Monday, August 24, 2015

தங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம். நான்காம் நாள் )

படுக்கை அறை கண்ணாடிக் கதவுகள் எல்லாம்  அழுக்குப் பிடிச்சுக்கிடக்கு என்பதைக் கீழ்வானத்தை க்ளிக்கும்போது தெரிஞ்சது. கட்டிடவேலைகள் நடக்கும்போது இப்படித்தான் இருக்கும்.  அப்புறம் எல்லாக் கண்ணாடிகளையும் சுத்தம் செஞ்சுருவாங்கன்னு மனசை சமாதானப்படுத்திக்கிட்டு, பால்கனிக் கதவைத் திறந்து, 'வந்துக்கிட்டு இருப்பவனின்' அடையாளங்களைக் க்ளிக்கிக் கடமையை ஆரம்பிச்சேன்.



இன்றைக்கு  கொஞ்சம் சீக்கிரமாகவே  கிளம்பினோம் நடை பழக!  கீழே வரவேற்பில் தினம் காலை வரும் தினசரியை யாரும் நம்ம அபார்ட்மென்ட்டுக்குக் கொண்டுதரும் வழக்கம் எல்லாமில்லை. அங்கே போய் நாமெடுத்துக்கணும். ரெண்டு நாளா வாக் முடிச்சுட்டுப்போய்ப் பார்த்தால் எல்லாம் காலி என்பதால்,  இன்று முதல்   வாக் போகுமுன் பேப்பரை எடுத்து  வச்சுக்கணுமுன்னு  கோபாலுக்கு  ஒரு எண்ணம்.  எடுத்த பேப்பரை எங்கே கொண்டு வைக்கன்னு திரும்ப மாடிக்குப்போய் அறைக்கதவின் அடியிலே தள்ளிட்டு வந்தார்:-)அதான் லிஃப்ட் இருக்கே.




எந்த வேலை எந்த தளத்தில் எத்தனை மணிக்கு நடக்குதுன்னு  தகவல் ஒட்டி வச்சுருக்கு.  நல்லது.  குடித்தனக்காரர்கள் சத்தம் வரும் நேரம் எஸ்கேப் ஆகிடலாம்.

 இவர் வரும்வரை நான் 'என் கடமையை' செஞ்சுக்கிட்டு இருந்தேன்.  காமணிக்கு ரெண்டு டாலர் அதிகம் இல்லையோ!
தாழம்பூ(மாதிரி)மரம் உதிர்க்கும் காய்.

மணலை சலிச்சு அழுக்கெடுக்கும் மெஷீன்  கடற்கரைக் குப்பைகளைப் பொறுக்கிக்கிட்டே போகுது.  இதுமாதிரி ஒன்னு நம்ம மெரீனாவுக்கு............  வாங்கிக்க முடியாதா?  ஏக்கம்..........
எப்பவும்  இடப்பக்கம் திரும்பி சர்ஃபர்ஸ் பாரடைஸ் நோக்கி  நடக்கறோமேன்னு இன்றைக்கு  வலப்பக்கம் திரும்பி  ப்ராட் பீச் நோக்கி  நடந்தோம். அடுக்குமாடிகள் ஏராளமாத்தான் கட்டிப்போட்டுருக்காங்க. ஒரு  இடத்தில் செல்ஃபோனில் பதிவு செஞ்ச  சீன இசையைப் போட்டுக்கிட்டு சிக்ன்னு  ஒரு சின்னப்பெண் நமக்கு முதுகு காமிச்சபடி  உடற்பயிற்சி செஞ்சுக்கிட்டு இருப்பதைப் பார்த்தேன். டிஸிப்ளின் பாராட்டப்பட வேண்டியதுதான்! அப்புறம்  நம்ம பக்கம் திரும்பினாங்க. 80+  !!!!

சாலைப்பக்கம் போனோம். அழகான ஒரு கட்டடம். முன்பக்கம் ஆர்ட் கேலரி. பின்பக்கம்  கடலைப் பார்த்தபடி கழிப்பறைகள்!


