Wednesday, August 26, 2015

பெருமாள் கோவில் கருவறையில் நந்தி Sir .....( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 74)

திருவிண்ணகரத்தில் இருந்து திருநந்திபுர விண்ணகரத்துக்கு  இப்பப் போறோம். தூரம் என்னவோ   11.5 கிமீதான். போக்குவரத்து அதிகமா இருந்ததால்  அரைமணிக்கும் மேலே ஆச்சு.  போகும் வழியில் பார்த்த  ஒரு போர்ட் 'அட!'  போட வச்சது.  எப்படி மறந்தேன்:-(

ஸ்ரீவைகுண்டத்துக்கு நிகரான  திருத்தலங்களை  விண்ணகரம் என்று முதல் முதலில் போற்றிச் சொன்னவர்  நம்ம நம்மாழ்வார்தானாம். திருமங்கை ஆழ்வார் ஐந்து விண்ணகரங்கள் என்றும் பாடியிருக்கார். அவர் சொன்ன அஞ்சு,

திருக்காழிச்சீராம விண்ணகரம் - தாடாளன், .
திருஅரிமேய விண்ணகரம் - திருநாங்கூர் குடமாடுகூத்தன் கோவில்.
 திருவைகுந்த விண்ணகரம் - திருநாங்கூர் வைகுந்தநாதன் கோவில்.
திருப்பரமேச்சுர விண்ணகரம் - பரமபதநாதன் கோவில், காஞ்சிபுரம்.
 திருநந்திபுர விண்ணகரம் - நாதன் கோவில்.

சரியாச் சொன்னால்  திருவிண்ணகர் என்னும் ஒப்பிலியப்பன் திருக்கோவிலையும் சேர்த்தால் ஆறு  வருதே!

இப்போ    நாதன் கோவில்னு  ஊர்சனம் சொல்லும்  இந்த திருநந்திபுர விண்ணகரம் கோவில் வாசலில் வந்து நிக்கறோம். அஞ்சு நிலை ராஜகோபுரம். பார்க்க ரொம்பவே சின்னதா அம்சமா இருக்கு.  கோபுரத்தின்  கீழ்நிலையில் இடப்பக்கம்  பெருமாளின் தசாவதாரச் சிலைகள்  வச்சுருக்காங்க.  வலப்பக்கம் பத்து ஆழ்வார்கள். அடடா....  ஆழ்வார்கள் பன்னிருவர் இல்லையோ?   பத்துக்குப் பத்து ன்னு  சமன் செஞ்சுட்டாங்க போல!  அந்தவரைக்கும் விடுபட்டவர்களில் நம்ம ஆண்டாள் இல்லைன்னு  பெருமூச்சு விட்டேன். பனிரெண்டில் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு இருப்பவள், பெண்குலத்துக்கான பிரதிநிதி!

 காம்பவுண்ட் சுவரைக் கடந்து உள்ளே வரும்போதே  சக்ரத்தாழ்வார் சந்நிதி!


கோவிலுக்குள்ளே போறோம். பலிபீடம், கொடிமரம், பெரியதிருவடியை வணங்கி, முகப்பு மண்டபத்தைக் கடந்து  நேரா பெருமாளை தரிசிக்கப் போயாச்சு.
மகா மண்டபத்துலேயே  ஒரு பக்கம் ஆழ்வார்கள் சந்நிதியும், அடுத்தபக்கம் ஆண்டாள் சந்நிதியும் இருக்கு!    கருவறையில் மூலவர் ஸ்ரீநிவாஸன், ரெண்டு பக்கங்களிலும்  ஸ்ரீதேவி, பூதேவிகளுடன். எல்லோரும் ஜம்னு  'இருந்த நிலை'யில் ஸேவை சாதிக்கறாங்க. உற்சவர்  ஜெகந்நாதன். இவர் பெயரை வச்சுத்தான்  கோவிலை நாதன்கோவில்  என்று சொல்றாங்க.  எல்லோரும் பார்க்கும் திசை மேற்கு!

