Monday, June 27, 2011

வா வா முத்தம் தா........((ராஜஸ்தான் பயணத்தொடர் 25)

திருவிழாவா? அப்ப நாளைக்குச் சட் புட்டுன்னு சுத்திப் பார்த்துட்டு நாலுமணிக்கு முன் அறைக்கு வந்துறணும். நன்றி சொல்லிட்டு மாடிக்குப்போய் அஞ்சு நிமிசம் வியூ பார்க்கலாமுன்னு படி ஏறினோம். போனால்.... ரூஃப் கார்டன் ரெஸ்டாரண்டு இருக்குன்னாங்களே..... அது! கூட்டமெல்லாம் இங்கேதான் இருக்கு. மூணு குடும்பம் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. இங்கேயும் நாலைஞ்சு மேசை போட்டு வச்சுருக்கு. ஒரு பக்கம் தரையில் மெத்தைகள் விரிச்சு சாய்மான திண்டுகள் எல்லாம் போட்டு வச்சுருக்காங்க. அதுலே குழந்தைகள் உருண்டு விளையாட அப்பாக்கள் தீர்த்தமாடிண்டு இருக்கா.
அமைதியான சூழல். கண்ணெதிரே உதய்பூர் ஏரியில் இருக்கும் மாளிகை. இப்போ அது ஹொட்டேலா இருக்கு. தாஜ் ! நம்ம 'பாண்டு' படத்தில் எல்லாம் நடிச்சுருக்கே! விளக்கொளியில் மின்னும் ஏரி! இந்தப் பக்கம் கண்ணை ஓட்டினால் இப்போ நாம் போய்வந்த ஜெக்தீஷ் மந்திர். இன்னொரு பக்கம் சிட்டி பேலஸ்! அட! இவ்ளோ கிட்டேயா இருக்கு!!!!
அக்கம்பக்கத்து ஹவேலிகளின் சாப்பாட்டுக்கூடங்களில் கூட்டமே இல்லை. அப்போ..... நம்மதுதான் பெஸ்ட் கண்ணா பெஸ்ட்:-) போனதுக்கு இருக்கட்டுமுன்னு ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிட்டோம். ரூஃப்லே கார்டன் எங்கேன்னு தேடினேன். ஒரு பூந்தொட்டி வச்சுருக்காங்க நடுவில்:-)
மறுநாள் காலை ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு ரூஃப் டாப் வந்திட்டோம். அருமையான சூரிய உதயத்தின் பின்னணியில் கோவில் கோபுரம்! காலை நேர உணவுக்காக குரங்கன்ஸ் எதிர்சாரியில் கட்டிடம் கட்டிடமா பால்கனியில் தாவிப்போய்க்கிட்டு இருக்குதுகள். அதென்னவோ நம்ம பக்கம் வரலை. அதான் நாம் ஏற்கெனவே இருக்கோமேன்னு நினைப்போ? அழகா அணில் ஒன்னு வந்து ராத்திரி மக்கள்ஸ் விட்டுப்போன உணவு எதாவது கிடைக்குமான்னு பார்க்குது.


ஒரு கைடு வேணுமுன்னு சொல்லி வச்சுருந்தோம். அவரும் வந்து சேர்ந்தார். எட்டரை மணிக்கு ' மான்ஸூன் பேலஸ் ' பார்க்கப் போறோம். சஜ்ஜன்கட் என்னும் ஒரு மலையின் மேல் கட்டி வச்சுருக்காங்க. உள்ளே போய்ப் பார்க்க இருவது ரூ கட்டணம் தலைக்கு. மலை அடிவாரங்களிலும் சரிவுகளிலும் இருக்கும் வனத்தில் மிருகங்கள் ஏராளமா(!!!) இருக்காம். அதனால் மலைப்பாதைக்குப் போகும் வழியில் ரெண்டு பக்கமும் உயரமா சுவர் எழுப்பிக் கம்பி வேலி போட்டு வச்சுருக்காங்க.

அப்பப் பார்த்து நம்ம பிரதீப், வண்டிக்கு டீஸல் போடணுமுன்னு சொன்னதும். கைடு கன்ஷ்யாமுக்கு லேசா ஒரு எரிச்சல். ' இங்கே ஏது பெட்ரோல் பங்க்? திரும்ப சிட்டிப் பக்கம் போகணுமே'ன்னார். மேலே போயிட்டு திரும்பி வர எரிபொருள் இல்லைன்னா நமக்கும் கஷ்டமாச்சே! எவ்வளவு தூரம் மலை ஏறணுமுன்னு கேட்டால் 'அஞ்சு' கிலோமீட்டராம். அட! சின்ன மலைதனா?