இந்தப்பகுதிக்கான கிண்டர்கார்டன் பள்ளி.  62  வயசு!  நாலு வயசுப் பிள்ளைகளைச் சேர்த்துக்குவாங்க. 2 வருசம் இங்கேன்னு நினைக்கிறேன். நியூஸியில்  அஞ்சாவது பொறந்தநாளிலேயே  ஆரம்பப்பள்ளியில் சேர்த்துடலாம்.   எங்க நாட்டில்  இலவசக்கல்விதான்.  இங்கேயும் அப்படித்தான் இருக்கும்.


அடுத்து  ஒரு பௌலிங் க்ளப்.  இங்கே விளையாட்டைவிட ரெஸ்ட்டாரண்ட் நல்லா இருக்கு போல!

தெருமுனைக்கடை ஒன்னு.  ச்சும்மா எட்டிப் பார்த்தோம். சூப்பர்மார்கெட்டை விட விலை ரெண்டு மூணு மடங்கு அதிகம் என்றாலும் ஒரு அவசர ஆத்திரத்துக்கு  இந்தக்   கடைகளுக்கு மக்கள்ஸ் போய்க்கிட்டுத்தான் இருக்காங்க.  இது  சுற்றுலாப்பயணிகள் புழங்கும் இடம் என்பதால்....   வியாபாரம் நல்லாவே நடக்குது. காய்கறியெல்லாம் கூட இருக்கே மினி சூப்பர்மார்கெட் போல! தொட்டடுத்து  இண்டியன் ஸ்பைஸஸ்ன்னு ஒரு கடை. வியாபாரம் சரியா  இல்லைன்னு  போர்டை விட்டுட்டுக் காலி பண்ணிட்டுப்போயிருக்காங்க.
நடைபாதையில் நடக்க இடம்விட்டு, ரோடு பக்கம் பார்டர் போட்டாப்லெ சின்னதா புல்தரை.  இது நியூஸியிலும் உண்டு. நம்ம தெருவிலும்தான். புல்விதைகளைத் தூவி, தண்ணீர் தெளிச்சுப் பராமறிப்பது சிட்டிக் கவுன்ஸில்தான். வீடுகளுக்கு முன் விதவிதமான மலர்களும் செடிகளுமா வச்சுக்கறது நம்ம விருப்பம். காலநிலை நல்லா இருப்பதால்  பச்சைபசேலுன்னு எவர்க்ரீன் செடிகள் எக்கச்சக்கமா  வளர்ந்து நிக்குதுகள்.  நம்ம கள்ளிகள் அழகுதான்!

வாடகைக்கு வீடுகள்  இருக்காம். ஆனால் கடல், வீட்டில் இருந்து தெரியாது:(
யாருக்கு வேணுமாம்!  பர்லேஹெட் ரோடு வழியா நடந்து நம்ம வீட்டுக்கு (அக்வேரியஸ்) வந்தோம். தொட்டடுத்து ஒரு பெரிய ஷாப்பிங்மால் கட்ட ஆரம்பிச்சு இருக்காங்க.  மேலே போகப்போக அபார்ட்மென்ட்ஸ் இருக்குமாம்.

தோழி வீட்டுக்குக் கிளம்பும்போது மணி பத்து.  ரொபீனா என்ற இடத்துக்குப் போகணும். ரொம்பதூரமில்லை.  ஒரு 12  கிமீ இருந்தாலே அதிகம். ஆனா  மெயின்ரோடிலே தப்பான  டர்னிங் எடுத்து  கெஸீனோ வளாகத்துக்குள்ளே போயிட்டோம்.  நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்கன்னேன் கோபாலிடம்:-)

