Monday, April 25, 2016

நல்லவேளை, தனித்தனிக் கணக்கு இல்லை !!! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 25)

கோவில் முகப்புவரை  வண்டியைக்  கொண்டுபோக முடிஞ்சது. முதலில் ஒரு நாலுகால் மண்டபம், அப்புறம் திருமாமணி மண்டபம்,  அதுக்கு அப்புறம் கோவில்  அலங்கார வளைவு  அதுக்கப்புறம்  கோவில் வாசல்,  வெளிப்ரகாரம் கடந்தால் ராஜகோபுரமுன்னு  ஆரம்பமே அட்டகாசம்!  திருமாமணி மண்டபத்துக்கு முன்னால் ஒரு ஜெயஸ்தம்பம்.  85 அடி உயரம். ஒரே கல்லினால் செய்ததாம்.  இது பூமிக்கடியில் இன்னும் முப்பதடி ஆழத்தில் தோண்டி  நிறுத்தப்பட்டுருக்காம்!  அப்ப 115 அடியா?  அஹோ !!!!!!


விஜயநகரப்பேரசுதான் இந்தக் கோவிலைக் கட்டுனதா கல்வெட்டுகள் சொல்லுது. போரில் கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் முகமாக கிருஷ்ணதேவராயர்  இந்தத் தூணை இங்கே நட்டுருக்கார்.

காகதீயர் மன்னரான ப்ரதாப ருத்ராவும் கோவிலின் வளர்ச்சிக்கு  ரொம்ப உதவி செஞ்சுருக்காராம்.

கோவில் வாசலுக்கருகில் வந்ததும்  'கோவிலுக்குள்ளே இனி நீங்க போய் பார்த்துக்குவீங்கதானே?ன்னார் கைடு.  நமக்கு வழக்கமான கோவில் விஸிட் தானே?  தரையில் இருக்கும் கோவிலுக்கு  வழிகாட்டி வேணுமா என்ன?  மணி பனிரெண்டாகப் போகுது.  வேற யாருக்காவது  சேவை செஞ்சால்  வருமானம் வரும்தானே? புதுக்குழந்தை வேறு வீட்டில் இருக்கே!

நாங்க பார்த்துக்குவோம். பிரச்சனை இல்லைன்னு  அவருக்கு சேரவேண்டியதைக் கொடுத்தார் கோபால். மேலே  உக்ரர் கோவிலுக்குள் போனதுக்கு  தர்ஷன் டிக்கெட் ஆளுக்கு அம்பதுன்னு இன்னும் ஒரு நூறு வாங்கிக்கிட்டார்.  நன்றி சொல்லிட்டு அவரையும் நம்மவரையும் சில  க்ளிக்ஸ். இன்னும் அவர் பெயர் நினைவுக்கு வரலை. என்ன  இது செலக்டிவ் அம்னீஷியாவா இருக்கே......  :-(


இவர் படத்தைப்பார்த்து  நம்மில் வேற யாருக்காவது  பெயர் தெரிஞ்சால் சொல்லுங்க. புண்ணியமாப்போகும்!

கடைசியில் நானே கண்டுபிடிச்சுட்டேன்.  சண்ட்டி !  அவர் கொடுத்த  கார்ட் இப்பதான்  கண்ணில் பட்டது.  விடாம ஒரு மண்டலம் தேடுனதுக்குப் பலன் :-)



ராஜகோபுரத்தோடு சேர்ந்த கோவில் வாசலா இல்லாம, கோபுரமில்லாத  நுழைவு வாசலும் அதைக் கடந்தால் இருக்கும் ப்ரகாரத்துலே பலிபீடம், கொடிமரம், பெரியதிருவடிக்கான சின்ன சந்நிதி எல்லாம்  தாண்டி  அஞ்சு நிலை  ராஜகோபுரமுமா இருக்கு. தூரக்க இருந்து பார்க்கும்போது  எல்லாமாச் சேர்ந்து  ஒரு தோற்றம்!
ப்ரஹலாதவரதர்... பிரஹலாதனுக்குக் காட்சி கொடுத்து வரம் அளித்த  வரதர்! இந்தக் கோவிலுக்கு ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹர் கோவில் என்றும்  பெயர் இருக்கு. மூலவர் இவரே!

