Friday, April 15, 2016

பத்துக்கு அஞ்சுன்னா பாஸா... இல்லே ஃபெயிலா? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 21)

இந்தப் பயணத்துலே ஆந்த்ராவரை  வந்ததே...  அஹோபிலம் போய் தரிசிக்கணும் என்பதால்தான்!  இன்றைக்கு அங்கேதான் போகப்போறோம். இங்கே போகணுமுன்னு திட்டம் போட்டதும் கூகுளாரைச் சரணடைஞ்ச நம்மவர்,  நேரப்போனால் ஏழரைன்னு போட்டுருக்கு. இந்தக் கணக்கெல்லாம்  இந்தியாவுக்கு ஆகாது. எப்படியும் ஒன்பது மணி நேரமாகும். ஒருநாளில் அவ்ளோதூரம் சீனிவாசனை வண்டி ஓட்ட வைப்பது சரி இல்லை.

எங்கியாவது ஒரு ப்ரேக் போட்டு ஒரு நாள் தங்கிட்டுப் போகலாமுன்னார்.
என்னென்ன வழின்னு பார்த்தால் திருப்பதி போய்த் தங்கிடலாம்னு  சொன்னதும்,  எனக்கு ஸ்ரீநிவாசனைப் பார்க்க வேணாம். அதுக்கு பதிலா இந்த  சுருட்டபள்ளி பார்க்கலாமே.... அப்படியே  காளஹஸ்தின்னு இழுத்தேன்.

இன்னொருக்கா கூகுள் மேப்புக்குள் நுழைஞ்சவர், சுருட்டபள்ளி, காளஹஸ்தி ரெண்டும் பார்த்துட்டுத் திருப்பதி நைட் ஸ்டேன்னார். அங்கிருந்து காலையில் கிளம்புனா நாலரை மணி நேரம்.  நமக்கு எப்படியும் ஆறுமணி நேரமாகிரும். அதுலே கொஞ்சதூரம் மலைப்பாதையில் போகணுமுன்னு  இருக்கு.
அஹோபிலத்தில் தங்கும் இடங்கள் எப்படி இருக்குமோ?  வலையில் தேடுனால்  அப்படி ஒன்னும் சரியா ஆப்டலை. பேசாம வழியில் ஒரு நகரத்தில் தங்கிக் காலையில் எழுந்து மலை ஏறலாமான்னு யோசனை.

கடப்பாவா இல்லை நந்தியாலான்னு  தங்குமிடத்தைத் தேடுனதில் கடப்பாவே இருக்கட்டுமுன்னு முடிவு செஞ்சுட்டோம். போற வழியில் வொண்ட்டிமிட்டா ராமரைக் கண்டுக்கலாம்.

அதைப்பற்றி வீட்டில் பேசுனபோதுதான் திருப்பதி மலைக்குப் போகலைன்னா பேசாம  ஸ்ரீநிவாசமங்காபுரம் போயிடுன்னு அண்ணி சொன்னாங்க.

கடப்பான்னு முடிவு செஞ்சதும் நல்லதாப் போச்சு. வழியில் நமக்கு எதிர்பாராத அனுபவங்கள்!
காலையில் ஒரு எட்டேகாலுக்குக் கிளம்பிடலாம்னு சொல்லி அதேபோல் சீக்கிரம் எழுந்து கடமைகளை முடிச்சுட்டு, இங்கே தரும் ப்ரேக்ஃபாஸ்ட்டுக்குக் காத்திருக்க வேணாமுன்னு  வெளியில் சாப்பிடப் போனோம். 'மானஸா த்வார்க்கா'ன்னு ஒரு  ரெஸ்ட்டாரண்ட்.  இட்லி வடை காஃபி.  பக்கத்துலே இருந்த பூக்கடையில் கொஞ்சம் கனகாம்பரம். ரொம்ப மலிவு. முழமே அஞ்சு ரூபாய்தான்! இந்தப் பக்கங்களில்  நிறைய பூக்குதோ என்னவோ......

எட்டேகாலுக்குக் கிளம்பிட்டோம்.  டோல் ரோடில் போறோம். கர்நூல், ஹைதராபாத் சாலை.  வழியெல்லாம் விவசாயம் நடக்குது.  சோளம் போட்டுருக்காங்க. அங்கங்கே  கோவில்கள்  இருந்தாலும்  எல்லாமே ராமர் கோவில்கள்தான்.