அவருடை செல்லில் நேவிகேட்டர்  போட்டு என் கையில் கொடுத்தார். போச்சு....  போச்சு....  கெமெராவைப் பயன்படுத்த முடியாமல் போச்சு:-(
அவபாட்டுக்கு, இன்னும் 600 மீட்டரில் ரைட் எடு,  ரௌண்டபௌட்டில்  செகண்ட் எக்ஸிட்ன்னு (நேராப்போன்னு  சொல்லப்டாதோ!)சொல்லிக்கிட்டே இருக்காள். நாம் அதைக் கேட்காமல்  கொஞ்சம் வண்டியை இந்தப்பக்கம் அந்தப்பக்கம் திருப்பினா  ஒரே புலம்பல். டோண்ட் மெஸ் வித் மீ என்ற குரலில்  'கோ ஸ்ட்ரெய்ட்'!  கரடியாக் கத்தும் என்னை சட்டை செய்யாத ஆள், அவள் பேச்சைக் கேட்டு நடந்துக்கறார். சிலசமயம்  சத்தமே வராது. சாப்பிடப்போயிட்டாளோன்னு நினைக்கும்போது  300 மீட்டரில் லெஃப்ட்ன்னு....   பாண்ட் யுனிவர்ஸிட்டியைத் தாண்டிப் போறோம். தனியார் பல்கலைக் கழகம்.  கட்டட அமைப்பே  அட்டகாசமா இருக்கு.  இங்கேதான் தோழியும் நண்பரும் வேலை செய்யறாங்க.  சமீபத்தில் நண்பர் மட்டும்  வேற இடத்துக்கு  மாறி இருக்கார்.  எல்லாம் கணினி ரிசர்ச் வேலைதான்.

அமைதியான சூழலில் இருக்கு தோழியின் வீடு. நீச்சல்குளத்தோடு கூடிய அட்டகாசமானவீடு.  அருமையா அலங்கரிச்சு இருக்காங்க.  பலவருசப் பேச்சை முடிக்கும் பிஸியில் இருந்ததாலும்....,  காரில் வரும்போது  கேமெராவைக் கைப்பையில் வச்சுட்டதாலும்  படங்கள் எடுக்கும் எண்ணமே வரலை. அவுட் ஆஃப் ஸைட், அவுட் ஆஃப் மைண்ட்:-(

அவியல், கத்தரிக்காய் வெண்டைக்காய் கறி, ரசம், தயிர், என்னமோ ஒரு குழம்பு(நான் ஊத்திக்கலை),  கல்போலக் கெட்டித் தயிர், சோறு, பப்படம், விதவிதமான வற்றல்கள், ஸ்ரீகண்ட் என்று  செமத்தியான சாப்பாடு! டைனிங் டேபிளுக்குப் பின்னால் ஒரு தோட்டம்!  சாப்பாடு ஆன பின்புதான் முழிச்சுக்கிட்டேன்.




கர்நாடக சங்கீதமும்  ஹிந்தி சினிமாப் பாட்டுமா தோழி நல்லாப் பாடுவாங்க.  அவுங்க இங்கே இருந்தப்ப, நம்ம தமிழ்ச்சங்கத்தில் இவுங்க பாட்டு இல்லாத விழாக்களே கிடையாது.  முதல்முதலில் நவராத்ரிப் பண்டிகை சமயம் எங்களையெல்லாம்  ஹல்திகுங்கும் என்று மஞ்சள்குங்குமம் எடுத்துக்கக் கூப்பிட்டவங்களும் இவுங்கதான்.


அக்கம்பக்கம் எங்காவது போய் வரலாமுன்னு சொன்னார் நண்பர்.  ஒவ்வொரு இடமாச் சொல்லி வேணாம் வேணாமுன்னு கடைசியில் டாம்போரின் மலையில் அருவி இருக்காமேன்னேன்.  இது ஒரு தேசியப்பூங்கா.  ட்ராப்பிகல் ஃபாரெஸ்ட் என்பதால்   பூங்கா வரைக்கும்  வண்டியில் போனாலும், அருவி  பார்க்க உள்ளே ரொம்பதூரம் மலைப்பாதையில் இறங்கிப்போகணுமாம்.  நாங்க பொருத்தமான காலணி கொண்டு போகலையே:(

ஆனால்  போகும் வழியில்  முக்கால்வாசி தூரம் வரை போய் வரலாமுன்னு  சொன்னாங்க.  நண்பர் தம்பதிகள்  ரெண்டு பேரும் நடக்கணுமுன்னா ரெடின்னு இருப்பவர்கள். நியூஸியில் இருந்தப்பவே  நேச்சர் வாக் என்று போகாத இடமில்லை. சிலசமயம் (கொஞ்சம் சின்ன வாக். அரை மணி என்றால்...) நாங்களும் கூடப் போயிருக்கோம்.  அப்பவே அந்த அழகு. இப்போ குண்டடிச்சுக் கிடப்பதால், மெள்ள  சாக்கு எதாவது கிடைக்குமான்னு  தேடுவது .....  உண்டு.

