Wednesday, April 26, 2017

தங்கக்கோவில் பா...டன் தர்பாரில்! ( நேபாள் பயணப்பதிவு 34 )

லிப்ஸ்டிக் போட்ட ரெண்டு சிங்கங்கள் உக்கார்ந்துருக்கும்  வாசலுக்குக் கூட்டிப்போனார் பவன்.   'தங்கக்கோவிலுக்கு  நல்வரவு'ன்னு போட்டுருக்கு. கோல்டன் டெம்பிள்.  இது  கோவிலே  இல்லை(யாம்)  பௌத்தமடம். ஹிரண்ய வர்ண மஹாவிஹார்.   இந்த ஹிரண்ய வர்ண என்ற சமஸ்க்ரத சொல்லுக்கே தங்க நிறமுன்னுதான் அர்த்தம்.
 உள்ளே போறோம். ஒரு சின்னக் கட்டணம் உண்டு இதுக்குள் போக. ஆளுக்கு அம்பது ரூபாய். டிக்கெட் கவுன்ட்டர் ஒன்னு இருக்குன்னாலும்,    டிக்கெட் போட்டெல்லாம்  விக்கறதில்லை.  அங்கே இருக்கும்  டொனெஷன் பெட்டியில் காசைப் போட்டுட்டு உள்ளே போகலாம். கவுன்டருக்கு மேலே போட்டுருந்த படத்தைப் பார்த்ததும்தான் காலையில் நம்ம லெமன்ட்ரீ ஓனர் ப்ரகாஷிடம்  சொன்னது ஞாபகம் வந்துச்சு.
முகப்பு வளைவில் ஏழு  புத்தர்கள்!   கடந்தால் சின்னதா ஒரு முற்றம். வலப்பக்கம் ஒரு சந்நிதி.  வஜ்ரபீர் மஹாகாலா புலித்தோல் கட்டிக்கிட்டுப் புத்தருக்குக் காவல் ! குங்குமம் மாதிரி சிந்தூரம் பூசி இருக்கு. சரியா முகம் தெரியலை...
அடுத்த பாகத்தில் ஒரு மூணடுக்குக் கட்டடம். இங்கேயும் ஒரு முகப்பு வாசல். புத்தர் போல தெரியுது. ஆனால் பல கைகளுடன் பத்மாஸனம் போட்டு உக்கார்ந்துருக்கார்.  வாசலுக்கு ரெண்டு பக்கமும்  சிவனும் விஷ்ணுவும்!  த்வாரபாலகரா என்ன?
பனிரெண்டாம் நூற்றாண்டுலே கட்டிய  மடாலயம் இது. அப்போ இருந்த மன்னர் பாஸ்கர தேவ் வர்மா சாக்யமுனி புத்தரின் மேல் இருக்கும் அபிமானத்தால்  மடத்தைக் கட்டிக்கொடுத்து, சிவனையும் விஷ்ணுவையும்  புத்தரைக் காப்பாத்தச் சொல்லி வேண்டிக்கிட்டு வாசலில் சிலையா நிக்க வச்சுருக்காராம்!

ரொம்பப் பழங்கால மடாலயமா இருப்பதால்.... மற்ற மடாலயங்களில் இல்லாத வகையில் பழைய சம்ப்ரதாயங்கள் கடைப்பிடிக்கறாங்களாம்.  இந்த மடாலயத்துத் தலைவர் ஒரு  இளம் பிக்ஷுதான். வயசு பனிரெண்டுக்குள் இருக்கணும். இவருக்கு உதவியா  கொஞ்சம் பெரிய வயசில் ரெண்டு பேர் உதவணும். அப்படித்தான் ஒரு கணக்கு. ஒரு மாசம்  போனதும் இன்னொரு புதிய தலைவர் வந்துருவார்.  முக்கியமான சந்நிதிகளில் பூஜை செய்வதுதான் தலைவருடைய கடமை.  இந்த ஒரு மாசம் பூராவும் தலைவர் மடத்தை விட்டு வெளியே போக அனுமதி இல்லை.
மடாலயத்தில் நிறைய புத்த பிக்ஷுக்கள் தங்கி, அவுங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. சின்னச்சின்னதா கேட்ட  தகவல்கள்.
அடுத்த முற்றத்துக்குள் போறோம்.  வெளியே சொல்லிக்கிட்டு இருக்கும் தங்கக்கோவில் இங்கெதான் இருக்கு. முற்றத்துக்கு நட்ட நடுவிலே  பகோடா ஸ்டைலில் ஒரு மூணடுக்குக் கோவில். தங்கப்பூச்சு இருக்கு. ஆனால் பளிச்ன்னு இல்லை.  தேய்ஞ்சு போச்சோ என்னவோ?