ஒன்னேகால் மணி பயணத்துலே அல்லகெட்டா என்ற ஊருக்குப் பிரியும் சாலையில் நுழைஞ்சோம்.  வாசலில் ஒரு பெரிய அனுமன், பாவமா இருக்கும் நவகிரஹங்கள், கோவில் முகப்பில் சிவன் இப்படி  ஒன்னைப்  போற போக்கிலே க்ளிக்கினேன். சரியா வரலை:-(
அல்லகட்டா - அஹோபிலம் ரோடு, நரசபுரம் வழியாப் போகுது. இங்கே லக்ஷ்மிநரசிம்மன் கோவில் இருக்குபோல! அலங்கார வளைவு சொல்லுதே! இருக்கட்டும், நாம்தான்  இப்போ   நவநரசிம்மரையும் தரிசிக்கப் போய்க்கிட்டு இருக்கொம்ல.
ரோடு ரொம்ப சுமார்.  செம்மண்பூமி.  பஸ் போகும் ரோடுதான்.  இது ரெகுலர் சர்வீஸ் போல.  இதைத்தவிர  தனியார் வண்டிகள்  நடமாட்டம் அதிகம்.

கடப்பா விட்டுக் கிளம்பின  ரெண்டேகால் மணி நேரத்துலே,   பாவனா கெஸ்ட் ஹௌஸ் போர்டு கண்ணில் பட்டதும் ஊருக்குள்ளே வந்துட்டோமுன்னு  கவனிச்சால் ஆந்த்ரப்ரதேஷ் டூரிஸம் ஹொட்டேல்.  ஆன்லைன் புக்கிங் இருக்குன்னு போர்டு சொல்லுதே!

அங்கே போய்  என்ன ஏதுன்னு விசாரிக்கலாமுன்னு  வண்டியை நிறுத்தும்போதே, டூவீலரில் வந்த   இளைஞர் ஒருவர்  என்னன்னு நம்மிடம் கேட்டதும்...  கைடு கிடைப்பாங்களான்னு.... சொல்லும்போதே நானும் இங்கே கைடுதான் என்றார்.

அதி ஏமிட்டி பழமொழி.... பழம் நழுவி பாலில் விழுந்துச்சுன்னு....

"ஒரு நாளில் பார்க்க முடியுமா?  முடியாதுன்னா  இங்கே ரூம் கிடைக்குமான்னு பார்க்கணும் "

"ஒரே நாளில் பார்க்க முடியாது. நீங்க காலையில் ஒரு ஆறுமணிக்கு வந்துருந்தால்  ஒருமாதிரி சமாளிச்சு இருக்கலாம். சாயங்காலம் மலைமேலே போறது அவ்வளவா நல்லதுல்லே. கோவில்களையும்  அஞ்சு அஞ்சரைக்கு  மூடிருவாங்க"

 "சரி. இப்ப என்ன செய்யலாம் சொல்லுங்க"

"ஒரு மூணு கோவில்களுக்கு  ஜீப்பில் போகணும். ரொம்ப கரடுமுரடான வழி. முதுகு வலி  இல்லாமல் இருந்தால் அங்கே போகலாம்"

நமக்கு முதுகுவலி இருக்குன்றதை எப்படி டக்னு கண்டுபிடிச்சாரோ! ஆக்ஸிடெண்ட் ஆன முதுகு.  ரிஸ்க் எடுக்கணுமா?  நம்மவர்  'காரில்  போகக்கூடிய கோவில்கள் மட்டும் போகலாமா'ன்னு என்னிடம் கேக்கறார்.

"மலைப்பாதையில்  நாலு கோவில்களுக்குக் காரில் போயிடலாம். ஒரு கோவிலுக்கு மட்டும் கொஞ்சம் படிகள் வழியா ஏறிப் போகணும். அஞ்சாவதா  கீழே இருக்கும் கோவிலுக்கும் போகலாம்."

"அப்ப எட்டு கோவில்கள் போச்சுன்னா மீதி ஒன்னு எது?  ஹிரண்யன் காமிச்ச தூணா? அந்த உக்ர ஸ்தம்பம்?"

"இல்லீங்க.   அது ஏற ரொம்பவே கஷ்டம்.  அங்கே  ரெண்டு கோவில்கள் இருக்கு. மொத்தம் மலைமேல் ஒன்பது  கீழே ஒன்னுன்னு  பத்து.  அதுலே சிரமம் இல்லாமப் போகக்கூடியது அஞ்சு கோவில்கள்"

"இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ளே   அந்த  அஞ்சையும் பார்த்துற முடியுமா?"