நண்பருடைய வண்டியில் கிளம்பினோம்.  உயரப்போகும்போது குளிர் இருக்கும் என்று நம்ம ஜாக்கெட்டுகளை நம்ம வண்டியில் இருந்து எடுத்து அந்தக் கார் டிக்கியில் போட்டார் கோபால்.

ஒரு இருபது கிமீ தூரம் தூரம் சமமான சாலையில் பயணிச்சதும், மலை மேல் ஏறும் ஏற்றம் ஆரம்பிச்சது. இன்னும் ஒரு பதினாறு கிமீ போனதும் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திட்டார். லுக் அவுட்டாம். கீழே இறங்கியதும், கண்ணுக்கு நேராக கோல்ட்கோஸ்ட் கோஸ்ட்லைன்  கட்டடங்கள் எல்லாம் தெரியுது. நல்ல உயரத்தில் இருக்கோம்.
பிறகு அதே மலைப்பாதையில்  போய்க்கிட்டு இருக்கும்போது மலைச்சரிவில்  ஒரு இடத்தில் கொஞ்சம் கூட்டம்.  வண்டிகள் எல்லாம் நிக்குது. என்னன்னு பார்க்காமல் போகமுடியுமோ?
Eagle Heights என்ற இடம் இது.  Hang Gliding   செய்ய ஒருத்தர் தயாரா இருக்கார்.  நல்ல சமயத்துலே வந்தோம் டேக் ஆஃப் எப்படி இருக்கு பார்க்கலாமுன்னு  கேமெராவில் மூவி செட்டிங் மாத்தி  வீடியோ எடுக்க ஆரம்பிச்சேன்.
 இன்னொரு பக்கம் Parasailing செய்ய  ரெடியாறார் இன்னொருத்தர்.  காத்து எதிர்த்திசையில் அடிக்குதுன்னு கிளம்பாமக் காத்துக்கிட்டு இருக்காங்க. ஏற்கெனவே  கிளம்பினப் போனவர்கள்  ரொம்பதூரத்தில் வானத்தில் வட்டம் போட்டுக்கிட்டு இருந்தாங்க.
கீரிக்கும் பாம்புக்கும் சண்டை நடக்கப்போகுதுன்னு  காத்திருப்போம் பாருங்க அதேதான்.  நடக்கறவிதமாத் தெரியலை. கேமெராவை ஆஃப் செய்யலாமுன்னா....  ரத்தம் கக்கிச் சாவோமோன்ற பயம் வேற:-) ஆறு நிமிட்டுக்கு மேலாகியும்... ஊஹூம்...  சரிவிலிருந்து  மேலே வந்த நாங்கள்  எதிர்சாரியில் கொஞ்ச தூரத்தில் நிக்கும் கார் கிட்டே போகும்போது ஹேங் க்ளைடர் ஒருத்தர் நம்ம தலைக்குமேலே போறார்!

 இந்த வீடியோ க்ளிப்பை ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்யப்போறேன். யூ ட்யூபை விட சீக்கிரமா லோட் ஆகிருது அங்கே.

மீண்டும் கார் பயணம் மலைப்பாதையில்.  கொஞ்ச தூரத்தில் சின்ன ஊர் ஒன்னு. Canungra village. 'பக்தி யோகா' இதுவரை வந்துருக்கு. வரப்போகும் பக்தி இசை நிகழ்ச்சிக்கான போஸ்ட்டர் ஒன்னு.  ஸ்பிரிட் ஆஃப் பக்தி !ஆன்மாவுக்கு போஷாக்கு தரும் இசை(யாம்)  டிக்கெட் 20 டாலர்.  சாய்ஞ்சுக்க  குஷன், ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்,  சூடா  ஃப்ளாஸ்கில் ச்சாயா எல்லாம்  எடுத்துக்கிட்டு எட்டு ஆகஸ்ட், மாலை     ஏழுமணிக்கு  வந்துடணு(மா)ம். அடடா....  அப்போ நாம் இங்கே இருக்கமாட்டோமே........

