Monday, November 27, 2017

வா... இந்தப் பக்கம்..... கூப்ட்டமாதிரி இல்லே? (இந்திய மண்ணில் பயணம் 81 )

அதுவரை இங்கே போகணுமுன்னு ஒரு திட்டமும் இல்லை. கங்கைகொண்ட சோழபுரம் கோவில் வளாகத்தைப் பார்த்துட்டு மெயின் ரோடுக்கு வந்து சேர்ந்தால்  'இதோ இங்கே வா'ன்னு கூப்பிடறாப்போல கண்முன்னால் கடந்து போன பஸ் சேதி  சொன்னதோ?
எங்காத்து வேளுக்குடின்னு நான் பெயர் வச்சுருக்கும் எங்க தாம்பரம் அத்தையைப் பத்தி  துளசிதளத்தில் அப்பப்பச் சொல்லி இருக்கேன்.  நீண்டகால வாசக நண்பர்களுக்கு நினைவு இருக்கலாம்.  'இந்த கும்பகோணம் போயிட்டு வந்தேன்,  சிதம்பரம் போனேன், சீரங்கம் போயிட்டு வந்தேன்'னு  போய் வந்த  கோவில் விவரங்களைச் சொல்லும்போது  'காட்டுமன்னார்குடி போகலையா'ன்னு எப்பவும்  கேப்பாங்க. 'போணும். ஒருநாள் போவேன்'னு சொல்லி சமாளிச்சுருவேன்.  அது எங்கேயோ இருக்குன்னு ஒரு எண்ணம்.
இப்ப பஸ்ஸில் எழுதி இருந்ததைப் பார்த்ததும் காட்டுமன்னார்குடிக்கே போகலாமுன்னு  தோணுச்சு. நம்மவரும் அவர் செல்லில் கூகுளாரைக் கேட்டுப் பார்த்துட்டு, ரொம்பப்பக்கம்தான், ஒரு பதினெட்டு கிமீ தூரமுன்னு சொன்னார்.

அட! அவ்ளோதானா? சலோ....    ரெண்டுங்கெட்டான் நேரம். போட்டும்.... அங்கே போய் தேவுடு காத்தால் ஆச்சு !
கண்ணுக்கெட்டிய தூரம்,  போற வழியில் பசுமை!

தாம்பரம் அத்தைக்கு ஏன் இந்த ஊர் மேல் இவ்வளவு கரிசனம்? பொறந்த ஊர்ப் பாசம். 'அங்கே கோவிலுக்குப் போனால்  நாதமுனி ஸ்வாமிகள் எழுதுன ' 'ஆராவமுதே அடியேனுடலம் நின்பாயே......' தொடங்கி பத்துப்  பாசுரம் ஒரு கல்வெட்டுலே செதுக்கிச் சுவரில் பதிச்சுருப்பாங்க. அதைக் கட்டாயம் பார்த்துட்டு வாங்க'ன்னும் சொல்வாங்க.

  அதுலே  அப்படி என்ன விசேஷம்?    முக்கியமான  பல விசேஷங்கள் இருக்குன்னாலும்.... தாத்தா (தாம்பரம் அத்தையின் தகப்பனார்) கோவிலுக்குச் செய்த உபயம்னு ஒரு சின்ன விசேஷம் இருக்காமே அங்கே! அதான் அந்தப் பளிங்குக் கல்வெட்டு!

அப்ப... பெரிய விசேஷம்ன்னா?

 இது மிகப்பெரிய விசேஷம்....  நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்!

இன்றைக்கு நாமெல்லாம் கொண்டாடும் நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம்  நமக்குக் கிடைச்சது...... எப்படின்னு கொஞ்சம் பார்க்கலாம்.

ஆதிகாலத்தில் இந்த ஊரின் பெயர் வீரநாராயணபுர சதுர்வேதமங்கலம்.
பின்னே இப்போ ஏன் காட்டுமன்னார்கோவில்/ காட்டுமன்னார்குடி   (மன்னார்குடின்னாவே பயமா இருக்குப்பா)னு சொல்றாங்க.
 காட்டும் மன்னார் கோவில் என்பதுதான் காட்டுன்னு ஆகிப்போச்சு.

