Monday, June 20, 2011

பிசோலா ?? ....((ராஜஸ்தான் பயணத்தொடர் 22)

இந்த மேவார் ஹவேலி நடத்தும் ஓனர் ஹரிஷ் ரொம்ப இனிமையான மனிதர். இங்கே வேலை செய்யும் பணியாட்களும் அவரைப்போலவே இனிமையாப் பழகறாங்க. வலையிலும் நல்ல ரிவ்யூ இருந்துச்சு. முதலாளி நல்லவனா இருந்தால் தொழிலாளியும் நல்லவனாவே இருக்க வாய்ப்பு நிறைய உண்டு. தரைத்தளத்தில் வரவேற்பு. தரமான ஆடம்பரமில்லாத அலங்காரம். சுவர் முழுசும் பெயிண்டிங். கையால் வரைஞ்சதாம். உட்புற கூரையிலும் அழகான சித்திரங்கள். அறைகளிலும் நிலைவாசலைச் சுத்தி வரைஞ்சதெல்லாம் ஸ்டென்ஸில் இல்லையாம். தனித்தனியாக் கையால் வரைஞ்சதாம்!
சாதாரண ஜன்னலில் கூட வளைவளைவான டிசைனில் மரப்பலகையை வெட்டி மேற்புறத்தில் பொருத்திட்டா அழகான ராஜஸ்தான் ஸ்டைலா ஆகிருது! இந்த டெக்னிக்கை நம்ம நியூஸி வீட்டில் செஞ்சு பார்க்கணும். மூளையில் முடிச்சு:-)
இது மூலையான இடம் என்பதால் ரெண்டு வாசல் அமைஞ்சு போச்சு. இன்னொரு வாசலுக்குள் நுழைஞ்சால் அது புத்தகம், சிறு தீனிகள், ஜூஸ் , ஐஸ்கிரீம் வகைகள், முக்கியமாகத் தண்ணீர், செய்தித்தாள், ட்ராவல் டெஸ்க், அன்னிய நாட்டுப் பணத்தை இந்திய ரூபாயாக மாற்றிக் கொள்ளும் வசதி இப்படி பன்முகச்சேவை. இதையும் ஹரீஷே நடத்தறார். அவருடைய ஆஃபீஸும் இதுதான்.

என் கவனத்தைச் 'சட்' ன்னு இழுத்தது ஆஃபீஸ் நடுவில் படுத்திருந்த ஸ்கூபி. என்ன இப்படி ஒரு விசித்திரமான பற்கள்? நாய்களுக்கு இருக்கும் கோரைப்பற்கள் நாலும், நாலு திசையில் நீட்டிக்கிட்டு இருக்கு! அது வாயை மூட முடியாத அசௌகரியத்தைக் கொடுக்குதுன்னு ஸ்கூபியின் முகமே சொல்லுது. இது என்னடா அநியாயமுன்னு விசாரிச்சேன்.
ஒரு சமயம் நாய் பிடிக்கவந்த முனிசிபாலிட்டி ஆட்கள் இதை தெருநாய்ன்னு வளைச்சுப் பிடிச்சுட்டாங்களாம். அந்த கம்பி வளையத்தை எப்படியாவது உதறித்தள்ள இது திமிற, அது பல்லில் மாட்டிக்கிட்டு இழுக்க பெரும் போராட்டத்துக்குப் பிறகு இது தப்பி ஓடி இருக்கு. ஆனால் நடந்த போராட்டத்தால் பற்கள் இப்படி ஆகிப் போச்சாம். அடப்பாவமே! ஆனால்....ஆயுசு கெட்டி நம்ம ஸ்கூபிக்கு!

