Wednesday, July 06, 2016

திரு செம்பொன் செய் திருக்கோவில், திருநாங்கூர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 56)

இலங்கையில் ராம ராவண யுத்தம் முடிஞ்சது. இலங்கை மன்னன் போய்ச் சேர்ந்தான். அவனைக்  கொன்றதால் நம்ம ராமனுக்கு ப்ரம்மஹத்தி  தோஷம் வந்து சேர்ந்தது. என்ன செய்யலாம் என்ற யோசனையோடு, சீதையுடன்  ராமேஸ்வரத்துக்குத் திரும்பி வர்றாங்க ராமனும் லக்ஷ்மணனும்.

அங்கே  சிவனைப் பூஜிக்கவேணும் என்று சிவலிங்கம் ஒன்னு  தேவைன்னு  ராமன்  சொன்னதும்தான்  நம்ம ஆஞ்சி, 'இதோ நான் கொணாந்துடறேன்'னு கிளம்பிப் போனார்.  பூஜைக்கு நேரமாகுதேன்னு  கவலைப்பட்ட கணவருக்காகத்  தானே அங்கு இருந்த கடற்கரை மண்ணால் ஒரு லிங்கம் பிடிச்சு வைக்கறாங்க சீதை.




பூஜை பாதி நடந்துக்கிட்டு இருக்கும் சமயம் ஆஞ்சி,  கையில் சிவலிங்கத்தோடு      திரும்பி வந்தார். ஒரிஜினல் லிங்கமாம்.  காசியில் இருந்து கிளப்பிக்கிட்டு வந்தது! அங்கே இருந்த லக்ஷக்கணக்கான சிவலிங்கங்களில்  எப்படி இதைக் கண்டுபிடிச்சாராம்?  அதுக்கும் ஒரு 'கதை' இருக்கு:-)

'நான் கொண்டு வரேன்'னு     ஹனுமன் புறப்பட்டு காசிக்குப்போறார்.  அங்கே  எங்கே பார்த்தாலும்  சிவலிங்கங்களே!  லக்ஷக்கணக்கில் கொட்டிக்கிடக்கு. எது உண்மை? எது ரிப்ளிகான்னு தெரியாமல் தவிச்சு நின்ன நொடியில் கருடர் ஒரு லிங்கத்தைச் சுற்றிப் பறந்து  சேவிக்கிறார். ஓஹோ.... இதுதான்  அசல் னு தெரிஞ்சுக்கிட்ட ஆஞ்சி, அதைக் கிளப்பிக்கிட்டு தெற்கே பறக்கறார்.

காசிக் காவலர்  காலபைரவருக்கு கோபமான கோபம். அதெப்படி என்னாண்டை  பெர்மிஷன் வாங்காமத் தூக்கிண்டு போகலாமுன்னு  அனுமன் மேல் சாபம்  விடப் பார்த்தார்.  மற்ற தேவர்கள் எல்லாம், 'வேணாம். இது ஸ்ரீ ராமனுக்காகத்தான் கொண்டு போறார்'னு விஷயத்தை விளக்குனதும் கோபம் தணிஞ்சு 'கொண்டுபொய்க்கோ' என்றவர்,  நாவில் நிற்கும் சாபம் வீணாப்போயிருதேன்னு  உண்மை லிங்கத்தைக் காட்டிக்கொடுத்த  கருடருக்கு      'இனி உனக்கு காசியில் இடம் இல்லை'ன்னுட்டார்னு  ஒரு புராணக் கதை.

காலபைரவர், நம்ம கூர்க்கா மாதிரி. கத்தியை வெளியே எடுத்தால் ரத்தம் பார்க்காம திரும்ப உள்ளே வைக்கமுடியாதாமே!

கருடர்  லிங்கத்தைச் சுத்தும்போது பல்லியும் உச்சுக்கொட்டிச்சாம். அதனால் அதுக்கும் ஊருக்குள் வரத் தடா! (இது நம்ம துளசிதளத்துலே காசிப் பயணத்தில் இருக்கு)

சட்னு கோபம் வந்துருச்சு ஆஞ்சிக்கு.  'அதெப்படி நான் இம்மாந்தூரம் போய் கஷ்டப்பட்டுக்  கொண்டு வந்துருக்கேன். ஒரு அஞ்சு நிமிட் லேட் ஆனால் என்ன,  பொறுமை காக்கப்டாதா'ன்னு பொரிஞ்சு தள்ளறார்.

'சரிப்பா ஆஞ்சி.  சீதையின் மணல் லிங்கத்தை எடுத்துட்டு, அங்கே இதை வச்சுரு'ன்னு ராமர் சொல்ல, அலட்சியமா அதை ஒரு கையால் தூக்கி எடுக்கப் போனால்... அது அசைஞ்சு கொடுக்கலை. அப்புறம் ரெண்டு கைகளால் இழுத்தாலும்.... ஊஹூம்... :-(  அதான் அனுமார் வால் இருக்கே...  அதை வச்சு எடுத்துடலாமுன்னு லிங்கத்தைச் சுத்திக் கயிறு கட்டுனமாதிரி வாலைச் சுத்தி வச்சு கிளப்பப்  பார்த்தாலும், வாலுக்குக் காயம் பட்டு ரத்தம் கொட்டுச்சே தவிர  லிங்கம் இம்மியும் அசையலை.