எதைக் காட்டுனாராம்? (நம்ம புத்தி குறுக்காத்தானே வேலை செய்யும்?)

பிரபந்தங்களைத்தான். வேறென்ன?

சரி... கதையைப் பார்ப்போம்.

இந்த வீரநாராயணபுரம்தான் ஸ்ரீ நாதமுனி ஸ்வாமிகள் அவதரித்தத் திருத்தலம். இவருடைய தந்தை ஈஸ்வரபட்டர், இவருக்கு வச்ச பெயர் ரங்கநாதன். கோவிலில் சாமி கைங்கர்யம். வாழ்க்கை இப்படிக் கடவுளோடு போய்க்கொண்டிருந்த சமயம், வேற ஊரில் இருந்து வந்த ஒரு பக்தர்கள் கூட்டம், திருவாய்மொழியில் பத்துப் பாடல்களை,

'ஆராவமுதே, அடியேன் உடலம் நின்பால் அன்பாயேன்னு தொடங்கி, குருகூர்ச்சடகோபன் குழலின்மலியச்சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும், மழலைத் தீரவல்லார் காமர்மானேயநோக்கியர்க்கே'
ன்னு பாடறதைக் கேட்டார். ஓராயிரத்துள் இப்பத்து என்ற வார்த்தை , 'சட்'ன்னு மனசுக்குள் போய் பத்த வச்சுருச்சு.

'இப்பப் பாடுன பாட்டில் உள்ள ஓராயிரத்துள் பத்து இதுன்னா பாக்கி தொளாயிரத்துத் தொன்னூறு எங்கே? தெரிஞ்சா அதையும் பாடுங்க'ன்னார்.

'நாங்க, எங்க ஊர் வழக்கபடி அந்தக் காலத்துலே இருந்து வழிவழியாப் பாடிக்கிட்டு இருக்கும் இந்தப் பத்துப் பாட்டுதான் தெரியும். இந்த ஓராயிரத்துள் இருக்கும் பாக்கியைப் பத்தித் தெரியாது. குருகூர் சடகோபன்னு இதுலே வர்றது பாருங்க. அந்தக் குருகூர்லே போய்க் கேட்டால் ஒருவேளை தெரியும்'னு சொல்லிட்டாங்க.

திருக்குருகூர்ன்னு ஒரு ஊர் இருக்குன்ற விவரம் கிடைச்சு அங்கே போனார். அங்கே இங்கேன்னு விசாரிச்சார். விவரம் சரியாக் கிடைக்கலை. அப்போ மதுரகவி ஆழ்வாரின் சிஷ்யர் ஒருவரைச் சந்திக்கிறார். 'ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் எல்லாம் எக்கச்சக்கமா இருக்குன்னாலும், எங்கே யார்கிட்டே இருக்குன்னு ஒரு பிடியும் கிடைக்கலை. ஆனா என் குருநாதர் பாடுன பதினோரு பாடல்கள் இருக்கும் ஓலைச்சுவடி என்னாண்டை இருக்கு. அதுலே பெருமாளைப் பற்றி ஒன்னுமே இல்லை. எல்லாமே அவரோட குருவான நம்மாழ்வார் மேல் பாடுன பாட்டுக்கள்தான்'னார்.