ப்ரதீபுக்கு உயிர் வந்துச்சு. இன்னும் இருபது கிலோமீட்டருக்கு டீஸல் இருக்குன்னு மலை ஏற ஆரம்பிச்சார். மேலே இருந்து பார்க்கும்போது சுற்றிவர ஆரவல்லி மலைத்தொடர்கள், கீழே சுற்றிவர வறண்டு கிடக்கும் நிலங்கள், அங்கங்கே வயல்கள், பிச்சோலா ஏரியில் ஜொலிக்கும் கட்டிடங்கள் இப்படி கலவையாக் காட்சிகள் கண்ணுலே படுது. கொஞ்சம் காஞ்ச ஊருதான் போல:(

மதிள் சுவரைக் கடந்து முற்றத்துள்ளே கால் வச்சதும் கண்ணெதிரில் அஞ்சடுக்கில் கம்பீரமா நிக்குது இந்த வெள்ளை மாளிகை.
'Bபாதல்' பார்க்கத் தோதா இருக்குமுன்னு இங்கே சஜ்ஜன்சிங் மஹராஜா கட்டினது இது. இந்த ராஜஸ்தான் ராஜாக்களுக்கு வானசாஸ்த்திரமுன்னா என்ன அப்படி ஒரு பைத்தியமோ தெரியலை.....ராஜா சஜ்ஜன் சிங்கும் பருவகால மழைமேகம் சஞ்சரிப்பதையும் எப்போ எந்தப்பக்கம் அது கடந்துபோய் பொழியுதுன்னு பார்க்கவுமே இந்த மாளிகையைக் கட்டினாராம். முழுமையாக் கட்டி முடிக்குமுன்பு தன் இருபத்தி ஆறாவது வயசுலேயே சாமிகிட்டே போயிட்டார்:( பத்தே வருசம் அரியணையில் இருந்தாலும் லஞ்சம் ஊழல் ஒழிப்புன்னு பல நல்ல காரியங்கள் நடத்தி இருக்கார். வறண்டு கிடக்கும் நாட்டுக்குப் பல்வேறு வகையில் நீர் கொண்டுவர கால்வாய்கள் எல்லாம் வெட்ட ஏற்பாடு செஞ்சுருக்கார்.
இந்த குன்றுக்கு Bபன்ஸ்தாரான்னு ஒரு பெயர் இருக்கு. கடல் மட்டத்தில் இருந்து 944 உயரத்தில் அமைஞ்சது. 1883 லே கட்டிட வேலை ஆரம்பிச்சது. மேவார் அரச குடும்பம் கோடைகாலத்தை இங்கே வந்து இருந்து சூட்டில் இருந்து தப்பிச்சுக்குவாங்களாம். கோடை முடிஞ்சு மழைக்காலம் ஆரம்பிக்கும்போது மேகங்கள் நாலாபக்கமும் இந்த மாளிகையைச் சூழ்ந்துக்கிட்டு மழை பொழிய ஆரம்பிக்கும். அதைப் பார்த்து ரசிப்பதே ஒரு அற்புதமான அனுபவம். (மழைமேகம் = Bபாதல் (ஹிந்தி)
வா வா முத்தம் தா........ன்னதும்..... மேகம் ஓடிவந்து முத்தமிடும் மழைக்கால மாளிகை!
மழைத்தண்ணீர் சேகரிப்புக்குன்னு அந்தக் காலத்துலேயே அற்புதமா ஒரு ஏற்பாடு செஞ்சுருக்கார் மஹாராணா! ஒவ்வொரு கட்டிடங்களின் மாடிகளிலும் தண்ணீர் சேகரத்துக்கு ஒரு தொட்டி. இதுவே கட்டிடத்தையும் குளிர்ச்சியா ஆக்கும் ஏர்கண்டிஷனர் வேலையும் செய்யுது. இதெல்லாம் நிரம்பி வழியும் தண்ணீரை வீணாக்காமல் கட்டிடத்தின் அடியில் ஒரு பெரிய தொட்டி. கொள்ளளவு சொன்னால் நம்பமாட்டீங்க...... ஒரு லட்சத்து தொன்னுத்தி அஞ்சாயிரம். கிட்டத்தட்ட ரெண்டு லட்சம் லிட்டர்!!!!!
பளிங்குத்தரைகளும் பளிங்குத்தூண்களுமா இருக்கும் மாளிகையில் முன்பக்க ஹாலில் தரை முழுசும் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் குழாய்களை பதிச்சு இருக்காங்க. அந்தப் பக்கம் இருக்கும் இடத்தில் இருக்கைகளைப் போட்டுக்கிட்டு தண்ணீரைத் திறந்துவிட்டால் மாயாலோகமா இருந்துருக்கும்! மாடியில் ஹாலைப் பார்த்த உப்பரிகைகளில் இளவரசிகள் இருந்து சபையில் நடக்கும் நிகழ்சிகளை ரசித்திருக்கலாம்.
இப்ப இந்த ஹாலின் சுவர்களில் மஹாராணா சஜ்ஜன்சிங்கின் படமும் மற்ற முக்கிய நிகழ்ச்சிகளின் சித்திரங்களுமா இருக்கு. கீழே இருக்கும் காட்டில் வசிக்கும் பறவைகள் மிருகங்கள் பற்றிய விவரங்களும் அவைகளின் படங்களுமா சரணாலயத்தின் விஸ்தரிப்பு.
இந்த மாளிகையை மேவார் நாட்டு மக்களுக்கு அன்பளிப்பா ( உண்மையாவே) கொடுத்துட்டார் மேவார் மன்னர் மஹாராணா பக்வத்சிங்ஜி பஹதூர்! இது 1956 வது ஆண்டு. இப்ப இந்த மாளிகையை அரசாங்கம் பொறுப்பெடுத்து பழுது பார்த்துக்கிட்டு இருக்கு. ராத்திரிகளில் விளக்குப் போட்டு வைக்கிறாங்க. நம்ம ஹவேலியில் இருந்து பார்த்தால் மலைமுகட்டில் ஒரு லேசான ஜொலிப்புதான் போங்க!
ராஜ குடும்பத்தினர், பணியாளர்கள் எல்லோருக்கும் தனித்தனி இடங்களும், சின்னச்சின்ன உப்பரிகைகளும், கூடங்களும் முற்றங்களும், அறைகளுமா பரந்து விரிந்திருக்கும் மாளிகையில் தற்போது வசிப்பவர்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்களே! அடிச்சதுப்பா அதிர்ஷ்டம்!!!! கேர் ஆஃப் மான்ஸூன் பேலஸ்ன்னு போட்டுக்கலாம்.

