Monday, April 10, 2017

தக்ஷிண்காளிக்கு ரத்த தாகமாம் ! ( நேபாள் பயணப்பதிவு 27 )

காலையில் கொஞ்சம் சீக்கிரமா எழுந்து வலை மேய்ஞ்சுட்டு, குளிச்சு முழுகி ரெடியாகி கீழே வந்தப்ப மணி ஏழரை.  காலை உணவுக்கு  ப்ரெட்டும், கொஞ்சம் காய்கறிகளும், எனக்கு ஒரு பேன்கேக்குமா சொல்லிட்டு  முற்றத்தில் இருக்கும் சிட் அவுட்டில் உக்காரப் போனப்பயே   லெமன்ட்ரீ ஓனர் ப்ரகாஷ் வந்துட்டார். அவர்கிட்டே இன்றைய ஊர்சுத்தல் பற்றிக் கேட்டுக்கிட்டு இருக்கும்போதே நேற்றைக்குப் பார்த்த மும்பை கோவிந்தன் நம்பூதிரியும் வந்துட்டார்.
முதல்நாள் நாம் எங்கெங்கே போனோம் என்னென்ன பார்த்தோம்னு விசாரிச்சவர்,  (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் கான்ஃபரன்ஸ்க்கு வந்தவர்) 'இவ்ளோல்லாம் இருக்குன்னு தெரியாது. இன்றைக்கு மாலையில் கிளம்பணும்.  இன்னொருக்கா குடும்பத்தோடு காத்மாண்டு  வர்றதா இருக்கேன்'னார்.
நாங்க  சாப்பிட்டு முடிக்கும்போது  பவனும் வந்துட்டார். இன்றைக்கு வேற வண்டி. முந்தாநாள் ஏர்ப்போர்ட்க்கு நம்மை பிக்கப்  பண்ண வந்த வண்டியும் ட்ரைவர் ரவியும்தான். இப்பப்போற இடம் ஊருக்கு வெளியே. ஒரு 22 கிமீ தூரம் தெற்கு திசையில் போகணுமாம்.  போய்ச்சேரவே ஒரு மணி பத்து நிமிட்ஸ் எடுத்துச்சு.

தக்ஷின்காளி கோவிலுக்கு வந்துருக்கோம்.  பதினாலாம் நூற்றாண்டு கோவில். மல்லா அரசர்கள் ஆட்சி.  ஒருநாள் அரசரின் கனவில்  காளி மாதா வந்து, தனக்குக் கோவில் ஒன்னு கட்டும்படி சொல்றாங்க.  இந்த இடம்னு ஒரு இடத்தையும் கனவில் காமிக்கிறாங்க. மறுநாள் அந்த இடத்தைத் தேடி அரசர் போறார்.  அப்போ ஒரு சாதாரண மனுஷர் எதிரிலே ஓடி வந்துக்கிட்டு இருக்கார். அரசரைப் பார்த்ததும் வணங்கி, தான் வர்ற வழியிலே ஒரு சாமிச் சிலையைப் பார்த்ததாயும், அதைச் சொல்லத்தான் அரசரைத் தேடி ஓடி வர்றதாகவும் சொல்ல, அந்த இடத்தைக் காட்டுன்னு அரசரும் பரிவாரமும் போறாங்க.
அங்கே போனால்.... அது கனவிலே காளி காட்டிய இடம்.  சிலையைப் பார்க்கிறார்.... காளி !!!  சரி. இதே இடத்துலே கோவில்  கட்டுங்கன்னு உத்தரவு போட்டுட்டார்.  கோவில்னு சொன்னால் பெரிய  கோபுரம், பகோடா ஸ்டைலு ஒன்னும் இல்லாம  கண்டெடுத்த இடத்திலேயே  பிரதிஷ்டை செஞ்சதுதான்.  இந்த இடத்துலே ஆறு ஒன்னு ஓடிகிட்டு இருக்கு!  பூர்ணாவதி கங்கை! ஆற்றின் அந்தாண்டைக்கரையில்தான் காளி!

