Monday, April 17, 2017

ஜல் பிநாயக் மந்திர் ( நேபாள் பயணப்பதிவு 30 )

வ வராதுன்றதை மறந்துறாதீங்க :-) கார்க்கோடக் தடாகத்துலே இருந்து கிளம்பின பத்தாவது நிமிட்  ஒரு பாலத்துக்கு  பக்கத்துலே வண்டியை நிறுத்தினார் ரவி. பாலம் உடைஞ்சுருக்கோன்னு ஒரு விநாடி பயந்துட்டேன். நமக்கு வலப்பக்கம் இருக்கும் மேட்டில் ஏறிப்போக ஆரம்பிச்ச பவனை தொடர்ந்து  நாங்களும் போறோம்.  இரும்புக் கம்பிப் பாலம் ஒன்னு வா ன்னு கூப்பிடுது.  பாலத்து வழியா நடந்து அந்தாண்டை போகனும்.

கீழே  ஹோன்னு  இரைச்சலோடு தண்ணீர் பாயுது! ரெண்டு மலைகளுக்கு நடுவில் இடுக்கிலே பாயும் தண்ணீர்.   பாக்மதி ஆறுதான்!


இங்கிருந்து  ரோடுப் பாலம் பார்த்தால்.... வர்ற வண்டிகள் எல்லாம் கொஞ்சம் நின்னு வேடிக்கை பார்த்துட்டுத்தான் போகுது.    ரோடுப்பாலத்துக்கு அந்தாண்டை கீழே  ஒரு  பகோடா ஸ்டைல் கோவில்.  அங்கேதான் நாம் போகப்போறோம். ஆனா அதுக்கு முன்னால் கொஞ்சம் இயற்கை காட்சிகளை ரசிக்கன்னு நம்மை இங்கே கொண்டுவந்தாராம் பவன் :-)  ஓ.....

இந்தத் தொங்குபாலத்துலே கட்டி இருக்கும் பிரார்த்தனைக்கொடிகளும், மஞ்சள் துண்டுகளும்(!) பௌத்தம் சம்பந்தமாச்சேன்னு நினைச்சுக்கிட்டே  பாலம் கடந்து போய் அங்கிருக்கும் சின்னக் கட்டடத்துக்குள் போனோம். சின்னக்குன்றில் மஞ்சுஸ்ரீ பார்க்ன்னு  எழுத்துகள்.   பார்க் உள்ளே போய்ப் பார்க்க ஒரு சின்னக் கட்டணம்.
காத்மாண்டு பள்ளத்தாக்கு  ஒரு காலத்துலே தண்ணீர் நிரம்பிய  பெரிய நீர்ப்பரப்பா இருந்துச்சுன்னும்,  மஞ்சுஸ்ரீ பகவான் (புத்தர் அவதாரம்)  சுத்தி இருந்த மலைகளில் ஓரிடத்தை கைநகத்தால் கீறி தண்ணீரை வடியவிட்டார்ன்னும்  ஸ்வயம்பூ கோவிலில் பார்த்த  புத்த பிக்ஷூ சொன்ன கதைப்படி,  மலையைக் கீறிவிட்ட இடம் இதுதான்.  அந்தத்  தண்ணீர் வடிஞ்சுதான் பாக்மதி நதியா ஓடிக்கிட்டு இருக்கு.  புராணக் கதைன்னாலும் ஒரு இடத்துக்கும் இன்னொரு இடத்துக்கும் சம்பந்தப்படுத்தி இருப்பது ரசிக்கவேண்டிய விஷயம்தான். அப்போ அப்படி செய்யலைன்னா... இன்னிக்கு நோ காத்மாண்டு, நோ காத்மாண்டு பள்ளத்தாக்கு!

