நம்ம ஊருதாச்சேன்னு ஒருக்கா போகலாமுன்னு நினைச்சா இப்படி ஆயிருச்சேங்க.ஷாங்காயிலிருந்து பேங்க்காக் வழியா டில்லிப் பயணம். அவுங்களோட கால அட்டவணைப்படி(!)நேத்து ராத்திரி 10 மணிக்கு ஷாங்காயிலிருந்து புறப்படணும். எட்டு எட்டரைக்கெல்லாம் ஏர்போர்ட்போய் சேர்ந்தாச்சு.
டிலே ஆகுமுன்னு சொல்லலை. ஒம்பதரைக்கு மேலே தான் சொன்னாங்களாம். இன்னும் கொஞ்சம் நேரம் செல்லுமுன்னு. உக்காந்து உக்காந்து எல்லோரும் களைச்சுப்போனபிறகு,இனிமே நாளைக்குக் காலையிலே 7 மணிக்குத்தான் பயணம். நீங்க எல்லாம் ஓட்டலுக்குப் போய்த்தூங்கலாமுன்னு சொல்லி ஒரு பாடாவதி ஓட்டலிலே (அதுக்கே 40 நிமிஷப் பஸ் பயணமாம். விடிஞ்சது போ!)கொண்டுபோய்த் தள்ளுனப்பவே மணி பன்னெண்டரைக்கு மேலேயாம்.
அங்கே இந்த அர்த்த ராத்திரிக்கு கிச்சன் எல்லாம் கழுவித் துடைச்சாச்சாம். திங்கவும் ஒண்ணுமில்லை, குடிக்கவும் ஒண்ணுமில்லை. ரொம்பச் சுத்தம்!
இதோ காலையிலே 5 மணிக்கே எழுப்பி விட்டாச்சு. அஞ்சரைக்கு அடிச்சுப்பிடிச்சு பஸ்ஸிலே போறப்ப,வூட்டுக்குப் போன் போடறார். கதை கந்தல்,பசியும் தாகமுமா இருக்குன்னு. இனி ஏர்ப்போர்ட் போனாவுட்டு அங்கெ எதாவது திங்கக் கிடைக்குதான்னு பார்க்கணுமுன்னு.
ஒரு ஒண்ணரை மணி நேரம் கழிச்சு ஃபோன் வருது. என்னோட மொதக் கேள்வி,'ஏதாவது சாப்பிட்டீங்களா?'
'அங்கேயும் ஒண்ணும் கிடைக்கலை. எல்லாரையும் ப்ளேன்லே சரசரன்னு ஏத்தி உக்காரவச்சுட்டான். சாப்பாட்டுக்கடையைத் தேடவும் நேரமில்லை. ஆனா ஒரு தண்ணி பாட்டில் வாங்கினேன். அதைக் குடிச்சுக்கிட்டு உக்காந்திருக்கேன்.'
எப்பக் கிளம்பி எப்ப சாப்பாட்டைக் கண்ணுலே காட்டுவாங்களோ? ( அடப்பாவி மனுஷா! இங்கே நான் வக்கணையாசாப்ட்டேனே(-: ஹூம்...)
இப்ப ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாலெ மறுபடி ஃபோன்.
"எங்கே இருந்து பேசறீங்க?"
" பாங்காக் வந்தாச்சு. ஒருமணிநேரம் கழிச்சுக் கிளம்பும்."
" சாப்பாடு கிடைச்சதா?"
" கிடைச்சது. தூக்கமில்லாம ஒருமாதிரி இருக்கு. ஞாயிறு சாயந்திரம் 4 மணிக்குத்தான் டெல்லி போய் சேரும்"
" வேற வழி? தலையை உரலுக்குள்ளெ கொடுத்தாச்சு. இனி அய்யோன்னா முடியுமா? நீங்க உங்க ட்ரிப்பை முடிச்சுக்கிட்டுப்பத்திரமாத் திரும்பி வாங்க. அதுக்குள்ளே உங்க பழைய செருப்பு எதாவது இருக்கான்னு தேடிப்பார்த்து எடுத்து வைக்கிறேன்"
( தூக்கக் கலக்கத்துடன்)" எதுக்கு?"