நாங்க கோவில் ஏரியாவில் வண்டியை நிறுத்திட்டு இறங்கும்போதே  ஒரு பக்கம் பூஜை சாமான்களை விற்கும் கடைகள். வியாபாரிகள் எல்லோரும் பெண்கள்தான். கூவிக்கூவிக் கூப்பிடறாங்க. பொதுவா நான் அர்ச்சனை சாமான்கள் எல்லாம் வாங்கறதில்லைதான். ஆனால் என்னவோ வாங்கலாமுன்னு தோணுச்சு. ஒரு கடையில் இருந்த இளம்பெண், பூஜைத்தட்டை எடுத்து நீட்டுனாங்க.  அதைக் கைநீட்டி வாங்குமுன் இன்னொருபெண்  பாட்டிலிருக்கும் தண்ணீரை நமக்குக் கையலம்ப ஊத்தறாங்க.
சட்னு நீட்டுன பாட்டில் தண்ணியில் கையை கழுவிட்டு கையை உதறும்போது, என் கையில் (எப்பவும்) மாட்டி இருக்கும்  கெமெரா கீழெ விழுந்துருச்சு.  ஐயோ  பெருமாளே....ஒரு செக்கண்ட்  எனக்கு உயிரே போனமாதிரி ஆயிருச்சு. சட்னு குனிஞ்சு எடுத்துட்டு ஆன் பண்ணி பார்த்தேன்.  ஓப்பன் ஆகுது. எதிரே ஒரு க்ளிக். படம் வந்துருக்கான்னு  ரீப்ளே செஞ்சால்.... நல்லவேளை  ஒன்னுமாகலை. நிம்மதியாச்சு. அதுக்குள்ளே பூஜைத்தட்டு நம்மவர் கையில்!
நிறைய சாமான்களா இருக்கு. என்ன ஏதுன்னு ஒன்னும்புரியலை. எதிர்ப்பக்கம் இருக்கும்  கோவில் வாசலுக்குள் போறோம்.
படிகள் கீழிறங்கிப்போகுது.  வனாந்தரமான இடம். ஒரு அம்பதறுவது படிகள்  இறங்கணும்.
அப்புறம் கீழே இருக்கும்  அதலபாதாளத்தையொட்டியே ஒரு பாதை.  அதையும் தாண்டுனால் ஒரு  பாலம். கீழே ஆறு ஒன்னு கொஞ்சூண்டு தண்ணியுடன்  ஓடிக்கிட்டு இருக்கு.  தண்ணீர் வர்ற திசையில் பார்த்தால் ஆறு ரெண்டு பக்கமும் இருந்து வந்து அப்புறம் ஒன்னா சேர்ந்துருது.
இடையில் இருக்கும் இடத்தில் கோவில் கட்டடங்கள்.  அங்கே போக ரெண்டு இடங்களில் சின்னப் பாலங்கள். ஒரு ஆறு பூர்ணவதி கங்கா என்ற பெயரிலும் இன்னொன்னு உத்ரவதி கங்கா என்ற பெயரிலும் இருப்பதாக பாலங்களில் எழுதிப் போட்டுருக்காங்க.
நாம் இப்போ பூர்ணவதி கங்கா பாலத்தினூடாப் போறோம். ஒரு மண்டபம் தாண்டி கீழிறங்குனா எதிரே பத்ரகாளியின் சந்நிதி!   வெளியே  ரெண்டு பக்கமும் சைஸ்வாரியா அடுக்கி வச்சுருக்கும் பித்தளைச் சிங்கங்கள் வரிசை,  பித்தளைக் கம்பியால்  சுத்திவர இடுப்புயரத்தடுப்பும் அதுக்கு மேலே வரிசையாப் பிடிப்பிச்சு இருக்கும் பித்தளை அகல்களும்.
தடுப்பினூடாக ஒரு வழி. கடந்தால் பெரிய மணி தொங்கும் ஒரு கல் அமைப்பு. பெரிய சூலம். அதுலே ஒரு உடுக்கை.  இது  மட்டும் செம்பு.  கண்ணுக்கெதிரா நேரெதிரா  துணிப்பந்தலுக்குக் கீழே பத்ரகாளி.  இடதுபக்கம்  சின்ன மாடங்கள் போல ஒரு வரிசை. ஒவ்வொரு மாடத்திலும் எதோ சாமி சிலை.

