Wednesday, August 20, 2025

மகளுடன் ஒரு மாலை..... (2025 இந்தியப்பயணம் பகுதி 60 )

காலையில் கண்விழிக்கும்போதே மனசு கொஞ்சம் பரபரப்பாக இருந்தது.... இந்தியாவுக்குள்ளே எங்கே இருந்தாலும் வந்து பார்ப்பேன்னு சொன்ன 'மகள்'  வர்றதா செய்தி அனுப்பியிருந்தாங்க.    
வழக்கம்போல் ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போய் வந்துட்டு, சிகிச்சைக்குக் கிளம்பினோம்.  இன்றைக்கு அங்கேயும் நமக்குக் கடைசி நாள்தான்.  அடுத்த பயணத்தில் தொடரணும். அதுவரை  தைலம், கிழிக்கான பொடி வகைகள் எல்லாம்  கொண்டுபோய்ப் பயன்படுத்தணும் என்பது டாக்டர் அறிவுரை. 

இங்கிருந்து தைலம் கொண்டுபோவதில் கொஞ்சம் சிரமம் இருக்கு.....  அதனால்  நியூஸி வடக்குத்தீவில் இருக்கும் கோட்டக்கல் ஆர்ய வைத்யசாலாவில் இருந்து வாங்கிக்கணும்.   இந்த வலி ஆரம்பிச்சவுடனே..... மருத்துவ ரிப்போர்ட் அனுப்பியதில்,  ஹேமில்டன் என்னும் ஊரில் இருந்து  தைல வகைகளும், கிழிக்கானப் பொடி,   அரிஷ்டம் , லேஹ்யம் எல்லாம் வந்து, அதைத்தான்  இந்தியப்பயணம் போகும்வரை பயன்படுத்திக்கிட்டு இருந்தேன்.  இதை  சென்னை மருத்துவமனை தலைமை டாக்டரிடமும் சொல்லி இருந்தோம்தான். 

இன்றைய சிகிச்சையில் கிழி வைத்தியம்  முடிஞ்சதும்,  இங்குள்ள டாக்டர் ஒருவர், தொடர்ந்து செய்யவேண்டிய உடற்பயிற்சிகளைச் சொல்லிக்கொடுத்தாங்க. அதுக்குப்பின்  கால்களில் பத்துப்போட்டுக் கட்டிவிடுவதும் ஆச்சு. 

மருந்துப்பொடிகளை மட்டும் வாங்கிக்கிட்டு, எல்லோருக்கும்  பைபை சொல்லிட்டுக் கிளம்பினோம். நம்ம ஆட்டோக்காரர் வந்து கூட்டிப்போனார். 

                          
லோட்டஸ்  போனதும்,  மதிவாணன்  (செக்யூரிட்டி ) வந்து நலம் விசாரிச்சார்.  ரொம்ப நல்லமாதிரி மனிதர்.   கையில் ஒரு பை இருந்தாலும் போதும்.... வாங்கிப்போய்  நம்ம அறையில் வச்சுருவார்.  நாம் லோட்டஸில் தங்கத் தொடங்கிய நாளிலிருந்து நமக்குப் பரிச்சயமானவர்தான். ஆச்சுல்லே பதினாறு வருஷம்.  
மகள் வர்ற செய்தி கிடைச்சதும்,  இங்கேயே லோட்டஸில் ஒரு ரூம் ஏற்பாடு செஞ்சுறலாமுன்னு நம்மவர் சொன்னார்.  கொஞ்சம் நிதானமாப் பேச நேரம் கிடைக்கும், இல்லையோ !  கீழே,  அறைக்கு ஏற்பாடு செய்யச் சொன்னதில்......  'இங்கே அறை ஏதும் காலி இல்லை...... பர்கிட் ரோடுலே இருக்கும் லோட்டஸில் போடவா'ன்னு  கேட்டார் வரவேற்பில் இருந்த கணேஷ். அப்புறம் மேனேஜரைப் பார்த்து விவரம் சொன்னதில்  இங்கேயே  ஒரு அறை கிடைச்சது.  இவரும் நமக்கு பதினாறு வருஷ நண்பர்தான் ! 