நம்ம சிபிச்சக்ரவர்த்தி இருந்தார் பாருங்க. அவருக்கு தரிசனம் கொடுத்த பெருமாள் இவர்.  சிபிச்சக்ரவர்த்தியின் பெயரைக் கேட்டதும் புறாவும் மனசுக்குள் டான்னு வந்துரும். சின்னவயசுலே ஆரம்பப்பள்ளியில்  படிச்ச சரித்திரங்கள் மறந்துபோவதில்லை.

ஒரு சமயம் இந்திரனும், அக்னி தேவனும் சந்திச்சுப் பேசிக்கிட்டு இருக்காங்க.  உலகில் அதிகமான இரக்ககுணம் கொண்டவர் சிபி என்னும் சோழமன்னர்னு எல்லோரும் பேசுவது மெய்யான்னு பார்க்கலாமேன்னு ரெண்டு பேரும் கிளம்பி மாறுவேடத்தில் பூலோகத்துக்கு  வர்றாங்க. இந்திரன் ஒரு வேடன் & அக்னி ஒரு புறா.

வேடன் புறாவை அம்பெய்து கொல்லப் பார்க்கும்போது, பதறிப் பறந்த புறா, கோவிலில் சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்த   சோழன் சிபியின் மடியில் வந்து விழுந்துருது. அடப்பாவமேன்னு அதைத் தடவிக் கொடுக்கும் போது வேடன் வந்து  அது நான் குறி வச்ச புறா. எனக்குக் கொடுத்துருங்க.  என் லஞ்ச்  அதுதான் என்கிறான். புறாவோ பயந்து நடுங்கி  வெடவெடக்குது.

வேற சாப்பாடு உனக்குத் தரேன். இந்தப் புறாவை விட்டுருன்னு வேடனிடம் கெஞ்ச,  முடியவே முடியாது. எனக்குப் புறா இறைச்சிதான் வேணுமுன்னு அடம்பிடிக்கிறான் வேடன்.(பேலியோ டயட் !) ஓக்கே... உனக்கு இறைச்சிதான் வேணுமுன்னா என் உடம்புச்சதையை இந்தப் புறாவின் எடைக்கு எடை கொடுத்தால், புறாவை விட்டுருவையான்னா... சரின்னு சம்மதிக்கிறான்.
பணியாளர்களிடம் கத்தியும் தராசும் கொண்டு வரச்சொன்ன  மன்னன்,  புறாவை தராசின் ஒரு தட்டில் உக்காரவச்சுட்டு, தன் தொடைச்சதையை அறுத்து மறு தட்டில் வச்சான். புறா இருக்கும் தட்டு  கீழே ரொம்பத் தாழ்ந்து இருக்கு. அது சமன்நிலைக்கு வரணுமுன்னு  கொஞ்சம்கொஞ்சமா தன் தசைகளை அறுத்து  வைக்க வைக்கப் புறாத் தட்டு மேலே ஏறும் வழியைக் காணோம்!

மன்னனுக்கோ உடம்புலே இருந்த தசைகள் எல்லாம் போய் ரத்தவிளாறியாக் கிடக்கு. என்ன செய்யலாமுன்னு யோசிச்ச மன்னன், சட்னு தராசுத் தட்டிலே ஏறி உக்கார்ந்துட்டான். இப்ப ரெண்டு தட்டுகளும் சமநிலையில்!

'என்னையே ஆக்கித் தின்னுக்கோ'ன்னு வேடனிடம் சொல்ல, அடுத்த நொடி,  இந்திரனும், அக்னியும் சுயரூபத்தில் மாறி, மன்னரை பழையபடி முழு உடலா ஆக்கி, அவன் இரக்க குணத்தைப் பாராட்டி ஆசி வழங்கினாங்க.

