மக்கள்ஸ்,
புதியபார்வையில் நம்ம கோகியைப் பார்த்தீங்களா? செல்லம்போல இருக்கான்.
ஏதோ நீங்கெல்லாம் கொடுத்த & கொடுக்கப்போகும் ஆதரவை 'நம்பி' இப்படி ஒரு முடிவு எடுத்துட்டேன்.
அவர்கள் வெளியிட்ட ஆறு பக்கங்களையும் இங்கே ஸ்கேன் செஞ்சு போட்டுருக்கேன். க்ளிக்கினால் அநேகமாப் பெரிதாகத் தெரியலாம்.
அனைவரின் அன்புக்கு நன்றி.
துளசி(டீச்சர்)




பி.கு: வலையைக் கலையாகப் போட்டுட்டாங்க. அதனால் என்ன வலையும் ஒரு கலைதானே? இந்தக் 'கதை' யை சினிமாவாக எடுக்க நிறைய ஸ்கோப் இருக்காம். யார் யார் நடிக்க விரும்புறீங்க? என்னென்ன ரோல் உங்க சாய்ஸ்ன்னு ஒரு வரி எழுதுங்க. சீட்டுக்குலுக்கிப்போட்டு முடிவு செய்யலாம்:-)
Tuesday, December 22, 2009
நியூலுக்கில் நம்ம கோகி!
Posted by
துளசி கோபால்
at
12/22/2009 03:15:00 AM
67
comments
Labels: அனுபவம், கோகி, புதியபார்வை
Friday, December 18, 2009
ஆடும் சிவனும் அருள்தரும் ராமனும்.
திருவாதிரை. அழகான சின்னப் பல்லக்கில் ஆடும் சிவன், நடராஜக் கோலத்தில் அழகா பவனி வந்துக்கிட்டு இருக்கார். கோவில் சிலைகளுக்கு உயிர்வந்து ஏதோ அவைகளே 'அவரை'ச்சுமந்து கொண்டும் ஸ்வாமிக்கு வண்ணக்குடை பிடித்துக்கொண்டும் ஒய்யாரமா ஒரு வீதியுலா. மல்லாரியில் நடையாம்.
திருஞானசம்பந்தரின் தோடுடைய செவியன். கம்பீரநாட்டையில் திரு. குன்னக்குடியின் இசையில் உண்மையாவே கம்பீரமா ஒலிக்குது.
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
கைகள் ரெண்டும் தூக்கியபடி சுமக்க, வெறும் கால்கள் மட்டும் தாளத்தோடு லயம் பிசகாமல் அட்டகாசமான ஒரு நடனம். ஞானசம்பந்தர் என்றதும் சீர்காழி நினைவுக்கு வருதே...அதன் புராண காலத்துப்பெயர் பிரம்மபுரம் என்பதாம்.
சதீஷ் நாகராஜன் என்றொரு இளைஞர் அப்பரின் பாடல் 'குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும் பாடலுக்கு நடனம். இவர் வாய் உண்மையில் கொவ்வைச் செவ்வாயாக ஆகப்போகுதுன்னு அப்ப எனக்குத் தெரியாது:-)
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்ல்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.
ராகமாலிகை. பக்திப் பாட்டுன்னு சட்னு தெரியாதபடி ஏதோ லைட் ம்யூஸிக் வகையா இருக்கு. அமர்க்களம் போங்க.
ஆடும் சிவமே அற்புதமே........... உன் ஆட்டமெல்லாம் ஒரு தத்துவமே.......
திருமதி. நித்யாவின் ஸோலோ.
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
ஆடும் சிவன் முடிஞ்சதும் அருள்தரும் ராமர் வருகிறார்.
கம்பரின் ராமாயணத்தில் சேதுப் படலம்.
