Sunday, March 30, 2025

நண்பர்கள் அனைவருக்கும் இனிய யுகாதி வாழ்த்துகளுடன் என் பேரன்பும் !
இந்தியப்பயணம் போய் வந்து ஒரு பதினைஞ்சு நாட்கள் ஆச்சு.  முதலில் எழுதணுமா, வேண்டாமான்னு (வழக்கம்போல்) ஒரு எண்ணம்.  போகட்டும் போ..... எழுதியே வைக்கலாமுன்னு அப்புறம் ஒரு தோணல்.  அதுக்கேத்தாப்போல் சில நட்புகள். தனிப்பட்ட செய்திகளை அனுப்பி 'எப்போ எழுதப்போறே, எப்போ எழுதப்போறே'ன்னு  விசாரிச்சாங்களா....   ஹாஹா.... நமக்கு இப்படி ஒரு வரவேற்பான்னு.... எழுத ஆரம்பிச்சுருக்கேன்.  
பயணத்தின் ஆதியோடந்தமா ரொம்ப விஸ்தரிப்பு இல்லாம எழுத நினைச்சுருக்கேன். கடவுள் உங்களைக் காப்பாற்றுவாராக !

என்னதான் கவனமா இருக்கோம் என்றாலும் அவசரத்தில் சிலபல குழப்பங்கள் ஏற்படத்தான் செய்கிறது, இல்லை?

உடல்நலக்குறைவு காரணம், போன வருஷம் ஆகஸ்ட்டில் போக வேண்டிய இந்தியப்பயணத்தைக் கடைசி நாளில் ரத்து செய்யும்படி ஆச்சுன்னு ஏற்கெனவே புலம்பி இருந்தேன். 

விசேஷ மருத்துவரைக் கண்டு அதுவரை நடந்த சிகிச்சையின் நிலையைப் பற்றி விசாரிச்சப்ப,  'ரொம்ப மெதுவாகத்தான்  குணம் தெரியும்.  அடுத்த ஆறு மாசம் கழிச்சு, உங்களை மீண்டும்  சந்திப்பேன்' என்றார்.   அப்படியானால்   பயணம் போகலாமான்னு கேட்டதும், 'போகலாம். மறக்காமல்  வலிநிவாரணி மருந்துகளை சரியான நேரத்துக்கு எடுத்துக்கணும்'னு சொன்னார்.

 வேறுவகையான சிகிச்சை முறைகளைப் பின்பற்றலாமான்னு இன்னுமொரு கேள்வி.  என்ன முறைன்னு  அவர் முழிச்சதும், ஆயுர்வேத சிகிச்சைன்னார் நம்மவர்.  பிரச்சனை இல்லைன்னு பதில் வந்தது.  (ஆறு மாசம் கழிச்சுதான் அடுத்த சந்திப்பு. அதுவரை என்னவாச்சும் செஞ்சுக்கோ.... )

வீட்டுக்கு வந்ததும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஸ்பெஷல் ஏதாவது இருக்கான்னு பார்த்த நம்மவர்,  ஜனவரி 29க்கு இந்தியா போறோமுன்னார். போகும்போது ரெண்டு நாட்கள் சிங்கப்பூரில் தங்கல்.  வழக்கம்போல் கோவில் பக்கத்தில் பார்க் ராயலில் ரூம் போட்டாச். திரும்பி வரும்போது   சிங்கப்பூரில் தங்கல் கிடையாது. நேராக ஊருக்குத் திரும்பிருவோம். மொத்தம் ஆறு வாரம்.   கோட்டக்கல் ஆர்யவைத்யசாலாவில் கால்வலிக்கு சிகிச்சை எடுக்கறோம். எல்லாம் தகவல்கள்தான். 


அந்த தேதிகள் சரிப்படுமா? எத்தனை நாட்கள் போகலாம்? இப்படி ஒரு பேச்சும் இல்லை. ராணுவநடவடிக்கையா இருக்குல்லெ ?  


ஒரு விநாடி ஙேன்னு முழிச்ச நான், 'அயோத்யா போறோமா இல்லையா ? ' ன்னு கேட்டேன். போறோம். அங்கே தரிசனத்துக்கு ஒரு ஏற்பாடு  இருக்கு. அதுலே  புக் பண்ணிடலாமுன்னார்.