இன்னும் ஒரு பத்து கிமீ போறோம். வேற ஒரு ஊர். சாலையின் கடைசியில் கிடைச்ச இடத்தில் வண்டியை நிறுத்திட்டு  இறங்கி எதிரில் இருந்த இத்தாலியன் ரெஸ்ட்டாரண்டில் (லஞ்ச் அவர் முடிஞ்சு அப்போதான் மாலைச் சமையலுக்கு ஏற்பாடுகள் தொடங்குது)இருந்தவரிடம், கேலரி வாக் எங்கே இருக்குன்னதும்  அவர் பொறுமையாப் போகும் வழியை இங்கே திரும்பணும்  இப்படி இவ்ளோதூரம் போய் வளைஞ்சு வளைஞ்சு போகும் பாதையில் போகணும், அதுக்குப்பிறகு இடது பக்கம் என்றெல்லாம் விலாவரியா  கையெல்லாம் ஆட்டி ஆக்‌ஷனோடு சொன்னார்! வளைஞ்சு வளைஞ்சக்கு ஒரு பாம்பு டான்ஸ் வேற! நல்ல மனுஷர்.

இங்கே தானே  இருக்குன்னு அவர்சொன்னபடி நடக்க ஆரம்பிச்சோம்.... அதுபாட்டுக்குப் போகுது. ஒரு முக்கால் கிமீ நடந்துருப்போம். அதுக்குள்ளே நண்பர், இது வேலைக்காகாது. நீங்க இங்கேயே இருங்க. நான் போய் காரை எடுத்துக்கிட்டு வர்றேன்னு சொல்லி (என் காதில் தேனை வார்த்துட்டுப்)போனார்.


கேலரி வாக் என்ற பெயரைப் பார்த்தாலே  விவரம் புரிஞ்சுருக்குமே! எல்லாம் கலைப்பொருட்கள்!  துணிமணிகள் தொடங்கி ஜெம் ஸ்டோன்ஸ் பதித்த நகை நட்டுகள், (அதுவும் பட்டை தீட்டப்படாத கற்களை கண்டா முண்டான்னு  வெள்ளியில் பதிச்சு வச்சுருக்கும் ஃபேஷன் ஜுவல்லரி) வீட்டு அலங்காரப்பொருட்கள், காஃபி ஷாப்ஸ்,  இப்படிச் சுற்றுலாப் பயணிகளை மொட்டை அடிக்க வச்சுருக்கும் இடம். எதை எடுத்தாலும் கொள்ளை விலை.

நகைக்கடை, நட்டுக்கடை, துணிக்கடைன்னு  கேலரிகளைக் கொஞ்சம் வேடிக்கை பார்த்துக்கிட்டே வாக் போகணும். எதெடுத்தாலும் ஹேண்ட்மெட் என்ற பெருமை வேற! பாட்டரி என்று வெள்ளைக் கணிமண்ணால் செய்த பாண்டங்களும் உண்டு.
வாசலில் ஒரு மயில் நின்னுக்கிட்டு இருக்கேன்னு ஒரு கடைக்குள் நுழைஞ்சேன். கண்ணாடியில் செய்த அலங்காரப்பொருட்கள்!  எங்கூர் மவோரி டிஸைன்கள்  சில இருக்கு.  அதை ஏன் அங்கே போய் வாங்கணும்?
கண்ணாடியில் செய்த  பெண்டெண்டுகள் பலவித  ஸ்டைல்களில். மகளுக்கு ஒன்னு வாங்கலாமான்னு யோசிக்கும்போது, கோபால் ஒரு வாத்தைப் பிடிச்சுக்கிட்டு வந்தார். அவர் ஆசையை ஏன் கெடுப்பானேன்னு  ச்சும்மா இருந்தேன். இப்ப ஸேலில்  வேற இருக்குன்னு தெரிஞ்சது.(அதானே    பார்த்தேன்!) வாங்கறது  வாங்கறோம்... அது யானையா இருக்கட்டுமேன்னு தேடுனதில்  அப்டி ஒன்னும்  ஆப்டலை:-(
என்னதான் ஸேலில் இருந்தாலுமே  'கேட்டால்  கிடைக்கும்' என்ற தத்துவத்தின்படி, 'எதாவது ஃபர்தர் டிஸ்கௌன்ட் உண்டா?' னு கேட்டு வச்சதில்  'ஒரு செட் காதணிகள்  இலவசம்' என்று சொல்லி எடுத்துக் கொடுத்தார்  விற்பனையாளர்.  சிலபேருக்கு  வேற எதாவது மலிவு உலோகத்தில் செஞ்சதைக் காதில் போட்டால் அலர்ஜி ஆகுதுன்னு  காதணிகளுக்கு மட்டும் வெள்ளித் திருகாணி போட்டு வச்சுருக்காங்கன்ற விவரமும் சொன்னாங்க அந்தப் பெண். கரு நீலத்தில் பார்க்க ரொம்பவே சுமாரா இருக்கு. இதைத் தனியா விற்பதானால் என்ன விலைன்னதுக்கு, வெள்ளி சேர்ந்திருப்பதால்  பதினெட்டு டாலர் என்றார்.  இருக்கட்டும்.