சேது சமுத்திரம் ஒரு புண்ணியஸ்தலம். புண்ணியநதிகள் அனைத்திலும் மக்கள், நீராடி அவுங்கவுங்க செஞ்ச பாவங்களை போக்கிக்கறாங்க. அந்தப் பாவச்சுமைகள் எல்லாம் நதியில் இருக்கு. நதிமகள் இந்த பாரம்தாங்காமல் துடிக்கிறாள். அந்தப் பாவமூட்டைகளை ஒரேயடியாத் தொலைச்சுக்கட்ட சேது சமுத்திரத்தில் வந்து நீராடுகிறாளாம். கங்கை, காவேரி, யமுனை, நர்மதா, கோதாவரின்னு அஞ்சு நதிகளும் வந்து சேதுவில் மூழ்கி இறைவனைத் துதிக்கிறாங்க.
அடுத்த நடனம் ராமேஸ்வர மகாத்மியம்.
இலங்கையில் போர் முடிஞ்சது. ராவணன் அழிஞ்சான். ராமலக்ஷ்மனர்கள் சீதையோடு புஷ்பகவிமானத்தில் புரப்பட்டுசேதுக்கரையில் வந்து இறங்குறாங்க. அங்கே இவுங்களுக்காகக் காத்துருந்த மகரிஷிகள், ராமா, நீ ராவணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் அடைந்தாய்.(அச்சச்சோ.....ப்ராமணனைக் கொன்னுட்டே!) இந்தப் பாவம் போகணுமுன்னா உடனே சிவனைப் பூஜிக்கணும். பூஜைக்கான நல்ல முகூர்த்தம் நிச்சயிச்சுக் கொடுத்தாச்சு. (இதாங்க பெருமாள் சிவனை பூஜித்தார், சிவன் பெருமாளை வணங்கினார்ன்னு ரெண்டு பிரிவுகளிலும் கதைகதையாக் கிடக்கு. எப்படியோ நம்ம சாமியை 'அவர்'வணங்கினாருன்னு அவரவர் சந்தோஷப்பட்டுக்கணும்)
உடனே பூஜைக்காக ஒரு சிவலிங்க வேணும். தோ..... நான் கொண்டுவரேன்னு கந்தமானபர்வதத்தை நோக்கி ஹனுமன் பறந்தார். கடற்கரை மணலில் உக்கார்ந்துருக்கும்போது அதை அளையாமச் சும்மா இருக்கமுடியுமுன்னு நினைக்கிறவங்க கையைத் தூக்குங்க. அதுவும் அந்தக் காலத்து பீச் நல்லா சுத்தமா இருந்துருக்குமே! ஒரு 35, 40 வருசமுன்புகூட மெட்ராஸ் மெரீனா(வே) நல்லாச் சுத்தமாத்தான் இருந்துச்சு. நான் வெறுங்காலில் நடந்து போயிருக்கேன். அங்கங்கே மணலில் 'தொப்' ன்னு உக்கார்ந்து 'கதை'யெல்லாம் அளந்துருக்கேன். (இப்போ சுத்தமில்லாத கடற்கரையைப் பார்த்து மனசு வெந்துக்கிட்டு இருக்கு.) சரி சரி. கதைக்கு வரலாம்.
ஹனுமன் வந்தபிறகு, பூஜையை முடிச்சுக்கிட்டுக் கிளம்பி அயோத்திக்குப் போகணும். நேரமோ ஓடிக்கிட்டு இருக்கு. இன்னும் போனவனைக் காணோம். சீதை போரடிச்சுக்கிட்டு உக்கார்ந்திருக்காள். கைகளோ மணலில் அளைஞ்சுக்கிட்டு இருக்கு. மனசுக்குள்ளே சிவலிங்கம் இன்னும்வரலையேன்னு அதைப் பற்றியே நினைச்சுக்கிட்டு இருந்ததால் அனிச்சையா அவள் கைகள் அப்படியே ஈரமணலைக் குமிச்சுவச்சது, அசப்பில் பார்த்தால் சிவலிங்கம் போல இருக்காம்.