"ம்ம்ம்ம்ம் ... இனிமே ஏர் இந்தியாவுலே போவியா போவியான்னு அடிச்சுக்கறதுக்கு"
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
Sunday, December 11, 2005
ஏர் இந்தியாவின் சேவை.......
Posted by
துளசி கோபால்
at
12/11/2005 06:27:00 PM
24
comments
Friday, December 09, 2005
நியூஸிலாந்து பகுதி 33
காசு இருக்கறவனுக்கு ஒரு மாதிரி, அது இல்லாதவனுக்கு ஒரு மாதிரின்னு இப்ப நடக்கறது அப்பவும் நடந்துச்சு!கூடுதல் காசுக்கு கூடுதல் செளகரியம். பயணிகள் தனி கேபின் கிடைக்கும். இல்லாதவனுக்கு டார்மிட்டரிதான். கூட்டத்துலேகோவிந்தா. ஒண்ணு ரெண்டு நாள் இல்லை , மாசம் நாலுக்கு மேலே ஆகும். பெரும்பான்மையானோர் இருக்கறது ஹோல்ட்(hold)ன்னு சொல்ற கப்பலோட அடிப்பாகம். அங்கே ஜன்னலோ , போர்ட் ஹோலோ கிடையாது. படிக்கவோ,எதாவது கம்பளி உடுப்புப் பின்னல் போல கைவேலை செய்யவோ முடியாது. அந்த இருட்டுலே எப்படி..?
ஆறடிக்கு எட்டடி இருக்கற இடத்துலே ஆறுபேர் இருக்கற குடும்பம். இப்படி நெருக்கித் தள்ளிக்கிட்டு நாலுமாசம்பயணம் பண்ணா எப்படி? மூச்சு முட்டிறாது? கூட்டத்துக்குள்ளே சீக்கு பரவ ஆரம்பிச்சது. 1842 லெ வந்த ஒரு கப்பலிலெ ( கப்பல் பேரு லாயிட் Lloyds ) 65 புள்ளைங்க சீக்கு வந்தே செத்துப்போச்சுங்களாம். அடப்பாவமே(-:
ஒரு குடும்பத்துக்கு ஒரு மெத்தை, தலைகாணி, ரெண்டு சமையல் பாத்திரம். தட்டு, கப்பு, கட்லரி( ரொம்ப முக்கியம்?)வகையறா பயணிகளே கொண்டுவந்துறணும். ஒரு மாசத்துக்கு வேண்டிய துணிமணியைக் கூடவே வச்சுக்கலாம். அவுங்களொட மத்த சாமான் செட்டெல்லாம் அந்தக் கப்பலோட அடித்தளத்துலே இருக்கிற லக்கேஜ் இடத்துலேஇருக்கும். அதை மறுபடிக் கண்ணுலே பாக்கறதே கப்பலைவிட்டு இறங்குனப்புறம்தான்.
சரி. கப்பல்லே சாப்பாட்டு வசதியெல்லாம் எப்படி? ஏர்ஹோஸ்டஸ் மாதிரி கப்பல் ஹோஸ்டஸ் வகைவகையாக்கொண்டுவந்து தருமாமா? (ம்க்கூம். ஆசை தோசை அப்பளம் வடை...)
ரேஷன் போட்டுச் சாமான்களைக் கொடுப்பாங்களாம். அதுலேயே ஆக்கித் தின்னுக்கணும்.சிலது தினப்படி, சிலது வாரப்படி!
தினப்படி இப்படி இருந்துச்சு.
முக்காப் பவுண்டு பிஸ்கெட்,அரைபவுண்டு மாவுபட்டாணி அரைப் பின்ட்டு(ஆமா, இந்தப் பட்டாணியை என்ன பண்ணி இருப்பாங்க? ஒருவேளை 'சுண்டலோ'?)
வாரம் ரெண்டுதடவை( செவ்வாயும் சனியும்) ஒரு பவுண்டு இண்டியன் மாட்டிறைச்சி( எதுக்கு இந்தப் பேரு? ஒருவேளை 'தட் மாடு ஃப்ரம் இண்டியா'?:-))அரைப் பவுண்டு பதப்படுத்தின வேற(?) இறைச்சி.
வாரம் மூணு முறை:
அரைப் பவுண்டு பன்றிக்கறி
வாரம் நாலு முறை:
கால் பவுண்டு அரிசி
முக்கால் பவுண்டு உருளைக்கிழங்கு.