தினமும் நூற்றைம்பது பேருக்கு தரிசன நேரம் ஒதுக்கித் தர்றாங்களாம்.  அதைப்பற்றி முதலில் நான் ஒன்னும் கேட்டுக்கலை. அப்புறம்தான் தெரிஞ்சது..... நாம் தரிசனம் செய்ய நினைக்கும் நாளுக்குச் சரியாப் பதினைஞ்சு நாட்களுக்கு முன்னால்  கோவில் வலைப்பக்கத்தில் போய்  பெயரைப் பதிவு செஞ்சுக்கணும். பெயர் மட்டுமா..... மற்ற தனிப்பட்ட விவரங்களும்தான் !  இந்திய நேரம் ராத்ரி 12 ஆனதும் அந்த சைட் திறக்கும்.  நாம் , நம்ம விவரங்கள் எல்லாம் அந்தந்தப் படிவத்தில் நிரப்பியதும்   நமக்கான நேரம்  கொடுக்கப்படும்.  ரொம்ப சிம்பிள் இல்லை !!!!


இல்லை.....  படிவம் நிரப்பிக்கிட்டு இருக்கும்போதே.... அன்றைய கோட்டா முடிஞ்சதுன்னு  செய்தி வந்துரும். இந்திய நேரத்துக்கும் நமக்கும் ஏழரை என்பதால்..... காலை ஏழேகாலுக்கெல்லாம் தயாரா கணினியும் கையுமாக உக்கார்ந்திருப்பார் நம்மவர். தினமும் இதுவே ஒரு போராட்டம்..... இப்படிப் பலநாட்கள் போனபின் ஒருநாள் நமக்கு இடம் கிடைச்சுடுத்து !!!!   ஃபிப்ரவரி  11 பகல்  3 முதல்  4.30 வரை !

இனி உள்ளுர் பயணத்துக்கு சென்னை- அயோத்யா  டிக்கெட் ஏற்பாடு செய்யணும்.  அதுவும் ஆச்சு. "தரிசன நாளுக்கு முன்னும் பின்னும்  ஒன்னும் ரெண்டுமா மூணு நாட்கள் அங்கே தங்கறோம். அங்கிருந்து கிளம்புவது  சாயங்காலம் நாலுதான், உனக்கு இன்னும் அரைநாள் கூட  ஷாப்பிங் செய்யலாம். "

இங்கே  நியூஸி வீட்டில் மற்ற வேலைகளுக்கு(முக்கியமாச் செடிகள்) உண்டானவைகளை ஒருவிதம் சரி ஆக்கினோம். வீட்டுக்குள் இருக்கும் செடிகளுக்கு மகளும், தோட்டத்துச் செடிகளுக்கு பக்கத்துவீட்டுக்காரர் மகளும் பொறுப்பு !

புதுசா ஒரு சங்கடம் இப்போ. வெளிநாட்டிலிருந்து இந்தியா போகும் நம் மக்கள், தங்கம் கொண்டுபோகும் அளவைக் குறைச்சுருக்காங்களாம்.  நாம் என்ன கிலோக்கணக்குலேயா வச்சுருக்கோம் ?  பெண்கள் 40 கிராம், ஆண்கள் 20 கிராம்தானாம். கம்மல், மூக்குத்தி, வளையல், தாலிச் செயின்தான் எப்பவுமே.... அதுக்கும் வச்சுட்டாங்க ஆப்பு....  இருக்கறதுலேயே தேசலா இருக்கும் ஒரு சங்கிலியை மாட்டிக்கிட்டுக் கிளம்பணும்.



கிளம்பும் மூணு நாட்களுக்கு முந்தி, சிங்கைத்தங்கல்  ரத்து. சீனப்புத்தாண்டு தினமாம்.  மக்கள் கூட்டம் அதிகமா இருக்கும் காலம். மேலும் ஏதோ ஒரு வைரஸ் தொற்று வந்துருக்காம். (நமக்குன்னு வருது பாருங்க இப்படியெல்லாம்....) நேராச் சென்னை போய் இறங்கறோமாம்.  சிங்கையில் தோழியையும், மற்ற நண்பர்களையும்  சந்திக்கும் வாய்ப்பு போயே போயிந்தி...... 