நம்ம ஸ்ரீநிவாசர்  சந்நிதிக்கு முன்னால்தான் சம்பவம் நடந்துருக்கு. பெருமாள் அப்போ கிழக்குத்திசை நோக்கி இருந்துருக்கார். தராசில்  புறா இருந்த தட்டு கிழக்காவும்,  சிபி தன் தசைகளை அரிஞ்சு வச்சுக்கிட்டு இருந்த   தட்டு மேற்காவும் இருந்துருக்கு.  என்ன நடக்கப்போகுதோன்னு பார்க்க  நம்ம மூலவர்  ஸ்ரீநிவாசர்  மேற்கே திரும்பி  அமர்ந்தார் என்று கதை !

கயிலையில் சிவபெருமானுக்கு முன்னால் எல்லா முனிவர்களும் வந்து சேர்ந்து சத்சங்கத்தில், ப்ரம்ஹவிசாரம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. அப்போ வியாஸர், ' வேதத்துக்கு  மிஞ்சின எதுவுமே இல்லை. கடவுளர்களில் அச்சுதனை மிக்க தெய்வமும் இல்லை'ன்னு  கையை உயர்த்திச் சொன்னதும், 'ஆமாம். அதுவே சரி'ன்னு சிவன் ஆமோதிக்கும்போது, 'என் தலைவர் இருக்கும் இடத்துக்கு வந்து எப்படி  விஷ்ணுதான்  முதல்வர்'னு சொல்லப் போச்சுன்னு  நந்திக்கு மகா கோபம் வந்துருச்சு. தூக்கின கை அப்படியே  நிக்கட்டுமுன்னு சாபம் விட்டுட்டுத் தங்கப்பிரம்பால் வியாஸருக்கு  ஒன்னு வச்சார்.

சிவனுக்கு இப்போக் கோபம் வந்து நந்தியை  சபையை விட்டு வெளியே போ. இனிமேப்பட்டு  இங்கே வரவே வேணாமுன்னு சபை நீக்கம் செஞ்சார்.  ஐயோ... அபச்சாரம் பண்ணிட்டேன்ன்னு அழுத நந்தியிடம்,  நீ  செண்பகாரண்யம்போய்  மகாவிஷ்ணுவை தியானம் செஞ்சு  அவர் மன்னிச்சால் திரும்ப  வரலாமுன்னு  சொன்னதும் நந்திதேவர் கிளம்பி  இங்கே வந்து தவம் செய்தார்.  அப்போ இங்கே செண்பகமரங்கள் நிறைஞ்ச காடாகத்தான் இருந்துச்சாம்.

சரி. இப்போஇன்னொரு வெர்ஷனைப் பார்க்கலாம்.  நந்தி தேவர் ஏதோ வேலையாகப் பெருமாளைப் பார்க்க ஸ்ரீவைகுண்டம் போனவர்,  வாசலில் காவலுக்கு இருக்கும் ஜெய விஜயர்களிடம் உள்ளே போக அனுமதி கேட்கணுமா இல்லையா? பின்னே எதுக்குக் கேட் கீப்பர் வச்சுருப்பது?  அட்லீஸ்ட், நான்  வரலாமான்னு எஜமானிடம் கேட்டுச் சொல்லும் என்றிருந்துருக்கப்டாதோ?  சட்னு மூடி இருக்கும் கதவைத் திறந்து ரைட் ராயலா உள்ளே போக முற்பட்டதும், காவலாளிகளுக்குக்  கோபம் வந்துருச்சு. இவுங்களுக்கும் தெய்வாம்சம் இருப்பதால்  தெய்வசக்தியும் இருக்கு. அனுமதி கேட்காமல் உள்ளே போக நினைத்த நந்திக்கு  சாபம் கொடுத்தாங்க. என்னன்னு?  உன்  உடல் எப்போதும் அளவுக்கதிகமான உஷ்ணத்தில் தகிக்கட்டும். (104 டிகிரி ஜுரமா? )