என் தோழியின் மகளும் மருமகனும் வெட்னரி டாக்டர்கள். இந்து பற்றி அவுங்ககிட்டே கேக்கணும். நியூஸியில் இதை சரி செய்வாங்களா இருக்கும். ஆனால்...... சம்பவம் நடந்தது இந்தியா. இங்கே மனித உயிர்களுக்கே ,மதிப்பில்லைன்னும் போது நாயை யார் கவனிக்கப்போறா? ப்ச்:(

நாங்க லஞ்சை முடிச்சுக்கிட்டுக் கொஞ்ச நேர ஓய்வுக்குப்பிறகு ஹரீஷின் ஆஃபீஸில் உள்ளூர் சமாச்சாரங்கள் பார்க்க எளிதான வழி என்னன்னு கேட்டோம். நானும் வழக்கம்போல வலையில் தேடி முக்கிய இடங்களின் பட்டியலை எழுதி வச்சுருந்தேன்.

சுற்றுலாப்பயணிகளுக்காகவே முக்கிய இடங்கள் அடங்கிய ரூட் மேப் ஒன்னு மேவார் ஹவேலி ஹரீஷ் அச்சடிச்சு வச்சுருக்கார். அதை எடுத்துக் கொடுத்தார். ஆட்டோ ஒன்னும் ஏற்பாடு செஞ்சார். செல் அடிச்சதும் காமணியில் ஆட்டோக்காரர் வந்தார். எல்லாம் சுத்திக் காமிச்சுத் திருப்பி அறைக்குக் கொண்டு வர முன்னூறு ரூபாய்.
கீக்கிடமா அங்கங்கே நிக்கும் அறுதப்பழைய வீடுகளையும், அதுலே கூட எதாவது ஒரு பெயரில் ஹவேலின்னு போர்டு மாட்டி தங்கும் விடுதிகளா மாத்தி வச்சுருப்பதையும்., அட்டகாசமான குதிரை லாயம் ஒன்னு இருக்கும் இடத்தையும், சந்துபொந்துகளையும் கடந்து ஃபடே ஸாகர்(Fateh Sagar) என்ற ஒரு ஏரியையும் கடந்து போனோம். இந்த ஏரிக்குள்ளே சஞ்ஜய் பார்க், நேரு பார்க் என்ற பெயரில் தோட்டங்களும் குழந்தைகள் விளையாடும் பூங்காவுமா இருக்கு. சமீபகால சேர்க்கைகள். 1884 முதல் 1930 வரை மேவாரை ஆண்ட அரசர் இந்த மஹாராணா ஃபடே சிங் அவர்கள்.
நாம் முதலில் போன இடம் மோதி மங்ரி. இது மஹா 'ராணா' ப்ரதாப் சிங் அவர்களின் நினைவுக்காகக் கட்டப்பட்டது. இவருடைய அப்பாதான் மஹாராணா உதய் சிங். இந்த உதய்பூரைக் கட்டுன ராஜா.. கொஞ்சூண்டு இவரைப்பத்தி......... அப்பாவைப் பத்திப் பார்க்கலாம்.
சூர்யவம்ச ராஜாக்கள் ஆண்ட மேவார் பிரதேசம். சித்தூர் என்ற ஊரைத் தலைநகரா வச்சு ஆண்டுக்கிட்டு இருக்காங்க. இந்த சித்தூர்தான் ராணி பத்மினி அரசியா இருந்த ஊர். ராஜா ரத்தன்சிங் அவர்களின் மனைவி. அப்போதுதான் இங்கே படையெடுத்து வந்த முகலாய மன்னன் அலாவுதீன் கில்ஜி, அரசியின் பேரழகைக் கேள்விப்பட்டு ஒரு தடவை அரசியைப் பார்க்க அனுமதி கொடுத்தால் இந்தப் போரை நிறுத்தறேன்னு சொன்னதும் ஒரு நிலையில் ராஜா சரின்னு சம்மதிச்சுட்டார். ஆனால் ஒரு நிபந்தனை. அரசியைக் கண்ணாடியில் பார்க்கணும். அதேபோல ஒரு பெரிய நிலைக் கண்ணாடியில் அரசியைப் பார்த்த அலாவுதீன் கில்ஜி, சொன்ன வாக்கைக் காப்பாத்தாமல் இந்தப் பேரழகைத் தானே சொந்தமாக்கிக்கணுமுன்னு முற்றுகையை இன்னும் பலமாக்கிட்டார். ரொம்ப நாள் தாக்குப்பிடிக்க முடியலை ரத்தன் சிங் ராஜாவால். 'ராஜாவை கைது பண்ணிட்டாங்க!