அப்படிக் கொட்டுன ரத்தம் காரணம் அங்கே ஒரு இடத்தில் மண்ணெல்லாம் ரத்தச் சிகப்புன்னு  எங்க தாடிமாமா சொல்லக் கேட்டுருக்கேன்.  அகாலத்தில் இறந்துபோன தன் தம்பியின் (என் சின்ன மாமா) அஸ்தி கரைக்க ராமேஸ்வரம் போய் வந்தவர் அவர்)


சீதையின் பவர் என்னன்னு புரிஞ்சுக்கிட்ட ஆஞ்சி, தலை தாழ்ந்து அந்த மணல் லிங்கத்தை வணங்கினார்னு  போகுது கதை.  அது இருக்கட்டும். இப்போ நம்ம கதையைப் பார்க்கலாம்.

அயோத்திக்குத் திரும்பிப்போகும் வழியில் த்ருட நேத்ர  மஹரிஷியின் ஆஸ்ரமத்தில் தங்கறாங்க நம்ம ராமர் அண்ட் கோ.  அப்போ முனிவரிடம், 'இந்த ப்ரம்மஹத்தி தோஷத்துக்குப் பரிகாரம் உண்டா'ன்னு கேக்க, அவர் சொல்றார் ' தங்கத்தால் பசு ஒன்னு செஞ்சு, அதன்மேலே ஏறி நாலு நாள் உக்கார். அதுக்கப்புறம் அந்தப் பசுவை ஒரு ப்ராமணனுக்குத் தானம் செஞ்சுரு'ன்னு.

அதே போல ஆச்சு.  அவ்ளோ தங்கம் ஏது, எப்படின்னெல்லாம்  என்னைப்போல் குண்டக்க மண்டக்கன்னு யோசிக்கப்டாது கேட்டோ :-)

தானம் வாங்கிய ப்ராமணனுக்கு,  தனக்கெதுக்கு இவ்ளோ தங்கம்னு தோணிப்போக, அதை அப்படியே வித்துட்டு, அதுலே  கிடைச்ச காசை வச்சு  ஒரு கோவில் கட்டிட்டார்.  அதுவும் ராமனே  மூலவரா இருக்கட்டுமேன்னு...

அதானே....  தோஷம் தீரக் கொடுத்த பொருளைக்  கைநீட்டி  வாங்குன தோஷம் தனக்கு வந்துட்டா  என்ன  செய்யறதுன்னு பயம் வந்துருக்குமோ.....

எப்படியோ கோவில் வந்துருச்சு.  நாமும் அதன் வாசலில் வந்து இறங்கியாச்சு.

 திரு செம்பொன் செய்  கோவில். திருநாங்கூர் திவ்யதேசக்  கோவிலில் ஒன்னு! செம்பொன் அரங்கர் என்று இவரைக் கொண்டாடலாம்.


வாசல் சுற்றுச்சுவரில்  நுழையும் வழியில் ரெண்டு பக்கமும்  பெரிய, சிறிய திருவடிகள் அழகா உக்கார்ந்து வரவேற்பது  பிடிச்சிருக்கு!

கண்ணுக்கெதிரே பலிபீடம், பெரிய திருவடி சந்நிதி மட்டும்தான். கொடி மரம் கிடையாது.  கோவில் வாசலுக்குள் நேராப் போயிடலாம்.
பார்க்கும்போதே ரொம்பச் சின்னக்கோவிலா இருக்கே....   பசு வித்த  காசுக்கு இவ்ளோதான் போலன்னு நினைச்சேன்.  ஆனால்......

உள்ளே போகப்போகக் கொஞ்சம் விஸ்தாரமாத்தான் இருக்கு.

கருவறையில்  மூலவர் பேரருளாளர் , தன் தேவியருடன்   நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறார்.

பிறப்பொடு மூப்பொன்றில்லவன் றன்னைப்
பேதியா வின்ப வெள்ளத்தை
இறப்பெதிர் காலக் கழிவு மானானை
ஏழிசையில் சுவை தன்னை
சிறப்புடை மறையோர் நாங்கை, நன்னடுவுள்
செம்பொன் செய், கோயிலுள்ளே
மறைப்பெரும் பொருளை வானவர் கோனை
கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே

திருமங்கை ஆழ்வார் பாசுரம். இங்கேயும் பத்துப் பாடல்கள். (1268- 1277)

 கருவறை முன் மண்டபத்தில்  வழக்கம் போல் கதை எழுதி இருக்கு. நாலைஞ்சு வரி வாசிச்சப்ப....  கொஞ்சம் சுவை உள்ள கதைன்னு புரிஞ்சது. ஆனால் எதையும்  பார்த்துப் படிக்கவிடாமல் கண்டான்முண்டான் சாமான்கள்.  ஏந்தான் பெருமாள் கோவில்களில் இப்படிப் போட்டு வைக்கிறாங்களோன்னு.....   கோபமும் வருத்தமும் வரத்தான் செஞ்சது.


தௌம்யரிடம் சிஷ்யனாக இருந்த உபமன்யூ, குருவுக்காக தான் பிக்ஷை எடுத்து வந்த அன்னத்தையெல்லாம்  கொடுத்துட்டு, தன் பசிக்கு எருக்கம்பால் குடித்து வந்தாராம்.