இப்படி ஆகிப்போச்சேன்னு கயிலைக்கு ஓடுனவர், தன் எஜமானிடம் நடந்ததைச் சொன்னதும், 'நீ செஞ்சது தப்புத்தாம்ப்பா.  போய்  செண்பகாரண்யத்தில் மஹாவிஷ்ணுவைத் தியானத்தில் இருத்தி  தவம் செய்து கொண்டு இரு.  அவர் மனம் இரங்கி உனக்கு சாபவிமோசனம்  கொடுப்பார்னு  அனுப்பி வச்சுருக்கார். அதே மாதிரிதான் ஆச்சு.
கதைதான் வெவ்வேறே தவிர  நந்தி வந்து தவம் இருந்த சம்பவம் உண்மை என்றாற்போல்  கருவறை சுவத்துலே , நம்ம நந்தி சார்  பெருமாளை  வணங்கும் புடைப்புச் சிற்பமுண்டு. மனுஷ்ய ரூபத்தில் இருக்கார்.

கோவில் ப்ரகாரத்தில் வலம் வர்றோம். சுக்லபட்ச அஷ்டமியில் ஸ்ரீ சூக்த ஹோமம் நடக்கும் நாட்களை  எழுதி வச்சுருக்காங்க.  ரொம்ப விசேஷமாம். முக்கியமா பிரிந்து இருக்கும் தம்பதிகளை ஒன்று சேர்க்க, ஒன்று சேர்ந்திருக்கும் தம்பதிகள் பிரியாமல் இருக்க, இப்படி குடும்பநலத்துக்கு உதவும் சமாச்சாரம்.  ஏன் இந்தக்கோவிலில் இது  விசேஷமுன்னு கேட்டால்.....

 செண்பகாரண்யத்துலே  மஹாலக்ஷ்மி வந்து பெருமாளை தியானித்துத் தவம் செஞ்சுக்கிட்டு இருக்காள். எல்லாம் மார்பில் இருக்க இடம் வேணுமுன்னுதான். (ஆமாம்...எப்பவும் அங்கேதானே இருக்காள். எதுக்கு இப்போ  இதெல்லாம்? சின்னச்சின்னச் சண்டைக்கெல்லாம் கிளம்பிப் போயிடறாள் போல இருக்கே!) 
அவள் இங்கே தவம் இருக்க ஆரம்பிச்சது ஒரு  அமாவாசை. ஒரு  வாரம் தாக்குப் பிடிச்ச மஹாவிஷ்ணு, எட்டாம் நாள் சுக்லபட்ச அஷ்டமி தினம், லக்ஷ்மியைத் தேடிவந்து தரிசனம் கொடுத்துத் தன்னோட மார்பில் மீண்டும் குடிவச்சுட்டார். (தங்ஸ் இல்லாம ரங்ஸ்களால் இருக்கமுடியாது!)  அதான் இங்கே சுக்லபட்ச அஷ்டமி விசேஷமா இருக்காம்.

தாயர் செண்பகவல்லி சந்நிதி வெளிப்புறச்சுவரில் பஸ் டைம்டேபிள் எழுதி வச்சுருக்காங்க. அதுலே இந்த இடத்துக்குப் பழையாறைன்னு போட்டுருக்கு! இந்தப் பகுதியெல்லாம் சோழமன்னர் ஆட்சியில் தலைநகரமாக இருந்ததுதான். வரும் வழியில் சோழன்மாளிகை என்று ஒரு  போர்டு பார்த்தோம்தான்.  இளவரசி குந்தவை நாச்சியார் இந்தக் கோவிலுக்குள் ஒரு மண்டபம் கட்டினாங்கன்னு கோவில் தகவல்கள் சொல்லுது.

மன்னர் விஜயரங்க சொக்கப்ப நாயக்கர், தன்னுடைய தாயின் நோய் நீங்க இந்தத் தலத்தில் வேண்டிக்கிட்டு, நோய் குணமானதும் மண்டபம் கட்டிக் கொடுத்துருக்கார்.