"தாராளமா....  அவ்ளோ நேரம் கூட ஆகாது. ராத்ரி தங்கணுமுன்னா  ரூம் ஏற்பாடு செஞ்சுறவா? "

நம்ம உடம்பு இருக்கும் லக்ஷணத்தில்  ரிஸ்க் எடுத்துக்க முடியாது என்பதால் எவ்ளோ கிடைக்குதோ அது ....  (அடடா... என்ன ஒரு பெருந்தன்மை !!!!)  நோகாம நோம்பு கும்பிடறவளாச்சே :-)

"ரூம் வேணாங்க.  தரிசனம் முடிச்சுட்டுக் கிளம்பிருவோம். ஆமாம்... உங்க கைடு சர்வீஸுக்கு எவ்ளோ சார்ஜ்னு சொல்லுங்க....."

ஒரு விநாடி யோசிச்சவர், 'அஞ்சு கோவிலுக்குக் கூட்டிப்போறேன். ஐநூறு' என்றார்.  'ஓக்கே. எங்க வண்டியிலே வாங்க'ன்னதும் ' நான் உள்ளே போய் ஆஃபீஸில் சொல்லிட்டு வந்துடறேன்'னு  டூவீலரை வளாகத்துக்குள் கொண்டுபோய் நிறுத்திட்டு  டூரிஸம் ஆஃபீஸுக்குள் போனவர் ரெண்டேநிமிசத்தில் வந்து நம்ம வண்டியில் ஏறிக்கிட்டார்.

ஓரளவு நல்லாவே இங்லீஷ் பேசறதால் நமக்கு நல்லதாப் போச்சு. லெஃப்ட், ரைட் எல்லாம் சொல்லச் சொல்ல நம்ம சீனிவாசன் அதை ஒழுங்கா ஃபாலோ செஞ்சார்.

இங்கே மலைமேல்  ஒன்பது நரசிம்மர்கள் இருக்காங்க.  நவநரசிம்ஹர்கள்!  இந்த ஒன்பது நரசிம்மரும் ஒன்பது நவகிரகங்களுக்கு அதிபதியாக இருக்காங்க. நம்ம திருநெல்வேலிப்பக்கம் நவதிருப்பதிகளில் பெருமாள் எப்படி ஒவ்வொரு கிரகங்களுக்கு அதிபதியா இருக்காரோ அப்படித்தான் இங்கேயும்!

நம்ம நவதிருப்பதி யாத்திரை இங்கே. ஒரே நாளில் ஒன்பதும் ஆச்சு. கூடவே ஒரு போனஸ் கிடைச்சது:-)  ( நாலே (!!)பதிவுதான். நூல்பிடிச்சுப்போகணும்)

இந்த மலையே முன்னொரு காலத்தில் ஹிரண்யகசிபுவின் அரண்மனையாக இருந்துருக்கு! அந்த யுகம் முடிஞ்சதும் இடிபாடுகள் எல்லாம்  அடுத்த யுகத்தில்  மலையா ஆகி இருக்கோ!

பெரிய ஆதிசேஷன் கிடந்தாப்லேதான் இந்த மலைத்தொடர்கள்.  தலை திருப்பதி, உடல் அஹோபிலம், வால் ஸ்ரீசைலம்!

முதல்லே போனது சத்ரவட ந்ருஸிம்ஹர் கோவில். விதவிதமான வடைகள் சாப்பிட்டுருக்கோமே.   இந்த சத்ரவட தின்னு பார்க்கலையேன்னு தோணுச்சு. நம்ம வடை வேறு இந்த வட  வேறுன்னு புரிஞ்சது கோவிலுக்குள் போனதும்:-)




சின்னக்கோவில்தான். நம்மூர் புள்ளையார் கோவில் சைஸ்தான்!  சத்ர என்றால் குடை. வட என்றால்  ஆலமரம்!  ஆலமரம் குடை பிடிக்குதாம். ஆலமரத்தின் கீழ் இருக்க, இவர் நாட்டாமையோ?