 மஞ்சுஸ்ரீ குகை ஒன்னு  இங்கே இருக்காம். ஆசியாவின் நீண்டு போகும் பெரிய குகைகளில் இது  ஒன்னு. ஒன்னேகால் கிலோ மீட்டர் உள்ளே போகுதாம். இதுக்குள்ளே போக  ஒரு ஆளுக்கு ஆயிரம் நேபாளி ரூபாய் சார்ஜ். தலையிலே  போட்டுக்கும் லைட் ஒன்னு தருவாங்களாம். இல்லேன்னா இருட்டுலே எப்படி?  உள்ளே அஞ்சு விதமான வழிகளும், ரெண்டு குளங்களும் இருக்காம். ரொம்ப  சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா....  குகை மேலே முடியும் பகுதிக்குப்போனா  எவரெஸ்ட் தெரியுமாம்!!!!
டிக்கெட் கவுண்ட்டர் அம்மிணி, மக்காச்சோளத்தை உதிர்த்துப் போட்டுக்கிட்டே விவரம் சொன்னாங்க. பக்கத்துலே  இருந்த படங்களைப் பார்த்துட்டு, ஜகா வாங்கிட்டேன்.  குகைக்குள் இறங்கிப்போகப் பொருத்தமான காலணி போட்டுக்கலைன்னு  சொல்லி வச்சேன் :-)
விஷப்பரீக்ஷை   என்னால் முடியாது. யூட்யூபிலே ஹிமாலயாஸ், எவரெஸ்ட்  பார்த்தால் ஆச்சு.
இந்தத் தொங்குப்பாலத்துக்கு வயசு இப்போ 110.  கோயிங் ஸ்டெடி!   நேபாள தேசத்தில்  கட்டுன முதல் தொங்கு பாலமே  இதுதானாம்!

தொங்குபாலத்தைக் கடக்காமலே அந்தப்  பக்கம்  சாலைக்குப்போகவும் வழி இருக்கு. அதுலே இறங்கி சாலைக்கு எதிர்ப்பக்கம் இருக்கும் சரிவிலே இறங்கிக் கீழே போனால்  ஜல்பிநாயக் கோவில் வாசல்.
கோவில் வளாகத்துக்குள்ளே போறோம். வெளியே பெரிய மாளிகை மாதிரி இருக்கு!  வெளி முற்றம் கடந்து வாசலுக்குள் போறோம். தரையில் அங்கங்கே சிவலிங்கங்கள்.



நடுவில் ஒரு மூணு நிலைக் கோவில்.  வாசலில் ரெண்டு பக்கமும் த்வார சிங்கங்கள். பாவம்  பேசமுடியாம நாக்கை வெட்டிப் போட்டுருக்காங்க யாரோ  :-(
கோவில்மணிகளுக்குக் குறைவொன்றுமில்லை.  சந்நிதிக்கு நேரெதிரே பெரிய மூஞ்சூறு!  பித்தளை. சிகப்பு சரிகைத்துணி போர்த்திக்கிட்டு ஒரு பீடத்துலே உக்கார்ந்துருக்கு!





சந்நிதிக்குள்ளில்  'ஜல விநாயகர்' உக்கார்ந்துருக்கார்.  கிட்டே போய் நின்னு கும்பிட்டுக்கலாம். ஸ்வயம்புவாம்.  புள்ளையார் தோற்றம் பளிச்ன்னு இல்லைதான். பிடிச்சு வச்ச புள்ளையாராட்டம்தான் இருக்கார்.


விசேஷநாட்களில் தலைக்குத் தங்கக்ரீடம் சார்த்துவாங்களாம்.  இன்றைக்கு ஒரு விசிறித் தலைப்பாகையுடன் இருக்கார்.
நாங்க சந்நிதியில் கும்பிட்டுக்கிட்டு இருக்கும்போதே இன்னொருத்தரும் வந்து  சேர்ந்தார். உள்ளூர்காரர் போல!  இங்கே இருக்கும் நாலு விநாயகர்களில் இவர்தான் மூத்தவராம். கோவில்வகையில் வச்சுருந்த தகவல் போஸ்டர் சொல்லிய சேதி.
இங்கே நேபாளத்துலே நாலு என்ற எண் விசேஷம் போல.  நாலு காளி, நாலு நாராயண், நாலு புள்ளையார் இப்படி எல்லாம் நவ்வாலு!  இந்த ஜல்பிநாயக் தவிர மற்ற மூணு பேர் கார்ய பிநாயக், சூர்யபிநாயக், சந்த்ரபிநாயக்.  இவுங்க நால்வர் இல்லாம இன்னும் ஆறேழு புள்ளையார்கள்  முக்கியமானவங்களா இருக்காங்களாம். அஷோக் பிநாயக், ரக்த பிநாயக், கமல் பிநாயக்ன்னு ........  பேசாம இந்த  நாலைப் பனிரெண்டாக்கிட்டா   டஸன் கண்பதின்னு  நல்லாத்தான் இருக்கும். நம்ம பக்கங்களில் நாலை விட அஞ்சுதான் அதிகம், இல்லே?  பஞ்ச நரசிம்மர்கள், பஞ்ச நாராயணர்கள், பஞ்ச க்ருஷ்ணர்கள்ன்னு....  ஒரே பஞ்சம்தான் :-)