(அச்சச்சோ.... இவருக்காகத் திருப்பாற்கடலையே திரு வண்புருஷோத்தமன் கோவிலுக்குக் கொண்டு வந்த   புருஷோத்தமவல்லித் தாயாருக்கு இது தெரியுமோ!  ஏம்ப்பா....  உபமன்யூ,   கூப்புடு தூரத்துலே  ( வெறும் 500 மீட்டர்தான்) குளம் நிறையப் பால். அதுவும் உனக்காகவே பெருமாள் அனுப்பி வச்சது  இருக்கே...   இப்படி எருக்கம்பாலைக் குடிக்கலாமோ? ப்ச்.....  )


இதனால் இவருக்குக் கண்பார்வை கொஞ்சம் கொஞ்சமா போயிருக்கு. அப்புறம்...? விஷயத்தை தெரிஞ்சுக்கிட்ட குரு,  பேரருளாளனை    வணங்கி வேண்டிக்கச் சொல்றார். அதேபோல்  மனம் உருகி மஹாவிஷ்ணுவை வேண்டியதும்,  சங்கு சக்ரதாரியாகத் தோன்றி, உபமன்யூவுக்குக் கண்பார்வை கொடுத்து தன்னையும் தரிசனம் செஞ்சுக்க வச்சார். (இப்படித்தான் எழுதி இருக்குமுன்னு  நினைக்கிறேன். சரியா வாசிக்க முடியலை)
இன்னொரு இடத்தில், முகுந்தன் என்ற  ஏழை அந்தணர் ஒருவர் இங்கே மூன்று நாளில் முப்பத்தியிரண்டாயிரம் முறை எட்டெழுத்து மந்திரமான 'ஓம் நமோ நாராயணாய ' வை ஜபம் செய்து,  செல்வந்தர் ஆனார் னு  இருந்தது.  அப்ப சரி. இப்போ பலிக்குமான்னு தெரியலை. ஆகக்கூடி....

 வேண்டுவோர்க்கு வேண்டிய வரம் கொடுக்கும் பேரருள்  செய்பவர்  இவர் என்று புரிஞ்சது.

முகுந்தனுக்குச் செல்வம் கிடைச்சதைப் பற்றி ஒரு இடத்தில் வாசிச்சேன். சுவாரசியம்தான். ஒரே அலிபாபா சமாச்சாரமா இருக்கு:-) போகட்டும் உபந்நியாசத்தில் இப்படிச் சுவைபடச் சொல்றதெல்லாம் சகஜமில்லையோ :-)

காஞ்சிபுரத்தில் காச்யபர்  என்றொரு ஏழை அந்தணர் இருந்தார். முதுமையில் குடும்பத்துக்குத் தேவையான பொருள் இல்லாமல்  வீட்டுக் கஷ்டம் அதிகமாயிருச்சு.  மூத்த மகன் முகுந்தன், அப்பா படும் கஷ்டம் பொறுக்கமாட்டாமல்,  காவிரிக்கரைப் பிரதேசங்களுக்குப்போய் எதாவது சம்பாரிச்சுக்கிட்டு வரேன்னு கிளம்பிப்போறான்.

பயணத்துலே அப்படியே இந்த செம்பொன் செய் கோவிலுக்கு வந்து சேர்ந்தவன், மூலவரை மனம் உருக வேண்டிக்கிறான்.  அவனுக்காக மனம் இரங்கிய பெருமாள்  திரு அஷ்டாக்ஷரத்தை  உபதேசிச்சு, இதை முப்பத்திரெண்டாயிரம் முறை  சொல்லுன்னுட்டு மறைஞ்சுட்டார்.

நம்பிக்கையோடு,  மூணுநாள் இடைவிடாம  அந்த எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்ல ஆரம்பிச்சு  பெருமாள் சொன்னபடி,  முப்பத்திரெண்டாயிரத்தை முடிச்சுட்டுக் கோவிலில் இருந்து கிளம்பி  தென்திசை நோக்கிப் போறான். அஸ்தமன சமயம் ஆகிருச்சு.  காவிரியாத்தங்கரையில்  நித்யகர்மாவை முடிச்சுக்கிட்டு  திரும்ப நடக்கத் தொடங்கினான்.

நடந்து நடந்து ஒரு காட்டுப்பகுதிக்கு வந்துட்டான்.  நல்லாவே இருட்டிருச்சு.  காட்டு மிருகங்களுக்குப் பயந்து, அங்கிருந்த பெரிய ஆலமரத்துலே ஏறி, ரெண்டாய்ப்பிரியும் கிளைகளுக்கு நடுவில் படுத்துத் தூங்கிடறான். இந்தக் காட்டுலே ஏராளமான குரங்குகள் இருக்கு.  இப்போ இந்த இடத்தில் ஒரு ஊர் வந்துருச்சு. குரங்குப்புத்தூர்னு பெயர்!

திடீர்னு எதோ பேச்சு சத்தம் கேட்டுக் கண் முழிச்சுப் பார்த்தால் ஜெகஜோதியா வெளிச்சம். தலையை லேசாத்திருப்பி மரத்தடியைப் பார்த்தால்....  தீவட்டி பிடிச்ச கைகளுடன்  ஒரு கூட்டம்!  முதுகுலே  ஏகப்பட்ட மூட்டைகள்!   ஓசை எழுப்பாமல் என்னதான் நடக்குதுன்னு கவனிக்கிறான்.