'கண்ணிநுண்சிறுத்தாம்பு'ன்ற தொகுப்பில் பாடல்கள். இதைமட்டும் பனிரெண்டாயிரம் முறை மனமுருகப்பாடினால் சாக்ஷாத் நம்மாழ்வாரே தரிசனம் தருவார்ன்னு நம்பிக்கை. நீ வேணுமுன்னால் முயற்சி செஞ்சு பாரேன்னார். (நம்ம நவதிருப்பதி தரிசனத்தில் ஆழ்வார் திருநகரியில் உறங்காப்புளின்னு திருப்புளி ஆழ்வார்ன்னு ஒரு புளியமரம் பற்றி எழுதுனது நினைவில்லாதவங்க கை தூக்குங்க)

கோயில் தலவிருட்சமான இந்த மரத்தடியில்தான் நம்மாழ்வார் அவர்கள் தவம் செஞ்சாராம். அப்போதான் மதுரகவி ஆழ்வார் அவரைத் தேடிவந்து குருவாக ஏற்றுக்கொண்டார். குருவின்மேல் வச்ச அதீத பக்தியால் பாடுனதுதான் மேலே குறிப்பிட்டக் 'கண்ணிநுண்சிறுத்தாம்பு' ........

கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணி யபெரு மாயன்என் னப்பனில்
நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்
அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே.

திருப்புளி ஆழ்வார் முன் அமர்ந்து இடைவிடாது மூணு பகலும் மூணு இரவும் சேர்ந்தாப்புலே இந்தப் பாடல்களை பனிரெண்டாயிரம் முறை பாடினார் நம்ம ரங்கநாதன் என்ற நாதமுனி ஸ்வாமிகள். பக்தியைப் புரிஞ்சுக்கிட்ட ஸ்ரீ நம்மாழ்வார் அவர் முன் தோன்றி,' என்ன வேணுமு'ன்னு கேட்க, அதுக்கு இவர்,
' திவ்யப்பிரபந்தம் முழுசும் வேணும். அதுக்குப் பொருளும் சொல்லணுமு'ன்னு விண்ணப்பித்தார். அப்படியே ஆச்சு. நாலாயிரம் பாடல்கள் இருக்குன்ற விவரமே அப்பத்தான் தெரிஞ்சதுன்னும் சொல்லலாம்.

 அதுக்குப்பிறகு வீரநாராயணபுரம் திரும்பிவந்த நாதமுனி ஸ்வாமிகள், மக்களுக்கு எல்லாம் திவ்யப்பிரபந்தத்தைச் சொல்லி, ராகத்தோடு பாட்டாகப்பாடி இறைவனை ஆடல்பாடலோடு வணங்கும் வழக்கத்தை உண்டாக்குனார், இதுதான் அரையர் சேவையா ஆகி இருக்காம். அரையர்கள் கையில் வச்சுருக்கும் தாளங்கள் கூட ஒன்னு நம்மாழ்வார், இன்னொன்னு நாதமுனிகள்னு சொல்றதும் உண்டு!

நாலாயிரம் பாடல்களில் நம்மாழ்வார் ஒரு ஆயிரம் பாடல்களும், (அதுக்கு மேலேயேன்னு கூகுளாண்டவர் சொல்றார்) திருமங்கை ஆழ்வார் ரெண்டாயிரம் பாடல்களும் மற்ற ஆழ்வார்கள் பத்துப்பேரும் சேர்ந்து ஒரு ஆயிரமும் பாடி இருக்காங்களாம்.

மேலே சொன்ன கதை, நம்ம துளசிதளத்திலே எட்டு வருசங்களுக்கு முன்னால் எழுதுனது.   முழுக்கதையைச் சொன்னது  எங்க தாம்பரம் அத்தைதான்.  நேரம் இருந்தால் இங்கே எட்டிப் பாருங்களேன் :-)


இது இப்படி இருக்க,  நாமெல்லாம் இப்போ நூத்தியெட்டு பித்துப்பிடிச்சுக் கிடக்கறோமே.... அப்படி நூத்தியெட்டு திவ்யதேசம் ஸேவிக்க முடியாத நிலைன்னா , இங்கே வந்து  வீரநாராயணரை வணங்கினாலே  நூத்தியெட்டு தரிசனம் செஞ்ச பலன் கிடைச்சுருமாம்!

அப்படியா?  எப்படி?

வாங்க.... நாம் இப்படிக்கா போவோம்......