நல்ல முகூர்த்தம் முடிய சில நிமிஷங்கள்தான் பாக்கி. இன்னும் தாமதிச்சால் லேட் ஆகிரும். சீதை இருக்கும் பக்கம் திரும்பினால் மணல் லிங்கம் தெரியுது. அவசரத்துக்கு இதுவே போதுமுன்னு 'சட்'னு பூஜையை ஆரம்பிச்சு நடத்த ஆரம்பிச்சாச்சு. முடியும் தருணம் மாங்குமாங்குன்னு மலையோடு பேர்த்த சிவலிங்கத்துடன் ஹனுமன் வந்து இறங்குறார். ( எதையும் அப்படியே பேர்த்து எடுத்துத்தான் வழக்கம்போல. அந்த லிங்கத்தை மட்டும் கொண்டுவந்துருந்தால் கனம் இல்லாம லகுவா பறந்து நேரத்தோடு வந்துருக்கலாமுல்லே?)
இங்கே த பூஜா நியர்லி ஓவர். கோபம் தலைக்கேறுது. அதெப்படி எங்கிட்டே ஆர்டர் கொடுத்துட்டு வேறொரு ஆள் கிட்டே வாங்கலாமுன்னு....... இதையும் நீதான் வாங்கிக்கணுமுன்னு....... (ஹைய்யோ இது சம்பந்தமா ஒரு கொசுவத்தி இருக்கு. குறிச்சொல் : பூட்டு. அப்புறம் கதைகளில் வச்சுக்கலாம் கச்சேரியை)
அதை எடுத்துக் கடாசிட்டு இதை வையுங்கன்னு ராமர்கிட்டே கோச்சுக்கறார். யப்பா.... ஹனுமா..... நீயே அந்தக் கைங்கரியத்தைச் செய்யேன். எடுத்துக் கடாசுன்னார். எடுக்கறார். துளியும் நகரலை. அசைஞ்சும் கொடுக்காம திம்முன்னு இருக்கு. பூரா பலமும் பிரயோகிச்சுப் பார்த்தாச்சு. ஊஹூம்.... கடைசியில் வாலை லிங்கத்துலே நல்லா அணைச்சுச் சுருட்டி ஒரே இழு. வாலறுந்ததுதான் மிச்சம். ரத்தமாக் கொட்டி அபிஷேகம் ஆயிருச்சு. (அங்கே உள்ள மணல் ரத்தம் படிஞ்சு இளம்சிகப்பா இருக்குமுன்னு அம்மா சொல்லி(இது என் அம்மா) கேட்டுருக்கேன். எங்க மாமாவின் அஸ்தியைக் கரைக்க ராமேஸ்வரம் போனாங்க. மாமாவுக்குக் குழந்தைகள் இல்லை. அம்மாவின் ஃபேவரிட் அண்ணன் அந்த மாமா. அவரைப் பற்றி நம்ம அப்புறம் கதைகள் 1500 வில் சொல்லணும். நான் ராமேஸ்வரம் போனப்ப (அது ஒரு 40 வருசம் முந்தி,) அந்த இளம்சிவப்பெல்லாம் நீர்த்துக் காணாமலே போயிருந்தது)
'ஆஹா...ராமன் மணலை எடுத்துப் பிரதிஷ்டை செஞ்சாலும், அதுலே சிவன் வந்து ஆவாஹனமாகிட்டார்'னு புரிஞ்சது. இதென்ன....சின்னப்புள்ளெத்தனமா நடந்துக்கிட்டோமேன்னு வெட்கப்பட்டு, மன்னிப்புக் கேட்டுக்கிட்டார் நேயடு. ராமனும். ஹனுமன் கொண்டுவந்த லிங்கத்தையும் அங்கேயே வச்சுட்டார். ராமன், ஈஸ்வரனைப் பூஜிச்ச இடம்தான் ராமேஸ்வரமுன்னு ஆகிருச்சு.