புள்ளையார் இங்கே  ஆதிகாலம் முதலே இருக்கார்.  எட்டாம் நூற்றாண்டு ஆரம்பத்துலே இருந்து, இவரைக் கண்டுபிடிச்சுக் கும்பிட ஆரம்பிச்சுருக்காங்க. அப்புறம் பதினேழாம் நூற்றாண்டு ஆரம்பத்துலே   ஒரு கோவில் கட்டி இருக்கார், அப்போ ஆட்சியில் இருந்த  மல்லா அரசர்  ஷிவா ஸிங் மல்லா.  அதுக்குப்பிறகு ஒரு நூத்தியம்பது வருசம் கழிச்சு  மறுபடி கோவிலைப் புதுப்பிச்சுக் கட்டியவர் ராஜ்ய ப்ரகாஷ் மல்லா என்ற அரசர். மல்லா அரசர்கள் காலத்துலேதான்  ஏகப்பட்ட கோவில்கள் கட்டி இருக்காங்க.

சந்நிதியைச் சுத்தி உள்ப்ரகாரத்துலே வலம் வர்றோம். எட்டு பைரவர்களும் எட்டு மாத்ரிகாக்களும்(அஷ்ட பைரவர், அஷ்டமாதாக்கள்)இருப்பதாக போஸ்டர் சொல்லுச்சேன்னு  தேடுனதில்  சிலர் கிடைச்சாங்க.  கோவிலில் விசாரிக்கலாமுன்னா பூஜாரி இல்லை. அவருடைய ஃபோன் நம்பர் எழுதி ஒட்டி இருக்காங்க.


இப்பவே மணி பகல் பனிரெண்டரை தாண்டியாச்சு. இதுக்கு மேலே கூப்பிட்டுத் தொந்திரவு செய்யணுமான்னு  இருந்துட்டோம்.
சந்நிதியில் கோவில் பூனை ஒன்னு, உக்கார்ந்துருக்கு. பார்த்ததும்  நம்ம ரஜ்ஜு நினைவு வந்துருச்சு. பாவம்.... குழந்தை எப்படி இருக்கானோ?


 விட்டுட்டு வந்து இப்போ ஒரு வாரம்தானே ஆகி இருக்கு. ஒருவழியா செட்டில் ஆகி இருப்பான். பழகுன இடம்தானேன்னு மனசைத் தேத்திக்கிட்டோம்.

  பகோடா ஸ்டைல் கோவில்களில் நாலு வாசல் இருக்குன்னாலும் மற்ற மூணு வாசல்கள் திறக்கும் முறையில் இல்லை.  சந்நிதிக் கதவு கூட, கோவில் வாசக்கதவு போல இல்லாமல் கேட் போட்டாப்படி இருக்கு.  ஒரு    வாசல் வெராந்தாவில்  விஸ்வகர்மா இருக்கார்!
கோவிலைச் சுத்தி வந்தப்ப இன்னொரு வாசல் வெராந்தாவில்  ஒரு பெரிய பாறைக்குள்ளில் சிவலிங்கம் ஒன்னு குங்கும அபிஷேகம் செஞ்சுருக்கறாப் போல!  அப்போ அங்கே வந்த சிலரில் ஒரு பெரியவர், அந்தப் பாறையில் ஒரு விசேஷம் இருக்கு. முதுகுவலி இருக்கறவங்க, ஷிவ்ஜியை வேண்டிக்கிட்டு,  அவுங்க முதுகு  அந்தப் பாறையில் படும்படி சாய்ந்து மேலே கோபுரம் பார்த்துக் கும்பிட்டால் வலி போயிரும்னு சொன்னார்.

அதான் நமக்கு இருக்கும் ஏகப்பட்ட வலிகளில் முதுகுவலியும் இருக்கே!
 சாய்ஞ்சுக்கிட்டுச் சொன்னபடி செஞ்சேன்.
மேலே  இருக்கும் மரச்சிற்பங்களில்  விதவிதமான பிள்ளையார்களும், அவருக்குக் கீழே  பாலியல் சிற்பங்களுமா இருக்கு!  ஒருவேளை அதைக் கவனிக்கத்தான் முதுகுவலி கதை பண்ணி இருப்பாங்களோ?

கோவில் கட்டடம் முடியும் பகுதியில் பாக்மதிக்குப் போகும் பெரிய படித்துறைகள் இருக்காம்.  நிலநடுக்கம் காரணம்  அங்கே கொஞ்சம் சேதம். ரிப்பேர் வேலைகள் நடப்பதால்  அங்கே போக முடியலை.  இந்தப் பக்கமா வெளியில் சுத்திக்கிட்டு  பாக்மதியை தரிசிக்க முடியும். கொஞ்சம் சரிவும், மேடுமா இருக்கும் ஒத்தையடிப் பாதையில் போகணும். போனோம்...

