Saturday, February 08, 2025

குழந்தையைக் காணோம்.....

இங்கே க்றிஸ்மஸ் தினத்தில் எந்த ஆரவாரமும் இல்லாமல் ஊரே ஜிலோன்னு கிடக்கும். டிவியில்   கமர்ஸியல் கூட  இருக்காது. எதாவது பக்திப்படமோ, ம்யூஸிகலோ தான் ! ஊர் முழுக்க கடைகண்ணிகள் மூடி,  எங்கியோ ஒரு டெய்ரி ஷாப் திறந்திருக்கும்.  கார் நடமாட்டமே கூட அவ்வளவா இருக்காது. 
சாயங்காலம் ஒரு அஞ்சுமணி போலக் கிளம்பி பீச்சுக்குப் போறோம்.      
மெட்ராஸ் தெரு தாண்டும்போது,  'கார்ட்போர்ட்' கதீட்ரலுக்குப் போயிட்டுப்போகலாமான்னார் நம்மவர். எனக்கொரு விரோதமும் இல்லை. எங்க கதீட்ரல் இடிஞ்சு விழுந்தபிறகு, திரும்பக் கட்டிமுடிக்கும்வரை தாற்காலிகமா ஒரு சர்ச் கட்டிவிட்டது, ஏஞ்சலிக்கன் சர்ச் நிர்வாகம். ஒரு ஜப்பானியக் கட்டடக்கலைஞர் கார்ட் போர்ட் வச்சுக் கட்டினார். அஞ்சு மில்லியன் செலவாகும்னு சொல்லி ஏழு மில்லியன் டாலருக்கு  இழுத்துருச்சு.
போற போக்கைப் பார்த்தால் இதுதான் நிரந்தரம்னு தோணும்.  பதினாலு வருஷம் ஆகப்போகுது இப்போ...... பழசைத் திரும்பிக் கட்டறோமுன்னு    வேலையை  ஆரம்பிக்கவே  வருஷங்களா இழுத்தடிச்சு, ரெண்டு வருஷத்துக்கு முன் தொடங்குன வேலையை, இப்போ  எதிர்பார்த்ததைவிட  பட்ஜெட் கூடுதலாகுதுன்னு  நிறுத்திட்டாங்க. ப்ச்.....அட்டைகோவிலுக்கு அஞ்சுமில்லியனான்னு அப்போ பதிவெல்லாம் எழுதியிருந்தேன்.

 இந்தச் சர்ச்சாண்டைதான் ஒரு கட்டடம் இடிஞ்சு விழுந்து, 115 பேர் இறந்துட்டாங்க.  இவர்களில் பெரும்பாலோர், ஜப்பான் நாட்டிலிருந்து இங்கே இங்லிஷ் படிக்கவந்த மாணவர்கள்.  அவுங்க வந்திறங்கிய மறுநாள்தான் நிலநடுக்கம். ப்ச்.... 
இப்ப அந்த கட்டடம் இருந்த இடத்தில் சின்னதா ஒரு தோட்டமும், புதுசா  க்ரே கலரில் அழுதுவடியும் நினைவுச்சின்னமும். நமக்குப் பார்க்கிங் அங்கே கிடைச்சதேன்னு எட்டிப்பார்த்தேன்.

 எர்த்க்வேக் மெமோரியல்னு ஆத்தங்கரையில் சுவர் எழுப்பி அங்கே, இறந்துபோன 185 நபர்களின் பெயர்களையும் சலவைக்கல்லில் பொறிச்சு வச்சுருக்கு சிட்டிக்கவுன்ஸில்.  என்ன ஒன்னு.....  கண்ணுலே விளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டுப் பூதக் கண்ணாடி வச்சுப் பார்த்தாலும் அந்தப்பெயர்களை நாம் வாசிக்கமுடியாது.....  எந்த மஹானுபாவரின் ஐடியாவோ...... மொத்தத்தில் கலர்சென்ஸ் இல்லாத நிர்வாகம். 
சாலையைக் கடந்து எதிர்வாடைக்குப்போனால்.....  கார்ட்போர்ட் சர்ச்சில் சர்வீஸ் நடந்துக்கிட்டு இருக்கு.  எனக்கு குடில் பார்க்கணும் என்பதால் முன்வரிசையாண்டை போய் உக்கார்ந்தேன்.  சர்வீஸ் நடக்கும் சமயங்களில் படம் எடுக்கக்கூடாதுன்னு விதிமுறை உண்டு. பத்துப்பதினைஞ்சு நிமிட் ஆனதும், போலாம் போலாமுன்னு  ஜாடை காமிச்சுக்கிட்டே இருக்கார் நம்மவர்.  பொறுத்துப்பொறுத்துப்பார்த்து, முடியலைன்னு பாதியில் கிளம்பி வந்துட்டோம். குழந்தையைப் பார்க்கலையேன்னு இருந்துச்சு. 