பல்லவ மன்னன் நந்திவர்மன், குழந்தை வரம் வேண்டி இங்கே வந்து பெருமாளையும் தாயாரையும்  வேண்டுனதும், பிறந்த குழந்தைக்கு 'நந்திபுர விண்ணகரப்பன்'னு பெயர் சூட்டுனதாகவும் கோவில்குறிப்பில்  இருக்காம்!
மீட்டர் போர்டு வச்சுருக்கும் இடத்தைப் பாருங்க:-(

கோவில் விலாசத்திலும் இது பம்பைப்படையூர் என்றுதான் எழுதி இருக்காங்க.  சோழர்களின் படைவீடுகள் இருந்த இடமாம்.  சரித்திரத்தைப் போற்றிப் பாதுகாக்கத் தெரியாத மக்களால் இப்போ எல்லாம் மண்மேடுகளாத்தான்  கிடக்கு:-(
நந்தி கனெக்‌ஷனாம்ப்பா:-)

திருமங்கை ஆழ்வார் பத்துப்பாசுரங்கள்பாடி மங்களசாஸனம் செஞ்சுருக்கார்.  நூற்றியெட்டு திவ்யதேசக் கோவில்களில் ஒன்னு இது. காலை எட்டு  மணி முதல் பனிரெண்டு, மாலை நாலரை முதல் இரவு எட்டுன்னு கோவில் திறந்து இருக்கும்.


இந்தக் கோவில் சந்திரதோஷத்துக்குப் பரிகார ஸ்தலம்.  நவகிரக பரிகாரக்கோவில்கள் சைவர்களுக்கு  இருப்பதைப்போல்  வைணவர்களுக்கும்  உண்டு.  என்ன ஒன்னுன்னா சிவன் கோவில்களில்  நவகிரகங்கள் சந்நிதி இருப்பதைப்போல், பெருமாள் கோவில்களில் நவகிரக சந்நிதி இருப்பதில்லை. (மதுரை கூடலழகர் போல ஒரு சில கோவில்கள் விதிவிலக்கு!)

வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத, சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே 
என்று பாடிய 'சிலேடை மன்னர்' காளமேகப்புலவர் பிறந்த ஊர் இந்த நந்திபுர விண்ணகர் என்னும் நாதன்கோவில்தான்!
பிரகாரச்சுற்று முடிச்சு வெளிவரும் சமயம்,  முன்மண்டபத்துக்குப் பக்கம் ஒரு ஏழெட்டுப்பேர்  இருந்து பிரபந்தம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அந்தக் கூட்டத்தில் பார்த்தால் நம்ம  அடையார் சேஷாத்ரி. நம்ம அடையார்  அனந்தபதுமன் கோவிலில் இவரை தினமும் சந்திச்சதில் நம்ம(ஆன்மீக)  நண்பர்கள் கூட்டத்தில் ஒருவரானவர். அவரை இங்கே கண்ட  திகைப்பு நமக்கு. அவருக்கும் அதே!  வேலையில் இருந்து ரிட்டையர் ஆனவர்கள் சின்னச்சின்னக் குழுவா இப்படிச் சேர்ந்து  பெருமாள் கோவிலில் போய் பிரபந்தம் சொல்லும் சேவை செய்யறாங்க.  ரொம்ப நல்ல காரியம். பக்தியோகம். ஆணாகப் பிறக்கும் சௌகரியங்களில் இதுவும் ஒன்னு.  நினைச்சாக் கிளம்பிப் போயிடலாம். கர்மயோகக்காரர்களுக்கு இது சாத்தியமில்லை:-(

கிளம்பி ஒரு ரெண்டுமூணு  நிமிசத்தில் ஒரு பகவதி கோவில் கண்ணில் பட்டது.  உச்சிகாலம். கோவில் பூட்டி  இருக்குமுன்னு நேரா ராயாஸ் வந்துட்டோம். வரவேற்பில் நம்ம நண்பர்கள் வந்தாங்களான்னு கேட்டப்ப, சாவியை எடுத்து நீட்டுனவர், 'இப்பதான் சாவியைக் கொடுத்துட்டு  சாப்பிடப் போனாங்க'ன்னார்.