கோபுரவாசலுக்குள் காலை வைக்கும்போதே சகுனம் சரியா அமைஞ்சது:-)
கொடிமரம் சேவிச்சு பெரிய திருவடியைக் கும்பிட்டு உள்ளே போறோம். நமக்கான ஸ்பெஷல்ஷோ நடந்துக்கிட்டு இருக்கு!  பார்  விளையாட்டு! பார்த்துக்கிட்டே நின்னாலும் அலுப்பு தெரியலை நமக்கும், ஆட்டக்காரர்களுக்கும்:-)




முகமண்டபத்துக்குள் போனால் மயக்கம் வரும் அளவுக்குச் சிற்பங்களோ சிற்பங்கள்!  இந்த மண்டபத்தை ரங்கமண்டபமுன்னு சொல்றாங்க.  வொன்ட்டிமிட்டா கோதண்டராமர் கோவிலிலும் இப்படி ஒரு மண்டபம் பார்த்தோமே... நினைவிருக்கோ?
இந்த மண்டபத்துக்குள்ளேயும் ஒரு கல்யாண மண்டபம் இருக்கு.  ஒரு மூணடி உயர மேடை!
ஒரு தூணைக்கூடச் சும்மா விட்டு வைக்கலை. நரசிம்ஹர்கள் விதவிதமாகக் காட்சி தர்றாங்க. லக்ஷ்மியை இடது மடியில் தாங்கி இடதுகையால் அணைச்சுப்பிடிச்சுருக்கும் நரசிம்ஹர்.
பாவம்... சிங்கத்தின் பாதி முகத்தை உடைச்சது யாரு? ப்ச்...

  செஞ்சுலக்ஷ்மியைக் கொஞ்சும் அழகனா ஒரு நரசிம்ஹர், (செஞ்சுலக்ஷ்மி வேடுவப்பெண்ணாம். கையில் வில் கூட இருக்கு!) அய்ய   செல்லத்துக்கு  என்னடா கோவம் ...   செஞ்ச்சு....கொஞ்சம்  என்னைத் திரும்பித்தான் பாரேன். 
ஹிரண்யக்கசிபுவை மடியில் கிடத்திக்கிட்டு நகத்தால் கிழிக்கும்போது , அவன் திமிறி எழுந்து போயிடாமல் இருக்க ஒரு கையால் தலையையும் இன்னொரு கையால் கால்களையும் அமுக்கிப் பிடிச்சுருக்கும் நரசிம்ஹனைப் பாருங்க.  எட்டுகைகள் இருக்கே! யாரோ வாயில் குங்குமத்தைப் பூசி விட்டுருக்காங்க.  எதோ  விருந்து சாப்பிடும் ஆர்வம் முகத்தில் தெரியுது:-)


கோபம் அடங்கிய யோகநரசிம்ஹர் இப்படி.
ரெண்டு கைகளில் சங்கு சக்ரமும் மற்றிரெண்டு கைகளில் புல்லாங்குழல் வச்சு வாசிக்கிற வேணுகோபாலன் சிற்பம்  அருமை! இதுவரை நாலு கை கோபாலனைப் பார்த்ததே இல்லையாக்கும் நான் !


இதுயாரு?  தொப்பி போட்ட  வெள்ளைக்காரன் மாதிரி இருக்கே! கையிலே வீச்சரிவாள் வேற!
அந்தக் காலத்துலே ஹார்ட் ஸர்ஜரி பண்ணிக்கிட்டா இப்படித்தான் நெஞ்சுலே நெடுக்குவாட்டமா தைச்சுருப்பாங்க!