சந்நிதிக்கு முன்னால்   மேடையில் ஒரு வஜ்ரா, சுத்திவர இருக்கும் வெண்கல விளக்குகளோடு!



மேலடுக்கில் இருந்து ஒரு ஏணி போல ஒரு டிஸைன் இறங்கி வருது. பெரிய நெத்திச்சுட்டியைத் தொங்க விட்டது போல்!  இது  ஒரு வித ஏணிதானாம். மேலோகத்தில் இருந்து  இதுவழியாத்தான் சாக்யமுனி இறங்கி வந்து இங்கே இருந்து அருள் செய்யறாருன்னு (ஸிம்பாலிக்கா) சொல்றாங்க.
சந்நிதிக் கதவு மூடி இருக்கு இப்போ. ரத்ன சைத்யா  ( Ratna Chaitya Swayambhu Stupa) உள்ளே இருக்காம். யாராவது புத்தமதத்தினர் நம்மிடையே இருந்தால் இந்த சைத்யாவுக்கு விளக்கம் சொன்னால் தேவலை.  நாம் ரெண்டு நாளைக்கு முன்னால் ஸ்வயம்பு கோவில் ஒன்னு சின்னக் குன்றின்மேல் பார்த்தமே... நிறைய குரங்குகள் இருந்தாங்க.... அந்த இடம்தான்...  அதனோடு  தொடர்பு இருக்காம்  சந்நிதி உள்ளே இருக்கும் ரத்ன சைத்யாவுக்கு.

இந்த  மடாலயம் இங்கே வர்றதுக்கு முன்னாலேயே  இது இங்கே ஆதியில் இருந்தே இருக்குன்னும் சொல்றாங்க. ப்ராச்சீந்தான் போல்!   கோவில் கட்டுனதெல்லாம்  அப்புறம் பல காலங்களுக்கு பின்னேதான்....

சந்நிதி வாசலுக்கு ரெண்டு பக்கமும் கோவிலைக் கட்டிய அரசரும் அரசியும் கை கூப்பிய நிலையில், கற்சிலையும் ,  பொற்சிலையுமாக ரெண்டு வகையில் இருக்காங்க.
இன்னும் ரெண்டு பேர்! இளவரசர்களா இருக்கலாம் !

 முற்றத்தின் சுற்றையொட்டியே  தொங்கும் மணிகளும் இன்னும் சில சந்நிதிகளுமா  சுத்திவர இருக்கு.  இடையே   பித்தளைத்தூண்கள். அதுலே நாலு மூலையிலும்  நம்ம குரங்கார் உக்கார்ந்து இருக்கார். எல்லாம் உலோகச் சிலைகள்தான். கையில் பலாப்பழம் வச்சுருக்கார் ஒருத்தர். புத்தருக்குப் படையல் போடக்  கொண்டுவந்ததாம்.




வஜ்ரா இருக்கும் மேடைக்கு எதிர்ப்புறம் இருக்கும்    சந்நிதிக்கு வெளியே ரெண்டு பக்கமும் ஆமைபீடத்தின் மேல் நிற்கும்  யானைகளும் மாவுத்தன்மாரும்!  புத்தர் சந்நிதி.

நாலு பக்கமும் நாலுவிதமான லோகேஷ்வரர்கள்.