மூணு மணிக்கு விஜி வந்தவுடன் கிளம்பிப்போய்  நம்ம காஃபிக்கடையில் ஒரு டீ குடிச்சுட்டு வந்தோம்.  மகள்,  வர்றதுக்கு  அநேகமா  அஞ்சு , அஞ்சரை ஆகிருமுன்னு  சொல்லியிருந்தாங்க. அப்பப்ப எங்கே இருக்காங்கன்னும் செய்தி அனுப்பிக்கிட்டே இருந்தாங்க.  உண்மையில் கிளாம்பாக்கம் வந்ததும்  செய்தி அனுப்பினவங்க,  லோட்டஸ் வந்து சேரவே ரெண்டுமணி நேரம் ஆகியிருந்தது.  மணி ஆறு !    காலையில்  ஆறரைக்குக் கிளம்புனாங்களாம்.   மழை காரணம் எல்லாமே  தாமதம்தானாம்.   சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், நியூஸியில் இருந்து சிங்கை வந்து சேர எடுக்கும்  நேரம் ! 

மகளும் மாப்பிள்ளையும் வந்ததும்  ரொம்ப மனநிறைவாக  இருந்தது உண்மை.  'ரொம்பக் களைப்பாக இருக்காங்க.... கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்'னு  அவுங்களை விட்டுட்டு,  சின்னதா ஒரு ஷாப்பிங் செய்ய பாண்டிபஸார் போனோம்.  கீதா  கண்ணில் பட்டது..... பட்டதுன்னு சொல்லமுடியாது..... எப்ப நாம் பாண்டிபஸார் போனாலும்  கீதாவுக்கு நேரா எதிர்வாடையில்தான்  பார்க்கிங் கிடைக்கிறது.  
நம்மவர் ஆசைக்காக,  சாலையைக் கடந்து அங்கே போய் ஆளுக்கொரு ப்ளேட் வெங்காய பஜ்ஜி !  இந்தப்பயணத்தில் இதுதான் கடைசின்னு.... சொல்லலாம். கொஞ்சம் பூ வாங்கிக்கிட்டு லோட்டஸ் வந்துட்டோம்.  மகள் ஒரு ஷவர் எடுத்துக்கிட்டு ஃப்ரெஷா நம்ம அறைக்கு வந்தாங்க. 
கைவினைப்பொருட்கள் முக்கியமா அலங்கார வகைகள் செய்வதில் கில்லாடி.  குந்துமணி போல ஒரு விதையில் செஞ்ச  மணிச்சரம் எனக்கு !  இங்கே நியூஸியில், ஒரு இலை, பூ, காய், கனி, விதைன்னு எதுக்கும் அனுமதி இல்லை என்பதால்.... நம்ம பால ராமனுக்குக் கொஞ்ச நேரம் போட்டு வச்சேன்.  அவனோட ஆசிகள்  மணிமாலையாகத் திரும்ப மகளுக்கேப் போகட்டும் ! 

ஆன்லைன் பிஸினஸ் செய்யறாங்க. சரா ஃபேஷன்ஸ் என்ற பெயரில் . என்னுடைய புடவைகள் பெரும்பாலும் மகளிடம் வாங்கியவையே !  அப்பப்போ தெரிவு செய்வதை எடுத்து  வச்சு, ஒரு ஏழெட்டு சேர்ந்ததும், எனக்குப் பார்ஸல் அனுப்பிருவாங்க. இந்த முறை பார்ஸல் இல்லை. நேரில் கொண்டுவந்து கொடுத்தாச்சு.  

சில வருஷங்களுக்கு முன்னால்..... ஒரு புடவை வாங்கிட்டு,  அதுலே இருக்கும் புள்ளையார் டிசைனை, ப்ளௌஸ் துணியில் போட்டுத்தரேன்னு சொல்லி எடுத்து வச்சது.... (நான் ஏறக்கொறைய இதை மறந்தே போயிருந்தேன் ! )இன்றைக்குக் கிடைச்சது.  என்ன ஒன்னு..... கடைசி நேரமாப் போனதால் டெய்லரிடம் தைக்கக்கொடுக்க முடியலை.....     

முந்தியெல்லாம் எனக்கான துணிமணிகளை நானே தைச்சுக்குவேன். மகளோட ஹைஸ்கூல் படிப்பு  முடியும்வரை அவளுக்கான உடுப்புகளை ஸ்கூல் யூனிஃபார்ம் உட்பட நானே தைப்பதுதான்.  உடல்நலம் சரியில்லாமப் போனதால்  இப்பக் கொஞ்ச காலமா..... வெளியேதான் தைக்கக் கொடுக்கிறேன். ப்ச்.....
மேலே படம்:  வலையில் இருந்து !