நம்ம எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே ஹிரண்யன், பிரஹலாதன் சமாச்சாரம், இல்லையோ? அவனை  வாசப்படியில் வச்சு வதம் பண்ணிட்டு அந்தக் கோபமும் ஆவேசமும் அடங்காம உடல் துடிக்க இருந்தப்ப எல்லோரும் அவரை நெருங்க பயப்படறாங்க.  லக்ஷ்மியே பயப்பட்டாளாம். அப்பதான் யோசனை தோணி,  மெள்ள சின்னப்பையன் பிரஹலாதனை  முன்னாலே தள்ளி நிறுத்துனாங்களாம்.
குழந்தையைப் பார்த்ததும் கோபம் வடிய ஆரம்பிச்சது. இவனுக்காகத்தானே இந்த அவதாரமே எடுத்தது, இல்லையோ! சட்னு குழந்தையைத் தூக்கி மடியில் வச்சுக்கறார்.

அச்சச்சோ....  ஹிரண்யனை மடியில் கிடத்தி வயித்தைக் கிழிச்சதால் ரத்தம் தெறிச்சு குளமாகி இருக்காதோ....அதுவும் பிரமாண்டமான உருவம் உள்ள அசுரனாச்சே!

அப்புறம் போய் கை அலம்பிக்கிட்டு, கொஞ்சம் கொஞ்சமா சாந்தமாகி இங்கே மரத்தாண்டை வந்து உக்கார்ந்துருப்பார் போல!  காந்தர்வர்கள், கின்னரர்கள் எல்லோரும் இங்கே கூடி  இசைக்கச்சேரி  வச்சு  ஆஹா ஊஹூன்னு  நிகழ்ச்சியை நடத்துனதும்  கொஞ்சநஞ்சமிருந்த கோபம் போய் முகத்தில் சிரிப்பு வந்துருக்கு!
இந்த ஆஹா ஊஹூவும் காந்தர்வர்கள் டீமுக்கு லீட் ஸிங்கர்ஸ் போல!  அவுங்க ரெண்டுபேரையும் கோவில்  முகப்பு மண்டபத்தில் நரசிம்ஹருக்குப் பக்கத்துக்கொன்னா வச்சுருக்காங்க. பறந்துபோக றெக்கைகள் இருக்கு:-)
மத்தபடி  ரசிச்சுப் பார்க்கும்படியா சிற்பங்கள் ஒன்னுமில்லை. தீப ஆரத்தி,  தட்டில் தக்ஷிணை அத்தோடு சரி. விஸ்தாரமான  பூஜை எல்லாம் காலம்பற கோவில் திறக்கும்போது பண்ணுவாங்களாம். கருவறை கொஞ்சம் இருட்டாத்தான் இருக்கு. ஆலமரத்தைக் காணோம். முந்தி இருந்துருக்கும். இப்போ கட்டடம் கட்டிக் கோவிலா பண்ணியாச்சில்லையா?
நல்ல சகுனம்தான் நமக்கு. முதலில் சந்தோஷ நரசிம்மரை தரிசனம் பண்ணி இருக்கோம்.   இவர் கேது கிரகத்துக்கு அதிபதி!


அடுத்துப்போனது  யோகானந்த  ந்ருஸிம்ஹர். இந்தக் கோவில் கொஞ்சம் சின்னதுதான்.  நாம் போன  சமயம்  மண்டபத்தில் சந்நிதிக்கு முன்னால் ஒரு சின்னக்கூட்டம். இருவது பேர் இருக்கலாம். ஒரு  ஆன்மீகக்குழுவின் தலைவர் தன் பக்தர்களோடு வந்துருக்கார் போல!
அவர் என்னமோ பிரசங்கம் பண்ணிக்கிட்டு இருக்க, அவரின் பக்தர்கள் அவரைச்  சுத்தி உக்கார்ந்துருந்தாங்க. நாங்க ஒரு ஓரமாப்போய் யோகானந்தரை தரிசனம் செஞ்சுக்கிட்டோம். காலை மடிச்சுப்போட்டு சின்ன ஆசனத்தில் உக்கார்ந்துருக்கார்.
பிரஹல்லாதனுக்கு  யோகம் சொல்லிக் கொடுத்த யோகா டீச்சர்!  இவர்தான் இங்கே சனைச்வரனுக்கு  அதிபதி!  யார் இந்த வரன்னு  கேக்காதீங்க. நாம் சனீஸ்வரன்னு  சொல்லும் சனிதான் :-)

கோவிலைவிட்டு வெளிவந்தால் ஒரு மரத்தில் இருந்த போர்டு அந்தாண்டை பாலயோகானந்தா இருக்காருன்னு சொல்லுச்சு. நான் போய் பார்த்துட்டு வரேன்னு  போனதும், காராண்டை போயிட்ட நம்மவர்  திரும்பி வந்தார்.