மூடுன கம்பிக் கதவு அப்படியே இருக்க,   மூடி இருந்த சாக்யமுனி சந்நிதி சட்னு திறந்து மணியடிச்சுக்கிட்டே ஒரு பூஜை. ரெண்டு நிமிட் கூட  இருக்காது, சந்நிதி மூடிட்டாங்க. மடத்துலே என்னென்ன நியமனங்களோ?  கிடைச்ச நேரத்துலே பார்த்தப்ப....  நம்ம முக்திநாத் பெருமாளுடைய உருவம் போலவே அதே முகக்களையுடன் இருந்தார் சாக்யமுனி. (அங்கே இருந்த பெருமாளை இப்படி மாத்துனது உண்மைதான் போல!)
இங்கே அதிகாலை நேரத்தில் வந்துருந்தா... இவுங்க பூஜை சடங்குகளைப் பார்த்திருக்கக்கூடும். மூணு மணிக்கு முன்னாலே இங்கே வந்துறணுமுன்னா.....    போகட்டும்.... அதுக்கெல்லாம் தனிக் கொடுப்பினை வேணுமா இல்லையா?



சுத்திவர  ப்ரேயர் பெல் வரிசைகள். எல்லோரும்போற போக்கில் சுத்திக்கிட்டே போனால் பல கோடிகளை  புண்ணியங்களைச்  சுலபமா சம்பாரிச்சுறலாம்.....
நான் அங்கே இங்கேன்னு க்ளிக்கிக்கிட்டே நடக்கும்போது  ஒரு சின்ன வயசுப் பையன் புத்த பிக்ஷூ முற்றத்துலே  குதிச்சு இறங்குனவர், சட்னு அங்கே ஒரு ஓரத்தில் கிடந்த கயிறை எடுத்து ஸ்கிப்பிங் ஆட ஆரம்பிச்சார்.  மனமும் உடலும் ஒருசேர ஒருமுகப்பட்டு,   முகத்துலே  பூரண நிறைவுடன் .... அடடா....  பார்க்கவே  அற்புதம். இதுகூட ஒரு தியானம்தான் இல்லே?  க்ளிக்!
ஒருவேளை இவர்தான் மடாலயத்தில் இந்த மாசத்துக்கானத் தலைவரோ?


பார்த்துக்கிட்டு இருக்கும்போதே ஸீன் மாறினாப்போல அடுத்த சந்நிதியில்  புள்ளையார்!  கணேஷ் மந்திர்!

பெரிய மேடையில் பித்தளை நந்தியார்,  கட்டங்கட்ட கம்பித்தடுப்புக்குள்ளே...  எதிரில் சிவலிங்கம், இன்னும் சில சாமிகள். மும்மூர்த்திகள்,  தனியாக நின்னு சேவை சாதிக்கும் விஷ்ணு, தரையில் புதைஞ்சு கிடக்கும் நந்தி, இன்னொரு கணேஷ் இப்படிக் கலந்து கட்டி சாமி சந்நிதிகள்!

பகோடா ஸ்டைலில் கோவில் வேற இருக்கு மரவேலைப்பாடுகளோடு!


தங்கம் தங்கமுன்னு தங்க நிறம் பார்த்தே....  கண்ணுக்கு  என்னவோ ஆயிருச்சு..........   :-)  உண்மைக்கும் வெளியே சிங்க வாசலில் நுழையும்போது  இவ்ளோ பெருசா முற்றத்துக் கோவில் இருக்குமுன்னு யூகிக்க முடியாத வகையில் எல்லாமே உள்ளடங்கி இருக்குப்பா......
இன்னொரு இடத்துக்குப் போகலாமுன்னு  பவன் சொன்னதும் கிளம்பிட்டோம்.

தொடரும்.......  :-)


11 comments:

said...

படங்கள் ஒவ்வொன்றும் அழகு. குறிப்பாக ஸ்கிப்பிங் ஆடும் இளம் துறவி.... ரொம்பவே அழகு!

தொடர்கிறேன்.

said...