அறைக்குப்போய்  கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிட்டு நாங்களும் ரெஸ்ட்டாரண்ட் போனோம். சாப்பிட்டு முடிச்சு வல்லியம்மா ஒரு  இருக்கையில்   இருந்தாங்க. முகத்தில் நல்ல களைப்பு. மகர்கள் இருவரும் குஷன் வாங்கப் போயிருக்காங்களாம். ஸ்ரீரங்கத்தில் இருந்து கும்மோணம் வந்த சாலை ரொம்பவே குண்டும்குழியுமா தூக்கித் தூக்கிப்போட்டு இப்போ முதுகு வலின்னாங்க:-(  திரும்பிப்போகணுமே.....

நாங்க வந்த  சாலை(லால்குடி, திருவையாறு வழி)  நல்லாதான் இருந்தது. தூரம்கூட ஒரு 89 கிமீதான்.  இவுங்க திருச்சி வழியா வந்தாங்க போல!   மகர்கள் வந்ததும் ' திரும்பிப்போகும்போது திருவையாறு வழியில்  போங்க'ன்னுட்டு,  அறைச்சாவியைக் கொடுத்து  போய்க் கொஞ்சநேரம் தூங்கிருங்க.  நாங்க சாப்பாட்டை முடிச்சுட்டு  வந்துடறோம் என்றேன்.

பாதி சாப்பாட்டில் இருக்கும்போதே மூவரும் திரும்பிட்டாங்க. கிளம்பறாங்களாம்.  ரங்கனை இன்னும் ஒருக்கா தரிசனம் செஞ்சுட்டு, பதிவர் சந்திப்பில் கலந்துக்கறாங்க. ராத்திரி ரயிலில் சென்னைப் பயணம்.


பத்திரமாப் போய்வாங்க. சென்னையில் சந்திக்கலாம், வல்லியம்மா!

தொடரும்.....:-)


15 comments:

said...

இரு கோயில்களுக்கும் சென்றுள்ளேன். அப்பகுதியின் அருகே கோபிநாதப்பெருமாள் கோயில், பழையாறை சோமநாதர் கோயில், ராஜராஜன் சமாதி, திருமேற்றழிகை உள்ளிட்ட பல இடங்கள் உள்ளன. கோயில்கள் அதிகம் உள்ள பகுதியில் இப்பகுதியும் ஒன்று. பகிர்வுக்கும், படங்களுக்கும் நன்றி.

said...

எனக்கு இந்தக் கதைகளைப் படித்த அரை மணி நேரத்தில் மறந்து விடுகிறது கடந்த நவம்பரில் சென்று வந்த இடங்களைப் பற்றி துல்லியமாக கதைகளுடன் உங்களால் எப்படி எழுத முடிகிறது. வாழ்த்துக்கள்.

said...

அருமையான பகிர்வுகள் ....அழகான படங்கள்...

said...

அம்மா உங்கள் தளத்தை தொடர்வது எவ்வாறு ......follower மாதிரி ...

இதனால் உங்கள் அருமையான புதிய பதிவுகள் எல்லாம் விடுப்பட்டு விடுகிறது .....

பெருமாள் கோவிலை பற்றி நீங்கள் எழுதுவதை படித்தால் உடனே செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது ....அழகு ...

வாழ்க வளமுடன் ....

said...

ரொம்ப நல்ல தரிசனம். கொஜ்சம் தமிழ் வந்தாச்ச்ஹு.நன்ரி டீச்சர்.கோவில் அழகு நானும் வந்னு.

said...