இதில்லாம கொஞ்சம் வெண்ணெய், சக்கரை, டீத்தூள், காபிப்பொடி, உப்பிலிட்ட முட்டைக்கோஸ்,கடுகு( அரைச்சது) உலர்ந்த திராட்சை, உப்பு, மிருகக் கொழுப்பு, குடிதண்ணீர்.
தேவைக்காக ஓட்ஸ், அர்ரோரூட் மாவு, எலுமிச்சம் ஜூஸ் வச்சிருப்பாங்களாம். ச்சின்னப் பசங்களுக்கு மேலே சொன்ன பெரியவங்க ரேஷனில் ஒரு பகுதி. ஒருவயசுக்குட்பட்டகுழந்தைகளுக்கு ஒண்ணும் கிடையாது. அதான் பால் குடிச்சுக்குமுன்னு இருந்திருப்பாங்க போல..
பிரயாணம் முடிவடையறப்ப மிச்சம் இருக்கற சாப்பாட்டுச் சாமான்களை எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்துருவாங்களாம். கப்பலிலே மருந்துவகைகள் இருக்குமுல்லே. அதுலே 12 பாட்டில் ஷெர்ரி, 12 பாட்டில் போர்ட் ஒயின்,300 கேலன் Stout, 40 கேலன் பிராந்தி !( ஆமாமாம். திங்க சோறில்லேன்னாலும் குடிக்க மது இல்லாம இருக்கலாமோ?)
குடிதண்ணீர் அளவோடதான் தருவாங்களாம். இந்த லட்சணத்துலே குளிக்க நல்ல தண்ணி ஏது? இளவயதுஆம்பளைகள் கப்பல்மேல்தளத்துலே உப்புத்தண்ணியை மொண்டு குளிக்கறதோட சரியாம்.
இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு கரைக்கு வந்து சேர்ந்தவுடனே, நிலம் வாங்கறவரை அங்கங்கே குடிசை,கூடாரமுன்னு போட்டுக்கிட்டு இருக்க வேண்டியது தானாம்.
செருப்பு, ஷூவெல்லாம் விலை கூடுதல்ன்றபடியாலே பசங்க வெறுங்காலோடுதான் இருக்கறது, விளையாடறது.துணி துவைக்கறது, பொட்டிபோடறதெல்லாம் கஷ்டமுன்னாலும் எல்லோரும் 'நீட்டா' உடுத்துவாங்களாம்! இருக்கறதுலேயேநல்ல உடுப்புங்களை ஞாயித்துக்கிழமை சர்ச் போகன்னு வச்சுக்குவாங்களாம்.
புள்ளைங்களும் தினம்தினம் ஸ்கோலுக்குப் போவாதாம். நிலத்துலே வேலை செய்ய ஆளு வேணுமுல்லே?
பெரிய பெரிய குடும்பங்களாம். நிறையப் புள்ளைங்க. ஆனா டைஃபாய்டு, டிப்தீரியா, கக்குவான் இருமல், வயித்துப்போக்குன்னு வந்து சின்னவயசு சாவுங்க ஏராளமாம்.
நிலத்துலேயும் பயிர் பச்சை வைக்க, இன்னும் நிலம் உழுதல்ன்னு வேலை நிறைய இருக்குமே, அதுலெல்லாம்கூடப் பெண்கள் உதவியில்லாமல் முடியாதுன்றதுதான் உண்மையான நிலமை.
அப்ப இங்கே வசித்த பெண்களில் பலரும் கல்யாணம் என்ற பந்தத்தில் இருந்தவர்கள். அநேகமா இவுங்கதான்வீட்டுவேலைகள் எல்லாம் செஞ்சுக்கிட்டு, குழந்தைகுட்டிகளைப் பார்த்துக்கிட்டு வீட்டுலே எதாவது உபரி வருமானம்( சிறுவாடு?) பார்க்கறதுக்காக, வெண்ணெய், பால், ச்சீஸ்ன்னு அக்கம்பக்கத்துக்கு வித்துக்கிட்டுஇருந்திருக்காங்க.ஆஸ்பத்திரி, ஹெல்த் வொர்க்கர்ங்கன்னு யாரும் இல்லாத காலமென்றபடியாலே வீட்டுலே இருக்கற சீக்காளிங்களைப்பார்த்துக்கறதும் ஒரு பெரிய வேலையா இருந்திருக்கு.
