேட்டில், உள்ளே ஒன்பதடி உயர சிவலிங்கம்  என்ற குறிப்பு.
போய்ப் பார்க்க ஆசை இருந்தாலும்.... 13 அடி உயர சிவலிங்கத்தைத் தரிசனம் செஞ்சாச்சேன்னு ஒரு மிதப்புதான்..... எங்கேன்னு சொல்லுங்க....  பார்க்கலாம்:-)

 ரிஷிகேஷில் ஒரு கோவிலில் ஆசியாவிலேயே பெருசுன்னு ஒரு 14 அடி சிவலிங்கம் தரிசனமும் ஆச்சு. அது ஆவுடையாரையும்  சேர்த்துதானோன்னு ஒரு நினைப்பு....
(ஒரு பத்து நிமிட் போயிட்டு வந்துருக்கலாம்..... இல்லே? ப்ச்.... ) போற போக்கில் ஒரு க்ளிக்கோடு முடிச்சாச்.
இப்ப நாம் சுத்திக்கிட்டு இருக்கும் இந்தப் பகுதி புபனேஷ்வரின்  பழைய நகரம். எங்கே எந்த திசையைப் பார்த்தாலும் கோவில்களே!  கோவில் நகரமாம்! அதான் ஏழாயிரமுன்னு சொன்னாங்களே!....
தயா என்னும் ஆற்றைக் கடக்கும் பாலத்தின் வழியாப் போறோம். இது மஹாநதியின் கிளைநதி. சின்னதாக்  காவடி மாதிரி ஒன்னு தோளில் தூக்கிக்கிட்டு சில பல காவியுடை பக்தர்கள் பாதயாத்திரையாப் போய்க்கிட்டு இருக்காங்க.  காவடியின் ரெண்டு பக்கங்களிலும் உறிகட்டித் தூக்கின சின்னச் செம்புகள்.

என்ன ஏதுன்னு விசாரிக்கலாமுன்னா.... வண்டி பறந்துருச்சு. (அப்புறம் இன்னொரு இடத்துலே விவரம் கிடைச்சது !) 

போகும் வழியில் தௌலி  (Dhauli)என்ற இடத்தைக் கடக்கும்போது, இங்கே(யும்)ஒரு முக்கியமான சரித்திர நிகழ்வு நடந்துருக்கேன்னு எட்டிப் பார்க்கப்போனோம்.
சம்பவம் நடந்து ரெண்டாயிரத்து இருநூத்தி எழுபத்தியொன்பது (260 BC) வருஷங்கள் ஓடிப்போயிருக்கு!

 தான் செஞ்சது பாவம், படுகொலைன்னு மனசுக்குள் துக்கப்பட்ட பேரரசர் மனம் திருந்தக் காரணமான சம்பவம் இந்த இடத்தில்தான் நடந்ததாம்.....
சாட்சி?  ஒரு கல்வெட்டுதான். பாலி மொழியில் இருப்பதால் நமக்குப் படிக்கத்தெரியாது.....
சிலபடங்களை அருளிய கூகுளாண்டவருக்கு நன்றி. கலிங்கத்தின்  யானைச் சிற்பத்தில்  மூத்தது இதுதானாம்!  கல்வெட்டின்  பின்பக்கம்.

கலிங்கத்துப்போர்!  கலிங்க அரசர் அநந்தபத்மநாபர்  தலைமையிலும்,  மௌரியப் பேரரசர்  அசோகாவின் தலைமையிலும் ரெண்டு நாட்டுப் படைவீரர்களும்  மோதிக்கொண்ட இடம் !
தயா நதியின் தண்ணீரெல்லாம்  ரத்தம் கலந்த  செந்நீராக மாறுச்சுன்னு....    லக்ஷக்கணக்கான  வீரர்கள் மரணம்....
போரில் வெற்றியடைஞ்சாலும்கூட.... நடந்த கொடூரங்களை நினைச்சு, அசோகர் புத்த மதத்துக்கு  மாறினார்.  தான் மாறினதோடு இல்லாம மத்தவங்களையும் மதம் மாற்றினார்.....  (இது குற்றம் இல்லையோ?  ஆமாம்..... புரியாமத்தான் கேக்கறேன்.... நல்லவனா இருக்க,  மதம் மாறினால்தானா?  இப்ப இருக்கும் மதம் ... கெட்டவனாவா இருக்க வைக்குது? ப்ச்.... என்னமோ போங்க.... )



தௌலி போய்ச் சேர்ந்தோம்.  கார்பார்க் போல ஒரு இடம். இடத்தைச் சுத்தியே ஏழெட்டுக் கடைகள்.  கோவிலுக்குப் போறவங்க கூட்டம் அதிகமாத்தான் இருக்கு!  கடைகளில் புத்தர் சிலைகள் சின்னதும் பெருசுமா....
சுற்றுலாப்பயணிகள் ஏராளமா வர்றாங்களாமே!
கொஞ்சம் மேடான பகுதிக்கு ஏறிப்போகணும். பாதை இருக்கு.  அங்கே இன்னும் கொஞ்ச உயரத்தில் ஒரு ஸ்தூபா ! வெள்ளை வெளேர்னு மின்னுது!  ஷாந்தி ஸ்தூபா ! Dhauli hill Peace Pagoda !

சண்டை நடந்த இடத்தில் இனி சண்டையே கூடாது.... சமாதானங்காப் போத்தேதான் மஞ்சிதி.....

1972 ஆம் ஆண்டு, இண்டோ ஜப்பான் கூட்டாக,    ரெண்டு நாட்டு புத்த சங்கங்களும் சேர்ந்து கட்டுனது.
அம்பது படிகள் ஏறிப்போகணும். ஐயோன்னு கால்கள் கெஞ்சினதால்.... இப்பதான் மூணுநாளைக்குமுன் போதும் போதும் என்ற அளவில் ஸ்தூபாக்களை ஸ்ரீலங்காவில்  தரிசனம் செஞ்சுட்டு வந்துருக்கோமே....  நொண்டிச்சாக்குதான்.... வேற வழி?
ஸ்தூபா மாடத்து  புத்தரை இங்கிருந்தே கும்பிட்டுட்டு, கொஞ்சம் க்ளிக்ஸ் ஆச்சு.  ஒரு ரெண்டு மூணு  போதிமரமும் வச்சுருக்காங்க.


உண்மையான  பழங்காலச் சரித்திர நிகழ்வு நடந்த இடம் எதிர்பாராமல் கிடைச்சது மனசுக்கு ரொம்பவே திருப்தி. ஸ்வொஸ்திக்குத் திரும்பிட்டோம்.

'மறுநாளும் வண்டி ஒன்னு வேணும், முழுநாளைக்கு'ன்னு  ட்ராவல் டெஸ்கில் சொல்லிட்டு அறைக்குப் போய்ச் சேர்ந்தோம். இனி கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்.

 டின்னர் ரூம் சர்வீஸ்தான். இவருக்கு சப்பாத்தியும் கறியும், எனக்கு  ஒரு பூரி சாட்.

நாளைக்கு ஒரு சுவாரஸ்யமான இடத்துக்குப் போகலாம் !

தொடரும்............ :-)


14 comments:

said...

தௌலி ஸ்தூபா அழகு...

நான் சென்று வந்தபிறகு எழுதியது...

http://venkatnagaraj.blogspot.com/2017/09/blog-post_11.html?m=1

தொடர்கிறேன்.

said...

அருமை நன்றி.
அந்த 13 அடி சிவலிங்கம் - ரிஷிகேஷ்ல பார்த்தோமே, அதானே ?

said...

நம்மூர் காவடி போல..ரசித்தேன்.

said...

கலிங்கத்து யானைசிற்பம் அழகு.

அடுத்து 'சுவாரசியமான இடம்' வருகிறோம் காண...

said...

// (இது குற்றம் இல்லையோ? ஆமாம்..... புரியாமத்தான் கேக்கறேன்.... நல்லவனா இருக்க, மதம் மாறினால்தானா? இப்ப இருக்கும் மதம் ... கெட்டவனாவா இருக்க வைக்குது? ப்ச்.... என்னமோ போங்க.... )//
உலகத்திற்கு மிக மிக அழுத்தமாக அஹிம்சயை போதித்தது பவுத்தம் மட்டுமே.
(சமணமும் போதித்தது என்றாலும் போதித்த விதம் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவரவில்லை) அதை தான் ஹிந்து மதம் என்று தற்போது அழைக்கப்படும் சனாதன மதங்கள் சுவீகரித்து கொண்டன.சுட்டது போதாதென்று தங்கள் கொள்கையை பவுத்தம் கடன் வாங்கியதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தது வேறு கதை! யாகத்தீயில் பொசுக்கிய விலங்குகளின் இறைச்சியை உண்டு சோமபானம் அருந்திய தர்ம யுகத்தில் அசோகர் தன் சகாக்களை மதம் மாற்றியது அதிசயமா என்ன?

said...

இப்போதான் புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தை போன வாரம் பார்த்துட்டு வர்றேன்.

யானை, கல்வெட்டு - ரொம்ப ஆச்சர்யம். இரண்டும் கூகிளாண்டர்னு நினைக்கிறேன். பார்க்கிறதே பரவசம்தான்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உங்க பதிவை இப்போதான் பார்த்தேன். அருமை! நாங்கள் படிகளில் ஏறி மேலே போகலை.....

said...

வாங்க விஸ்வநாத்,

ஆஹா... அந்தப் பதிமூணு அடி.... நம்ம தஞ்சைப் பெருவுடையார்தான்!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

தோளின் ரெண்டுபக்கமும் தொங்கவிட்டால் காவடிதானே ! :-)

said...

வாங்க மாதேவி,

நம்ம யானை.... எப்பவும் அழகுதானேப்பா :-)

said...

வாங்க ராஜ்ஶ்ரீ,

பல்வேறு கருத்துக்கள் உண்டுதானே!

வருகைக்கு நன்றி !

said...

வாங்க நெல்லைத்தமிழன்.


ஹைய்யோ..... எப்படி ஆண்டவர் அருளிய படங்களை மட்டும் சரியாக் கண்டு பிடிச்சுடறீங்க !!!!

கயா போயிட்டு வந்தீங்களா?

said...

ஆமாம். கயா யாத்திரை சிறப்பாக அமைந்தது. பல்குனியில் 1 அடித் தண்ணீர் வேறு. மஹாபோதி கோவிலும் சென்றேன். வரலாற்றில் வரும் இடங்களுக்குச் செல்லும்போது நாம் அடையும் பரவசம் தனிதான்.

said...

ஓ கலிங்கத்துப்போர்! ...நடந்த இடமா ...