ரெண்டுநாள் முன்பே சென்னைக்குப் போறதால்....நம்ம லோட்டஸ் புக்கிங் எல்லாம் மாத்தவேண்டி இருந்தது. எல்லாம் ஒருவழியா ஆச்சு.
சிங்கையில் ட்ரான்ஸிட்லே கொஞ்சம் வேடிக்கை பார்த்துட்டு சென்னை விமானம் ஏறினோம். 
மறுநாள் காலையில் லோட்டஸ் மக்களின் 'எப்ப வந்தீங்க?'  என்றதுக்கெல்லாம்  மகிழ்ச்சியாப் பதில் சொல்லிட்டுப் பெருமாளைப் பார்க்கக் கிளம்பினோம். அவரையும் பார்த்து வருஷம்  ரெண்டேகாலாச்சே !  கோவில் வாசலில் சாமுண்டி ! சட்னு ஒரு முழம் மல்லிகையை எடுத்து நீட்டுன அன்பை மறக்கவே முடியாது ! இருவது வருஷப்பழக்கம். 
பெருமாளுக்கும் தாயாருக்குமாப் பூச்சரங்களை வாங்கிக்கிட்டு, மொத்தக்காசையும் கொடுக்காம ஒரு பகுதியைக் கடன் வச்சுட்டு,  கடன்வாங்கிட்டு முழிக்கறவனுடைய தரிசனமும் ஆச்சு. இனி பேங்குக்குப்போய் உள்ளுர் காசெடுத்தால்தான் கடனை அடைக்க முடியும் !

நம்ம கணக்கிருக்கும் பேங்க் பக்கத்தில்தான்  புதுசா வந்துருக்கும் பத்மாவதி தாயார் கோவில்.  முதல்முறையா அங்கேயும் போனோம்.  நாம் திருச்சானூரில் பார்க்கும் அதே தாயார் !!!  பரவசத்துடன் தரிசனம் ஆச்சு. 



களைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், நெருங்கிய தோழி, மறுநாள் ராஜபாளையம் போறாங்க என்பதால்  அவசரமாக ஒரு சந்திப்பும், இலவச இணைப்பாக  இன்னும் இரண்டு நெருங்கிய தோழிகளையும்  அன்றே போய் சந்தித்தோம். நாலு பெண்கள் சேர்ந்தால் எவ்வளவு கொண்டாட்டம் என்பது.... உங்களுக்குத் தெரியாதா என்ன ?  அதுவும் எழுத்தாளினிகள் வேற..... கூடவே  ரெண்டு செல்லங்களும் !

தொடரும்.......... :-)












Saturday, February 08, 2025

குழந்தையைக் காணோம்.....

இங்கே க்றிஸ்மஸ் தினத்தில் எந்த ஆரவாரமும் இல்லாமல் ஊரே ஜிலோன்னு கிடக்கும். டிவியில்   கமர்ஸியல் கூட  இருக்காது. எதாவது பக்திப்படமோ, ம்யூஸிகலோ தான் ! ஊர் முழுக்க கடைகண்ணிகள் மூடி,  எங்கியோ ஒரு டெய்ரி ஷாப் திறந்திருக்கும்.  கார் நடமாட்டமே கூட அவ்வளவா இருக்காது. 
சாயங்காலம் ஒரு அஞ்சுமணி போலக் கிளம்பி பீச்சுக்குப் போறோம்.      
மெட்ராஸ் தெரு தாண்டும்போது,  'கார்ட்போர்ட்' கதீட்ரலுக்குப் போயிட்டுப்போகலாமான்னார் நம்மவர். எனக்கொரு விரோதமும் இல்லை. எங்க கதீட்ரல் இடிஞ்சு விழுந்தபிறகு, திரும்பக் கட்டிமுடிக்கும்வரை தாற்காலிகமா ஒரு சர்ச் கட்டிவிட்டது, ஏஞ்சலிக்கன் சர்ச் நிர்வாகம். ஒரு ஜப்பானியக் கட்டடக்கலைஞர் கார்ட் போர்ட் வச்சுக் கட்டினார். அஞ்சு மில்லியன் செலவாகும்னு சொல்லி ஏழு மில்லியன் டாலருக்கு  இழுத்துருச்சு.
போற போக்கைப் பார்த்தால் இதுதான் நிரந்தரம்னு தோணும்.  பதினாலு வருஷம் ஆகப்போகுது இப்போ...... பழசைத் திரும்பிக் கட்டறோமுன்னு    வேலையை  ஆரம்பிக்கவே  வருஷங்களா இழுத்தடிச்சு, ரெண்டு வருஷத்துக்கு முன் தொடங்குன வேலையை, இப்போ  எதிர்பார்த்ததைவிட  பட்ஜெட் கூடுதலாகுதுன்னு  நிறுத்திட்டாங்க. ப்ச்.....அட்டைகோவிலுக்கு அஞ்சுமில்லியனான்னு அப்போ பதிவெல்லாம் எழுதியிருந்தேன்.