வாத்தை பொதியுமுன் இன்னொரு வாத்தும் இருக்கு பாருங்கன்னு உள்ளே இருந்து வேறொன்னைக் கொண்டு வந்ததில், முதலில் எடுத்த  வாத்தே  கலர்ஃபுல்லாக இருக்கு. இதெல்லாம் கோல்ட்கோஸ்டைச் சேர்ந்த  Jenny Chong என்பவரின் சொந்த டிஸைன்களாம். சேர்க்கும்  நிறங்கள்,  எல்லாம் ஒவ்வொரு பொருளுக்கும் வேற வேற காம்பினேஷன் என்பதால் ஒன்னைப்போல ஒன்னு இருப்பதில்லை.

இவுங்க டிஸைன் செய்யும் கண்ணாடி நகைகளை  Dichroic Glass பயன்படுத்திச்  செய்யறாங்களாம்.  நாஸாவில்  ஸாட்டிலைட்களுக்கான (மிர்ரர்) கண்ணாடிகளுக்காகவே கண்டுபிடிக்கப்பட்டதாம்  இந்த வகை. பொதுவான கண்ணாடிகளைவிட அளவுக்கதிகமான சூட்டையும் தாங்கும் வகைகளாம். (இருக்கும் இருக்கும். வானத்தில் ரொம்ப உயரத்தில் சூரியன் இன்னும்  தாங்கமுடியாத உஷ்ணத்தில் இருக்குமே!) இந்தக் குறிப்பிட்ட வகைக் கண்ணாடிகளை  அமெரிகாவில் இருந்து இறக்குமதி செஞ்சுக்கறாங்க.

இதில் குறிப்பிட்ட உலோகங்களையும்,  ஆக்ஸைடுகளையும் பயன்படுத்தி கண்ணாடிச்சூளையில் சுமார் 11 மணி நேரம் வச்சுச் சுட்டு எடுப்பதால் ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒவ்வொரு நிறங்கள் பளிச்சிடுவதும் சில சமயம் ஒளி ஊடுருவிப்போவதும் உண்டாம். சூளைச்சூட்டில் உலோகங்கள் உருகிப் பரவும்போது இது வெவ்வேற டிஸைனாகவும்  ஆகிருது. ஒரே கலவையில்  உருவாக்கிய பொருட்கள்கூட ஒன்னுபோல் வர்றதில்லையாம்.  ஷேப் மட்டும்தான் இருக்கும்.  ஒரே மாதிரி ரெண்டு பெண்டன்ட் கிடைக்காது.

எல்லாவித உடைகளின் நிறத்துக்கும் ஓரளவு பொருந்துவதுபோல் இருந்த ஒரு பென்டன்டைத் தேடி எடுத்து அந்தக் காதணிகளுக்கு பதிலா இதைக் கொடுக்கமுடியுமான்னு கேட்டதும்  திகைச்சுப்போன விற்பனையாளர், இது அதிக விலையாச்சேன்னாங்க. காதணி விலையைக் கழிச்சுட்டு, அதிகப்படி ஆகும் மீதியைக் கொடுக்கறேன் என்றதும்  சரின்னுட்டாங்க.

இதுவரை இப்படி ஒரு பேரத்தைப் பார்க்காத  அதிர்ச்சி அவுங்க முகத்தில். சொல்லவும் செஞ்சாங்க:-)  அதை அப்படியே கொடுக்காம, ஒரு கருப்பு கயிறில் கோர்த்துக்கொடுக்கும்போது, வேணாம் என்றாலும் கூட பெண்டண்டுக்கு இப்படிக் கோர்த்துக்கொடுப்பதுதான் முறையாம்!