எல்லாத்துக்கும் மேலே வீட்டு ஆம்பளைங்க மரியாதையோடு நடந்துக்கறதும், அளவோடு குடிக்கறதுக்கும்கூட இவுங்களோட பொறுப்புதானாம்!!!
அப்ப இவுங்க உடை என்ன தெரியுமா? பாதம் வரை கணுக்காலை மூடும் பாவாடை. அடியுடுப்பாக மூணு நாலு பெட்டிகோட்டுங்க.
( இதையெல்லாம் படிக்கறப்ப நம்ம கிராமங்கள்தான் நினைவுக்கு வருது. அப்ப நம்ம நாட்டிலும் பெண்களுக்கு வாழ்க்கை இப்படித்தானே இருந்திருக்கு!)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
Posted by
துளசி கோபால்
at
12/09/2005 05:58:00 PM
11
comments
Tuesday, December 06, 2005
நியூஸிலாந்து பகுதி 32
'கொடி பறக்குது, கொடி பறக்குது . இப்படி அவுங்க கொடியைப் பறக்கவிட்டு, நம்மளைக் காத்துலே வுடப்போறானுங்கோடோய்!' கனகம்பீரமா வைட்டாங்கி( அதான் ஒப்பந்தம் ஆன ஊர்)யிலே பறந்துக்கிட்டு இருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின்கொடியை, அப்படியே கொடிமரத்தோடு வெட்டிச் சாய்ச்சார் இன்னொரு குழுத்தலைவரான ஹொங்கி ஹிகாவோட மருமகன். இவரோட பேர் ஹொனெ ஹெகெ. 'வெள்ளைக்காரன் நம்மளைச் சரியா ஏமாத்திட்டான்' னு கொதிச்சுக்கிட்டு இருந்தார். அவுங்க திருப்பி நட்ட கொடிமரத்தையும் வெட்டிப் போட்டார். இப்படியே மூணுதபா ஆச்சு. நாலாவது முறை கொடிமரத்துக்குக் காவல் போட்டாங்க. மறுபடி சண்டை. 12 மவொரிங்களும், 15 வெள்ளைக்காரச் சிப்பாய்ங்களும் சொர்க்கம்/நரகம் போய்ச் சேர்ந்தாங்க.
சம்பவம் நடந்த ஊர் கோரோரரெகா தீவச்சுக் கொளுத்தப்பட்டுச்சு. சாம்பலேமிச்சம். கவர்னருக்குப் பயம் வந்துருச்சு. இதெல்லாம் எதுலே போய் முடியுமோன்னு? அடுத்த நாடான ஆஸ்தராலியா( அப்ப அது வெறும் பிரிட்டிஷ் காலனிதான். ஆஸ்தராலியான்ற பேரெல்லாம் இல்லை.மொத்தம் 6 காலனிகள் அதுக்குள்ளே.) சிட்னிக்கு உதவி வேணுமுன்னு கேட்டு ஆள் அனுப்புனார். 400 படைவீரர்கள் வந்தாங்களாம்.
ஹொனெ ஹெகெ கிட்டே 300, அவரோட நண்பர்கிட்டே 150ன்னு மொத்தம் 450 பேர் மவொரிப் படையிலே.ஜெயிச்சதென்னமோ மவொரிங்கதான். காவு கொடுத்தது ரெண்டு பக்கத்துலேயும் மொத்தம் 28 பேர். ஆளுக்குப்பாதின்னு பதினாலு பதினாலுபேர்.
கவர்னருக்கு ரொம்ப அவமானமாப் போச்சு. இன்னும் படைவீரர்களை சிட்னியிலே இருந்து வரவழைச்சார். அப்போஇவுங்க கைமட்டும் பூப் பறிச்சுக்கிட்டு ( இல்லே பாய் மொடைஞ்சுக்கிட்டு) ச்சும்மா இருக்குமா?