ஆழ்வார்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்ச கோவில்கள்தான் திவ்யதேசங்கள் என்ற  பட்டியலில் வருது.  ஆனால்  அவுங்க எல்லோரும் எந்தெந்த கோவில்களைப் பற்றிப் பாடி இருந்தாங்கன்னு  எப்படித் தெரியும்?  வெவ்வேற காலக் காட்டத்தில் வெவ்வேற இடங்களில் பாடின பாசுரங்கள் ஆச்சே....

இப்பதான் மேலே சொன்ன சம்பவத்தில் இருக்கும்  ரங்கநாதன் என்ற நாதமுனி ஸ்வாமிகள் வர்றார்.  அவர் முயற்சியாலும், நம்மாழ்வாரின் அருளாலும் அங்கங்கே சிதறி இருந்த  பாசுரங்களின் தொகுப்பு கிடைச்சது.  அதை வச்சுத்தான் இந்த நூத்தியெட்டு பட்டியலும் தயாராச்சு ! (காதைச் சுத்தி மூக்கைத் தொட்டுட்டேனோ!!!)

ஆகக்கூடி நூத்தியெட்டுக்கு முன்னோடி நம்ம நாதமுனி ஸ்வாமிகள்தான். அவர் அவதரிச்ச புண்ணிய தலம் இந்த காட்டும்மன்னார்கோவில் என்பதால் இங்கே வந்தாலே நூத்தியெட்டு திவ்யதேசங்களைத் தரிசிச்ச பலன் கிடைச்சுரும் என்பது ஒரு ஆழ்ந்த நம்பிக்கை.  நம்புனால்தான் சாமி! தெரியுமோ?

ஆச்சாரியப் பரம்பரையும் இவரில் இருந்தே ஆரம்பிச்சது.  முதல் ஆச்சாரியர் இவர்தான்! 

இன்னுமொரு சுவாரசியமான  சேதி....

நாதமுனி ஸ்வாமிகள் முன்னிலையில்தான் ஸ்ரீரங்கத்தில் தாயார் சந்நிதிக்கு முன்னே இருக்கும்  மண்டபத்தில் கம்பராமாயணம் அரங்கேறியது!  அந்த மண்டபம்  இதுக்குப்பின் கம்பர் மண்டபம் என்றே  அறியப்படலாச்சு!

இந்தக் காட்டுமன்னார்குடிதான் ஆளவந்தாரின் அவதார ஸ்தலமும்!   இவரும் ஆச்சார்ய பரம்பரையில்  ரொம்பவே புகழ் பெற்றவர்.  பொறந்ததும் வச்ச  பெயர் யமுனைத்துறைவன். (ஹைய்யோ.... என்ன அழகான பெயர், இல்லை!)இவருக்கும் நம்ம நாதமுனி ஸ்வாமிகளுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு தெரியுமோ?  தாத்தாவும் பேரனும் !  ஆனா தாத்தா  சாமிகிட்டே போன பின் ரொம்ப காலம் கழிச்சுத்தான் பேரன் பிறந்துருக்கார்!
ஊருக்குள்ளே நுழைஞ்சுட்டோம்.  போஸ்டர் ஒன்னு கண்ணில் பட்டது!   ஒருபக்கம் மகிழ்ச்சியா இருந்தாலும்.....    ஒரு பக்கம் துக்கம்தான்.  பெண் ஜென்மம் பிறக்கும்போதே  போராட்டம்தானா?   ப்ச்....
கோவிலை நோக்கிப்போகும் வழியில் பூக்கடைகளில் சரஞ்சரமாய் மாலைகள். சரியான வழியில்தான் போறோமுன்னு உறுதியாச்சு. அதோ கோபுரம் தெரியதே!   மணி இப்போ ரெண்டே முக்கால். நாலு மணிக்குக் கோவில் திறக்கும்வரை என்ன செய்யலாம்.... தேவுடு காக்க வேண்டியதுதான்ன்னு  நினைப்போட கோவில் வாசலுக்குப் பக்கம் வண்டியை நிறுத்தினா.........

நிறுத்தினா?