எத்தனை விவரங்கள் துளசி. நந்திபுர நாயகி நினைவுக்குள் வந்தாள். லக்ஷ்மிக்கும் பெருமாளுக்கும் ஃபார் எவர் கச ம்சானு இருக்கும் போல. அவர் பாட்டு ஊருக்கு ஒரு நாயகின்னு
மாறிக் கொண்டே இருக்கார்..
இந்த ஜகன்னாதப் பெருமாள் மத்திய ஜகன்னாதர்னு நினைக்கிறேன்.
பூரியில் ஒன்று. கீழ தர்ப்பாரண்யத்தில் ஆதி ஜகன்னாதர். எங்க வீட்டில கூட ஒருத்தர் இருக்கார். >}}}}}}
என்னையும் பதிவில் இணைத்ததற்கு மிகவும் நன்றி. அத்தனை புண்ணியமும் எனக்கும் பாதி. நன்றி துளசி. வாங்கின குஷனைக் காரிலேயே
விட்டு வண்டி ஏறிவிட்டோம். குழந்தைகளுக்கு 300 நஷ்டம்....

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

நீங்க சொன்னது ரொம்பச்சரி.

ஏராளமான கோவில்கள் உள்ள பகுதி. நிறைய பாக்கி வச்சுட்டு வந்துருக்கேன். எல்லாம் தரிசித்து முடிக்க இந்த ஜென்மம் போதாது!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

என்னுடைய பலமும், பலகீனமும் ஒன்றேதான். ஞாபகசக்தி.

இப்பெல்லாம் கொஞ்சம் மறதி வர ஆரம்பிச்சுருக்கு. முந்தாநாள் வச்ச குழம்பு என்னன்னு தெரியலை:-)

எங்க அத்தை ஒருத்தர் இருக்காங்க. 86 வயசு. எந்தக்கோவிலைப் பற்றிக்கேட்டாலும் உடனே பதில் சொல்வாங்க. மூலவர், உற்சவர் பெயர்களோடு! எங்க வீட்டு வேளுக்குடின்னு அவுங்களைச் சொல்வேன்!

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

வணக்கம்.முதல் வருகைக்கு நன்றி.

ஃபாலோயர்ஸ் ஆப்ஷன் நிரல் வச்சுக்கலைப்பா. வாரம் மூணு பதிவுகள். திங்கள், புதன் வெள்ளி. அவ்ளோதான்.

மீண்டும் வருக. நன்றி.

said...

வாங்க மீரா பாலாஜி.

ஆஹா.....வெற்றி வெற்றி. ற வுக்கு ஷிஃப்ட் அழுத்திக்கிட்டு ஆர் டைப் பண்ணுங்க.

said...

வாங்க வல்லி.

நாதன் கோவிலில் உங்கவீட்டு ஜெகந்நாதரையும் நினைச்சேன் என்பதே உண்மை:-)

அடடா.... குஷன் போச்சே:-( ரயிலுக்குக் கொண்டு போயிருந்தால் முதுகு தப்பி இருக்குமேப்பா!

said...

வேறு வேறு version கதைகள் சொல்லி கோவிலை சுற்றி காண்பித்தீர்கள். நன்றி!!

said...

நந்திபுரத்து நாயகின்னு ஒரு நாவல் இருக்கு. விக்கிரமன் எழுதியது. பொன்னியின் செல்வனின் தொடர்ச்சின்னு சொல்வாங்க. ஒருவேளை குந்தவை நந்திபுரம் கோயில் மண்டபம் கட்டியதை வெச்சுத்தான் எழுதியிருப்பாங்களோ... தெரியலையே. நான் படிக்கலையே.

கோபுரத்துல விடுபட்டுப் போன ஆழ்வார்கள் யாருன்னு தெரிஞ்சதா டீச்சர்?

said...

வாங்க சசி கலா.

நன்றீஸ்ப்பா.

said...

வாங்க ஜிரா.

காலச்சக்கரம் நரசிம்மன் எழுதிய சங்கதாரா (குந்தவையைப் பற்றியது) வாசிச்சு அதிர்ந்து போய் இருக்கேன்!

கோபுரத்துலே ஆண்டாள் இருக்காள் ஆழ்வார்கள் வரிசையில்! அது போதுமுன்னு எனக்குத் தோணுச்சு:-)