 இந்தச் சர்ச்சாண்டைதான் ஒரு கட்டடம் இடிஞ்சு விழுந்து, 115 பேர் இறந்துட்டாங்க.  இவர்களில் பெரும்பாலோர், ஜப்பான் நாட்டிலிருந்து இங்கே இங்லிஷ் படிக்கவந்த மாணவர்கள்.  அவுங்க வந்திறங்கிய மறுநாள்தான் நிலநடுக்கம். ப்ச்.... 
இப்ப அந்த கட்டடம் இருந்த இடத்தில் சின்னதா ஒரு தோட்டமும், புதுசா  க்ரே கலரில் அழுதுவடியும் நினைவுச்சின்னமும். நமக்குப் பார்க்கிங் அங்கே கிடைச்சதேன்னு எட்டிப்பார்த்தேன்.

 எர்த்க்வேக் மெமோரியல்னு ஆத்தங்கரையில் சுவர் எழுப்பி அங்கே, இறந்துபோன 185 நபர்களின் பெயர்களையும் சலவைக்கல்லில் பொறிச்சு வச்சுருக்கு சிட்டிக்கவுன்ஸில்.  என்ன ஒன்னு.....  கண்ணுலே விளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டுப் பூதக் கண்ணாடி வச்சுப் பார்த்தாலும் அந்தப்பெயர்களை நாம் வாசிக்கமுடியாது.....  எந்த மஹானுபாவரின் ஐடியாவோ...... மொத்தத்தில் கலர்சென்ஸ் இல்லாத நிர்வாகம். 
சாலையைக் கடந்து எதிர்வாடைக்குப்போனால்.....  கார்ட்போர்ட் சர்ச்சில் சர்வீஸ் நடந்துக்கிட்டு இருக்கு.  எனக்கு குடில் பார்க்கணும் என்பதால் முன்வரிசையாண்டை போய் உக்கார்ந்தேன்.  சர்வீஸ் நடக்கும் சமயங்களில் படம் எடுக்கக்கூடாதுன்னு விதிமுறை உண்டு. பத்துப்பதினைஞ்சு நிமிட் ஆனதும், போலாம் போலாமுன்னு  ஜாடை காமிச்சுக்கிட்டே இருக்கார் நம்மவர்.  பொறுத்துப்பொறுத்துப்பார்த்து, முடியலைன்னு பாதியில் கிளம்பி வந்துட்டோம். குழந்தையைப் பார்க்கலையேன்னு இருந்துச்சு. 

பீச்சுக்குப்போய் நியூஸி க்றிஸ்மஸ் மரம் என்ற பொஹுட்டுக்காவா மரத்தைப் பார்த்துட்டுக் கொஞ்ச நேரம்  ஒரு பெஞ்சில் உக்கார்ந்துட்டு வீடு வந்தோம். இந்த மரத்தின் மீது எனக்கொரு ஆசை பலவருஷங்களாக....  போனவாரம் ஒரு கார்டன் சென்ட்டரில் விற்பனைக்கு  வந்த சின்னச் செடியை வாங்கிவந்து கொஞ்சம் பெரிய தொட்டியில் நட்டுவச்சுருக்கோம்.  சின்னதா ஒரே ஒரு கொத்து பூ பூத்துச்சு. 
ரெண்டு நாளுக்கப்புறம் மத்யானமா,  இண்டியன் கடைக்குப் பலசரக்கு வாங்கப்போனப்போது, குழந்தையைப்பார்த்துட்டு வரலாமுன்னு போனால்.... எல்லாரும் அப்படிக்கப்படியே இருக்காங்க. புள்ளையைக் காணோம் !!! திக்னு ஆச்சு!