 இந்தமாதிரி வியாபாரம் பண்ணால் விடிஞ்சது போங்க. எங்கூரில் இந்தக் கருப்புக்கயிறுக்கே தனியா வாங்குனா நாலு டாலர்  கொடுக்கணும்.

தங்கக்கடற்கரையில் இருந்த கடை,  இப்போ மலைக்கு (Tamborine Mountain)  வந்து வருசம் எட்டாகப் போகுது. இவ்ளோ விசாரிச்சவள்,வாசலில் இருக்கும் மயிலைப் பத்தி விசாரிக்காமல் இருக்க முடியுமோ?

பாசிமணிகளால் செஞ்ச மயில்.  செஞ்சு முடிக்க ஆறு மாசம் ஆச்சாம்.  விலைதான் ரொம்பக் கொஞ்சமா சொல்லிட்டாங்க. அதான் வாங்கலை.  ஜஸ்ட் எழுநூற்றி ஐம்பது டாலர்தான்.



அடுத்துப்போன இடம் தோழியின் ச்சாய்ஸ்.  வயது வந்தவர்களுக்கு மட்டுமே ஆனது.  தயங்கி நின்ன என்னிடம், இருமல் மருந்து குடிப்பது மாதிரியே என்றது பிடிச்சிருந்தது. மூணு வகைகள் வாங்கி ஒவ்வொன்னையும் நாலு துண்டுகளாக்கி ருசித்தோம்.  எனக்காக  துளியூண்டு லிக்கர் சேர்த்தவைகளையே தேர்ந்தெடுத்தாங்களாம். மனம் நிறைந்த நன்றீஸ்ப்பா  லக்ஷ்மி.   போதை ஏறி ஆடப்போறேனோன்னு பயந்துக்கிட்டே முழுங்குனேன்:-)

ஜெர்மன் குக்கூ கடிகாரம் கடை ஒன்னு இருக்கு  பார்க்கலாமுன்னு தோழி கூட்டிப்போனாங்க. ஏற்கெனவே  நம்ம உலகப்பயணத்தில் ஆஸ்ட்ரியாவில் ஸ்வாரோஸ்கி ஃபேக்டரி போனபோது,  இந்தக் கடிகாரத் தொழிலையும்  பார்த்ததால்  இப்போ  கடைக்குள்ளில் போகலை. வெளியே இருந்தே சில க்ளிக்ஸ்.

இருட்டுமுன் மலைப்பாதையைக் கடந்துடலாமேன்னு நினைச்சுக் கார் நிறுத்திய இடத்துக்கு  நடையைக் கட்டுனோம்.  மணி நாலே முக்கால்.  ஒரு மணி நேரப்பயணம் தோழி வீட்டுக்குப் போக.  சாயா குடிக்கலாமான்னு  கேட்ட தோழியிடம், பின்னொருக்கில் ஆகட்டே. நாளைய தினத்தை  ஃப்ரீயா வச்சுக்குங்க. சாப்பிட எங்கியாவது போகலாமுன்னு   சொல்லிட்டு, நம்ம வண்டியில்  அக்வேரியஸ் வந்து சேர்ந்தோம்.  ஒரு பனிரெண்டு  கீமீதான்.  ட்ராஃபிக் அதிகமா இருந்ததால்  இருபது  நிமிட் ஆச்சு.

அங்கே நடந்ததால், பீச் வாக்  போகலை.  ப்ரெட்டும் பாலுமா  டின்னர்.

நாளைக்குக் கதை நாளைக்கு...........



தொடரும்..........:-)


19 comments:

said...

படிக்க முடியலையம்மா!
ஒரே ஓவர் டோஸ்----எல்லாவற்றையும் படிச்சு கிரகிக்கணும்; முடியலை;
இதனால், உங்கள் உழைப்பு விழலுக்கு இரைத்த நீராகும்!

அன்புடன்!

said...

வாங்க நம்பள்கி.

அட! அப்டீங்கறீங்க!

ஆமாம்... எங்கே உங்களை ரொம்பநாளாக் காணோம்?

said...

அப்படித்தான்!
ஆறு மாதம் அடிக்கடி காணாமல் போய்விடுவேன். இது எனக்கு வாடிக்கை!