இடங்களின் அழகைப் படங்களில் ரசித்தேன்.

said...

அற்புதம். நன்றி.

said...

படங்களும் இடத்தின் விவரணையும் அருமை. என்ன கலை நயமிக்க சிலைகள். சிற்பியின் கைவண்ணம்.

"(அங்கே இருந்த பெருமாளை இப்படி மாத்துனது உண்மைதான் போல!)" - கசந்தாலும், இது உண்மைதான். பத்ரினாத் உண்மையான கோவில், தோலிங்கர் மடம் (அது இன்னும் வெகு உயரத்தில் மலையில் இருப்பது. இப்போது தோலிங்கர் மடம் புத்த மடாலயம்) இருக்கும் இடத்தில் (அல்லது அங்கேயே) இருந்ததாம். அதனை மக்கள் சென்று சேவிப்பது கடினம் என்று தற்போதுள்ள இடத்தில் கோவில் வைத்தார்களாம். பத்ரினாத் பெருமாள், உண்மையில் புத்தரின் தோற்றமாம் (அதாவது புத்தர் சிலை. அதனால்தான் தாமரையில் அமர்ந்திருக்கும் தோற்றமாம். வேறு எங்கும் தாமரையில் பத்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும் தோற்றம் கிடையாது). ஆதிசங்கரர் காலத்தில்தான் பத்ரி நாராயணனாக ஆக்கப்பட்டது என்று படித்திருக்கிறேன். இதேபோல் மதுரை மற்றும் பல இடங்களில் சமண, புத்தக் கோவில்கள், சைவக் கோவில்களாக ஆக்கப்பட்டதும் உண்டு. இதெல்லாம் மத அரசியல்.

சிலைகளில் அரச/அரசிகளைப் பார்க்கும்போது எல்லாருமே ஒரே சாயலோடு இருப்பதாகத் தெரிகிறது. (திருப்பதிலயும் இப்படித்தான்). அதைவைத்து அரசரின் உண்மையான தோற்றம் கண்டுபிடிக்க இயலுமா?

said...

சிங்கத்தோட வாயில் லிப்ஸ்டிக் இல்லை டீச்சர். அது இரத்தம். காட்டுமானை வேட்டையாடி உண்ட சிங்கத்தின் வாயில் இரத்தச் சிவப்பு. அந்தச் சிங்கம் காவலுக்கு நின்னா யாருக்கும் அச்சம் வரும் தானே?

பலாப்பழம் கொண்டு வந்த குரங்கார் மிக அழகர். இன்னொரு குரங்கார் கூட ஏதோ பழமோ கிழங்கோ கொண்டு வந்திருக்கிறார். வாழ்க. வாழ்க.

வெண்கலச் சிற்பங்கள் எல்லாமே அட்டகாசம். இதைச் செய்ய எத்தனை காலமாச்சோ!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்வது மனமகிழ்ச்சி அளிக்கிறது!

நன்றீஸ்.

said...

வாங்க ஸ்ரீராம்.

ரசிப்புக்கும் ரசனைக்கும் நன்றிகள்!

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

சரியாச் சொன்னீங்க... மத அரசியல் ! உண்மைதான்.....ப்ச்

அரசர்களுக்கான ஸ்பெஷல் உடுப்பும் தலைப்பாகையும் போட்டதும் எல்லோரும் ஒரே மாதிரித்தான் தெரிவாங்க:-)

எதோ அந்தவரை அரசர்களுக்கும் ஒரு இடம் கிடைச்சதே!

said...

வாங்க ஜிரா!

ஆஹா... ரத்தமா!!!!! கொஞ்சம்கூட ஈஷிக்காமல் தின்னுருக்கு பாருங்க:-)

ஒவ்வொரு சிற்பத்திலும் இருக்கும் நுணுக்கமான வேலைப்பாடுகளைப் பார்த்தால்.... எப்படி இப்படின்னுதான் இருக்கு!

said...

இங்கு நான் கிளிக்கியவை:
https://photos.app.goo.gl/5faF722YuaJ1r8SZ9