லக்ஷ்மிஹயக்ரீவர்!
அங்கே  ஒருவர்  மிருதங்கம் வாசிக்க,  இவள் ஆட, அவர் பாடன்னு  கச்சேரி வேற நடந்துக்கிட்டு இருக்கு!



மண்டபத்துத் தூண்களின் சிற்ப வேலைப்பாடுகளைச் சொல்லிமாளாது.....   க்ளிக்கும் கைகளே ஓய்ஞ்சு போகுதுப்பா.....
மண்டபத்தின் வெளிப்புறத்தூண்களில் நம்ம ஸ்ரீரங்கம் சேஷராயர் மண்டபத்தில் இருக்கும் குதிரைவீரன்களைப் போலவே இங்கேயும் குதிரைவீரர்கள்.

இந்த மண்டபம் மாதிரியே  அந்தாண்டையும் அமைச்சு அதுக்கு நடுவிலே மூலவரை நோக்கிப்போகும் விதமா வழி இருக்கு.  அந்தாண்டை போகலை. என்னமோ தடுப்பு வச்சு  பழுதுபார்க்கும் வேலைகள் நடக்குது.  ரிப்பேர் பண்ணறோமுன்னு இருக்கும் சிற்பங்களை சிதைக்காமலிருக்கணுமேன்னு இப்பெல்லாம் புதுக் கவலை ஒன்னு முளைச்சுருக்கே.... ராமா....
ஆண்டாளும் செஞ்சுலக்ஷ்மியும் தனித்தனியா அடுத்தடுத்துள்ள சந்நிதிகளில் கம்பிக்கதவுக்குள்ளில் நமக்குக் காட்சி கொடுத்தாங்க.


கோவில் பிரகாரத்தை வலம் வர்றோம்.  லக்ஷ்மிநரசிம்ஹர் கருவறைக்கு  இடப்பக்கம் தாயார் அமிர்தவல்லி தனிச்சந்நிதி.   ரெண்டு விமானங்களும்  ஏறக்கொறைய  ஒரே அளவு உயரம். நீயும் நானும் சரிநிகர் சமானம்:-)

பட்டாபிராமருக்கும் ஒரு தனிச்சந்நிதி  வெளிப்ரகாரத்தில்.

நம்ம திருமலை ஸ்ரீநிவாஸன்,  பத்மாவதியைக் கல்யாணம் பண்ணிக்குமுன் இங்கே வந்து  இவருடைய ஆசிகளைப் பெற்றுப் போனாராம். தனி சந்நிதியில் கல்யாண வெங்கடேஸ்வரர் இருக்கார்.
நிதானமாப் பார்த்து ரசிக்க நமக்கு நேரம் வேணும் என்றதுதான் குறை.

ரொம்ப சுமாரான 'தேர்' (சப்பரம்)

அழகான  கருடவாகனம்!

 நம்ம யானை வாகனம். தலை ரொம்பச் சின்னதா இருக்கோ....
பிரகாரம் எல்லாம் நல்லா சுத்தமாவே இருக்கு.  தேங்காய் உடைக்கத் தனி இடம்.

மேல் அஹோபிலமுன்னு மலைமேல் இருக்கும் ஒன்பது நரசிம்ஹர் கோவில்களின் உற்சவமூர்த்திகளையும் இங்கே  கீழ் அஹோபிலத்தில் இந்தக் கோவிலில்தான் வச்சுருக்காங்கன்னாலும் ஒரே ஒரு உற்சவர்மட்டும் அஹோபிலமடத்தில் இருக்கார்.  மாலோலர், ஜீயரின் நேரடிப் பார்வையில்.  உற்சவசமயங்களில்  எல்லோரும் மலைவாசம் செஞ்சுட்டு வர்றாங்க. மூத்த  உற்சவராக இங்கே இருப்பவர் மாலோலர்தான்.  மூன்றாம் ஜீயர் காலத்தில் செஞ்சதாம்.