'நாராயணபூதமே!   விலகிக்கொள் ' இப்படிப் பத்துமுறை கத்தறாங்க!   மரத்தடியில் இருந்த ஒரு பெரிய பாறை, விலகி வழி விட்டது!   உள்ளே போய் கொண்டு வந்த மூட்டைகளை வச்சுட்டு வெளியே வந்த ஆட்கள்,  'நாராயணபூதமே...  மூடிக்கொள்' னு பத்து முறை கத்துனதும் பாறை மூடிக்கிச்சு.  எல்லோரும் கிளம்பிப் போயிட்டாங்க.

நடுக்கத்தோடு, எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு இருந்த முகுந்தனுக்கு  மனசுலே பயம் வந்துருது. மெள்ள மரத்தில் இருந்து இறங்கி வந்து பாறைக்கு முன்னால் நிக்கறான்.  மனசுலே தைரியத்தை வரவழைச்சுட்டு, 'நாராயணபூதமே!   விலகிக்கொள் ' னு பத்துமுறை கத்தறான்.  பாறை...........   விலகுது!

  உள்ளே எட்டிப்பார்த்தால்..... பொன்னும் மணியுமா மூட்டை மூட்டையாக் கொட்டிக்கிடக்கு!

திகைச்சுப்போய் நின்னவனுக்கு ஒரு அசரீரி  கேட்டது.

" முகுந்தா....   உனக்கு வேண்டிய அளவு நவமணியணிகளை எடுத்துக்கொள்"

மறுபேச்சு சொன்னானோ?  ஊஹூம்......

வேணுங்கறதை வாரி எடுத்தான். வெளியே வந்ததும்....  'நாராயணபூதமே...  மூடிக்கொள்' னு பத்து முறை கத்துனதும் பாறை மூடிக்கிச்சு.

இதுக்குள்ளே பொழுதும் விடிஞ்சுருச்சு! எங்கே பார்த்தாலும் குரங்குகள் தவிர வேறொன்னுமில்லை.

எப்படியோ கஷ்டப்பட்டுச் சுமைகளைத் தூக்கி அண்டையிலிருக்கும் ஊருக்கு வந்தவன்,  பொதி மாடுகள் ரெண்டை 'விலைக்கு வாங்கி' செல்வங்களைக் காஞ்சிக்குக் கொண்டு வந்து சேர்த்தானாம்.

 அப்புறம்?

பெருமாளை ஆராதித்து, தானதருமங்கள் செய்து, மனைவி மக்களுடன் இனிதாக வாழ்ந்து, பின்னர் பரமபதம்போய்ச் சேர்ந்தான்!

written by Sri U.Ve.Vidwan Egai Vedanta Desika Thatacharya Swami. நான் கொஞ்சமா மசாலா தூவினேன்:-)



கோவிலை வலம்  வர்றோம்.  தனிச்சந்நிதியில் தாயார்.

தாயார் பெயர் அல்லி மாமலராள்!   ஹைய்யோ!!!!    என்ன அருமையா இருக்கு!!! பெயரில் இருக்கும் அழகு சந்நிதிக்குள்ளில் இல்லை :-(
தாயாரைப் பார்த்தால் பாவமாகத்தான் இருந்துச்சு எனக்கு ..ப்ச்.


கோவிலில் மராமத்து வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு.




காலை 7 முதல்  10,  மாலை 6 முதல் 8 மணி வரைதான் கோவில்  திறந்திருக்கும். நம்ம குமார்   செல்லில் தகவல் அனுப்பியபடியால் பட்டர்ஸ்வாமிகள் வந்து  தீபாராதனை காமிச்சதும்  நமக்குத் தீர்த்தமும் சடாரியும் கிடைச்சது.


 யாகசாலையும் துளசிமாடமும் !


தொடரும்....   :-)



Monday, July 04, 2016

திரு வண்புருஷோத்தமன் திருக்கோவில் , திருநாங்கூர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 55)

அடுத்த ரெண்டாவது நிமிட்டில் 700 மீட்டர் கடந்ததும் புருஷர்களில் உத்தமனை ஸேவிக்கலாம்.  வெளிப்ரகாரத்திலேயே  தரையெல்லாம் ப்ளிச்!  டைல்ஸ் போட்டு நல்லா வச்சுருக்காங்க. கொடிமரம் கிடையாது. பலிபீடமும், பெரிய திருவடிக்கான சந்நிதியும் உண்டு.

சின்னதா அழகா ஒரு  குட்டித்தேர்!  சப்பரம் என்றும் சொல்லலாம்.

திருமங்கை ஆழ்வாரின் பத்துப் பாசுரங்களும்  பளிங்குக் கல்வெட்டில்!
முரளிதர  ஸ்வாமிகளின் கைங்கர்யம்.

கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன் கதிர்முடி யவைபத்தும்

அம்பி னாலறுத்து, அரசவன் தம்பிக்கு அளித்தவ னுறைகோயில்

செம்ப லாநிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள்சூழ்

வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.