சர்ச் ஆஃபீஸ் வாலண்டியர்களைக் கேட்டால்.... என்னது...பிள்ளையைக் காணோமான்னு கூடச் சேர்ந்து திகைக்கிறாங்க. அடப்பாவமே......ன்னுட்டு. போலிஸ்லே கம்ப்ளெயின்ட் கொடுங்கோன்னுட்டு வந்தேன்.
வருஷம் முடியப்போகுதுல்லே ?  டிசம்பர் 30, மூலநக்ஷத்திரம். நம்ம ஆஞ்சுவுக்குப் பொறந்தநாள் ! கொஞ்சமா கேஸரி செஞ்சு பூஜை முடிச்சுட்டு, சம்பந்தி வீட்டுக்குக் கிளம்பினோம்.  அவுங்க வீட்டில் ஹனூக்கா பண்டிகை.  நம்ம நவராத்ரி போலத்தான் ஒன்பதுநாட்கள் கொண்டாடுவாங்க. குடும்பத்தினரின் வசதியை முன்னிட்டு,  அந்த ஒன்பது நாட்களில் வரும் வீக்கெண்டில்   எல்லோரும் வந்துருந்து கூடியிருந்து குளிர்ந்தேலோதான்.
அன்றைக்குத் திங்களாக இருந்தாலும்  விடுமுறைக் காலம் தானேன்னு  அழைப்பு.  நாம் கொஞ்சமா, துளி  மஸாலா சேர்த்து இண்டியனைஸ்ட் பாஸ்தா கொண்டு போனோம். சம்பந்தியம்மாவின் தகப்பனார், (குடும்பத்தில் பெரியவர், 97 வயசு)எல்லோருக்கும் ஆசி வழங்கினார். நம்ம இவன் கொள்ளுப்பேரன், பேத்திகளில் ஏற்றவும் இளையவன்! 



வருஷத்தின் கட்டக்கடைசி நாள், நடந்தவைகள் இந்த வருஷ முதல் பதிவில்  எழுதியிருக்கேன் !

விருப்பம் இருந்தால் வாசிக்க.... இங்கே க்ளிக்கலாம் !

https://thulasidhalam.blogspot.com/2025/01/blog-post.html

பயணத்தில் இருப்பதால்..... மற்றவைகளை அப்புறம் பார்க்கலாம்!


நன்றி ! வணக்கம் !

Monday, February 03, 2025

தண்ணீரே வேண்டாத மரம் !

நினைவுக்காக  மரம் நடுவதைப்போல்  நான் செடிகளை நடுவது வழக்கம். கார்டனியா என்னும் பூ..... மலர்ந்துருக்கு. பாரிஜாதம்னு கூடச் சொல்வாங்க. ரொம்பவே நல்ல  வசீகரமான மணம் ! பார்க்க, நம்மூர் அடுக்கு நந்தியாவெட்டை போல இருக்கும். ஆச்சு பதிமூணு வருஷம்.... 

நான் மாமியார் மெச்சிய மருமகள் !  

