Tuesday, June 28, 2011

சி(ட்)டி பேலஸ் போகலாமா? ........((ராஜஸ்தான் பயணத்தொடர் 26)

அடுத்த ஸ்டாப் நமக்கு சிட்டிப்பேலஸ். நம்ம ஜக்தீஷ் மந்திர் இருக்கு பாருங்க. அங்கிருந்து நேராப்போனால் ஒரு நிமிச நடைதான். வலப்பக்கம் சந்துத்தெருவில் நுழைஞ்சால் நம்ம ஹவேலி வந்துரும். அரசர்களும் குடும்பங்களும் ஜக்தீஷ் மந்திருக்கு தினப்படி வந்து போவாங்களாம். திருவனந்தபுரம் நினைவுக்கு வருது.
அரண்மனைக்கே உரிய பெரும் சுவர்களையும் காவல்வீரர்களையும் கடந்து உள்ளே போறோம். நுழைவுச்சீட்டும் கெமெராவுக்கான சீட்டும் வாசலுக்கு வெளியே இருக்கும் கட்டிடத்தில் வாங்கிக்கணும். வண்டியை உள்ளே கொண்டு போய் நிறுத்திக்கலாம். எல்லாம் ஒரு ஜம்பம்தான்:-)

விசாலமான வெளி முற்றத்தில் தோட்டம் அட்டகாசமா இருக்கு. அதுலே இடப்புறம் யானைகளைக் கட்டிவைக்க துவாரமுள்ள கற்களைப் புதைச்சு வச்சுருக்காங்க. வலப்புறம் புலிக்கூண்டுகள். அரண்மனை வாசலில் மேவார் நாட்டுச் சின்னம். அதுக்குக் கொஞ்சம் தள்ளி சூரியனின் உருவம். இந்த ராஜாக்கள் சூர்ய வம்சத்தினர். பொதுமக்கள் இந்த முற்றத்தில் கூடி சூரியனை வழிபடுவார்களாம்.

வாசலுக்கு ஏறிப்போகும் படிக்கட்டுகளையொட்டி நீளமான மேடை அமைப்பு. அதுலே ரெண்டுவிதமான உயரங்கள். 'குதிரையின் மீது ஒரே தாவாக தாவி ஏறினார்' எல்லாம் கிடையாது. குதிரை மேடைக்குப் பக்கத்தில் வந்து நின்னதும் அரசர் மேடையோரம் நடந்து போய் ஏறிக்குவார். அப்ப யானை ஏறனுமுன்னா? அதுக்குத்தான் இன்னும் கொஞ்சம் உயரமா இருக்கும் மேடை அமைப்பு:-)))))
பத்துப்பதினைஞ்சு படிகள் ஏறி முன்வாசலைக் கடந்து உள்ளே போனதும் வலது பக்கம் ஆயுதசாலை. நாலு படியேறிப்போகணும். இங்கெல்லாம் வாசல்நிலைகள் உயரம் குறைவா இருக்கு. தலையைக் குனிஞ்சுதான் கடக்கணும். பொதுவா ராஜபுத்திரர்கள் நல்ல உயரமாத்தான் இருப்பாங்க. அப்படி இருக்க சின்ன வாசல்.....காரணம்?

எதிரிகள் ஆக்ரமிச்சால் டக்ன்னு உள்ளே வர முடியாமல் கொஞ்சமாவது தாமதிக்கணும் என்பதற்காகவாம்! சுவர் முழுசும் துப்பாக்கிகள் வரிசை போட்டு நிற்க, கேடயங்களும் வாட்களும் கத்திகளுமா கண்ணாடிப் பெட்டிகளுக்குள் காட்சிக்கு வச்சுருக்காங்க. 'இடுப்பில் இருந்த கட்டாரியை உருவி, இருளில் பதுங்கி நடக்கும் அந்த உருவத்தின் மேல் எறிந்தான்' ன்னு சரித்திரக் கதைகளில் வாசிச்சு இருக்கோம் பாருங்க. அந்தக் கட்டாரியை இப்போதான் நேரில் பார்க்கிறேன். ரெண்டு பக்கமும் கூர்மையா இருக்கும் கத்தி! எறிஞ்சால் சக்ன்னு சொருகிடும் இல்லே?
1527 ஆம் வருசம் ஃபிப்ரவரி மாசம் 22 தேதியில் நடந்த Bபயானா சண்டையில் பயன்படுத்திய முரசு, ட்ரம்பெட்ஸ், படைவீரர்கள் அணிவகுத்துப்போகும்போது கையில் ஏந்திப்போன பதாகைகள் கொடிகள் இப்படியெல்லாம் கூட காட்சிக்கு வச்சுருக்காங்க. மஹாராணா ப்ரதாப் சிங்கின் வீரவாள் இருபத்தி அஞ்சு கிலோ எடையாம். அதுவும் ரெண்டு வாட்களை எப்போதும் வச்சுருப்பாராம். ஆயுதம் இல்லாத எதிரியுடன் சண்டை செய்ய நேரிட்டால் எதிரிக்கு 'இந்தா ஆயுதம். இதைவச்சு என்னோடு சண்டைபோடு'ன்னு சொல்லி அந்த இன்னொரு வாளை நீட்டுவாராம்!