மூலவர் புருஷோத்தமன் ராமனல்லால் வேறு யாருமில்லைன்னு  பாடி  மங்களாசாஸனம் செஞ்சுருக்கார், நம்ம திருமங்கை ஆழ்வார்!

வழக்கம்போல் பத்து பாசுரங்கள்! (  1258-  1267 -10 பாசுரங்கள்.)
சென்னை ஸில்க்கின் சம்பாவனை லிஸ்ட் தொட்டடுத்து. எதோ இந்தவரையாவது  தர்மங்கள் செய்ய மனம் இருப்பது சந்தோஷமே!
கோவில் நிலத்துக் குத்தகைகளில் இருந்து வந்த நெல்லைக் காயப்போட்டுருந்தாங்க, அங்கங்கே!  அந்தக் காலங்களில்  சும்மாக்  கோவிலைக் கட்டிவிட்டுடாமல், இடைவிடாத பராமரிப்பு, தினசரி பூஜை மற்ற காரியங்களுக்காக ஆகும் செலவை சமாளிக்க நிலபுலன்களையும் கோவிலுக்கு எழுதி வைக்கறதுதான் அரசர்கள் கடமை.

நிலம் என்றால் பெருமாளேவா வந்து பயிர் வைக்க முடியும்? குத்தகைக்கு எடுத்து பயிர்பச்சை வச்சு, அறுவடை ஆனதும் பெருமாளுக்கு உரிய பங்கைக்கொண்டு வந்து அளந்து கொடுப்பாங்க.  இதிலெல்லாம் நேர்மை இருந்தது அப்போ!  கோவில்களும், பட்டர் ஸ்வாமிகளும் செழிப்பா இருந்தாங்க. வயித்துப் பாட்டுக்குக்  குறை ஏதும் இல்லாததால்... பகவத் சேவைகளில் முழு மனசுடன் ஈடுபாட்டோடு நடந்தாங்க.  தவிர சனமும் சாமிக்குன்னு வாரிக்கொடுத்துச்சு!   இப்போ.....  கலி முத்திப்போச்சே  :-(


மூலவர் புருஷோத்தமப் பெருமாள் நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறார். பட்டர் ஸ்வாமிகள் , தீபாராதனையுடன் நல்லா தரிசனம் செஞ்சு வச்சு தீர்த்தம், சடாரி ஆச்சு.



கோவிலின் முன்மண்டபத்துலேயே   நம்ம ஆஞ்சியின் சந்நிதி.  அவர் பார்வை போகுமிடத்தில் ஸ்ரீராமர்,  சக்ரவர்த்தி திருமகன் சந்நிதி. உள்ளே சீதையும் லக்ஷ்மணனும், ஹனுமனும் இருக்காங்க. மண்டபத்தின் சுவற்றிலும் சிறிய திருவடிக்குக் குட்டியா ஒரு சந்நிதி.   அட!  மொத்தம் மூணு நம்ம ஆஞ்சிக்கு!!!  பேஷ் பேஷ்!

நம்மாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள், சேனை முதலியார் சந்நிதிகளுடன் சின்னதா  ஆண்டாளும் ஒரு சின்னூண்டு சந்நிதியில். மண்டபம் தாண்டி கருவறைக்குப் போகுமிடத்தில் என்பதால் க்ளிக்கலை.

கோவிலை வலம் வர்றோம்.    தாயார் புருஷோத்தம நாயகி, தனிச்சந்நிதியில்  அமர்ந்த திருக்கோலத்தில்.



பாலகன் உபமன்யூவுக்குக் காட்சி கொடுத்த பெருமாள்.

கணவரின் தங்கை ஒரு கிண்ணம் (ஞானப்)பால் சீர்காழியில்         கொடுத்தால், அண்ணியாகப்பட்டவர் இங்கே  ஒரு பாற்கடலையே கொடுத்துட்டாராம்!  அது என்ன கதை?  ஆங்....

வியாக்ரபாதர் என்றொரு முனிவர் இருந்தார்.  இவர்தான் தில்லையம்பலத்தானை வேண்டி, தனக்குப்  புலிக்கை வேணுமுன்னு  கேட்டவர். எதுக்காம்?  தினம் சாமிக்குப் புத்தம் புதுசாப் பூப்பறிச்சு வழிபாடு  செய்வாராம்.  காலையில் இவர் நந்தவனத்துக்குப் போகும்போது ஏற்கெனவே மலர்ந்து நிற்கும் பூக்களில் இருந்து தேன் சேகரிக்க தேனீக்களும் வண்டுகளும் வந்து  பூவை  முகர்ந்து, எச்சில் பண்ணி தேனை எடுத்துக்கிட்டுப் போயிருதாம்.  எச்சிலான பூக்களை எப்படி சாமிக்குப் போடறதுன்னு அவருக்குக் கவலை.

பூ மலர்ந்தால்தானே உடனே  தேனீக்கள் வண்டுகள் எல்லாம் வந்துருது. ஜஸ்ட் மலர்வதற்கு  முன்  வந்து பறிச்சுக்கலாமுன்னா இருட்டில் கண் வேற சரியாத் தெரியலையே....  உச்சாணிக்கிளையில் இருக்கும் பூக்களைப் பறிக்கவும் கஷ்டமாப் போயிருதேன்னு யோசிச்சவர்,  புலிக் கையும் கண்ணும் வேணுமுன்னு கேட்டார்.  இருட்டிலும் கண் நல்லா பளிச்ன்னு தெரிவதோடு, புலி நகங்களால் மரத்தில் ஏறிப்போய்ப் பூப்பறிக்கவும் முடியுமாம்!