எல்லோருமாக் கிளம்பி, திநகரை ஒரு சுத்து சுத்திட்டு,  வெங்கடநாராயணா சாலையில் இருக்கும் திருப்பதி தேவஸ்தானக் கோவிலுக்குப் போனோம். தள்ளுமுள்ளு இல்லாமல் நல்ல தரிசனம்  கிடைச்சது. அங்கேயே இருக்கும் தேவஸ்தான கடையில் இருந்து, ஒரு பெருமாள் 'நல்லா இருக்கணும்' என்ற  ஆசிகளுடன்,  மகள் வீட்டுக்குப் போறார்.  
இரவு டின்னர், சங்கீதாவில்.  மகளுடைய பெயரும்  இதுதான் :-)

திரும்பி லோட்டஸ் வந்து நம்ம அறையில் பத்தரை வரை அரட்டைதான் ! 

 தொடரும்........ :-)

Monday, August 18, 2025

இன்றைக்குக் கொஞ்சம் ஓட்டம் கூடுதலே ! (2025 இந்தியப்பயணம் பகுதி 59)

கட்டாயமா நான் மிஸ் பண்ணப்போறது இந்த லோட்டஸ் ப்ரேக்ஃபாஸ்டைத்தான்.... ப்ச்...
பத்துமணிக்குச் சிகிச்சைக்குப்போனோம்.  வழக்கமா எனக்கு ஒதுக்கிய அறையில்  இருக்கும் காஸ் அடுப்புக்கு என்னமோ ஆகி இருக்கு. அதனால் வேறு அறைக்குக் கூட்டிப்போனாங்க.  இது வளாகத்துக்குள்ளேயே இருக்கும் இன்னொரு கட்டடம். கொஞ்சம் புதுசா இருக்கு.  சமீபத்துலே விரிவாக்கம் நடந்துருக்கு போல!  நான் நினைச்சது சரின்றாப்போல  சிகிச்சிக்கும் மரக்கட்டில் புத்தம் புதுசு ! அங்கங்கே இருக்கும் படங்களும் ஓவியங்களும் கூட அருமை !  இங்கேயும் மாடிகளில்  உள்நோயாளிகள் தங்கி இருக்காங்களாம்.




சிகிச்சை என்னவோ வழக்கம்போலவே !  முடிஞ்சதும்  நம்மைக்கூட்டிப்போக வந்த ஆட்டோவில் முக்கியவிவரம் பார்த்தேன் ! நல்லதே!
மதியம்,  கூரியர் அனுப்பலாம் என்ற திட்டத்தின்படி,  நமக்கு உதவி செய்ய,  நம்ம கார்த்திக் வந்தார்.  எனக்கு ஒரு அருமையான அன்பளிப்பும் கூட !  அவருடைய  தங்க்ஸின் ஐடியாவாம் ! நம்ம ஃப்ரைபேன் அடிக்‌ஷன் எப்படித் தெரிஞ்சதுன்னு தெரியலை.  அனுப்பவேண்டியவைகளை   ஒரு ஸூட்கேஸில் எடுத்துக்கிட்டுப்போனோம்.  
வளசரவாக்கம், தீபாராம் பார்ஸல் சர்வீஸ். போனமுறை மகளுக்குப் பார்ஸல் அனுப்பிய இடம்தான்.  எல்லாப் பொருட்களையும் குறிச்சுப் பட்டியல் போட்டு, அருமையாக ரெண்டு அட்டை பெட்டிகளில் பேக் செஞ்சு கொடுத்தார் ராஹுல்.  அவருக்கு நன்றி சொல்லிட்டுக் கிளம்பி  லோட்டஸுக்கு வந்தோம். நம்ம  காப்பிக்கடையில் டீயும் ஆச்சு.