மேலே படம்:  நம்ம வீட்டு லக்ஷ்மிநரசிம்ஹர்

நம்ம காஞ்சிபுரத்துலே இந்த 108 கோவில்களில்  15 இருக்கு. முன்னே ஒரு முறை இந்தக் கோவில்கள் எல்லாம் போய்வந்து இங்கே உங்களிடம் சொல்லியும் ஆச்சு. அங்கே சில கோவில்கள் எல்லாம் ஒரு ஒன்னு ஒன்னரை கிமீதூரத்துக்குள்ளேயே இருக்கு.  தனித்தனி எண்களா அதைப்போட்டுப் பாசுரம் பாடிப்போயிருக்காங்க ஆழ்வார்கள்.  இங்கெ அதைப்போல மேலே மலைமேல் இருக்கும் ஒன்பது கோவில்கள் ஒவ்வொன்னையும் தனித்தனிக்கோவிலா மட்டும்  பாடி வச்சுருந்தாங்கன்னா... நம்ம கதை கந்தல். பூவுலக 106 முடிக்கப்படாமலே போயிருக்கும்.

நம்ம திருமங்கை ஆழ்வாருக்குப் பெரிய மனசு. அதான்  அஹோபிலமுன்னு  மொத்தத்துக்கும் ஒரே எண் கொடுத்துட்டார்.
அஹோபிலம் என்றதும்  மேலே ஒன்பது, கீழே ஒன்னுன்னு மொத்தம் பத்து கோவில்கள். அதுலே அஞ்சு நமக்கு லபிச்சது. அதுவும் 'சென்று கண்டார்க்கு அரிய கோவில், கவ்வும் நாயும் கழுகும் தெய்வமல்லால் செல்லவொண்ணா....'  என்று  இருந்ததை,  'சென்று கண்டார்க்கு எளிய கோவில்'னு  மாத்துனதுக்கு  நம்ம அஹோபிலம் மடத்தின் ஜீயர்  Srivan Satakopa Sri Narayana Yathindra Mahadesikan அவர்களுக்கே நாம் கடமைப்பட்டிருக்கோம்.
நரசிம்மவதாரம் எப்பவோ முடிஞ்சுபோனப்பக் காட்சி காணக் கிடைக்காத  கருடன், நான் பார்க்கணுமே நானும் பார்க்கணுமேன்னு இந்த மலையில் வந்து  தவமிருந்ததால், ' சரி, இப்பப்பாரு'ன்னு  அங்கங்கே ஒன்பது இடத்தில் காட்சி கொடுத்துருக்கார் நம்ம நரசிம்ஹர்.  கருடன் என்பதால் துளிக் கஷ்டமில்லாமல் அங்கங்கெ பறந்துபோய் ஸேவிச்சு வந்துருக்கும். ஏன்...  சிம்ஹம் வெளியான தூணின் (உக்ரஸ்தம்பம்) மேலேகூட ஏறி உக்கார்ந்து பார்த்து அஹோ அஹோன்னு  ஆனந்தப்பட்டுருக்கும். நம்மால் அதெல்லாம் முடியுமோ?

நவகிரகங்கள் ஒவ்வொன்னும்  ஒரு அதிபதியா இங்கே நவ நரசிம்ஹர்கள்.
பார்கவ நரசிம்மர் - சூரியன் ஞாயிறு
காரஞ்ச நரசிம்மர் -  சந்திரன்  திங்கள்
 ஜ்வாலா நரசிம்மர் - செவ்வாய்
பாவன நரசிம்மர் - புதன்
அஹோபில நரசிம்மர் - குரு வியாழன்
மாலோல நரசிம்மர் -  சுக்கிரன் வெள்ளி
யோகானந்த நரசிம்மர் - சனி
வராஹ (குரோட) நரசிம்மர் - ராகு
சக்ரவட நரசிம்மர் - கேது

முக்கியமா குருவையும் சனியையும் ஸேவிக்கக் கிடைச்சது! போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்துன்னு இதுக்குத்தான் சொல்லி வச்சுட்டுப்போயிருக்காங்க பெரியவங்க!