செருப்பை வெளியில் விட்டுட்டுப் படி கடந்து  கருவறை முற்றத்தில் இறங்கினால்  நமக்கிடதுபக்கம் (காளிக்கு  நேரா ) ஒரு பைரவர் சந்நிதி!  அமைப்பு முழுசும் பித்தளைதான்.
வரிசையா இருக்கும் மாடங்களில் முதல்லே   இருப்பவர் புள்ளையார். கணேஷ். அப்புறம் இருக்கும் ஆறு மாடங்களில்  சப்தமாதாக்கள்.  அப்ப ஏழாவது? அதான் பத்ரகாளி இருக்காளே!
காளிக்கு நிறைய பூக்களால் அலங்காரம். முகம் மட்டும் தெரியுது. முழிச்சுப் பார்க்கும் கண்கள் மூணு, நெற்றிக் கண்ணையும் சேர்த்து!  சந்நிதி தரையிலும் பூக்களும்  சரிகை வச்சச் சிகப்புத் துணிகளுமா இருக்கு. நமக்கும் காளிக்கும் இடையில் உயரம் குறைஞ்ச சின்னத் தடுப்பு. கையை எட்டி நீட்டி பத்ரகாளியைத் தொட்டு வணங்கலாம். கை நீளம் வேணும்!

ஒருத்தர்  அப்படி வணங்கிக்கிட்டு இருந்தார். அப்புறம் காளி முன் குந்தியிருந்து என்னமோ  சொல்லி பிரார்த்தனை செஞ்சார்.   என்னைமாதிரி சாமி கிட்டே பேசும் கேஸ் போல :-)
நாங்களும் உள்ளே போய்  அர்ச்சனைக் கூடையில் ( இது ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பேஸின்தான்) இருக்கும் பூக்களையும் சரிகைத் துணியையும் காளியின் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்.  நின்னு கைகூப்பி வணங்கும்போது,  தடுப்புக்கு வெளியே இருந்து பவன், நம்மைக் க்ளிக்கிட்டு இருக்கார். 'இந்தப் பக்கம் பாருங்க'ன்னு  குரல்வேற கொடுக்கறார்.
சந்நிதிக்குள்ளில் போய் படம் எடுக்கக்கூடாது. வெளியில் நின்னு சந்நிதியை எடுத்துக்கலாமாம். நாம்  மேலே இருந்து  படி இறங்கும்போதே, உங்க செல் நல்லாவே படம் எடுக்குதுன்னு  என்னோடதை      வாங்கி வச்சுக்கிட்டு  வழியெல்லாம் க்ளிக்கிக்கிட்டு இருக்கார்.

அர்ச்சனைப் பாத்திரத்தில்  இன்னும் தேங்காய், விளக்குகள், ஊதுபத்தி  எல்லாம் இருக்கு. கூடவே கொஞ்சம்  கயிறுகள்.  தேங்காய் உடைக்கத் தனி இடம். அங்கே இருப்பவர் நம் பாத்திரத்தில் இருந்து தேங்காயை எடுத்து ஒரு கத்தியால் ரெண்டா வெட்டிட்டு, ஒரு மூடியை நம்ம பாத்திரத்தில் திருப்பி வச்சுட்டு, குழைச்சு வச்ச குங்குமத்தில் இருந்து கொஞ்சம் எடுத்து நம்மவரின்  நெற்றியில் வச்சதும், அந்தப் பக்கம்னு கை காட்டினார்.
ஊதுபத்தி, விளக்குகள்   கொளுத்தி வைக்கும் இடம்.  நம்ம பாத்திரத்தில் இருக்கும் நெய் விளக்குகளை அங்கே ஏத்தி வச்சுடலாம்.  எரிஞ்சு முடிச்ச  மண் அகல் விளக்குகள் எக்கச்சக்கமா ஸ்டேண்டு முழுசும் கிடக்கு.  கொஞ்சம் இடம் ஒதுக்கி நாங்களும் நம்ம விளக்குகளைக் கொளுத்தி வச்சோம்.


அங்கங்கே பைரவர்கள்  இருக்காங்க. சந்நிதிக்குள்ளில் கூட இவுங்க நடமாட்டம்தான்.  ஒருத்தர் தேங்காய் மூடியில் இருந்து  சுரண்டித் தின்றார். ப்ச்.... பாவம்....
'இன்றைக்கு ஞாயிறு என்பதால் சுலபமா தரிசனம் கிடைச்சது'ன்னார் பவன்.