பத்மினி

கோட்டைக்கதவை உடைத்து முகலாயப்படை உள்ளே வரும் சேதி கேட்டதும் சித்தூர் ராணி பத்மினியும் அந்தப்புரப் பெண்டிர் அனைவரும் தீ வளர்த்து அதுலே விழுந்து உயிரை விட்டுட்டாங்க:( படையினர் வந்து பார்த்தப்ப சூடான அஸ்திதான் அவுங்களுக்குக் கிடைச்சது. (சம்பவம் நடந்தது ஆகஸ்ட் 25, 1303.)

தில்லி சுல்தான் கில்ஜியின் வசம் 23 ஆண்டுகள் சித்தூர் இருந்துச்சு. 1326 வது ஆண்டு ஹம்மீர் சிங் என்ற ராஜவம்சத்து இளைஞர் படை திரட்டிப் போர் செஞ்சு சித்தூரை மீட்டார். இவர் சிஸோதியா என்ற கிராமத்துலே பிறந்தவர்,. அதையே அடையாளமா வச்சு சிஸோதிய பரம்பரைன்னு ஆகிருச்சு. அவருக்குப்பின் அவர் வாரிசுகள் வழிவழியா மன்னரா இருந்து மேவாரை ஆட்சி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.

மஹாராணா சங்ரம் சிங் ஆட்சிகாலத்துலே இன்னொரு படையெடுப்பு. இதுவும் முகலாயர்களால்தான். இவங்களோடு சங்ரம் சிங்கின் பங்காளிகளும் கூட்டு சேர்ந்துக்கிட்டாங்க. ராணா விக்ரமாதியாவை, சங்ரம் சிங்கின் சகோதரர் கொன்னுட்டார். பத்மினி காலத்துலே நடந்த அதே சம்பவம் ரிபீட் ஆகிருச்சு. தோல்வின்னு தெரிஞ்சதும் ராணி கர்ணாவதியும் அந்தப்புரப் பெண்டிரும் தீக்குளிச்சுட்டாங்க. அப்போ உதய் சிங் பச்சைக்குழந்தை. வம்சமே பூண்டத்துப்போகணுமுன்னு இளவரசரைப்பிடிச்சுக் கொல்ல எதிரிகள் வந்துக்கிட்டு இருக்காங்க. தாதி பன்னா (செவிலித்தாய்) தன்னுடைய குழந்தைக்கு இளவரசரின் உடைகளைப் போட்டு அரண்மனைத் தொட்டிலில் கிடத்திட்டு இளவரசரை ஒளிச்சு வச்சுட்டாங்க. எதிரிகள் பன்னாவின் குழந்தையை இளவரசர்ன்னு நினைச்சு கொன்னுட்டு போயிடுவாங்க.