அங்கிருந்த ஒரு சித்திரத்தில் குதிரையில் அமர்ந்திருக்கும் ஒருமுகலாய வீரனையும் அந்தக் குதிரையையும் ஒரே வாள் வீச்சில் அப்படியே ரெண்டாய் பிளந்ததை வரைஞ்சு வச்சுருக்காங்க. பார்க்கும்போதே நடுக்கம்தான்.
ஒரு இடத்தில் இந்த மேவாரை இதுவரை ஆண்ட ராஜவம்சத்தினரைப் பற்றிய விளக்கங்கள் ஆங்கிலம் ஹிந்தி என்ற இரண்டு மொழிகளிலும் இருக்கு. சரித்திர ஆராய்ச்சி செய்யும் நபர்களுக்கு இது ஒரு ஹார்லிக்ஸ். அப்படியே எடுத்துக்கலாம்:-))))
Dதுனிமாதா கோவில் இங்கேதான் இருக்கு. இதுதான் மஹாராணா உதய்பூர் நகரை நிறுவுவதற்கு முன் இந்த இடத்தை அடையாளம் காண முதலில் கட்டுனது. தும்பிக்கை ஆழ்வாரும் மாதாவும் பளிங்குலே செஞ்சு சுவர் மாடத்தில்! இங்கிருந்து மாடிக்குப் படிகள் போகுது.

விசாலமான முற்றம். ஒரு பக்கம் இருக்கும் பெரிய கூடங்களில் ஓவியங்கள். ஹாலின் நடுப்பகுதியில் மஹாராணா பிரதாப் அவர்களின் வாளும் சேணம் பூட்டிப் புறப்படத் தயாராக அவரோட பட்டத்துக் குதிரையான சேதக்கின் யானைத் தும்பிக்கையுடன் இருக்கும். உருவச்சிலையும் காட்சிக்கு. லைஃப் சைஸ்!
போர்களுக்காகவே ஒரு முழு கேலரியை ஒதுக்கிட்டாங்க. சண்டைக்காட்சிகளே! சேதக் கேலரின்னே இதுக்குப் பெயர்.

மேலே படத்தில் இருக்கும் தொட்டி போன்ற அமைப்பைப் பாருங்க. ஒரு நல்ல நாள், இல்லே இளவரசருக்கு ராஜாவாப் பட்டம் கட்டும் நாள் இப்படி விசேஷங்களில் இந்தப் பளிங்குத் தொட்டியை வெள்ளிக்காசுகளால் நிறைச்சுருவாங்களாம். அப்புறம்? இந்த மாடத்தின் மேல் இருந்து வெளிப்பக்கமா அரண்மனை வெளி முற்றத்தில் காத்து நிற்கும் பொது மக்களுக்கு தானம் செய்வாராம் புது அரசர். தட்டுதட்டாக பணியாட்கள் வாரித்தர உப்பரிகையில் இருந்து வெள்ளிக்காசுகளை மழைமாதிரி பொழிவாராம். ஹூம்.... இதுமட்டும் எனக்கு மன சமாதானமே இல்லை. எத்தனைபேர் கூட்டத்தில் முண்டியடிச்சு, நெருக்கடியில் சிக்கி உயிர் இழந்தாங்களோ? எல்லோரையும் வரிசையில் வரச்சொல்லிக் கைப்பிடி எடுத்து வழங்கி இருக்கலாம் இல்லே?
நதிநீர் இணைப்பை உலகில் முதன்முதலாச் செஞ்சு காமிச்சவங்களும் இந்த மேவார் நாட்டு மன்னர்களே! (படத்தைக் கிளிக்கிப் பெருசு பண்ணிப் பாருங்க!)
மேல் மாடியில் வரிசையா வெராந்தாவில் நிற்கும் அலங்காரத்தூண்களை அடுத்துள்ள பெரிய முற்றத்தில் பளிங்குக்குளம். இதில் தண்ணீர் நிரப்பி முக்கியமாக அழைக்கப்பட்ட விருந்தினருடன் அரசர் ஹோலிப் பண்டிகை கொண்டாடுவாராம். கட்டிடத்துன் உள்ளே இருக்கும் இன்னொரு பளிங்குக் குளத்தில் வண்ணங்கள் கலக்கி தன் குடும்பத்தினருடன் நீரை வாரித்தெளித்து ஹோலி கொண்டாடுவாராம். இந்தக் குளத்தின் மேலாக இருக்கும் மண்டபக்கூரையில் ஊஞ்சல் போட்டு அதில் அமர்ந்து வீசி ஆடும்போது குளத்தின் தண்ணீரைக் கால்கள் தொட்டுப்போகும் வகையில் அமைச்சுருக்காங்க. கூரையில் இருந்து தொங்கும் கிளிக்கூடுகள். காதுக்கு இனிமையாக் கொஞ்சும் கிளிப்பேச்சு நல்லாத்தான்யா அனுபவிச்சு இருக்காங்க, இல்லே? (நாம் பார்த்தப்ப ஊஞ்சல் பலகை மிஸ்ஸிங்:( சின்னதா ஒரு அலங்காரம் நடுவில் வச்சுருந்தாங்க)
இங்கிலாந்து அரசர் அஞ்சாம் ஜார்ஜின் இந்திய விஜயத்தின் போது, இங்கே நாட்டில் உள்ள எல்லா அரசர்களையும் சந்திக்க ஒரு ஏற்பாடு செஞ்சுருந்தாங்க 12 டிசம்பர் 1911 வது வருசம் தில்லியில். நடந்தது. ஒவ்வொரு அரசருக்கும் தனித்தனியா இருக்கைகள் தயாரிச்சு அவர்கள் பெயரெல்லாம் எழுதிவச்சுட்டாங்க. அந்தக் கூட்டத்தில் ஒரு மன்னரைத்தவிர மற்ற அனைவரும் கலந்துக்கிட்டாங்க. அந்த ஒருவர் ஆங்கில ஆதிக்கத்தை அடியோடு வெறுத்த மேவார் மன்னர் மஹாராணா ஃபடே சிங். கோபம் வந்துருக்கு கிங் ஜார்ஜ் அஞ்சுக்கு. அந்த நாற்காலியை மஹாராணாவுக்கு அனுப்பிவச்சுட்டார். அதையும் இங்கே காட்சிக்கு வச்சுருக்காங்க.