நெசமாவா ? 
பின்னே !  ஆரம்பத்தில் இருந்தே வெளியூர், வெளிநாடுன்னு இருந்துட்டேன். டிசம்பர், நமக்குக் கோடை காலம். தாமரை மலர ஆரம்பிச்சது.  அப்பப்ப ஒன்னு ரெண்டுன்னு  இன்னும் ஒரு மூணுமாசத்துக்கு...  கண்ணுக்கு விருந்துதான். ராஸ்பெர்ரி புதரில் கெம்புக்கல்  கம்மல்கள்..... பேரனின் ஃபேவரைட் !
க்றிஸ்மஸ் அலங்காரங்கள், கொஞ்சம் செஞ்சேன். இது நம்ம ஃபிஜி வாசத்தில் உண்டான வழக்கம்.  அப்போ வெறும் கலர்  லைட்ஸ் மட்டும்தான். இங்கே நியூஸி வந்தாட்டு, முதல் வருஷம் உண்மையான பைன் மரக்கிளையில் க்றிஸ்மஸ் மரம் வாங்கினோம்.  தோட்டத்தில் மண்ணில் நட்டு அலங்கரிக்க, ரொம்பவே கஷ்டமாப் போச்சு.  அவ்ளோ பெருங்கிளை ! பயங்கர கனம். ஆழமான குழி தோண்டவே படாதபாடு பட்டாச்சு.


நம்ம கஷ்டம் புரிஞ்ச சீனர்,  தங்கள் கைவேலையைக் காமிச்சாங்க. வீட்டுக்குள் வைக்கும் மரங்கள் வந்தாச்சு. ஒன்னு வாங்கினால்...... பல வருஷம் தாங்கும்!  நம்ம வீட்டில் இங்கே 2003 இலிருந்து கொலுவைக்க ஆரம்பிச்சபிறகு, முக்கியமான  நம் பண்டிகைகளுக்குச் சின்னதா ஒரு டிஸ்ப்ளே செஞ்சு வைக்க ஆரம்பிச்சு, அது க்றிஸ்மஸுக்கும் தொத்திக்கிச்சு ! என்ன ஒன்னு.... அந்தந்த விழா முடிஞ்சதும், அலங்கார சமாச்சாரங்களைக் கவனமாப் பிரிச்சுத் தனிப்பெட்டிகளில் எடுத்துவைக்கணும்.  அட்டைப் பெட்டிகளின் மேல் பெயர் எழுதிவைக்க மறக்கக்கூடாது ! வாசலில் மாட்டிவைக்க ஒரு  மலர்வளையம். (எல்லாம் சொந்த சாஹித்யமே !  பழசாகிப்போன குக்கர் காஸ்கெட் இருந்ததே ! ஹிஹி )பேரனுக்காக அவன்  கைக்கெட்டும் உயரத்தில் ரெண்டு தாத்தாக்கள்.  



 
பதினாறு பேர் வந்து குடிலின் முன் பாடிக்கிட்டு இருக்காங்க.  சாந்தாவின் வீட்டில் கடைசி நேர பரபரப்பு.  அவரோட கார், நம்ம இவனுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு.ரயில் எஞ்சினும்தான் !  தொட்டு விளையாடட்டுமுன்னு விட்டுட்டேன். 



கார்த்திகை தீபத்திருவிழா வந்தது.... இந்த வருஷம் என்னவோ.... கார்த்திகைமாசக் கட்டக் கடைசியில்!  முடிஞ்ச அளவில் சுமாராக் கொண்டாடினோம். மார்கழியும் பிறந்தது.... நம்ம ஜன்னு சம்ப்ரதாயமான மடிஸார் கட்டி ஆண்டாளானாள் ! முதல்நாள் மட்டும் வாசலிலே பூசணிப்பூ :-)

தோழியின் நடனப்பள்ளியின் ஆண்டுவிழா. நம்ம ஊரில் மட்டும் மூணு பரதநாட்டியப் பள்ளிக்கூடம் இருக்கு, தெரியுமோ ?  இந்தமுறை கொஞ்சம் சின்ன அளவில் ஒன்னரை மணி நேர நிகழ்ச்சிகள் மட்டும் என்பதால் போயிருந்தோம். கால் இருக்கும் நிலையில் ரொம்ப நேரம் காலைத் தொங்கப்போட்டு உக்கார முடியாது. என்னதான் சொல்லுங்க.... பரதநாட்டிய உடையில் நம்ம பிள்ளைகளைப் பார்த்தாலே...மனசு கிறங்கிப்போயிருது ! 
ஒருநாள் மாலுக்குப் பேரனோடும் மகளோடும் போயிருந்தோம்.  அதுவரை வீட்டிலும், ப்ளே சென்ட்டரிலும் படத்தில் பார்த்த சாண்ட்டாவை 'நேரில்' கண்டதும் பிரமிச்சுப்போயிட்டான் ! நான் சாண்ட்டாவிடம் கொஞ்சம் கதையடிச்சுட்டு வந்தேன்.