நீங்க ரொம்ப அதிகமா-பட்னகள்-விஷயங்கள்- கொடுகிறீங்க!
என்னாலேயே படிக்க முடியலே! என்னென்றால்...நான் அரை மணி நேரத்தில் ஒரு குமுதம், ஆ.வி படிக்கக் கூடியவன்.
எனக்கே உங்கள் இடுகை அதிகமாக தெரிகிறது.
நீளத்தை--படங்களை குறையுங்கள்!

----
அன்புடன்...

said...

வழக்கம்போல் அழகான புகைப்படங்கள். குட்டி விமானப் பயணப் புகைப்படங்கள் மிக அருமை.

said...

தொடர்ந்து உங்களுடன் பயணித்து பார்த்துக் கொண்டு வருகின்றோம்....அழகு புகைப்படங்கள்...

said...

படங்கள் அருமை! உங்களுடன் பயணிக்கும் உணர்வு தரும் பதிவின் நடை!
நன்றியம்மா!

said...

எடுத்த படங்கள் அத்தனையும் சூப்பர். நான் படிப்பது 3 பதிவுகள் தான். அதனால் நீளம் தெரியவில்லை. வண்ணங்கள் அழகு துளசி. அதெப்படி அங்க்க
கூட்டன் டாக் வந்தது.

said...

படங்கள் அத்தனையும் அருமை . ஒன்னு ஒண்ணா பாத்துட்டே அட! அருமையான படபிடிப்பு!! , அடடா எவ்வளவு அழகு ன்னு , ஒவ்வொன்னுக்கும் adverbs and adjectives இல்லாம கடக்க முடிவதில்லை . நன்றி துளசி .



வாத்து , மயில் , pendent சூப்பர் !!!

said...

தங்கள் துளசிதளம் மூலம் திவ்யதேச சிறப்புகளையும் தெரிந்து கொண்டேன் இன்னும் நீங்கள் நிறைய கோவில்களை பற்றி பதிவிடவேண்டும்.
பேரருளாளன் உங்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் அருளட்டும்

said...

தங்கள் துளசிதளம் மூலம் திவ்யதேச சிறப்புகளையும் தெரிந்து கொண்டேன் இன்னும் நீங்கள் நிறைய கோவில்களை பற்றி பதிவிடவேண்டும்.
பேரருளாளன் உங்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் அருளட்டும்

கிருஷ்ணன்
துபாய்

said...

@நம்பள்கி,

குமுதம் ஆவிக்கு அரைமணி அதிகம் இல்லையோ!!!!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

குட்டி விமானத்தை ரசித்தமைக்கு நன்றிகள்.

said...

வாங்க துளசிதரன்.

தொடர்ந்து வருவது மிகவும் மகிழ்ச்சி! நன்றீஸ்.

said...

வாங்க செந்தில் குமார்.

கதைசொல்லியின் நடையை ரசித்தமைக்கு நன்றிகள்.

said...

வாங்க வல்லி.

அது ஜெர்மனிக்காரர் வச்சுருக்கும் கடை!

டயரிக்குறிப்புன்னு தலைப்பு வச்சுக்கிட்டு ஒருநாள் நடந்த சம்பவத்தை நூறு பதிவாப் போடமுடியலை என்பதால்தான் பதிவு நீளமாப்போகுது. ஒன்னும் நடக்காத நாட்களில் 'சுருக்'

ஆனா எனக்குன்னே எதாவது நடந்துருதேப்பா:-))))

said...

வாங்க சசி கலா.

ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு நன்றீஸ்ப்பா.

said...

வாங்க கிருஷ்ணன் பரசுராமன்.

வணக்கம். முதல் வருகைக்கு நன்றி.

இன்னும் ரொம்பவே அழகாக ஏராளமானவர்கள் திவ்ய தேசக் கோவில்களைப் பற்றி எழுதிவருகின்றனர். கூகுளிச்சால் கிடைக்கும்.

நான் ஏதோ கடுகளவு எழுதிக்கொண்டிருக்கின்றேன். (இது தேவலோகக் கடுகு!)

தங்கள் ஆசிகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

said...

Madam post konjam pirichi part by part podunga. Neelama irukku post.

said...

Matrapadi super vazhakam pola