இந்தக் கதையை திரைக்குப் பின் இருந்து 'மைக்'கில் கலைமாமணி கிருஷ்ணகுமாரி நரேந்திரன் (இந்த அபிநய நாட்யாலயாவின் உரிமையாளர்)அவுங்க வெர்ஷனில் சொன்னாங்க. யாரோ எழுதிக் கொடுத்துருந்ததைப் படிச்சாங்க. எழுதுனவர் இலக்கணவாதி போல இருக்கு. லிங்கம், ராமன் எல்லாம் இலிங்கம் இராமர்ன்னு எழுதிட்டார்போல. இவுங்களும் அதைப் படிக்கும்போது இலிங்கம் இராமர்ன்னு சொல்லி அப்புறம் லிங்கம் ராமர் ன்னு மாத்தி (ஒவ்வொருதடவை இந்தச் சொற்கள் வரும்போதும் தடுமாறித் தண்ணி குடிச்சுன்னு) ....பாவம் ஒரே களேபரம். பேசாம சிவலிங்கமுன்னு எழுதி இருந்தால் 50 சதமானம் குழப்பம் தீர்ந்துருக்கும்!
இதுலே கோபால் ஸீட்டுக்குப் பக்கத்துலே இருந்தவர் ரொம்பவே சடைச்சுக்கிட்டார். அவர் இருக்கைக்கு வந்தமர்ந்து ரெண்டு நிமிஷத்தில் சார். கொஞ்சம் இதைப் பார்த்துக்குங்கோ, மேலே மினி ஹாலில் என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு ரெண்டு நிமிஷத்துலே வரேன்னு போனவர்தான். கோபால் மாதிரி ஒரு அப்பாவி உண்டா? தன் கர்சீஃப் எடுத்து ஸீட்டில் போட்டுவச்சுட்டு , வந்து கேட்கும் மக்களுக்கெல்லாம் ஒருத்தர் இந்த இடத்துக்கு வர்றார்ன்னு சொல்லிக்கிட்டே இருந்தார். ஒன்னரை மணி கழிச்சு வந்தவர் மேலே பாட்டு ப்ரமாதம்ன்னு அறிக்கை விட்டுட்டு, 'சட்டுப்புட்டுன்னு ஆரம்பிக்காம என்ன கதை வேண்டி இருக்கு? பேசாம ப்ரிண்ட் பண்ணிக் கொடுத்துருக்கலாம். இப்போ அரைமணி வேஸ்ட்ன்னு முனகல்.
ராமேஸ்வர மகாத்மியமுன்னு நடந்த நாட்டிய நாடக நிகழ்ச்சியில் மேலே சொன்ன ராமாயணக் காட்சிகள் அருமையா இருந்துச்சு. ஹனுமனா வந்தவர் ஆடும்சிவன் பகுதியில் 'குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும்' ஆடிய அதே சதீஷ். ஆஞ்சநேயனுக்காக வாயைச் சுற்றிச் செம்பஞ்சுக்குழம்பு தீற்றியிருந்தார். அழகான தரைவரை தொடும் நீண்டவால் வேற. வேஷப்பொருத்தம் பிரமாதம்.