நாகர்கள் இருக்காங்க. ஊருக்கு மழை வர்றதுக்கு  இவுங்கதான் காரணமாம்.   ஊரைவிட்டு  வெளியேறிப்போயிட்டா  மழை பொய்த்துப் போகுமாம். நம்ம ஜல்பிநாயக்தான் இவுங்களை இங்கேயே இருக்க வச்சுக் காவல் காக்கறாராம்!
இங்கிருந்து பார்க்கும்போது மலையிடுக்கில் பாயும் பாக்மதியும்,  ரோடு பாலத்தின் அடிவளைவும்  அருமை!
மணி  இப்பவே பகல் ஒன்னு ஆகப்போகுது.  கிளம்பலாம்.....

தொடரும்.......... :-)

PIN குறிப்பு:  நம்ம பவன் எடுத்த படங்கள் பல, இந்தப் பதிவில் இருக்கு :-)


12 comments:

said...

ஜல் பிநாயக்... அழகான இடமாகத் தெரிகிறது! படங்கள் மூலம் நாங்களும் அங்கே சென்ற உணர்வு.

தொடர்கிறேன்.

said...

இந்தப் பதிவோட சிறப்பே ஜோடிப் போட்டோதான். சுத்திப் போட்டுருங்க. அட்டகாசம்.

மஞ்சுன்னா என்ன பொருள்? தமிழ்ல மேகம்னு ஒரு பொருள் இருக்கு. மஞ்சு நிகர் குந்தளம்னு பாட்டிருக்கே.

நானும் அந்தக் குகைக்குள்ள போக மாட்டேன். எனக்கு அடைச்சாப்ல இருந்தா படபடப்பு வந்துரும். லேசா வானம் தெரிஞ்சிக்கிட்டேயிருக்கனும்.

படங்களைப் பாக்குறப்போ அந்த எடத்துக்குப் போகனும் போல இருக்கு. எப்பக் கொடுத்து வெச்சிருக்கோ!

said...

நேரமும் முயற்சியும் எடுத்து நிறைய இடங்களுக்குப் போயிருக்கீங்க. ரொம்ப சந்தோஷம். கோவில் படங்கள் அருமையா இருக்கு. நானும் உங்களோடேயே பிரயாணம் செய்த உணர்வு.

பாக்மதி ஆறு, பார்க்கவே அட்டஹாசமா இருக்கு.

முதுகுவலி போயிடுத்தா (அல்லது கழுத்துவலி வந்துடுத்தா?)

said...

தேதி பதிவான படங்களெல்லாம் பவன் எடுத்ததா இருக்கும். நன்றி.

said...

எவ்வளவு அருமையான இடங்கள்... உங்கள் (கேமிரா) கண் வழியே எங்களுக்கும் பார்க்கும் வாய்ப்பு.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நல்ல அழகான இடம்தான். நின்னு ரசிக்க ரொம்ப நேரம் இல்லாமல் போச்சு.

said...

வாங்க ஜிரா.

சுத்திப்போடணுமா? ஹாஹா

நம்ம மஞ்சுவுக்கும் அவுங்க மஞ்சுவுக்கும் வித்யாசம் இருக்காதா? :-)

சின்ன வயசுதானே. கட்டாயம் இங்கெல்லாம் போகத்தான் போறீங்க!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

சாமியே நம்பிக்கைதான். முதுகுவலி அப்படி சட்னு போயிருமா என்ன? :-)

பாக்மதி இந்த இடத்துலே ஜோரா இருக்கு!

said...

வாங்க விஸ்வநாத்.

பவன் இருக்கும் படங்கள் எல்லாம் பவன் எடுக்கலை :-)

நம்ம கெமெராவில் ஸோனி, டேட் போடும். கேனன் டேட் போடாது :-)

said...

வாங்க ஸ்ரீராம்.

தக்ஷிண்காளியில் கெமெரா கீழே விழுந்ததில் இருந்து லென்ஸ் கவர் முழுசுமா திறக்கறதில்லை. கவனிக்கும்போது கையாலே தள்ள வேண்டி இருக்கு. நாந்தான் கவனிக்க மறந்துபோறேன் அடிக்கடி :-(

said...


மலையிடுக்கில் பாயும் பாக்மதி....தெளிவா இருக்கு ...அழகு

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

ஆமாம்ப்பா !