அப்படியே ஆச்சு. அவரைப் புலிக்கால் முனிவர்னு சொல்வாங்க. ஒருநாள்  நந்தவனத்தில் பூப்பறிக்க வந்தப்ப, மகன் உபமன்யூவையும் கூடவே கூட்டி வந்துருக்கார்.  ஒரு இடத்தில் உக்காரவச்சுட்டு இவர் உள்ளே போய் தன் வேலையைப் பார்க்கிறார்.  இருட்டில் தனியா உக்கார்ந்துருந்த குழந்தைக்கு  பயம் வருது. கூடவே பசியும்...........

" என்னங்க குழந்தை அழுதே....    ஒன்னும் செய்யாம இப்படித் திருப்பாற்கடலில் தாய்ச்சுண்டு இருந்தால் என்ன அர்த்தம்?"

"என்ன செய்யணும், சொல்லு லக்ஸ். தாயாரே நீதானே...  ஒரு சொம்பு பாலைக்  கொண்டுபோய்க் கொடேன்"

"ஆமாம்...நான் போற வேகத்துலெ கையில் இருக்கும் பாலெல்லாம் கொட்டித்தான் போகும். பேசாம  குழந்தை இருக்குமிடத்தில் ஒரு பாற்குளம் உருவாக்குங்கோ. நான் போய் அதிலிருந்து  எடுத்துக்  குழந்தைக்குத் தரேன்"

"அப்படியே செஞ்சால் ஆச்சு. இதோ........."

  விநாடிக்கும் குறைவான நேரத்தில் குளமும்,  அதை நிறைச்சுப் பாலும் ரெடி!

(என்னம்மா நாத்தனாரே....   ஹாஹா....  இத்தைப் பார்த்தியோ!   மைண்ட் வாய்ஸ் ஆஃப் லக்ஷ்மி! )
உபமன்யூவுக்குப் பாலமுது ஊட்டினாள் புருஷோத்தமநாயகி!


தமிழ்நாட்டுலே இருக்கும்  திவ்ய தேசக்கோவில்களில் புருஷோத்தமன் என்ற பெயரில் மூலவர் இருப்பது இங்கெ இந்தக் கோவிலில் மட்டும்தானாம்!

ஹாஹா   அப்படியா?   அப்ப நாம் திருக்கரம்பனூர் கோவிலில் தரிசித்தவர் யாராம்?  திருக்கரம்பனூர் என்றதும் திகைக்கவேணாம். உத்தமர் கோவில்னு திருச்சியாண்டை சொல்றமே அதே உத்தமர், நம்ம  புருஷோத்தமரேதானாக்கும் :-)



Friday, July 01, 2016

திருமணிமாடக்கோவில், திருநாங்கூர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 54)

நம்ம குடமாடுகூத்தர் கோவிலில் இருந்து கூப்பிடு தூரம்தான். என்ன ஒன்னு ... கையில் மெகஃபோன் வச்சுக்கணும். ஜஸ்ட் 350 மீட்டர்.  பட்டர் ஸ்வாமிகள்  இருப்பதை  நிச்சயிச்சு,  குறுக்கும் நெடுக்குமாப் போய்க்கிட்டு இருக்கோம்.  எனக்கென்ன இப்பத் தோணுதுன்னா,  வேலையில் இருந்து ஓய்வு ஆன பிறகு  பேசாம திருநாங்கூர்லே போய் (திண்ணை வச்ச வீடுகள் கிடைக்கும்தானே?) செட்டில் ஆகிட்டோமுன்னா, தினமும் நடைப்பயிற்சி என்ற சாக்கில்  நாலு தெருவைச் சுத்தி வந்தால்  ஏழு கோவில்களைப் பார்த்தமாதிரியும் ஆச்சு இல்லையோ!  புண்ணியத்துக்குப் புண்ணியம்  போனஸ்!

இந்தத் திருநாங்கூர் பகுதியில்   சீர்காழிக்குப் பக்கமே பதினொரு    பெருமாள் கோவில்கள் இருக்குன்னு இப்பப் போய்க்கிட்டு இருக்கோம் பாருங்க.... அவை  எப்படி அங்கே ஒரே இடத்தில்னு சம்ஸயம் வருது இல்லையா?  அதுக்கே ஒரு கதை இருக்கு.

ஆணவம் கொண்ட ப்ரம்மாவின் தலையை சிவன் கொய்துட்டார்ன்னு  முந்தி  திருச்சி உத்தமர் கோவில் பகுதியில் சுத்துனபோது  சொன்னது யாருக்காவது நினைவிருக்கோ?  இல்லாதவங்க  இங்கே பார்க்கலாம்:-)


ப்ரம்மன் தலையைக் கொய்ததால்  ப்ரம்மஹத்தி தோஷம் வந்துருது சிவனுக்கு. போதாக்குறைக்கு கிள்ளுன தலை, கை விரலில் ஒட்டிக்கிட்டுக் கீழே விழமாட்டேங்குது.  நாளாக நாளாக தலை  உலர்ந்துபோய் மண்டை ஓடு ஆனதும், அதையே பிச்சைப் பாத்திரமா  வச்சுக்கிட்டு இரந்துண்டு வாழ்கிறார் சிவன்.