நல்ல மரத்தடுப்பு எல்லாம் போட்டு ஒரு பெரிய இடம் ஏற்பாடு செஞ்சாங்க. மூணுபக்கம் மறைப்பு. ஒரு பக்கம் திறந்த வழி. உள்ளேபதுங்கு குழியெல்லாம் வெட்டி வச்சுக்கிட்டாங்க. எல்லாம் வெள்ளைக்காரங்ககிட்டே இருந்து கத்துக்கிட்டதுதான்.முன் ஆலோசனை இல்லாம பிரிட்டிஷ்காரங்க அங்கே பாய்ஞ்சாங்க ( அவுங்க நினைச்சிருப்பாங்களாக்கும் இன்னொரு'ஜாலியன்வாலா பாக்'ன்னு!) கதை கந்தலாச்சு. நூத்துக்கும் மேலே கொல்லப்பட்டாங்க பிரிட்டிஷார். மவொரிங்க சைடுலே வெறும் 10!
தோல்விக்குமேலே தோல்வி. 'கவர்னர் சரியில்லை'ன்னு இங்கிலாந்து அவரைத் திருப்பிக் கூப்புட்டுக்கிச்சு. 'செட்டிலர்ஸ்'க்கு ஒரே கொண்டாட்டம், 'நாலு காசைப் பார்க்கவிடாம குறுக்கே வந்தவன் தொலைஞ்சான்'னு!
வெறும் 33 வயசே ஆன கேப்டன் ஜார்ஜ் க்ரே பெரிய படைபலத்தோட புது கவர்னரா 1845லே வந்து சேர்ந்தார். மனுஷன்மகா கெட்டி! 'பகையாளிக் குடியை உறவாடிக் கெடு' ன்ற வித்தை தெரிஞ்சவர். மொதல் வேலையா டமடி வாகா நெனெ( Tamati Waka Nene, Chief of Ngapuhi)வை சிநேகிதம் செஞ்சுக்கிட்டார். ரெண்டு பேருக்கும்சேர்த்து 1500 வீரர்கள் இருந்தாங்க. போதுமே! சமாதானப் பேச்சு தொடங்கி,அடக்கிட்டாங்க ஹொனெ ஹெகெவை !'ஹொனெஹெகே' வோட இடம் திருப்பிக் கொடுக்கப்பட்டது.
இந்த ஒரு குழுதான் சமாதானம் ஆச்சே தவிர அங்கங்கே ச்சின்னச் சின்னதாக் கலவரம் வெடிச்சுக்கிட்டேதான் இருந்துச்சு.ரெண்டுவருசமா சளைக்காமச் சண்டைபோட்ட Te Rauparaha நிறையபேரைச் சேர்த்து பெரும்படையை வச்சிருந்தார்.அவுங்க எல்லாம் பார்க்கறமாதிரி, அந்த ஊரைவிட்டு தன்னுடைய படையோடு கப்பலில் கிளம்பிப் போனார் க்ரே.கொஞ்ச தூரம் போயிட்டு, ராவோடராவா ஓசைப்படாம திரும்பிவந்து பொழுது விடியறதுக்கு முன்னே மவொரிங்கபடைமேலே பாய்ஞ்சு சின்னாபின்னமாக்கி, Te Rauparaha புடிச்சுட்டார். புடிச்சு ஜெயில்லே போட்டாச்சு. தலைவன்இல்லாமப்போனவுடனே எல்லாம் அடங்கிருச்சு. என்னா தந்திரம் பார்த்தீங்களா?
'க்ரே' மவொரி மொழி பேசக் கத்துக்கிட்டு எல்லாக் குழுத்தலைவர்களையும் சிநேகம் பண்ணிக்கிட்டார். அவுங்களோட கலாச்சாரத்தை, பழக்கவழக்கத்தையெல்லாம் எழுதச் சொல்லி ஊக்குவிச்சு அதையெல்லாம் இங்கிலீஷ்லெயும், மவொரியிலேயும் புத்தகமாப் போட்டார். (அப்ப ப்ளொக் இல்லை. இருந்துருந்தா அவரும் ஒரு ப்ளொக் ஆரம்பிச்சிருப்பார்)நிறைய காசு செலவு செஞ்சு அங்கங்கே பள்ளிக்கூடம் கட்டி மவொரிப் புள்ளைங்களுக்கு எழுதப்படிக்க, கணக்குப் போடன்னு சொல்லித்தர ஏற்பாடு செஞ்சுகொடுத்தார். நாலு ஆஸ்பத்திரிங்க கட்டிக் கொடுத்து மவொரிங்களுக்குவியாதிவெக்கைக்கு மருந்து கொடுத்துக் குணமாக்க உதவியா இருந்தார். எல்லாத்துக்கும் மேலா, விவசாயம் செய்யறதுக்குவேண்டிய சாமான்களை வாங்கக் கடனுதவியும் செஞ்சார். நில சம்பந்தமான எல்லா விற்பனைகளும் நியாய விலையிலேயும்,எல்லாருக்கும் ஒரே நியதின்னு இருக்கணுமுன்னும் கவனமா இருந்தார். எல்லாரும் சமமா நடத்தப்பட்டதாலே சண்டைங்ககுறைஞ்சுக்கிட்டே போச்சு. எல்லாருக்கும் வேண்டப்பட்டவரா ஆனார் நம்ம க்ரே.