தொடரும்..............:--)

12 comments:

said...

ஆகா கண்டுவிட்டோம் யானைத்தலை சேதக். கம்பீரமாக நிற்கிறது.

பளிங்குக் குளத்தில் ஊஞ்சல்....ஆடிவிட்டேன் :)

said...

//குதிரை மேடைக்குப் பக்கத்தில் வந்து நின்னதும் அரசர் மேடையோரம் நடந்து போய் ஏறிக்குவார். அப்ப யானை ஏறனுமுன்னா? அதுக்குத்தான் இன்னும் கொஞ்சம் உயரமா இருக்கும் மேடை அமைப்பு//

அப்ப, இம்சை அரசரின் குதிரையேற்றக்காட்சிகளெல்லாம் நிஜமா நடந்துருக்குது போலிருக்கு :-))

குளத்தில் கால்தொட ஊஞ்சலாட்டம்.. ஹையா!! செம ஜாலியாத்தான் இருந்திருக்கும் :-)

said...

காசு வீசி எறிந்து மக்களை பொறுக்க வைத்துவிட்டாரே.... :((((

பயணம் தொடரட்டும்.....

said...

குளத்து நீர் காலில் படும்படி ஊஞ்சலா!!!! சூப்பராக இருக்குமே!!!!
என்னமா அனுபவிச்சிருக்காங்க………………..

said...

வாங்க மாதேவி.

ஆஹா..... இதல்லவோ ராஜபோகம்!!!!

said...

வாங்க அமைதிச்சாரல்.

அட! இந்த இம்சை அரசன் என் நினைவுக்கு வரலையேப்பா!!!!!

டாங்கீஸ்:-)

எல்லாம் (ஒரு மாதிரி) ஜாலிதான்:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

எனக்கும் இப்படிப் பொறுக்க வச்சது மனக்கஷ்டம்தான்:(

said...

வாங்க கோவை2தில்லி.

ராஜயோகம் வேணுமுல்லே இப்படியெல்லாம் அனுபவிக்க!!!!!

said...

பெங்களூர் லேண்ட் மார்க் கடைல இந்த மேவார் ராஜாக்கள் பத்தின ஒரு போட்டோ புஸ்தகம் உண்டு. இவாளோட கலர் கலரான ராஜகம்பீரமான உடையலங்காரம் & அரண்மனை அழகுல சொக்கி போய் அந்த புஸ்தகத்தை விழுந்து விழுந்து படிச்சதுண்டு (விலைக்கு எல்லாம் வாங்கலை, 1800 ரூபாயாம் ஆத்த்த்தாடி!). அதே திருப்தி இப்ப டீச்சரோட பதிவுல கிட்டியது! தாங்க்யூ டீச்சர்!

said...

ராஜஸ்தான் உள்ளயும் வந்துட்டேன் ;)

said...

வாங்க தக்குடு.

நம்ம தளத்தில் இப்போ ஸேல். அம்பது% . உடனே 900 ரூ அனுப்பிவையுங்க:-))))))

said...

வாங்க கோபி.

உள்ளே வந்து கொஞ்சமாவது 'படிச்சுட்டு' போகணும்,ஆமா:-)