இந்த தோஷத்தில் இருந்து எப்படி விடுதலை ஆவதுன்னு   மச்சான் கிட்டக் கேக்கறார். நம்ம பெருமாளுக்கு ஐடியாவுக்குப் பஞ்சமா?  பூலோகத்துலே ஒரு நல்ல இடம் இருக்கு. அங்கே போய்       ஏகாதச (பதினொரு) யாகம் செய். ஆனால் ஒரே சமயத்துலே எல்லா யாகமும் நடக்கணும். அப்போ நான் அங்கே வந்து தோஷநிவர்த்தி செய்யறேன்னார்.

அப்ப நீரும் ஒரே சமயத்தில் பதினொரு இடத்தில் வந்து  தோஷநிவர்த்தி செய்யணும்தானேன்னு  கேட்டதுக்கு,  'நோ ஒர்ரீஸ். செஞ்சால் ஆச்சு'ன்னார் பெருமாள்.

சிவன் வந்து சேர்ந்த இடம்தான் இந்த நாங்கூர்.  தன்னுடைய அம்சமான ருத்திரரை, பதினொரு   ரூபங்களாக்கி ......

(மகாதேவன்,ருத்ரன்,சங்கரன்,நீலலோகிதன்,ஈசானன்,விஜயன்,வீமதேவன், சவும்யதேவன்,  பலோத்பவன், கபாலிகன், ஹரன் என்றவர்கள்.
அடுத்து இன்னொரு இடத்தில் பெயர்கள் இப்படி.   ஏகாதச ருத்திரர்கள்: அஜைகபாத், அஹிர்புத்னியன், விரூபாக்ஷ்தன், ரைவதன், ஹரன், பஹுரூபன், த்ரையம்பகன், சாவித்ரன், ஜயந்தன், பினாகி, அபராஜிதன். )

பதினொரு இடத்தில்   யாகம் நடத்த வச்சுட்டார் சிவன்.  யாகம் முடியும் நேரம் அங்கே எழுந்தருளிய  மஹாவிஷ்ணு, தானும் வெவ்வேற  உருவங்களா மாறி  ஒரே சமயத்தில் அந்தந்த யாகங்களில் கலந்துக்கிட்டு, சிவனுடைய தோஷத்தை நிவர்த்தி செஞ்சார்.

பொதுவாப் பெரியவர்கள் வேண்டிக் கேக்கறது போல, சிவனும்  இதே ரூபத்தில் இங்கே இந்த பதினொரு  இடங்களிலும்  தங்கி பக்தர்களைக் காக்க வேண்டும் என்று  கோரிக்கை வைக்க அப்படியே ஆச்சு.  அதான் இந்தப் பகுதியில் ஏகாதச பெருமாள் கோவில்களும்,  இதே ஏரியாவில் ஏகாதச சிவன் கோவில்களுமா,  சைவ, வைஷ்ணவ பக்தர்களுக்கு புண்ணியம் சேர்க்க உதவுது .

இந்த ஏகாதச உருவங்களுக்கு  இன்னொரு கதையும் உண்டு. சுருக்கமாச் சொல்லணுமுன்னா,  அசுரர்களை ஒழிக்க, சிவனும் விஷ்ணுவும் ஆளுக்கு பதினொன்னுன்னு  ரூபமெடுத்து, கூட்டமாப்போய் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்துவந்த  அசுரர்களை அழிச்சாங்களாம்.  இந்தக் கதை  தக்ஷன் செஞ்ச யாகத்துலே இருந்து ஆரம்பிக்குது. தாக்ஷாயிணி சம்பவம் இங்கே நம்ம துளசிதளத்துலேயே பார்க்கலாம். 

இப்ப நாம் பெருமாள் கோவில் யாத்திரை என்பதால்  இங்கே  இருக்கும் சிவன் கோவில்களுக்குப் போகவில்லை. உண்மையைச் சொன்னால் அப்போ இந்த  சிவன் கோவில்களைப்  பத்தித் தெரியாது.  நம்ம குமாரும் சொல்லலை.  இந்தப் பதிவுகள் எழுதுமுன் கொஞ்சம் ஆராய்ச்சி(!!!) செஞ்சதில் கிடைச்ச விவரம்தான் இது. போகட்டும், பின்னே எப்பயாவது போனால் மறக்காமல் தரிசிக்கணும்.