கோவில் திறந்துருக்கு!  வாசலில்  இருந்த பெரியவர், சீக்கிரமாப் போங்க.  மூடிடப்போறாங்கன்னு  சொல்றார்!  பெருமாளே.... பெருமாளேன்னு வேறொன்னையும் கவனிக்காமல் உள்ளே ஓடறோம்.

கருவறையில் நின்ற கோலத்தில்... ஹைய்யோ.... என் பெருமாள்!  கூடவே தேவியர்!   ஆதிகாலத்தில் மரச்சிற்பமாக இருந்ததை  பதிமூணாம் நூற்றாண்டில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய மன்னர், சுதை உருவமா மாத்தி இருக்காராம்!

கண் நிறைய  காட்சி கொடுத்துட்டார்.   தீர்த்தமும் துளசியும் கிடைச்சது. இன்னும் நல்லா ஊன்றிக் கவனிக்கத் தயார் ஆகும்போதே....  சரேல்னு திரை இழுத்துட்டார் பட்டர் ஸ்வாமிகள்!

விக்கிச்சு நின்னேன்.  வெளியே வந்த பட்டர் ஸ்வாமிகள் ,  'இனி  நாலு மணிக்குத்தான் தரிசனம் என்றவர் கூடவே   அஞ்சு மணி ஆனாலும் ஆகும். எல்லோரும் இப்பத்தான் கிளம்பிப்போனா. வர்றதுக்கு  லேட் ஆகும் 'என்றார்.

ஙே.....
  நாலுநாளாய் நடந்த     பவித்ரோற்சவம் இன்றைக்கு   முடிஞ்ச விவரம் கிடைச்சது. விழா முடிய இவ்ளோ நேரம் ஆகி, பனிரெண்டுக்கு நடை சாத்துவது இன்றைக்கு மூணு மணி ஆகியிருக்கு.
விளக்கம் கிடைச்சது.

கருவறையை பூட்டிக்கிட்டு  விடுவிடுன்னு கிளம்பினார் பட்டர்பிரான்.  கையில் இருக்கும் கேமெராவைக் காமிச்சு அனுமதி உண்டான்னு கேக்கறதுக்கு  முந்தியே.... வெளியே படம் எடுத்துக்கலாமுன்னு சொல்லி  காலை வீசிப்போட்டுப் போயே போயிட்டார்.

உனக்காகத்தான் காத்திருந்தேன்னு  பெருமாள்  சொன்னாப்பல தோணல் எனக்கு.  நினைப்புதான்.... 
வலம்  போகலாமேன்னு  ஒரு சுத்து.  எல்லா சந்நிதிகளும் மூடியாச்சு பாருங்க. ஏகாந்த வலம்தான் நமக்கு.
நிதானமாக வலம் வந்தோம்.  ஆண்டாள் சந்நிதியில்   'தூமணி  மாடத்து.... '  ஆச்சு.


ஒரு சுத்து முடிச்சு முன்பக்கக் கொடிமரத்தாண்டை  வரும்போதுதான்  கோவிலை மூட வேண்டிய   ட்யூட்டியில் இருக்கும் காவல்காரர்  நமக்காகக் காத்துருப்பதைக் கவனிச்சோம்.  அவ்ளோதான்....  நம்மவர்  கிளம்பு கிளம்புன்னு  அவசரப்படுத்தறார்.  நானும் இங்கே அங்கேன்னு நாலைஞ்சு க்ளிக்ஸ்.

முகப்பு மண்டபத்தாண்டை ராமருக்கு  ஒரு ஜெயஸ்தம்பம்.  இதைப்போல ஒன்னு  காசியில் பிர்லா மந்திர் தோட்டத்தில் பார்த்த நினைவு.
அவசரமா உள்ளே ஓடுனதால்.... இப்பதான் நிதானமா பலிபீடம், கொடிமரம் , சின்னதா ஒரு சந்நிதியில் இருக்கும் பெரிய திருவடி எல்லாம் ஸேவிச்சுக்கிட்டோம்.
அப்பதான்  கல்வெட்டு ஞாபகம் வர்றது.  எங்கேன்னு யாரை விசாரிக்க?  பெருமாள் இதுக்கும் பதில் ரெடி பண்ணிட்டார்.  கருடன் சந்நிதியாண்டை ஒரு பட்டர் என்னமோ தூக்கிண்டு  வந்துக்கிட்டு இருந்தார்.   ஓடிப்போய் அவரைக் கேட்டேன்.
 மூலவர் சந்நிதியாண்டை இருக்காம்!  அடடா.... நமக்குத் தெரியாமல் போச்சே....