கலைமாமணி கிருஷ்ணகுமாரி அவர்கள் கடைசியில் நன்றி தெரிவித்தபோது, நம்ம குன்னக்குடியாரின் இசையே முழுக்க முழுக்கப் பயன்படுத்தியதாகவும். நாட்டிய மரபு கொஞ்சமும் குன்றாமல், சம்பிரதாயப் பாணிகளில் இருந்து வழுவாமல் தயாரித்த நடனங்கள் இவைன்னு சொன்னாங்க. ரெண்டு பெரியவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் சின்னப் பெண்கள். அருமையா ஆடினாங்க. அதிலும் அந்த ஆரம்ப நடனத்தில் கைகளைப் பயன்படுத்தாமல் வெறும் கால்களால் மட்டுமே என்பதும் அதுலே முகபாவங்கள் எல்லாமே சூப்பர் என்பதும் இங்கே முக்கியமாக் குறிப்பிடத் தக்கவை. பாவம்...கைகள் வலிச்சுருக்காதோ? (கைவலிக்காரிக்குக் கைகள்மேல் கண்)
இந்த மாதிரி குழு நடனமா நாட்டிய நாடகங்கள் தயாரிப்பதில் மூன்று நடனப்பள்ளிகள் ரொம்பப் பெயர் போனதாம். அந்த மூணில் இந்த அபிநய நாட்யாலயாவும் ஒன்னு,. இன்னொன்னு, சிலப்பதிஹாரம் பதிவில் பார்த்தோமே மதுரை முரளிதரன் குழு. நம்பர் ஒன்னு ஸ்ரீலதா(??) குழுன்னு கேள்வி. பெருமாள் ஸ்பெஷலிஸ்ட்டாம். திருமலையான் உற்சவம் எல்லாம் குச்சுபுடி டான்ஸ் ட்ராமாவில் ரொம்ப அருமையா இருக்குமாம். உஷான்னு ஒரு டான்ஸர் கிட்டே சேகரிச்சக் கொசுறுத்தகவல்கள் இவை.
பி.கு: இதுதான் அந்த '.நாளைக்குச் சொல்றேன்':-)
Posted by
துளசி கோபால்
at
12/18/2009 11:00:00 PM
36
comments
Labels: அனுபவம் ராமேஸ்வரமகாத்மியம், கிருஷ்ணகுமாரி நரேந்திரன்
Thursday, December 17, 2009
பாட்டும், கதக்கும், குச்சுப்புடியும் பின்னே ஞானும்.
கார்த்திக் ராஜுவின் கடைசிப் பாட்டுக்குப்போய்ச் சேர்ந்துக்கிட்டோம். பாவாடை தாவணியில் க்யூட்டா இருந்த ஒரு சின்னப்பொண்ணு வயலின். ஷ்ரத்தா ரவீந்த்ரன். கீர்த்திவாசன் ம்ருதங்கம். இது என் ஆர் ஐ ஸ்பெஷல்.திவ்யகஸ்தூரி கதக் ஆடவந்தாங்க. அழகான முகம். இந்த வகை நடனத்துலே மூணு பகுதிகள் பொதுவா இருக்கும். கதையாவே சொல்லும் நடனம்தான் இது. நம்ம பரதநாட்டியத்துலே தஞ்சாவூர் பாணி,வழுவூரார் பாணி, கலாக்ஷேத்ரா பாணின்னு வெவ்வேறு சொல்றோம் இல்லையா அதுபோலவே இவுங்களுக்கும் இருக்கு. இதை க(gha)ரானா னு சொல்வாங்க. ஜெய்பூர், பனாரஸ், லக்நோன்னு வெவ்வேற ஸ்டைல். முக்கியமானது ஃபுட் ஒர்க்தான். காலில் இருக்கும் சலங்கைகள் குறைஞ்சது நூறு இருக்கும். அத்தனையையும் ஒரே சமயத்துலே ஒலிக்காமல் தனியா ஒரே ஒரு சலங்கையை மட்டும் ஆட்டி ஒலிக்கச் செய்யும் மகாவித்தைகள் கற்ற பெரிய கலைஞர்கள் கூட இருக்காங்க.
ந்ருத்யா, நாட்டியான்னு இருக்கும் பகுதிகளில் நிருத்யாவில் நம்மூர் நட்டுவாங்கம் போல ஜதி சொல்லி அதுக்கு ஆடுவாங்க. இதுக்கு போல் (bol) ன்னு சொல்றது. ஹிந்தியிலே போல் என்றாலே பேசு, சொல்லுன்னுதான் பொருள். நமக்குத் தனியா நட்டுவாங்கம் செய்ய நட்டுவனார் இருப்பாங்க. இவுங்க நடனத்தில் நடனமணிகளே அந்த ஜதிகளைச் சொல்வாங்க. அதைக் கேட்டுட்டுத் தப்லாக்காரர் அதைத் திருப்பி வாசிக்கும்போது அதுக்கேத்தமாதிரி அந்தச் சொற்கட்டுக்கு ஆடுவாங்க. இதை எதுக்கு இப்பச் சொல்றேன்னா.......