அரசியல் சாஸனம் ஒண்ணு ஏற்பாடு செஞ்சு, குடியரசு அரசாங்கம், ஓட்டுப்போட்டுத் தேர்தல் நடத்துறது எல்லாம்வந்துச்சு. ஒவ்வொரு பெரிய ஊருலேயும் ஆளுங்க ஜெயிச்சுவந்து அசெம்ப்ளி அமைப்பு உருவாச்சு.ஆனால் ஓட்டுரிமை பெண்களுக்கு இல்லை! ( இது நடந்து 48 வருசமான பிறகுதான் 1893லே பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைச்சது.இதுவே பெண்களுக்கு ஓட்டுரிமை கொடுத்த முதல் நாடு!)
இதெல்லாம் ஒருபக்கம் நடக்கறப்ப, இங்கே 9000 வெள்ளைக்காரங்க கப்பலேறிவந்தாச்சு! அங்கங்கே குடிசைங்க முளைச்சிருச்சு. நம்புங்க, நிஜமாவே குடிசைதாங்க. கோட்டு சூட்டெல்லாம் போட்டுக்கிட்டுக் குடிசைவாசம்! இங்கேவந்துட்டா வாழ்க்கைத்தரம் உயர்ந்திருமுன்னு வந்தவுங்கதான் இவுங்கெல்லாம்.
" ஏங்க எங்கே கிளம்பிட்டீங்க?"
" சர்ச் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்"
" இன்னைக்கு ஞாயித்துக்கிழமைகூட இல்லையே, என்னாத்துக்கு சர்ச்சு?"
" நீ சும்மா கிட புள்ளே. பாதிரியாரைப் பார்க்கத்தான் போயிக்கிட்டு இருக்கேன்"
" அதான் என்னாத்துக்குன்னு கேக்கறேன்லெ"
" ஓ.. அதுவா? ஒரு நன்நடத்தை சர்ட்டிபிக்கேட்டு வாங்கத்தான்"
" என்னாத்துக்கு? நீ நல்லவன்னு யார்கிட்டே காமிக்கணுமாம்?"
" புரியாமப் பேசாதே. நியூஸிலாந்து போலாமுன்னு பேசிக்கிட்டு இருக்கோமுல்லே, அங்கே எல்லாரையும்கொண்டு போகமாட்டாங்களாம்.நல்ல வனா இருக்கணுமாம். உழைப்புக்கு அஞ்சாதவனாவும், தொழில் திறமைஎதுவாச்சும் இருக்கறவனாவும், முக்கியமா நம்பகமான பார்ட்டியாவும் இருந்தாத்தான் அங்கே காலு குத்த முடியுமாம்.அதுக்குத்தான் பாதிரியாருகிட்டே ஒரு கடிதாசு வாங்கலாமுன்னு போறேன். குறுக்கே இவ ஒருத்தி."
இப்படி ஒரு உரையாடல் நடந்திருந்தாலும் ஆச்சரியமில்லை. ஏன்னா அப்ப இந்தமாதிரி சர்ச் ஃபாதர்ங்ககிட்டே நிறைய பேர் சர்ட்டிஃபிகேட் வாங்கி கப்பல் ஏஜெண்ட் கிட்டே கொடுத்தாங்களாம். இது எப்படி இருக்கு?
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
Posted by
துளசி கோபால்
at
12/06/2005 10:26:00 PM
9
comments