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே,
நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே,
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருகுடந்தை,
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே
கோபுரவாசலுக்குள் நாம் நுழையும்போது நடக்கிடது பக்கம் கோவில் நந்தவனம். நம்ம வேளுக்குடி ஸ்வாமிகளின் கிஞ்சித்காரம் ட்ரஸ்ட்  கவனிச்சுக்கறாங்க.
ராஜகோபுரத்தைப் பார்த்தாப்லே  கோவிலுக்கு எதிரில் கொஞ்ச தூரத்தில்  ஆஞ்சிக்குத் தனிச்சந்நிதி! தனிக்கோவில்னும் சொல்லலாம்.  அருள்மிகு  அனுக்ரஹ ஆஞ்சநேயர் திருக்கோவில்! கும்பிடு போட்டுட்டு ராம ராம ராம ராம சொல்லிக்கிட்டே  கிளம்பினோம்.
கோவில் திருக்குளம் பரவாயில்லாமல் சுத்தமாவே இருக்கு. நிறைய தண்ணீரும் கூட!  பக்கத்துலேயே புள்ளையார் கோவில் ஒன்னு. செங்கழுநீர் பிள்ளையார் ஆலயம்!

மணி மூணேகால்!  கொஞ்சம் பெரிய ஊரா இருக்கே.... இங்கே சாப்பிட எதாவது கிடைக்குமான்னு பாருங்கன்னு  நம்ம சீனிவாசனிடம் சொன்னார் நம்மவர்.  பாவம் அவரும் பட்டினியா இருக்காரே...
ஹோட்டல் கிருஷ்ணவிலாஸ், கச்சேரித்தெரு. உள்ளே சுத்தம். ஐ மீன் படு சுத்தம்! சாப்பிட ஒன்னுமே இல்லை.   மத்யானம் சாப்பாடுக் கடை முடிஞ்சு இனி  நாலு நாலரைக்குத்தான்   .....     காஃபியாவது கிடைக்குமான்னால்.... இனிமேத்தான் டிகாக்‌ஷனே இறக்கணும். பால் வேற இன்னும் வரலை.

ஓ.... வாசலில் ஐஸ் க்ரீம் போர்டு இருக்கே....  அப்ப அதுவாவது...

ஊஹூம்....

எப்பவும் பயணத்தில் சிறு தீனி கொஞ்சம் வச்சுக்கறது உண்டு. ஆனால் அந்தப் பை  ராயாஸ் அறையில் இருக்கு.

காலையில்  சக்கரத்தாழ்வார் கொடுத்த தேங்காய் .... அதுவும் தானாம்....

அணைக்கரை வழியா கும்பகோணம் திரும்பறோம்.... இப்போ....

வர்ற வழியெல்லாம் எப்படிக் கடைசி நிமிஷத்துலே காட்சி கொடுத்துட்டான்னு  பேச்சுதான்!

தொடரும்.......


PINகுறிப்பு:  கோவிலில் எடுத்த படங்களை அங்கங்கே தூவிட்டேன்.  வரிசையில் இருக்காது....      மன்னிச்சு


18 comments:

said...

காட்டுமன்னார்கோயில் பெருமாள் கோயில் சென்றதில்லை. உங்கள் பதிவு ஆவலை உண்டாக்கியுள்ளது. விரைவில் செல்வேன்.

said...

புதிய தகவல்கள். மன்னார்குடி போயிருக்கிறேன். காட்டுமன்னார்குடி தஞ்சையில் இருந்த காலங்களில் பஸ்ஸில் பெயர்ப்பலகையாய்ப் பார்த்திருக்கிறேன்!

said...