போல்
தா....தின் தின்னா.... (dha.... dhin.......dhinna.........
tirikita....tu..........
"பாவம்.... அவளே நட்டுவாங்கம் பண்ணிக்கறாள்" பக்கத்து ஸீட் மாமா அப்படியே உருகிப்போயிட்டார். கொஞ்சம் விட்டுருந்தா அழுதுருப்பார். குரலில் சின்ன அழுகை எட்டிப் பார்த்துச்சு. (அழாதீங்கோ மாமா....) இப்படி ஆடுவது பார்ட் ஆஃப் த டான்ஸ்ன்னு சொல்லித் தேற்றினேன்.அடுத்து நாட்டியாவில் ஒரு மீரா பஜன். காக்கையைப் பார்த்ததும் கண்ணனின் நினைவு வருது நாயகிக்கு. இது நாயகி பா(b)வம். கண்ணா கருமை நிறக் கண்ணா....... இதைத்தானே பாரதியும் பாடிட்டுப் போனார் காக்கைச் சிறகினிலே நந்தலாலா...... உடி ஜா..... அருமை. கண்ணனுக்காக புஷ்பங்களைத் தொடுக்கும் அபிநயத்தில்...... வடக்கத்திக்காரங்களுக்கு இந்த பூக் கட்டும் வித்தை தெரியாதே அதனால்.... ஊசியில் பூவைக் கோர்த்து மறுகையால் நூலில் தள்ளி விட்டது சூப்பர்!!!! இந்தப் பாட்டைப் பாடுன பெண்மணி பெயர் நினைவில் இல்லை. ஆனால் உறவு மனசுலே இருக்கு. வயலின் சந்திரசேகரின் மருமகள்.
கதக் நடனத்தில் மேடையில் தரையில் பொதுவா ஒரு மைக் வைப்பாங்க. அந்த பாதங்களின் ஆட்டத்தில் சலங்கைகள் அசைந்து ஒலிப்பது சபையோருக்குத் துல்லியமாக் கேக்கணும் என்றதற்காக.
இன்னிக்கு அந்த பாக்கியம் நாம் செய்யலை. ஹார்மோனியக்காரர். சதீஷ் ரகுநாதனாம். அனந்தராம தீக்ஷிதரின் சிஷ்யராம். (குரு பெயரைச் சொன்னதும் சபையோரின் ஆஹா ஊஹா எல்லாம் பிரமாதம்) வெஸ்டர்ன், ஹிந்துஸ்தானி எல்லாம் படிச்சுருக்காராம். அவர் பாட்டுக்குத் தனி ட்ராக்லே தேமேன்னு வாசிச்சுக்கிட்டே இருக்கார். ஒரே நோட். திரும்பத் திரும்பக் கேக்கும்போது தலைக்குள்ளே ட்ரில் பண்ணி இறங்குது. மைக் தேவையே இல்லை. ஆனால் பயங்கர வால்யூமிலே .....போதுண்டா சாமி. இவர் பெயரைக் கண்டிப்பா நினைவு வச்சுக்கணும். அடுத்தமுறை இவர் வாசிக்கிறாருன்னா....நாலைஞ்சு இயர் ப்ளக் கொண்டுபோகணும். (போகத்தான் வேணுமான்றது இன்னொரு குட் கொஸ்சின்?)