இல்லைன்னா?  நேத்து மட்டும் வந்துருந்தோமுன்னா அவ்ளோதான். குறைஞ்சது அஞ்சாறு மணி நேரம் வரிசையில் காத்திருக்கணும்.
அப்படி என்ன ஸ்பெஷல் சனிக்கிழமைக்கு?  ஒன்னும் இல்லை. பலி கொடுக்கறநாள்.

ஐயோ....

 "செவ்வாயும் சனியும் இங்கே பலி கொடுக்கறதுக்குன்னே கூட்டம் வரும். பெரிய மிருகமா எருமை, வெள்ளாடு, செம்மறி ஆடு, சேவல், வாத்து இப்படி அஞ்சு மிருகங்கள் பத்ரகாளிக்கு பலி கொடுக்கும் வழக்கம். இப்பெல்லாம் எருமைப் பலி  கொடுக்கறதில்லை. ரொம்ப விலையாகிப் போச்சு.  மத்ததை எல்லாம் அவரவர் நேர்ந்துக்கிட்டுக் கொண்டு வந்து  பலி கொடுக்கறாங்க. வாத்து கூட அவ்வளவா இல்லை...  "

பவன் சொல்ல சொல்ல 'ஆ'ன்னு கேட்டுக்கிட்டு இருந்தேன்.
நல்லவேளை நேத்து வரலை..... ஆசுவாசம்தான். இதைக் கேட்ட பிறகு, அந்த ஏரியாவில் ஏதோ ரத்த வாசனை அடிக்கிறாப்போல ஒரு தோணல் எனக்கு.

  பலி கொடுக்கும் நாட்களில்  பகல் பனிரெண்டு வரைதான் வெட்டு. அதுக்குப்பிறகு  பகல் ஒரு மணி வரை சந்நிதியைச் சுத்தப்படுத்தும் வேலைதானாம். ரத்ததாகம்  மிக்கவளாமே இந்த பத்ரகாளி.

ஆங்....  இன்னொரு விஷயம்.... பலி கொடுக்கப்படும் மிருகங்கள் எல்லாம் ஆண்கள் தானாம்!   ஐ மீன்   ஆண் மிருகங்களாத்தான் இருக்கணுமாம்!
பலி கொடுத்த மிருகத்தை பலர் இங்கேயே சமைச்சுருவாங்களாம். அதுக்கான வசதிகள் இருக்கு. ஓ அதுதான்  ஒரு கட்டட வாசலில் விறகுகளைப் பிளந்து அடுக்கிக்கிட்டு இருந்தாங்க. வளாகத்தில் அங்கங்கே கட்டடங்கள்  இருக்கு. பக்தர்கள்  வந்து தங்கி செய்ய வேண்டியதைச் செஞ்சுட்டுப் போவாங்களாம்.  பலி கொடுக்கும் நாட்களில் காலை நாலரைக்கு  பலி ஆரம்பிக்குமாம். அப்ப மொதநாள் வந்து தங்கினால்தான் 'வேலை' முடியும்.
ரெண்டு பெண்கள், வரிசையாப் பிடிப்பிச்சு இருக்கும் பித்தளை அகல்களைத் தேய்ச்சு மினுக்கிக்கிட்டு இருந்தாங்க.  சரியா தேய்க்கிறாங்களான்னு  காக்கையார்  பார்த்துக்கிட்டு இருக்கார்.