அப்பா அடிக்கடி செல்லும் கோவில்.....


ஸ்ரீமத் நாதமுனிகள் திருநட்சத்திரம் அன்று
காட்டுமன்னார் கோவிலில் நடைபெற்ற உற்சவத்தில் அப்பா எடுத்த படங்கள் ...இங்கு இருக்கு.. https://anu-rainydrop.blogspot.in/2017/07/blog-post_17.html

said...

ponniyin selvanil varum kadambur than tharpothu kattumannar kovil.

said...

அருமை நன்றி தொடர்கிறேன்

said...

இதுவரை நான் காட்டுமன்னார்கோவில் போனதில்லம்மா

said...

108 பூர்த்தியாகும் சமயம் உங்களுக்கு காட்டுமன்னார் கோவில் தரிசனமும் கிடைத்திருக்கிறது. நிச்சயம் சேவிக்கவேண்டிய தலங்கள் லிஸ்டில் உண்டு. தொடர்கிறேன்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

நீங்க போய் வரும்போது அந்தக் கல்வெட்டு என்னன்னு பார்த்துட்டு வந்து சொல்லுங்க.

கட்டாயம் ஒருமுறை தரிசிக்க வேண்டிய பெருமாள்தான் வீரநாராயணர்!

said...

வாங்க ஸ்ரீராம்.

நாமும் ரெண்டு முறை மன்னார்குடி ராஜகோபாலனை தரிசனம் செஞ்சுருக்கோம். காட்டுமன்னார்குடிக்கு இதுதான் முதல்முறை.

அடுத்த பயணத்தில் இன்னொருமுறை போய் வரணும். பெருமாளை சரியாப் பார்க்கலைன்னு தோணல்...

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

அப்பாவுக்கு எங்கள் வணக்கங்களைச் சொல்லுங்கள்.

சுட்டிக்கு நன்றி.

said...

வாங்க நாகராஜா.

கடம்பூரா? அட !!!!!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி.

said...

வாங்க ராஜி.

எல்லாத்துக்கும் வேளைன்னு ஒன்னு இருக்கேப்பா..... எனக்கு இப்பதான் வாய்ச்சது.


கும்பகோணத்தில் ஒரு நாலு நாள் இருக்கும்படி ப்ளான் போடுங்க. நிறைய இடங்களைப் பார்த்துடலாம்@!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நாம் அவரை நோக்கி ஒரு அடி எடுத்து வச்சால், அவரே வந்து நம் கையைப்பிடிச்சுக்கூட்டிப்போவார்னு எங்க அம்மம்மா சொல்வாங்க. அது உண்மைதான் போல!

நம்மையும் கூப்புட்டு தரிசனம் கொடுத்தாரேன்னு இருக்கு !

said...


அழகான படங்கள், அருமையான வர்ணனை.தொடர்கிறேன்.

said...

வாங்க பானு,

வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி.

said...

காட்டு மன்னார் உங்களுக்கு தன்னைக் காட்டும் மன்னாரா இருந்ததும் பொருத்தம்தான்.

சின்ன ஊர்கள்ள வேளை கெட்ட வேளைல எதுவும் கிடைக்கிறதில்ல. ஏன்னா அவங்களுக்கு பொதுவா ஒரு நாளைக்கு இவ்வளவு கூட்டம் வரும்னு கணக்கு வெச்சிருப்பாங்க. அதுக்கு கொஞ்சம் முன்னப்பின்ன தான் சமையலும் இருக்கும். புள்ளிருக்கும்வேளூர் போனப்போ இதே பிரச்சனை அனுபவிச்சிருக்கோம்.

said...

எங்கள் ஊர் இருந்த கடலூர் மாவட்டம் என்றாலும் இங்கே சென்றது இல்லை. தமிழகத்திலேயே எத்தனை இடங்கள் இன்னும் செல்ல இருக்கிறது!

தொடர்கிறேன்.