நாம் தரிசனம் முடிச்சுட்டு வரும்வரை வாயில்லா ஜீவன்களுக்கு டைம்பாஸ் ஆனது இப்படி  :-)

தொடரும்....:-)

படங்களை இங்கே ஆல்பத்தில் போட்டுருக்கேன். விருப்பம் இருப்பின் பார்க்கலாம்.

21 comments:

said...

அழகழகான சிற்பங்கள். நரசிம்மரை பல வித்தியாசமான கோலங்களில் கண்டோம். புகைப்படங்கள் அருமை. நன்றி.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரசித்தமைக்கு நன்றிகள்!

said...



superb description
of ahobilam.

So kind of you.

The sculptures are worth a crore every centimetre.

subbu thatha

said...

விவரணங்கள் அருமை. அது சரி கருடன் கேட்டதாகவா கதை...நாங்கள் அறிந்தது ஆஞ்சு கேட்டதாகவும் அப்படி இங்கு நரசிம்மர் தோன்றியதாகவும்...

படங்கள் அருமை

கீதா

said...

எவ்வளவு அழகான சிற்பங்கள். உக்காந்து செதுக்க எத்தனை வருடங்கள் ஆச்சோ. அந்தச் சிற்பிகளுக்கு பாராட்டுகள்.

குரங்காட்டம் பெரிய ஆட்டமா இருக்கே. முன்னோர்கள் இவ்வளவு சுறுசுறுப்பாவும் விறுவிறுப்பாவும் இருக்கும் போது நம்மள்ளாம் சோம்பேறியாப் போயிட்டோமேன்னு வருத்தமா இருக்கு :)

said...

க்ளிக்கக் கை வலிக்கலாம், செதுக்கும் கையும் கூட ஓய்ஞ்சு போகலாம். பார்க்கும் கண்கள் மட்டும் கொஞ்சங்கூட களைப்படயவேயில்லை. நம்ம கோவில்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷம்.

முன்னோர் ஆடிய ஆட்டம் அருமை.

said...

அற்புதமான் படங்கள். இன்னமும் ஏனோ இந்தக் கோவிலுக்குப் போகும் வேலை வரவில்லை.பதிவைப் பார்த்தபின் உந்துதல் அதிகமாகிவிட்டது

said...

அவர் பேரு ரகு.

said...

நாங்கள் சென்றபோது ஸ்ரீவண் சடகோப ஸ்ரீ நாராயண யதீந்தரர் அங்கு எழுடந்தருளியிருந்தார். தரிசனம் செய்து அப்பா திருப்பணிக்கும் முடிந்ததை த் தட்டில் வைத்தார். இருந்து சாப்பிட்டுப் போகச் சொன்னதும் ஒரு பாக்கியம் தான்.
அந்த மதிய வேளைப் பசிக்கு வெறும் குழம்பும் சுடுசாதமும் அமிர்தமாய் இருந்தது.
பரங்கிக்காய் தான் போட்ட குழம்பு.

சிற்ப வேலைப் பாடுகள் சொல்லிமுடியாது.

வெளிமண்டப கோபுர ஆட்டம் கன ஜோர்.
எந்த கயிறைப் பிடித்து இந்த ஆட்டம்.அம்மாடி. நன்றி துளசி.

said...

வாங்க சுப்பு அத்திம்பேர்.


'அவன்' எழுதவச்சதுதானே இது! எல்லாம் 'அவன்' செயல்:-)

ரசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க கீதா.

கருடன் இங்கே தவம் செய்து வேண்டினார் என்பதால் இந்த மலைக்கே கருடாத்ரிஎன்று பெயர் இருக்கு.

ஆஞ்சின்னாலும் விரோதம் இல்லை. பறந்தோ இல்லை தாவிக் குதிச்சோதான் போகவேண்டிய இடமா இருந்துருக்கு. மொத்தத்துலே மனுசனுக்கானது இல்லையாக்கும்:-)))

ஆனாலும் நாம் விட்டோமோ!!!!

said...