இப்பப்பார்த்த  கோவிலின் பின்பக்கம்தான். ஆனால் எதோ  தனியார் கோவிலாட்டம் இருக்கு. கடப்பைக் கற்கள் பாவின தரை. நீளமா ஷெட் போல இருக்கு.  கடைசிப் பகுதியில் வலப்பக்கம் ஒரு சந்நிதி. நாம் முதலில் பார்த்த கூட்டம் அப்படியே இங்கே வந்துருக்காங்க. சந்நிதியை அடைச்சு நின்னதால் ஒன்னும் சரியா எனக்குத் தெரியலை. எட்டிப் பார்த்து ஒரு கும்பிடு!  இங்கே சந்நிதிக்கு வெளியே ஒரு தாமிரச் சிலை. பாலயோகானந்தாவோ?
ஒரிஜினல்  யோகானந்தர் கோவிலுக்கு வலப்பக்கம் கலர்ஃபுல்லா ஒரு கோவில். நவநரசிம்மர் கோவில்னு  எழுதி  இருக்கு இங்லீஷில்.   அதுக்குபின்னால் கொஞ்ச உயரத்தில் ஒரு கோபுரம் தெரிஞ்சது.  பக்கத்துலேயே  அங்கே போகும் வழி. நிறைய படிகள் ஏறிப்போகணும்.  இதுவும் தனியார் கோவில்தான். எனக்கென்னவோ மேலே போய்ப் பார்க்க ஆசை இருந்தாலும், இது நம்ம கைடு சொன்ன கணக்கில்  வராதுன்றதால்  ச்சும்மா இருந்துட்டேன். நாலு க்ளிக்ஸ் மட்டும்:-)


PINகுறிப்பு:  என் வழக்கத்துக்கு மாறா கைடு கைடுன்னு சொல்லிக்கிட்டுப்போறேன்...  அதென்னவோ நம்ம கைடு பேர் சட்னு நினைவுக்கு வரமாட்டேங்குது. நெஞ்சுக்குழியில் இருக்கு. ஆனா வரலை. வருமட்டும் கைடுன்னே சொல்லிக்கலாம், ஓக்கே!

கார்ட் கிடைச்சுருச்சு :-)



தொடரும்............:-)

  இன்றைக்கு நம்ம ஸ்ரீ ராமனுக்கு ஹேப்பி பர்த்டே!      நம் அனைவரின் சார்பில்   பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்!

17 comments:

said...

அட!!!!!!!!!!!!!!! அஹோபிலம் போகப் போறதாவோ, போனதாவோ சொல்லவே இல்லையே! நாங்க ஏற்கெனவே போயிட்டு வந்து எழுதினதைப் படிச்சிருக்கீங்க தானே!

said...

http://aanmiga-payanam.blogspot.in/2009/02/1.html

இங்கே போய்ப் பார்க்கவும். தொடர்ச்சியாகக் கிடைக்கும். :)

said...

அமிர்த தரிசனம் . ஸ்ரீராம நவமிக்கு நரசிம்ஹன் வந்தான்.
ப்ரஹ்லாதக் குழந்தை படியேறும் படம் அழகோ அழகு.

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் சர்வதோமுகம்.
ந்ருசிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்.
மரணமே நரசிம்ஹனை வணங்கிவிட்டுப் போகுமாம்.
மனம் நிறை வாழ்த்துகள்.

said...

மல்லிகையை விட கனகாம்பரம் அழகான பூ. கனகாம்பரதாரின்னு கிருஷ்ணா முகுந்தா முராரே பாட்டுல தியாகராஜ பாகவதர் பாடியிருக்காரே.

சத்ரம்னா குடையா? சத்ரபதி சிவாஜின்னா குடைகீழ் ஆளும் தலைவர் சிவாஜி போல. வெண்கொற்றக்குடையின் தலைவன்னு தமிழ்ல சொல்றத வடமொழில சத்ரபதின்னு சொல்றாங்க போல.