பீச்சுக்குப்போய் நியூஸி க்றிஸ்மஸ் மரம் என்ற பொஹுட்டுக்காவா மரத்தைப் பார்த்துட்டுக் கொஞ்ச நேரம்  ஒரு பெஞ்சில் உக்கார்ந்துட்டு வீடு வந்தோம். இந்த மரத்தின் மீது எனக்கொரு ஆசை பலவருஷங்களாக....  போனவாரம் ஒரு கார்டன் சென்ட்டரில் விற்பனைக்கு  வந்த சின்னச் செடியை வாங்கிவந்து கொஞ்சம் பெரிய தொட்டியில் நட்டுவச்சுருக்கோம்.  சின்னதா ஒரே ஒரு கொத்து பூ பூத்துச்சு. 
ரெண்டு நாளுக்கப்புறம் மத்யானமா,  இண்டியன் கடைக்குப் பலசரக்கு வாங்கப்போனப்போது, குழந்தையைப்பார்த்துட்டு வரலாமுன்னு போனால்.... எல்லாரும் அப்படிக்கப்படியே இருக்காங்க. புள்ளையைக் காணோம் !!! திக்னு ஆச்சு!





சர்ச் ஆஃபீஸ் வாலண்டியர்களைக் கேட்டால்.... என்னது...பிள்ளையைக் காணோமான்னு கூடச் சேர்ந்து திகைக்கிறாங்க. அடப்பாவமே......ன்னுட்டு. போலிஸ்லே கம்ப்ளெயின்ட் கொடுங்கோன்னுட்டு வந்தேன்.
வருஷம் முடியப்போகுதுல்லே ?  டிசம்பர் 30, மூலநக்ஷத்திரம். நம்ம ஆஞ்சுவுக்குப் பொறந்தநாள் ! கொஞ்சமா கேஸரி செஞ்சு பூஜை முடிச்சுட்டு, சம்பந்தி வீட்டுக்குக் கிளம்பினோம்.  அவுங்க வீட்டில் ஹனூக்கா பண்டிகை.  நம்ம நவராத்ரி போலத்தான் ஒன்பதுநாட்கள் கொண்டாடுவாங்க. குடும்பத்தினரின் வசதியை முன்னிட்டு,  அந்த ஒன்பது நாட்களில் வரும் வீக்கெண்டில்   எல்லோரும் வந்துருந்து கூடியிருந்து குளிர்ந்தேலோதான்.
அன்றைக்குத் திங்களாக இருந்தாலும்  விடுமுறைக் காலம் தானேன்னு  அழைப்பு.  நாம் கொஞ்சமா, துளி  மஸாலா சேர்த்து இண்டியனைஸ்ட் பாஸ்தா கொண்டு போனோம். சம்பந்தியம்மாவின் தகப்பனார், (குடும்பத்தில் பெரியவர், 97 வயசு)எல்லோருக்கும் ஆசி வழங்கினார். நம்ம இவன் கொள்ளுப்பேரன், பேத்திகளில் ஏற்றவும் இளையவன்! 



வருஷத்தின் கட்டக்கடைசி நாள், நடந்தவைகள் இந்த வருஷ முதல் பதிவில்  எழுதியிருக்கேன் !

விருப்பம் இருந்தால் வாசிக்க.... இங்கே க்ளிக்கலாம் !

https://thulasidhalam.blogspot.com/2025/01/blog-post.html

பயணத்தில் இருப்பதால்..... மற்றவைகளை அப்புறம் பார்க்கலாம்!


நன்றி ! வணக்கம் !

0 comments: