Monday, September 09, 2019

நனைஞ்ச கோழி...... (பயணத்தொடர், பகுதி 140)

பொதுவா சனம்,  வேற இடங்களுக்குக் குடிபோகும் போது எப்பவும் தன் சாமியைக் கூடவே கொண்டு போகும்தான். இல்லாமலாத் தமிழன் போன இடத்துக்கெல்லாம் முருகனும் போயிருக்கான்...  நம்ம சனமுன்னு இல்லாம எல்லா ஊருலகத்துச் சனத்துக்கும் இது பொருந்தும்தானே?

ஜெயின் கோவில்களை, ஒன்னுக்கு நாலாப் பார்த்த திருப்தியில் திரும்பிப் போய்க்கிட்டு இருக்கோம். இன்னொரு முக்கியமான  இடம் கட்டாயம் போகவேணும். அதை நின்னு பார்த்து ரசிக்கக் கொஞ்சம் தாராளமா நேரம் ஒதுக்கணும்.  இப்பவே மணி பனிரெண்டு ஆனபடியால்  சாப்பாட்டு நேரம் நடுவுலே வந்துருது.  நமக்கில்லைன்னாலும்,  ட்ரைவருக்கு சாப்பாட்டு நேரம்  ஒதுக்கணும் இல்லையா....  அதான் நாமும் போய் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டா ஆறுதலா பார்க்க வேண்டியவைகளைப் பார்க்கலாம் என்பது 'நம்மவர்' வாதம்.

சரி.  எங்கே போய் சாப்பிடலாமுன்னு சின்ன யோசனை.  பேசாம நம்ம மால்குடிக்கே போயிடலாம்.  அப்படியே நம்ம அறைக்கும் போயிட்டுப் போனால் ஆச்சு.

இந்த மழைவேற விடாமல் ஒரு சல்யம்....  போகும் வழியிலேயே செயின்ட் பால்'ஸ் கதீட்ரல் இருக்குன்னதும்,  எட்டிப் பார்த்துட்டுப் போயிடலாம். இன்னொருக்கா இந்தப் பக்கம் வரவேணாமேன்னார் 'நம்மவர்'.
கொல்கத்தாவில் ஏற்றவும் பழைய தேவாலயம் இது.  வெள்ளையர்கள், வியாபாரம் பண்ணப்போறோமுன்னு ஈஸ்ட் இண்டியா கம்பெனின்னு ஒன்னு ஆரம்பிச்சு நம்ம பாரத தேசத்துக்கு வந்து  முக்கியமான இடங்களில் கால் குத்துனதுதான் நமக்குத் தெரிஞ்ச விஷயமாச்சே. அதுலே கல்கத்தாவும் ஒன்னு.

எங்கே பார்த்தாலும் ஹிந்துக் கோவில்கள் ( அப்போ ஹிந்து என்றொரு மதமே இல்லை. நமக்கு அப்போ மதம் பிடிக்கலை. சநாதன தர்மம் என்றுதான் இருந்துச்சு. இது வாழ்க்கை முறை. மனிதன் எப்படி வாழணும் என்று சொல்லிக்கொடுக்கும் தர்மம். ) இருந்ததைப் பார்த்துத் திகைச்சுப்போயிருப்பாங்க இல்லே? அதுவும் காளிக்கு மகிஷனைப் பலி கொடுப்பதைப் பார்த்து .......
Pic C google.  Thanks. St. Johns church.

தங்களுக்கு சாமி கும்பிட  ஒரு சர்ச் வேணுமுன்னு சின்னதா (!) செயின்ட் ஜான் சர்ச் ஒன்னு கட்டிக்கிட்டாங்க.  கொஞ்சநாளில் வெள்ளையர்கள் எண்ணிக்கை அதிகமாச்சு. 1810 ஆம் வருசத்துலே  நாலாயிரம் ஆண்களும், முன்னூறு பெண்களுமா இருந்தாங்களாம்.  தெரிஞ்ச இடத்தை விட்டுட்டு வரப் பெண்களால் முடியாது. இப்பக் காலம் மாறிப்போச்சு. சட்னு மூட்டை கட்டிக்கிட்டுக் கிளம்ப  பெண்கள் ரெடி! 

கொஞ்சம் பெருசா ஒன்னு கட்டிக்கலாமேன்னு அந்த  செயின்ட் ஜான் சர்ச்சை இடிச்சுட்டு  அதே இடத்தில் பெருசா ஒரு தேவாலயம் கட்டி இருக்காங்க.  1839 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி, 1847  லே கட்டி முடிச்சுத் திறந்துருக்காங்க. இதுதான் கல்கத்தாவின் பழமையான தேவாலயமாம்.
வளாகத்துக்குள் நுழையும்போதே மழை பின்னி எடுக்குது.  கதீட்ரலுக்குள் போனால்  ரொம்ப சுமாராத்தான் இருக்கு! ஆல்டர் அதுக்கு மேலே..... மனம் கொஞ்சம்கூட லயிக்கலை..... என்னவோ போங்க......

இப்ப இன்னொரு தர்ம சங்கடத்தை நானா ஏற்படுத்திக்கிட்டேன்.  சர்ச்சுகளில் ரெஸ்ட் ரூம் நல்லா இருக்குமேன்னு நினைச்சு அதைத் தேடிக்கிட்டுப் போனால்..... வெளியே வளாகத்தின் ஒரு மூலையில்...  புதர்மாதிரி செடிகள் மண்டி இருப்பதைப் பார்த்துட்டுத் திரும்பி இருக்கலாம். ஆனால் விதி.....  'போ போ'ன்னது.  தேடிப்போய் கழிவறைக்குள் புகுந்தால்.... ப்ச்...   குழாய்க்கு ஒரு ரப்பர் ட்யூபை மாட்டி விட்டுருக்காங்க. குழாயைத் திறந்தவுடன் தண்ணீர் பளார்னு எல்லாதிசையிலும் அடிக்குது. பைப்பை நிறுத்தறதுக்குள்ளே  நான் தொப்பலா நனைஞ்சுட்டேன்.
நல்ல வேளையா மழை நின்னுருக்கு!
நனைஞ்ச கோழிபோலத் திரும்பி வந்ததைப் பார்த்து என்னவோ ஏதோன்னு நம்மவர் பயந்துட்டார். நேரா அறைக்குத் திரும்பிப்போய்  உடை மாற்றும்வரை  ரொம்பவே பேஜாராப் போயிருச்சு.

இருக்கற ஈரத்துணிக் குவியல்களுக்கு இதுவும் கூட்டு.  அட ராமா.... இதெல்லாம் எப்ப காயப்போகுது....
இந்த கலாட்டா எல்லாம் முடிஞ்சு மால்குடிக்குப் போகும்போது மணி ஒன்னரை.... கோபிந்தை சாப்பிட அனுப்பிட்டு நாங்க உள்ளே நுழைஞ்சோம்.  புருஷோத்தம் Pபாய் இல்லை. வீட்டுக்குப் போயிருக்காராம்.

இன்றைய ஸ்பெஷல், 'ஸ்பெஷல் அடை'. அதுவே ஆகட்டும்.  ஒரு அடையும் ஒரு தஹிஃபுச்காவும். (நல்லவேளை..  அடைக்கு அவியல் இல்லை!) கூடவே ஒரு ஃபில்டர் காஃபி. இதுதான் நாம் மால்குடிக்கு வரும் கடைசிநாள். குஸும் கிட்டே டாடா, பை பை ஆச்சு.   ஓனர் கிட்டேயும் சொல்லச் சொல்லிட்டுக் கிளம்பினோம்.
மால்குடி இருக்கும் தெருவில் ஒரு பக்கம் முழுசும் கையேந்திபவன்கள். கூட்டம் அம்முது....
இங்கிருந்து சுமார் அஞ்சு கிமீ போகணும்.  விக்டோரியா மெமோரியல் போறோம்.  மாட்சிமை தாங்கிய மஹாராணி விக்டோரியா காலத்துலேதான் நியூஸிக்கும்  வெள்ளையர் குடிபுகுந்தாங்க என்பதால்  ராணியம்மா எங்களுக்கு ரொம்பவே வேண்டப்பட்டவங்கதான் :-)
இதுவரை கிடைச்ச பல்புகளிலேயே  மிகச் சிறந்த ஒன்னு எனக்குக் கிடைக்கப்போகுதுன்னு தெரியாமல்....... வளாகத்தின்  வாசலாண்டை  போய் இறங்கினோம்.

தொடரும்........... :-)


8 comments:

said...

விக்டோரியா மஹால்.... எத்தனை பிரம்மாண்டம்....

உங்கள் அனுபவத்தை தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

ரெஸ்ட் ரூம் - வேதனை தான்.

said...

அய்யய்யோ....நனைந்தகோழி :( நானும் பயணத்தில் தண்ணீர் குடிக்க மாட்டேன்.
பல்பு ...அறிய பொறுத்துக்கிறோம்.

said...

//இதுவரை கிடைச்ச பல்புகளிலேயே மிகச் சிறந்த ஒன்னு எனக்குக் கிடைக்கப்போகுதுன்னு // இன்னொன்னா ?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

பிரமாண்டமான நினைவகம்தான் ..... ஆனால் பல்பு வாங்கிட்டேனே....

said...

வாங்க மாதேவி,

இந்தியப் பயணத்தில்தான் இந்த ரெஸ்ட்ரூம் சமாச்சாரம் ரொம்பக் கஷ்டம்ப்பா.....

said...

வாங்க விஸ்வநாத்,

இல்லையா பின்னே? சிறந்தது மட்டுமா ? சொந்த பல்பு வேற !!

said...

பழமையான தேவாலயமாம்.....நல்லா இருக்கு ..



ஒவ்வொரு இடத்திலும் ஒரு அனுபவம் ...

said...

வாங்க அனுப்ரேம்,

அனுபவிச்சு மாளலை :-)