தொடரும்...............:-)

8 comments:

said...

பக்கத்தில் அமர்ந்து கதை சொல்லுறது மாதிரியான எழுத்து நடையில் சலிப்பில்லாம பயணிக்கும் வரிகள் மனதை கொள்ளை கொள்கின்றன
நன்றி உங்களின் பயணத்திற்கு

said...

வா... வா... முத்தம் தா... அட மேகத்தைப் பார்க்க ஒரு மாடமா! அனுபவிச்சு வாழ்ந்து இருக்காங்கப்பா....

படங்களும், விவரிப்பும் அருமை... தொடருங்கள் உங்கள் பயணத்தினை...

said...

வாங்க ஏ ஆர் ஆர்.

உங்கள் சொற்கள் இன்னும் நல்லா எழுதணும் என்ற உணர்வை(யும்) தருது!

நன்றிகள்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

முதலில் துளதிதளத்தின் ஆசிகளைப் பிடிங்க. இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.

நல்லாத்தான் அனுபவிச்சு வாழ்ந்திருக்காங்க. காசு இருந்தாலுமே அழகை ஆராதிச்சு வாழ்பவர்கள் சிலர்தானே?

நாடு முழுசும் சொத்துகளை பினாமி பேரில் வாங்கிக் குவிச்சவர்கள் என்ன மாதிரி ஆனந்தம் அனுபவிச்சு இருப்பாங்களோ:(

said...

படங்களும் விளக்கங்களும் அருமையா இருக்கு. தொடருங்கள்.

said...

வாங்க கோவை2தில்லி.

ஒத்தையா நடக்கப் பயமா இருக்கு. கூட்டினு நன்னி:-)

said...

மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு....ராஜபோக வாழ்க்கை.

said...

வாங்க மாதேவி.

எப்படியெல்லாம் அனுபவிச்சு இருக்காங்கன்னு பார்த்தால்........

அடுத்த ஜென்மத்துக்கு அப்ளை பண்ணலாமுன்னா.... அங்கேயும் மக்களாட்சி வந்துருச்சேப்பா:-))))