நாம், வலப்பக்கம் போறோம்.  படிகள்  ஆரம்பிக்கும்  இடத்தில்   இடப்பக்கம்  மரச்சட்டங்களில்  மணிகளும், கயிறுகளுமாத் தொங்குது. எல்லாம் வேண்டிக்கிட்டுக் கட்டி விடுபவை.
படி ஏறுமுன் பத்ரகாளியை எட்டிப் பார்த்து  மனசுக்குள் கும்பிட்டேன். பலி எதுக்கும்மா? பாவம் இல்லையா அந்த உயிர்கள்?   ஒரு ஆள் சந்நிதித் தடுப்புக்குள் போய்  பூக்கள், சரிகைத்துணிகளை  எல்லாம் ஒதுக்கி வச்சுக்கிட்டு இருந்தார். பூஜாரியோ?
கீழே கிடக்கும் சிவன் மேல்  காளி ஒரு காலை   வச்சுக்கிட்டு,  சூலத்தை ஓங்கி சிவன் நெஞ்சைக் குறிபார்த்து    நிக்கற சிலைதானாம் தக்ஷின்காளி. பூக்கள் அலங்காரத்தில் ஒன்னும் தெரியலை. ஷிம்லா போகும் வழியில் உள்ள கல்கா என்ற ஊரில் இப்படி ஒரு காளியைப் பார்த்திருக்கேன். இதோட எஃபெக்ட்தான் போல பத்ரகாளிக்கு  ஆண் மிருகங்களை மட்டும் பலி கொடுப்பது! எதாவது செஞ்சே.... தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு.....   பெண்ணுரிமை?  
மேலேறிப்போனால்  அங்கே ஒரு சிவன் சந்நிதி.  திரிசூலமும் கமண்டலமுமா பத்மாசனத்தில்  அபய முத்திரை காட்டறார். அவருக்கும் ஒரு கும்பிடு போட்டுட்டு உத்ரவதி பாலத்து வழியாச் சுத்திக்கிட்டு, திரும்பவும் அந்த அம்பதறுவது படிகள் ஏறி வெளியே வந்தோம்.  படிகளில் அங்கங்கே யாசிப்பவர்கள் இருந்தாங்க. யாரையும் ஒன்னும் கேக்காம, தொந்திரவும் பண்ணாமல் சும்மா  உக்கார்ந்துருந்தாங்க.
அர்ச்சனைக்கூடைக் கடையில் ப்ளாஸ்டிக் பாத்திரத்தைத் திருப்பிக் கொடுத்தப்ப, அதில் இருக்கும் பிரஸாதங்களை ஒரு பையில்  போட்டு நம்மகிட்டே தந்துத்துட்டாங்க. அந்தக் கயிறுகளைக் கையில் கட்டிக்கணுமாம். உடனே ஒரு நாலு கயிறுகளை எடுத்து எங்க நாலு பேருக்கும் கொடுத்தேன்.  ரவி மட்டும், சட்னு கழுத்துலே கட்டிக்கிட்டார். நாங்கெல்லாம் கையில் :-)
வரிசையா தீனிக்கடைகள். என்னென்னவோ சுட்டு அடுக்கி இருக்காங்க. நானும் கெமெராக் கண்ணால் தின்னுட்டுக் கிளம்பினேன்:-)

தொடரும்........  :-)


8 comments:

said...

//சீக்கிரமா எழுந்து வலை மேய்ஞ்சுட்டு//

என்ன படிப்பீங்க? "எங்கள்" பக்கம் எல்லாம் வருவதுண்டா?

இறங்குமுகமாய் படிகளைக் குறிப்பிட்டுவிட்டு, ஏறுமுகமாய்ப் படம் போட்டிருக்கிறீர்கள்!!!

:))))

பலியா ஆ... ஆ...


said...

வாங்க ஸ்ரீராம்.

காலையில் வலைப்பக்கத்தில் தேடிப் படிக்க நேரம் இருக்காது. அப்போ கண்ணில் எது படுதோ அதை ஒரு பார்வை பார்த்துக்குவேன். முக்கியமா மெயில் பாக்ஸ் செக் பண்ணிக்கணும். அப்புறம் நாம் இருக்கும் ஊரில் இன்னும் என்னென்ன சுவாரஸியமான இடங்கள் பார்க்கணுமுன்னு தேடி, அங்கே போவதற்கான வழிகளையும், செலவாகும் நேரத்தையும் சுமாராக் கணக்கு போட்டு வச்சுக்குவேன். அப்புறம் எங்கூரு நியூஸ் பக்கம் போய் என்னன்னு ஒரு பார்வை. அம்புட்டுதான் :-)

இறங்கிப்போனா... பின்னே திரும்பி வரும்போது ஏறித்தானே ஆகணும்! படிகள் படம் என் கேமெரா. நாங்கள் இறங்கும்படம் என் செல் கேமெரா. பவன் எடுத்த படம் அது :-) இப்ப இறங்கி ஏறுனது சரி வருமே !!!

said...