யாருக்கும் தெரியாமல் குழந்தை இளவரசரைக் கீரைக்கூடையில் வச்சுச் சுமந்துக்கிட்டு, கீரை விக்கறமாதிரி கோட்டையை விட்டு வெளியே வந்து நைஸா இன்னொரு ஊருக்குக் கொண்டு போயிட்டாங்க இந்த செவிலித்தாய். கும்பல்கட் என்ற ஊரில் குழந்தை வளர்ந்து பெரியவனா ஆனதும் மேவார் ராஜாவாக ஊர்மக்கள் ரகசியமாப் பட்டம் கட்டறாங்க.
ராஜ்ஜியமே இல்லாத ராஜாவா இருக்கோமேன்னு கவலைப்பட்டுக் காடுகளில் சுத்திக்கிட்டு இருந்தப்ப ஒரு முனிவரை சந்திச்சார். அவரை வணங்கித் தன் 'கதை'யைச் சொன்னதும் இதே இடத்தை தலைநகரா ஆக்கி இங்கிருந்து அரசாண்டுக்கோ. உனக்கு மங்களமுன்னு ஆசீர்வதிச்சார். அந்த இடத்துக்கு ஒரு அடையாளம் வேணுமுன்னு அங்கே சின்னதா ஒரு கோவில் காட்டுனார் உதய்சிங். துனி மாதா (Dhuni Mata) கோவிலுன்னு பெயர். இப்பவும் இந்தக் கோவில் உதய்பூர் கோட்டைக்குள்ளில் இருக்கு. உதய்பூர் என்று புது நகரத்துக்குப் பெயரும் ஆச்சு. அரண்மனை கோட்டை எல்லாம் கட்டுனாங்க. இதெல்லாம் நடந்தப்ப ராஜாவுக்கு வயசு 37. (1559) ஆனாலும் சித்தூர்தான் தலைநகர் என்பதில் ஒரு மாற்றமும் இல்லை 1568 வது ஆண்டு அக்பர் சக்ரவர்த்தி படையுடன் வந்து சித்தூரைப் பிடிக்கும்வரை. அப்புறம் உதய்பூரையே தலைநகரா மாத்திக்கிட்டாராம்.
மஹாராணா உதய்சிங்

அதுக்குப்பிறகு ஆரவல்லி மலைத்தொடரின் அடிவாரத்தில் ஒரு பெரிய குளம் வெட்டினார். குளமா அது ? பெரிய ஏரி! அதுக்கு உதய் சாகர்ன்னு பெயரும் அதுலே ஜக் நிவாஸ்ன்னு பெரிய தோட்டமும் மாளிகையும், ஜக் மந்திர் என்ற பெயரில் இன்னொரு பிரமாண்டமான மாளிகை ஏரிக்கு நடுவிலேயும், அப்புறம் ஏராளமான கட்டிடங்கள் தண்ணீரைத் தொட்டாப்புலேயும் கட்டி இருக்கார். இதுதான் நாம் தங்கி இருக்கும் அறையின் ஜன்னலில் தெரியுது! அது என்னவோ தெரியலை உதய்சாகர் என்ற பெயர் மறைஞ்சு பிசோலா ஏரின்னு இப்பச் சொல்லப்படுது. காரணம் என்னன்னு தெரியலை:(

தொடரும்..........................:-)

8 comments:

said...

" ஃபடே ஸாகர் " மிகவும் கவருகிறது.

உதய்சாகர்... பிசோலா ஆனது தெரிந்து கொண்டேன்.

said...

பிசோலா லேக்...

நல்ல இடங்களை எங்களுக்கும் சுத்திக் காட்டியமைக்கு நன்றி....

said...

வாங்க மாதேவி..
பின்னூட்டப்பெட்டி வேலை செய்யலையோன்னு நினைச்சேன்.

(இதப் பார்றா..... என்ன ஒரு அசாத்திய நம்பிக்கை!!! )

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கண்டு களித்ததுக்கு என் நன்றி:-)

said...

ரொம்ப நாளா ராஜஸ்தான் போகணும்னு நினச்சது..இன்னிக்குத் தான் நிறைவேறிடுச்சு!!

said...

வாங்க ராமமூர்த்தி.

எனக்கும்தான் இது பலவருசக் கனவு.

வருகைக்கு நன்றி.

said...

உதய்ப்பூர் பற்றியும் ராஜாவின் கதையை பற்றியும் தெரிந்து கொண்டோம்.
பகிர்வுக்கு நன்றிங்க.

said...

வாங்க கோவை2தில்லி.

தொடர்வதற்கு என் நன்றிகள்.