இன்றைக்குக் கொஞ்சம் நேரம் இருப்பதால்.... நம்ம தங்கை வீட்டுக்குப் போயிட்டு வரலாம்னு கிளம்பினோம்.  மயிலையில் முந்தி இருந்த வீட்டை விட்டுட்டுப்  பொழிச்சலூரில் புது வீடு வாங்கிப் போயிருங்காங்க. அந்த வீட்டுக்கு இப்போதான் முதல்முறையாகப் போறோம்.  கூகுளார் வழிகாட்ட, போய்ச் சேரவே ஒன்னேகால் மணி நேரம் ஆச்சு.  

விருப்ப ஓய்வுக்குப்பின் தங்கையின் கணவர், பிரபந்தம் ஸேவிக்கும் கோஷ்டியில் இருக்கார். ஒரு குழுவாக  வெவ்வேறு  ஊர்களுக்குப் போய் வருகின்றார்கள்.  இன்றுமே இரவுப் பயணம் கிளம்புகிறார்.   நம்ம மகர் கார்த்திக்கையும்  அவர்களுக்கு அறிமுகப்படுத்தியாச்சு. 

ரெண்டு நாட்களுக்கு முன்பு திருப்பதி போயிட்டு வந்துருக்காங்க.  பெருமாள் அவங்களோடு கிளம்பி வந்து எனக்காகக் காத்திருந்தார் !  சண்டை ஒத்து துல்ஸி. சமாதானங்கா போதாமான்னு கேக்கறார் போல !  

அங்கிருந்து அப்படியே மகர் வீட்டுக்கும் ஒரு விஸிட்.  மருமகள் அருமையான டிஃபன் தயாரிச்சு வச்சுருந்தாங்க. . என்னுடைய  மசால்வடையும் இருந்தது.  பேரன் கீதாப்ரியனோடு சில க்ளிக்ஸ். 

திரும்பி தி நகர் வர்றோம்.  மழை பெய்ய ஆரம்பிச்சது.   ரொம்ப காலமாப் (பல வருஷங்கள்) போகணும்னு நினைச்சுப் போகாமலே இருந்த கோவில் எப்பவும்போலக்  கண்ணுலே பட்டதும்,  போகலாம்னு  அங்கே போயிட்டோம். 

 
அழகான முன்மண்டபம். அதிலேயே பலிபீடமும் கொடிமரமும் அடுத்து சிம்மமும்.  நேராக உள்ள கருவறைக்கு மூணு வாசல்கள். அதில் வலப்பக்க வாசல் வழியாகப் போறோம்.  மூலவர் சந்நிதியும் உற்சவர் சந்நிதியும் அடுத்தடுத்து இருக்கு. 
ஸர் தியாகராயா ரோடும்  மௌண்ட்ரோடும் சேரும் இடத்தில் இருக்கும் ஆலையம்மன் கோவில்தான் இது ! இன்றைக்குத்தான் அம்மன் கூப்பிட்டு இருக்காள் ! எதிர்பார்க்கவே இல்லை.... இப்படி அழகான கோவிலாக இருக்குமுன்னு ! 

 அருமையான தரிசனம் !  பூசாரி ஐயா.... கோவில் வந்த விவரங்களைச் சொன்னார். ஆற்றின் அலையில் மிதந்துவந்த அம்மன் !  தலப்புராணம் அங்கே கரும்பளிங்கில்  இருந்ததை க்ளிக்கினேன்.   அலையில் மிதந்து வந்த அம்மனைத்தான்  , காலப்போக்கில்  சனம் ஆலையம்மன்னு சொல்லிக்கிட்டு இருக்கு. 

இந்தக்கோவிலின் பின்பக்கம் புத்து மண்டபம் இருக்குன்னும்.... அங்கே நாகர்கள் சந்நிதி, மற்ற சந்நிதிகள் இருக்குன்னும் சொன்னார்தான், அம்மனுக்கு செய்யும் பால் அபிஷேகத்துப்பால் முழுசும் நேரடியா அங்கே புத்துக்குப்போய்ச் சேர்ந்துருதுன்னார்.

முருகன், கணபதி, லக்ஷ்மி, நவக்ரக சந்நிதிகள் எல்லாம் இங்கே இருக்குன்னாலும்....  ஒரே மழையா இருந்ததால், பின்பக்கம் போய்ப் பார்க்கலை.  படங்களும் எடுக்கலை. அடுத்த பயணத்தில் ஒரு பகல் நேரத்தில் வந்து கோவிலின் மற்ற சந்நிதிகளைத் தரிசிக்க வேணும்தான்.   