இந்தப் பதினொரு திவ்யதேசக் கோவில்களில், ரொம்பப் பிரதானமானது இப்போ நாம் நின்னுக்கிட்டு இருக்கும் இந்த மணிமாடக்கோவில்தான்.  திருமணிமாடக்கோவில். இங்கே பெருமாள் நாராயணனாக  காட்சி கொடுக்கிறார். பத்ரிநாராயணன். இருந்த கோலத்தில், பாதம் தாமரை மலரில் வைத்தபடி!
கோவில்வாசலில் ஸ்ரீ நாராயணன் பெருமாள் என்றுதான் இருக்கு.  சின்னதா ஒரு அஞ்சு நிலை ராஜகோபுரம். கோவிலுக்கு முன்னே நடுவில் நீராழி மண்டபமும், மூணு பக்கம் படிகளோடும் உள்ள அழகான திருக்குளம். பெருசுதான்!
கோபுரவாசலைக் கடந்து உள்ளே போறோம். பலிபீடம், கொடிமரம், பெரிய திருவடிக்கான சந்நிதின்னு பக்கா பெருமாள் கோவிலுக்கானவை எல்லாம் அமைஞ்சுருக்கு.  ஆனா ஒரு சின்ன மாற்றம்....   பெரிய திருவடியான கருடன் சந்நிதி, பூமிக்குள் அழுந்தி இருக்கறதைப்போல்  உள்ளே  இருக்கு.
நேர் எதிரில்  மூலவர் இருக்கும் கருவறைக்குப் போக மண்டபத்தைக் கடந்து ஒரு எட்டொம்பது படிகள் ஏறிப்போகணும்.  அதனால் பெருமாளுக்கும் கருடனும் ஐ கான்ட்டாக்ட் கிடையாது!


மூலவருக்கு  நந்தாவிளக்குப் பெருமாள், பத்ரிநாராயணர் என்று பெயர்கள். உற்சவர்தான்  நாராயணன். அளத்தற்கரியான் .

நந்தா விளக்கே அளத்தற் கரியாய் நரநா ரணனே! கருமா முகில்போல்
எந்தாய், எமக்கே யருளாய், எனநின்று இமையோர் பரவு மிடம்,எத் திசையும்
கந்தா ரமந்தே னிசைபாடமாடே களிவண் டுமிழற் றநிழல் துதைந்து,
மந்தா ரநின்று மணமல் குநாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.


திருமங்கையாழ்வார் பாசுரம்.

இங்கேயும் வழக்கம்போல் பத்துப்பாசுரங்கள்!  இந்தப் பாசுரங்களை வச்சே திருமங்கை போன ரூட் கண்டுபிடிச்சுடலாம்!
தாயார் புண்டரீகவல்லி, தனிச்சந்நிதியில் !
வாஹனமண்டபத்தில் கருடர்,  தயாராகப் புதுப்பொலிவுடன் இருக்கார்.

காலை 8 முதல் 11.30.  மாலை 5.30 முதல் 7.30 ன்னு கோவில் திறந்திருக்கும்.
கோவில் முற்றத்தில் சவுக்கு, மூங்கில் கட்டைகள் வந்து இறங்கி இருக்கு. பெருசா பந்தல் போடும் வேலைகளும் நடக்குது.  அப்புறம் சின்னச்சின்ன பழுதுபார்த்து பூசும் வேலையும் இன்னொருபக்கம் நடக்குது.  வெளியே  கோபுரவாசலுக்கும் திருக்குளத்துக்கும் இடையில் உள்ள பகுதியிலும் பந்தல் போடப்போறாங்க.


என்ன விசேஷமாம்? திருநாங்கூர் கருட சேவைன்னு கேள்விப்பட்டுருக்கோமே  அந்த விழா நடக்கப்போகுது!  மேலே சொன்ன பதினொரு கோவில்களில் இருந்து  கருடவாகனத்தில் உற்சவர்கள் இங்கே இந்தக் கோவிலுக்குத்தான் வந்து சேருவாங்க. ஒரே சமயத்தில் பதினொரு பெருமாளுக்கும் பூஜை நடக்கும்!   தை அமாவாசைக்கு மறுநாள் தொடங்கும் இந்தவிழா மூணு நாள் கொண்டாட்டம்.


விழாவைப்பற்றிய விவரங்களை அடுத்து வரும் பதிவுகளில் எழுதறேன். இந்தப் பதிவிலே ஏகப்பட்ட கதைகள் வந்து பதிவு நீண்டு போய்க்கிட்டு இருக்கு பாருங்க. இன்னும் நம்ம திருநாங்கூர் கோவில்கள் பாக்கி இருக்கே.
நமக்கும் கோவில்திருவிழாவுக்கான  அழைப்பிதழ் கிடைச்சது.  ஆசையாத்தான் இருக்கு. ஆனால் இன்னும் 8 நாள் கழிச்சுத்தானே விழா!
கோவில் மடைப்பள்ளியில் ராஜன் என்றவரை சந்திச்சோம்.  ஓய்வு பெற்ற ஆசிரியர். கோவிலுக்கு  சேவை செய்து வர்றார். கருட சேவை காலங்களில் அவர் வீட்டுலேயே அன்னதானம், வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் தங்க  வசதி இப்படித் தன்னாலான  பெருமாள் ஸேவை. ஒரு தொகை  எடுத்துக் கொடுத்தார் நம்மவர். நாலு பேருக்கு  நல்லது நடக்கட்டுமே!  இங்கேயும் ராஜன் ஸார்தான் பந்தல் வேலைகளை மேற்பார்வை பார்த்துக்கிட்டு வேண்டிய   உதவிகளைச் செஞ்சுக்கிட்டு இருந்தார்.
இந்த வருசம் நடக்கப்போவது 122 வது கருட சேவையாம்.விழா நல்லபடியா நடக்கட்டுமேன்னு அந்தப் பெருமாளையே வேண்டிக்கிட்டேன்.

தொடரும்..........  :-)