வாங்க ஜிரா.

எத்தனையெத்தனை கோவில்கள்! எத்தனையெத்தனை சிற்பங்கள்! செதுக்கிய கைகளுக்கு நம் வணக்கங்கள் அல்லாது வேறென்ன?

முன்னோர்கள் சுறுசுறுப்புக்கு முக்கியகாரணம்... நாளையைப் பற்றிய கவலை இல்லை. ஏன் அடுத்த வேளை சாப்பாட்டைப் பற்றிக்கூடக் கவலை இல்லை. என்ன சமைக்கிறதுன்ற கவலை இல்லைன்னா நான்கூட இப்படி ஆடுவேனோ என்னமோ:-))))

said...

வாங்க சாந்தி.

பொக்கிஷத்தின் மதிப்பே தெரியாத மக்களே அதிகம் என்பதுதான் பெரிய கவலைப்பா :-(

said...

வாங்க மோகன் ஜி.

இந்த 108 போகணும் என்ற எண்ணம் வராதிருந்தால் நாங்க கூட அங்கே போயிருக்கமாட்டோம்தான்.

எல்லாத்துக்கும் வேளை வரணும். உங்களுக்கும் வந்துக்கிட்டே இருக்கு.

said...

வாங்க வல்லி.

அப்போதைக்கு இப்போது எதாவது மாறுதல் தெரிகிறதாப்பா?

ஆட்டம் எல்லாம் கோவில்மணிக்கான கயிற்றைப்பிடித்துத்தான். மணி அடிக்குமோன்னு கூட எதிர்பார்த்தேன்:-)

said...

எத்தனை அழகான சிற்பங்கள்! இவற்றை உடைக்க எப்படி மனசு வரும்?
நாங்களும் இங்கு இன்னும் போனதில்லை. எப்போது கூப்பிடுவாரோ, தெரியவில்லை. எல்லாப் புகைப்படங்களும் கண்ணுக்கு விருந்து. மூதாதையர்களின் ஆட்டம் கொண்டாட்டம் தான்!

said...

படங்கள் ரொம்ப ஸ்பெஷல்!

said...

வாங்க ரஞ்ஜனி.

அவன் கணக்கே புரியலையேப்பா.... நமக்குக் கைகால் வலி இல்லாம, கொஞ்சம் இளமையா, ஒல்லியா, சட்னு நடைபோடும் சக்தி இருக்கும்போதே கூப்பிட்டால்தானே அவனுக்கும் நல்லது இல்லையோ? அப்பத்தானே வலி இல்லாமல் அவனைக் கொண்டாடமுடியும்?

அழிக்கும் எண்ணம் இருந்தால் கல்லையே உடைக்கறதுதான். சிற்பமா இல்லை வெறும் கல்லான்னு ஆராய்ஞ்சு பார்க்கும் புத்தி இல்லை என்பதே வருத்தம்:-(

said...

வாங்க ஸ்ரீராம்.

இந்த மாதிரி இடங்களில் ஒரு நாள் முழுக்க நின்னு நிதானமாப் பார்க்கணும். அழகு கொட்டிக்கிடக்கே!!!!

நமக்கோ.......

said...

மக்கள்ஸ்,

அந்த கைடு பெயர் கிடைச்சுருச்சு ! சண்ட்டி ! கடைசியில் நானே கண்டுபிடிச்சுட்டேன். அவர் கொடுத்த கார்ட் இப்பதான் கண்ணில் பட்டது. விடாம ஒரு மண்டலம் தேடுனதுக்குப் பலன் :-)

அந்தக் கார்டை இப்போ பதிவில் சேர்த்துருக்கேன். யாருக்காவது பயன்படலாம் என்ற நம்பிக்கைதான்!

said...

ஆஹா, அருமையான பதிவு. நான் ரொம்ப அசந்து போயிருந்தேன் அன்று. ரொம்ப விபரமான பதிவு உங்களது. நன்றி.