தப்லா வாசிச்ச ஹிரண் சத்தா நல்லா வாசிச்சார். ஆட்டக்காரரை அனுசரிச்சு வாசிச்சார்னாலும் இவருக்கும் மைக் தேவையே இல்லை. ஒரு கட்டத்தில் எழுந்துபோய் மைக் ஒயரைப் பிடுங்கி வீசலாமான்னு இருந்தது என்னவோ நிஜம். இவுங்க ரெண்டுபேரின் அட்டகாசத்தில் திவ்யகஸ்தூரியின் பாதங்கள் காட்டிய வித்தைகள் எல்லாம் கண் பார்த்தது மட்டுமே. காது? அவுட்:(-:அடுத்த நிகழ்ச்சிக்கு வந்து முதல்வரிசையில் அமர்ந்த விஐபி யைப் பார்த்து மலைத்தேன். இவுங்க ஆடி நான் பார்த்ததே இல்லை. ஆனால் பிரசித்தி பெற்றவர், ஸோனால் மான்சிங். ஒடிஸின்னதும் இவுங்க பெயர் மனசுக்குள்ளே சட்னு வர்றதென்னவோ நிஜம். இந்த வயசிலும் கண் ஒய்யாரமா அப்படியே இழுக்குது.
நந்தினி அக்காவும் ஷைலஜாவும்
உமா முரளிகிருஷ்ணாவும்(சிலப்பதிஹார மாதவி) வந்துருந்தாங்க. நந்தினி, நடன விமர்சகர். (ரெண்டு வருசமுன்பு ஸ்ரீகலா பரத், நந்தினி அக்கா அக்கான்னு சொன்னது நினைவுக்கு வருதேன்னா இங்கேயும் இவுங்க அக்காதான்:-) ப்ரொஃபஸர் ஷைலஜாவின் குச்சுபுடி நடக்கப்போகுது. 'கலைமாமணி' ஷைலஜா ஒரு டிவிடி இன்னிக்கு வெளியிடறாங்க. அதுக்குத் தலைமைதாங்கிச் சிறப்பிக்கத்தான் ஸோனால் மான்சிங் விஜயம். இன்னும் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சுற்றுலாத்துறை இயக்குனர் டாக்டர் மோகந்தாஸ் வந்துருந்தார். வெளியீடு நடந்து முடிஞ்சதும் இது இன்னிக்குச் சலுகை விலையிலே விற்பனை இருக்குன்னாங்க.. இதுலே கிடைக்கப்போகும் வரும்படி முழுசும் முதியோர் இல்லத்துக்கு அன்பளிப்பு. நல்ல விஷயம்தான். முதலில் இவுங்க நடனத்தைப் பார்த்துட்டு வெளியே போகும்போது டிவிடி வாங்கிக்கணும்.'நம்ம ஒவ்வொருத்தர் உடம்பிலும் ஒரு ரிதம், நடன அசைவு எல்லாம் அமைஞ்சுருக்கு. கவனிச்சுப் பார்த்தால் இது புரியும். வித்யாதனம், சர்வதனம் ப்ரதானம்'னு ரொம்ப அழகாச் சுருக்கமாப் பேசுனாங்க ஸோனால்ஜி.
மஹிஷாசுரமர்த்தினி நடனம். ஆதிசங்கரரின் அயிகிரி நந்தினி. பாலமுரளியின் சிஷ்யர் வீரராகவன் குரலில். ஹரிபாபு ம்ருதங்கம், ஆர்.வி. ரமணா, புல்லாங்குழல், ஸ்ரீலதா நட்டுவாங்கம் இப்படி.....
மர்த்தினி இருக்கவேண்டிய ஆவேசம் கொஞ்சம் குறைச்சலா இருந்தமாதிரி ஒரு தோணல். அந்த சின்னப் பொண்ணு அஷ்ரிதா கேசவ் 'சட்'னு மனசிலே வந்து போனாங்க. சரி சரி. கலைமாமணி நடனத்துக்கு, நானென்ன நாட்டாமையா குறை சொல்லித் திரிய? அதுவும் ஓசியிலே பார்த்துக்கிட்டு....... ஃபோர்மச்!
பதிவு நீண்டுவிட்டதால் மீதியை நாளைக்குச் சொல்றேன்.
Posted by
துளசி கோபால்
at
12/17/2009 06:11:00 AM
29
comments
Labels: அனுபவம் கதக் குச்சுபுடி, ஸோனால் மான்சிங்