மழை இன்னும் நிக்கலை.  அறைக்குப்போய்,   கால் வலிக்கான மருந்தை முழுங்கிட்டு, டின்னருக்கு கீதம் போனோம்.
தேடி வந்த பெருமாளைக் குழந்தைக்குக் காண்பிச்சேன் !
புதுசா ப்ரேக்ஃபாஸ்ட் காம்போ வருதாம். தேங்காய்ப்பால் கஞ்சின்னு பார்த்துட்டு, ஆசை வந்தது..... ஆனால் ஞாயிறு ஆரம்பமாம்.  நம்ம பெயர் அங்கே  எழுதலை. ப்ச்.....  போயிட்டுப்போகுது....போங்க.....
  
எனக்கு இடியாப்பம் கிடைச்சது. நம்மவர் வெஜ் பிரியாணி, விஜி பாவ்பாஜின்னு.......

கூடியவரை சந்திப்புகளை முடிச்சாச்சுன்னு நினைக்கிறேன்.    


தொடரும்......... :-)

Saturday, August 16, 2025

எங்க ஊரில் சுதந்திரதின விழாக் கொண்டாட்டங்கள் !

எங்க வழக்கப்படி மூணு/ நாலு  நாட்களுக்கு முன்பே ஆரம்பிச்சுட்டோம் !
முதலில் வீடு என்றதாலும்.....எங்கள்    யோகா வகுப்பு தினம் என்றதாலும்  வீட்டிலிருந்து கொடிகளைக்கொண்டுபோய்  தேசியகீதம் பாடிச்  சின்னதாக ஒரு கொண்டாட்டம். நம்மூரில் ஒரு காலத்தில் பள்ளிக்கூடபிள்ளைகளுக்குக் கொடியேற்றி முடிச்சதும்  ஆரஞ்சு மிட்டாய் கிடைக்குமில்லையா.... அதையே கொஞ்சம்  மேம்படுத்தியது போல ஆரஞ்சு  பர்ஃபி விநியோகம் !  வகுப்புத் தோழி ஒருவரின் தங்கை  நியூஸி அக்கா வீட்டிற்கு நாக்பூரிலிருந்து வந்துள்ளார்.





ஆகஸ்ட் 15 பொழுது விடியுமுன்னே (இங்கே குளிர்காலம் என்பதால் சூரிய உதயம் அதிகாலை ஏழரைக்கு ! அப்போது குளிர் 2 டிகிரி.) கிளம்பிக் கொடியேற்றும் வைபவத்திற்குப் போனோம். 
ஒரு  பதினைஞ்சு வருஷங்களாக நண்பர் அவருடைய  பொறுப்பில் கொடியேற்றும் விழாவை நடத்திக்கிட்டு இருக்கார். 

ஒரு மூணு வருஷங்களாக, இந்திய ராணுவத்தில் லெஃப். கர்னலாக இருந்தவர், இப்போ எங்கூரில் வசிக்கிறார்.  கொடி ஏற்றும் கௌரவத்தை அவருக்குக் கொடுத்தாச்சு !
இந்தமுறை இந்தியக் கடற்படையில் கமாண்டராக இருந்தவர்  ( எங்கூரில் வசிக்கும் மகன் வீட்டுக்கு வருகை ) எங்கள் கொண்டாட்டத்தில் பங்கு கொண்டது சிறப்பு ! 

மேலே படத்தில்,  முதலில் நிற்பவர் எங்கூர் மல்ட்டிகல்ச்சுரல்  கவுன்ஸிலின் தலைவர், அடுத்து நேவி அப்புறம் ஆர்மி !


(ஆர்மி & நேவி வந்தாச்சு. இன்னும் ஏர்ஃபோர்ஸ்தான் வரலை. பேசாம நானே ஏர்ஃபோர்ஸ் பதவியை எடுத்துக்கலாமான்னு தோணுச்சு)


கொடியேற்றி முடிச்சு, நம் தேசியகீதம் பாடியதும் ஒரு மனநிறைவு வந்தது உண்மை ! 


சுமார் ஒரு ஐம்பது கிவி இண்டியன்ஸ் கலந்து கொண்டோம். 

பாரத் மாதா கி ஜெய் ! வந்தே மாத்ரம் ! ஜெய் ஹிந்த் !