கண்ட்ரி சைடில் புதுவீடு கட்டிப்போன தோழியின் வீட்டில் நம்ம ஆர்யசமாஜின் மாதாந்திர ஹோமம். அங்கத்தினர் வீடுகளில் சுழற்சிமுறையில் மாதம் ஒருமுறை நடக்கும் வகை. நான் பொதுவா வீடுகளில் நடக்கும் ஹோமங்களில் பங்கெடுப்பதில்லை.  ஹால்களில் நடந்தால் போவேன். எல்லாம் இந்தக் கால் பிரச்சனையால்தான். கீழே உட்கார முடியாது.  தோழியும் அவர் கணவரும் நம்ம யோகா குழுவின் அங்கங்கள் என்பதால் ரெண்டுபக்கத்திலும் சொந்தமாகிட்டாங்களே !!!

இங்கே கோடை விடுமுறை, க்றிஸ்மஸ் சமயம்தான்  என்பதால் பொதுவா டிசம்பர் மூணாம் வாரம் தொடங்கி, ஜனவரி  முதல் வாரம் வரை  சகல இடங்களிலும் விடுமுறைதான்.  பள்ளிகள், கலாசாலைகள் எல்லாம் சுமார் ரெண்டு முதல் மூணு மாசம் வரைகூட.....  நம்ம யோகா வகுப்புக்கும் விடுமுறைக் காலம் உண்டு. லீவில்  ஊருக்குப்போய்வரும் வழக்கமும் இருக்கே !  நம்ம யோகா  வகுப்பின் கடைசி நாள், க்றிஸ்மஸ் பார்ட்டி !  நம்ம விழாக்களுக்கெல்லாம் அவைகளை அனுசரிச்சு ட்ரெஸ் கோட் கூட வச்சுக்குவோம்.  இப்ப க்றிஸ்மஸ் கலர்ஸ்..... சிகப்பு, பச்சை! விழா இனிதே நடந்தது..... இனி ஜனவரி கடைசியிலோ. ஃபிப்ரவரி முதல் வாரமோ.... ஒரு புதன்கிழமையில் வகுப்பு ஆரம்பிக்கும் ! 

நம்ம கேரளா க்ளப்பின் க்றிஸ்மஸ் பார்ட்டிக்கு இந்தமுறை மகள் குடும்பமும் வந்தாங்க. 

வழக்கமா க்றிஸ்மஸ் ஈவ் , நம்ம கதீட்ரலுக்குப் போய்வருவதெல்லாம் , நிலநடுக்கம் வந்து கதீட்ரலே அழிஞ்சு போனதும் நின்னே போச்சு. வீட்டாண்டை இருக்கும் சர்சுக்கு க்றிஸ்மஸ் திருநாளுக்கு  முதல்நாள் பகலில்  போய் வருவோம்.  ஈ காக்கா இருக்காது. ஏகாந்த தரிசனம்தான் எப்போதும்.


இந்தமுறை பகலில் போகமுடியலை.  ராத்ரி 11.30 சர்வீஸ்தான் கூட்டமா இருக்குமுன்னு நினைச்சுப்போனா..... ஒன்பதே காலுக்கே நல்ல கூட்டம் ! ராத்ரி 12க்கு ஆகும் ஜனனம், சீக்கிரமாகவே ஆகி இருக்கு !!!!! அதுவும் குடிலுக்குள் இல்லாமல்.... ஆல்டரின் முன்பக்கம் !!! சம்ப்ரதாயங்களில் மாற்றம் வந்துக்கிட்டு இருக்கு......

அடுத்த பேட்டையில் க்றிஸ்மஸ் லைட்ஸ் அலங்காரம் இப்போ ஒரு மூணு வருஷமா நடக்குது. அங்கே போய் எட்டிப்பார்த்துட்டு  ராத்ரி பத்துக்கு வீடு திரும்பியாச்சு.    

மெர்ரி க்றிஸ்மஸ் !!!!