"பலி எதுக்கம்மா"....
சங்கடமான விஷயம் தான்.
பதிவு விவரச்சுரங்கம் தான் .அருமை!!

said...

நாய் பெற்ற தெங்கம்பழம்னு ஒரு பழமொழி உண்டு. நாய்க்கு தேங்கா கெடச்சா அது அதை வெச்சு வெளையாடத்தான் செய்யும். திங்காதுன்னு. ஆனா நீங்க பாத்த நாய் தேங்காயக் கறண்டிக் கறண்டித் தின்னுருக்கே. நேபாள நாய்க்கு தமிழ்ப் பழமொழி தெரியாமப் போச்சே.

இந்தக் கோயிலைப் பத்திச் சொல்லும் போது இருக்கங்குடிதான் நினைவுக்கு வந்தது. வைப்பாறு கடந்து மாரியம்மன் கோயிலுக்குப் போகனும். அங்கயும் வெள்ளி செவ்வாய்னா பலி கொடுக்குற வழக்கம் உண்டு. அங்கயே சமைச்சுச் சாப்பிட்டுட்டு வந்துருவாங்க. சின்ன வயசுல நிறைய போயிருக்கேன்.

அந்தக் காலத்துல எல்லாக் கோயில்கள்ளயும் பலி இருந்திருக்கு. ஆதிசங்கரர் காலத்துலதான் பலி கொடுக்குறது மாற்றப்பட்டதுன்னு கேள்விப்பட்டேன். பலி கொடுக்காட்டியும் பல கோயில்கள்ள பலிபீடம் இருக்குறதுக்கு இதுதான் காரணம்.

பூசைப் பொருளை வாங்கும் போதே கை கழுவ தண்ணி ஊத்துற வழக்கம் நல்லா இருக்கே. இலங்கைலயும் இந்த மாதிரி பிளாஸ்டிக் தட்டுகள்ளதான் பூசைப் பொருளெல்லாம் வெச்சுக் கொடுக்குறாங்க.

said...

வாங்க சசி கலா.

எங்கே ரொம்பநாளா ஆளையே காணோம்?

நலமா?

said...

வாங்க ஜிரா.

எல்லாம் பசிக் கொடுமைதான்.... ஃபிஜியில் கூட இப்படி தேங்காய் தின்னும் நாயைப் பார்த்துருக்கேன்.... ப்ச்....

பலி.... மனசுக்கு திக்ன்னு இருந்துச்சு, கேக்கும்போதே....

கோவில் அர்ச்சனைத் தட்டுக்கு முந்தியெல்லாம் மூங்கில் கூடை கொடுப்பாங்க நம்ம பக்கங்களில். காலப்போக்கில் எல்லாம் ப்ளாஸ்டிக்காப் போயிருக்கே.... :-(

said...

பார்க்காத கோவில். நல்லா இருக்கு. ஏகப்பட்ட கோவில்களுக்குச் செல்லும் வாய்ப்பை உண்டாக்கிக்கொண்டிருக்கிறீர்கள்.

ராகவன் சார் சொல்வது சரிதான். அந்த ரத்தப் பலியை நினைவுகூறும் விதமாகத்தான் இப்போது, பலிபீடங்களில் (முன்பு?) சாதமும் ஆரத்தியும் சேர்ந்தது (சிவப்பு வெளுப்பு) படைப்பார்கள். தற்காலங்களில் இது வெறும் சாதமாக ஆகிவிட்டது.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ஒரு இடத்துக்குப் போகும்போது கூடுதல் நேரம் இருந்தால் அக்கம்பக்கம் இருக்கும் விசேஷங்களையும் பார்த்துடணும். அதுக்குன்னு தனியா ஒரு நடை கிளம்பிப்போக முடியுதா?

முக்திநாத் தயவால் ரெண்டு முழுநாள் நமக்கு லபிச்சுருக்கு. அங்கே தரிசனம் போன உடனே கிடைச்சதுதான் அவர் கருணை.

நினைக்காத இடங்கள் நிறையப் பார்த்தது மனசுக்கு மகிழ்ச்சிதான்!

கோவில் பலிபீடம்.... நீங்க சொல்றது ரொம்பச் சரி!