//அப்புறம் போய் கை அலம்பிக்கிட்டு, கொஞ்சம் கொஞ்சமா சாந்தமாகி இங்கே மரத்தாண்டை வந்து உக்கார்ந்துருப்பார்//

கை அலம்புனா மட்டும் போதுமா? வாயைக் கழுவனும். வேட்டை துண்டெல்லாம் இரத்தமாயிருக்கும். அதையெல்லாம் தொவைச்சுக் காயவைக்கனும். நகங்களுக்குள்ள இரண்யனோட சதைத் துணுக்குகள் போயிருக்கும். அதுக்கெல்லாம் மெனிகுயூர் பண்ணனும். அழுக்குப் போகக் குளிக்கனும். தலையெல்லாம் தொடச்சிச் சீவி.. நெத்தில திருநீறு பூசி.. சாரி.. திருமண் இட்டு.. புது வேட்டி துண்டோட வர வேண்டாமா? அதுவரைக்கும் சாப்பிடாகக் காத்திருந்திருப்பான் கொழந்தை பிரகலாதன்.

கை இட்டு வழி காட்டிக் கூட்டிப் போறதால கைடு போல :)

said...

வாங்க கீதா.

அன்றைக்கு உங்க வீட்டு மாநாட்டுக்கு வந்தப்ப எல்லோரையும் பார்த்த மகிழ்ச்சியில் உலகையே மறந்திருந்தேனேப்பா!!!

இப்ப நீங்க அனுப்பிய சுட்டியில் போய்ப் பார்த்தேன். 2009 ஃபிப்ரவரியில் எழுதி இருக்கீங்க. அப்போ நாங்கள் பயணத்தில் இருந்துருக்கோம். கன்யாகுமரி போய் வந்தது அப்போதான். அதான் பதிவுகள் எதையுமே பார்க்க விட்டுப்போயிருக்கு:-(

இனிதான் உங்க பதிவுகளை நிதானமா வாசிக்கப்போறேன்.

மனம் நிறைந்த நன்றிகள்!

said...

வாங்க வல்லி.

அங்கே நேரில் போனபோதும், இப்போ பதிவு எழுதும்போதும்உங்க நினைவு இருந்துக்கிட்டேதான் இருந்தது. நானும் கோபாலும் ரொம்ப உங்களைப்பத்தி பேசினோம்!

ஸ்லோகத்துக்கு நன்றீஸ்!

said...

வாங்க ஜிரா.

பல்லு தேய்ச்சு நல்லா வாய் கொப்புளிக்கணும் இல்லையோ!

சத்ரி என்றால் குடை!

கனகாம்பரம் சூடினால் தலைக்கனம் வரவே வராது:-)))

said...

Is it சனைச்வரனு or Shani:Charan? Shanai: charan means who moves(charathi:) slowly (Shanai:). Saturn takes about 30 earth years to revolve around the Sun

said...

சனி + ஈஸ்வரன் (மரியாதைக்காக) - சனீஸ்வரன். ஸ்ட்'ராதா சொல்லியிருப்பதும் சரியாகத்தான் தோணுகிறது. "திவாகர தனுஜம் சனைச்சரம்" என்பது முத்துசாமி தீட்சிதரின் நவக்ரஹ பாடலில், சனி கிரகத்துக்கானது.

said...

வாங்க Strada Roseville.

ஆஹா.... தகவலுக்கு நன்றிகள்!

said...

வாங்க நெல்லைத் தமிழன்

எப்படிச் சொன்னாலும் சரியே, நம்மை பீடிக்காதவரை!

said...

//சத்ர என்றால் குடை//

மராட்டியில் குடையை சத்ரி என்று சொல்வார்கள்.

said...

சனைச்சரன் தான் சரியான உச்சரிப்பு. சனீஸ்வரனோ சனைஷரனோ இல்லை. ஈஸ்வரன் என்னும் பட்டமெல்லாம் சனைச்சரனுக்கு யாரும் கொடுக்கலை. கொடுத்ததாகச் சொல்லிட்டு இருக்காங்க! :)

said...

வாங்க சாந்தி.

நம்ம ஜிராவுக்குச்சொல்லி இருக்கேன், குடை விஷயம்.

said...

வாங்க கீதா.

எப்பொருள் யார்யார்வாய் கேட்கினும்.... குறள் ஞாபகம் வருது இப்போ.

பிடிச்சுக்குவாரோ என்ற பயத்துலே அவரை ஈஸ்வரன் பண்ணி இருக்கலாம்:-)

சனைச்சரனை சரண் அடைந்தால் நல்லது.

said...

கைடு பெயர் கிடைச்சுருச்சு! சண்ட்டி.
அவருடைய தகவல் கார்ட் படம் கூடுதலாச் சேர்த்துருக்கேன்.

said...

ரொம்ப அருமை மேடம். நீங்க இப்படி எழுதிட்டதாலே நான் வேறே மாதிரிதான் என் பயணக் கட்டுரையை அமைக்கனும்.